கடைக்குட்டி மகளை நினைத்து கவலை பட்டுக் கொண்டிருந்த அலமேலு இப்போது இவனை நினைத்தும் கவலை கொள்கிறார். இன்னும் சில மாதங்கள் கடந்தால் முப்பத்தியொன்று முடிந்து விடும், பெண் இருக்கையில் பையனுக்கு செய்ய வேண்டாம் என முன்னர் யோசித்தவர் இப்போது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார். 

யுகிதான் பிடி கொடுக்க மறுக்கிறான். சென்னையில் மென் பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் தங்கைக்கு திருமணம் முடிந்த பிறகுதான் தான் திருமணம் முடிப்பேன் என உறுதியாக இருக்கிறான். 

“அவளுக்கு இனிமேலா மாப்ள தேட போறோம்? அவர் வீட்ல எல்லாம் சரியானா அடுத்த மாசமே கூட கல்யாணம் வச்சிடலாம். உன் கதை அப்படி இல்லடா யுகி, வயசு ஓடினா உன் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி அமையாது” என சொல்லியிருந்தார் அலமேலு. 

யுகி யோசித்து பார்த்ததில் அவனுக்கு அப்படி தனிப்பட்ட விருப்பங்கள் ஏதும் இருப்பதாக தோன்றவில்லை. குடும்பத்தை அனுசரித்து நடக்கும் குணம் கொண்டவளாக இருந்தால் அது மட்டுமே அவனுக்கு போதும். ஆனால் அதை எப்படி ஆராய்ந்து அறிந்து கொள்வது? ஆகவே விதிப்படி யார் அமைகிறாளோ அவளை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் என எண்ணிக் கொண்டிருக்கிறான். 

தன்னுடன் வேலை பார்க்கும் பையனை விரும்புகிறாள் நந்தினி. ஒன்றரை வருடத்திற்கு முன்னரே இரு வீட்டினர் சம்மதத்துடன்  இருவருக்கும் நிச்சயம் நடந்து விட்டது. பையனின் குடும்பத்தில் நிலவும் பிரச்சனையால் அவர்களின் திருமணம் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது. 

சாப்பிட்டு முடித்த யுகேந்திரன் உடனே கடைக்கு கிளம்ப, “என்னடா ரெஸ்ட் எடுக்கலையா?” எனக் கேட்டார் அலமேலு. 

“ஸ்டாக் லிஸ்ட் எடுக்கணும், அப்போதான் அடுத்த மாச ஆர்டர் போட வசதியா இருக்கும், இன்னிக்கே முடிச்சாதான் தேவலாம்” என்றான்.

அவன் வெளியில் செல்வதற்குள் வேகமாக மாடியிலிருந்து வந்தாள் அவனது அண்ணி ஸ்ரீஜா. அவளது ஸ்கூட்டரை சர்வீஸுக்கு விட்டிருக்கிறாளாம், இன்று அவளது  தங்கை வீட்டிற்கு வரவிருக்கிறாளாம், மாலையில் அவளை அவளது அலுவலகத்துக்கு சென்று இவன்தான் அழைத்து வர வேண்டும் என்றாள். 

“இன்னிக்கு கஷ்டம் அண்ணி, கார் எடுத்துக்கோங்க, வழக்கமா வர்ற டிரைவரை கூப்பிட்டுக்கோங்க, இல்லைனா உங்க தங்கச்சியவே கேப் புக் பண்ணி வர சொல்லிடுங்க” என சொல்லி அண்ணியின் பதிலுக்கு காத்திராமல் கிளம்பி விட்டான். 

அதில் ஸ்ரீஜாவுக்கு கோவம். மஸ்கட்டில் பணி புரியும் தன் கணவனிடம் எப்படி இதை பெரிது படுத்தி சொல்லலாம் என சிந்தித்துக் கொண்டே மாடியேறி விட்டாள். 

யுகேந்திரனின் அண்ணன் வாசுவுக்கு வீட்டில்தான் பெண் பார்த்து ஸ்ரீஜாவை திருமணம் செய்து வைத்தனர். மணமான கையோடு கணவனோடே வெளிநாட்டுக்கு சென்று வாழ்ந்தாள். அவளுக்கு வெளிநாட்டு வாழ்க்கை பிடிக்கவில்லை, வாசுவுக்கு இங்கு வந்து தொழில் செய்ய பிடிக்கவில்லை. 

