பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -18

அத்தியாயம் -18

அன்றைய தினம் மதிய விருந்து முடிந்து பொள்ளாச்சி கிளம்புகின்றனர் கார்த்திக், நந்தினி இருவரும்.

யுகி அண்ணனை அழைத்துக் கொண்டு கடை வரை சென்றிருந்தான். மதிய உணவுக்கு மாப்பிள்ளையுடன் ஒரு மச்சானாவது அமர வேண்டாமா, இருவரையுமே இன்னும் காணோமே என தவித்துக் கொண்டிருந்தார் அலமேலு.

“டைம் பன்னெண்டுதானே அத்தை ஆகுது, வந்திடுவாங்க” என அஞ்சலி சொல்லியும் வாசலையேதான் அடிக்கடி பார்த்தார்.

ஒரு வழியாக வாசுவும் யுகியும் வந்து விட்டனர்.

காலையிலேயே மருத்துவமனை சென்று விரலுக்கு போட்டிருந்த கட்டை பிரித்து மாற்றியிருந்தான் யுகி. அஞ்சலிதான் சாப்பாடு ஊட்டி விடுகிறாள். ஆகவே அவன் உணவு மேசையில் அமரவில்லை. அப்பாவை காண சென்று விட்டான். மற்றவர்கள் சாப்பிட்ட பிறகுதான் மனைவியின் கையால் சாப்பிட்டுக் கொண்டான்.

 திருமணம் ஆனதிலிருந்து அஞ்சலி அவளது பிறந்த வீட்டில் கணவனுடன் சென்று தங்கவே இல்லை. யுகிக்கு கையில் காயம் என்பதால் கடையிலும் அதிக வேலை செய்ய முடியவில்லை. ஆகவேதான் இவர்களே மணமக்களுக்கு துணையாக பொள்ளாச்சி செல்லட்டும் என முடிவெடுத்திருந்தார் அலமேலு.

புது மணத் தம்பதிகள் புறப்பட மூன்று மணியாகி விட்டது.

பொள்ளாச்சியில் அவர்களுக்கு நல்ல கவனிப்பு. உடன் அஞ்சலி இருந்ததால் நந்தினிக்கு அந்த வீட்டில் பழக கடினமாக இல்லை.

அடுத்த நாள் விடியற்காலையில் கிளம்பி, குலதெய்வ வழிபாடு முடித்துக் கொண்டு திரும்பினார்கள். மதிய உறக்கத்துக்குப் பின் முதலில் எழுந்த யுகி அஞ்சலியை தொந்தரவு செய்யாமல் வெளியில் வந்தான்.

நந்தினி, கார்த்திக் இருவரும் இன்னும் அறையில்தான் இருந்தனர். காபி கொடுத்து மாப்பிள்ளையை கவனித்துக் கொண்டார் சித்ரா. புகழேந்தி அதிகம் பேசும் ரகமில்லை.

வீட்டின் பின் பக்கம் வந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தான் யுகி. சற்று நேரத்தில் அவனை தேடிக் கொண்டு அஞ்சலியும் வந்து விட்டாள்.

போர் அடிப்பதாக அவன் சொல்லவும், அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கணவனை ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு கிளம்பி விட்டாள். ஊரையும் தங்கள் தென்னந் தோப்பையும் சுற்றிக் காட்டி விட்டு ஏழு மணிக்குத்தான் கணவனை வீட்டில் சேர்த்தாள்.

இவளுடன் இருக்கையில் மூன்று மணி நேரம் கூட எப்படி இத்தனை சீக்கிரம் கழிந்தது என ஆச்சர்ய பட்டுக் கொண்டான் யுகி.

“உடம்புக்கு முடியாதவரை எவ்ளோ நேரம் வெளில சுத்த வச்சிருக்க?” என கடிந்து கொண்டார் சித்ரா.

“அவர் உடம்புக்கு ஏதுமில்லம்மா, கைலதான் காயம். டைம் பாஸ் ஆக வேணாமா அவருக்கு” எனக் கேட்டாள் அஞ்சலி.

“பொழுது போகலைனா டிவி பார்க்கலாம்ல மாப்ள? பனிக் காத்து ஒத்துக்காம போயிடும்” என்றார் சித்ரா.

அவன் சிரிக்க மட்டும் செய்ய, “டிவிலாம் அவர் பார்க்க மாட்டார்” என்றாள் அஞ்சலி.

“அவருக்கும் சேர்த்து நீயே பேசிடு!” என்றார் சித்ரா.

“சாப்பாடு ரெடியா இருக்கா? டேப்லெட்ஸ் போடணும் இவரு. என்ன சாப்பாடு?” என பேசிக் கொண்டே அம்மா பதில் சொல்ல அவகாசம் தராமல் சமையலறை நோக்கி சென்றாள்.

“பார்த்தீங்களா மாப்ள, அவளே பேசிட்டு இருக்கா, நாம பேசறதுக்கு இடமே இருக்காது. இடைல ஒன்றரை வருஷம் நினைச்சு பார்க்கவே முடியலை, இப்பதான் இந்த வீட்டுக்கு உசுரே வந்திருக்கு” என்றார் சித்ரா.

அவர்களின் தவறையெல்லாம் சுட்டிக் காட்ட விரும்பாதவன் “நந்தினி எங்க அத்தை?” என விசாரித்தான். அருகில் உள்ள கோயிலுக்கு மகனையும் மருமகளையும் அனுப்பி வைத்திருப்பதாக சொன்னார்.

