பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -2

அத்தியாயம் -2

மனதில் நிம்மதி இல்லாத காரணத்தால் நந்தினிக்கு சரியான உறக்கமில்லை. கார்த்திக்கை விட்டு பிரிவதை அவளால் எண்ணியே பார்க்க முடியவில்லை. இந்த முடிவை எடுத்தது இவள் அல்ல, அவன்தான். எப்படி அவனால் அப்படி சொல்ல முடிந்தது என நினைத்து நினைத்து ஆற்றாமையாக வந்தது.

கோவத்தில் ‘ரொம்ப சந்தோசம், நான் போகிறேன்’ என சொல்லி இங்கு வந்து விட்டாள். நிஜத்தில் அப்படியொரு பிரிவை அவளால் தாளவே முடியாது. அத்தனை தூரம் அவளின் மனதில் அவனே நிறைந்து நின்றான்.

ஊரறிய நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்தது. திருமணம் மாப்பிள்ளை வீட்டு தரப்பில் என்பதால் நிச்சயத்தையே அத்தனை சிறப்பாக செய்திருந்தார் வெங்கட்.

மஸ்கட்டில் இருந்து வாசுவால் வர இயலாத நிலை, வேலையே போனாலும் பரவாயில்லை என ரிஸ்க் எடுத்து குடும்பத்தோடு வந்து சிறப்பித்து தந்த நிகழ்வு.

பைரவியை விட பனிரெண்டு வயது இளையவள் நந்தினி. தங்கையை பார்லர் அழைத்து செல்வதிலிருந்து ஜாக்கெட் டிசைன் செய்ய, அணிகலன்கள் தேர்வு செய்ய என சகோதரிகள் இருவரும் செய்த அலப்பறைகளுக்கு அளவே இல்லை.

 “எங்கேஜமெண்ட்க்கே இப்படினா கல்யாணத்துக்கு என்ன கொட்டம் அடிக்க போறீங்களோ?” என நிஜமாகவே சலித்துக் கொண்டாள் பைரவியின் மகள் ஷிவானி.

மண மேடையில் வைத்து கார்த்திக்கிற்கு வித விதமான பரிசுகள் கொடுத்தாள் நந்தினி. அவனது நண்பர்களின் கேலியில் சிவந்து மலர்ந்த கார்த்திக்கின் உருவம்தான் இப்போது வரை அவளது கைப்பேசியில் முகப்பு படமாக வைத்திருக்கிறாள்.

காலையில் எழுந்ததுமே நிச்சயதார்த்த ஆல்பத்தை கையில் வைத்துக்கொண்டு வெறித்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

கதவு தட்டப்பட, அண்ணிதான் என நினைத்து சலிப்பும் எரிச்சலுமாக கதவை திறந்தாள் நந்தினி.

ஸ்ரீஜாவின் தங்கை அனுபமா காஃபி கோப்பையோடு நின்றிருந்தாள்.

“நீ வந்திருக்கேன்னு இப்போதான் தெரிஞ்சது,  என்ன திடீர்னு?” என விசாரித்தாள் அனு.

அண்ணி மற்றும் இவளின் எண்ணத்தை பற்றி நன்கறிந்தவள் நந்தினி. வீட்டினரோடு சுமூக உறவை வளர்த்துக் கொண்டால் யுகியின் மனதில் இடம் பிடித்து விடலாம் என நினைக்கிறாள் என்பதும் தெரியாதவள் அல்ல.

சென்ற முறை  இங்கு வந்திருந்த போதே யுகியிடம் இவளை பற்றி பேசி அவனது மனதையும் தெள்ளத் தெளிவாக அறிந்திருந்தாள். அண்ணியிடம் இது குறித்து வெளிப்படையாக சொல்லி விட்டதாகவும் சொல்லியிருந்தான் யுகி.

அப்படியிருக்க மீண்டும் மீண்டும் அண்ணனின் மனதை மாற்ற ஏன் முயல்கிறார்கள் என கோவம்தான் அவளுக்கு வந்தது. ஏற்கனவே கார்த்திக்கின் மீது கோவம் கொண்டிருந்தவளுக்கு அதன் வடிகால் கிட்டாமல் இருக்க, இப்போது வசமாக சிக்கிக் கொண்டாள் அனுபமா.

