அவனை பார்த்துக் கொண்டேதான் இருந்தாள். தயக்கத்தோடு அவனிடம் வந்து நின்றாள்.
“என்ன டிஸ்டர்ப் பன்றேனா?” எனக் கேட்டான்.
அவள் ஆம் என தலையசைக்க, “சரி வா நானும் படுக்கிறேன்” என சொல்லி படுக்கைக்கு விரைந்தான். அவனை விடாதவள் அவன் முகத்தை நெருங்கினாள்.
அஞ்சலியின் செயலில் அவனுக்கு திகைப்புதான். ஆனால் விலக மனமில்லை. ஒற்றைக் கையால் அவளின் பின்னந்தலையை பற்றிக் கொண்டவன் அவள் ஆரம்பித்து வைத்த முத்தத்தில் ஆழ்ந்தான்.
அவள் விலகவும் அவ்வளவுதானா என்பது போல ஏக்கமாக அவளை பார்த்தான்.
வெட்கப்பட்டுக் கொண்டே மீண்டும் அவனை நெருங்கினாள். அவளின் முத்தங்கள் எல்லாம் அவனுக்கு வலி நிவாரணியாகிப் போயின.
யுகி உறங்கிய போது அவளின் அதரங்கள் இரண்டும் கன்றிச் சிவந்து போயிருந்தன.
காலையில் நான்கு மணிக்கெல்லாம் கணவனை எழுப்பி விட்டாள்.
“நீ கிளம்பிட்டு எழுப்பி விடு” என்றான்.
“நான் ரெடி ஆகி அப்புறம் உங்களுக்கு ஹெல்ப் பண்ண கஷ்டம்” என அவள் சொல்லவும் கண்களை திறந்தவனுக்கு அஞ்சலியின் முகம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது.
அவளது இதழ்களை வருடி விட்டு, மந்தகாச சிரிப்போடு அவளை பார்த்தான்.
அவனது கையை தட்டி விட்டவள், “இன்னிக்கு உங்க தங்கையோட கல்யாணம்!” என அதட்டினாள். அவனும் உடனே எழுந்து கொண்டான்.
கணவனை தயாராக்கி விட்டுத்தான் அவள் தயாராக ஆரம்பித்தாள். அவனை வெளியில் போக சொல்லி அவளும் சொல்லவில்லை, அவனாகவும் செல்லவில்லை.
காதலானாக ஏற்றுக் கொண்டவள் கணவனாக கூட அங்கீகரித்து விட்டதாக உணர்ந்தான்.
அவளிடமிருந்து வலி நிவாரணம் பெற்றுக் கொண்டுதான் கதவை திறந்தான்.
திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
திருமணத்துக்கு தனுஷின் பெற்றோர் வந்திருந்தனர். அஞ்சலியிடம் பேச முயன்றார் தனுஷின் அம்மா. அவள் முகம் கொடுக்கவே இல்லை.
தேவையில்லாமல் எதற்கு வந்து அவளை தொந்தரவு செய்கிறார் என யுகிக்கு எரிச்சலாக இருந்தது. பாதிக்க படுவாளோ என பயமும் இருந்தது. ஆனால் அஞ்சலி இயல்பாகவே இருந்தாள்.
அவளின் வயதை ஒத்த உறவுக்கார கூட்டம் இருக்கிறது. எல்லாரும் நண்பர்கள். யுகியிடம் யாரும் சரியாக பேசியதில்லை. அவர்களை அழைத்து வந்து அவனிடம் பேச வைத்தாள்.
அவர்கள் கொஞ்சம் கிண்டல் செய்தனர். அனைத்துக்கும் சிரித்துக் கொண்டவன், “நீதான் இவங்களுக்கு சரியான ஆளு. பேசிட்டு இரு” என மனைவியிடம் சொல்லி நகர்ந்து விட்டான்.
“என்னடி பயந்திட்டாரா?” எனக் கேட்டாள் அவளுக்கு மிகவும் நெருக்கமான சீமா.
“யாருக்கும் பயப்பட மாட்டார் அவர், சின்ன பசங்க கூட எனக்கென்ன பேச்சுன்னு போயிட்டார்” என்றாள்.
“ஏன் அவர் என்ன தாத்தாவா?” எனக் கேட்டான் ஒரு மாமா பையன்.
அவனது தலையில் கொட்டியவள், “பிச்சிடுவேன் டா உன்னை” என்றாள்.
“செம ஹேண்ட்சம்டா அவர், அவர் போய் தாத்தாவா உனக்கு? அஞ்சலி முந்திக்கிட்டா இல்லைனா…” என வம்பு செய்த தன் பெரியம்மாவின் மகளின் உதடுகளை சுண்டிப் பிடித்து மேலே பேச விடாமல் செய்தாள்.
கேலி செய்தவர்களுக்கு எல்லாம் உடனுக்குடன் ஏதாவது பதிலடி கொடுத்துக் கொண்டே இருந்தாள் அஞ்சலி.
அவர்களுக்கு பழைய அஞ்சலியை பார்த்தது போலிருந்தது. சொல்லவும் செய்தனர். கணவனை தேடின அஞ்சலியின் கண்கள். தூரமாக அமர்ந்து இவளை பார்த்திருந்தவன் என்னவென கேட்டான்.
