“வேலைல இருக்கிறவங்கள தொந்தரவு பண்ணுவியா? மாமா கூப்பிடற மாதிரி இருக்கு” என சொல்லி அவளிடமிருந்து தப்பித்து தன் அறைக்கு சென்று விட்டார் அலமேலு.
சற்று நேரத்தில் அஞ்சலிக்கு அழைத்த யுகி, “புளுகு மூட்டை, ‘உம்பொண்டாட்டிக்கு ஒன்னும் வாங்கி தராம என் மானத்தை ஏன்டா வாங்குறே?’ன்னு அம்மா சத்தம் போடுறாங்க. இதுல பட்ட பேர் வேற, சகிக்கல. உன்னை என்ன பண்ணலாம்?” எனக் கேட்டான்.
“ஈவ்னிங் வரும் போது கை நிறைய பையும் பை நிறைய ட்ரெஸ் ஜுவல்ஸ்னும் வாங்கிட்டு வாங்க. தாராள பிரபுன்னு உங்க பேரை மாத்திடுறேன்” என்றாள்.
“இந்த பேர் எனக்கு பிடிக்கல அஞ்சலி”
“அப்ப கஞ்சேந்திரன் தான்”
“உன் கோர்ஸ், ஸ்கூட்டின்னு இந்த மாசம் பட்ஜெட் தாண்டி செலவு பண்ணியும் இப்படி பேர் வைப்பியா?”
“சொல்லி காட்டுறீங்களா?” என அவள் கேட்கவும் தவறாக எடுத்துக் கொண்டாளோ என பதறி விட்டான்.
“அப்படிலாம் இல்லை அஞ்சலி. விளையாட்டாதானே பேசிட்டு இருக்கோம்?” என கேட்டவனின் குரலில் தெரிந்த அதிர்வில் எதிர்முனையில் கல கலத்து சிரித்தாள் அஞ்சலி.
“செகண்ட்ஸ்ல அல்லு கழண்டு போச்சு. வை வை” என பேச்சை முடித்துக் கொண்டான்.
அடுத்து வந்த நாட்களில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் வேலை ஆரம்பமானது. வெங்கட், அலமேலு இருவரது பக்கத்திலுமே உறவுகள் அதிகம். அழைப்பிதழில் எல்லா பெயர்களையும் விட்டு விடாமல் போட வேண்டும்.
யுகியின் திருமண பத்திரிக்கையை மாடலுக்கு வைத்துக்கொண்டு மாமனாரிடம் சந்தேகம் கேட்டு அஞ்சலிதான் எழுதினாள்.
யுகியின் திருமணத்தின் போது எல்லாம் அவன்தான் செய்து கொண்டான். இப்போது அச்சகம் செல்ல ப்ரூஃப் பார்க்க எல்லாம் அஞ்சலிதான். அழைப்பிதழ் தயாராகி வரவும்தான் யுகி பார்த்தான்.
திருமண நாளன்று மாலையில் பெண் வீட்டில் வரவேற்பு நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளையும் மாமனாரிடம் கேட்டு கேட்டு அஞ்சலியே பார்த்துக் கொண்டாள். மருமகளை நினைத்து வெங்கட்டுக்கு அளவில்லாத பெருமை.
அம்மா மூலமாக வாசுவுக்கும் எல்லாம் தெரிந்தது. மனைவியிடம் சொன்னவன், “உன்னை எதுக்கும் அஞ்சலி கூப்பிட்டா சாக்கு சொல்லாம கூட போயிட்டு வா. எல்லா வேலையையும் அந்த பொண்ணு தலையிலேயே கட்டிடாதே” என்றான்.
“அவளுக்கு ஊரை சுத்தறதுன்னா ரொம்ப இஷ்டம், அதான் அலையுறா, என்னையும் அவ கூட சேர்த்து விட்டா குடும்பம் விளங்கின மாதிரிதான்” என நொடித்தாள் ஸ்ரீஜா.
