அதையே கணவனுக்கு கைப்பேசியில் அழைத்து கேட்டாள் அஞ்சலி.
“ஆயிரம் வேலை இருக்கும், பட்டினி கெடக்காம வெளில சாப்பிட்டேன்தான், அம்மாட்ட சொல்லிடு” என்றவன் அவளை மேலே பேச அனுமதிக்காமல் கைப்பேசியை வைத்து விட்டான்.
அஞ்சலிக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டியிருந்தது. டவுன் ஹாலில் உள்ள ஒரு புத்தக நிலையத்தில் கிடைக்கும் என இணைய வழியாகவும் தெரிந்து கொண்டாள். யுகியிடம் வாங்கி வர சொல்லலாம் என நினைத்திருந்தாள். அவன் எங்கே கேட்டான்?
மாமியாரிடம் விவரம் பகிர்ந்தவள், தானே புத்தக கடைக்கு செல்வதாக சொன்னாள்.
“இங்க பக்கம்னா பரவாயில்லை அஞ்சலி, அங்க சந்து பொந்துல உனக்கு சரியா வழி தெரியாது. யுகியே வாங்கி தருவான்” என சொல்லி, அவள் செல்ல தடை போட்டு விட்டார் அலமேலு.
இதுவரை நடத்தப் பட்ட பாடங்களுக்கு நான்கு நாட்களில் இணைய வழி தேர்வு நடக்க இருக்கிறது. கோர்ஸ் முடியும் போது இந்த மதிப்பெண்கள் அதில் பதிவிடப் படும். ஆகவே அவளுக்கு அவசியமாக தேவைப்பட்டது அந்த புத்தகம்.
யுகிக்கு அவள் அழைக்க, பிஸியாக இருப்பதாக செய்தி அனுப்பி வைத்தான். அரை மணி நேரம் கழித்து காலி கோப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு மாமியாரிடம் சென்றவள் “இது முக்கியமான ஃபைலாம், உடனே வேணுமாம் உங்க பையனுக்கு, என்னை எடுத்திட்டு வர சொன்னார்” என்றாள்.
அவரும், “கடைலேருந்து யாரையும் அனுப்பி வைக்காம உன்னை எதுக்கு வர சொன்னான், நைட் வரட்டும் பேசிக்கிறேன்” என புலம்பிக் கொண்டே அவளை அனுப்பி வைத்தார்.
அஞ்சலி டவுன் ஹால் வந்தடைவதற்குள் அவள் சொன்ன பொய் யுகி, அலமேலு இருவருக்கும் தெரிந்து விட்டது.
கூகுள் மேப் வழியாக புத்தக கடையை கண்டு பிடிக்க இயலாமல் கணவனிடமே சென்றாள் அஞ்சலி. கண்டனமாக பார்த்துக் கொண்டே வா என்றான் யுகி.
“என்ன ஷாக் ஆகல நீங்க, அத்தை கால் பண்ணியிருந்தாங்களா?” என சந்தேகமாக கேட்டாள்.
“என்கிட்ட நைட்டே சொல்லிருக்கலாம், இல்லை காலைல சொல்லிருக்கலாம். அம்மாட்ட பொய் சொன்ன சரி, எங்க போறேன்னு எனக்கு கூட தெரிய படுத்தாம கிளம்புவியா? கடைக்கு வந்திட்டியான்னு அம்மா கேட்கிறாங்க, என்ன சொல்லன்னே எனக்கு தெரியலை. டென்ஷன் பண்ற அஞ்சலி நீ” என கடிந்து கொண்டான்.
“ஸாரி, நான் உங்களுக்கு மெசேஜ் ஆவது போட்ருக்கணும். அந்த புக் இன்னிக்கு கிடைச்சாதான் நான் பிரிப்பேர் பண்ண வசதியா இருக்கும், அதான் உடனே கிளம்பிட்டேன்… பகல் நேரம், நான் பழக்க பட்ட ஊர், ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு திரும்பிடலாம்னு நினைச்சேன், ரியலி ஸாரி” என்றவளிடம் மேலும் கோவத்தை காட்ட அவனுக்கு மனமில்லை.
அம்மாவுக்கு அழைத்து அவள் வந்து விட்டதை சொன்னான். அம்மா என்ன கேட்டாரோ, “மதியம் நான் வீட்டுக்கு வரலைல ம்மா, என்னை பார்க்கனும்னு தோணிச்சாம், அதான் வந்திருக்கா” என பதில் சொன்னான்.
“சரிம்மா நான் சொல்லி வைக்கிறேன், இனிமே பொய் சொல்ல மாட்டா, ஆமாம் என் கூடத்தான் இருக்கா” என்றவன் அஞ்சலியை பார்த்தான்.
