Advertisement

பகுதி – 9
பூவம்மாளின் வீட்டிற்கு முன்னால் சில ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர். நேரம் காலை 6 .30 என்ற அளவில் தான் இருந்தது. ஆனாலும் பூவம்மாள் தேனியாய் அங்குமிங்கும் ஓடியாடி எதையோ செய்துகொண்டிருந்தார்.
நிற்கும் ஆட்களையோ, பூவம்மாளின் செயலையோ பெரிதும் இலட்சியம் செயாமல், அடுத்து தனது ஆட்டத்தை எங்கிருந்து தொடங்குவதென்ற சிந்தனையுடன் மலர், பூவம்மாளின் வீட்டை நோக்கி நடை போட, பூவம்மாள் பாட்டியின் வார்த்தைகள் அவளின் செவியில் விழுந்தன.
“ஏண்டி சரஸ்வதி. பார்த்தி ரூபா கொடுத்துட்டு போயிருக்கான். அவன் பொண்டாட்டிக்கு நாலு துணிமணி எடுக்கச் சொல்லி. உம்ம புருஷன்கிட்ட சொல்லி கடைய தொறந்து எடுத்தார சொல்லுறியா ? மாத்து துணி இல்லாம நிக்கிது” எனக் கூறிக்கொண்டிருக்க, மலர் மனதிலோ, “இது என்ன புதுக் கதை ?” என்ற சிந்தனையோட, அவளின் புருவங்கள் தன்னால் முடிச்சிட்டன.
“அதுக்கு ஏன் ஆத்தா கடைக்குப் போகணும். அந்த மனுஷன் சரக்க வீட்ல வச்சிருக்கு. எல்லாம் நேத்து தான் போய் எடுத்தாந்தாரு. இன்னைக்குத் தான் கடைக்கே கொண்டு போவாரு.
அதுல பார்த்திப் பொண்டாட்டிய வந்து பார்த்து பிடிச்சதை எடுத்துக்கச் சொல்லு. ஆமா, எம்புட்டுக்கு துணி வேணுமா ?” என கேட்டுக்கொண்டிருக்க, யாருக்கு என்னவோ என்று நின்றிருந்தாள் மலர்.
வாழ்வின் மீதே பிடித்தமில்லாத போது உடையென்ன பணமென்ன…அவளுடைய இந்தப் பாவனையை மற்றவர்கள் எப்படியோ ஆனால், பூவம்மாள் பாட்டி கண்டுகொண்டார்.
“இந்தா ஆத்தா மலரு. போ..இவகூடப் போய் மாத்து துணிக்கு நாலு துணிய எடுத்திட்டு வா…” எனக் கூறியவர், சட்டென்று எதையோ சிந்தித்தவராக, “வேணாமாத்தா…செத்த நில்லு. இந்தா சரஸ்வதி, இவளுக்குத் தோதுப்பட உள்ள துணியைக் கொஞ்சம் என்னோட வீட்டுக்குக் கொண்டு வா. உன்னோட மக போடுற சுடிதாரு போலத் துணி எடுத்திட்டு வா” எனக் கூறி அனுப்பிவைக்க, பாட்டியின் இந்தப் பேச்சில் சற்றே ஆச்சரியமாக மலர் பார்த்தாள்.
“என்ன? இந்தக் கிழவிக்கு எப்படி உடுப்புப் பத்திலாம் தெரியும் பாக்கறியா ? இப்ப இருக்கப் பிள்ளைங்க எங்க சீலை கட்டுதுங்க. உன்னோட புடைவில குத்திருக்க ஊக்கெல்லாம் (safety pin ) பார்த்தாலே தெரியுது. உனக்கு இடுப்புல சீலை நிக்கிறதே அந்த ஊக்குனாலதானு. அதான், சுடிதாரை கொண்டு வர சொன்னேன்” எனக் கூற, மலரின் இதழில் தன்னையும் மீறி இப்பொழுது சிறு புன்னகை மலர்ந்திருந்தது.
