“ம்ம்… ஊர் போய் சேர்ந்த மாதிரிதான், ஒழுங்கா பின்னால போ” என அதட்டிக் கொண்டே காரை நிறுத்தினான்.
“ஜஸ்ட் ஹால்ஃப் அன் ஹவர், உங்களுக்கு கம்பெனி கொடுக்க வந்திடுறேன்” என சொல்லி பின்னிருக்கைக்கு சென்று படுத்தவள் நன்றாக உறங்கி விட்டாள்.
இருவரும் தூத்துக்குடி பயணிக்கிறார்கள். இரவில் அங்கு ஓட்டலில் தங்கி விட்டு குல தெய்வ கோயிலுக்கு சென்று அழைப்பிதழ் வைத்து வணங்கி விட்டு அந்தப் பக்க உறவுகளையும் திருமணத்துக்கு அழைக்க இருக்கிறார்கள்.
சோர்ந்து போன யுகி தேநீருக்காக காரிலிருந்து இறங்கினான். ஏசி வேண்டாம் என முன் கூட்டியே மறுத்திருந்தாள் அஞ்சலி. ஆகவே ஜன்னல் கண்ணாடியை முழுதும் ஏற்றாமல் பாதி திறந்த நிலையில்தான் வைத்திருந்தான்.
யுகியின் கண் பார்வையில்தான் இருந்தது கார். காரை ஒட்டி நடந்து கொண்டிருந்த இரண்டு ஆடவர்கள் அஞ்சலியை கண்டு விட்டு அங்கேயே தேங்கி நின்று விட்டனர். ஆட்கள் சரியில்லை என்பதை அவர்களை பார்த்த உடனேயே அறிந்து கொள்ளலாம்.
தேநீரை அப்படியே வைத்து விட்டு யுகி வேகமாக காரை நெருங்க, அஞ்சலிக்கும் உறக்கம் கலைந்து விட்டது. ஜன்னல் வழி தன்னை வெறித்து நோக்கும் ஆண்களை கண்டு பதறி எழுந்தாள்.
அவள் எழுந்த பிறகும் கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல் அவளை பார்த்திருந்தனர் அந்த கேடு கெட்டவர்கள். வேகமாக தன் ஆடையை சரி செய்து கொண்டவள் கோவமாக அவர்களை பார்த்தாள். சற்றும் அதிரவில்லை அந்த இழிபிறவிகள்.
அதற்குள் “என்னங்கடா இங்க வேலை உங்களுக்கு?” என அதட்டிக் கொண்டே வந்து நின்றான் யுகி. ஒரு நொடி அதிகமாக அவர்கள் அங்கு நின்றிருந்தாலும் யுகியின் கையால் அடி வாங்கியிருப்பார்கள், ஆனால் சுதாரித்துக் கொண்டவர்கள் அதி விரைவாக அங்கிருந்து சென்று விட்டனர்.
அஞ்சலியின் முகம் வெளிறிப் போய் விட்டது. கதவை திறந்து காரின் உள்ளே யுகி வர, “எங்க போயிட்டீங்க நீங்க? இப்படித்தான் என்னை தனியா விட்டுட்டு போவீங்களா?” என சீற்றமாக கேட்டாள் அவள்.
“டீ குடிக்க போனேன் அஞ்சலி, இங்கதான் பக்கத்திலதான் இருந்தேன்” என அவன் சொல்லியும் ஏற்றுக் கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளின் உடல் நடுங்குகிறதா என அவளின் கையை தொட்டு பரிசோதித்து பார்த்தான். நல்ல வேளையாக அப்படியெல்லாம் ஏதுமில்லை.
அவள் என்னவென பார்க்க, “ஒன்னும் இல்லை” என சொல்லி கையை விலக்கினான். சற்று நேரம் அவள் பக்கத்திலேயே அமைதியாக அமர்ந்திருந்தான்.
“காரை எடுக்க வேண்டியதுதானே” என யாருக்கோ சொல்வது போல சொன்னாள்.
“ஒரு டீ சாப்பிடாம என்னால டிரைவ் பண்ண முடியாது, நீயும் வா ரெஸ்ட் ரூம் போகணும்னா போய்ட்டு ரெண்டு பேரும் சேர்ந்தே டீ சாப்பிடலாம். வா வா” என அழைத்தான்.
உடனே அமைதியாக இறங்கிக் கொண்டாள். ஆனால் அவனுடன் பேசுவதை தவிர்த்தாள்.
மீண்டும் காரில் பயணப் பட்ட போது அவனருகில்தான் அமர்ந்தாள். ஜன்னல் பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
மியூசிக் பிளேயர் போட்டு விட்டவன் அடுத்தடுத்த பாடலை மாற்றி அவன் நினைத்த பாடல் வரவும் ஒலிக்க விட்டான். ‘அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி’ பாடல் இசைத்துக் கொண்டிருக்க, பாடலை நிறுத்தியவள், “நான் ஒன்னும் குழந்தை இல்லை” என்றாள்.
“உனக்காக போட்டு விட்டதா நீயே நினைச்சிப்பியா? நல்லாருக்கும் அந்த பாட்டு, போடு” என்றான் யுகி.
“ஆள பாரு, நான் கோவமா இருக்கேன், எனக்காக போடலையாம்!” என சொல்லிக் கொண்டே பாடலை போட்டாள்.
“சின்ன விஷயத்துக்கெல்லாம் கோவ பட்டா நான் என்ன செய்ய முடியும்? உன் கோவத்தை ஒதுக்கி வச்சா இந்த ட்ரிப் நல்லா என்ஜாய் பண்ணலாம், நீதான் மனசு வைக்கணும்” என்றான்.