அதனால், “நல்லாருக்கே, என் வீட்டுக்கு நான் எப்ப வேணும்னாலும் வருவேன், நீங்க ஏன் கேள்வி கேட்குறீங்க? நாந்தான் உங்களை கேட்கணும் என்ன திடீர் விசிட்?” எனக் கேட்டாள் நந்தினி.

அவளின் கேள்வியில் திகைத்தாள் அனு.  “என்ன பதில் சொல்ல மாட்டேங்குறீங்க, அதுசரி ஏதாவது சொல்ல முடியுற பதிலா இருந்தாதானே சொல்றதுக்கு? உங்கக்கா பேச்சு கேட்டுகிட்டு என் அண்ணாவை இப்படி டார்ச்சர் பண்றீங்களே… டோன்ட் யூ ஃபீல் எனி ஷேம்?” என காரமாகவே கேட்டு விட்டாள் நந்தினி.

அனுவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வர, வேகமாக அக்காவை தேடிக் கொண்டு சென்றாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் வீடு அமளி துமளி  ஆனது. அனு கேப் புக் செய்து கொண்டு அவளது விடுதிக்கு சென்று விட்டாள். வாசுவிடமிருந்து அம்மா, தம்பி இருவருக்கும் அழைப்பு வந்தது.

நந்தினி மட்டும் பெரிய அண்ணனின் அழைப்பை ஏற்காமல் நிராகரிப்பு செய்தாள்.

பள்ளிக்கு தயாராகி வந்த ஆறு வயது அண்ணன் மகன் ரோஹித்தை நந்தினி ஆசையாக கை நீட்டி அழைத்தாள், அவனும் அத்தை என கூவிக் கொண்டு இவளிடம் ஓடி வந்தான்.

பட்டென மகனை பிடித்து இழுத்த ஸ்ரீஜா, “ஸ்கூலுக்கு லேட் ஆகல உனக்கு?” என மிரட்டலாக கேட்டாள். முகத்தை சின்னதாக்கிக் கொண்டு கீழே செல்ல நடந்தான் அவன்.

மகளுக்கு அழைத்த அலமேலு அவளை உடனடியாக கீழே வரும்படி சொன்னார்.

அண்ணி பஞ்சாயத்தை கூட்டி விட்டார் என புரிந்தாலும் உடனே செல்லாமல் குளித்து தயாராகி மெதுவாகத்தான் கீழே சென்றாள் நந்தினி.

யுகி அப்பாவின் அறையில் இருந்தான். பத்து மணிக்கு மேல் பிசியோதெரபிஸ்ட் வருவார், அதற்கு முன் காலையில் அப்பா தயாராக உதவி, அவருடன் நேரம் செலவிடுவது அவனது வழக்கம்.

கடையை பற்றி மகன் சொல்ல சொல்ல கேட்டுக் கொள்வார், அவரும் ஏதாவது யோசனை சொல்வார். வீட்டில் என்ன பிரச்சனை என்றாலும் அப்பாவின் காதுக்கு வராமல் கவனமாக பார்த்துக் கொள்வான் யுகி.

இப்போது திடீரென பெண்களின் சத்தமான பேச்சுக் குரல்களில் திகைத்துப் போனார் வெங்கட்.

அனுவை ஏன் மரியாதை குறைவாக பேசி விட்டாய் என அலமேலு சின்ன மகளை கண்டிக்க, ஊரிலிருந்து வந்திருக்கும் என்னிடம் என்ன ஏதென எதுவும் விசாரிக்காமல் அண்ணிக்கு பரிந்து கொண்டு பேசுகிறாயா என கோவப்பட்டாள் நந்தினி.

ஸ்ரீஜா சின்ன பிரச்சனையையே பெரிதாக்கி விடுவாள். தவறு அவள் மீதாக இருந்தாலும் இறுதியில் தான் பாவம் என்கிற ரீதியில் முடித்து விடுவாள். வேண்டாத உறவென்றால் வெட்டி விடலாம், இவளை என்ன செய்வது? ஆகவே மருமகளை கையாள்வது அலமேலுவுக்கு எப்போதுமே சிக்கலான வேலைதான்.

