என்ன ஏதென  அவள்தான் விசாரித்து அக்காவிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாள். அதை அப்படியே சொன்னால் போட்டு கொடுத்ததாக ஆகி விடுமே, ஆகவேதான் தன்னை மீறிக் கொண்டு சொன்னது போல இருக்க வேண்டும் என காத்திருந்து காய் நகர்த்தி விட்டாள் ஸ்ரீஜா.

“இன்னும் என்னெல்லாம் மறைச்சிருக்க டா எங்ககிட்டருந்து?” என யுகியிடம் சீறினார் அலமேலு.

“எதுக்குமா இவ்ளோ எமோஷ்னல் ஆகுற இப்போ? இவளுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியும்தானே உனக்கு? அதிலிருந்து வெளில வர முடியாம அவ வீட்ல படுத்தி வச்சாங்க. கவுன்சிலிங் போனா பழைய படி கல கலப்பா மாறுவான்னு நாந்தான் அழைச்சிட்டு போனேன். அதுக்கு என்ன இப்போ?” எனக் கேட்டான் யுகி.

“எங்கள்ட்ட சொல்லணுமா இல்லையா டா?” எனக் கேட்டார் அலமேலு.

“சொன்னா சரியான விதத்துல புரிஞ்சிப்பீங்களா? இதோ இப்ப கூட எப்படி பார்க்குறீங்க? மறைச்சிட்டேன்னு நீ வருத்த பட்டுக்க தப்பு ஏதும் செய்யலையேமா. எங்களுக்குள்ளன்னு சில விஷயங்கள் இருக்கும்லமா? அதைப் போய் உன்கிட்ட சொல்ல என்னம்மா இருக்கு?” எனக் கேட்டான் யுகி.

“எவ்ளோ சுலபமா என்னை அந்நியம் ஆக்கிட்டடா!” ஆதங்கமாக சொன்ன அலமேலு, கணவரையும் அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து விட்டார்.

ரோஹித்தை அழைத்துக் கொண்டு மாடியேறி விட்டாள் நந்தினி.

“என்ன இருந்தாலும் அத்தைய இப்படி இன்சல்ட் பண்ணியிருக்க வேணாம் உங்க தம்பி, பாவம் அத்தை!” என வாசுவிடம் சொன்னாள் ஸ்ரீஜா.

“ஷட் அப் யூ பிளடி…” என சீறிய அஞ்சலியின் கையை கெட்டியாக பிடித்து இழுத்து பேச விடாமல் செய்தான் யுகி.

“ஹையையோ இவளுக்கு என்னமோ ஆகிடுச்சுங்க” என பதறினாள் ஸ்ரீஜா.

“உங்க அண்ணி ட்ராமா குயின், கை தட்டி ரசிக்க சொல்றீங்களா? அவங்க மாஸ்க்கை கிழிச்சு அவங்க யாருன்னு தெரிய படுத்தணும், ஏன் என்னை ஸ்டாப் பண்றீங்க?” என யுகியிடம் கோவப்பட்டாள் அஞ்சலி.

ஸ்ரீஜாவுக்கு அஞ்சலியின் பேச்சில் வயிற்றில் அமிலம் சுரந்தது. ஏழு வருட மண வாழ்க்கையில் வீட்டினர் யாரும் தவறாக தன்னை பற்றி கணவனிடம் சொல்ல மாட்டார்கள் என்பதைத்தான் தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு வருகிறாள் ஸ்ரீஜா.

அஞ்சலியும் அப்படியே இருப்பாள் என நினைத்தது அவளின் முட்டாள்தனம்.

“நந்தினி கல்யாணம் வரை அப்படித்தான் உன்னை அடக்கி ஆகணும், இல்லைனா எங்க வீட்டு பொண்ணு கல்யாணம் எப்படி நல்ல விதமா நடக்கும்? இல்லை நீ பேசுறத கேட்டுகிட்டு நான் அம்மா வீட்டுக்கு போயிட்டா கல்யாணத்துக்கு வர்ற சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்வாங்க? பாவம் உன்னை கட்டிக்கிட்டு படாத பாடு படுது யுகி” என ஏதேதோ சொன்னாள் ஸ்ரீஜா. தான் வீட்டை விட்டு போய் விடுவேன் என யுகியை பயப்படுத்துகிறாளாம்.

