சரி என சொல்வதை தவிர கார்த்திக்கிடம் வேறு வழி இருக்கவில்லை. 

தான் வந்த சுவடே அஞ்சலிக்கு தெரியாத வண்ணம் கோவைக்கு கிளம்பி விட்டான் யுகி. எப்படியும் அவள் சம்மதிக்க போவதில்லை என அவள் மீது அப்படியொரு ஆழமான நம்பிக்கை. 

நந்தினி இன்னும் சென்னைக்கு செல்லவில்லை. தான் பார்த்துக் கொள்வதாக சொன்ன அண்ணன் இன்னும் ஏதும் சொல்லவில்லையே என யுகியை அடிக்கடி பார்க்கிறாள். ஆனால் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை, கார்த்திக்கிடமும் பேசவில்லை. 

கார்த்திக் சொன்ன எதையும் தங்கையிடம் சொல்லிக் கொள்ளவில்லை யுகி. தெரிந்தால் நந்தினியின் கோவம் இன்னும் அதிகமாகுமே. 

ஆனால் தங்கையின் நிலைமை அவனுக்கு புரிந்தது. அவனது அப்பாவும் மகளின் திருமணம் குறித்துதான் கேட்டுக் கொண்டே இருக்கிறார். இந்த வீட்டின் அத்தியாவசிய தேவை நந்தினியின் திருமணம் என்பது தெள்ளத் தெளிவாக அவனுக்கு புரிந்தது. 

யுகிக்கு அஞ்சலியை மணம் செய்ய விருப்ப பட்டத்தையும் அவனுடன் நடந்த பேச்சுவார்த்தையையும் பெற்றோரிடம் சொல்லியிருந்தான் கார்த்திக். இது நடந்தால் நன்றாக இருக்குமே என அவர்களுக்கும்  தோன்றியது. 

ஆனால் அஞ்சலி சம்மதம் சொல்ல வேண்டுமே. அவளை சம்மதிக்க வைக்க என்ன செய்யவும் துணிவோடு இருந்தனர் அவளின் பெற்றோர். 

முதலில் கார்த்திக் அவளிடம் நல்ல விதமாகவே விஷயத்தை சொன்னான். யுகியை பற்றி எடுத்து சொல்லி நீ விரும்பியபடியே உன்னை வாழ வைப்பான் என பொய்யான உறுதியையும் அவளுக்கு வழங்கினான். 

அஞ்சலி அசைந்து கொடுக்கவில்லை. நீ சம்மதிக்கா விட்டால் என் வாழ்வும் கேள்விக்குறி ஆகி விடும் என மிரட்டிப் பார்த்தான். 

“இப்படி பேரம் பேசுற உன்னை கட்டிக்காம இருக்கிறதே நந்து அண்ணிக்கு நல்லது” என சொல்லி அண்ணனை கோவப்படுத்தினாள். 

வீட்டினர் அழுது கெஞ்சி மன்றாடி என என்ன சொல்லியும் செய்தும் தன் நிலையில் உறுதியாக நின்றாள் அவள். சித்ரா ஒரு அடி கூட வைத்து விட்டார். நெஞ்சழுத்தத்தோடு  முடியாது என்றே கூறினாள். 

அடுத்த நாள் யுகி வந்து விடுவான். என்ன செய்வதென தெரியாமல் அறைக்குள் நுழைந்த புகழேந்தி கதவை சாத்தி விட்டார். பிறகென்ன வீடே ரண களப்பட்டது. வெளியில் இருந்த அண்ணன் அம்மா பாட்டி மூவரும் அஞ்சலியை குற்றம் சொல்லி திட்டினார்கள். 

தன்னை பயமுறுத்தத்தான் இப்படி என அவளுக்கு புரிந்தாலும் அடி மனதில் பயம் இல்லாமல் இல்லை. ஏதாவது நடந்து விட்டால் அதன் பின் எப்படி அவளால் வாழ முடியும்? 

சம்மதிக்கிறேன் என  அஞ்சலி சொன்ன பிறகுதான் வெளியில் வந்தார் புகழ். 

மகளை அணைத்துக் கொண்ட புகழ், “உன் நல்லதுக்குதான் நாங்க கட்டாய படுத்திறோம்னு நீ புரிஞ்சுப்பம்மா” என்றார். 

விலகிக் கொண்டவள், “அவர் சரின்னு சொல்லிட்டாரா?” எனக் கேட்டாள். 

“பின்ன அவர் விருப்பம் இல்லாமலா பேசிட்டு இருக்கோம்?” என கார்த்திக் கேட்க, அதி வேகமாக அவளுள் வேறொரு திட்டம் உதயமானது. 

“நீங்க சொல்றத நம்ப முடியலை. நாளைக்கு அவரே என்கிட்ட சம்மதம்னு சொல்லட்டும். அப்பதான் இந்த கல்யாணம். ஒரு வேளை அவர் முடியாதுன்னு சொல்லிட்டா அப்புறம் என் கல்யாண பேச்சை எடுக்க கூடாது, என்னையும் வேலைக்கு அனுப்பனும்” என்றாள் அவள். 

