கால் மணி நேரத்துக்கு பின் மருத்துவ மனையை வந்தடைந்தவன் பைக்கை பார்க் செய்து விட்டு வேகமெடுத்து ஓடினான்.
மூச்சிறைக்க தன் முன்னால் நின்றவனை கலங்கிய விழிகளோடு பார்த்த அஞ்சலி, “அப்பா எப்படி இருக்காங்க?” எனக் கேட்டாள்.
இதற்கு மேல் அவளிடம் என்ன பொய் சொல்லி சமாளிப்பான்? ஆகவே உண்மையை சொல்லி விட்டான். அவனை கோவமாக பார்த்தவள் உடனே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்.
“உங்க வீட்ல எல்லாரும் பயந்து போயிருக்காங்க அஞ்சலி, அவங்கள்ட்ட நான் பேசுறேன்” என சொல்லிக் கொண்டே அவளின் பின்னால் ஓடினான்.
“ஒன்றரை வருஷமா நான் பேசாததா? அவங்கள பொறுத்த வரைக்கும் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டா ப்ராப்லம் சால்வ்டு, என்னை என் போக்குல விடுங்க” என சொல்லிக் கொண்டே அவளும் நிற்காமல் நடந்தாள்.
“இதுல என் தங்கை லைஃப் கூட சிக்கிக் கெடக்கு, ப்ளீஸ் அதுக்காக கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, பேசலாம்” என சொல்லிக் கொண்டே அவளின் முன்னே போய் நின்றான்.
“முதல்ல என் வீட்ல பேசலாம்னு சொன்னீங்க, இப்ப என்கிட்ட பேசுறதா சொல்றீங்க, நிஜமா நீங்க என்ன பிளான்ல இருக்கீங்கன்னு எனக்கு புரியலை. அண்ணி பத்தி கவலைனா நான் போறது நல்லதுதான், அண்ணா அவன் லைஃபை பார்ப்பான்” என்றவள் கேப் புக் செய்ய ஆயுத்தமானாள்.
“பசிக்கிற மாதிரி இல்லை… வாங்களேன் ஒரு டீ சாப்பிட்டுட்டு அப்புறம் என்ன செய்யலாம்னு முடிவு பண்ணலாம்” என சொல்லி அவளின் பதிலை எதிர் பார்க்காமல் அருகில் இருந்த பேக்கரிக்கு இழுத்து சென்று விட்டான்.
இவளின் அப்பா வரும் வரை எப்படியாவது இவளை இங்கேயே இருக்க வைக்க போராடிக் கொண்டிருந்தான். இருக்குமிடத்தை கார்த்திக்கிற்கு எப்போதோ மெசேஜ் செய்து விட்டான்.
மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து இன்னும் ஏதும் சாப்பிடிருக்கவில்லை அஞ்சலி. இப்போது நன்றாக இருட்டியிருந்தது. தோழி ஊரில் இல்லாத காரணத்தால் பி ஜி ஒன்றில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்திருந்தாள்.
கோவையிலேயே படித்தவள் என்பதால் இங்கு எல்லாமே அஞ்சலிக்கு அத்துப்படி. இவன் வீட்டில் சொல்லியிருப்பானோ என அவளுக்கு சந்தேகம் இருந்ததுதான், யார் வந்தாலும் குண்டு கட்டாக தூக்கியா சென்று விடுவார்கள், பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தவள் தேநீர், வெஜ் பப்ஸ் என ஆர்டர் கொடுத்தாள்.
“ஹப்பா! ஒரு கர்ட்டஸிக்கு என்ன வேணும்னாவது என்கிட்ட கேட்ருக்கலாம்” என்றான் யுகி.
அவள் பதில் தராமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டாள். தனக்கு தானே ஆர்டர் சொல்லிக் கொண்டான் அவன்.
தேநீர் வரவும் வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல், “பெரியவங்க கவலையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும் நீங்க” என ஆரம்பித்தான்.
“நான் என்ன தப்பு பண்ணினேன்? பண்ணினவன் எங்கேயோ போய் ஜாலியா இருக்கான். அவனுக்கு தண்டனை வாங்கி தரக் கூட எனக்கு உரிமை இல்லாம போயிடுச்சு. அவன் யாரு லைஃப் பார்ட்னர் என் லைஃப்பை கம்ப்ளீட் பண்ண போற…” என்றவள் என்ன வார்த்தை சொல்ல நினைத்தாளோ, ஆனால் அடக்கிக் கொண்டாள்.
சற்றே மிரண்டு போய் பார்த்தான் யுகி.
“என்னைப் பார்த்துக்க எவனும் வேணாம், எனக்கு நான் போதும்” என்றவள் தான் சாப்பிட்டதுக்கு உண்டான பணத்தை செலுத்தினாள்.
இன்னும் வராமல் உன் அப்பா என்ன செய்கிறார் என கார்த்திக்கிற்கு செய்தி அனுப்பியவன் வாயிலையும் அஞ்சலியையும் மாறி மாறி பார்த்தான்.
கவனித்து விட்டவள், “யார் வர்றா இங்க?” என கோவமாக கேட்டாள்.
