பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -10

அத்தியாயம் -10

நந்தினியின் அலுவலகத்திற்கு வந்திருந்தான் கார்த்திக். எதற்காக இங்கு வந்தான் என எரிச்சல் பட்டவள் தவிர்க்க முடியாமல் பார்க்க சென்றாள்.

கார்த்திக்கின் பிறந்தநாள் இன்று. தங்கை, வருங்கால மனைவி இருவரிடமிருந்தும் எந்த வாழ்த்து செய்தியும்  அவனுக்கு வந்து சேரவில்லை. மறந்து விட்டாளா அல்லது அந்தளவு வெறுத்து விட்டாளா என கேட்டறிந்து கொள்ளத்தான் இங்கு வந்திருக்கிறான்.

அவனது பிறந்தநாளை நந்தினி ஒன்றும் மறந்திருக்கவில்லை. அவன் மீதான கோவம் குறையாமலிருக்க கடமையாக என்ன வாழ்த்து சொல்வது எனதான் அமைதியாக இருந்து விட்டாள்.

அவனிடமும் அதையே  சொன்னாள். அவன் முகம் விழுந்து விட்டது. பிறந்தநாள் அதுவுமாக இப்படி ஆகிறானே என தோன்றினாலும் அவனை மன்னிக்க இயலாமல், “நிறைய வேலை இருக்கு, கிளம்புறேன் நான்” என்றாள்.

“எனக்கு மட்டும் எந்த வேலையும் இல்லைனு நினைச்சியா நந்து?” எனக் கேட்டான்.

“அப்ப நீங்களும் போய் உங்க வேலையை பாருங்க” என்றாள்.

“ஒன்றரை மாசத்துல நம்ம கல்யாணம், இப்படியே என்னை இக்னோர் பண்ணிட்டு எவ்ளோ நாள் இருக்க முடியும் உன்னால?”

“ஆமால்ல, சீக்கிரம் நம்ம கல்யாணம். ஹ்ம்ம்… என் அண்ணன் மட்டும் அஞ்சலிய கல்யாணம் பண்ணியிருக்கலைனா இந்நேரம் நீங்க வேற யாரோட ஹஸ்பண்ட்டாவோ  இருந்திருப்பீங்க!” என கேலியாக சொன்னாள்.

“இந்த ஜென்மம் உனக்கு மட்டும்தான் நான் ஹஸ்பண்ட். அது நான் சொன்னதுக்கு உன்னை சம்மதிக்க வைக்கன்னு எத்தன தடவதான் சொல்றது? பர்த்டேக்கு விஷ் பண்ண வேணாம், அட்லீஸ்ட் இவ்ளோ கடு கடுன்னு இல்லாமலாவது இருக்கலாம். லாஸ்ட் இயர் இதே நாள் லீவ் போட்டுட்டு என்னை பார்க்க வந்த, நான் வெளில வர்ற மூட்ல இல்லைனு சொல்லவும் கோச்சுகிட்ட. இன்னிக்கு நானே வந்திருக்கேன், நீ அலட்சியம் பண்ற” என்றான்.

கடந்த வருடம் அஞ்சலி மீதான கவலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு எல்லாம் சம்மதிக்கவில்லை கார்த்திக். அதற்கு முந்தைய வருடம் இருவரும் நாள் முழுக்க சுற்றியிருந்தார்கள். அந்த நாட்கள், அந்த காதல், அந்த பிணைப்பு எல்லாமே ஏன் மாறிப் போனது என்ற நினைவில் பெரிதாக மூச்சு விட்டாள் நந்தினி.

“இங்கேயே இரு” என சொல்லி எழுந்து சென்றான் கார்த்திக். அவனுடன் இனிமையாக வாழத்தான் நந்தினிக்கும் விருப்பம், ஆனால் அவனது செயலை இன்னும் அவளால் ஜீரணிக்க முடியவில்லையே.

ப்ளம் கேக் வாங்கிக் கொண்டு வந்தான் கார்த்திக்.

பிளாஸ்டிக் கத்தியை கையில் எடுத்து கேக்கை வெட்டப் போனவன், “விஷ் மீ நந்து” என்றான்.

