அதற்குள்ளாகவே சோர்ந்து விட்டார் வெங்கட். “உள்ள போலாம் வாங்கப்பா” என யுகி அழைத்தும் மறுத்தவர், “நீ என்னப்பா சொல்ற?” என நேரடியாக மகனிடமே கேட்டார்.
இப்போது ஸ்ரீஜாவுக்கு கலவரமானது. அவன்தான் ஏற்கனவே அவனது எண்ணத்தை இவளிடம் சொல்லியிருக்கிறானே. தன்னை மீறி வெளியிலிருந்து எப்படி பெண் எடுப்பார்கள் என்ற அசட்டை அவளிடம் இருந்தது.
யுகி நிச்சயமாக பெற்றோரின் பேச்சை மீற மாட்டான் என்பதும் அவளுக்கு தெரியும். தங்கையை இங்கு வர செய்தது யுகியின் மனதை கவர மட்டுமல்ல, தன் மாமனார் மாமியார் மனதையும் கவரத்தான். தன் அவசரத்தால் இப்போதே யுகியிடம் அபிப்ராயம் கேட்டு விட்டாரே என தவித்தாள்.
அனுவை திருமணம் செய்ய சொட்டு கூட விருப்பமில்லை என யுகியும் சொல்லி விட்டான். கையோடு ஸ்ரீஜாவின் அப்பாவுக்கு அழைத்து பேசி இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் வெங்கட். ஸ்ரீஜாவின் முகம் கறுத்து போய் விட்டது.
சின்ன மகளையும் கூப்பிட்டு அனுவுக்கு அழைத்து அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வைத்தார். மருமகளிடம் இனி யுகியின் கல்யாணத்தை அனுவோடு இணைத்து பேசக்கூடாது என கண்டிப்போடு சொன்னவர், “நந்தினி பத்தி நீ சொன்னதும் தப்புமா” என சொல்லி நிறுத்தினார்.
வேண்டா வெறுப்பாக நாத்தனாரிடம் மன்னிப்பு கேட்ட ஸ்ரீஜா மாடிக்கு சென்று விட்டாள். எழுந்த வெங்கட் அப்படியே தடுமாறி சோஃபாவிலேயே விழுந்து விட்டார்.
அரை மயக்க நிலை, அலமேலு பதற்றம் கொள்ள, நந்தினி அப்பாவை தாங்கிக் கொண்டு அழுதாள். விரைவாக அப்பாவின் இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவையெல்லாம் பரிசோதனை செய்தான் யுகி.
எல்லாமே வெகுவாக குறைந்து போயிருந்தது. அவரை கவனித்து படுக்க வைப்பதற்குள் ஒரு மணி நேரம் ஓடிப் போயிருந்தது.
அவரை காட்டும் மருத்துவருக்கு அழைத்து எல்லா விவரத்தையும் சொல்லி பயப்பட ஏதுமில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டான் யுகி.
தங்கையை எதுவும் கடிந்து கொள்ளவில்லை யுகி. மாறாக அலமேலுதான் ‘உன் வாயால்தான் எல்லாம்’ என மகளை திட்டினார்.
“எல்லாரும் என்னையே சொல்லுங்க, யாருக்கும் என்னை பிடிக்கல, யாருக்கும் நான் வேணாம், நான் எங்கேயாவது போயிடுறேன்” என அழுதாள் நந்தினி.
பதறிப் போனவராக மகனை பார்த்தார் அலமேலு.
“அவளை ஒன்னும் சொல்லாதம்மா, ஏதோ லீவ் கிடைக்கவும் ஆசையா ஊருக்கு வந்தவள இப்படியா பேசுவ?” என அம்மாவிடம் சொன்னவன், “நீ ஃபோன் எடுக்காம போகவும் எனக்கு கூப்பிடிருப்பார் போல கார்த்திக், போ போய் பேசிட்டு வா” என தங்கையிடம் பொய்யாக கூறினான்.
நந்தினி அண்ணனை பார்க்க, அம்மாவிடம் ஏதும் சொல்லக்கூடாது என்ற மறைமுக செய்தி இருந்தது அவனது பார்வையில். அவளும் வீடு இப்போதிருக்கும் சூழலில் ஏதும் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்துக் கொண்டாள்.