மகனை இங்கு படிக்க வைத்தால்தான் நன்றாக இருக்கும் என காரணம் சொல்லி இங்கேயே வந்து விட்டாள். அவள் வந்து சேர்ந்த நேரம் குடும்பத்தில் நிறைய குழப்பங்கள் நிலவவும் அவளுக்கும் பொறுப்புகள் குவிய தொடங்கியது. 

எதையும் ஏற்றுக் கொள்ளாமல் அம்மா வீட்டுக்கு சென்றவள் குடும்பம் சற்றே நிலை கொள்ளவும்தான் திரும்ப வந்தாள். அப்போதும் மாடியில் தனியாக இருக்கிறேன் அதுதான் எனக்கு வசதி என சொல்லி விட்டாள். அப்போதிருந்தே தனி சமையல்தான்.

 மாமனாருக்கோ மாமியாருக்கோ மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் ‘எனக்கு மருந்து வாடையே ஆகாது, குழந்தை இருக்கிறான்’ என ஏதாவது சாக்கு சொல்லி விடுவாள். அட அது கூட பரவாயில்லை, அன்றைய தினம் எங்களுக்கும் சேர்த்து சமைத்து விடு என மாமியார் சொன்னால் ‘எனக்கு உங்களை போல பக்குவமாக சமைக்க வராது அத்தை’ என்பாள்.

ஆனால் அவளுக்கு என்ன வேண்டுமென்றாலும் யுகி செய்து தர வேண்டும், இல்லையென்றால் என்னை விட்டு தனியாக  இருப்பவளுக்கு இது கூட செய்ய மாட்டாயா என கோவித்துக் கொள்வான் வாசு. 

யுகிக்கு தன் அண்ணியை பற்றி குறை கூற நொடிப் பொழுது ஆகாது, ஆனால் அதனால் அண்ணன் அண்ணிக்குள் பிரச்சனை வருவதை அவன் விரும்பவில்லை, ஆகவே அண்ணனிடம் ஏதும் சொல்லிக் கொள்ள மாட்டான். 

வாசுவோ தன் மனைவி தன் பெற்றோருடன் வசிக்கிறாள், தான் அங்கு இல்லாத குறையை அவள்தான் தீர்த்து வைக்கிறாள் என அவளை பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கிறான், ஸ்ரீஜா அவனை அப்படி நினைக்க வைத்திருக்கிறாள். 

கோவையிலேயே வேலை பார்க்கும் தன் தங்கையை யுகேந்திரனுக்கு மணமுடித்து வைக்க வேண்டும் என்பது அவளின் ஆசை. குடும்பத்தின் மீது அக்கறையில்லாத ஸ்ரீஜாவின் தங்கையையே இன்னொரு மருமகள் ஆக்கிக் கொள்ள அலமேலுவுக்கு துளியும் விருப்பமில்லை. 

அம்மாவுக்கு பிடிக்காத காரணத்தால் யுகியின் எண்ணமும் ஸ்ரீஜாவின் தங்கையின் பக்கம் செல்லவே இல்லை. 

கடைக்கு வந்த பிறகு யுகிக்கு வேலையே சரியாக இருந்தது. இரவு ஒன்பது மணி வரைதான் கடை திறந்திருக்கும், பின் கணக்கு பார்த்து விட்டு புறப்பட்டு விடுவான். 

பொதுவாக கடைக்கு விடுமுறையே கிடையாது, எல்லா நாளுமே வேலை நாள்தான், பணியாளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பு கொடுத்து விடுவான். மற்றபடி ஏதாவது பண்டிகை என்றால் மட்டும்தான் கடை மூடப்படும். 

இரவு பத்து மணி போல வீட்டுக்கு வந்தான் யுகேந்திரன். உடல்நிலை சரியில்லாத கணவனை கவனித்துக் கொள்வதால் அலமேலுவுக்கு அதிக வேலைப்பளு, மேல் வேலைக்கு ஆள் இருந்தாலும் அவரது வயதுக்கு மீறிய உழைப்பை இன்னும் போடுகிறார், ஆகவே அவரால் அந்நேரம் வரை விழித்திருக்க முடியவில்லை. மகனுக்கான உணவை எடுத்து வைத்து விட்டு உறங்க சென்று விட்டார். 

