கார்த்திக் பொள்ளாச்சி வந்திருக்கிற காரணத்தால் இப்போதே அவனை நேரில் சந்திப்பதுதான் வசதி என நினைத்த யுகேந்திரன் காலையிலேயே புறப்பட்டு விட்டான். வீட்டில் யாருக்கும் தெரியாது.
தான் வந்து கொண்டிருப்பதாக கார்த்திக்கிற்கு மட்டும் செய்தி அனுப்பி வைத்தான். அவனுக்கும் யுகியிடம் பேச வேண்டுமாக இருக்க, இவனது வரவை எதிர் பார்த்திருந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன் கோவையிலிருந்து மகளோடு நடு இரவில் வீடு வந்த அஞ்சலியின் பெற்றோர் இன்னும் பீதியில்தான் இருந்தனர். வீட்டை விட்டு செல்லும் அளவுக்கு தங்கள் மகள் துணிந்து விட்டதை இன்னுமே அவர்களால் நம்ப முடியவில்லை.
அடுத்த நாள் காலையே அக்காவுக்கு அழைத்து நீ சொன்ன சம்பந்தம் சரி வராது என தகவல் சொல்லி விட்டார் புகழ். நல்ல இடம் பயப்படாதே என தம்பியை சரி கட்ட பார்த்தார் அவரின் அக்கா.
அஞ்சலிக்கு பிடிக்கவில்லை, மேலே பேசாதே என தீர்மானமாக சொல்லி விட்டார் புகழ்.
இப்போதும் அஞ்சலி தன் வீட்டினரிடம் பாராமுகம் காட்டிக் கொண்டிருக்கிறாள். வேலைக்கு அனுப்ப வேண்டும், இந்த ஊரிலிருந்து எனக்கு மாற்றம் தேவை என்பதை மட்டும் பாட்டி வாயிலாக வீட்டினருக்கு தெரிவித்திருந்தாள்.
தங்கை இந்தளவு பிடிவாதம் செய்வதால் அவளின் விருப்பத்துக்கு விட்டால்தான் என்ன என கார்த்திக்கும் அப்பாவிடம் பேசினான்.
இவனுக்கு என் மனநிலை புரிய மாட்டேன் என்கிறதே என புகழ் சோர்வாக பார்த்தார்.
“வெளில வேலைக்கெல்லாம் விட்டு வேற ஏதாவது பிரச்சனை வந்தா என்ன செய்றது? நல்லவன் ஒருத்தன் கைல புடிச்சு கொடுத்திட்டா அப்புறம் அவளாச்சு அவ வீடடுக்காரராச்சு, சின்ன புள்ளைக்கு என்னத்தடா தெரியும், நாமதான் புரிய வைக்கணும்” என சொல்லி இன்னும் மகளுக்கு திருமணம் செய்வதில்தான் உறுதியாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தினார் சித்ரா.
“ஆமாம், அவளுக்கு பிடிக்காத இடத்தை வேணாம்னு சொல்லியாச்சு, பிடிச்ச மாதிரி பார்க்கலாம். வசதி வாய்ப்பு கூட பிரச்சனை இல்லை, இவ மனசு கோணாம இருக்கிற பையனா இருந்தா போதும், வீட்டோட மாப்பிள்ளையா இருந்தாலும் சரிதான்” என்றார் புகழ்.
கார்த்திக் தீவிரமாக யோசித்தான். இங்கு வந்த பிறகு நந்தினியை தொடர்பு கொள்ள முயன்றான். அவள் இவனது அழைப்புகளை ஏற்கவே இல்லை, அனுப்பிய செய்திகளையும் பார்த்தது போல தெரியவில்லை.
தங்கைக்கு யுகியை மணம் செய்ய பேச்செடுத்து இப்போது அவனது காதல் உறவிலேயே பெரும் விரிசல் விழுந்து விட்டது.
யுகி பொள்ளாச்சி வந்து விட்டதும் கார்த்திக்கும் வீட்டிலிருந்து கிளம்பி விட்டான். வழியிலேயே யுகியை பார்த்தவன் வீட்டுக்கு அழைத்து செல்லாமல் தென்னந்தோப்புக்கு அழைத்து சென்றான்.
