Advertisement

பகுதி – 8
பூவம்மாள் பாட்டி கொடுத்து சென்ற பாலை சரி சமமாகப் பிரித்து இரண்டு டம்ளர்களில் ஊற்றியவள், பாட்டிலிலிருந்த விஷத்தையும் சரி சமமாக இரண்டு டம்ளரிலும் கலந்து, பார்த்திபனின் வருகைக்காகக் காத்திருந்தாள்…
பனிமலரின் இதயத் துடிப்பு வேகமாக அடித்துக்கொண்டது. வாழவேண்டும் என்ற விருப்பமில்லாமல் முன்பே சாகத்துணிந்தவள் தான். ஆனால், இன்று பனிமலர் நிறைவுடன் மரணத்தை நோக்கி காத்திருந்தாள். 
“இதுவரைக்கு ஒவ்வொரு நிமிஷமும் நிம்மதியில்லாம செத்து செத்து வாழவேண்டிய சூழ்நிலை. இன்னைக்கு நிம்மதியா சாகப் போற சந்தோசம். இப்படி ஒரு முரணான வாழ்க்கையை ஏன் எனக்கு மட்டும் அந்தக் கடவுள் கொடுத்தாரு ?” என்ற ஏக்கம் மலரின் மனதினில் ஓட, விரக்தியாக அவள் உதட்டில் ஒரு புன்னகை விரிந்தது.
அந்தப் புன்னகையில் உயிர் என்ற ஒன்று இல்லவே இல்லை… ஆனால், அவள் கண்களில் மிதமிஞ்சிய கோபமும் ஆத்திரமும் இருந்தது….
“நீ சாகுறத பார்த்துட்டு தான் நான் என்னோட உயிரை முடுச்சுக்குவேன்” என வாய் விட்டுச் சொல்லிக்கொள்ள, அவள் இருந்த அறையின் கதவு தட்டப்பட்டது.
பார்த்திபனின் மரணம் பனிமலரின் கண்களுக்கு முன் விஸ்வரூபமெடுத்து நிற்க, பார்த்திபனின் உயிரை குடிக்கும் வெறியுடன் கதவை திறந்தாள்.
ஆனால், வெளியே நின்றதோ நித்ய கலா…
“மலரு…இப்படி கூப்பிடலாம்ல? இன்னும் தம்பி வரலியா ? வீட்ல ஒன்னு பேச முடில. அத்தை பேச்சை மீற முடியாதுல. அதான். ஒன்னு வெசனப்படாத மலரு. நாங்கெல்லாம் இருக்கோம்ல.
உண்ட மாத்து துணி இருக்குதான்னு தெரியல. அதான் கொண்டுவந்தேன். கசகசன்னு இருக்கும்ல…இந்த புடவையைக் கட்டிக்கோ” எனப் பெரிய மனதுடன் ஒரு புடவையைக் குடுத்தாள், நித்ய கலா.
அந்தப் புடவை ஒன்னும் அத்தனை பிரமாதமாய் இல்லை. சாயம் வெளுத்து, நன்றாக நைந்து இருந்தது. இதையெல்லாம் பனிமலர் கவனிக்கும் நிலையில்லை. அவளுடைய இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் பார்த்திபனின் இரத்த துளிகளுக்காக ஏங்கி கொண்டிருந்தது.
பனிமலரின் இந்த அமைதியை தனக்குச் சாதகமாக்கி கொண்ட நித்யகலா, “அய்ய…இந்த வேக்காடுல எதுக்கு இம்புட்டு நகையைப் போட்டுக்கிட்டு இருக்க. வேணும்னா கொடு. நம்ம வீட்ல பத்திரப்படுத்தி வைக்கிறேன்” என மெல்ல காரியத்திற்குள் தாவ,
“என்ன சூர்யா பொண்டாட்டி… இரவையில தூங்காம இங்கன வந்துருக்கவ? என்ன சங்கதி ? உன்னோட அத்தகாரி எதையும் சொல்லிவிட்டாளா ?” எனக் கேட்டபடியே வந்து, நித்ய கலாவின் கையிலிருந்த சீலையை வாங்கிப் பார்த்த, பூவம்மாளின் முகம் சுருங்கியது.
அந்தச் சேலையைப் பார்த்ததும் பூவம்மாளுக்குப் புரிந்துகொள்ள நீண்ட நேரம் பிடிக்கவில்லை.
“மாத்து துணி கொண்டுவந்தியாக்கும்… பரவாயில்லடி அம்மா. நல்ல யோசனை தான். ஆனால் இது விலை உசந்ததா இருக்கும் போல. நீயே வச்சுக்கோ. அவளுக்கு அவளோட புருஷன் வாங்கித்தருவான்.
