“தெரியல. அஞ்சலிகிட்ட நான் பட வேண்டியது நிறைய இருக்குன்னு என் தலைல எழுதி இருந்தா சிறுத்தை வந்தா கூட பாவப்பட்டு என்னை விட்டுட்டு போயிடும்” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள். மழை கோட்டிலிருந்து வடிந்த நீர் அவளின் முகத்தில் சொட்ட, குளிரால் சிவந்து போயிருந்த அவளின் கன்னங்களும் ஜொலித்த அவளின் கண்களும் அவனை வெகுவாக ஈர்த்தன.
வசமிழந்து அவளின் ஒற்றைக் கன்னத்தை பற்றிக் கொண்டவன் மெல்ல அவளை நெருங்க, அவனது கன்னத்தில் இடித்து, “என்ன… என்ன போட்டு படுத்தி வச்சேன் நான் உங்களை?” எனக் கேட்டாள்.
திடுக்கிட்டு போனவன் நடப்பதையும் சற்று முன் அவன் செய்ய இருந்ததையும் நினைத்து பார்த்து சிரித்தான்.
அவள் உச்சு கொட்ட, “என் பாடு உன் கூட திண்டாட்டம்தான்! எருமை போயாச்சு, நாமளும் போலாம்” என சொல்லி பைக்கை எடுத்தான்.
கீழே இறங்கிய போது மழை பெய்ததற்கான தடமே அங்கில்லை. நல்ல வெளிச்சமும் இருந்தது. அறைக்கு சென்று ஆடை மாற்றிக் கொண்டனர். விடுதியை காலி செய்து விட்டு பைக்கையும் ஒப்படைத்து விட்டு காரில் புறப்பட்டனர். மாமாவுக்கு அழைப்பிதழ் வழங்கி அரை மணி நேரத்தில் கோவைக்கும் பயணப் பட்டு விட்டனர்.
இரவு உணவு வழியிலேயே முடித்துக் கொண்டனர். நகரத்தின் வெளியிலேயே அஞ்சலிக்கு கண்கள் சொக்க ஆரம்பித்து விட்டது. அவளை பின்னிருக்கைக்கு சென்று படுத்து கொள்ள சொல்லி விட்டான்.
வீடு வந்து சேர்ந்த போது நடு இரவாகி விட்டது. வாசுவுக்கு அழைத்து கேட் திறந்து விட சொன்னான். கார் உள்ளே நுழையவுமே கேட்டை பூட்டி விட்டு காலையில் பார்க்கலாம் என சொல்லி மாடிக்கு சென்று விட்டான் வாசு.
அஞ்சலியை எழுப்பி பார்த்த யுகி, அவள் எழாமல் போகவும் தூக்க முயன்றான். அதில் எழுந்து கொண்டவள், “வந்திட்டோமா?” என சோம்பல் முறித்துக் கொண்டே கேட்டாள்.
“வந்தாச்சு, ரூம் போய் நல்லா தூங்கு” என சொல்லிக் கொண்டே கை பிடித்து அவளை இறக்கி விட்டான்.
நடந்து வந்ததில் அவளின் உறக்கம் கலைந்து விட்டது. பழக்கத்தை மாற்றாமல் வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு வந்தான் யுகி.
மேலே பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையாக இருந்தவளின் பக்கத்தில் வந்து படுத்தவன், “அப்படியென்ன டீப் திங்கிங்?” என கேட்டான்.
“போச்சு… இப்பதான் யோசிக்கவே செய்றியா? யோசிச்சு முடிச்சிட்டு வந்து சொல்லு” என சொல்லி நேராக படுத்து கம்பளியை எடுத்து போர்த்திக் கொண்டான்.
அவனிடமிருந்து கம்பளியை இழுத்து விட்டவள், “நான் சீரியஸா பேசிட்டு இருக்கும் போது என்ன ரியாகஷன் இது?” எனக் கேட்டாள்.
“உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு வாய தொறந்து சொல்ல உனக்கென்ன அவ்ளோ தயக்கம்? உனக்கெல்லாம் ரியாக்ஷனே கொடுக்க கூடாது” என சொல்லி திரும்பி படுத்துக் கொண்டான்.
சில நொடிகளில் தன் முதுகோடு அவள் ஒன்றுவதை உணர்ந்தான். தன் வயிற்றை சுற்றிப் படர்ந்த அவளது கையை புன்னகையுடன் பிடித்து தன்னோடு சேர்த்து அழுத்திக் கொண்டான்.
அவள் அமைதியாகவே இருக்கவும் அவள் பக்கமாக திரும்ப போனான். அவன் தன்னை பார்த்து விடக்கூடாது என அவனை திரும்ப விடாமல் அவனை சற்று முரட்டுத்தனமாக பிடித்துக்கொண்டாள்.
“அஞ்சலி!” என அதட்டிக் கொண்டே அவன் திரும்பி விட, இப்போது அவனது மார்போடு ஒன்றினாள்.
முகம் காட்ட மறுத்தவளை தன்னிடமிருந்து வலிந்து பிரித்து விட்டான். கலங்கி சிவந்து போயிருந்தன அவளின் விழிகள்.