அவளுக்கு பாவமாகி விட, “ஹேப்பி பர்த்டே கார்த்திக்!” என வாழ்த்து சொன்னாள்.

கேக் வெட்டியவன் அவளுக்கு கொடுக்க, தயக்கமாக பார்த்தாள்.

“ப்ளீஸ் நந்து…” என அவன் கெஞ்ச, வாய் திறந்து வாங்கிக் கொண்டாள். “எனக்கு தர மாட்டியா?” என அவன் கேட்ட பிறகே அவனுக்கும் ஒரு துண்டு கேக் கொடுத்தாள்.

சின்ன சிரிப்புடன் அவளது வலது கையை பிடித்தான்.

“விடுங்க கார்த்திக், எனக்கு போகணும்” என்றாள்.

தான் வாங்கி வந்திருந்த தங்க வளையல்கள் இரண்டையும் அவளது வலது கையில் அணிவித்து விட்டான். இடது கையில் கூட அவன் முன்னெப்போதோ வாங்கிக் கொடுத்த  கைக்கடிகாரம்தான் அணிந்திருந்தாள்.

“இதெல்லாம் கேட்டேனா உங்ககிட்ட?” என சற்றே கோவமாக கேட்டாள்.

“ஒருத்தவங்க கேட்டா கிஃப்ட்ஸ் வாங்கி தருவாங்க?” எனக் கேட்டவன் ஆண்கள் அணியும் கைக்கடிகாரம் எடுத்து மேசையின் மீது வைத்து விட்டு அவள் முன் தன் இடது கையை நீட்டினான்.

அவளும் அவனுக்காக சட்டைகள் வாங்கி வைத்திருக்கிறாள். இப்போது கொடுக்கத்தான் பிடிக்கவில்லை. எதுவும் சொல்ல முடியாத இயலாமையோடு  வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

“நந்து… ப்ளீஸ்…” என மீண்டும் அவன் கெஞ்சலில் இறங்க, அதை அவனுக்கு அணிவித்து விட்டாள்.

“இந்த மாதிரி யாரும் பர்த்டே செலிப்ரேட் பண்ணிருக்க மாட்டாங்கல்ல?” என அவன் கேட்கவும், பதில் பேச முனையவில்லை நந்தினி.

“அஞ்சலியும் என்கிட்ட பேசுறது இல்லை நந்து, நீயும்… ஹ்ம்ம்… நான் அவ்ளோ மோசமானவனா?” என வருத்தமாக கேட்டான்.

“எங்க ரெண்டு பேரையுமே ஹர்ட் பண்ணியிருக்கீங்க கார்த்திக். நம்பிக்கை வச்சவங்க நாம நினைக்காத மாதிரி நடந்துகிட்டா எப்படி இயல்பா அவங்களோட பேச முடியும், பழக முடியும்?” எனக் கேட்டாள்.

“அதுக்காக இப்படியே இருக்க போறியா?”

“எனக்கு தெரியலை, நான் வேணும்னு உங்கள்ட்ட பேசாம அவாய்ட்  பண்ணல, நிஜமாவே உங்க கூட பழையபடி  பழக முடியலை. தானா சரியாகுமோ என்னவோ, அது வரைக்கும் இப்படி திடீர் விசிட்லாம் செய்யாதீங்க. நான் வர்றேன்” என சொல்லி அங்கிருந்து சென்று விட்டாள்.

மிச்சமிருந்த கேக்கை அங்கேயே விட்டு விட்டு கனத்த மனதோடு அவனும் புறப்பட்டு சென்றான்.

வெளியில் சென்று வருகிறோம் என பொதுவாக அம்மாவிடம் சொல்லி விட்டு அஞ்சலியை கவுன்சிலிங் அழைத்து வந்திருந்தான் யுகி.

அஞ்சலியுடன் பேசிய மருத்துவர் கவுன்சிலிங் அஞ்சலிக்கு மட்டுமில்லை, அவளை சுற்றி இருப்போருக்கும் தேவை என சொல்லி யுகியை கடிந்து கொண்டார்.