கட்டியிட்டு வந்தவன் கட்டிக்கச் சீல கூட வாங்கித்தராட்டி எப்படி ? நீ போ” என விரட்டிவிட,
பூவம்மாளின் நக்கல் பேச்சுப் புரிந்தாலும் அதை ஏற்க மனமில்லாமல், உதடை இழுத்துப் பிடித்துச் சிரிக்கமுயன்றபடி ஏமாற்றத்துடன் வெளியேறினாள், நித்ய கலா.
“என்ன புதுப் பொண்ணே? உன்னோட புருஷன் இன்னமுமா வரல ? சரி நான் இங்னவே இருக்கேன். நீ உள்ள படு…எப்படியும் வந்துடுவான்” எனக் கூறினாலும், அந்த வயதிற்கே உரிய அனுபவத்தோடு, பூவம்மாளின் சிந்தனை ஓடியது.
”என்னவோ சரியில்ல….” என்ற எண்ணம் பூவம்மாளின் மனதினில்.
நேரம் தான் ஓடியதே தவிர, இரவு முழுவதும் பார்த்திபன் வந்தபாடில்லை. பனிமலரும் ஒரு நொடி கூடக் கண் அசராமல் காத்திருந்தாள்… ஆனால், அவளின் எதிர்பார்ப்பு அன்று நிறைவேறவேயில்லை.
இரவு முடிந்து, பனிமலரின் திட்டத்திற்கும் முடிவுகட்டிவிட, கெட்டு போன பாலை, வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் மலர். மலரையும் திரிதிரியாய் கெட்டுவிட்ட பாலையும் பார்த்தபடி உள் நுழைந்த பூவம்மாள்,
“இப்படி உக்காந்தா ஆச்சா? அவசரமா கண்ணாலம் கட்டிக்கிட்டீங்க. இப்ப அவசத்தையில நிக்கிறீங்க. என்ன பொண்ணோ ?
பெத்தவங்க இல்லனு சொல்லிட்ட, கட்டிக்கிட்டவனும் என்னனு பார்க்கல. என்னவோ எனக்கு நெருடலா இருக்கு….” என அவர்பாட்டுக்கப் பேச,
அதை எதையும் காதில் வாங்காமல், “இப்ப அவரு எங்க இருப்பாரு ?” என நேரடியாகக் கேட்க, புருவத்தைச் சுருக்கி யோசித்தவர்,
“அவன் ஓட்டுற லாரிலையோ, இல்ல அந்த இத்து போன பூதத்தோட வீட்டு மாடிலையோ தான் இருப்பான். ஆள விட்டு நேத்தே கூட்டியாந்திருக்கலாம். ஆனால் , மூனா மனுஷ காதுக்குப் போனால், இந்த ஊருக்கே செய்தி போனது போல ஆகிடும்.
அதுனால தான் அவனா வரட்டும்னு பல்ல கடிச்சிக்கிட்டு இருந்தேன். நீ ஏன் ஆத்தா கேட்குற ?” என வினவ,
“எப்படிப் போகணும்னு சொல்லுங்க… நான் போய்ப் பாத்துக்கிறேன்” எனப் பேச்சை வளர்க்காமல் சட்டென்று கூறினாள்.
“அந்த முரட்டு பையனுக்கு இந்தப் பிடிவாத காரிதான் சரியா வருவா! அந்தக் காலம் மாதிரி காத்துக்கிடக்காம, கையோட கிளம்பி போறாளே? இந்தப் புள்ள பொலச்சுக்கிடும்” என மனதினில் நினைத்துக்கொண்டவர்,
“லாரி நிக்கிற இடத்துக்கெல்லாம் நீ தனியா போகவேணாம். அந்தப் பூதத்தோட வீட்டுக்கு வழி சொல்றேன். பக்கத்துக்குத் தெரு தான்” எனக் கூறி, வழியைக் காண்பித்துக்கொடுக்க, விறுவிறுவென்று வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.
மணி இன்னமும் காலை ஆறு கூட ஆகவில்லை. அதனால் வீதியில் பெரிதாகக் கூட்டமென்று எதுவுமில்லை. ஆங்காகே ஒருசிலர், கோலம் போடுவதும், சிலர் சைக்கிளில் செல்வதும் தென்பட்டது.
விறுவிறுவென்று நடந்தவள், பஞ்ச பூதத்தின் வீட்டின் முன்னால் சென்று நின்றாள். அது மிகவும் சிறிய வீடு. ஒரே ஒரு பொது அறை மட்டுமே அந்த வீட்டில் இருக்கவேண்டும் என்று வெளியிலிருந்து பார்க்கும் பொழுதே யூகிக்க முடிந்தது.
