“அப்படியே விட்டா தானா சரியாகிடும் அஞ்சலி. அம்மாக்கு எம்மேலதான் கோவம், உம்மேல இல்லை. நீ எப்பவும் போல இரு” என சொல்லி விட்டான்.
திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் வருகிறேன் என சொல்லி சென்னைக்கு கிளம்பினாள் நந்தினி. சண்டை நடந்த அன்று அவள் மாடிக்கு சென்ற பிறகு நடந்தவை அனைத்தும் அம்மா வழியாக அவளுக்கும் தெரியும்.
ஸ்ரீஜாவிடம் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டவளை திட்டிய அலமேலு, “இப்படி எல்லாரும் முறைச்சுக்கிட்டு நின்னா குடும்பம் குடும்பமா இருக்காது. அவ தப்பு பண்ணினா உங்க அண்ணன் பார்த்துப்பான், அவன் பொண்டாட்டிய மதிக்காம போனா அவனை மதிக்காம போன மாதிரிதான், மரியாதையா சொல்லிக்கிட்டு போ” என கட்டளையாகவே சொல்லி விட்டார்.
நந்தினியும் ஒரு வார்த்தை கடமையாக ஸ்ரீஜாவிடம் சொல்லி விட்டே புறப்பட்டாள்.
அப்படியே ஸ்ரீஜாவிடம் பேசாத அஞ்சலியிடமும் பேச சொல்லி சொன்னார். அவள் முடியாது என உறுதியாக மறுத்து விட்டாள்.
“எப்படி உங்களால இப்படி சொல்ல முடிஞ்சது?” என கோவம் வேறு கொண்டாள்.
“முடியாதுன்னா விடு, என்னவோ பண்ணுங்க” என விட்டு விட்டார் அலமேலு.
அதிக சல சலப்பு இல்லாமல் நாட்கள் நகர்ந்தன.
இன்னும் அலமேலு பக்க உறவுகளுக்கு அழைப்பிதழ் கொடுக்க பட்டிருக்கவில்லை. அலமேலுவின் பெற்றோர் இப்போது உயிரோடு இல்லை, மற்ற உறவுகளுடன் நெருக்கம் குறைந்து விட்டது, விஷேஷங்களுக்கு வர போக என மட்டும்தான் இருந்தனர். ஆகவேதான் கடைசியாக அவர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொள்ளலாம் என இருந்து விட்டனர்.
கடந்த வார இறுதியில் சேகர் பக்க உறவுகளையும் ஸ்ரீஜாவின் பிறந்த வீட்டினரையும் மனைவியுடன் சென்று அழைத்து விட்டான் வாசு.
ரோஹித்துக்கு பள்ளி இருப்பதால் அதிகம் வெளியூர் பயணங்களுக்கு ஸ்ரீஜாவை அழைத்து செல்ல முடியாது, ஆகவே அம்மா பக்க சொந்தங்களை அழைக்கும் வேலையை மட்டும் நீதான் அஞ்சலியுடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என தம்பியிடம் சொல்லி விட்டான் வாசு.
திருமணத்துக்கு இன்னும் இருபது நாட்களே மீதமிருந்த நிலையில் தள்ளி போடாமல் நாளையே புறப்பட்டு செல்லுங்கள் எனவும் சொன்னான் வாசு.
இரவில் மனைவியிடம் சொன்னான் யுகி.
“திரும்பவும் வெளியூர் போகணுமா?” என சிணுங்கினாள் அஞ்சலி.
“அம்மா வீட்டு சைட் எல்லாம் க்ளோஸ் இல்லை அஞ்சலி, போனோமா வந்தோமான்னு ரெண்டே நாள் ப்ரோக்ராம்தான். லாஸ்ட் டைம் மாதிரி எதுவும் ஆகாது, கவலை படாம வா” என்றான் யுகி.
“அதில்ல, என் கிளாசஸ் மிஸ் ஆகுது, ரெகார்டட் கிளாஸ்ல என் டவுட்ஸ் எல்லாம் எப்படி கிளியர் பண்ணிக்கிறது?”
“அதான் கூகுள் இருக்குதே அஞ்சலி, நீ சமத்து பொண்ணு வேற, நீயாவே கத்துக்க மாட்டியா?”
“பணம் கட்டி சேர்ந்திட்டு அதை ஒழுங்கா யூஸ் பண்ணிக்க வேணாமா?”
“புரியுது அஞ்சலி, ஆனா இதுவும் முக்கியம்தானே? ப்ளீஸ்…”
“சரி வர்றேன்” என அலுத்துக் கொண்டே சொன்னாள்.
அடுத்த நாள் விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் சேலத்துக்கு புறப்பட்டு விட்டனர். மாலைக்குள் பெரிய மாமா ஒருவரை தவிர மற்ற அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து விட்டனர்.
பெரிய மாமா அவரது தொழில் சம்பந்தமாக கேரளா சென்றிருந்தார், அவரது மனைவி மக்களும் வெளியூர் சென்றிருந்தனர். அறிவிப்பில்லாமல் ஏன் வந்தாய் என கைப்பேசியில் கடிந்து கொண்டவர், நாளை மறுநாள் ஊருக்கு வருகிறேன், அப்போது வா என சொல்லி விட்டார் .