என்னவென பதறிப் போனான்.
“எனக்கு சொல்ல வரலை, அதெல்லாம் சொல்லணும்னு நினைச்சாலே ஏதோ ட்ராமா ஃபீல் தருது, ஆனா அதுதான் நிஜம். உங்களுக்கு கன்வே பண்ண தெரியலை போல எனக்கு” என்றாள்.
“என்ன சொல்ற நீ?” எனக் கேட்டான்.
ஏன் கேட்கிறாய் என்ற கோவத்தில் வேக மூச்சுகளோடு அவனை பார்த்திருந்தாள்.
“ராத்திரில இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினா ஒரு மனுஷன் என்னன்னு நினைக்கிறது? முதல்ல ரிலாக்ஸ் ஆகு” என்றவன் அவளுக்கு தண்ணீர் தர நினைத்து எழுந்தான்.
அவனை எழ விடாமல் பிடித்து இழுத்தாள். படுக்கையிலேயே விழுந்தவன், “என்னடி உன் பிரச்சனை?” என சீற்றமாக கேட்டான்.
மிரண்டவள், “எனக்கு ஐ லவ் யூ ன்னு சொல்ல வரலை, உங்களுக்கு என்னை புரியலையா?” எனக் கேட்டாள்.
நிஜமாகத்தான் இப்படி பேசுகிறாளா என்ற சந்தேகத்தில், “என்ன என்ன?” என பதட்ட பட்டான்.
அவனை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டவள், “உங்க முகம் பார்த்து சொல்ல ஷையா இருக்கு, சும்மா சும்மா கேட்க கூடாது. அதெல்லாம் ஒரு தடவதான் சொல்ல முடியும்” என்றாள்.
இரவு ஓய்வுக்கு தயாராகி தளர்ந்து போயிருந்த யுகியின் அணுக்கள் எல்லாம் துள்ளி எழுந்து கொண்டன. அவளோ அவனை விலகவே விடாமல் தன்னோடு சேர்த்து அவனது முகத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.
“நீங்க என் லைஃப் பார்ட்னரா வந்ததுதான் என் லைஃப்ல எனக்கு நடந்து பெஸ்ட் விஷயம்! நீங்கன்னா எனக்கு அவ்ளோ இஷ்டம்!” என தன் சொல்லி பிடியை தளர்த்தினாள்.
தலை உயர்த்தியவன் அவளை பார்க்க, அவனை எதிர் கொள்ள வெட்கப்பட்டு திரும்பிக் கொள்ள போனாள்.
“உன் மனசு எப்பவோ எனக்கு தெரிஞ்சிடுச்சு, அதை உன் வாயால கேட்கிறப்போ செம ஃபீல். இந்த ராத்திரிய இப்படி மறக்க முடியாத ராத்திரியா நீ மாத்துவேன்னு நினைக்கவே இல்லை. எனக்கு உன் முகத்தை பார்க்கணும், ப்ளீஸ் திரும்பாத” என்றான்.
வெட்கத்தின் மினு மினிப்போடு காதல் கசியும் கண்களை சிமிட்டியவள் தன் பார்வையை அவனது முகத்திலிருந்து மார்புக்கு மாற்றிக் கொண்டாள்.
அவளின் மோவாய் பிடித்து முகத்தை நிமிர்த்தி தன்னைப் பார்க்க வைத்தான்.
“போதும், என்னவோ போலாகுது” என சிணுங்கினாள்.
நேராக படுத்துக் கொண்டவன், “சரி நான் உன்னை பார்க்கல, இப்படி தள்ளி என்கிட்ட வா, இங்க படுத்துக்க” என சொல்லி தன் கை வளைவை காட்டினான்.
அவ்விதமே அவனது கை வளைவில் அடைக்கலமானாள்.
“கோச்சுக்காத, இப்ப இத செய்யலைனா நாளைக்கு நான் ரொம்ப ஃபீல் பண்ணுவேன்” என சொல்லி, அவளின் உதட்டோரம் மிகவும் மென்மையாக முத்தமிட்டான்.
அவள் உடலை குறுக்கிக் கொண்டதை உணர்ந்தவன், “என்கிட்ட பயமா அஞ்சலி?” எனக் கேட்டான்.
“இல்லை, உங்கள்ட்ட நான் எப்படி நடந்துபேனோன்னு எம்மேலதான் பயம்” என்றாள்.
“அதெல்லாம் தானா சரியாகிடும். தூங்கு” என்றான்.
தயக்கத்தோடே அவளும் அவனது இதழ்களின் ஓரமாக மென் முத்தம் வைத்து விட்டு அவனை பார்த்தாள்.
அவளின் கன்னத்தை அழுத்திக் கொடுத்தவன், “அவ்ளோதான் இன்னிக்கு, உன்னை மீறி எதுவும் நடந்திடாது. பயமில்லாம தூங்கு” என்றான்.
கை வளைவிலிருந்து சற்று மேலேறி அவனது மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.
யுகிக்கு உலகையே வென்று விட்ட ஆனந்தம். அஞ்சலிக்கோ அனைத்தையும் மறந்து மனதிற்கு இனியவனிடம் சரணடைந்து விட்ட நிம்மதி.