அவளின் பெயரை இரு முறை சொல்லி அழைத்துப் பார்த்தான். இத்தனை விரைவாக அவள் உறங்கியிருக்க மாட்டாள் என்பது அவனுக்கு நிச்சயம். ஆனாலும் அசைய மறுத்தாள் அவள்.
அவனுக்கும் உடல் அலுப்பு. படுக்கையின் இன்னொரு ஓரத்தில் அவனும் படுத்து விட்டான்.
நடு இரவில் கண் விழித்த அஞ்சலி தன்னருகில் யுகி இருப்பதை பார்த்து விட்டு ஒரு நொடி திடுக்கிட்டுப் போனாள். பின்னர்தான் தனக்கு இவனோடு திருமணம் நடந்து விட்டதை நினைவுக்கு கொண்டு வந்தாள்.
கட்டியிருந்த பட்டு சேலை உறுத்த, ஆடை மாற்ற எண்ணி எழுந்தாள்.
அவள் மின் விளக்கை போட்டு மாற்று ஆடை எடுத்துக் கொண்டிருக்க அவனும் விழித்து விட்டான்.
“என்ன அஞ்சலி?” என அவன் கேட்டதில் திரும்பிப் பார்த்தாள்.
“என்னாச்சு தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?” என அவன் கேட்டதற்கும் பதில் தராமல் ஆடையை எடுத்துக் கொண்டு குளியலறை சென்று விட்டாள்.
அவள் ஆடை மாற்றிக் கொண்டு வரும் போது கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான் அவன். அவனை கண்டு கொள்ளாமல் அவள் மின் விளக்கை அணைத்து விட, படுக்கையின் அருகிலிருந்த இன்னொரு சுவிட்ச் மூலம் விளக்கை ஒளிர விட்டான் அவன்.
இருவரும் மாறி மாறி மின் விளக்கை அணைத்து, ஒளிர விட்டு என வீம்பு நிறைந்த விளையாட்டு ஒன்றை ஆடிக் கொண்டிருந்தனர்.
“போதும் அஞ்சலி, சின்ன புள்ள தனமா இருக்கு. வா கொஞ்சம் நாம பேசலாம்” என்றான் யுகி.
“என்ன பேசணும் உங்களுக்கு?” வெடுக் என கேட்டாள்.
“எம்மேலயே எல்லா தப்பும் இல்லை அஞ்சலி. நாம ரெண்டு பேரும் முக்கியமான உறவுகளா மாறியிருக்கோம். காலம் முழுக்க இப்படித்தான் முறைச்சுகிட்டு திரிய போறோமா?” எனக் கேட்டான் யுகி.
“என்ன செய்யணும் எப்படி நடக்கணும்னு சொல்லுங்க, அப்படியே ஃபாலோ பண்ணிக்கிறேன்” என்றாள் அவள்.
“கோவத்தை விட்டுட்டு நார்மலா பேசலாம் அஞ்சலி”
“நார்மல்னா… எனக்கு புரியலையே?”
“இந்த கல்யாணம் நடந்ததுல உன் வீட்ல உள்ளவங்களோட பங்குதான் அதிகம். நான் மட்டுமே காரணம்ங்கிற மாதிரி நடந்துக்கிற நீ, அதை விட்டுட்டு சாதாரணமா பேசுன்னு சொல்றேன்”
“யாரும் யாருக்கும் சளைச்சவங்க இல்லை. உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டா மட்டும் உங்களோட வாழ்ந்திடுவேனா?” என அவள் கேட்க, நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டுக் கொண்டான் யுகி.
“காத்துகிட்டே இருங்க, ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் உங்களை விட்டு நான் போயிடுவேன், யார்கிட்டேயும் சொல்லாம போயிடுவேன்” என்றாள்.
சட்டென எழுந்தவன் அவளை நோக்கி கோவமாக வந்தான். ஓரடி பின்னால் நகர்ந்தவள் உடனே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனை எதிர் கொள்ள ஏதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.
“உன் குடும்பத்துக்கு உனக்கு எல்லாம் என்னை பார்த்தா எப்படி தெரியுது? ஊரை கூட்டி கல்யாணம் பண்ணினா அசிங்கப்படுத்திட்டு விட்டுட்டு போவேன்னு சொல்லுவியா? போறதுதான் முடிவுன்னா நான் தாலி கட்டுறதுக்கு முன்னாடியே போயிருந்திருக்கணும். எங்க போயிதான் பாரேன், நான் யாருன்னு காட்டுறேன்” என கோவமாக சொன்னான்.