காலை சாப்பாடு முடித்து கடைக்கு கிளம்புவதற்கு முன் அப்பாவை காண சென்றான் யுகி. சின்ன மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி முடிக்க கேட்டுக் கொண்டார் வெங்கட்.
ஓரிரு மாதங்களில் தங்கையின் திருமணம் நடந்தேறும் என உறுதி கூறி விட்டுத்தான் புறப்பட்டான் யுகி.
தங்கையின் வரவை அறிந்து மாலையில் தன்னிரு மகள்களோடு வீடு வந்தாள் பைரவி. தனியார் பள்ளி ஒன்றில் துணை தலைமை ஆசிரியராக இருக்கிறாள். அவள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே சேகர் வீட்டிலிருந்து பெண் கேட்டு வந்தனர்.
நல்ல குடும்பம், கெட்ட பழக்கங்கள் இல்லாத பையன் என நன்றாக விசாரித்து விட்டுத்தான் சேகரை இவளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
அவனும் நல்ல மனிதன்தான், ஆனால் பணம் ஈட்டும் திறமை இல்லாதவன். எதிலும் முன்னேற முடியவில்லை. ஏதேதோ பிஸ்னஸ் செய்து முதலுக்கே மோசமாகி விட்டது. அவனது அப்பா அவனது பங்காக கொடுத்த சொத்துக்களை எல்லாம் கரைத்து விட்டான். வேலையும் ஏதும் சரியாக அமைத்துக் கொள்ள தெரியவில்லை. எல் ஐ ஸி ஏஜென்ட்டாக காலத்தை ஓட்டி வருகிறான்.
மகளுக்கு சீதனமாக நிலம் கொடுத்திருந்தார் வெங்கட், அதை விற்று பணமாக்கி மேற்கொண்டு பணம் சகோதரர்கள் இருவரும் சேர்த்து போட்டு என பக்கத்திலேயே பைரவிக்கு வீடு வாங்கி கொடுத்திருந்தனர்.
இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் ஷிவானி கல்லூரியில் முதல் வருடம் படிக்கிறாள், இரண்டாவது பெண் சுப்ரியா பத்தாம் வகுப்பில் இருக்கிறாள்.
வீட்டு செலவு, பிள்ளைகளின் படிப்பு, திடீர் மருத்துவ செலவு என எதற்காகவும் பைரவியை தவிக்க விடாமல் பார்த்துக் கொள்வார்கள் சகோதரர்கள் இருவரும். அக்காவுக்கு வாசு என்ன செய்தாலும் மனைவிக்கு தெரியப் படுத்திக் கொள்ள மாட்டான்.
நந்தினியும் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகு அக்கா மகள்களின் பெயரில் வங்கியில் பணம் போட்டு வருகிறாள். யாருக்குமே தெரியாது.
பைரவியின் மனதில் கணவனின் இயலாமை குறித்து அதிருப்தி உண்டு. மனம் நிறைந்த சிரிப்பை அவளிடம் காணவே முடியாது. இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்களே என்ற கவலை துளியும் சேகரிடம் இருக்காது. என்ன நடந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் குதூகலமாகவே இருப்பான்.
கையில் ஆயிரம் ரூபாய் கிடைத்தால் ஒரு ரூபாய் மிச்சம் வைக்காமல் செலவழித்து விட்டுத்தான் ஓய்வான்.
முதல் முறை தொழிலில் அடி பட்ட போதே சுதாரித்திருக்க வேண்டாமா? இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்பாக வாழ்ந்திருக்கலாமே, எதற்காக அகலக் கால் வைக்க வேண்டும், திட்டமிடுதல் என்பதே இல்லாமல் இருக்கிறானே எனதான் கணவனை நினைத்து அவளுக்கு வருத்தம்.
இனி போய் என்ன இரவுக்கு சமைக்க போகிறாய், இங்கேயே சாப்பிட்டு உன் கணவனுக்கும் சாப்பாடு எடுத்து செல் என சொல்லி விட்டார் அலமேலு.