வீட்டினர் அவள் சொன்னதை பற்றி கவலை கொள்ளவே இல்லை. சரி என்றனர். அவர்கள் மீது நம்பிக்கை கொள்ளாமல் சத்தியம் கூட பெற்றுக் கொண்டாள் அஞ்சலி.

அந்த வீட்டு பெரியவர்களிடம் கலந்து கொள்ளாமல் நேரடியாக யுகியுடனே இந்த பேச்சுவார்த்தை நடக்கிறதே, இதனால் நாளை பிரச்சனை ஏற்படாதா என மட்டும் அஞ்சினார் சித்ரா. 

கண்டிப்பாக இது பேசும்பொருள் ஆகும்தான். ஆனால் அவர்கள் வீட்டுப் பெண் இந்த வீட்டில் வாழ வரவிருக்க பெரும் பிரச்சனை ஆக வாய்ப்பில்லை என்றார் பாட்டி. அப்போதே நந்தினியை நினைத்து கார்த்திக்கிற்கு உள்ளூற உதறல் ஏற்பட்டது. 

 ஒருவரின் குணமும் நடக்கும் சூழலும் தான் அவரது தன்மையை தீர்மானிக்கிறது. கார்த்திக் தெரிந்தே சுயநலமாக சிந்தித்தான். 

கார்த்திக்கின் கைப்பேசியிலிருந்து யுகியின் எண்ணை கண்டறிந்து அவனுக்கு அழைத்து பேசுவாள்  அஞ்சலி என யாரும் நினைத்திருக்கவில்லை. 

வீட்டினர் தன்னை நிர்பந்திப்பதை  சொல்லி நீங்களே என்னை பிடிக்க வில்லை என சொல்லி விடுங்கள், இந்த வீட்டு சிறையிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்க உங்களால்தான் முடியும், அன்று கோவமாக பேசியதை மறந்து மன்னித்து விடுங்கள், தயவு செய்து உதவுங்கள் என கெஞ்சி கேட்பாள் அஞ்சலி என யுகியும் எதிர் பார்த்திருக்கவில்லை. 

யுகிக்கு தலை வெடிப்பது போலிருந்தது. அஞ்சலியின் பெற்றோரிடம் பேசுவது நேர விரயம். கார்த்திக்கும் ‘என் தங்கை சம்மதம் சொல்லி விட்டாள் பிறகென்ன?’  என நிற்பான். அல்லது அஞ்சலிக்கு இன்னும்  அழுத்தம் கொடுத்து மனப் பூர்வமாக சம்மதிக்கிறேன் என அவளையே சொல்ல வைப்பார்கள். பாவம் அந்தப் பெண் இன்னும் எத்தனையை தாங்கும்? 

அஞ்சலியிடம் பேசுவதும் வீண். இப்படிப்பட்ட ஒருவன் எதற்கு உங்களுக்கு? தூக்கி எறிந்து விட்டு வேலையை பாருங்கள் என்பாளே தவிர, நந்தினியின் மனதை புரிந்து கொள்ள மாட்டாள். அவள் சொல்வது போலவே கார்த்திக் வேண்டாம் என முடிவு செய்தால், நந்தினியின் மனம் எப்போது மாறுவது, ஊரறிய செய்த நிச்சயத்தை ஒன்றுமில்லாமல் செய்து வேறெந்த மாப்பிள்ளையை பார்ப்பது? 

மேலும் மேலும் தன் தங்கையின் திருமணத்தை சிக்கலாக்கி விட விரும்பவில்லை யுகி. அவனுக்கு அஞ்சலி மீது கண்டிப்பாக அக்கறை இருந்தது. ஆனால் அவனது பார்வையில் சிந்தனையில் அஞ்சலி பின்னுக்கு தள்ளப் பட்டு நந்தினியே  முதன்மையாக நின்றாள். 

காலம் யாருக்காக காத்து நிற்கும்? கார்த்திக்கிடம் சொல்லியிருந்தது போலவே பொள்ளாச்சிக்கு புறப்பட்டான் யுகி. இந்த முறை வீட்டுக்குத்தான் சென்றான். 

வரவேற்பு படலம் முடிந்த பிறகு அஞ்சலியை அழைத்தார் புகழ். மகளை கட்டாயப் படுத்தி புடவை கட்டி அலங்காரம் செய்ய வைத்திருந்தார் சித்ரா. 

யுகியால் அவளை நிமிர்ந்து  பார்க்கவே முடியவில்லை. 

“உன் விருப்பத்தை சொல்லுமா” என மகிழ்ச்சியோடு கேட்டார் புகழேந்தி. 

யுகியிடம் பார்வையால் பேசிக் கொண்டே, “எனக்கு சம்மதம், உங்களுக்கு?” எனக் கேட்டாள் அஞ்சலி. 

நெஞ்சம் அதிர, “முழு சம்மதம் அஞ்சலி” என்றான் யுகி. 

