பூவம்மாளுக்கு, மாதம் பிறந்தால் செலவுக்கென்று குறிப்பிட்ட தொகையை அனுப்பிவைப்பர். ஆனால் பாசத்திற்குத் தான் பஞ்சம். இருந்தாலும் யாருடைய சங்கதியிலும் அனாவசியமாக நுழையமாட்டார். அவராக வந்து கருத்து சொல்வதென்பது அரிது!
ஏனோ பூவம்மாளுக்குப் பார்த்திபனை காணும்போதெல்லாம் தர்மேந்திரனையே பார்ப்பதாகத் தோன்றும். அதனால் தான், பார்த்திபனின் இந்தத் திடீர் திருமணத்திற்குக் கூட ஆதரவு தருகிறார்.
“அத்தை, என்னோட மனசு எதையும் யோசிக்கிற நிலமைல இல்ல. நீங்க சொல்லுங்க…” எனத் தனது பிடித்தமின்மையை நாசுக்காகக் கூறிவிட்டு, தாமினி ஒதுங்கி நின்றார்.
அடுத்து பூவம்மாள் காரியத்தைத் தன் கையினில் எடுத்துக்கொண்டார்.
“அம்மாடி சூரியா பொண்டாட்டி…விரசா போய் ஆரத்தி கரைச்சுக் கொண்டு வா” எனக் கூற,
தாரா தேவி, “இங்க தான் ரூம் இல்லையே ?” என இடைப்புக,
“அம்மாடி தாரா, உன்னோட ரூமை கொடுக்கவேண்டாம். அந்தப் புள்ளைங்கள உங்க அப்பா முன்னாடி ஆசீர்வாதம் வாங்க வைக்கத்தான்.
நான் ஓர் ஏற்பாட மனசுல வச்சிருக்கேன். அது முடியிற வரைக்கும் என்னோட வீட்ல இருக்கட்டும். ஒத்தையா தானே இருக்கேன். நீ கவலை படாத” எனக் கூற,
அடுத்தடுத்துக் காரியங்கள் விரைவாக நடக்கத் தொடங்கின. ஆனால், பார்த்திபனிடம் வழக்கத்தைவிட அமைதி அதிகமாக இருந்தது. அவன் என்ன சிந்திக்கிறான் என்று யாருக்கும் அறியவில்லை. அறியவில்லை என்பதைவிட அறிய யாரும் பிரியப்படவில்லை.
“கலா… அந்தப் பிள்ளைங்களை உள்ளார கூப்பிடு” எனக் கூற, ஆரத்தி தட்டுடன் சென்றவள் வாசலில் நின்றிருந்த பனிமலர் மற்றும் பார்த்திபனை நோக்கி ஸ்நேகமா புன்னகை சிந்தினாள்.
ஆரத்தியை சுற்றியவள், “வலது காலை எடுத்து வச்சு வா…” எனக் கூற,
“ஏன் இடது கால வச்சால் ஒத்துக்கமாட்டீங்களா ?” எனப் பூதம் வினவ,
“ச்ச ச்ச அதெல்லாம் இல்ல. என்னோட புருஷன்கிட்ட சொல்லி வெட்டிருவேன். அதிகமா வாய் பேசுறவன் கால” எனக் கூற,
“ஆத்தி…அம்பி மாறி ஆரத்தி எடுத்திட்டு இப்ப அந்நியன் மாறி கால எடுக்கப் பாக்குறியே அண்ணி” எனப் பூதம் புலம்ப,
நண்டு அருகில் நின்றுகொண்டு, “அப்போ அண்ணி ரெமோவா மாறுவங்களா ? அத எப்ப பாப்போம்” தீவிரமாக வினவ,
“நீங்க மரியாதை கொடுத்தா தான் போவேன்” என நண்டு அடம்பிடிக்க,
“அடேய்! எங்க அந்த உலக்கை, இவன் மண்டைய பொளக்கல நான் பூதமில்ல டா” எனக் கூறியபடி அக்கம் பக்கம் தேட, நண்டு அதற்குள் சிட்டாய் பறந்து மறைந்திருந்தான்.