“நீங்க யாருன்னு பார்க்க நான் உங்க கூட இருந்தாதானே?”
“இன்னொரு முறை போயிடுவேன்னு சொன்ன பிச்சிடுவேன் ராஸ்கல்!” என்றான்.
முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள். ‘நன்றாக இருக்கிறதுடா முட்டாளே நீ அவளை சமாதானம் செய்யும் லட்சணம்!’ என மனதிற்குள் தன்னை கடிந்து கொண்டான்.
கோவத்தை கை விட்டவன், “இன்னிக்கு நாம பேசிகிட்டா தப்பாதான் முடியும் போல. நீ படு” என சொல்லி படுக்கையை காட்டினான்.
அவனுடன் சேர்ந்து படுக்க பிடிக்காமல் தரையில் பாய் விரித்து படுத்துக் கொண்டாள்.
“மேல படுத்துக்கோ அஞ்சலி” என சமாதானமான குரலில் சொன்னான்.
“நான் பக்கத்துல படுக்கல வா” என்றான்.
“இவ்ளோ பிடிவாதம் ஆகாது அஞ்சலி” என கடுமையாக சொல்ல நினைத்து குரலின் சுருதியை இறக்கினான்.
“கிட்டத்தட்ட உன் நிலைமைதான் எனக்கும், என் போதாத காலம் நீ கேட்டுகிட்ட படி என்னால நடக்க முடியாம போயிடுச்சு. அதுக்காக நான் ஒன்னும் கொடுமைகாரன் இல்லை, உன்னை ஓரளவு எனக்கு புரியும், என்னை கொஞ்சமாச்சும் உனக்கு பிடிக்கிற அளவுக்கு நான் நடந்துப்பேன். நீ அறிவாளி பொண்ணு இல்லியா, கொஞ்சம் நீயும் என்னை புரிஞ்சு நடந்துக்க அஞ்சலி” என நயமாக பேசினான்.
அவள் விசும்பும் ஒலி கேட்டது.
“நான் என்ன சொல்லிட்டேன்னு இப்போ அழுகை? வா மேல படுத்துப்பியாம், நாளைக்கு நாம நம்மள பத்தி வெளிப்படையா பேசி ஒரு முடிவுக்கு வரலாம்” என்றான்.
எழுந்து கொண்டவள் கண்களை துடைத்துக் கொண்டாள். “என்னால… என்னால இப்ப இந்த மேரேஜ், ஹஸ்பண்ட் வைஃப் ரிலேஷன்ஷிப் எதையும் அக்செப்ட் பண்ணி வாழ முடியாது. எதையுமே யோசிக்க முடியலை. யாரையுமே பிடிக்கல, உங்களையும் பிடிக்கல” என்றாள்.
அந்த ‘பிடிக்கல’ எனும் வார்த்தை அவனுக்கு கரண்ட் ஷாக் தான். அவளுக்கு பிடிக்காது என தெரியும், அதை அவளின் வாய் மொழியாக கேட்கும் போது கசந்தது.
உனக்கு மட்டும் அவளை பிடிக்குமா என அவன் மனசாட்சி அவனை கேட்டதற்கு, ‘இன்னும் அதை ஆராய்ச்சி செய்யல, ஆனா அவளை பிடிக்காம போகாது, என் பொண்டாட்டி ஆச்சே’ என பதில் சொல்லிக் கொண்டான்.
“சரி உன்னை உனக்கு பிடிக்கும்தானே? எனக்கு அதுவே போதும், நாம சிறப்பா வாழ வேண்டியதை நான் பார்த்துகிறேன். உன் விருப்பத்தை மீறி உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன்தான், பெரிய ஸாரி. அதுக்காக விட்டுட்டு போறேன் கீறேன்லாம் சொல்லக்கூடாது. உனக்கு என்ன வேணும்னு கேளு, என்னால முடிஞ்சத செஞ்சு தர்றேன். இப்ப பெட்ல படு” என்றான்.