திரும்பவெல்லாம் வர முடியாது, நான் ஊருக்கு வந்து விடுகிறேன், அழைப்பிதழை கூரியர் செய்து விடலாம் என அண்ணனிடம் சொன்னான் யுகி.
அம்மாவிடம் ஆலோசித்த வாசு, “நேர்லதான் கூப்பிடணும் டா. வந்து போக சிரமம்னா ஒரு நாள் தானே, அங்கேயே தங்கிட்டு அவரை கூப்பிட்டிட்டே வருவியாம்” என்றான்.
கடை மற்றும் திருமண வேலைகளை காரணம் சொல்லி மறுக்க பார்த்தான் யுகி.
“கடைக்கு நான் வேணும்னா ஒரு தடவ போய் பார்த்திட்டு வர்றேன், மத்த வேலையும் என்னடா இருக்கு, இனி கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் எல்லா வேலையும். அங்க முடிச்சிட்டு வா” என சொல்லி தம்பியை ஒத்துக் கொள்ள செய்து விட்டான் வாசு.
அரை மணி நேரத்தில் திடீர் திட்டம் உருவாக்கி விட்டான் யுகி. காரை தங்கியிருந்த விடுதியிலேயே போட்டு விட்டு பைக் ஏற்பாடு செய்து கொண்டு மனைவியுடன் கிளம்பி விட்டான்.
“ரெண்டு நாள் இங்கேதான் தங்கணுமா?” என அலுத்துக் கொண்ட அஞ்சலியும் கணவனின் திடீர் ஏற்பாட்டில் உற்சாகம் அடைந்து விட்டாள்.
ஏற்காடு சென்று கொண்டிருந்தனர் இருவரும். காரை விட பைக்கில் செல்வதுதான் மன எழுச்சி கொடுக்கும் என அஞ்சலி முன்னர் சொன்னதை நினைவு வைத்துதான் காரில்லாமல் இந்த ஏற்பாடு.
அஞ்சலி எதிர்பார்த்திருக்கவே இல்லை. இடையிடையில் சில இடங்களில் பைக்கை நிறுத்தி விட்டு இருவரும் சேர்ந்து மேகங்கள் நகர்வதை கண்டு ரசித்தனர். அப்போதெல்லாம் அவன் கையை இயல்பாக பற்றிக் கொண்டாள் அஞ்சலி.
புக் செய்திருந்த விடுதிக்கு வந்து சேர்ந்த சிறிது நேரதுக்குள்ளாக இருட்ட ஆரம்பித்து விட்டது. சுற்றிப் பார்க்கவென எங்கும் செல்லாமல் கடை வீதிக்கு அழைத்து சென்றான். குளிருக்கு தேவையானவை வாங்கிக் கொண்டனர்.
ஏரிக்கு நடந்து போகும் தூரத்தில்தான் விடுதி. ஏழு மணியாகியிருக்க, சுற்றுலா வந்தவர்களின் நடமாட்டம் இருந்தது. சற்று நேரம் அங்கே நடந்த இருவரும் ஏரியை பார்த்த படி அமர்ந்து கொண்டனர். தன் சில்லிட்ட கைகளை யுகியின் கன்னத்தில் வைத்து விளையாடினாள் அஞ்சலி.
“இம்சை பண்ணாத, ஒழுங்கா இரு” என அதட்டினான் அவன்.
“என்ன என்ன… இம்சை இப்போ?” எனக் கேட்டு தள்ளி அமர்ந்து கொண்டாள்.
“ஒழுங்கா நீயே பக்கத்துல வந்திடு, இல்லைனா எந்திரிச்சு போயிடுவேன்” என அவன் சொல்லவும், நிஜமாகவே போய் விடுவானோ என பயந்து மீண்டும் அவன் பக்கத்தில் வந்தமர்ந்து கொண்டாள்.
பல முறை ஏற்காடு வந்திருப்பவன் அப்போது நடந்தவை பற்றி சொன்னான். இவள் தோழிகளோடு வந்த போது வாந்தியின் காரணமாக சுற்றி பார்க்கவே இல்லை என்பதை சொன்னாள்.
“நீ சொன்னது நினைவிருக்கு, என் கூடத்தான் இங்க சுத்தணும்ங்கிறதுதான் உன் தலைவிதி” என்றான்.
“அப்ப அது நல்ல தலைவிதிதான்” என்றாள்.
“சும்மா சொல்லாத”
“நிஜமாங்க, உங்க கூட ஊர் சுத்த பிடிச்சிருக்கு”
“ஊர் சுத்த மட்டும்தானா?”
“வேறென்ன? என்னன்னு தெளிவா கேளுங்க சொல்றேன்”
“ஸ்னாக்ஸ் எதுவும் வாங்கிட்டு வரவா?” என பேச்சை மாற்றி விட்டான். இந்த முறை ரிஸ்க் எடுக்க போவதில்லை என்றவள் வேண்டாம் என சொல்லி விட்டாள்.
வெகு நேரம் அங்குதான் இருந்தனர். எளிமையாக இட்லி மட்டும் சாப்பிட்டு விட்டு அறைக்கு திரும்பி விட்டனர்.
காலையில் சீக்கிரமே யுகியை எழுப்பி விட்டாள்.
“கொஞ்ச நேரம் தூங்க விடு” என சொல்லி புரண்டு படுத்துக் கொண்டான்.