“நல்லா உருண்டையா இருந்துகிட்டு இந்த ரோட் ரோலர் எப்படி வேகமா உருளுது….பார்த்திபா இந்த நண்டு தொல்லை தாங்க முடிலப்பா” என வாய் விட்டுப் புலம்பிக்கொண்டிருந்தான், பூதம்!
“அடேய்! பூதம். நீ தான் சின்னப் பிள்ளைங்களுக்குக் கல்யாணம் கட்டிவச்சியா ? இனி கறி கஞ்சி வாடையை மோப்பம் பிடிச்சிட்டு வீட்டுப் பக்கம் வந்த, மூஞ்சில உப்பு மிளகாய்யத் தேச்சுவிற்றுவேன்” எனப் பூவம்மாள் அதட்டலாகக் கூற,
“நான் என்னைச் சமைஞ்ச பொண்ணா? அடக்க ஒடுக்கமா இருக்க…போவியா” என வாயடித்துக்கொண்டிருக்க,
அதற்குள் நிலா பார்த்திபன் பனிமலர் என இருவரையும் உள் அழைத்தனர்.
அவர்கள் இருவரும் உள் நுழைந்ததும் கலாவை தவிர மற்றவர்கள் அந்த வீட்டின் அறைக்குள் சென்று முடங்கிவிட, மற்றவர்களின் செய்கை பூவமாளுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
புதிதாய் வந்த பெண் சுணங்கிவிடுவாளோ என்ற எண்ணத்தோடு பனிமலரை பூவம்மாள் பாட்டி பார்க்க,
மறுபுறம் பனிமலரோ இரும்பு பதுமை போல நின்றிருந்தாள். அவள் முகத்தினில் சிரிப்பில்லை வெறுப்பில்லை கோபமுமில்லை… உணர்ச்சிகளைத் துடைத்த முகம்… இன்றைய ஒரே நாளில் பனிமலர் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாள்.
உறுதி, அழுத்தம், கோபம், பிடிவாதம், தைரியம் என அனைத்தையும் பிரதிபலித்த அவளின் முகம், தற்சமயம் எந்தவொரு உணர்வையும் பிரதிபலிக்கவில்லை…
பூவம்மாளின் பிருவங்கள் சிந்தனையுடன் முடிச்சிட்டன.
“ஆத்தா…போய்ச் சாமிக்கு விளக்கேத்திட்டு உன்னோட மாமானாரு படத்துக்கும் விளக்கேத்து” எனக் கூற,
பார்த்திபன் பனிமலர் இருவரும் ஒரே நேரத்தில் ஒரே குரலாய், “வேண்டாம்…” எனத் தடுத்தனர்.
அதுதான் இருவரும் இந்த வீட்டிற்குள் வந்து பேசிய முதல் வார்த்தை. அந்த வார்த்தையையும் ஒரே சமயத்தில் இருவரும் சொல்லியிருக்க, பூவம்மாள் கேள்வியாக இருவரையும் ஏறிட்டார்.
“ஏன் அப்படிச் சொல்லுறீங்க?” என வினவ,
“அம்மா மொதல்ல புருஞ்சுக்கட்டும்” எனப் பார்த்திபன் பொதுப்படையாக ஒருவார்த்தையை வைத்தான். ஆனால், அவன் எண்ணமோ, “இந்தப் பொண்ணு யாரு என்னனு தெரிஞ்சுக்கணும்.” என எண்ணமிட,
இவர்கள் இருவரும் இவ்வாறாக எண்ணமிட, பூவம்மாளோ, “விளக்கையையே ஏத்த யோசிக்கிற பிள்ளைங்க, வீட்டுக்காக வாழ்க்கையைத் தொடங்காமவிட்டுடா ?