தன்னிடம் பேச கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டவள் வேகமாக மறுப்பாக தலையாட்டினாள்.
மனைவியை முறைத்துக் கொண்டே, “ரெஸ்ட் ரூம் போயிட்டா மா” என்றான். ‘நீயும் பொய் சொல்கிறாயா, நீ கொடுக்கும் இடம்தான் எல்லாம்’ என மகனை திட்டி விட்டு கைப்பேசியை வைத்தார் அலமேலு.
கண்களை சுருக்கிக் கொண்டு கணவனை மன்னிப்பாக பார்த்தாள் அஞ்சலி.
“நைட் போய் அம்மாவை என்ன சொல்லி சமாளிக்கிறது, ஏன் அஞ்சலி இப்படி பண்ற?” என அலுத்துக் கொண்டான்.
“அதான் காரணம் சொன்னீங்களே, அதுதான் நிஜம்னு அடிச்சு சொல்லிடுங்க. வேணும்னா உங்களுக்கும் என்னை பார்க்கணும் போல இருந்துச்சுனு அடிச்சு விடுங்க. நம்புற மாதிரி பேசுங்க பாஸ், நல்ல வியாபாரின்னு காட்டுங்க” என்றாள்.
‘உன்னை என்ன செய்யலாம்?’ என்பது போல தலையாட்டிக் கொண்டவன் கம்ப்யூட்டருடன் மல்லு கட்ட ஆரம்பித்து விட்டான்.
“ஹலோ! இப்படி தலையை அங்க வுட்டுட்டா நான் வந்த வேலை என்னாகிறது? அந்த புக் ஷாப் எங்கேன்னு கண்டுபிடிக்க முடியலை, ஹெல்ப் மீ ப்ளீஸ்” என்றாள்.
கத்தை காகிதத்தை அவளுக்கு காட்டியவன், “இதையெல்லாம் சிஸ்டம்ல ஃபீட் பண்ணணும். அண்ணா வர்றதுக்குள்ள எல்லாம் பக்காவா இருந்தாதான்…” என சொல்ல வந்தவன், “அதை விடு, இத முடிச்சாதான் எந்த வேலையா இருந்தாலும்” என்றான்.
எட்டி வந்து பார்த்தவள், “இப்படி பண்ணினா எப்ப முடிப்பீங்க?” எனக் கேட்டாள்.
“ஏய் ஃபாஸ்ட்டாதான் பண்றேன் நான்” என்றான்.
எக்செல் (EXCEL) ஷீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு அதன் நுணுக்கங்கள் தெரியவில்லை. அதனால்தான் நேரம் எடுத்தது. எளிதாக எப்படி செய்வது என அவனுக்கு சொல்லிக் கொடுத்தாள். ஆனாலும் அடுத்த முறை செய்யும் போது மறந்து விட்டு அவளை பார்த்தான். அவனை எழுப்பி விட்டவள் அவளே அமர்ந்து செய்ய ஆரம்பித்து விட்டாள்.
அத்தனை நளினமாக கீ போர்டில் விளையாடிய அவளது விரல்களை ரசனையாக பார்த்தான். ‘ப்பா!’ என மானசீகமாக வியந்து கொண்டான்.
“எக்செல் தனியா கோர்ஸ் படிச்சிருக்கியா என்ன நீ?” என விசாரித்தான்.
“வேறென்னலாம் படிச்ச?” என்ற அவனது கேள்விக்கு வரிசையாக பதில் சொன்னாள் அவள். சில கோர்ஸ் எல்லாம் எதற்கு என்ன வகை என்று கூட அவனுக்கு தெரியவில்லை.
“சரி, உனக்கு என்ன புக் வேணும்னு சொல்லு, நான் வாங்கிட்டு வர்றேன்” என்றான்.
“அந்த ஷாப் எங்கேன்னு எனக்கு தெரிஞ்சுக்கணும், நானும் வர்றேன் வெயிட்டீஸ் ப்ளீச்” என அவள் சொல்ல, அவள் வேலை செய்ய தனிமை கொடுத்து விட்டு அறையை விட்டு வெளியேறி விட்டான்.
அடிக்கடி அலுவல் அறையை பார்த்த யுகியின் மனதில் மிடுக்கும் துடுக்கும் நிறைந்த நல்ல திறமையான பெண்ணை வீட்டோடு வைத்திருப்பது நியாயமே இல்லை என நெருடல்.
அஞ்சலி வேலையை முடிக்கவும் அவளையும் அழைத்துக் கொண்டே புத்தக கடைக்கு சென்றான்.
“இந்த வழியாதான் வந்தேன், ஆனா என் பார்வைக்கு இந்த ஷாப் படல பாருங்களேன்” என்றாள்.