சம்பந்திக்கு, பிறந்த பெண்ணுக்கு எல்லாம் ஆடை எடுத்து முறை செய்வதை சுட்டி காட்டி பேசிய புகழ், பணமாக கொடுத்து விடுகிறோம், பிடித்த மாதிரி எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

யுகி, அஞ்சலியின் திருமணத்தின் போதே இதற்காக எல்லாம் கடைக்கு சென்று உடைகள் தேர்வு செய்ய அலமேலுவுக்கு சிரமமாகத்தான் இருந்தது. ஆகவே சரி என்பது போல கணவரை பார்த்தார்.

“அதுவும் சரிதாங்க. இங்க குல தெய்வம் கோயிலுக்கு பத்திரிக்கை வச்சிட்டுத்தான் உங்க வீட்டுக்கு வந்து வைக்கணும். வாசு அதுக்குள்ள வர்றானான்னு தெரியலை, இல்லைனா யுகியும் அஞ்சலியும் வருவாங்க. முறை செய்றதுக்கு நாங்களும் பணமா கொடுத்திடுறோம்” என வெங்கட்டும் சொன்னார்.

யுகியின் பெற்றோருக்கு பணம் வைத்து கொடுத்த புகழேந்தி தம்பதியினர் ஸ்ரீஜாவுக்கும் கொடுத்தனர். முறையில்லையே என அலமேலு சொல்ல, அஞ்சலி போலவே ஸ்ரீஜாவும் இந்த வீட்டில் வாழ வந்த பெண், அவளும் எங்கள் பெண் போலத்தான் என்றார் புகழேந்தி.

வெங்கட்டும் ‘ஆசை படுகிறார் செய்யட்டும்’ என்றார்.

 ஸ்ரீஜாவோ வாங்க மறுத்து விட்டாள். “என்கிட்ட இருக்கிறதை தினம் ஒன்னுன்னு போட்டா கூட வருஷம் முழுக்க போட்டுக்கலாம். எனக்கெதுக்கு நீங்க கொடுக்கிறது? உங்க பொண்ணுக்கு மட்டும் செய்ங்க, எனக்கு வேணுங்கிறது செய்ய என் அப்பாம்மா இருக்காங்க, என் புருஷன் இருக்கார். அடுப்புல கொழம்பு கொதிக்குது, நான் கிளம்பறேன்” என பட படத்து விட்டு மாடிக்கு சென்று விட்டாள்.

யாருக்கும் என்ன சொல்வதென தெரியவில்லை.

“தப்பா எடுத்துக்க வேணாம் மாமா” என்றான் யுகி.

“அதெல்லாம் இல்லை மாப்ள, இதால வேற ஏதும் பிரச்சனை வந்திட கூடாதுன்னுதான் யோசனை” என்றார் புகழ்.

முதல் நாளே உறவுகள் வந்து விடுவார்கள், தங்க வைக்க இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என வெங்கட்டும்  பேச்சை திசை திருப்பி விட்டார்.

அஞ்சலிக்கும் யுகிக்கும் மட்டும் ஆடை எடுத்துக் கொள்ளவென பணம் வைத்து கொடுத்தனர். லட்ச ரூபாய் என்பதை அறிந்து ஆட்சேபம் தெரிவித்தான் யுகி.

“ஒரே பொண்ணு அஞ்சலி, பட்டெல்லாம் இப்ப அந்த விலை விக்குதே, மறுக்காதீங்க மாப்ள” என்றார் சித்ரா.

அவர்கள் பெண்ணுக்கு செய்வதில் நாம் என்ன கருத்து சொல்வது என இருந்து கொண்டனர் வெங்கட் தம்பதியினர்.

யுகி அஞ்சலியை பார்க்க, “இந்த முறை பத்தி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. உங்க முடிவுதான்” என வெளிப்படையாகவே சொல்லி விட்டாள் அவள்.

