பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -14

அத்தியாயம் -14

அந்த இரவு நேரத்தில் யுகி, அஞ்சலி இருவரும் பேசிக் கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தனர்.

இந்த அமைதி அஞ்சலிக்கு அறவே பிடிக்கவில்லை.

“கூப்பிட்டதும் வந்திட்டேன்தானே, அப்புறமும் என்ன உம்முன்னு வர்றீங்க?” எனக் கேட்டாள்.

“நீ வந்திடுவேன்னு தெரியும். ஆனா கேப் விட்டு நடக்குறியே. பாரு நம்ம நிழல் ஒட்டிக்கவே இல்லை” என்றான் யுகி.

“கோவமா இருந்தா அப்படித்தான், அதுக்கு என்ன இப்போ?”

“இவ்ளோ கேப் விழுந்தா மூனாவது ஆளு உள்ள வந்து குட்டைய குழப்பிடுவாங்க அஞ்சலி”

“எவ்ளோ கேப் விழுந்தாலும் யாரையும் நடுவுல வுடக் கூடாது”

“ம்ம்… அதைத்தான் உனக்கு சொல்லித் தர நினைச்சேன்”

“அதெல்லாம் எனக்கு தெரியும். உங்கம்மா பேசினத்துக்கு ஏதாவது திரும்ப சொன்னீங்களா நீங்க? அவங்கள சமாதானம் பண்ணி அனுப்பி வச்சிட்டீங்க, திரும்ப திரும்ப அப்படித்தான் பேச போறாங்க”

“அக்கா, நந்தினி ஏன் என்னையும் சேர்த்து எல்லாரையும் அம்மா அப்படித்தான் பேசுவாங்க அஞ்சலி. அண்ணிய பேச மாட்டேங்குறாங்கன்னா அவங்கள அப்படி க்ளோசா அவங்க பார்க்கவே இல்லை. உன்னை வீட்டோட அடைக்கணுங்கிறது  இல்லை அவங்க எண்ணம். நீ வேலைக்கு போயிட்டா என்னை நம்ம குடும்பத்தை நாளைக்கு பசங்க வந்தா அவங்கள எப்படி பார்த்துப்பேன்னு கவலை படுறாங்க. உன் முன்னாடி இப்படி பேசுறவங்க வேற யார்கிட்டேயும் உன்னை விட்டு கொடுத்து பேசிட மாட்டாங்க. உனக்கு கெடுதலா அவங்க எதுவும் நினைக்கல”

“என் ஆசையையும் அவங்கள்ட்ட இப்படி எக்ஸ்பிளைன் பண்ணியிருக்கலாம் நீங்க”

“சொல்றதுக்கான நேரம் இது இல்லை, அதனால சொல்லலை”

“எப்ப வருமாம் அந்த நேரம்?”

“வரும், அம்மா என்ன சொல்வாங்கன்னு நீ கவலை படாத. அதை நான் பார்த்துக்கிறேன்.  நமக்குள்ள பிரச்சனை இல்லைதானே? அம்மா உன்னை பேசினாங்கன்னு என்கிட்ட கோச்சுப்பியா?”

“எனக்கு சப்போர்ட் பண்ணி பேசல நீங்க”

“உடனே உடனே எல்லாம் பேச முடியாது அஞ்சலி. இன்னிக்கு பேசலைங்கிறதுதான் உனக்கு பெருசா தெரியுதா? நாளைக்கு நீ வேலைக்கு போகும் போது அவங்க சம்மதிக்கணும், அதுக்கு என்ன செய்யணுமோ செய்வேன் நான்”

“ம்ம்…”

“இப்படி சொன்னா… கோவம் போச்சா?” எனக் கேட்டான்.

அவன் பக்கமாக நெருங்கி வந்தவள், “இதோ நம்ம நிழல் ஒட்டி இருக்கு பாருங்க, இதுக்கு என்ன அர்த்தம்? கோவம் போச்சு” என்றாள்.

அவளின் நிழலுக்கு ஒரு கொட்டு வைத்தான். அவள் நிஜத்தில் தலையை பிடித்துக்கொண்டு அவனை முறைத்தாள். இன்னும் வேகமாக இன்னொரு கொட்டு வைத்தான். அவள் பதிலுக்கு நிஜமாகவே அவனது தோளில் அடி வைத்தாள்.

