இப்போது வாசு வந்திருப்பதால் தான் எழ நேரமாகும், அஞ்சலியை கொண்டே செய்ய வைத்து விடுங்கள் என மாமியாரிடம் சொல்லியே விட்டாள் ஸ்ரீஜா. அவரும் சரியென கூறி விட்டார். அஞ்சலியும் செய்ய மாட்டேன் என சொல்லவில்லை.
கார் போக பெரிய கேட் வாயில், ஆட்கள் வந்து போக சின்ன கேட் வாயில் என இருக்க இரண்டு வாசல்கள். நல்ல பெரிய இடம் என்பதால் வாளியில் நான்கு முறையாவது தண்ணீர் எடுத்து வந்தால்தான் கழுவி விட முடியும்.
அன்றைய இரவில் படித்துக் கொண்டிருந்த அஞ்சலி சலித்துக் கொண்டே அலாரம் வைத்தாள். என்னவென கேட்ட யுகியிடம் விவரம் சொன்னாள்.
“நாலு நாள் எனக்கு சிரமம்தான், டெஸ்ட் இல்லைனா சீக்கிரம் எழுந்துப்பேன், படிச்சிட்டு லேட்டா தூங்குறேனா, காலைலதான் நல்லா தூக்கம் வருது. கூட்டி பெருக்கிட்டு வந்து படுத்தா தூக்கம்லாம் கலைஞ்சி போயிடுது. ஆறு மணிக்கெல்லாம் கோலம் போடனும்னு இருக்கு உங்கம்மா ரூல் புக்ல” என்றாள்.
“நாலு நாள்தானே, செஞ்சிட்டு போயேன்” என ஆறுதலாக சொன்னான் யுகி.
“உங்களுக்கென்ன வாயால சொல்லிடுவீங்க” என புலம்பிக் கொண்டேதான் தூங்கினாள் அவள்.
காலையில் ஐந்து ஐம்பதுக்கு அலாரம் அடித்தும் எழவில்லை அஞ்சலி. எப்போதும் முன்னேரமாக அலாரம் வைத்து சற்று தாமதித்து எழுவது அவளுக்கு வழக்கம்தான். ஆகவே யுகியும் கண்டுகொள்ளவில்லை.
ஆறு மணியை கடந்தும் அஞ்சலி உறங்கிக் கொண்டிருக்க, எழுப்பி விட போனான். ஆனால் அவளின் உறக்கத்தை கலைக்க விரும்பாமல் அவனே எழுந்து சென்று விட்டான்.
அதற்குள் அஞ்சலியும் வந்து விட்டாள். அவளுக்கு தெரியும் யுகிக்கு காலையில் சீக்கிரம் எழுவது சிரமம். ஏழரைக்குத்தான் அவனது நாள் துவங்கும். இன்று தன்னை எழுப்பாமல் அவனே வந்து செய்வதை கண்டவளுக்கு சில்லென இருந்தது.
“நீ தூங்கணும்னுதான் நான் வந்தேன், நீ போ” என சொல்லிக் கொண்டே வோஸ் குழாய் வழியாக வாசலில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான்.
“இவ்ளோ பெரிய வோஸ் பைப் பின்னாலேருந்து எடுத்திட்டு வந்து கொசா மொசான்னு அதை சுருட்டி வச்சுக்கிட்டு என்னால தண்ணி விட முடியாது. பக்கெட்ல பிடிச்சுட்டு வந்துதான் செய்வேன் தெரியமா?” என்றாள் அஞ்சலி.
“என்கிட்ட ஏன் சொல்லலை, சின்னதா வேற பைப் வாங்கி கொடுத்திருப்பேன்ல?” எனக் கேட்டுக் கொண்டே துடைப்பம் எடுத்து தண்ணீரை வழித்து விட்டான்.
“போகாம என்ன பண்ற நீ?” எனக் கேட்டான்.
“இருக்கேனே என்ன இப்போ? கோலமும் நீங்களே போட போறீங்களான்னு பார்த்திட்டு போவேன்” என சொல்லி சுவாரஷ்யமாக அவனை பார்த்தாள்.