சில நிமிடங்கள் அமைதியாகவே இருந்தவள், “என்னை எழுப்பி விட்டுட்டு நீங்க போயிருக்கலாம், இல்லைனா விண்டோவையாவது மூடி வச்சிருக்கலாம்” என்றாள்.
“நாலு அடி போட்ருக்கலாம். என் விஷயத்துல மட்டும் தப்பு பண்றவனுங்களுக்கு தண்டனைன்னு எதுவுமே கிடைக்கிறது இல்லை”
“ஓடிப் போனவனுங்க பத்தி பேசி இப்ப உள்ள நேரத்தை ஸ்பாயில் பன்னிக்கணுமா சொல்லு, இனிமே ஜாக்கிரதையா இருக்கேன். நீ கொஞ்ச நேரம் அமைதியா பாட்டு மட்டும் கேளு” என்றான்.
சிறிது நேரத்தில் அவளும் இயல்பாகி விட்டாள். திடீரென ஏதோ பாடலின் இடையில் உள்ள வரிகளை பாடி என்ன பாடலென கண்டு பிடிக்கும் படி அவனிடம் கூறினாள். யுகிக்கு தெரியவில்லை.
“ஃபேமஸ் சாங், இது போய் தெரியாம இருப்பீங்களா?” எனக் கேட்டாள்.
மின் உபயோக சாதனம் ஒன்றின் ஸ்பேர் பார்ட் பெயரை சொல்லி, அது எதனுடையது என இவனும் பதில் கேள்வி கேட்டான். உடனே அவளால் சொல்ல முடியவில்லை.
“டெயலி நீ யூஸ் பண்றதுதான், இது கூட தெரியலையா?” என அவன் கேட்டு முடிப்பதற்குள், கைப்பேசியில் கூகிள் செய்து சொல்லி விட்டாள் அவள்.
“அப்ப நானும் கூகிள்ல பார்த்து சொல்லியிருப்பேனே” என்றான்.
“உங்களை யார் வேணாம்னு சொன்னா?”
“டிரைவ் பண்ணிகிட்டே ஃபோன் பார்த்து பாட்ட கண்டுபிடிக்கணும் நான், எம்மேல என்ன கோவம் அஞ்சலி, கார்ல நீயும் இருக்க” என பாவமாக சொன்னான்.
அப்படியும் அவள் விடவில்லை. அவள் பாடிக் காண்பித்த எந்த பாடலையும் யுகியால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை.
“போங்க, உங்களோட விளையாடுறது சரியான போர்” என சொல்லி அந்த விளையாட்டை அவளாகவே நிறுத்திக் கொண்டாள்.
வழியில் ஏதோ கல்லூரி பேருந்து நின்றிருந்தது. சுற்றுலா செல்கிறார்கள் போலும். பேருந்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்க, சரி செய்து கொண்டிருந்தனர். கல்லூரி இளவட்டங்கள் வெளியே நின்று ஆடி பாடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
அஞ்சலி அவர்களை ரசித்து பார்த்தாள். அருகில் சோளம், கடலை அவித்து விற்கப் பட்டுக் கொண்டிருக்க, அது வாங்குவதை சாக்காக்கி அங்கேயே காரை நிறுத்தி விட்டான் யுகி.
பத்து நிமிடங்களுக்கு பின் மீண்டும் பயணம் தொடர்ந்தது. அஞ்சலிக்கு அவளது கல்லூரி கால நினைவுகள்.
ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்ற போது இவளுக்கு ஒரே வாந்தியாம். தன்னை மட்டும் அறையில் விட்டு விட்டு மற்றவர்கள் நன்றாக குதூகலித்தார்கள் என குறையாக சொன்னாள்.
வால்பாறை சென்ற போது யானைக் கூட்டம் பார்த்து பயந்து போனதை பகிர்ந்தாள்.
உற்சாக மனநிலையில் இருந்தவள் சிறு வயதில் சென்ற சுற்றுலா கதையையும் விட்டு வைக்கவில்லை. குடும்ப உறுப்பினர்களோடு வேனில் பயணித்த கதையை சொன்னாள். குளம் ஒன்றில் தனுஷ் தன்னை தள்ளி விட்டதை நினைவு கூர்ந்தவள் அப்படியே பேச்சை நிறுத்தி விட்டாள்.
“அஞ்சலி என்ன இது? ஃப்ளோல அவனை பத்தி பேசிட்ட, அதை அப்படியே விடணும். உடனே அப்செட் ஆகிடுவியா?” எனக் கேட்டான்.
“அதில்லங்க, அவனுக்கு என்னவோ சின்னதிலிருந்தே என்னை பிடிக்காது. நானும் அவனை கண்டாலே தள்ளி போயிடுவேன். ஏன் அப்படி பண்ணினான்? நான் அவனுக்கு எந்த கெடுதலும் செய்யலங்க. அவன் நல்லாருக்கான், நாந்தான் கஷ்ட படுறேன், இப்ப உங்களையும் சேர்த்து கஷ்ட படுத்துறேன்” என்றாள்.
யுகி அவளது முகத்தை பார்த்தான். அழவெல்லாம் இல்லை அவள். மனதில் உள்ளதை அவனிடம் சொல்கிறாள்.
“நான் என்ன கஷ்ட படுறேன்? அப்படிலாம் இல்லை” என்றான்.
“ஹை சும்மா சொல்லக்கூடாது, எனக்கு தெரியும்” என்றாள்.
“என்ன தெரியும்?” என அவன் கேட்க, அவளோ பதில் தெரிந்தும் சொல்லும் வகை தெரியாமல் விழித்தாள்.