“என்னை நீங்களும் வீட்டோட அடைச்சு வைக்க போறீங்கதானே? இந்த வீட்ல இருக்க நாலு சுவத்தேலிருந்து உங்க வீட்ல இருக்க நாலு சுவர் என் உலகமா மாறப் போகுது. இதுல என்னை மட்டும் எனக்கு பிடிச்சு என்னாக போகுது?” எனக் கேட்டாள்.
“அப்படிலாம் இல்லை அஞ்சலி. என்னை ரொம்ப படுத்தாம இயல்பா இரு. ஆறு மாசம் போகட்டும். நீ ஆசை பட்ட மாதிரி இருக்கலாம். என்னை நம்பு” என்றான்.
“உங்களை நம்பவா?” இளக்காரமாக கேட்டாள்.
“அது முன்னாடி நீ எனக்கு யாரோ, இப்ப அப்படியில்லை, கண்டிப்பா உன் நம்பிக்கைய காப்பாத்துவேன்” என அவன் தீர்க்கமாக சொல்ல, நம்பலாமா என்னும் கண்ணோட்டத்தில் அவனை பார்த்தாள்.
“ம்ம்… நல்ல பொண்ணுல்ல, வா” என்றான்.
“அதென்ன ஆறு மாச கணக்கு?” என சந்தேகம் கேட்டாள்.
“நந்தினியோட கல்யாணம் இருக்கு, நாமளும் நம்ம குடும்பத்துல கொஞ்சம் அட்ஜஸ்ட் ஆகிப்போம். ஆறு மாசம் ஆகாதா? என் கணக்கு சரிதானே?”
சில நொடிகள் யோசனை செய்தவள், “ஆறு மாசம் டைம் இருந்தா என்னை ப்ரெக்னென்ட் ஆக்கிடலாம், அப்புறம் காலத்துக்கும் வீட்லேயே இருக்க வச்சிடலாம்னு திட்டம் போடுறீங்களா?” எனக் கேட்டாள்.
அவளின் கேள்வியில் விழிகள் தெறித்து விடுவதை போல பார்த்தான்.
“ஆம்பளைங்க மெண்டாலிட்டி அப்படித்தானே இருக்கும்? பதில் சொல்லுங்க”
“இவ்ளோ விவரமான பொண்ணு எனக்கு கிடைப்பான்னு நான் நினைச்சதே இல்லை. நானே யோசிக்காத விஷயத்தை சொல்லிக் கொடுக்காத. பொண்ணுங்க மெண்டாலிட்டி என்னன்னு சொல்லு, தெரிஞ்சுக்கிட்டா எனக்கு யூஸ் ஆகும்” என்றான்.
“மழுப்பி பேச வேணாம்”
“சத்தியமா அப்படி எண்ணம் எனக்கில்லை அஞ்சலி. என்னிக்கா இருந்தாலும் உனக்கு கல்யாணம் நடக்கும்தானே, அது முன்னாடியே நடந்திட்டதா நினைச்சிக்க. ஒரே ரூம்ல முறைச்சுக்கிட்டு திரியறது, பக்குவம் இல்லாம ஒருத்தரை ஒருத்தர் ஹர்ட் பண்ணிக்கிறது இதெல்லாம் நம்ம ரெண்டு பேரோட நிம்மதியையுமே குலைச்சிடும். உன் விருப்பம் இல்லாத கல்யாணமா இருக்கலாம், இதுக்கப்புறம் நம்ம சம்பந்த பட்ட எதுவா இருந்தாலும் உன் விருப்பமோ அனுமதியோ இல்லாம நடக்காது” என்றான்.
உள்ளங்கை விரித்து வலது கையை நீட்டியவள், “பிராமிஸ்?” எனக் கேட்டாள்.
“கைல அடிச்சு சொன்னாதான் நம்புவியா?” என அவன் கேட்க, ஆம் என தலையாட்டினாள்.
அவள் கையில் அடித்து “சத்தியமா” என்றவன், அப்படியே அவளின் கையை பற்றி எழுப்பி நிறுத்தினான்.
“நீங்க ஏதாவது ஃபிராட் வேலை பார்க்கிறதா தெரிஞ்சுது… கண்டிப்பா போயிடுவேன்” என்றாள்.