ஒண்ணுமண்ணா வாழ்ந்தா தான எட்டி நிக்கிற உறவுகள் கூட ஓட்டிவரும். ஏற்பாடு பண்ணுறேன்” என மனதிற்குள் முடிவெடுத்துக்கொண்டார்.
அவர்களின் பின்னால் நின்ற பூதமோ, “அம்சா கிட்ட இருந்து காப்பாத்த இந்தப் பொண்ணுக்கு வக்காலத்து வாங்கிட்டேன். ஆனால், இந்தப் பொண்ணு யாரு ? எதுக்குப் பார்த்திபன் வாழ்க்கையில வரணும் ?
சரி விடு… எது எப்படினாலும் நம்மள மீறி என்ன ஆக போகுது ?
பூதமா கொக்கா ?” எனத் தனக்குள் பேசிக்கொண்டிருக்க,
பார்த்திபன் வீட்டில் பேருக்கென்று ஐந்து நிமிடங்கள் இருந்தவர்களை இரண்டு வீடுகள் தள்ளி இருந்த தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார், பூவம்மாள். பார்த்திபனின் மன நிலையோ பெரிதும் குழம்பியிருந்தது….
அம்மாவிடமும் பேச முடியவில்லை…பனிமலரிடமும் பேச வாய்ப்பில்லை…
ஊரார்கள் ஒருவர் பின் ஒருவராக நலம் விசாரிக்க, தகவல் சேகரிக்க எனப் பார்த்திபனை சூழ்ந்துகொள்ள, பார்த்திபன் மிகவும் இறுக்கமான சூழலில் நின்றிருந்தான்.
இத்தனை ஆர்ப்பாட்டங்கள் நிறைந்திருந்த அந்த நாளின் இரவும் வந்தது.
ஆம்! பூவ்வம்மாள் பாட்டி பிடிவாதமாக அவ்விருவருக்கான சடங்கை அன்றே நிறைவு செய்யவேண்டுமென்று அவருடைய வீட்டில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
இந்த ஏற்பாடு சங்கதி பார்த்திபனை எட்டவில்லை. ஆனால், பனிமலரை எட்டியிருந்தது.
அன்றைய ஒருநாள், பார்த்திபனின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டிருந்தது….
லோட் இறக்கிவிட்டு வந்தால் சாதம் பரிமாற அம்மா வரவில்லை. ஏதவொன்றை வாங்கி வர சொல்லி அக்கா வரவில்லை. இந்த வார செலவு கணக்கென்று அண்ணனும் வரவில்லை…
ஏன் காலையிலிருந்து பார்த்திபன் ஒரு வாய் நீர் கூடக் குடிக்கவில்லை. வீடு வந்தால் தன்னைச் சுற்றிக்கொள்ளும் உறவு ஏதுமே இல்லாமல் தனிமையில் நின்றான். அந்தத் தனிமை அவனுக்குக் கோபத்திற்குப் பதிலாய் பல கேள்விகளைத் தந்தது….
என் மீது ஏன் யாரும் நம்பிக்கை கொள்ளவில்லை… ஏன் என்னிடம் ஒருவார்த்தைகூட விசாரிக்கவில்லை… இதையெல்லாம் நான் கூறினால் காது கொடுத்தேனும் கேட்பார்களா…
பார்த்திபனால் இந்த நிலையைத் தவிர்த்திருக்க முடியும். இவள் யாரென்று தெரியாது என்னக் கத்தி சொல்லியிருக்க முடியும். ஆனால் பார்த்திபன் அதைச் செய்யவில்லை…
அதற்குக் காரணமும் இருந்தது.
புதிதாக வந்தவள் கூறியதை, தன் ஒட்டுமொத்த குடும்பமும் நம்புகிறது. அப்படியென்றால் அதை, தான் மறுத்தால் இந்த ஊர் நம்புமா ? கல்யாணம் இல்லை என்று சொல்லிவிடலாம்…ஆனால் தனது வண்டியிலிருந்து ஒரு பெண்ணல்லவா இறங்கி வந்திருக்கிறாள் ? இதற்கு அவன் என்ன காரணம் கூறுவான் ?