நேற்றிலிருந்து ஏன் எதற்கென்று தெரியாமல் எந்தப் பந்தமும் இல்லாமல் தனக்காக ஒருவர் பேசுகிறாரென்றால் அது பூவம்மாள் பாட்டி தான் என்பதை அந்த நொடி உணர்ந்த மலருக்கு, பூவம்மாளின் மீது தன்னைப் போல் ஓர் அபிமானம் தோன்றியது. இந்த உடைகளுக்கு பணம் கொடுப்பது கூட பூவம்மாள் தான் என யூகிக்க அவளுக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை.
சில நாட்களாக, அவளிடம் அன்பாய் பேச கூட யாரும் இல்லாத நிலை. சுற்றியிருப்பவர்கள் வேண்டி விழைவுடன் பேசுகின்றனரா ? விஷத்துடன் பேசுகின்றனரா என வெகுவாகக் குழப்பம் கொண்டிருந்தாள்.
உண்மையான எதிர்பார்ப்பில்லா அன்பு என்பது அவனுடைய வாழ்வில் இறந்தகாலமாய் இருந்தது. அந்த அன்பு இன்று பூவம்மாளின் பேச்சில் தளிர் விடுகிறதோ ? என்ற கேள்வி அவளுள் எழவே, பூவம்மாளிடம் மட்டும் சற்றே அவள் மனம் நெருங்க தொடங்கியது.
மெல்ல தயங்கி தயங்கி வந்தவள், “பாட்டி…இங்க பாத்ரூம் போகணும். இருக்கா ?” எனப் பெரும் தயக்கத்துடன் கேட்க,
“அட அதில்லாம வீடு இருக்குமா? நீ எந்தக் காலத்துல இருக்க ? கருப்பு வெள்ளை படமாட்டம் கேள்வி கேக்குற” என நக்கலாகக் கேட்க,
மலரோ, “தேவை தான்…பாட்டிக்கு பாசத்தோடு குசும்பும் ஜாஸ்தி போல” எனச் சிரிப்புடன் நினைத்து கொண்டாள்.
“என்ன எனக்குக் குசும்பு ஜாஸ்தின்னு நினைச்சியா? அப்படிதான் என் வீட்டுக்காரரும் சொல்லுவாரு. சரி இடது கை பக்கமா போ… மாத்து உடுப்பு வந்திடும். குளிச்சிட்டு வா…காபி போட்டு வைக்கிறேன். அதுக்குள்ள இந்த ஆளுங்களையும் அனுப்பிட்டு வரேன்” எனக் கூறி அந்த ஆட்களிடம் ஏதோ சொல்ல தொடங்க, மலர் அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள்.
அவளுடைய மனம் முழுக்க, அடுத்து அவள் நடத்த வேண்டியதை எடுத்துக் கூறிக்கொண்டே இருக்க, ஒரு முடிவோடு தயாரானாள்.
***
“ஏமா தாமினி? எதுக்கு இப்படி முகத்தைத் தூக்கி வச்சிட்டு உக்காந்திருக்கவ ? எனக்கென்னவோ அந்த அம்ஸாவவிட இந்தப் பிள்ளை அம்சமா இருக்கானு தோணுது. பிள்ளைங்க ஆசைக்குச் சரின்னு இணைஞ்சு போவியா ? இப்ப போய்ப் பிடிவாதம் பிடிச்சுக்கிட்டு இருக்க” எனப் பூவம்மாள், தாமினியிடம் எடுத்துக் கூறிக்கொண்டிருந்தார்.
ஆம்! மலருக்கு காலை உணவை கொடுத்து, கையோடு பூவம்மாள் தாமினிடம் அழைத்து வந்திருந்தார். பார்த்திபன் இன்னமும் வீடு வந்தபாடில்லை.
அதோடு தாமினியின் வீட்டில், பூவம்மாள் பாட்டிக்கு மற்றொரு வேலையும் இருந்தது. அதை முடிக்கும் பொருட்டே முக்கியமாக வந்திருந்தார்.