ஒடிசலாக ஓடிய சிறிய படிகள் அந்த வீட்டின் இடதுபுறமாக இருந்தது. கதவு திறந்து தான் இருந்தது…மெல்ல வீட்டிற்குள் எட்டி பார்க்க, அதற்குள் மேலிருந்து ஒரு சப்தம் கேட்க தொடங்கியது.
***
“எந்திரிடா எந்திரி… என்ன தூக்கம் வேண்டிக்கிடக்குத் தூக்கம்… ” எனப் பூதத்தை ஒரு பெண் எழுப்ப,
அவனோ, “எந்திரா…. எந்திரா…” எனப் பாட்டைத் தனக்குத் தானே முணுமுணுத்தபடி எழுந்து அமர்ந்தான்.
“ஏன் செல்லம் மாமா சிட்டி போலவா இருக்கேன்? எந்திரா எந்திரா னு கூப்பிட்ற ?” என ஆசையாக வினவ,
“நீ சிட்டி னு சொல்ல எழுப்பல எரும. எந்திரிச்சு சட்டிய கழுவுடா. எம்புட்டு தட்டு முட்டு சாமான் சேந்துகிடக்குது பாரு” எனப் பூதத்தை அந்தப் பெண் அதட்டிக்கொண்டிருந்தாள்.
“ஏண்டி எல்லா வேலையும் நானே செஞ்சால், அப்ப நீ என்னதாண்டி செய்வ?” எனக் கடுப்புடன் பூதம் வினவ,
“நான் டாட்ஸ் லிட்டில் பிரின்ஸ்… எனக்கு இந்த வேலையெல்லாம் செஞ்சு பழக்கமில்லை” எனச் சாதாரணமாக அந்தப் பெண் கூறிக்கொண்டிருந்தாள்.
“என்ன? லிட்டர் பெட்ரோலா ? நீ என்னத்துக்குப் பெட்ரோல் வாங்க போற ? உங்க அப்பாக்கு வேணுமா ?” எனத் தலையைச் சொரிந்தபடி பூதம் வினவ,
“இங்கிலிஷ் தெரியாத உன்ன போய்க் கட்டிகிட்டேன் பாரு…உண்ணலாம்…” எனப் பற்களைக் கடித்தபடி அந்தப் பெண் பரபரவெனக் குனிந்து எதையோ தேட,
“எனக்காச்சும் இங்கிலிஷ் தான் தெரியல. இவளுக்குக் கண்ணே தெரியல போல…இப்படி என்னத்த தேடுறா ?” என வாய்விட்டு உளறிவிட, அந்தப் பெண் பத்ரகாளியானாள்.
வழக்கம் போல, பூதத்தின் முதுகில் அடி சர மாறியாக விழ, “வேணாம்…விட்டுடு. அழுதுடுவேன்.” எனத் தூக்கத்தில் புலம்பிக்கொண்டிருந்தான் பூதம்.
ஆம்! எப்போதும் போல், இன்றும் பூதம் கனவில் தான் கத்திக்கொண்டிருந்தான். “விட்டுடு, விட்டுடு….” எனக் கத்தியவன், பக்கத்தில் படுத்திருந்த பார்த்திபனை அந்தப் பெண் என நினைத்து தள்ளிவிட,
அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான் பார்த்திபன்.
கிட்டத்தட்ட நான்கு மணி வரையிலும் கூடப் பார்த்திபன் மனதினை பல எண்ணங்கள் சூழ்ந்திருக்க, தன்னையும் அறியாமல் கண்ணயர்த்திருந்தான்…
“பூதம்….” எனப் பஞ்ச பூதத்தைப் பார்த்திபன் உலுக்கிய பிறகே, கண்களைக் கசக்கியபடி எழுந்து அமர்ந்து, “கனவா?…” என மலங்க மலங்க விழித்தான்.
“ஏண்டா நீயும் என்ன படுத்துற?” எனப் பார்த்திபன் சலிப்புடன் வினவ,
“இல்லை நண்பா…அந்த நைய்யமா தான் வந்து நச்சுப்புட்டா. அதுவும் அதே நயிட்டில…” எனப் பரிதாபமாகக் கூற, படுத்திருந்த பாயை சுருட்டியபடி எழுந்து நின்றான் பார்த்திபன்.
“மன்னிச்சுடு நண்பா…. இப்போ என்ன பண்ண போறோம்? அந்த அம்சாகிட்ட இருந்து தப்பிச்சாச்சு. ஆனால், இந்தப் பொண்ணு யாரு ?” என மீண்டும் இரவு விட்ட இடத்திற்கே வந்தான்.