“இல்லம்மா, யுகிக்கும் கல்யாணம் ஆகுற நேரம் வந்தாச்சு, இனிமே இதெல்லாம் குறைச்சுக்கிறதுதான் எனக்கு நல்லது” என்றாள் பைரவி.
“அவனுக்கு கல்யாணம் ஆனாலும் உன் உரிமை இங்க ஏதும் மாறிடாது” என அழுத்தமாக சொல்லி சென்றார் அலமேலு.
பைரவியின் சின்ன மகள் கொண்டு வந்திருந்த பாடப் புத்தகத்தை எடுத்துப் படிக்க, பெரியவள் கைப்பேசி பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
பைரவிக்கு வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது, எல்லா வேலையும் அவளேதான் செய்ய வேண்டும். கிடைத்த ஓய்வை உபயோகித்து ஹாலிலேயே படுத்து விட்டாள்.
மற்ற நேரமாக இருந்தால் அக்காவுடன் ஏதாவது சிரித்துப் பேசிக் கொண்டிருப்பாள் நந்தினி. இப்போது மனநிலை சரியில்லாத காரணத்தால் வீட்டின் பின் பக்கத்தில் ஹெட் செட் அணிந்து பாடல் கேட்டுக் கொண்டே நடை போட்டாள்.
‘நேரம் கிடைக்கும் போது எனக்கு அழையுங்கள்’ என காலையிலேயே கார்த்திக்கிற்கு செய்தி அனுப்பியிருந்தான் யுகி.
‘இப்போது கூப்பிடலாமா?’ என மாலையில்தான் பதில் செய்தி அனுப்பினான் கார்த்திக்.
அலுவலக அறைக்கு வந்து தனிமை ஏற்படுத்திக் கொண்டு அழைப்பு விடுத்தான் யுகி.
கோவமாக ஏதும் பேசி விடாமல் அப்பாவின் உடல்நிலை பற்றி கூறி எப்போது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என நிதானமாகவே கேட்டான் யுகி.
“நந்து உங்ககிட்ட எதுவும் சொல்லலையா?” என தயக்கத்தோடு கேட்டான் கார்த்திக்.
“ஒரு சொந்தத்த விடாம எல்லாரையும் கூட்டி வச்சு செஞ்சிருக்கோம் எங்கேஜ்மெண்ட். சென்னைல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தாம எந்த இடத்தையாவது பாக்கி வச்சிருக்கீங்களா கார்த்திக்? உங்க வீட்டு பொண்ணு லைஃப் மட்டுமே நினைப்பீங்களா? நந்தினி பத்தி யோசிக்கலையா நீங்க? அட அவ லைஃப் என்னாகும்னு யோசிக்க வேணாம்? அவ மனச பத்தி திங்க் பண்ணுனீங்களா? உங்க அத்தை பையன் உங்க சிஸ்டருக்கு என்ன பண்ணினானோ அதுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லை நீங்க நந்துக்கு செய்ய நினைக்கிறது” குரலை சற்றும் உயர்த்தாமல் கார்த்திக்கை பேச்சிழக்க வைத்தான் யுகி.
“அதுக்கு மேல நீங்க இப்ப எடுத்திருக்க முடிவு, எப்படி இது சரியா வரும்? உங்க தங்கை ஓகே சொல்லிட்டாங்களா? உங்க அப்பாம்மா யோசிச்சுதான் இந்த முடிவை எடுத்திருக்காங்களா?” யுகி கேட்க, கார்த்திக்கிடம் பதில் இல்லை.
சில நிமிட மௌனத்திற்கு பிறகு, “நேர்ல மீட் பண்ண வர்றேன் கார்த்திக், அதுக்குள்ள வேறெந்த தப்பான முடிவையும் செயல் படுத்த பார்க்காதீங்க. கொஞ்சம் என் தங்கையையும் நினைவுல வைங்க” என்றான் யுகி.
“ஸாரி யுகி, எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. அஞ்சலி லைஃப்க்கு ஒரு வழி பொறக்காம நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் என்னால கண்டிப்பா சந்தோஷமா வாழ முடியாது. உங்களுக்கே தெரியும் அஞ்சலிதான் எங்க ஃபேமிலியோட உயிரே, அவ நல்லா இல்லாம…” என்றவன் தொண்டை அடைக்க அடுத்த வார்த்தை சொல்ல இயலாமல் திணறினான்.