அவன் தெரியாது என சமாளிப்பாக தோள்களை குலுக்கினான்.
“யார் வந்தாலும் திரும்ப அனுப்பி வச்சிடுங்க” என்றவள் வெளியேறி விட்டாள். அவனும் வெளியில் வந்தான்.
கேப் புக் செய்தவள், “எந்தங்கச்சிக்கு துரோகம் பண்ணுவீங்களான்னு என் அப்பாகிட்ட கட் அண்ட் ரைட்டா கேளுங்க. அண்ணாவையும் விடாதீங்க. அப்படியும் அவங்க சரி வரலைனா அண்ணனை தூக்கி போட்டுட்டு ஜாலியா இருக்க சொல்லுங்க அண்ணிய, உடனே இன்னொரு மாப்ள பார்க்கிறேன்னு நீங்களும் அவங்கள டார்ச்சர் பண்ணாம உங்க வீட்டு பொண்ணுக்கு சப்போர்ட்டா இருங்க. அது தர்ற பலம் வேற” என்றவள் வந்த கேபில் ஏறிக் கொண்டாள்.
பேக்கரி வாசலில் யுகி நின்றிருக்க புகழும் சித்ராவும் வந்து சேர்ந்தனர். அஞ்சலி புறப்பட்டு விட்டாள் என அவன் சொல்ல, எதற்காக விட்டீர்கள் என அதிருப்தியாக கேட்டார் புகழ். பொங்கி வந்த அழுகையோடு காரில் ஏறி மடியில் முகம் புதைத்துக் கொண்டார் சித்ரா.
“கார்த்திக்கு வேற பொண்ண கட்டி வைக்க ஏற்பாடு பண்றீங்களாமே?” என தாடை இறுக கேட்டான் யுகி.
“அது… என் நிலைமைய அப்புறம் விளக்கி சொல்றேன் தம்பி, அஞ்சலி எங்கன்னு சொல்லுங்க. அவளை பார்க்காம நெஞ்சு பதறுது” என்றார் புகழ்.
அஞ்சலி கேப் புக் செய்யும் போது செல்லுமிடத்தை அவள் டைப் செய்ததை அவளறியாமல் கவனித்திருந்தான். அதனால்தான் அவளை பின் தொடராமல் பயமின்றி அங்கேயே இருந்தான்.
எங்கள் வீட்டு பெண்ணை ஏமாற்ற பார்ப்பீர்களா என புகழின் மீது கோவம், அதனால் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டான். ஆனால் அவர்களின் பயமும் பதற்றமும் அவனை இளகச் செய்தது.
புகழேந்தியை தன்னை பின் தொடர சொல்லி விட்டு பைக்கை எடுத்தான்.
வந்து சேர்ந்த விடுதியில் தங்குவதற்காக அஞ்சலி விவரங்கள் எழுதிக் கொண்டிருக்க, யுகியும் புகழும் அங்கு வந்து விட்டனர்.
வீட்டுக்கு வர மாட்டேன் என அஞ்சலி பிடிவாதம் செய்ய, பிஜி’யின் வார்டன் போலீசுக்கு அழைக்க போவதாக சொன்னார். வீட்டில் சண்டை, இவர்களின் மகள்தான் இவள் என அவரை சமாதானம் செய்தான் யுகி.
பெற்றோருடன் செல்ல அஞ்சலி மறுக்க, “நீங்க காருக்கு போங்க” என புகழிடம் அழுத்தமாக சொன்னான் யுகி.
கலங்கிப் போனவராக மனைவியை அழைத்துக் கொண்டு காரில் ஏறினார் அவர். அஞ்சலியின் கையை பிடித்தவன் அவளை வலிந்து இழுத்துக் கொண்டு போய் காரில் ஏற்றி விட்டான். மகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு அழுதார் சித்ரா.
யுகியை கொலை வெறியோடு அஞ்சலி பார்த்திருக்க, அவளின் பையையும் காரில் வைத்தான். புகழ் நன்றியாக அவனை பார்த்தார்.
“நந்தினிக்கும் கார்த்திக்குக்கும்தான் கல்யாணம், அடுத்த மாசம் தேதி பார்க்குறீங்க, அப்புறம் அஞ்சலிக்கு நீங்க சொல்ற பையனோட கல்யாணம் இல்லை. அவங்க விருப்பம் இல்லாம ஏதாவது செஞ்சா நானே உங்க வீட்லேருந்து அவங்கள அழைச்சிட்டு வந்து ஹாஸ்டல்ல சேர்த்து விட்ருவேன்” என்றான்.
“பிளான் பண்ணி என்னை காட்டி கொடுத்திட்டு நல்லவன் மாதிரி பேச வேணாம்” என கோவப்பட்டாள் அஞ்சலி.
“நான் நல்லவன்னு எப்போ சொன்னேன்?” என அவளை பார்த்துக் கேட்டான் யுகி.
“நானும் நல்லவ இல்லை, உங்களை அப்புறம் பார்த்துக்கிறேன்” என துடுக்காக அவள் கூற, மகளை கண்டித்தார் சித்ரா.