தாமினியிடம் பேசிக்கொண்டிருந்தவர், வெளியில் சலசலப்பு கேட்டு வாசலுக்கு வந்து “ஏல, நான் சொன்னது புரிஞ்சதுல? வெரசா சோலிய ஆரம்பிங்க. போ போ வாயப் பாத்து நிக்காதீங்க” எனச் சிலரை பார்த்து வாசலில் நின்று ஏவ, அவர்கள் கம்பு கட்டை கயிறு என ஒவ்வொரு பொருட்களாய் வரிசைகட்டி மேலெடுத்து செல்ல, என்ன நடக்கிறதென்ற பார்வையுடன் நித்ய கலாவின் கண்கள் அலைமோதின.
இத்தனை நேரம் இறுக்கத்துடன் அமர்ந்திருந்த தாமினி எழுந்து வாயிலுக்கு வந்தார்.
“என்னங்கத்த நடக்குது?” என வினவ,
“நல்லாயிருக்குடி அம்மா. நான் நாயா கத்துனப்ப வாயத் தொரக்கல. இப்ப நீ கேட்டவுடனே நான் சொல்லனுமா ?” என நக்கலாக வினவ,
“அத்தை. என்ன நீங்களாச்சும் புருஞ்சுக்கோங்களேன்” என இறைஞ்சும் குரலில் கூற,
“வாழவேண்டிய பிள்ளைங்களை நீ புருஞ்சுக்காத போது, நான் மட்டும் ஏண்டி அம்மா உன்ன புரிஞ்சுக்கணும்?
உன்னோட மாமியார்னா இப்படி அழுத்தகாரிய உக்காந்திருப்ப? நான் உனக்கு ஒன்னுவிட்ட உறவுதானே ?” என வேண்டுமென்றே, தாமினியினுள் உள்ளிருக்கும் பாசத்தை வெளிக்கொணர முயன்றபடி பேச்சை வளர்த்தார்.
“ஏன் இப்படிப் பேசுறீங்க அத்தை? என்ன பேசவைக்கத்தான் பேசுறீங்கன்னு எனக்குப் புரியிறத போலவே, எனக்கு உங்கமேல அளவு கடந்த மரியாதை இருக்கும்னு உங்களுக்கும் புரியும்” என நேரடியாகக் கூற,
“புரிஞ்சு என்ன செய்ய? அதான் இந்தச் சின்னசிறுகளைச் சேத்துக்கலியே?” எனக் குறைப்பட்டார் பூவம்மாள்.
“நான் பதில் பேசாம இருக்குறப்பவே, அவுங்கள விலக்கிவைக்க நினைக்கலைனு உங்களுக்கு புரிஞ்சிருக்க வேண்டாமா அத்தை?” என எதிர்கேள்வி கேட்க,
“அப்படினா, நீ உம்மவனையும் மறுமவளையும் ஏத்துக்கிட்டியா?” என பூவம்மாள் ஆர்வமுடன் வினவ,
“நான் விலக்கிவைக்கலைனு புருஞ்சுகிட்ட நீங்க, என்னோட அமைதில இருந்து நான் அவுங்க இரண்டு பேரையும் சேர்த்துக்கவும் விரும்பலைன்னு புருஞ்சுப்பீங்கனு நம்புறேன்” என கூற, பூவம்மாளுக்கு ஆரம்பித்த இடத்திற்கே வந்ததை போன்றதொரு உணர்வு.
“இதென்னடிமா? உலையும் கொதிக்கணும் குருதும் குறையக்கூடாதுங்கிற கதையா இருக்கு… சேத்து வச்ச அரிசியை எடுக்காம எப்படிச் சோத்த பொங்க முடியும்?” என அங்கலாய்க்க ,
“என்னை மன்னிச்சிடுங்க அத்தை… தயவு செஞ்சு தர்மசங்கட படுத்தாதீங்க. எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும்… ” என ஆற்றாமையுடன் கூற,
“அப்போ என்னோட வேலைய நான் பார்க்கலாம்ல? அதாவது இவுங்க தங்குறதுக்கான ஏற்பாட சொன்னேன்” எனக் காரியத்தில் கண்ணாய் கேட்க,
“உங்க இஷ்டம்…” என முடித்துக்கொண்டார் தாமினி தேவி.