“நாளைக்கு அண்ணனை பிக் அப் பண்ண ஏர்லி மார்னிங் ஏர்போர்ட் போகணும்.  உள்ள வச்சுக்கலாம் நம்ம அடிதடிய” என்றான்.

“எவ்ளோ அடி போட்டேனாம் அப்படி?”

“கல்யாணத்தன்னிக்கே நல்லா போட்டியே ஒன்னு” தன் கன்னத்தை தடவிக் கொண்டு சொன்னான்.

“ஒரு கன்னத்துலதான் போட்டேன், இன்னொன்ன விட்டுட்டேன்” என்றவள் அடிக்க போக, அவன் விலகாமல் அப்படியே நின்றிருந்தான்.

அடிப்பது போலவே கையை எடுத்து சென்றவள் அவனது கன்னத்தை இரு விரல்கள் கொண்டு மென்மையாக கிள்ளி, “ரொம்ப சமத்து நீங்க, தெரியாம என்கிட்ட வந்து மாட்டிகிட்டீங்க. பாவம் இந்த பையன்” என்றாள்.

அவன் சிரித்து விட்டான். இப்போது இயல்பாக நடக்க ஆரம்பித்தனர்.

“வீட்ல கல்யாணம் இருக்கு, இப்ப கோர்ஸ்ல சேரனுமான்னு கேட்டதுக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லைனு சொன்ன. இப்ப எப்பவும் படிக்கிறேன்னு உட்கார்ந்து அம்மாவை டென்ஷன் பண்ணாத அஞ்சலி” என்றான்.

“இப்போதான் சமத்து சக்கரை கட்டின்னு சொன்னேன். அதுக்குள்ளவா?”

“அஞ்சலி!”

“சரிங்க பாஸ். என் வேலையெல்லாம் முடிச்சிட்டுத்தான் புக்கை தொடுவேன்” என உறுதி தந்தாள்.

“அப்புறம் அதென்ன நான் உங்கிட்ட பெர்சனலா பேசினதை எல்லாம் அம்மாட்ட சொல்ற, நமக்குள்ள நடக்கிறத இப்படித்தான் வெளில சொல்லுவியா?”

“உங்கம்மாட்டதானே சொன்னேன்?”

“எங்கம்மாகிட்ட மட்டும் எல்லாத்தையும் சொல்லுன்னு உன்கிட்ட சொல்லி வச்சதா எனக்கு நினைப்பு இல்லியே,  நானும் உங்கம்மாகிட்ட சொல்லவா?”

“எதை?”

“பச்ச புள்ள மாதிரி கேட்காத”

“அத்தை அப்படி பேசவும் டக்குனு சொல்லிட்டேன்”

“இனிமே இப்படிலாம் லூஸ் டாக் விட கூடாது!” என தீர்மானமாக அவன் சொல்ல, அவளும் சரி என ஒத்துக் கொண்டாள்.

சமாதானம் ஆகி நல்ல மனநிலையிலேயே உறங்க சென்றனர்.

அடுத்த நாள்  தாயகம் வந்துவிட்டான் வாசு. ரோஹித் பள்ளிக்கு விடுப்பு எடுத்திருந்தான். சென்னையிலிருந்து நந்தினி வந்திருந்தாள். பைரவியும் விடுப்பு போட்டு விட்டு வாசுவை காண  வந்திருந்தாள். சேகர் தன் பெரிய மச்சானுக்கு ஒரு ஹாய் சொல்லி விட்டு கிளம்பி விட்டான். பைரவியின் பெண்கள் மாலையில் வந்து மாமனை பார்ப்பார்கள்.

 இன்று ஸ்ரீஜா தனியாக சமையல் செய்யாமல் கீழேயேதான் இருந்தாள்.

காய்கள் நறுக்கி வைத்து, தேங்காய் துருவி கொடுத்து, வேலை செய்யும் அக்கா கழுவி வைத்த பாத்திரங்களை அடுக்கி வைத்து விட்டு வேறு உதவி வேண்டுமென்றால் கூப்பிடுங்கள் என மாமியாரிடம் சொல்லி விட்டுத்தான் அறைக்கு சென்றாள் அஞ்சலி.