கண்கள் சிமிட்டி ஒன்றுமில்லை என அவள் சொல்லிக் கொண்டிருக்க, அவள் நண்பர்களின் கேலிப் பேச்சு இன்னும் அதிகரித்தது.
கல கலத்து சிரித்துக் கொண்டிருந்த தன் தங்கையை பார்த்து பூரித்துப் போனான் கார்த்திக்.
“எல்லாம் என் அண்ணனால” புதுக் கணவனின் காதில் சொன்னாள் நந்தினி.
“என் அண்ணா அவர் வைஃபை நல்லா பார்த்துக்கிறார், உங்க தங்கச்சி என் நாத்தனார் அப்படிங்கிறதுக்காகல்லாம் இல்லை” என கடுமையான தொனியில் சொன்னாள் நந்தினி.
வாயை மூடிக் கொண்டு விட்டான் கார்த்திக்.
மாலையே கோவை வந்து விட்டனர்.
நந்தினியின் அறையில் மணமக்களுக்கு இரவு சடங்கு ஏற்பாடாகியிருந்தது. ஸ்ரீஜா முன்னரே உறங்க போயிருக்க, அஞ்சலியும் பைரவியும்தான் நந்தினி தயாராக உதவினார்கள்.
வாசுவும் யுகியும் வரவு செலவு பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பகலில் சற்று நேரம் உறங்கியிருந்த வெங்கட்டும் மகன்களுடன் இருந்தார். அலமேலுவுக்கு நல்ல உடல் சோர்வு, இப்போதுதான் உறங்க போயிருந்தார்.
அஞ்சலியும் பைரவியும் கீழே வரவும் அக்காவை வீட்டில் விட்டு வர கிளம்பினான் வாசு. வெங்கட்டும் படுக்க சென்று விட, அண்ணன் வரும் வரை நடக்கலாம் என அழைத்தான் யுகி.
அஞ்சலிக்கு நல்ல உடம்பு வலி. ஆனாலும் மறுக்காமல் அவனுடன் சென்றாள்.
அக்காவுடன் பேசியிருந்து விட்டு காபி கேட்டு பருகி விட்டு தாமதமாகத்தான் வந்தான் வாசு. அதுவரை நடந்தவர்களும் படுக்க வந்தனர்.
“வாக் போனா உங்களுக்கு சீக்கிரம் தூக்கம் வரும்ல, வலி பரவாயில்லையா?” என விசாரித்தாள்.
அவளின் கால் மாட்டில் அமர்ந்து, அவளின் கால்களை மடியில் எடுத்துப் போட்டுக்கொண்டு ஒற்றைக் கையாலேயே அழுத்திக் கொடுக்க ஆரம்பித்தான்.
“கஷ்ட படாதீங்க, வாங்க” என கை நீட்டி அழைத்தாள்.
அவனுக்கும் சோர்வுதான். அவள் கால்களை அழுத்திக் கொடுக்கவும் வசதி படவில்லை. இருப்பினும் அவளுக்கு ஏதும் செய்யாமல் படுக்கவும் மனம் வரவில்லை.
சுவர் பக்கமாக வசதியாக சாய்ந்து கொண்டவன் அவளின் கால்கள் இரண்டையும் நீவி விட்டுக் கொண்டே இருந்தான்.
அவனது கண்கள் உறக்கத்தில் மிதக்க, அவளுக்கு செய்யும் சேவையை மட்டும் நிறுத்தவே இல்லை. அவளின் மனமுருகிப் போக, எழுந்து கொண்டவள், அவனது ஆர்ம் ஸ்லிங் கழட்டி வைத்து, அவனை படுக்க வைத்தாள்.
“இப்ப உனக்கு பரவாயில்லையா?” எனக் கேட்டான்.
கண்களால் ஆம் என சொல்லிக் கொண்டே அடி பட்டிருந்த அவனது கையை விலக்கி வைத்தவள், தன் பாதி உடல் அவன் மீதிருக்கும் படி சாய்ந்து படுத்தாள்.
புன்னகையுடன் அவன் புருவங்கள் உயர்த்தினான்.
“எதுவும் வேணுமா?” எனக் கேட்டாள்.
“உன்கிட்டேருந்து எது கிடைச்சாலும் வேணாம்னு சொல்வேனா? உன் இஷ்ட படி என்ன வேணா தா” என்றான்.
அவன் முன் உச்சி முடியை கோதி விட்டாள். அதற்கே அவனது கண்கள் கிறங்கிப் போயின. விலகி தள்ளிப் படுத்தவள் அவனை தன் நெஞ்சில் படுக்க வைத்துக்கொண்டு கன்னத்தை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தாள்.
அவளது கை தளர்ந்து விழவும் உறங்கி விட்டாள் என்பதை அறிந்து கொண்டான். கைக் காயத்தின் வலியெல்லாம் உணரவே இல்லை அவன்.
அஞ்சலியே மனமெங்கும் வியாபித்து போயிருந்தாள். மனமும் உடலும் அவளை உணர்ந்து கொண்டே இருக்க, நிம்மதியாக உறங்கிப் போனான்.