கணவனை சாப்பிட அழைத்தாள் அஞ்சலி. கார்த்திக் வந்து விடட்டும் என சொல்லி வெளியிலேயே அமர்ந்து விட்டான் யுகி.

சற்று நேரத்தில் கோயிலுக்கு போயிருந்தவர்கள் வந்தனர். மலர்ந்த முகமாக இருந்த தங்கையை நிறைவாக பார்த்து சிரித்தான் யுகி.

“எங்கண்ணா கடத்திட்டு போனா அஞ்சலி உன்னை?” எனக் கேட்டுக் கொண்டே அண்ணனுக்கு திருநீறு வைத்து விட்டாள் நந்தினி.

“நீ வாக்க பட்டிருக்க ஊரை சுத்தி காட்டினா ம்மா” என்றான் யுகி.

“கை வலி பரவாயில்லையா யுகி?” என விசாரித்துக் கொண்டே யுகியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான் கார்த்திக்.

“டேப்லெட் போட்டு கொஞ்ச நேரம் தாங்குது, அப்புறம் அவஸ்தையாதான் இருக்கு” என சொல்லிக் கொண்டிருந்தான் யுகி.

அப்படியே அவர்களின் பேச்சு நீண்டு சென்றது.

“அண்ணாக்காகத்தான் சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருக்காங்க அண்ணி. பெயின் கில்லர் போடணும்” என நந்தினியை பார்த்தே சொன்னாள் அஞ்சலி.

“நீ யுகியை சாப்பிட வச்சிருக்க வேண்டியதுதானே? எனக்காக வெயிட் பண்ண வைப்பியா? இப்பவும் சுத்தமா பசி இல்லை எனக்கு” என தங்கையிடம் கூறினான் கார்த்திக்.

கார்த்திக்கிடம் தலையை மட்டும் ஆட்டிக் கொண்ட அஞ்சலி, “சாப்பிட வாங்க” என கணவனை அழைத்தாள்.

“டேப்லெட் லேட்டா போட்டா நைட் ரொம்ப நேரத்துக்கு வலி தெரியாம இருக்கும்தானே, கார்த்தியோடவே சாப்பிட்டுக்கிறேன்” என்றான் யுகி.

“அடடா… பெயின் வந்தா திரும்ப ஏதாவது சாப்பிட்டு டேப்லெட் போட்டுக்கலாம். ரெண்டு மூனு நாளைக்கு வலி மாத்திரை அதிகம் போடுறதுல ஏதும் ஆகிடாது. உங்க முகமே சரியில்லை, வலிய பொறுத்துகிட்டு எவ்ளோ நேரம் இருப்பீங்க? கம்பெனிக்கு ஆள் வேணும்னா அப்பாவை கூப்பிடுறேன்” என்றாள் அஞ்சலி.

“ஹையோ யுகி ப்ளீஸ் நீங்க வாங்க, நானும் உங்களோடவே சாப்பிடுறேன்” என எழுந்தான் கார்த்திக்.

“வேணாம், பசி எடுக்கவும் சாப்பிடு நீ” என அண்ணனிடம் சொன்ன அஞ்சலி கணவனை பார்த்தாள்.

“எல்லாம் உன் இஷ்டம்தான் என்ன?” எனக் கேட்டான் யுகி.

“இங்க என் விருப்பம்னு ஒன்னு கிடையவே கிடையாது. உங்கள்ட்டயாவது அப்படி இருந்திட்டு போறேனே. வர்றீங்களா இல்லையா இப்போ?” என்றாள் அஞ்சலி.

கார்த்திக்கின் முகம் சுணங்க, “அவர் ஹர்ட் ஆகிட்டார் அஞ்சலி, பழச விட்ரலாமே” என்றான் யுகி.

“நிஜத்தைதான் நான் சொன்னேன். அண்ணாவை ஹர்ட் பண்ணணுங்கிறது இல்லை என் நோக்கம்” என்றாள் அஞ்சலி.

“நான் கவனிச்சிட்டுத்தான் இருக்கேன் அஞ்சலி. உன் அப்பாம்மாகிட்ட நல்லாத்தான் பேசுற, இவர்கிட்டதான் ஏதோ போல நடக்குற” என்றாள் நந்தினி.

“அப்பாவும் அம்மாவும் என் ஜெனரஷன் இல்லை. இவன் நடந்துகிட்டததான் என்னால ஏத்துக்கவே முடியலை. அண்ணா இருக்கான், எப்படியும்…” என்ற அஞ்சலியின் குரல் கமறியது.

“உனக்கு நான் அமைச்சு கொடுத்தது ரொம்ப அருமையான வாழ்க்கை அஞ்சலி, உம்மேல எனக்கு எவ்ளோ அன்பு இருக்குன்னு உனக்கு தெரியாதாடா? அண்ணன் உன் நல்லதுக்கு செஞ்சேன்” என்றான் கார்த்திக்.

“நீ என்னை ரொம்ப டிஸ்அப்பாயிண்ட் ஆக்கிட்ட அண்ணா. யார் எப்படி இருந்தாலும் நீ எனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு ரொம்ப நம்பியிருந்தேன். இவர் தலைல என்னை கட்டி வச்சிட்டா நிம்மதின்னு, இவர் விருப்பதையும் பார்க்காம என்னை கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வச்ச” என குற்றம் சுமத்தினாள் அஞ்சலி.