“என்னடி பேச்சு இது? உங்கிட்ட சொன்னேன் பாரு! நல்லா வீட்லேயே உட்கார்ந்துக்க, ஒழுங்கா அம்மாக்காவது வீட்ல ஹெல்ப் பண்ணு” என கடுப்பாக சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான் வாசு.
ஏற்கனவே மாமனாரும் மகனும் அஞ்சலி பாட்டு பாடிக் கொண்டிருக்க, கணவனும் சேர்ந்து கொண்டதில் அவளுக்கு அப்படியொரு எரிச்சல்.
“வானத்திலிருந்து வந்திறங்கி இருக்கா மகாராணி! ஒருத்தர பார்த்தாப்ல அவளை பத்தியே பேசி கடுப்பாக்கிக்கிட்டு!” என புலம்பிய ஸ்ரீஜா, தன் அம்மாவுக்கு அழைத்து புரணி பேச ஆரம்பித்து விட்டாள்.
அலமேலுவே மகனிடம், மருமகளை வெளியில் எங்கேயாவது அழைத்துக் கொண்டு போ, அவளுக்கு பிடித்தது ஏதாவது வாங்கிக் கொடு என சொன்னார்.
“கடைய விட்டுட்டு எப்படிம்மா போக?” என்றான் யுகி.
“உங்கப்பா அப்படித்தான் கடை வேலைன்னே இருந்திட்டார். இதோ இப்ப வீட்ட விட்டே போக முடியாத நிலை. கொஞ்சமாச்சும் புதுசா கல்யாணம் ஆனவன் மாதிரி இரு. இப்ப கிண்டலா சொல்ற உன் பொண்டாட்டி அப்புறம் குறையா சொல்லிக் காட்டுவா” என்றார் அலமேலு.
அவரின் உண்மையான நோக்கம் மருமகள் மகனை குறை சொல்லி விடக்கூடாது என்பதுதான். புரிந்தாலும், “பார்க்கிறேன் மா” என சொன்னதோடு நிறுத்திக் கொண்டான் யுகி.
அடுத்த இரண்டு நாட்களில் மதிய உணவுக்காக வீடு வந்திருந்தவன் சாப்பிட்டுக் கொண்டே கடையின் சி சி டி வி காட்சிகளை கைப்பேசி வாயிலாக பார்த்துக் கொண்டான்.
“எப்படியும் அங்கதானே ஓட போறீங்க, சாப்பிடுற நேரத்துல அதை ஓரமா வைக்க கூடாதா?” எனக் கேட்டு கைப்பேசியை பிடுங்கி வைத்தாள் அஞ்சலி.
“கடைல எல்லாம் ஓகேதான் அஞ்சலி, சாப்பாடு முடிச்சிட்டு நம்ம கந்தனை பார்த்திட்டு வருவோமா?” எனக் கேட்டான் யுகி.
‘யாரு உங்க ஃப்ரெண்ட்டா?’ என கேட்பாள் என அவன் நினைத்திருக்க,
“நானும் அவரை பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சு. போலாம், ஆனா படில ஏறித்தான் போகணும்” என்றாள்.
“மருதமலையைத்தான் சொன்னேன்னு எப்படி கண்டுபிடிச்ச?”
“கந்தன் பேர் கேட்ட உடனே அவர்தான் என் நினைவுக்கு வந்தார்” என்றாள்.
“ஆனா படில போறது உனக்கு சரி படுமான்னு யோசிச்சுக்க. நான் அரை மணி நேரத்துல ஏறிடுவேன், உனக்கு கஷ்டமா இருக்க போகுது” என்றான்.
“இருபது நிமிஷத்துல ஏறிடுவேன் நான்” என அவள் சொல்ல, சரியென சொல்லி விட்டான்.
இரண்டரை மணிக்கெல்லாம் மருதமலை வந்து விட்டனர். மேகம் சூழ்ந்த வானம் வெயிலை முற்றிலும் மறைத்து விட்டது.