கீழே இருந்த இரண்டு படுக்கை அறைகளில் ஒன்றுதான் அவனுடையது.  இரவில் வெது வெதுப்பான நீரில் குளியல் போட்டால்தான் அவனால் நிம்மதியாக உறங்க முடியும். 

தண்ணீர் முடிந்திருக்க, மோட்டார் போடுவதற்காக வெளியில் சென்றான். கேப் ஒன்றில் வந்திறங்கினாள் நந்தினி. 

“நீ வர்றதா அம்மா சொல்லவே இல்லை,  வா வா” என சொல்லிக் கொண்டே தங்கையின் பையை தன் கையில் வாங்கிக் கொண்டான். 

சோர்ந்து தெரிந்தவள் எதுவும் பதில் சொல்லாமல் உள்ளே சென்று விட்டாள். மோட்டார் போட்டு தண்ணீர் ஏற்றி விட்ட பிறகுதான் உள்ளே வந்தான்.  நந்தினி சோஃபாவில் சுருண்டு படுத்திருந்தாள்.

ஏதோ யோசித்தவனாக, “நீ வர்றது அம்மாக்கும் தெரியாதா நந்து?” எனக் கேட்டான். 

அவள் அமைதி காக்கவும் அப்படித்தான் என உறுதி செய்தவன், “இதென்ன கெட்ட பழக்கம் நந்து? ஊர் உலகத்துல நடக்கிற ஏதும் தெரியாதா உனக்கு? எனக்கு ஒரு மெசேஜ் போட கூட டைம் இல்லையா?” என கடிந்து கொண்டான். 

அவளின் அமைதி அவனை எரிச்சல் படுத்தியது. பசிக்க வேறு செய்ய, “சாப்பிட்டியா?” எனக் கேட்டான். 

“எதுக்கும் வாய தொறக்கலைனா நாலு அடிதான் போடுவேன் நந்து? ஏன் கார்த்திக் கூட ஏதும் சண்டையா?” 

“பசிக்குது ண்ணா, நாம சாப்பிடலாமா?” என கேட்டுக் கொண்டே எழுந்தாள். 

நந்தினி மாடியில் இருக்கும் அறையைத்தான் உபயோகிப்பாள். இப்போது ஸ்ரீஜா இருப்பதால் மாடி செல்ல தயங்கினாள். அவள் விழித்திருந்து இவளிடம் ஏதாவது கேட்டால் பதில் சொல்லும் மன நிலையில் இல்லை. 

மூத்த சகோதரி சகோதரன் இருந்தாலும் யுகியுடன்தான் நந்தினிக்கு ஒட்டுதல் அதிகம். தங்கையின் மனம் புரிந்தவன் போல, “சாப்பிட்டுட்டு ரூமுக்கு போலாம், இப்ப என் ரூம்ல ஃபிரெஷ் ஆகிக்கோ” என்றான். 

கடையிலிருந்து வந்த கையோடு இருக்கிறான் அண்ணன் என தெரிந்து, முதலில் அவனையே குளித்து வரச் சொன்னாள். 

வேகமாக குளித்து விட்டு வந்தவன் பெற்றோரின் உறக்கம் கெட வேண்டாம் என நினைத்து சத்தமில்லாமல் அவர்களின் அறைக் கதவை மூடினான். 

ஒரு ஆளுக்குதான் சாப்பாடு இருந்தது. நந்தினி தன் அண்ணனின் அறைக்கு சென்று ஆடை மாற்றிக் கொள்ள, தோசை வார்க்க ஆரம்பித்தான் அவளின் அண்ணன். 

தங்கையின் முகமே சரியில்லை, ஏதோ பிரச்சனை என யோசித்துக் கொண்டே இட்லி பொடி, எண்ணெய் எல்லாம் எடுத்து உணவு மேசையில் வைத்தான். 

வெளிவந்த நந்தினி, “ரெண்டு தோசை போதும் ண்ணா” என்றாள். 

“அரை வயித்துக்கு சாப்பிட்டா எல்லா பிரச்சனையும் சரியாகிடுமா நந்து?” 