பைரவி கூட, “இத்தனை பேர் இருக்கும் போது நீயும் வந்து என்ன செய்ய போற? நீ படி” என சொல்லித்தான் அனுப்பியிருந்தாள்.

வாசுவுக்கு சமையலறையில் நடப்பது என்ன தெரியும்? அவன் அப்பாவின் அறையில் இருந்தான். பின் கட்டுக்கு அவன் சென்ற நேரம் பார்த்து வந்த ஸ்ரீஜா, அஞ்சலி எந்த வேலையும் செய்வதில்லை, யாரும் எதுவும் கேட்டு கொள்கிறார்களா பாருங்கள் என தவறாக சித்தரித்துக் கூறினாள்.

“வந்த உடனே யாரை பத்தியும் குறை சொல்லணுமா உனக்கு? பொண்டாட்டி கூட இல்லாம எனக்கு என்ன கஷ்டம்னு ஏதும் அக்கறை இல்லை, பேச்சை பாரு” என கடிந்து கொண்டான் வாசு.

“அவ்ளோ கஷ்ட படறவர் நேரா மேல நம்ம வீட்டுக்கு வரணும். அப்பா அம்மா அக்கா தங்கச்சின்னு அழுது வடிய கூடாது” என்றாள் ஸ்ரீஜா.

“உன்கிட்ட போய் பேசினேன் பாரு என்னை சொல்லணும்? அதென்ன நம்ம வீடு, அப்ப இது யார் வீடு? நீ சரியில்லை ஸ்ரீஜா” என்றான்.

உடனே சுதாரித்துக் கொண்டவள், “எனக்கு மட்டும் உங்க மேல ஆசை இல்லையா? காலைல நீங்க வர போறீங்கங்கிற எக்சைட்மெண்ட்ல நைட் எல்லாம் தூங்கவே இல்லை. ஸ்கூட்டி விஷயத்துல அவ கூட சண்டைனு நீங்க என்னை பேசினத மறக்க முடியலை, அந்த ஆதங்கத்துலதான் அவளை பத்தி உங்களுக்கு தெரியணுமேன்னு சொல்லிட்டேன். நீங்க சிடு சிடுங்கவும் என்னென்னவோ பேசிட்டேன், தப்புதான்” என்றாள்.

வாசுவும் மனம் இளக, அவனது கையை பிடித்துக்கொண்டவள், “அங்க ரோஹித்க்கு யார் இருக்கா? நீங்களும் இங்கேயே வந்திடலாமே?” என்றாள்.

“இந்த இடத்தை பங்கு பிரிச்சா நமக்கு என்ன கிடைக்கும், ரோஹித்க்குன்னு ஏதாவது வேணும்னு சொல்லி தனியா டூப்ளக்ஸ் வீடு வாங்க வச்சு வாடகைக்கு விட்ருக்க, வயசான காலத்துல யாரை நம்பியும் இருக்க கூடாது நம்ம ஸேஃப்டிக்கு ஏதாவது வேணும்னு இடம் வாங்க வச்ச. இதுக்கெல்லாம் வாங்கின லோன் எப்படி அடைக்கிறது ஸ்ரீஜா? காலம் முழுக்க லோனுக்கே கட்ட என்னால முடியாது. அங்க இருக்க ஒர்க் கல்ச்சர் எனக்கு பிடிச்சிருக்கு, இங்க செட் ஆகுறதும் கஷ்டம். இதெல்லாம் எத்தன முறைதான் உன்கிட்ட சொல்றது?” என வாசு கேட்க, ஸ்ரீஜா பதிலே பேசவில்லை.

அவர்களை சாப்பிட அழைப்பதாக சொல்லி சென்றான் ரோஹித். அப்பா வாங்கி வந்திருந்த கார் பொம்மைகளுடன் அவனுக்கு நேரம் பறந்து கொண்டிருந்தது. அண்ணன் சாப்பிட வந்த நேரம் யுகியும் தயாராகி சாப்பிட வந்தான்.

இன்று ஒரு நாள் மட்டும் ஓய்வு எடுத்துக் கொண்டு நாளையிலிருந்து திருமண வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என தம்பியிடம் சொல்லி பொறுப்பெடுத்துக் கொண்டான் வாசு.