பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -5

அத்தியாயம் -5

திருமணம் முடிந்து மண்டபத்திலிருந்து வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர் யுகேந்திரன் அஞ்சலி இருவரும். 

இன்னும் ஒரு வார்த்தை யுகியிடம் பேசியிருக்கவில்லை அஞ்சலி. அவனுமே அவளிடம் பேச முயலவில்லை. 

யுகியின் வீட்டில் வெங்கட் தவிர வேறு யாருக்கும் இந்த திருமணத்தின் மீது விருப்பம் இல்லை. பிடித்துதான் அஞ்சலியை மணக்கிறேன் என யுகி சொன்னதையும்  அவனது அப்பாவை தவிர  யாரும் நம்பத் தயாராக இல்லை. 

அஞ்சலி மணமகளாக வருவதை எதிர்த்து அல்ல அவர்களின் பிடித்தமின்மை. நந்தினியை முன்னிறுத்தி யுவிக்கு நெருக்கடி கொடுத்து இந்த திருமணத்தை நடத்திக் கொண்டு விட்டனர் என்ற கோவம்.

கார்த்திக் வீட்டினர் நினைத்தது போலவே நந்தினியின் வாழ்க்கை அந்த வீட்டில் என்பதால் அவர்களிடம் அழுத்தமாக கேள்வி கேட்கவும் முடியவில்லை.  

ஒரு வார விடுப்பு எடுத்துக் கொண்டு மஸ்கட்டில் இருந்து வந்திருந்த வாசுவும் தம்பியிடம் பேசி பார்த்தான். எனக்காக இதற்கு நீ சம்மதிக்க தேவையில்லை, அப்படியொன்றும் கார்த்திக்கை நான் மணமுடிக்க வேண்டாம் என நந்தினியும் சொல்லி பார்த்து விட்டாள். 

மனமுவந்து எடுத்த முடிவுதான் இது என அழுத்தி சொல்லி விட்டான் யுகி. 

முதலில் நந்தினியின் திருமணம்தான் நடக்க வேண்டும்  என உறுதியாக இருந்தார் அலமேலு. வெங்கட்டிடம் நயந்து பேசி யுகி அஞ்சலி திருமணமே முதலில் நடக்க ஒப்புதல் பெற்று விட்டார் புகழேந்தி. அதிலும் அலமேலுவுக்கு அதிருப்தி. 

இரண்டு  மாதங்களில் பொள்ளாச்சியில் கார்த்திக், நந்தினி திருமணம் நடக்க தேதி குறிக்கப் பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இருவருக்குள்ளும் பேச்சுக்கள் இல்லை.  கார்த்திக் எவ்வளவுதான்  நந்தினியிடம் நெருங்கி வந்தாலும் அவனிடம் முகம் கொடுக்க மறுத்து நின்றாள் அவள். 

யுகிக்கும் அஞ்சலிக்கும் திருமணம் முடிவாகி இடையில் ஒரு மாத கால அவகாசம் இருந்தது. கல்யாணம் மாப்பிள்ளை வீட்டில் நடப்பதால் யுகிதான் எல்லாம் பார்க்க வேண்டியிருந்தது. 

அவன் அப்பா வழி சொந்தங்கள் எல்லாம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பக்கம். அலமேலு வழி சொந்தங்கள் எல்லாம் சேலம் பக்கம். இங்கே கோவையிலும் தொழில் முறையில் நட்பு வட்டாரம் அதிகம். ஸ்ரீஜாவின் பெற்றோர் குடும்பம் சென்னையில், சேகரின் சகோதரர்கள் இருப்பது கேரளாவில். 

திருமணத்துக்கு நான்கு நாட்களுக்கு முன் வாசு வந்து சேரும் வரை அழைப்பிதழ் வழங்கிக் கொண்டிருந்தான் யுகி. வாசு வந்த பிறகு உள்ளூரில் அழைப்பிதழ் கொடுப்பதையெல்லாம் அவன் பார்த்துக் கொண்டான். 

ஸ்ரீஜாவை பற்றி கேட்கவே வேண்டாம், யுகி தன் தங்கையை மறுத்து விட்டு அஞ்சலியை மணக்க போவதால் எதிலுமே பட்டுக் கொள்ளவில்லை. கணவன் வந்த பிறகு இல்லாத குளிர் காய்ச்சல், வயிற்றுவலி, முதுகு பிடிப்பு  அனைத்தையும் அவளுக்கு வரவழைத்துக் கொண்டாள்.  

அவ்வப்போது பைரவி வந்து உதவிகள் செய்வாள். ஆனாலும் யுகிக்கு வேலைகள் இருந்து கொண்டேதான் இருந்தன. 