‘இன்னும் இரண்டு மூன்று சிட்டிங்ஸ் தேவைப்படலாம்’ என சொன்னவர், நடந்த விஷயத்தை காரணமாக்கி அஞ்சலிக்கு எந்தக் கட்டுப்பாடும்  விதிக்க கூடாது, அதை பற்றி யாரும் பேசவே கூடாது, மற்றபடி அவளை இயல்பாக இருக்க விட்டாலே போதும் என்றார்.

தன்னுடைய நெருக்கம் அஞ்சலியை நடுங்க வைப்பது பற்றி கேட்டான்.

 தாம்பத்யம் விஷயத்தில் அவளுக்குள் பயமும் தடையும் இருப்பது உண்மைதான்,  உங்களுக்கு மனைவியாக அவள் தன்னை உணர ஆரம்பித்திருக்கவில்லை,  உங்களையும் கணவராக கருதாமல் நண்பராக மட்டுமே நினைக்கிறாள் என மருத்துவர் சொல்லவும் ‘என்ன?’ என அதிர்ந்தான்.

“ஏன் இவ்ளோ ஷாக்? ஹஸ்பண்ட்டை  ஃப்ரெண்ட்டா ஏத்துக்கிறது  சாதாரணம் கிடையாது. அவங்கள அவங்க இயல்போட இருக்க விட்டாலே போதும். அடுத்தடுத்த கட்டத்துக்கு தானா நகர்ந்து வருவாங்க. அதுவரைக்கும் நீங்களும் ஒரு மெடிசின் எடுத்துக்க வேண்டியது அவசியம்” என்றார்.

“எனக்கா?” என அவன் குழம்ப, சீட்டில் ‘பொறுமை’ என்பதை ஆங்கிலத்தில் எழுதிக் காட்டினார்.

“உங்க கிளினிக்ல கிடைக்குமா ஸார் இது?” என கிண்டலாக கேட்டாலும், நிச்சயமாக அவளிடம் பொறுமையாக இருப்பேன் என உறுதி சொன்னான் யுகி.

அந்த கவுன்சிலிங்’கிற்கு பின் அஞ்சலிக்கு மனம் ஓரளவு சமாதானமாக இருந்தது.  பதினைந்து நாட்களில் திரும்பவும் வர வேண்டும் என மருத்துவர் சொன்ன போது கண்டிப்பாக வருவதாக சொன்னாள்.

அவளை வீட்டில் விட்டு விட்டு கடைக்கு சென்று விட்டான் யுகி. எங்கு சென்றிருந்தீர்கள் என சாதாரணமாக விசாரித்தார் அலமேலு. கணவன் சொல்லிக் கொடுத்தது போலவே மால் ஒன்றின் பெயரை சொல்லி விட்டாள் அஞ்சலி.

“வெறுங்கையோட வந்திருக்க, ஒன்னுமே வாங்கி தரலையா அவன்?” என வியப்பாக கேட்டார்.

“சரியான கஞ்சன் உங்க பையன், கஞ்சேந்திரன்னு பேர் வச்சிருக்கலாம். வெறும் ஸ்னாக்ஸ் வாங்கி கொடுத்ததோட சரி” என்றாள் அஞ்சலி.

“ஆமாம் டி, கஞ்சப்பயதான் லட்ச ரூபாக்கு மேல செலவு பண்ணி உனக்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்திருக்கான்” என மகனை விட்டுக் கொடுக்காமல் சொன்னார் அலமேலு.

“இருங்க இப்பவே பைரவி அண்ணிக்கு நந்து அண்ணிக்கெல்லாம் கால் பண்ணி நியாயம் கேட்கிறேன். இப்டி இப்டி… இவரு வெளில கூட்டிட்டு போய் ஒன்னும் வாங்கி தரலை, அத்தையும் தப்பில்லைனு சொல்றாங்கனு சொல்றேன். சரின்னு ரெண்டு பேரும் ஒத்துக்கட்டும்.  நானும் ஒத்துக்கிறேன்” என்றாள்.