புகழேந்தியும் அங்குதான் இருந்தார். மகனுக்கு வேறு பெண்ணை பார்க்க பேச்செடுத்த விஷயம் யுகிக்கு தெரிந்து போனதால் அவனது முகத்தை பார்க்க இயலாமல் மருகினார். யுகியே சாதாரணமாக பேசி அவரை இலகுவாக்கி விட்டான்.
தோப்பை சுற்றிக் காட்டி அழைத்து வருகிறேன் என யுகியை, தன் அப்பாவை விட்டு பிரித்து அழைத்து சென்றான் கார்த்திக். ஏதோ பேசத்தான் என்பது யுகிக்கும் புரிந்தே இருந்தது.
அஞ்சலி எப்படி இருக்கிறாள் எனக் கேட்டு பேச்சை ஆரம்பித்தான் யுகி.
நன்றாக இருப்பதாக லேசாக தலையாட்டிய கார்த்திக், “நந்தினி என்கிட்ட பேசுறது இல்லை, உங்களுக்கு தெரியுமா?” எனக் கேட்டான்.
“அந்த கோவம் இயல்புதானே கார்த்தி? நீங்கதான் சரி செய்யணும்” என்றான் யுகி.
கார்த்திக்கிற்கு அதானே பயம், இந்த விஷயத்தில் நந்தினிக்கு கோவம் என்பதை விட பலத்த மனக் காயம் என்பதை நன்றாக அறிந்திருந்தான்.
“உங்களை சம்மதிக்க வைக்கத்தான் அப்பா சொன்ன மாதிரி நடந்துப்பேன்னு அவகிட்ட சொன்னேன், மத்தபடி எப்பவுமே அவளை விடுற எண்ணம் எனக்குள்ள இருந்தது இல்லை, இனிமேலும் அப்படி நினைக்க மாட்டேன்” என விளக்கினான் கார்த்திக்.
“அடிப்படைல நீங்க நல்லவர்னு தெரிஞ்சதாலதான் என் தங்கச்சிய எப்ப கட்டிக்கிறீங்கன்னு கேட்டு நானும் இவ்ளோ தூரம் வந்திருக்கேன்” என்றான் யுகி.
“நந்தினி என்ன சொன்னா?” ஆவலாக கேட்டான் கார்த்திக்.
“உங்க மேல கோவத்துலதான் இருக்கா, அதுக்காக கல்யாணம் வேணாம்னு சொல்ல மாட்டா. எங்க வீட்டோட நிலைமை அவளுக்கு தெரியும். உங்களுக்குள்ள நடக்கிற போரை நீங்கதான் பார்த்துக்கணும்” என்றான் யுகி.
“என்னடா திரும்ப இப்படி கேட்கிறேன்னு தப்பா நினைக்க கூடாது யுகி”
“என்ன கேட்க போறீங்கன்னு ஐடியா இருக்கு, எதுக்கும் உங்க வாயாலேயே சொல்லுங்க” என்றான் யுகி. அவன் கணித்ததை போலவே அஞ்சலியை மணந்து கொள்ளும் படி கேட்டான் கார்த்திக்.
யுகி அதிரவெல்லாம் இல்லை. அமைதியாகவே இருந்தான்.
“என் தங்கைனு சொல்லலை யுகி, எவ்ளோ புத்திசாலி தெரியமா அவ? எல்லாம் நல்லா போயிருந்தா இந்நேரம் அவ…” என்ற கார்த்திக் பெருமூச்சு விட்டான்.
“அஞ்சலிக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லையே கார்த்தி, அவங்க ஆசை படி வேலைக்கு அனுப்பினாதான் என்ன? வயசும் ரொம்ப இல்லையே, மெதுவா கல்யாணம் பண்ணினா ஆகாதா?” எனக் கேட்டான் யுகி.