பேசிக் கொண்டே படிகளில் ஏறினார்கள். பாதியிலேயே முடியாமல் அமர்ந்து விட்டாள் அஞ்சலி. எங்கே கேலி பேசுவானோ என அவள் நினைக்க, அப்படியெல்லாம் செய்யாமல், அவள் ஆசுவாசம் கொள்ள அவகாசம் கொடுத்து அவனும் அவளருகில் அமர்ந்து கொண்டான்.
அதற்கு மேல் படியேற அவளுக்கு சிரமமாகி விட்டது. “இன்னும் கொஞ்ச தூரம்தான் அஞ்சலி, வா வா” என உற்சாக படுத்திக் கொண்டே அவளை அழைத்து சென்றான்.
கல்லூரி படிக்கும் காலத்தில் தோழிகளோடு அடிக்கடி இங்கு வருவாளாம். சிலர் நடக்க மறுத்தால் கூட பேசி பேசியே அவர்களை சம்மதிக்க வைத்து நடந்தேதான் மேலே செல்வார்களாம். இந்த முறை இப்படி சோர்ந்து போனது எனக்கே வியப்பாக இருக்கிறது என அவனிடம் சொல்லிக் கொண்டே நடந்தாள்.
“டச் விட்டு போனதால இருக்கும். முடியறப்பல்லாம் வருவோம், சீக்கிரம் பழைய ஃபார்முக்கு வந்திடுவ” என்றான்.
அந்த நேரம் கூட்டம் அதிகமில்லாத காரணத்தால் நன்றாக தரிசனம் செய்தனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு இங்கு வருகிறாள். தன்னை பார்த்து இறைவன் நலம் விசாரிப்பது போலவே அவளுக்கு இருந்தது. கைகளை குவித்துக் கொண்டவள் கண்களை மூடவே இல்லை.
பார்த்த உடன் உள்ளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தும் கருணை கொண்ட பெருமானின் உருவத்தை கண்கள் சிமிட்டாமல் பார்த்தாள்.
“நீயிருக்க எனக்கு ஏன் அப்படியெல்லாம் நடந்தது?” எனக் கேட்டு முறையிட்டாள்.
‘என் பக்தர்களை சோதிப்பேனே தவிர அப்படியே கை விட்டு விட மாட்டேன், நான் இருக்கிறேன்’ என அவர் சொல்வது போலவே உணர்ந்தவளின் கண்களில் கட கடவென கண்ணீர். அவளது அழுகையை பார்த்தாலும் ஏதும் சொல்லவில்லை யுகி.
அவளாகவே கண்களை துடைத்துக் கொண்டு இறைவனை பார்த்து சிரித்தாள். அதையும் பார்த்திருந்த யுகியிடம் மெல்லிய புன்னகை.
‘அய்யா சாமி உங்ககிட்ட ஏதோ பஞ்சாயத்து பேசிட்டு இருக்கான்னு நல்லா தெரியுது, இவளை பழைய படி மாத்தி எங்களை நல்லா வாழ வைக்க வேண்டியது உங்க பொறுப்புதான் சொல்லிட்டேன்’ என அவனும் தன் பங்குக்கு வேண்டிக் கொண்டான்.
கீழே செல்லும் போதும் நடைப் பயணம்தான். மிளகாய் தூவிய கலாக் காய்களை ஆசையாக வாங்கிக் கொண்டாள் அஞ்சலி. அவள் ரசித்து சாப்பிடுவதை கண்டவனுக்கு முன்னர் நெல்லிக்காய் சாப்பிட்டதும் நினைவு வந்தது.
“உனக்கு புளிப்பா உள்ளதுதான் பிடிக்குமா?” எனக் கேட்டான்.
யோசித்தவள், “அப்படித்தான் போல” என்றாள்.
தனக்கு நாவல் பழம் வாங்கிக் கொண்டவன் அவளிடமும் நீட்டினான். எடுக்காமலேயே அவள் அவனை பார்க்க, “கைல எடுத்து சாப்பிடுறேன் அவ்ளோதான், என் எச்சில் எல்லாம் இல்லை, ரொம்ப பண்ணாம எடு” என்றான்.