“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ஷோ ரூம் ஆரம்பிக்கிறதா பிளான் இருந்தது அஞ்சலி, சொல்லப் போனா இது அப்பாவோட ஆசை. இத மனசுல வச்சுத்தான் உன்கிட்ட ஆறு மாசம் டைம் கேட்டேன், பிளான் எல்லாம் பக்காவா பண்ணி வேலை செஞ்சாலும் கொஞ்சம் டிலே ஆகிடுச்சு. உன் பர்த்டேக்குள்ள லைசென்ஸ் வாங்கியே ஆகணும்னு நினைச்சிருந்தேன். வாங்கிட்டேன்” என்றான்.
“என்ன இதெல்லாம்?” என உறுதியில்லாத குரலில் கேட்டாள்.
“நீதான் இதுக்கு ஓனர், சின்ன லெவல்லதான் ஆரம்பிக்க போறோம். உன் டேலன்ட் வச்சு டெவெலப் பண்ணிக்க. என் சேவிங்ஸ் முழுக்க இதுல போட்டுட்டேன், அலமு ஷாப் சூரிடியா வச்சு பேங்க் லோன் எடுத்திருக்கேன். நீதான் ரீபே பண்ணி அந்த கடனை அடைக்கணும்” என சொல்லி புன்னகை செய்தான்.
அலமு கடையை யுகி நிர்வகித்தாலும் இன்னும் அவனது அப்பாவின் பெயரில்தான் இருக்கிறது. தனியாக இது தொடங்க போகிறான் என்றால் நிறைய செலவாகியிருக்கும். வெறும் வங்கி கடன் மட்டும் போதுமானதாக இருந்திருக்காது.
அவளின் சந்தேகங்கள் அவனுக்கும் புரியாமல் இல்லை. கடையை தவிர தன் நான்கு மக்களுக்கும் சொத்துக்கள் சேர்த்து வைத்திருந்தார் வெங்கட். மெயின் இடம் ஒன்றில் வாசு, யுகி இருவரது பெயரிலும் நிலம் வாங்கி போட்டிருந்தார்.
அண்ணனுக்கே அந்த நிலத்தை கொடுத்து விட்டு அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டான் யுகி. கொஞ்சம் கடனாகவும் அண்ணனிடம் வாங்கியிருக்கிறான். இதெல்லாம் வெங்கட், அலமேலு இருவருக்கும் கூட தெரியும்.
மருமகளுக்கு செய்வதில் அலமேலுக்கு வருத்தம் இல்லை, ஆனால் அவள் தொழில் பொறுப்பை எடுத்துக் கொண்டால் மகனை பார்த்துக் கொள்வாளா, காலத்தோடு குழந்தை பெற்றுக் கொள்வாளா? குடும்பம் என்னவாவது? என யோசித்தார்.
மருமகளுக்கு என நாம் ஏதும் தனியாக செய்யவில்லை, யுகி தனக்கு சேர வேண்டியதை வைத்து தன் மனைவிக்கு செய்து கொடுக்கிறான். திறமையுள்ள பெண்ணை குடும்பம், குழந்தை என அடைக்க பார்க்காதே என கண்டிப்போடு சொல்லி விட்டார் வெங்கட்.
குடும்பத்தில் எந்த சிக்கலும் வராது, நாங்களும் எங்கள் வாழ்க்கையை சீராக எடுத்து செல்வோம் என அம்மாவுக்கு உறுதி கொடுத்தான் யுகி.
அரை மனதாக சம்மதித்து விட்டார் அலமேலு. ஆனாலும் அஞ்சலியின் பெயர் வைத்தத்தில் அவருக்கு மன சுணக்கம். நான் இங்கு வந்து கடை திறந்த போது என் அம்மாவின் பெயரை வைக்கவில்லை, என் மகனும் என்னை போலவே இருக்கிறான் என வெங்கட் சொல்லவும், அலமேலுவுக்கும் தெளிவு பிறந்தது.