“வாய்லேயே போட போறேன். இன்னிக்கு இந்த நிமிஷம் இருக்கிற மாதிரி நாளைக்கு இருக்குமான்னு தெரியாது. சில சமயம் நம்மள சுத்தி நடக்கிற விஷயங்கள்தான் அடுத்து என்னங்கிறது தீர்மானம் பண்ணும். அப்படி ஏதாவது ஆச்சுன்னா யோசிக்கணும், என்னை ப்ளேம் பண்ணக்கூடாது”
“இது என்ன இப்பவே சாக்கு சொல்லி வைக்குறீங்களா?”
“சாக்கு இல்லை அஞ்சலி. கணவன் மனைவி உறவுங்கிறது பாதில விட்டுட்டு போற உறவு இல்லை. உன் கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடி இந்த உறவுக்கு உண்மையா இருப்பேன்னு எனக்குள்ள தீர்மானம் பண்ணிக்கிட்டேன், நீயும் அப்படி இருக்கணும்னு ஆசை படறேன். எந்த பிரச்சனைக்கும் விட்டுட்டு போறது முடிவு இல்லை” என்றான்.
அவன் சொன்னதற்கு எதிர்வினை ஆற்றாமல் நின்றிருந்தாள்.
“ம்ஹூம், இது சரி வராது. எங்க நீயும் பிராமிஸ் பண்ணு என்ன நடந்தாலும் விட்டுட்டு போக மாட்டேன்னு” என சொல்லி அவள் முன் தனது கையை நீட்டினான்.
“அப்படிலாம் பிராமிஸ் பண்ண முடியாது. என் பக்கம் ஸ்ட்ராங்கா ரீசன் இருந்தா போவேன்தான். வேணும்னா உங்ககிட்ட சொல்லாம போக மாட்டேன்னு பிராமிஸ் பண்றேன்” என சொல்லி அவனது கையில் அடிக்க போனாள்.
சட்டென கையை இழுத்துக் கொண்டவன், இடுப்பில் ஒரு கையை வைத்து அவளை முறைத்துப் பார்த்தான்.
கைகளை கட்டிக் கொண்டவள், “நீங்க என்னை ஏமாத்தினதுக்கு இவ்ளோ தூரம் நான் இறங்கி வர்றதே பெருசு. பிராமிஸ் வேணாம்னா போங்க” என்றாள்.
பேசி பேசி யுகிக்கு தொண்டை காய்ந்திருந்தது. தண்ணீர் குடித்தவன் அவளுக்கும் கொடுத்தான்.
“பாட்டில்ல உறிஞ்சு குடிச்சிட்டு அதையே எங்கிட்டேயும் கொடுக்குறீங்க? எச்சில் பட்டதெல்லாம் எனக்கு வேணாம்” என சொல்லி வாங்க மறுத்தாள்.
“இது வேறயா? உனக்கு வேற மாதிரி பதில் சொல்லுவேன், இப்ப போய் சொல்லக்கூடாதன்னு பார்க்கிறேன். இங்க வேற தண்ணி இல்லையே, என்ன செய்யலாம்?”
“எனக்கு தண்ணியே வேணாம்” என்றவள் படுத்து விட்டாள்.
“இவளோட தினம் தினம் மல்லுக்கட்ட நிறைய தெம்பு வேணும்டா யுகேந்திரா! உடம்ப பார்த்துக்க” என அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான். அவனை பார்த்து ‘அற்பமே’ என்பது போல ஒரு லுக் கொடுத்தவள் கண்களை மூடிக் கொண்டாள்.
பயத்திலேயே ஒரு மாதத்தை ஓட்டியிருந்த யுகிக்கு இப்போது ஓரளவு நிம்மதியாக இருந்தது. அஞ்சலியுடனான தன் வாழ்க்கை அத்தனை மோசமாக ஒன்றும் இருக்காது என தனக்கு தானே நம்பிக்கை அளித்துக் கொண்டே படுத்தான்.
இவன் சொல்வது போலவே ஆறு மாதங்களுக்கு பிறகு நான் நினைத்தது போல இருக்கலாமோ என சிறு துளியாக அஞ்சலிக்குள்ளும் நம்பிக்கை பிறந்திருந்தது. எதற்கும் இவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டே கண் அயர்ந்தாள் அவள்.