கோவித்துக் கொண்டு அம்மா வீடு சென்று விட்டாள் என்றால் பேரனின் படிப்பு என்னாவது, பெரிய மகனின் நிம்மதி என்னாவது என அலமேலுவுக்கு பலவித யோசனைகள்.

அலமேலு மகளிடம் பேசிக் கொண்டிருந்தது விரைவில் நந்தினிக்கும் ஸ்ரீஜாவுக்குமான வாக்குவாதமாக மாறி விட்டது.

அப்பாவிடம் என்ன சொல்லியும் யுகியால் சமாளிக்க முடியவில்லை. மெல்ல நடந்து ஹாலுக்கு வந்து விட்டார். அவரை கண்டதும் பெண்கள் அமைதியானார்கள்.

“ஒன்னுமில்லங்க, நீங்க சாப்பிடுறீங்களா?” எனக் கேட்டார் அலமேலு.

மகளிடம் எப்போது வந்தாய் எப்படி இருக்கிறாய் என விசாரித்தறிந்த வெங்கட், “என்னம்மா சத்தமா இருந்ததே, என்னாச்சு?” என மருமகளிடம் கேட்டார்.

உண்மையை சொல்லாமல் மற்றவர்கள் சமாளிக்கத்தான் பார்ப்பார்கள், ஸ்ரீஜாதான் இவரது உடல்நிலை பற்றியெல்லாம் பொருட் படுத்தாமல் நடந்ததை சொல்வாள் என புரிந்துதான் அவளிடம் கேட்டார்.

யுகி யாரையும் பேச விடாமல், “உங்களுக்கு டேப்லெட்ஸ் போட்டுக்க டைம் ஆச்சுப்பா, உங்க ரொட்டீன் மாத்த வேணாம், வாங்கப்பா” என்றான்.

“ஏன் யுகி, இனி வீட்ல நடக்கிற எதையும் தெரிஞ்சுக்க எனக்கு யோக்கியதை இல்லையா?” என அவர் கேட்கவும், “அப்பா…” என அவஸ்தையாக அழைத்தவன் அதன் பின் அவர் போக்கில் குறுக்கிடவில்லை.

ஸ்ரீஜாவும் தன் மாமனாரை ஏமாற்றாமல், அனுவிடம் நந்தினி பேசியதை சொல்லி, “வீட்டுக்கு வந்தவங்கள இப்படியா மாமா பேசுறது? இவளுக்கு கார்த்திக் கூட ஏதோ சண்டை போல, அந்த கடுப்பை அனு மேல காட்டியிருக்கா. நிச்சயம் முடிஞ்சு இவ்ளோ நாள் கல்யாணம் நடக்காம இருந்தா இப்படித்தான் சண்டை சச்சரவு எல்லாம் வரும். அதுக்கு என் தங்கை என்ன பண்ணுவா? எண்ணம் நல்லாருந்தா எல்லாம் நல்லதா நடந்திருக்கும்” என்றாள்.

அண்ணியை முறைத்த நந்தினி சின்ன அண்ணனின் அறைக்குள் புகுந்து கொண்டாள். அப்பாவின் முன்னிலையில் அண்ணியை கண்டிக்க இயலாமல் நின்றிருந்தான் யுகி.

மருமகளை முறைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டார் அலமேலு.

“நீ ஏன் நந்து பத்தி இப்படி சொல்றமா? அவ கல்யாணம் தள்ளி போறதுல உனக்கு வருத்தம் இல்லையாமா?” என பொறுமையாகவே மருமகளிடம் கேட்டார் வெங்கட்.

தன் தங்கையின் தகுதிகள் பற்றி எடுத்து சொல்லி, “அவளை யுகிக்கு கட்டி வைக்க வீட்ல ஆசை படறாங்க மாமா, உங்க பெரிய பையனுக்கும் ரொம்ப இஷ்டம், அதுல ஏன் நந்தினி குறுக்கீடு செய்றா? அவ விருப்பமா முக்கியம்? அதான் அப்படி சொல்லிட்டேன் மாமா, ஸாரி” என்றாள் ஸ்ரீஜா.