பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -17

அத்தியாயம் -17

பொள்ளாச்சியில் இருந்து பெண் அழைப்புக்கென கார்த்திக்கின் தாய் மாமா, மாமி, சித்திகள், சித்தப்பாக்கள் என ஆறு பேர் கோவை வந்திருந்தனர்.

நந்தினிக்கு பார்லர் பெண்கள் அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். நல்ல நேரம் முடிவதற்குள் புறப்பட வேண்டும் என அவசர படுத்திக் கொண்டிருந்தார் கார்த்திக்கின் மாமி.

“அவளை போய் பாரேன் பைரவி” என அலமேலு பட படக்க, மாடிக்கு விரைந்தாள் பைரவி.

“இருங்களேன் மாமி, இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு, பாதியிலேயா வர முடியும்?” எனக் கேட்டு மாமியை கொஞ்சம் அடக்கினாள் அஞ்சலி.

ஸ்ரீஜா, பைரவி, ஷிவானி என மற்றவர்களும் பார்லர் பெண்களிடம் ஒப்பனை செய்து கொண்ட பின்னர்தான் நந்தினிக்கு அலங்காரம் ஆரம்பிக்க பட்டிருந்தது. இரவில்தானே விஷேஷம் என நந்தினி அவர்களையே முதலில் தயாராக சொல்லியிருந்தாள்.

கணவன் மீதான பயத்தில் எந்த விஷமத் தனமும் செய்யாமல் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டாள் ஸ்ரீஜா.

அஞ்சலி தானே அலங்காரம் செய்து கொண்டு தயாராகி விட்டாள். எடையற்ற மென்மையான பட்டுப் புடவை என்பதால் அதை கட்டவும் அவளுக்கு உதவி தேவைப் பட்டிருக்கவில்லை. கல் வைத்த தங்க நகைகள் பூட்டி கண்ணுக்கு நிறைவாக இருந்தாள் அஞ்சலி.

வெங்கட் ஓய்வாக இருக்கட்டும் என பைரவியின் வீட்டில் தங்க வைக்க பட்டிருந்தார். அங்கேயும் சில சொந்தங்களும் இருந்தனர். போகும் போது  அப்படியே அவர்களை அழைத்து செல்ல திட்டம்.

பெண் வீட்டினரை அழைத்து செல்ல மாப்பிள்ளை வீட்டிலிருந்து இரண்டு வேன்கள் மற்றும் ஒரு கார் வந்திருந்தது. பாதாள சாக்கடைக்கு குழி தோண்ட பட்டு அதன் பின் மூடப் பட்டிருந்த சாலையில் இன்னும் தார் போடப்பட்டிருக்கவில்லை.  முதல் நாள் பெய்த மழையில்  ஒரு வேனின் டயர்  தெரு முனையில் மண்ணுக்குள் சிக்கி விட்டது.

அந்த வேன் நகர்ந்தால்தான்  முதலிலேயே உள்ளே வந்து விட்ட மற்ற வாகனங்கள் வெளியேற முடியும்.

யுகி, வாசு, சேகர் போன்ற வீட்டு ஆண்களும் அவர்கள் பக்க சொந்தங்கள் சிலரும் அழைப்புக்கு வந்த ஆண்களும்  என கூட்டமாக அங்குதான் இருந்தனர். டயரை வெளியில் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆளுக்கு ஒரு யோசனை சொல்லி செயல் பட்டுக் கொண்டிருந்தனர்.

வீட்டில் இருந்த அஞ்சலியின் சித்தி, ‘இதென்ன இப்படி வேன் சிக்கிக் கொண்டது, நெடு நேரமாக மெனெக்கெட்டும் நகர மாட்டேன் என்கிறதே,  நந்தினிக்கும் கார்த்திக்கிற்கும் ஜாதகம் பார்த்தீர்களா?’ என பேச்சை ஆரம்பித்தார்.

எங்கே அதெல்லாம் பார்த்தாள் அலமேலு, காதல் திருமணம் எனவும் அதையெல்லாம் தவிர்த்து விட்டாள், முதல் முறை திருமணம் தள்ளி போன சமயத்திலாவது ஜாதகம் பார்த்து பரிகாரம் ஏதாவது செய்திருக்கலாம் என்றார் அலமேலுவின் ஓர்ப்படி.

ஆமாம், நந்தினி பிறந்த புதிதில்தான் வெங்கட்டுக்கு கூட விஷக் காய்ச்சல் வந்தது, அப்போதும் உயிர் பிழைத்துதான் வந்தான் என்றார் அலமேலுவின் நாத்தனார்.

“அப்படின்னா ஏதோ தோஷ கோளாறாதான்  இருக்கணும், கல்யாணத்துக்கு முன்னாடியாவது என்ன ஏதுன்னு பார்த்திருக்கலாம். எங்க ஊர் பக்கம் ஒருத்தர் இருக்கார்…” என பேசத் தொடங்கி விட்டார் அஞ்சலியின் மாமி.