“போட்டா போச்சு” என்றவன் நான்கு சதுரங்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருப்பது போல போட்டு அதை சுற்றி வளையங்கள் போட்டான். இன்னொரு வாசலில் மிக்கி மவுஸ் ஓவியம் வரைந்து வைத்தான்.
அலமேலுவும் அப்பாவை காண கீழே வந்த வாசுவும் வெளியில் வந்து விட்டனர்.
“என்னடா பண்ணிட்டு இருக்க நீ?” என அதட்டினார் அலமேலு.
அஞ்சலி திகைத்து பின் விழிக்க, யுகியும் அசடு வழிய சிரித்தான்.
“தெருவுல எல்லாரும் வேடிக்கை பார்த்திருப்பாங்க, ஒருத்தர் பாக்கி இல்லாம என்கிட்ட கேட்க போறாங்க, ஏன் டா இப்படி என் மானத்தை வாங்குற?” என கடிந்தார் அலமேலு.
“நான்தான் தூங்கிட்டேன் அத்தை, அதான்” என மாமியாரிடம் சொன்ன அஞ்சலி, வாசுவை பார்த்து, “கொஞ்சம் லேட் ஆனாலும் நான் வந்து போட்டுப்பேன்னா கேட்டுக்க மாட்டாங்க மாமா” என குறை சொன்னாள்.
“ஏன் ஸ்ரீஜா வர்றதுக்கு என்ன?” என அம்மாவிடம் கேட்டான் வாசு.
“சும்மா இருடா!” என பெரிய மகனை அதட்டினார் அலமேலு.
“ஹையோ மாமா, நீங்க வந்ததால திரும்ப நீங்க மஸ்கட் போற வரைக்கும் அவங்களுக்கு கோலம் போடுற வேலைக்கு மட்டும் லீவ் கொடுத்திருக்காங்க அத்தை, என்னத்த?” எனக் கேட்டாள் அஞ்சலி.
வாசு விழிக்க, “அது உங்களை நல்லா கவனிக்கணும்ல, அதனால” என விளக்கம் வேறு சொன்னாள். சட்டென உள்ளே நழுவி சென்று விட்டான் வாசு.
சின்ன மகனையும் மருமகளையும் மாறி மாறி பார்த்த அலமேலுவும் என்ன சொல்ல என தெரியாமல் உள்ளே சென்று விட்டார்.
“அவங்க போயிட்டாங்க, நீங்க கம்ப்ளீட் பண்ணுங்க” என கணவனிடம் சொன்னாள் அஞ்சலி.
“உன்னை…” என்றவன் கோலமாவு கிண்ணத்தை அவளின் கையிலேயே கொடுத்து விட்டு உள்ளே சென்றான்.
ஹாலில் அமர்ந்து காபி பருகி கொண்டிருந்தனர் வாசுவும் அலமேலுவும்.
உள்ளே வந்த தம்பியிடம் “என்னடா கோலம் அது?” என சிரித்துக்கொண்டே கேட்டான் வாசு.
எதுவும் பேசாத யுகி மழுப்பலாக சிரித்துக்கொண்டே அறைக்குள் சென்று விட்டான்.
கோலத்தை முழுமையாக போட்டு விட்டு வந்த அஞ்சலி பூனை நடை போட்டு அறைக்குள் சென்றாள். “நல்ல பசங்க ரெண்டும், அதும் இவன் இருக்கானே… என்னமா இப்படி இருக்கான்?” என அம்மாவிடம் கேட்டான் வாசு.
“இன்னும் ரெண்டும் முட்டிக்க மோதிக்கன்னுதான் இருக்குதுங்க, வேலைக்கு வேற போகணுமாம் அவளுக்கு, என்ன செய்ய போறானோ உந்தம்பி?” என சொல்லி வருத்த பட்டுக் கொண்டிருந்தார் அலமேலு.
அறைக்குள் மனைவி நுழைந்த அடுத்த நிமிடம் கதவை அடைத்த யுகி, அவளின் காதை பிடித்து திருகினான்.
“விடுங்க, நான் என்ன தப்பு பண்ணினேன்?” எனக் கேட்டு அவனது கையை விலக்கி விட்டாள் அஞ்சலி.