முன் விட்டுப் பின் பேசும் ஊர் இது என நன்கு அறிந்திருந்தான். தான் இனி சொன்னாலும் சொல்லாவிடிலும் ஊர் அதை நம்புவதற்கில்லை…ஊரை விட்டாலும், அவனின் குடும்பமும் நம்புவதற்கில்லை.
அதையுமீறி நூற்றில் ஒரு பங்காக நம்பிக்கைக்கொண்டால், இதையே காரணம் காண்பித்து அம்சவேணியுடன் தன்னுடைய கல்யாணம் மீண்டும் நடைபெறும்.
அந்தத் திருமணமும் இரண்டாவது திருமணம் என்றே இந்த ஊரால் அடையாளப்படுத்தப்படும். இது அம்சவேணி மற்றும் வேலுசாமியின் கை ஓங்குவதற்குக் காரணமாகும்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, பனிமலரை குறித்தும் சிந்தித்தான். ஒரு பெண் இத்தனை துணிச்சலாக வந்து நிற்கின்றாள்… கடுகளவும் சலனமில்லாமல் பொய்யுரைக்கிறாள். இவள் யார் ? இவளுக்கு என்னிடம் என்ன தேவை ?
இவையனைத்தையும் மிகவும் பக்குவமாகக் கையாளவேண்டும். அப்படிக் கையாள்வது மட்டுமே ஒரே வழி… இது தான் பார்த்திபனின் எண்ணம். இச்சூழல் யாரையும் அடியோடு நிலைகுலைத்துவிடும், ஆனால் பார்த்திபன் அவசரப்படவில்லை. மிக நிதானமாக அனைத்து கோணத்திலும் சிந்தித்தான்..
இது தான் பார்த்திபனின் எண்ணமாக இருந்தது. மௌனம் சாதிதான்…இந்த மௌனத்தின் விளைவு என்னவாக இருக்கும் ? அவன் உயிரையே வைத்திருக்கும் குடும்பத்தின் நடவடிக்கை இனி என்னவாக இருக்கும்….?
மறுபுறம்,
“இந்தா ஆத்தா… இங்கன காத்திரு. உன்னோட புருஷன் கொஞ்சம் வருத்தத்துல இருக்கான். நான் புத்தி சொல்லி அனுப்புறேன். இங்கன உன்ன பார்த்துக்க அவனை விட்டா ஆளு இல்லனு அவனுக்கு இன்னும் புரியல. ஆத்தாகாரி பேசலனு நொந்து போயிருப்பான்…
இந்தா வயித்த காயபோடாத. சாப்பாடு தான் சாப்பிடல. இதுல பாலு இருக்கு. அவனை அனுப்பிவைக்கிறேன். நீயும் உன்னோட புருசனும் குடிங்க” எனக் கூறி செல்ல, பனிமலர் மறுக்காமல் அந்தப் பால் செம்பை வாங்கிகொண்டாள்.
பூவம்மாள், கூறியதை போலவே பார்த்திபனை அதட்டி உருட்டி அனுப்பிவைக்க, பார்த்திபன் , “இதோ போறேன் பாட்டி” என வேறு வழியின்றி புறப்பட்டான்.
அதேவேளையில், இத்தனை நேரமாகத் தனது இடையில் மறைத்து வைத்திருந்த சிறு பாட்டிலை வெளியே எடுத்தாள், பனிமலரின்! அவளுடைய கண்கள் எரிமலையாய் கனலை கக்க, ஆவேசமாக அந்தப் பாட்டிலில் இருந்த விஷத்தை பார்திபனுக்குக் கொடுக்க வைத்திருக்கும் பாலில் கலந்தாள்…
“உன்னோட கதை இன்னையோட முடியப்போகுது” என முணுமுணுப்பாகவும் அதேநேரத்தில் வெகு அழுத்தமாகவும் பனிமலரின் வார்த்தைகள் வெளிவந்தன.