தாமினியுடனான பேச்சு முடிந்ததும் பூவம்மாள், அந்த வீட்டின் மொட்டை மாடி நோக்கி படிகளில் ஏற, பனிமலர் மட்டும் அங்கே நிதானித்தாள்.
“என்ன மலரு பொண்ணே? மச்சுக்கு வரலியா ?” எனப் பூவம்மாள் வினவ,
“நான் இங்க இருக்கேன்” என மலர் முடித்துக்கொண்டாள்.
நித்ய கலாவும், தாரா தேவியும் மாடியில் அப்படியென்ன வேலை நடக்கப் போகிறதென்ற ஆவலில் பூவம்மாளின் பின்னோடு கிசுகிசுத்தபடி செல்ல, மலர், நிதானமாகத் தாமினியின் முன் சென்று நின்றாள்.
மலரின் முகத்தில் பயமோ தவிப்போ எதிர்பார்ப்போ ஏதுமில்லை. ஓர் அசட்டு துணிச்சல். அது அசட்டு துணிச்சலா ? அலட்சியம் கலந்த துணிச்சலா ?
ஒருவருக்கு நம்மைப் பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தானே அங்கு எதிர்பார்ப்பு இருக்கும். பனிமலருக்கு அந்த எதிர்பார்ப்பு அங்கு இல்லை. பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வதென்ற பரிதவிப்பு இல்லை. அதனால் அவளுள் பயமும் இல்லை.
ஆக, மலரின் முகத்தில் பயமோ பதற்றமோ எதிர்பார்ப்போ ஏதுமில்லை. நிதானமாகத் தாமினியின் முன் சென்றவள், “மன்னிச்சிடுங்க ஆண்ட்டி. எனக்குத் தெரியாது…இவ்ளோ பாசமா இருக்கிற அம்மா அவருக்கு இருப்பாங்கன்னு தெரியாது.
என்னோட அம்மா உயிரோட இருந்திருந்தால், அவுங்களுக்குத் தெரியாம நான் இவ்ளோ பெரிய காரியத்தைச் செஞ்சிருக்க மாட்டேன்.
என்னைப் போலத்தான் அவருக்கும் ஒரு நிலைமைன்னு நினச்சேன்” என ஒவ்வொரு வார்த்தையாகத் தாமினியின் முகத்தை ஆராய்ந்தபடி வெகு அழுத்தமாகக் கூறினாள்.
“நீ இப்போ என்ன சொன்ன? தெளிவா சொல்லு” என முதன் முறையாகத் தாமினி மலரிடம் வாய்த் திறந்தார்.
“என்ன சொன்னேன்? என்னைப் போலத் தான் அவருக்கும்னு நினச்சேனு சொன்னேன்” என அப்பாவியாகப் பதில் கூறினாள்.
“ஏன் அப்படிச் சொன்ன?”
“நான் சொல்லல… அவருதான், கல்யாணத்தைச் சொல்லிட்டு பண்ணுற அளவுக்கு எனக்கு முக்கியமானவங்கனு யாருமில்லைனு சொன்னாரு” எனக் கூறி, தாமினியின் இதயத்தில் இரும்பு கம்பியை பாய்ச்சினாள்.
தாமினியின் கண்கள் அதிர்ச்சியைப் பிரதிபலிக்க மலரின் கண்களில் திருப்தியற்ற மகிழ்ச்சி தோன்றியது. ஆம்! முரணான பாவனை மலரின் முகத்தில்…
இருந்தும் ஏதோவொரு வகையில், பனிமலரின் தணல் சற்றே ஆசுவாசம் கொண்டது.
“முக்கியமானவங்க யாருமில்லை” என்ற வார்த்தைகளே மீண்டும் மீண்டும் தாமினியின் காதினுள் ஒலிக்க, அவருடைய முகத்தில் இறுக்கம் அதிகரித்துக்கொண்டே சென்றது.
“என்னோட முதல் காய நகர்த்திட்டேன் பார்த்திபா. என்னோட ஆட்டம் தொடங்கிருச்சு. ஆனால், என்னை எதிர்த்து ஆட, உனக்கு நான் வாய்ப்பே தரப்போறதில்லை” என மனதினுள் உறுதியுடன் கூறிக்கொண்டாள் பனிமலர்.