அஞ்சலியின் பெற்றோரும் மறுத்து விடுவானோ என பரிதவிப்பாக பார்த்திருக்க, சரியென சொல்லி அஞ்சலியின் கையிலேயே கொடுத்து கப்போர்ட்டில் வைக்க சொன்னான்.

அஞ்சலியின் பெற்றோர் புறப்பட்டு சென்ற பின், “நீ ஏதோ ஸ்ரீஜாவை சொல்லியிருக்க, எதுவா இருந்தாலும் வெளில காட்டிக்காம இருக்கவும் தெரியல உனக்கு. அஞ்சலி ஒன்னு செஞ்சா ஸ்ரீஜாவையும் கூப்பிட்டு இன்னொன்னு செய்ய சொல்லணும். நீ நடந்துகிட்டது சரியில்லை, அதான் ஸ்ரீஜாவும் அப்படி நடந்துகிச்சு போல” என மனைவியை குறை சொன்னார் வெங்கட்.

“எதுவுமே தெரியாம பேசாதீங்க. அவளை நான் பார்த்துக்கிறேன்” என்றார் அலமேலு.

“எதுவும் சொன்னாதானே எனக்கு தெரியும். அதைத்தான் யாரும் செய்ய மாட்டீங்களே. அஞ்சலி நீ சொல்லும்மா என்ன ஸ்ரீஜாவுக்கு பிரச்சனை இங்க?” என சின்ன மருமகளிடம் கேட்டார் வெங்கட்.

அவள் தன் கணவனை பார்த்தாள்.

“அப்பா… அப்பா… இவளை கேட்டா இவளுக்கு என்ன தெரியும். அது… ரோஹித்தை ஒழுங்கா கவனிக்கிறது இல்லைனு அம்மா ஏதோ சொல்லியிருக்காங்க, அதான்” என சமாளித்தான் யுகி.

அலமேலுவும் அப்படித்தான் என சொல்லி கணவரை அறைக்கு அனுப்பி வைத்து விட்டார்.

அஞ்சலி இணைய வகுப்பில் கலந்து கொள்ள அவளது அறைக்கு செல்ல அவளிடம் வந்தான் யுகி.

“அண்ணிக்கும் லட்ச ரூபா கொடுக்க இருந்தாங்களா என்ன?” என விசாரித்தான்.

ஒரு நொடி யோசித்தவள், “இருக்காது” என்றாள்.

“நல்ல வேளை, அவங்களுக்கு கொடுத்ததை வாங்கியிருந்தா நமக்கு கொடுக்கிறது பார்த்திட்டு அதை வச்சு பாலிடிக்ஸ் பண்ணியிருப்பாங்க” என்றான்.

“பிரச்சனை பண்ணணும்னு முடிவு பண்ணிட்டாங்கன்னா அவங்க இல்லாத காரணத்தை கூட கண்டு பிடிப்பாங்க. நீங்க எல்லாரும் ஏன் இவ்ளோ பயப்படுறீங்க? ஒருநாள் இல்லை ஒரு நாள்…” என அவள் சொல்லிக் கொண்டிருக்க, வேகமாக அவளின் வாயை மூடினான்.

பட்டென அவனது கையை விலக்கி விட்டவள், “என் பாய்லிங் பாயிண்ட் எப்ப ரீச் ஆகுமோ அன்னிக்கு யாரும் என்னை கண்ட்ரோல் பண்ண முடியாது” என்றாள்.

“கிளாஸ்’க்கு டைம் ஆகுது பாரு” என சொல்லி அவளின் கவனத்தை மாற்றி விட்டே கடைக்கு புறப்பட்டான் யுகி.

பெரிய மருமகளின் செயலில் அலமேலுவுக்கு மனம் ஆறவே இல்லை. எப்போதுமே மகனிடம் இவளை பற்றி குறை சொல்ல மாட்டார்தான். அதனால்தான் இவளின் ஆட்டம் அதிகரிக்கிறது என நினைத்தவர் உடனடியாக வாசுவுக்கு அழைத்து விட்டார்.