“பேசாம இரேன் டி! எதுக்காக அந்த பொண்ணை ப்ரொவோக் பண்ற?” என மனைவியை அடக்கினான் வாசு.

“அவங்கள நல்லவங்கன்னு இன்னும் நம்புறீங்களா மாமா? இங்க எல்லாரும் உங்களுக்கு நல்லது செய்றதா நினைச்சு இவங்க உண்மையான நடத்தையை உங்கள்ட்டேருந்து மறைச்சிட்டு இருக்காங்க” என அஞ்சலி சொல்ல, யுகி அவளை தடுத்தான்.

“ரோஹித்தை இவங்கதான் வளர்த்தாகணும்ங்க, உங்க அண்ணாக்கு நல்லதுன்னு ரோஹித்க்கு கெடுதல் செய்யாதீங்க. என்னை சப்போர்ட் பண்ணிக்க நான் பேசல. அதுக்கு அவசியமும் இல்லை, நமக்கு இடையில இவங்க என்ன பிளே பண்ண நினைச்சாலும் அது இவங்க சக்திக்கு அப்பாற்பட்டதாதான் இருக்கும். உங்க அண்ணா பாவம் அவர் பையன் பாவம், அதுக்காக நான் பேசத்தான் செய்வேன்” என்றாள் அஞ்சலி.

“நீ என்ன பொய் சொன்னாலும் இவர் நம்ப மாட்டார்” பயத்தை மறைத்துக் கொண்டு கணவனின் கையை பிடித்துக்கொண்டாள் ஸ்ரீஜா.

“இங்கேயே இருங்க எல்லாரும்” என கட்டளையாக சொன்ன அஞ்சலி, மாமியாரை வற்புறுத்தி அழைத்து வந்து அங்கு நிறுத்தினாள். உடன் வெங்கட்டும் வந்து விட்டார்.

தற்போது என்ன பேச்சு நடந்தது என்பதை ஒரு வார்த்தை மாற்றாமல் அப்படியே மாமியாரை சொல்ல சொன்னாள் அஞ்சலி.

இயலாமையோடு மகன்களை மாறி மாறி பார்த்தார் அலமேலு.

இவர் வாய் திறக்க மாட்டார் என புரிந்து அஞ்சலியே நடந்ததை அப்படியே சொன்னாள். இது உண்மையா என தன் அம்மாவை பார்த்தான் வாசு. அவர் மறுக்கவில்லை.

தன்னை குறித்து பேசியதையும் சொல்லி விட்ட அஞ்சலி அதனால் ஏற்பட்ட உணர்ச்சி பெருக்கை சமாளிக்க யுகியை ஆதரவாக பற்றிக் கொண்டாள்.

“பொய் சொல்றா இவ” என அழுது கொண்டே சொன்னாள் ஸ்ரீஜா.

“அஞ்சலி பொய் சொல்றாளா இல்லையான்னு தெரிஞ்சுக்க என் அனுபவம் போதும்மா, நீ பொய் பேசாதம்மா” ஸ்ரீஜாவிடம் வேதனையாக சொன்னார் வெங்கட்.

“எனக்கு அப்பவே தெரியும் டா இவ ஏதாவது பேசியிருப்பான்னு, ஆனா இந்தளவுக்கு… சேச்சே!” ஸ்ரீஜாவை அருவருப்பாக பார்த்து சொன்னார் அலமேலு.

ஸ்ரீஜா பற்றியிருந்த தன் கையை விலக்கிக் கொண்ட வாசுவின் முகம் கறுத்து போயிருந்தது.

“யார் என் நிலைல இருந்தாலும் அஃபெக்ட் ஆவாங்கதான், நானும் ஆனேன், கவுன்சிலிங் போனேன். அதனால நான் அப்நார்மல்னு அர்த்தம் ஆகிடாது. உங்க பார்வைல நான் அப்படினா இருந்திட்டு போறேன்” என அனைவருக்கும் பொதுவாக சொன்னவள் கணவனை பார்த்தாள்.

“நீங்க சொல்லுங்க, நான்…” என அவள் கேட்கும் போதே அவளின் வாயை பொத்தினான்.

“என்னால எதையும் வாய் வார்த்தையால சொல்ல முடியாது அஞ்சலி, உன் அருமை தெரியாத ஒருத்தர் வாய்க்கு வந்தத சொன்னாங்கன்னு என்னை கேள்வி கேட்காத, உனக்கு புரியும்தானே என்னை? உனக்கு நல்லா தெரிஞ்ச ஒரு விஷயத்து மேல சந்தேக படாத” என்றான்.