தன் கடைசி நம்பிக்கையும் பொய்த்துப் போனதில் அவளின் முகம் இரத்தப் பசை இழந்து வெளுத்துப் போய் விட்டது. 

அவளின் கண்களை சந்திக்க இயலாமல் பார்வையை தாழ்த்திக் கொண்டான் யுகி. 

மறுவார்த்தை பேசாமல் உள்ளே சென்று விட்டாள் அஞ்சலி. 

“இன்னும் கூட ஒரு ரெக்வஸ்ட் யுகி. ஃபர்ஸ்ட் உங்க மேரேஜ் வச்சிக்கலாம், ரெண்டு கல்யாணமும் ஒரே சமயத்துல நடத்தக் கூடாதுன்னு பெரியவங்க சொல்றாங்க. எனக்கும் நந்தினி கூட பேட்ச் அப் ஆகணும். எங்களுக்கு கல்யாணம் ஆகும் போது அஞ்சலி பத்தின கவலை இல்லாம நிம்மதியா சந்தோஷமா இருப்பேன். ப்ளீஸ்…” என்றான் கார்த்திக். 

அஞ்சலியின் வெளுத்துப் போன முகமே யுகியின் உள்ளத்தை வாட்டிக் கொண்டிருக்க, இப்போது கார்த்திக்கின் பேச்சு அவனை எரிச்சல் கொள்ள செய்தது. 

“இதெல்லாம் வீட்ல கேட்காம நான் எப்படி சொல்ல முடியும் கார்த்தி? முறையா வீட்ல வந்து பேசுங்க. உங்களுக்கு உங்க பொண்ணு முக்கியம்னா எங்களுக்கும் அப்படித்தான், வருஷக் கணக்கா காத்திருக்கா என் தங்கச்சி, முதல்ல நான் எப்படி கல்யாணம் பண்ணிப்பேன்?” என கோவமாகவே பேசினான் யுகி. 

“கோவ படாதீங்க தம்பி, நாளைக்கே உங்க வீட்டுக்கு வந்து பேசுறோம். அஞ்சலியை வீட்ல வச்சிட்டு இருக்கவே பகீர் பகீர்னு இருக்கு. இவ கல்யாணம் முடிஞ்சுதுன்னா   பையன் கல்யாணத்தை ஒரு குறை வைக்காம தடபுடலா செஞ்சிடுவேன் தம்பி” என்றார் புகழ். 

“உங்க பொண்ணை நினைச்சு எனக்குதான் பகீர் பகீர்னு இருக்குங்க இப்போ” என யுகி சொல்ல, யாருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

அஞ்சலி குறித்த பயம் ஒரு பக்கம், தன் வீட்டில் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டுமே என்ற கவலை இன்னொரு பக்கம் என தெளிவில்லாமல் இருந்தான் யுகி. 

அவனது மனநிலை மற்றவர்களுக்கும் புரியத்தான் செய்தது. என்ன செய்ய முடியும்?

“நல்லா இருப்பீங்கப்பா ரெண்டு பேரும்” என சொல்லி சூழலை இலகுவாக்க பார்த்தார் பாட்டி. 

கடையில் வேலை இருப்பதாக சொல்லி புறப்பட்டான் யுகி. சாப்பிட்டு செல்லும் படி வற்புறுத்தினார் புகழ். 

“இனி இங்க வர போக இருக்கனும்தானே, இன்னொரு நாள் சாப்பிடுறேன்” என சொல்லி விட்டான் யுகி. 

மகளிடம் சொல்லிக் கொள்ளுங்கள் என்ற சித்ரா,  அஞ்சலியை அழைப்பதற்காக அறைக்கு செல்ல பார்த்தார். 

தடுத்த யுகி, “நீங்களே சொல்லிடுங்க, பாவம் அவங்கள தொந்தரவு செய்ய வேணாம்” என்றான். 

கேட்காத சித்ரா மகளை அழைத்துக் கொண்டு வந்து நின்றார். 

இது போலொரு சங்கடத்தை யுகி அவனது வாழ்நாளில் அடைந்ததில்லை. என் வாழ்க்கையிலா இப்படியொரு சிக்கலான முடிவை எடுத்திருக்கிறேன் என்ற கேள்வி அவனுள் எழுந்து கொண்டே இருந்தது. 

‘திரி சூலம், வாள், கபாலம் கையில் இல்லாத குறைதான், மத்தபடி காளியாத்தா கணக்காவே நிக்கிறாளே!’ என எண்ணிக் கொண்டே அஞ்சலியை பார்த்தான். அவள் முகம் வெறுமையான உணர்வுகளோடு இருந்தது.  வலிய ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு, “போய்ட்டு வர்றேங்க” என்றான். 

அப்படியே நின்றிருந்த மகளின் தோளை இடித்தார் சித்ரா. யுகியின் முகத்தை பாராமல் கடமையாக தலையை ஆட்டினாள் அஞ்சலி. 

விட்டால் போதும் என கிளம்பி விட்டான் யுகி.