ஸ்ரீஜா அஞ்சலியிடம் என்னை பேசினாள் என்பது தெரியாத காரணத்தால் அதை மட்டும் சொல்லவில்லை. ஸ்கூட்டி பிரச்சனை, இருவரும் பேசிக் கொள்வதில்லை என சொல்லி, இன்று அவள் நடந்து கொண்டதையும் வாசுவிடம் சொல்லி விட்டார்.

அலுவலகம் கிளம்பிக் கொண்டிருப்பதாக சொன்ன வாசு, இரவில் அவளிடம் பேசுகிறேன் என சொன்னான்.

சொன்னது போலவே இரவில் மனைவியை கண்டித்தான் வாசு. நீ இப்படி நடந்து கொள்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றான்.

ஸ்ரீஜாவின் வீட்டினருக்கு என்ன தேவையென்றாலும் உடனே செய்து கொடுத்து விடும் வாசு, மனைவியும் தன் குடும்பத்தினரிடம் இணக்கமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பான். ஆகவே இப்போது கடுமையாக பேசி விட்டான்.

தன் தரப்பை சொல்கிறேன் என ஆரம்பித்தாள் ஸ்ரீஜா.

ஸ்கூட்டி எடுத்து சென்றது எனக்கு தெரியாது, இனி சொல்லி விட்டு எடுத்து செல், அதற்கு ஏற்றது போல நான் வெளியில் போகும் நேரத்தை மாற்றிக் கொள்வேன் என நல்ல விதமாகத்தான் நான் அஞ்சலியிடம் சொன்னேன்.

நான் நினைத்தால் உடனே புதிது வாங்கிக் கொள்வேன், இந்த ஓட்டை வண்டியை எடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என அஞ்சலிதான் தலைகனத்தோடு பேசினாள்.

நீங்கள் வாங்கிக் கொடுத்த பொருளை அவள் உதாசீனப் படுத்தி பேசியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பார்த்து பேசு என கோவமாக சொன்னேன்.

கோவமாக என்னை திட்டியவள் ஸ்கூட்டியையும் என் மீது பிடித்து தள்ளி விட்டாள். நந்தினி அவளது அண்ணனை மணக்க போவதால் அத்தை கூட  அவள் பக்கமாகத்தான் பேசுகிறார். யுகியையும் மயக்கி வைத்திருக்கிறாள் அவள்.

மாமா ஒருவர்தான் நியாயவாதி, ஆனால் அவர் உடல்நிலை கெட்டிருக்கும்  இந்த நேரத்தில் அவரிடம் இதை எப்படி சொல்வேன். வெளிநாட்டில் உழைக்கும் உங்களின் நிம்மதி கெட்டு போகுமே என்றுதான் உங்களிடம் கூட நான் சொல்லவில்லை என அழகாக ஜோடித்துக் கூறினாள் ஸ்ரீஜா.

“அஞ்சலி பத்தி நல்ல விதமாதான் அம்மா சொன்னாங்க. என்கிட்டருந்து தப்பிக்க வேணும்னு அந்த பொண்ண பத்தி தப்பா பேசாத ஸ்ரீஜா” என்றான் வாசு.

“போதுங்க… நீங்களே என்னை நம்பலைனா நான் ஏன் உயிரோட இருக்கணும்? ஏதோ உங்க புள்ளை அம்மா இல்லாம அநாதை ஆகிட கூடாதுன்னுதான் இங்க எல்லாத்தையும் நான் பொறுத்துகிட்டு வாழறேன்”  என அழுதாள் ஸ்ரீஜா.

“நேர்ல இருந்தேன்னு வை, என்ன சொல்லிட்டேன்னு இப்படி பேசுற?” என அதட்டினான் வாசு.