“இவங்க பாட்டுக்கும் கண்டதையும் பேசிட்டே இருக்காங்க, ஏதும் கேட்க மாட்டீங்களா அத்தை?” என மாமியாரிடம் சின்ன குரலில் கேட்டாள் அஞ்சலி.

“இதையெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது, சீக்கிரம் புறப்பட்டா மண்டபம் போய் சேரலாம். இன்னும் என்னதான் ஜோடனை நடக்குதோ அவளுக்கு?” என அலுத்துக் கொண்டார் அலமேலு.

“ம்க்கும், என்கிட்ட மட்டும்தான் ரூல்ஸ் ரூல்ஸா பேசுவீங்களா? டெரர்னு நினைச்சேனே உங்களை, அப்படிலாம் இல்லையா?”

“உன்னை மாதிரி என் மாமியாகிட்ட வாயாடிட்டு இருந்திருந்தேனா என்னிக்கோ போடின்னு தொரத்தி விட்ருப்பாங்க, டெரராம் டெரர்”

“ஏன் என்னையும்தான் தொரத்துங்களேன். நானெல்லாம் தனியா போக மாட்டேன், உங்க பையனையும் சேர்த்து இழுத்துகிட்டுத்தான் போவேன். நான் நிஜமாவே டெரர்” என மாமியாரை சீண்டியவள் அவர் முறைக்கவும் கண்களை சிமிட்டி விட்டு  ஹால் வந்து விட்டாள்.

டிவியை போட்டு விட்டு இப்போது பிரபலமாக இருக்கும் சீரியலை வைத்து விட்டவள், “பொண்ணு ரெடியாகுற வரைக்கும் இத பாருங்க” என்றாள். அவர்கள் வாயை போட்டு மெல்ல ஸ்னாக்ஸ்ம் வழங்கினாள். பிறகு அனைவரின் கவனமும் சீரியலுக்கு திரும்பி விட்டது.

வேனை நகர்த்தும் முயற்சியில் யுகியின் வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டு விட்டது. யாரிடமும் சொல்லாமல் கையை உதறிக் கொண்டு தள்ளி வந்து நின்று விட்டான். அண்ணனிடம் கூட காண்பித்துக் கொள்ளவில்லை.

கைக்குட்டை எடுத்து கட்டை விரலை சுற்றி இறுக்கி கட்டிக் கொண்ட யுகி, இதெல்லாம் வேலைக்கு ஆகாது என சொல்லி, தெரிந்த ஒருவருக்கு அழைத்து ஜே சி பி இயந்திரம் வரவழைத்து விட்டான். சிக்கிக் கொண்ட வேன் நகர்ந்த பின்தான் அனைவரும் ஆசுவாசம் ஆனார்கள்.

அதற்குள் அந்த வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் அழுக்காகி விட்டனர். மீண்டும் குளித்து தயாராக புறப்பட்டனர்.

 உள்ளே வந்த யுகி,  இப்போதுதான் முழுதும் தயாராகி நின்ற தன் மனைவியை பார்த்தான்.

“என்னங்க இப்படி வந்து நிக்கிறீங்க?” என அஞ்சலி கேட்க, “டைம் ஆச்சுங்க தம்பி, இன்னுமா கிளம்பல நீங்க?” என்றார் அஞ்சலியின் மாமி.

“அட யாருடி இவ, மண்ணுக்குள்ள டயர் சிக்கி இப்பதான் வேனை மேல எழுப்பி விட்ருக்கோம். கட்டின சீல மடிப்பு கலையாம உள்ள உட்காந்துகிட்டு வக்கணையா பேச்சை பாரு, ஆம்பள கிளம்ப என்ன நேரமாக போகுது? நீங்க போங்க தம்பி” என மனைவியை அதட்டி யுகியை அனுப்பி வைத்தார் அஞ்சலியின் மாமா.

தன் கைக்கட்டை யாருக்கும் காட்டாமல்  மறைத்த படி அறைக்கு சென்ற யுகி,  “அஞ்சலி இங்க ஒரு பாக்ஸ் இருந்ததே எங்க, வா இங்க” என சத்தம் கொடுத்தான்.

“எந்த பாக்ஸ் நான் பார்க்கலையே” சொல்லிக் கொண்டே உள்ளே வந்தவளின் கையை பிடித்துக்கொண்டான்.

 அவனது நிலை தெரியாமல் புருவங்கள் உயர்த்தி ‘எப்படி இருக்கிறேன்?’ என கேட்டாள் அஞ்சலி.

“என்னடி நீ இவ்ளோ அழகா இருக்க? முன்னாடி நீ வந்து நின்னா கண்ண உன்கிட்டேருந்து திருப்ப முடியலை, வேற வேலை ஏதும் பார்க்கிறதா இல்லையா நான்?” எனக் கேட்டான் யுகி.

“அப்படியா! ஆனா ரியாகஷன் கம்மியால்ல இருக்கு” என்றாள்.

“கச கசன்னு அழுக்கா இருக்கேன், நீ வேற ஃபுல் மேக்கப்ல இருக்க.  இல்லைனா இவ்ளோ கேப் விட்டு தள்ளியா நிப்பேன்?” எனக் கேட்டான்.