தன் பெற்றோரின் மனநிலை பற்றி எடுத்துரைத்த கார்த்திக், “இங்க உள்ளவங்க மெண்டாலிட்டி வேற யுகி, யார் பேசியும் என் பேரெண்ட்ஸ் மனசை மாத்த முடியாது. அதை விட அஞ்சலி இப்படி இருக்கும் போது உங்க தங்கையோட நான் எப்படி சந்தோஷமா வாழ்வேன்?” எனக் கேட்டான்.
“இதே மாதிரி நந்துகிட்டேயும் பொறுமையா பேசியிருக்கலாமே கார்த்தி?”
“தப்பு செஞ்ச பிறகுதான் புரிதல் வருது யுகி”
“ஹ்ம்ம்… என் நிலையையும் நீங்க புரிஞ்சுக்கணும். எனக்கு வர போற மனைவி என் வீட்ட பார்த்துக்கிற ஆளா இருக்கணும்னு நான் நினைக்கிறேன். அம்மாக்கு முன்னாடி மாதிரி முடியறது இல்லை. அப்பா பத்தி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணும்னு இல்லை”
“அஞ்சலி நல்ல பொண்ணு யுகி, பெரியவங்கள மதிச்சு நல்ல படியா நடப்பா” வேகமாக சொன்னான் கார்த்தி.
“என்னை பேசி முடிக்க விடுங்க கார்த்தி” என யுகி சொல்லவும் அதன் பின் கார்த்திக்கும் பேசாமல் அவனையே கவனித்தான்.
“உங்கள்ட்ட சொல்றதுக்கு என்ன… என் அண்ணி எங்க வீட்ல இருந்தாலும் கெஸ்ட் மாதிரிதான் இருக்காங்க. எனக்கு வர போற பொண்ணாவது குடும்பத்தை அனுசரிச்சு நடக்கணும்னு எதிர்பார்க்கிறேன். வேலைக்கு போகணும்ங்கிற மைண்ட் செட் உள்ள ஆளு அஞ்சலி. அவங்க ஆசைக்கும் நாம மதிப்பு கொடுக்கணும். அதை விட இப்ப அவங்க இருக்க நிலைல கல்யாண லைஃப்க்கு ரெடியே இல்லை. ஏற்கனவே வீடு, கடைனு ஓடிட்டு இருக்கேன், அஞ்சலிய எவ்ளோ தூரம் கவனம் எடுத்து பார்க்க முடியும்னு…” என்றவன் மேலே சொல்ல தயங்கினான்.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க யுகி”
“ஓப்பனா சொல்றேன், அஞ்சலிய பொறுத்து போறது, ஹேண்டில் பண்றது இதெல்லாம் எனக்கு கஷ்டம்” என்றான் யுகி.
எப்படியும் இவனை சம்மதிக்க வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த கார்த்திக்கிற்கு முகம் சுணங்கி விட்டது.
“எனக்கு வயசு இருந்திருந்தா அஞ்சலிக்காக அவங்க ஆசை படி ரெண்டு வருஷம் வேலை பார்க்கட்டும், அவங்க மனசு மாறட்டும்னு காத்திருந்து கல்யாணம் பண்ணியிருப்பேன். அப்படியே நான் வெயிட் செய்றேன்னாலும் என் வீட்ல ஒத்துக்க மாட்டாங்க” என யுகி சொல்ல, கார்த்திக் எதுவும் சொல்லவில்லை.
“ஒரு வேளை நான் வெயிட் பண்ணினா கூட அஞ்சலிக்கு வேற யாரையும் பிடிச்சு போனா… எந்நிலைமை என்னாகிறது?” எனக் கேட்டான் யுகி.
யுகி எதையும் கூட்டி குறைத்து பேசவில்லை. நிதர்சனமான உண்மைகளை கூறிக் கொண்டிருந்தான்.
ஆனாலும் விடாத கார்த்திக், “நீங்க பேசுறது வச்சு பார்க்கும் போது அஞ்சலியை உங்களுக்கு பிடிக்காம இல்லைனு நல்லா தெரியுது. அவ வேலைக்கு போகாம வீட்டோட இருந்தா மறுக்க மாட்டீங்கதானே?” எனக் கேட்டான்.