அப்போது மிகச் சரியாக,
“அம்மா…” என்ற அழைப்புடன் வாயிலில் வந்து நின்றான் பார்த்திபன்.
அவனுடைய அந்த ஒற்றை அழைப்பில், அவனுடைய ஒட்டுமொத்த பாசமும் வெளிப்பட்டது. ஆனால், அந்தப் பாசத்தைத் தாமினி உணரவில்லை. மலர் கவனிக்கத் தவறவில்லை…
“இவ்ளோ பாசமானவனா நீ? ஆனால் , பாசம் உனக்கு மட்டுமே சொந்தமானது இல்லையே ?” எனத் தீரா பகையுடனும் தீர்க்கவேண்டிய கணக்குடனும் நினைத்துக்கொண்டாள் மலர்.
“ஏப்பா…அந்த மலர் பிள்ளையும் இங்கன தான் இருக்கு. இப்பவே, அம்மாக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம். குட்டைய குழப்பவேற யாருமில்ல…” என அவசரப்படுத்தினான் பூதம்.
“நீங்க இப்படி இருக்காதீங்க அம்மா. யாரோ போல என்ன பாக்காதீங்க.ரொம்பப் பாரமா இருக்கு…
என்கிட்ட ஒருவார்த்தைகூட உங்களுக்குக் கேட்க தோணலியா ? யாரு என்ன சொன்னாலும் நம்பிடுவீங்களா ?” என ஆழமாகத் தாயை பார்த்தபடி பெரும் எதிர்பார்ப்புடன் வினவினான்.
ஆம்! மலரிடம் இல்லாத எதிர்பார்ப்புப் பார்த்திபனிடமிருந்தது…
மலருக்கு இங்கு உறவும் வேண்டாம் பாச நேசமும் வேண்டாம். ஆனால், பார்த்திபனுக்கு உலகமே அவன் குடும்பத்தின் உறவு தானே ? அவர்களின் பாசம் தானே ?
“நேத்து ஏன் என்கிட்ட ஒருவார்த்தை கூடப் பேசாம போனீங்க? நான் அப்படிச் செய்யக்கூடியவனா ? 
உங்கனால எப்படிம்மா என்மேல நம்பிக்கைவைக்காம இருக்க முடியுது ?” என வலியும் ஆற்றாமையும் கலந்த குரலில் வினவ,
“உன்னால எப்படி நான் முக்கியமில்லன்னு சொல்ல முடிஞ்சதோ அப்படித்தான்…” எனப் பட்டென்று வெடித்தெழுந்தார், தாமினி.
“என்ன? யார் சொன்னது ?”
“நான் சொல்லலைனு உன்னால உறுதி சொல்ல முடியல. யார் சொன்னாங்கனு கேட்குறானா ?அப்போ நீ சொல்லிருக்கனு தானே அர்த்தம்” எனச் சீறினார்.
“அம்மா! நீங்க என்ன பேசுறீங்க ? எனக்குப் புரியல”
“எனக்கும் தான் புரியலபா…மத்த இரண்டு பிள்ளைங்களைப் பெத்த அதே வயித்துல தானே உன்னையும் பெத்தேன். ஆனால், நீ மட்டும் ஏன் இப்படியிருக்க”
“இப்படிப் பேசாதீங்க அம்மா. எனக்கு…” எனப் பாதிக் கூறிய நிலையிலையே பார்த்திபனின் குரல் பிசிறியது.
அவனுடைய வார்த்தையை, அவனுடைய துக்கங்கள் விழுங்கிவிட, வார்த்தைகள் வெளிவராமல் தடுமாறினான்.
“அம்மா…ஹ்ம்ம் இந்த வார்த்தையோடு அர்த்தமும் அன்பும் மதிப்பும் தெரிஞ்சிருந்தால் நீ இப்படிச் செஞ்சிருக்க மாட்ட” என அழுத்தமாகக் கூற,
“அம்மா? வேணாம்…நான் நொந்து போய் வந்திருக்கேன். நான் உங்ககிட்ட பேச வந்திருக்கேன்.