“உங்க யாருக்குமே அஞ்சலியை சரியா ஹேண்டில் பண்ண தெரியல. என்ன நடந்துச்சுன்னு அந்த பொண்ணை ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி வீட்டுக்குள்ளேயே வச்சிருக்கீங்க?” எனக் கேட்டுக் கொண்டிருந்த யுகி திடீரென அமைதியாகி விட்டான்.
“வேறென்ன பண்ண சொல்றீங்க? அவ்ளோ ஆனதுக்கு அப்புறம் அவளை தனியா எங்க விட முடியும்?” என்ற கார்த்திக்கிற்கு பதில் மொழி சொல்லவில்லை யுகி.
“யுகி யுகி… இருக்கீங்களா?” எனக் கேட்டான் கார்த்திக்.
திரையில் தெரிந்த சிசிடிவி காட்சிகளை எதேச்சையாக பார்த்து விட்டு திகைத்துப் போயிருந்த யுகி, “அஞ்சலி இப்போ எங்க இருக்காங்க?” எனக் கேட்டான்.
“வீட்லதான் இருப்பா” என்றான் கார்த்திக்.
“கொஞ்சம் கன்ஃபார்ம் பண்ணி சொல்ல முடியுமா?” என யுகி கேட்க, கார்த்திக்கிற்கு பெரும் குழப்பம்.
“என்னாச்சு யுகி?”
“கடைக்கு வெளில அஞ்சலி போலவே ஒரு பொண்ணு ஆட்டோல போயிட்டு இருக்கிறாங்க” என்றான் யுகி.
கடைக்கு வெளியில் ஆட்டோக்காரன் ஏதோ முகவரி யாரிடமோ விசாரிக்க அந்த ஆட்டோவில் இருந்த பெண் தலையை வெளியில் நீட்டி பார்க்க, அந்தக் காட்சியை கண்டு விட்டுத்தான் அஞ்சலியோ என சந்தேகம் கொண்டான் யுகி.
தங்கையின் நிச்சயத்தின் போதுதான் கடைசியாக நேரில் பார்த்தது, அதற்கு முன்னும் சில முறை பார்த்திருக்கிறான். முதல் பார்வையிலேயே மனதில் பதியும் முகம் அவளுடையது. அதை விட அவளுடன் ஒரு முறை பழகினாலும் அவளது பட பட பேச்சிலும் துறு துறு குணத்திலும் எதிரில் இருப்பவரின் நினைவில் அப்படியே தங்கி விடுவாள்.
ஆதலால் தான் பார்த்தது அஞ்சலியைத்தான் என தொண்ணூற்று ஒன்பது சதவீதம் நம்பினான்.
கார்த்திக்கின் குடும்பத்தினர் பொள்ளாச்சியில் வசிக்கிறார்கள். பணி காரணமாக கார்த்திக்தான் சென்னையில் இருக்கிறான். அஞ்சலியை தனியாகவே விடுவதில்லை. தவிர்க்க முடியாத காரணத்தால் அவனது பெற்றோர் இருவருமே வெளியில் செல்ல நேர்ந்தாலும் அவனது பாட்டி எந்நேரமும் பேத்தியுடன்தான் இருப்பார்.
அப்படியிருக்க அஞ்சலி எப்படி கோவை வந்திருக்க முடியும்? என்ற யோசனையோடே வீட்டுக்கு அழைத்தான் கார்த்திக்.
கடைக்கு வெளியில் வந்த யுகி ஆட்டோ சென்ற பக்கமாக பார்த்துக் கொண்டிருக்க, அஞ்சலி வீட்டில் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்தான் கார்த்திக்.
எதிர் முனையில் திகிலோடு பேசிக் கொண்டிருந்த கார்த்திக்கிடம், “உங்க தங்கையை ஸேஃபா உங்க வீட்ல கொண்டு வந்து சேர்க்க வேண்டியது என் பொறுப்பு” என சொல்லி விட்டு அவசரமாக பைக்கை எடுத்தான் யுகி.