“இனிமே எந்த பிரச்சனையும் இல்லண்ணா, எல்லாம் ஓவர், கார்த்திக்கை விட்டு பிரிஞ்சிட்டேன்” என குரல் கலங்க சொன்னாள் நந்தினி. 

அதிர்ந்து போனவன் சில நொடிகளில் தெளிந்து, “முதல்ல சாப்பிடலாம்” என்றான். 

அண்ணனுக்கு பசிக்கும் என்ற நினைவில் அவளும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள். 

பார்வையாலேயே அதட்டி மிரட்டி தங்கையை ஒழுங்காக சாப்பிட வைத்து விட்டான். பிறகுதான் என்ன ஏதென விசாரித்தான். 

தங்கை சொன்ன செய்தியில் அவனுக்கு கார்த்திக் மீது கண் மண் தெரியாத அளவுக்கு கோவம் வந்தது. 

கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்ட நந்தினி, “இதுக்கு மேல என்னால என்ன பண்ண முடியும் அண்ணா? எனக்கு சென்னைல இருக்க பிடிக்கல, வேற எங்கேயாவது வேலைக்கு போறேன். நீ எனக்காக வெயிட் பண்ண வேணாம், நீ செட்டில் ஆகணும் அண்ணா” என்றாள். 

“இத ரெண்டு வருஷம் முன்னாடியே சொல்லியிருக்கலாம் நீ” என்றான். 

“மூனு வருஷம் முன்னாடியே சொல்லிருக்கணும், அப்பதானே கார்த்திக்கை லவ் பண்ண ஆரம்பிச்சு தொலைச்சேன். இப்படிலாம் நடக்கும்னு எனக்கு தெரியாதே ண்ணா”

“அவர்கிட்ட நான் பேசுறேன் நந்து, இப்ப தூங்கு” 

“என்ன பேச போற? அதான் தெளிவா சொல்லிட்டாரே, அவருக்கு அவர் தங்கச்சி லைஃப்தான் முக்கியம்” 

“அப்ப என் தங்கச்சி எனக்கு முக்கியம்” 

யுகேந்திரன் சொன்ன தொனி அவளுக்கு விளங்கியும் விளங்காமலும் இருக்க, “அண்ணா!” என அதிர்வாக அழைத்தாள்.

 யோசனையாக மேலே பார்த்திருந்தான் அவன். 

“உன்னைத்தான் அண்ணா…”

“ம்ம்… நான் பேசுறேன், இனிமேலும் உன் கல்யாணத்த தள்ளி போட முடியாது நந்து. அப்பாக்கு உன்னை நினைச்சும் கவலை இருக்கு. அவர் மனசு நல்லாருந்தாதான் உடம்பு சீக்கிரம் குணமாகும்.  அம்மா சந்தோஷமா சிரிச்சு எவ்வளவோ மாசமாகிடுச்சு. நாளைக்கு அம்மாகிட்ட இப்படி அழுது வடிஞ்சுக்கிட்டு நிக்க கூடாது. திடீர்னு லீவ் கிடைச்சுது, வந்தேன்னு சொல்லு” என்றான். 

“என்ன செய்ய போற நீ?” என பயத்தோடு கேட்டாள் நந்தினி. 

“எனக்கே சரியா யோசிக்க முடியலை. பேசி பார்த்தா தானா ஏதாவது தீர்வு கிடைக்கும். நீ ரூம்க்கு போ” என  சொல்லி அவளை மேலே அனுப்பி வைத்தான். 

எந்த பிரச்சனை என்றாலும் யுகி அஞ்சிக் கொள்ள மாட்டான், நிதர்சனம் புரிந்து அதற்கு தகுந்தது போல என்ன செய்தால் இதிலிருந்து மீளலாம் அல்லது இதை தீர்க்கலாம் என பார்த்து உடனே செய்து விடுவான். 

ஆனால் இப்போது தடுமாற்றமாக இருந்தது. தீவிர அலசலுக்கு பின் சற்று முன் கார்த்திக் மீதிருந்த கோவம் மறைந்து அவனிடத்தில் இருந்து அவனது கவலையை புரிந்து கொள்ள முடிந்தது. 

காலம் தாழ்த்தாமல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை விரைவாக கார்த்திக்கை நேரில் சந்திப்பது என முடிவெடுத்துக் கொண்டே உறங்க சென்றான் யுகி.