பெத்த பிள்ளையைத் தாயே நம்பாத சமயத்தில கூட நான் உங்கள ஏன்னு கேட்காம, என்னைப் புரியவைக்க வந்திருக்கேன்” என இழுத்து பிடித்த பொறுமையுடன் விளக்க முயன்றான்.
ஆனால், பார்த்திபனின் எந்த வார்த்தையையும் தாமினி கேட்பதற்குத் தயாராக இல்லை.
“அண்ணா அக்கானு எல்லாரு சொல்றதையும் கேட்குற நீங்க ஏன் மா நான் சொல்றத கேட்க மாற்றீங்க. இப்பனு இல்லை, இதுக்கு முன்னாடி கூடச் சின்னச் சின்ன விசயத்துல கூட நீங்க என் மேல பெரிசா நம்பிக்கை வைக்கலியேமா? ஏன் மா ? ஏன் ?” என இத்தனை வருடமாகப் பார்த்திபனின் மனதை அழுத்திய அந்தக் கேள்வியைத் தன்னையும் அறியாமல் கேட்டே விட்டிருந்தான்.
அவனுடைய கேள்வி அத்தனை வேகமாய் இருந்தது. அந்த வேகம், தாமினியின் மனதிலிருந்த எண்ணத்தையும் உடைத்து வெளியே கொண்டுவந்திருந்தது.
ஆம்! தாமினி, தனது மனதின் ஓரத்திலிருந்து அந்த எண்ணத்தை உரக்க கத்தியிருந்தார்.
“ஏன் தெரியுமா? அவுங்க யாரும் பிறந்ததும் அவுங்க அப்பாவை முழுங்கல. நீ! நீ பிறந்த பிறகு தான் உங்க அப்பா போனாரு, சொத்து பத்து போச்சு, காலம்காலமா வாழ்ந்த பெரிய வீடு போச்சு, உங்க பாட்டி போனாங்க, இப்போ கொஞ்ச நஞ்சமிருந்த மரியாதையும் போச்சு.” எனத் தலையில் அடித்துக்கொண்டு விரக்தியும் அழுகையாகத் தாமினி பேச பேச, பார்த்திபனின் நெஞ்சம் சுக்கு சுக்காக உடைக்கப்பட்டது.
அவனுடைய அண்டமே அதிர்ந்தது…. அந்த வார்த்தைகள், பார்த்திபனின் உலகத்தைத் தலை கீழாகச் சுற்றவைத்தது…கண்கள் சுருகியது….
தடுமாறினான்! முதன் முறையாகத் தடுமாற, தடுமாறியவனைத் தாங்கி பிடித்தான் பூதம்.
“தாமினி…என்ன பேசுற நீ?” என அதட்டியபடி வந்து சேர்ந்தார் பூவம்மாள். நித்ய கலா, தாரா இருவரும் மாடியில் இருந்திட, பூவம்மாள் மட்டும் மலருடன் இருக்கும்பொருட்டுக் கீழ்வந்திருக்க, தாமினியின் வார்த்தைகள் அனைத்தையும் கேட்டிருந்தார்.
எப்போதும் அதிக உரிமை எடுத்திடாதவர், இன்று தாமினியை தன்னை மீறி அதட்டவே செய்திருந்தார்.
ஆம்! இங்கு உணர்ச்சியின் பிடிகளில் மூவர் சிக்கியிருந்தார். மனிதனின் அறிவை, மனதும் மனதை ஆட்டிவைக்கும் உணர்ச்சிகளும் எப்போது அடக்கி ப்ரவாகமெடுக்கிறதோ , அப்போது நிதானமென்னும் கரை உடைக்கப்படுகிறது.
அப்படி வரம்பை மீறிவிட்டால், வார்த்தை சிதறிவிட்டால், உறவென்னும் கண்ணாடி சிதறிவிடும். மீண்டும் உடைந்த உறவுகள் ஓட்டுவதும் அது வாழ்வதும் காலத்தில் கையில் தான்…
தாமினியின் வார்த்தைகள் பார்த்திபனின் இருதயத்தை இரத்தம் சொட்ட சொட்ட பிடிங்கி எறிந்திருந்தது….

Advertisement