“அண்ணி லேட்டா வர்ற காரணத்தையெல்லாம் உன்கிட்ட யாரும் கேட்டாங்களா?”
“ஆமாம், தெரியாம வாசு மாமா முழிச்சாங்கதானே?”
“அடியே!”
“ப்ச் என்ன இப்போ?”
“நீ தெரிஞ்சுதான் பேசுறியா?”
“வாசு மாமா வந்திருக்காங்க, அவங்களுக்கு காலைல காஃபி கொடுத்து கவனிக்கணும். ரோஹித்தை ரெண்டு பேரும் சேர்த்து கிளப்பி விடுவாங்க, அவங்க ஃபேமிலியா ஏதாவது பேசி சிரிச்சு ஒன்னா டைம் ஸ்பெண்ட் பண்ணுவாங்க, அதனால உங்கண்ணியால காலைல இங்க வர முடியாது. அதை சொன்னா மாமா என்னடான்னா வெட்கப்பட்டுகிட்டு போயிட்டாங்க, நீங்க திட்டுறீங்க”
“அஞ்சலி…”
“என்ன?”
“விவரமே இல்லாத பொண்ணாடி நீ? நமக்குள்ள எல்லாம் சரியா இருந்திருந்தா நாம தூங்க லேட் ஆகும். காலைல எந்திரிக்கவும் லேட் ஆகும். தெரியுமா தெரியாதா?”
அஞ்சலிக்கும் புரிந்தது.
அவனை சங்கடமாக பார்த்தவள், “மாமாகிட்ட நான் அத மீன் பண்ணலைன்னு சொல்லி ஸாரி சொல்லிடவா?” எனக் கேட்டாள்.
“சத்தியமா உன்னோட முடியலை, பேசாம வந்து படு” என அவன் சொல்ல, தன்னை திட்டிக் கொண்டே வந்து படுத்தாள்.
அவனும் படுத்த பின், “நிஜமா எனக்கு அப்படி தோணவே இல்லங்க, என்னை பத்தி என்ன நினைச்சிருப்பாங்க? ஹையோ மாமாக்கு எப்படி இருந்திருக்கும்? ஷேம் ஷேம்” என சொல்லி தன் தலையில் தட்டிக் கொண்டாள்.
“விடு விடு, அது முடிஞ்சு போச்சு, கண்டுக்காம அப்படியே விட்ரு” என்றான்.
நடந்ததை நினைத்து பார்த்தவள் அவனை பார்த்து சிரிக்க, அவனும் சிரித்தான்.
“அசந்து தூங்கின, எழுப்ப மனசு வரலையே” என்றவனை கண்கள் சிமிட்டாமல் பார்த்தாள்.
“என்ன?”
“நீங்க டிஃபரண்ட்டா இருக்கீங்க” என்றாள்.
“துடைப்பத்தை கையில எடுத்ததாலையா?”
“ம்ஹூம், நான் உங்க வைஃப், எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கு, ஆனாலும் என் ஃபீலிங்ஸ் புரிஞ்சு உங்க ஃபீலிங்ஸ் கண்ட்ரோல் பண்ணி நடக்குறீங்களே… எத்தனை பேர் இப்படி பொறுமையா இருப்பாங்க? தேங்க்ஸ்” என உள்ளார்ந்த குரலில் சொன்னாள்.
அவளின் புருவங்களை நீவி விட்டவன், “தூங்கு அஞ்சலி!” என்றான். அந்தக் கையை அப்படியே பிடித்துக்கொண்டாள்.
அவனை ஊடுருவி பார்த்துக் கொண்டே அவனது புறங்கையை மென்மையாக தடவிக் கொடுத்தாள். அவனை உரசி விடாத அளவில் சற்றே நெருங்கி வந்து படுத்தாள்.
அடுத்து என்ன செய்ய போகிறாளோ என அவளையே ஆவலாக பார்த்திருந்தான் அவன். அவனது இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்திருந்தது.
“யூ ஆர் அ ஜெம்!” என சொல்லி கண்களை மூடிக் கொண்டாள் அஞ்சலி.
‘ஓவரா எதிர்பார்த்து பல்பு வாங்கிட்டியாடா!’ என தனக்குள் கேட்டு சிரித்துக் கொண்டான் யுகி.