யுகியை நேரமும் இறுக்கிப் பிடித்தது. கல்யாணத்துக்கான உற்சாகம் இருந்திருந்தால் எவ்வளவு வேலை என்றாலும் அலுக்காமல் பார்த்திருப்பான். அஞ்சலியை எப்படி கையாள போகிறோம் என்ற பயத்திலேயேதான் அவனது நாட்கள் கடந்தன. 

இடையில் ஒரு முறையாவது அஞ்சலியை சந்தித்து பேசி அவளை சமாதானம் செய்ய வேண்டும் நினைத்துக்கொண்டே இருந்தான். வேறு வேலையாக வந்தது போல காட்டிக் கொண்டு அவளது வீட்டுக்கும் சென்றான். 

பெற்றோரின் வற்புறுத்தலில் வெளியில் வந்தாள் அஞ்சலி. இரவு உடை அணிந்திருந்தவளின் கை, காது,கழுத்து என எங்கும் எந்த அணிகலனும் இல்லை. வெற்று நெற்றி, ஏனோ தானோ என கட்டப் பட்டிருந்த முடி. அதை விட உர் என்ற முகபாவம். உலகில் எந்த கல்யாணப் பெண்ணும் கட்டி கொள்ள போகும் மாப்பிள்ளையின் முன் இப்படி நின்றிருக்க மாட்டாள். 

புகழேந்தி தன் மனைவியை முறைக்க,  இவளை வெளியில் இழுத்து வரவே படாத பாடு பட்டேன், இதில் எங்கிருந்து ஆடை மாற்றிக் கொள்ள செய்வது என பாவமாக பார்த்தார் சித்ரா. 

அவளின் அம்மா கண் சாடை காட்ட, அவனை  வரவேற்றாள், அதன் பின் அவனது பார்வையிலிருந்து மறைந்து விட்டாள். 

வெட்கத்தை விட்டு ‘அஞ்சலியிடம் பேச வேண்டும்’ என அவளது அப்பாவிடமும் கேட்டான்.அரை மனதோடு அவரும் சம்மதித்தார். ஆனால் அவள் அவனை பார்க்க மறுத்து விட்டாள். 

அறைக்குள் அம்மாவுக்கும் மகளுக்கும் நடக்கும் வாக்குவாதம் இவனது காதிலும் விழுந்தது. புகழ் சங்கடமாக நெளிய, திருமணத்துக்கு பின்னரான தன் வாழ்க்கையை நினைத்து யுகியின் வயிற்றில் புளி கரைந்தது. 

சில நிமிடங்களில் வந்த சித்ரா, அஞ்சலி வீட்டின் பக்கவாட்டில் இருக்கும்  தோட்டத்தில் இருப்பதாக சொன்னார்.  

அங்கு வந்தவன் வாழை மரத்தின் பட்டையை சுரண்டிக் கொண்டு நின்றிருந்தவளிடம், “எப்படி இருக்க அஞ்சலி?” எனக் கேட்டான். 

அவனை பார்க்க திரும்பியவள் இட வலமாக தன்னை சுற்றிக் காட்டி, “எப்படி இருக்கேன்னு நீங்களே சொல்லுங்க” என இடக்காக சொன்னாள். 

“உனக்கென்ன பிரமாதமா இருக்க” என்றான். 

ஏதோ ஹாஷ்யத்தை கேட்டது போல சிரித்தவள், “எதுக்கு இங்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” எனக் கேட்டாள். 

“கல்யாண புடவையெல்லாம் பிடிச்சிருக்கா அஞ்சலி?” எனக் கேட்டான். 

“கல்யாணமே பிடிக்கல ஸார், புடவை பிடிச்சா என்ன… இல்லை பிடிக்காம போனாதான் என்ன?” 

“இங்க பாரு… உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைனு தெரியும், ஆனா…” என அவன் தீவிரமாக ஏதோ பேச ஆரம்பிக்க, பாட்டி வந்து விட்டார். 

“கல்யாணத்துக்கு முன்னாடி இப்படிலாம் ரொம்ப நேரம் தனியா சந்திச்சுக்க கூடாது” என சொல்லி அஞ்சலியை உள்ளே அனுப்பி வைத்தவர், அங்கிருந்த வாழை மரங்களின் வகைகள் என்னென்ன என அவனுக்கு விளக்க ஆரம்பித்தார். 

கண்களை மூடித் திறந்தவன், “போதும் பாட்டி, நான் வாழைக்காய் பிஸ்னஸ் ஏதும் செய்றதா இருந்தா கண்டிப்பா உங்ககிட்ட வர்றேன்” என சொல்லி கிளம்பி விட்டான். 