எல்லா ஏற்பாடுகளும் முடியும் வரை அஞ்சலிக்கு தெரிய படுத்த வேண்டாம் என யுகிதான் மற்றவர்களிடம் சொல்லியிருந்தான்.
வெளியில் வேலைக்கு போவதை காட்டிலும் அவளே முதலாளியாக ஒரு நிறுவனத்தை ஏற்று நடத்துவதை சிறப்பானதாக கருதினான் யுகி. ஆனால் அவள் இதை சரியான வகையில் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்ற கவலையும் அவனுள் இருந்தது.
நானேதான் என் சொந்தக் காலில் முன்னேறி வருவேன் என ஏதும் அடம் செய்வாளோ என்றெல்லாம் அவனுக்கு யோசனை. அதனாலேயே முன்னரே அவளிடம் சொல்வதில் அவனுக்கு தயக்கமும் கூட.
தனக்காக எவ்வளவு பெரிய விஷயத்தை செய்திருக்கிறான் என்பதில் அஞ்சலி வெகுவாக உருகி விட்டாள். அவனை அணைத்துக் கொண்டவளுக்கு அழுகைதான் வந்தது.
முதுகை வருடிக் கொடுத்து அவளை சமாதானம் செய்தான். முகத்தை மட்டும் விலக்கியவள், அவனது முகமெங்கும் முத்தமிட்டாள்.
“யூ ஆர் த பெஸ்ட்!” என்றாள்.
“இல்லையில்லை டாக்சிக் ஹஸ்பண்ட்!” என்றான்.
அவனது இதழ்களில் அழுந்த முத்தமிட்டாள். விலகவே விலகாதவளை தானாக விலக்கி விட்டவன், “எனக்கு உடம்பு முடியலை அஞ்சலி” என்றான். அவளை பார்த்து சிரித்துக்கொண்டே “ப்பா!” என சொல்லி உதடுகளை தடவி விட்டுக் கொண்டான்.
“ஸாரி…” என்றாள்.
“பரவாயில்லை, அவ்ளோ வலிக்கல”
“ச்சே இதுக்கில்ல ஸாரி, நான் பேசினதுக்கு” என சொல்லி, மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள்.
“உனக்கு இது ஓகே தானே?” எனக் கேட்டான்.
“தெரியலைங்க, எனக்கு எந்த எக்ஸ்பீரியன்ஸும் இல்லை. என்னால முடியுமான்னு சத்தியமா தெரியல” என்றாள்.
“அப்பா கைட் பண்ணுவார், நான் இருக்கேன், முடியுமான்னு எல்லாம் யோசிக்கவே கூடாது” என்றான்.
தொழில் முறையில் யுகிக்கு தெரிந்த ஒருவர், வேறொரு ஸ்தாபனம் நிறுவ ஒரு கட்டிடம் எழுப்பியிருந்தார். அவர்களின் குடும்பத் தகராறு மற்றும் சொத்துரிமை பிரச்சனைகளால் அந்த தொழில் ஆரம்பிக்க படவில்லை. கட்டிடத்தையும் விற்பனை செய்ய போவதாக பேச்சு அடிபடவுமே யுகி விரைந்து செயல்பட்டு அதை வாங்கியிருந்தான்.
இதையெல்லாம் அவன் சொல்லும் போது பிரமிப்பாகவும், தன்னால் முடியுமா என மலைப்பாகவும்தான் அவளுக்கு இருந்தது. ஆனால் இத்தனை மெனெக்கெட்டு செய்திருப்பவனை மதித்தவள், இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக சொன்னாள்.
“இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கு. இதுவரைக்கும் செய்யவே நிறைய டைம் எஃபோர்ட் போட்டுட்டேன், இனி நீதான் எல்லாம் பார்க்கணும். மிச்சத்தை மார்னிங் பேசலாம்” என்றான்.