“அது தப்பு கார்த்தி, நான் இதிலிருந்து எஸ்கேப் ஆக சொல்றதா மட்டும் தயவுபண்ணி நினைக்காதீங்க. அவங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நீங்க, நான், உங்க பேரெண்ட்ஸ் யாரும் தேவையில்ல அவங்க லைஃபை நல்லா அமைச்சு கொடுக்க. அவங்களுக்கு அவங்களே போதும். உங்க மேல எல்லாம் பாசமும் மரியாதையும் இருக்கிற காரணத்தாலதான் இன்னும் உங்க வீட்ல இருக்காங்க. அதை தப்பா புரிஞ்சுக்கிட்டு உங்க இஷ்டத்துக்கு பண்ணாதீங்க” என எச்சரிக்கை போலவே சொன்னான் யுகி.
“இவ்ளோ தூரம் அவளை புரிஞ்சு வச்சிருக்க உங்களை விட நல்ல பையன் அவளுக்கு கிடைக்க போறதில்ல யுகி”
“இவ்ளோ சொல்லியும் திரும்ப திரும்ப இப்படியே பேசினா எப்படி கார்த்தி? முந்தா நாளு அவங்கள உங்கப்பா கூட அனுப்பி வைக்க எனக்கு விருப்பமே இல்லை. நந்துவோட லைஃப் உங்களோட சம்பந்த படலைனா நான் உங்க தங்கைக்கு நல்லவனா இருந்திருப்பேன்” என்ற யுகியின் குரலில் வருத்தம் மிகுந்திருந்தது.
சற்று நேரம் மௌனமாகவே அந்த தோப்பை சுற்றி வந்தனர்.
திடீரென “அப்ப வெயிட் பண்ணுங்க யுகி, அஞ்சலியை செட்டில் பண்ணிட்டு நந்துவை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் கார்த்திக். அவனை நன்றாக முறைத்தான் யுகி.
“என்னை பத்தி என்ன வேணா நினைச்சுக்கோங்க யுகி, ஆனா என் முடிவு இதுதான்” என உறுதியாக சொல்லி விட்டான் கார்த்திக்.
“நந்துவை இன்னும் இன்னும் கோவ படுத்துறீங்க கார்த்தி, அஞ்சலி கல்யாணம் பண்ணிக்க அஞ்சு வருஷம் ஆனா என் தங்கையும் அது வரை வெயிட் பண்ணனுமா?”
“இப்படி சொல்றதுக்கு ஸாரி யுகி, நாந்தான் வேணும்னு நந்தினி நினைச்சா பத்து வருஷம் ஆனாலும் வெயிட் பண்ணித்தான் ஆகணும்” என்றான் கார்த்திக்.
அவனது சட்டையை பிடித்து சண்டையிடும் அளவுக்கு யுகிக்கு ஆத்திரம் பொங்கியது. தங்கையை நினைத்து தன்னை நிதானப் படுத்திக் கொண்டான்.
மீண்டும் மௌனம்.
சற்று நேரம் சென்று, “சரி கார்த்தி, ஆனா ஒரு கண்டிஷன்” என்றான் யுகி.
“எதுவா இருந்தாலும் எனக்கு சம்மதம் யுகி”
“ம்ம்… நீங்க சொல்ற இந்த சம்மதம்ங்கிற வார்த்தையை உங்க தங்கை சொல்லணும், என்கிட்ட நேரடியா என் மூஞ்ச பார்த்து சொல்லணும்” என்றான் யுகி.
கார்த்திக்கால் உடனே சரியென சொல்ல முடியவில்லை. அவனிடம் அப்பட்டமான தடுமாற்றம் தென்பட்டது.
புன்முறுவல் பூத்த முகத்தோடு, “ரெண்டு நாள் டைம் எடுத்துக்கோங்க கார்த்தி, திரும்பவும் வர்றேன் இங்க. அஞ்சலிகிட்ட பேசுவேன் நான், அவங்க சம்மதிக்கலைனா அதுக்கும் மேல இந்த பேச்சை நீங்க எடுக்க கூடாது. உங்க கல்யாணத்தையும் தள்ளி போடக்கூடாது” என்றான் யுகி.