அதன் பின் எத்தனையோ முறை அஞ்சலியின் கைப்பேசிக்கு அழைத்து பார்த்து விட்டான். அவள் எடுக்கவே இல்லை. 

 தனக்குத்தான் திருமணம் நடக்க போகிறது என்பது போலவே இருக்கவில்லை அஞ்சலி. தன்னை சுற்றி இருந்தவர்களின் மீதான வெறுப்புதான் அவளுள் கூடிக் கொண்டே போனது. 

வீட்டினருக்கு அவளை நினைத்து கவலைதான் என்ற போதும் திருமணம் ஆனதும் சரியாகி விடுவாள் என நம்பிக் கொண்டிருந்தனர். 

நிறைந்த மண்டபத்தில் அஞ்சலிக்கு யுகி தாலி கட்டும் போது அவளது முகத்தை பார்க்க வேண்டுமே. தன் வாழ்க்கை அவ்வளவுதான் என்பதை அப்படியே முகத்தில் காட்டியிருந்தாள். 

ஈடுபாடு இல்லாமலே எல்லாவற்றையும் செய்தவளை கண்டு யுகியின் வீட்டினர் தவித்துப் போனார்கள். கார்த்திக் தன் தங்கையிடம் ரகசியமாக முகத்தை நன்றாக வைத்துக்கொள் என கூறியதையும்  புறக்கணித்தாள். 

அஞ்சலியை பார்த்து விட்டு கார்த்திக்கை முறைக்க ஆரம்பித்து விட்டாள் நந்தினி. அவளது பார்வையை சந்திக்க முடியாமல் திணறிப் போனான் அவன். 

முன்னர் நடந்த கசப்பான சம்பவத்தை குறித்து யாரும் ஏதும் பேசி விடக்கூடாதே என பயத்தோடே இருந்தனர் அஞ்சலியின்  பெற்றோர். நல்ல வேளையாக அப்படியான அனர்த்தங்கள் ஏதும் நிகழவில்லை. 

மணமகன் வீட்டில் சடங்கு சம்பிராதயங்கள் முடித்து விட்டு அன்றே இருவரும்  மணமகள் வீடு செல்வதாக ஏற்பாடு. 

தங்கள் மகள்களை  இங்கேயே விட்டு விட்டு மணமக்களின் துணையாக பைரவியும் சேகரும்தான் கிளம்பினார்கள். 

பொள்ளாச்சி செல்லும் வழியிலேயே ஜன்னலில் சாய்ந்து  உறங்க ஆரம்பித்து விட்டாள் அஞ்சலி. ஆளுக்கொரு தீவாக இருக்கும் தம்பியையும் அவனது மனைவியையும் கவனித்துதானே வருகிறாள் பைரவி, அவளுக்கு மனக் கலவரம் ஏற்பட்டது. 

இரவு சடங்குக்காக இருவரும் தனித்து விடப் பட்டனர்.  பூரண அலங்காரத்தோடு  படுக்கையில் அமர்ந்திருந்தவளின் பக்கத்தில் போய் அமர்ந்தான். அவள் ஏதும் சொல்லவில்லை. தங்களுக்குள் சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நினைவோடு அவளின் கையை பற்றினான். 

அவனை அவள் பார்த்த பார்வையில் தானாக அவளிடமிருந்து கையை விலக்கிக் கொண்டான். 

அணிகலன்களை கழட்டி அலட்சியமாக டீபாய் மீது பட் பட் என வைத்தாள். ஏதோ அவனை நறுக் நறுக் என கொட்டுவது போலவே இருந்தது அவளின் செய்கை. 

அனிச்சையாக உச்சந்தலையை தடவிக் கொண்டான். 

“அஞ்சலி…” என அவன் அழைக்க, அவனை முறைத்துக் கொண்டே தலையில் இருந்த மல்லிச் சரத்தை வேகமாக கழட்டினாள். முடியில் சிக்கிக் கொண்ட பூ வருவேனா என்றது. சில முடிகள் பிய்ந்து போக மலர் சரத்தை அகற்றினாள். 

“எதாவது ஹெல்ப் பண்ணவா?” என அவன் கேட்க, அவனது மார்பில் மோதி மடியில் விழுந்தது மல்லிச் சரம். 

திகைத்துப் போய் அவன் அவளை பார்க்க, கலங்கிச் சிவந்திருந்தன அவளின் விழிகள். ஆனாலும் அழுது விடாமல் சுதாரித்துக் கொண்டாள். 

எப்படி பேச ஆரம்பிப்பது என அவன் மனதில் தடுமாறிக் கொண்டிருக்க, அவனை ஏறிட்டு கூட பாராமல் படுக்கையில் ஒரு ஓரமாக சுருண்டு விட்டாள் அவள்.