“இதைத் தான இராத்திரி முழுக்கப் பேசுன” எனப் பார்த்திபன் கூற,
“ஆமாம்டா… நீ பேசமாட்டீங்கிரியே? அதான் நான் பேசுறேன். உன்ன புருஷன்னு சொல்லுது. நீயும் கேட்டுகிட்டு கமுக்குனுல இருக்க” எனக் கூற,
“வேற என்ன பண்ண சொல்லுற? நான் இல்லனு எப்படிச் சொல்லுறது ? சொன்னால், அப்ப என்னோட வண்டில இருந்த பொண்ணு யாருனு கேள்வி வரும். அப்படிக் கேள்வி வந்தால், நான் அந்தப் பொண்ண தெரியாதுனு சொல்லிடலாம். ஆனால், அத இந்த ஊரும் ஜனமும் நம்புமா ?
சும்மாவே லோட் ஏத்த போற லாரி காரவங்கனாலே, அப்படி இப்படிப் பேசுற உலக இது. ஒரு பொண்ணு வந்து இறங்கி, புருஷன்னு சொல்லுறப்ப , இல்லனு நான் சொன்னால், இந்த ஊரு என்ன முன்னைவிட்டு பின்ன என்னோட ஒழுக்கத்தைத் தப்பு சொல்லும்.
அதுலயும் பொண்ணுங்க விஷயத்துல என்ன ஒரு சொல்லு சொன்னால், அது எங்க குடும்பத்துக்குப் பெரிய அவமானம். அதோட, இவ்வளவு ஊக்கமா சொல்லுதுனு, அந்தப் பொண்ண சபைல வச்சு கேட்டால் எத்தனை கேட்டாலும் உண்மையா சொல்லாது.
நான் இல்லனு சொன்னால், தாலி கட்டிட்டு ஏமாத்த பாக்குறேனு சொல்லும். ஏதோ முடிவோட தான் வந்திருக்காள். என்னனு நிதானமாத்தான் பார்க்கணும்.” என விளக்கமளிக்க,
“இம்புட்டுத் தெளிவா பேசுற நீ, எதுக்கு இரா முழுக்கத் தூங்காம வானத்த வெறிச்சு பார்த்து கிடந்த?”
“எல்லாம் என்னோட குடும்பத்தை நினைச்சுதான்.”
“அவுங்கள பத்தி நினைக்க என்ன இருக்கு நண்பா ?”
“யாருமே என்ன நம்பவே இல்லையே ? ஏண்டா பூதம் ? அம்மா கூட ஏன் என்கிட்ட எதுவும் கேட்கல. அண்ணன் ? அண்ணன் கூட மூணாவது மனுஷன்கிட்ட பேசுறது போலப் பேசுச்சேடா ?” என வினவிய பார்த்திபனின் குரலில் வலியின் சாயல் நன்றாகத் தெரிந்தது.
பார்த்திபனுக்குக் குடும்பம் மட்டுமே பிரதானம். அவனால், அவர்களின் இந்தப் பாராமுகத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
“இந்த நிமிஷவரைக்கும் அவுங்களுக்காகப் பார்த்து பார்த்து பண்றேன் பூதம். ஆனாலும், நான் இப்படியொரு காரியத்தைப் பண்ணியிருக்க மாட்டேன்னு ஏன் அவுங்களுக்குத் தோணல.” என மீண்டும் புலம்ப,
“நண்பா…நீ பாசம் காட்டுற அளவுக்கு” எனத் தொடங்கிய பூதத்தைத் தடுத்த பார்த்திபன்,
“நீ எதுவும் சொல்லவேணாம். என்னோட குடும்பத்தைப் பத்தி ஒருவார்த்தைகூடத் தப்பா பேசாத.
நான் செத்துப் போனால் கூட வலிக்குமான தெரியாது. ஆனால் என்னோட குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சா சாகுறதைவிட நான் அதிக வலிய அனுபவிப்பேன். நான் மொதல்ல அம்மா கிட்ட பேசணும்.
அதுக்கப்பறம், வந்த பொண்ணு யாருனும் என்ன வேணும்னும் தெருஞ்சுக்கணும்…” எனக் கூற,
படிகளில் நின்று இதைக் கேட்டுக்கொண்டிருந்த பனிமலரோ, “எனக்கு என்ன வேணும்னு கேட்டு தெருஞ்சுக்கப்போறியா ? உன்னோட உசுரு தான்.
ஆனால் , இப்ப உன்னோட உசுரைவிட, உன்ன சாகடிக்கிறதைவிட, உன்ன உயிரோட செத்து செத்து வாழவைக்கிறது சரியா இருக்கும்னு நினைக்கிறேன்.
நான் அனுபவிக்கிற அதே வலிய, உன்னையும் அனுபவிக்க வைக்கிறேன்” எனச் சூளுரைத்துக்கொண்டாள்.
ஆம்! ஒருநொடி வலியை தரும் மரணத்தைவிட நொடிகூட வலியில்லாமல் வாழவைக்கும் நரகத்தைத் தர முடிவு செய்தாள், மலர்!

Advertisement