“இதெல்லாம் தெரியாம உங்களை ரொம்ப திட்டிட்டேன்”
“பரவாயில்லை டி, வேலைக்கு அனுப்பலன்னு நீ கோவப்பட்டா அது நியாயம்தானே? அப்பவும் என்னை விட்டுட்டு போக முடியாதுன்னுதானே பேசின. நோ ஹார்ட் ஃபீலிங்ஸ்”
“அந்த குழந்தை?”
“அந்த சண்டை இன்னொரு நாள் வச்சுக்கலாம். இப்ப முடியலைடி எனக்கு” என்றான்.
மாத்திரை போட்டதில் அவனுக்கு வியர்த்து விட்டிருந்தது, ஆனால் சோர்வாக இருந்தான்.
கணவன் கொடுத்தவற்றை பழைய படி பத்திரமாக உறைக்குள் வைத்து விட்டு அவனை பார்த்தாள்.
தனக்குள் பொத்திய படி அவனை அணைத்துக் கொண்டவள், “சொல்லி காட்டாதீங்க, ஐ ஹேட் மைசெல்ஃப்” என்றாள்.
“ஓவரா ஃபீல் ஆகாத. சண்டையெல்லாம் எல்லா ஹஸ்பண்ட் வைஃப்க்கும் சகஜம்தான். சண்டைல கூட என்னை எவ்ளோ லவ் பண்றன்னுதான் சொல்ற, எதுக்கும் நான் ஒர்த் இல்லைனு சொன்ன பார்த்தியா அங்க நிக்கிறடி நீ” என கிண்டல் செய்தான்.
“நீ எனக்கு கொஞ்சம் அதிகம்தான், யாராவது நல்ல பொண்ணா கிடைச்சிருக்கலாம் உனக்கு”
“ஏழு வயசு மூத்தவனை நீ வா போன்னு பேசுற பாரு, மரியாதை தெரிஞ்ச நல்ல பொண்ணுன்னு சொன்னார் உன் அண்ணன். செம பொண்ணுடி நீ!”
“தேங்க்ஸ… என் பேச்சை கேட்காம என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு”
“டைம் ஆகுது, தூங்கு”
“காலைல நீங்க கடைக்கு போக வேணாம், ஒழுங்கா ரெஸ்ட் எடுங்க” என்றாள்.
“எவ்ளோ ஈஸியா என்னை விட்டுட்டு போறேன்னு முடிவு பண்ணியிருந்த, உன் அக்கறை ஒன்னும் வேணாம்” என வீம்புக் குரலில் சொல்லிக் கொண்டே இன்னும் வாகாக அவளின் நெஞ்சில் புதைந்து கொண்டான்.
அவனது காது மடலை வருடி விட்டுக் கொண்டிருந்தவளின் கை தளர்ந்து படுக்கையில் விழுந்தது.
அவன் அசைய, அரை உறக்கத்திலேயே, “இப்படியே தூங்குங்க…” என்றவள் அவனது சிகையை கோதிக் கொடுத்தாள்.
இவள் எப்போது குழந்தை, எப்போது குமரி என இவனால் கணிக்கவே முடியாது. இரண்டு வகையையுமே ரசிப்பான். தங்களின் திருமணம் முடிவான சமயத்தில் பயந்ததையும் இப்போது எல்லாம் இவளே என்றாகி விட்ட நிலையையும் ஒப்பீடு செய்து பார்த்துக் கொண்டான்.
அப்படியே உறக்கத்துக்கு சென்றான்.
பனி பொழியும் அதி காலையில், இரு பக்கமும் வானுயர்ந்த மரங்களும் மணம் பரப்பும் மலர்களுமாக இருந்த யாருமில்லா சாலையில் அஞ்சலியின் கை கோர்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் யுகி. இடையிடையே அவனை செல்லம் கொஞ்சிக் கொண்டும் கிண்டலாக ஏதோ பேசி சிரித்துக் கொண்டும் இருந்தாள் அஞ்சலி. மனைவியை பார்க்க பார்க்க அவனுக்கு திகட்டவே இல்லை.
யுகியின் அந்த அழகிய கனவு போலவே அவர்களின் எதிர்காலமும் இருக்கட்டும்.