லேசாக விசும்பினாள் அஞ்சலி.

அலமேலுவுக்கு என்னவோ போலாக, அவர் ஏதும் சொல்லும் முன்,  “ரூமுக்கு அழைச்சிட்டு போடா அஞ்சலியை, புள்ளைய சமாதான படுத்து” என்றார் வெங்கட்.

“என்னம்மா இதெல்லாம்?” அம்மாவிடம் வருத்தமாக கேட்டான் வாசு.

“இவளுக்கு அஞ்சலிய  கண்டாலே ஆகல, இவ தங்கச்சிய யுகிக்கு செய்யலன்னு இப்படிலாம் செய்றாளோ என்னவோ? நீ சண்டைக்கு நிக்காம எப்படி இவளை திருத்துறதுன்னு பாரு” என்றார் அலமேலு.

மாமியாரை மனதிற்குள் திட்டிக் கொண்டே அழுத கண்களோடு நின்றிருந்தாள் ஸ்ரீஜா.

“நீங்க ரெண்டு பேரும் தனி தனியா இருக்கிறது சரி வராது வாசு, என்ன செய்யலாம்னு முடிவு பண்ணு” என மகனிடம் சொன்ன வெங்கட், மருமகளை பார்த்தார்.

“மாமா நான்… அவதான்…” திணறினாள் ஸ்ரீஜா..

“அஞ்சலி பத்தி நல்லதாவும் சரி கெட்டதாவும் சரி இனி ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது, சொல்லிட்டேன் மா” சத்தமில்லாமல் அழுத்தமாக சொல்லி அறைக்குள் சென்று விட்டார் வெங்கட்.

மனைவியை திரும்பிக் கூட பாராமல்  “கொஞ்ச நேரத்துல வர்றேன் மா” என சொல்லி வீட்டை விட்டு வெளியேறி விட்டான் வாசு.

படுக்கையில் குத்துக் காலிட்டு அமர்ந்திருந்த அஞ்சலியின் விழிகள் அலைப்புறுதலில் இருந்தன.

அவள் பக்கத்தில் வந்து நின்ற யுகி, “ரிலாக்ஸ் ஆகு அஞ்சலி” என்றான்.

தன்னை நிமிர்ந்து பார்த்தவளை அணைத்துக் கொள்ள வேண்டும் போல அவனுக்கு இருக்கிறது. வலிந்து கைகளை இறுக்கிக் கொண்டு “என்ன அஞ்சலி?” எனக் கேட்டான்.

இரண்டு கைகளையும் அவனை நோக்கி நீட்டினாள். அவன் பிடித்துக்கொள்ள, “நான் உங்களை ஹக் பண்ணிக்கவா?” எனக் கேட்டாள்.

அடுத்த நொடி தன் பிடிக்குள் இருந்த அவளின் இரண்டு கைகளையும் வேகமாக இழுத்து அவளை நிற்க வைத்தவன், அதை விட வேகமாக அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

கணவனின் முதுகை சுற்றி பிடித்துக் கொண்டிருந்தவள், “ஸாரி, உங்க அண்ணிய பத்தி சொல்லி கொடுக்கணும்னு பிளான்லாம் பண்ணல. அவங்க பேச பேச என்னால டாலரேட் பண்ண முடியலை, கோச்சுக்காதீங்க” என்றாள்.

“உம்மேல எந்த கோவமும் இல்லை, எதையும் யோசிக்காத” என சொல்லிக் கொண்டே ஒரு கையால் அவளின் தலையை வருடிக் கொடுத்தான்.

“நான் நார்மல் பொண்ணுதான்…”

“அஞ்சலி!”

“என்னை பிடிக்கும்தானே உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

தன்னை சுற்றியிருந்த அவளின் வலது கையை பிரித்து எடுத்து, புறங்கையில் முத்தமிட்டு, “என்ன தெரியணும் உனக்கு?” எனக் கேட்டான்.

“எதுவும் தெரிய வேணாம்” என சொல்லி மீண்டும் அவனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

நடந்த நிகழ்வால் பதறிக் கொண்டிருந்த அஞ்சலியின் உள்ளம் அவனது அரவணைப்பில் மெல்ல மெல்ல அமைதி கொள்ள ஆரம்பித்தது.