Advertisement

பகுதி – 6
”சொல்லு பா…” என மீண்டும் பஞ்சாயத்துக்காரர் வலியுறுத்த, “இங்க நான் சொல்ல என்ன இருக்கு?” என நிதானமாக வினவினான் பார்த்திபன்.
“வேலுசாமி தன்னோட பொண்ணுக்கு என்ன வழின்னு கேட்குறாரு…” எனக் கூற,
“ஏங்க…அந்த பொண்ணுக்கு என்ன வலின்னு அதுகிட்ட கேட்காம எங்ககிட்ட கேட்டால் ? நாங்க என்ன டாக்டரா ? இல்ல ஆஸ்பத்திரி எதுவும் கட்டிவிட்ருக்கோமா ? ” எனச் சிரிக்காமல் பூதம் சொல்ல,
“இவன் வேற நேரங்காலம் தெரியாம…ஏப்பா பார்த்திபா பதில் சொல்லு”
“இதோ பாருங்க…இன்னைக்கு எனக்குக் கல்யாணம்னே இங்க வந்து தான் தெரியும். நான் சொல்லுற வார்த்தைக்கும் வாக்குக்கும் தான் நான் பொறுப்பு…
என்னோட முதுகுக்குப் பின்னாடி இவர் செஞ்ச வேலைக்கு நான் எப்படிப் பொறுப்பாவேன் ?” என எதிர்கேள்வி கேட்க,
“பார்த்திபன் சொல்றது சரிதானே?” எனப் பஞ்சாயத்தில் சலசலக்க, வேலுசாமி பதில் பேசமுடியாமல் தடுமாறினார்.
“ஏப்பா மாப்பிள்ளைக்கே தெரியாம கல்யாணத்த ஏற்பாடு செஞ்சது நீ… இதுல பார்திபன்கிட்ட வழி கேட்டு நிக்கிறது அர்த்தமில்லை” எனக் கூற,
வேலுசாமி பதில் பேசமுடியாமல் கோபத்தைப் பனிமலரின் புறமாகத் திருப்பி, “எல்லாம் இந்த ஓடுகாலினால வந்த வினை. எவ்ளோ துணிச்சலிருந்தா எம்பொண்ணு வாழ்க்கையைக் கெடுக்க வந்திருப்ப ? இவள…” எனக் கையை ஓங்கிக்கொண்டு முன்னேற,
“நிறுத்துங்க!” என உறுமினான் பார்த்திபன்.
“முன்ன பின்ன தெரியாத பொண்ண கைநீட்டுற உரிமை உங்களுக்கு இல்ல.” என அழுத்தமாக உச்சரிக்க, அவனின் ஆளுமையில் அந்த இடத்தின் கூச்சலும் வேலுச்சாமியின் ஆட்டமும் அடங்கிப் போனது.
“ஓ உன்னோட பொண்டாட்டிய சொன்னால் உனக்கு இடிக்கிதோ? தட்டிகேட்பீங்களோ ?”
“தட்டிக்கேட்க பொண்டாட்டியா இருக்கணும்னு அவசியமில்லை. யாரு வேணும்னாலும் யாருக்காக வேணும்னாலும் நடக்கிற அநியாயத்தைத் தட்டி கேட்கலாம்”
“அப்போ எம்பொண்ணை எந்த நியாயத்துல உன்னோட பொண்டாட்டி அடிச்சாலாம்?”
“உங்க பொண்ணு எந்த நியாயத்துல அவளை அடிச்சாலோ அதே நியாயத்துல தான்” எனப் பார்த்திபன் பதில் கொடுக்க,
“நியாயம் அநியாயத்தைப் பத்தி பேசுற ஆள பார்த்தியா…. அநியாயம்டா நண்டு. இதெல்லாம் எவனும் கேட்கமாட்டானுங்க” என நண்டின் காதில் கடித்தான் பூதம்.
“அடேய்! நான் பேசிட்டு இருக்கேன்.. நீ எங்க டா பேசிட்டு இருக்கும் போதே போற…” என அங்கிருந்து புறப்படப் போன நண்டை மடக்கி பூதம் கேட்க,
“என்ன அண்ணே விளையாடறீங்க? நீங்க தான கேட்க சொன்னீங்க. இருங்க அவர்கிட்டயே போய்க் கேட்டுட்டு வரேன்” எனப் புறப்படப் போக,
“அடேய் நில்லுடா நில்லு… வினையை வேஸ்டில கட்டிட்டு சுத்துற ஒரே ஆளு நான் தான். எல்லா என் கிரக. நீ எங்கையும் போக வேணாம் ராசா. இங்கையே நில்லு” என நண்டின் லுங்கியை பிடித்து இழுத்து நிறுத்தினான்.
“இதோ பாருங்க! இந்தப் பஞ்சாயத்துக்கு நான் சொல்லுற ஒரே விஷயம் இது தான்.
இங்க வேலுசாமிக்கு எந்த வேலையுமில்லை. அவரு பஞ்சாயத்துல பிராது கொடுக்க உரிமையுமில்லை… கட்டிக்கப்போறவனுக்கே தெரியாம கல்யாணம் பேசுனதும் தப்பு, அதை மணமேடைவரை கொண்டு வந்ததும் தப்பு…
வந்த பொண்ண, என்ன ஏதுன்னு விசாரிக்காம ஊரறிய அடிச்சதும் தப்பு. அடிச்சதுக்கு அடிவாங்குன அந்தப் பொண்ணே, அம்சவேணிக்கு பதிலடி கொடுத்திருச்சு…
அதுனால இதுல பேசுறதுக்கோ நான் சொல்றதுக்கோ எதுவுமில்லை. வேலுசாமியையும் அம்சவேணியையும் ஒதுங்கி போகச் சொல்லுங்க” என உரக்க கூற,
பார்த்திபனின் பேச்சிலிருந்த தெளிவிலும் உறுதியிலும் பஞ்சாயத்துக்காரர்கள் அவனுடைய சொல்லை ஏற்றுக்கொண்டனர்.
“அப்போ இந்தப் பொண்ணுக்கு என்ன வழி? ஆத்தா உன்னோட பேரு என்ன சொன்ன ?” எனப் பஞ்சாயத்து காரர் வினவ,
மீண்டுமொருமுறை, “பனிமலர்! என்னோட பேரு!!” எனத் தெளிவாக உச்சரித்தாள்.
மேற்கொண்டு அவர்கள் பேசுவதற்கு முன்னதாக, ” உங்களோட முடிவை சொல்றதுக்கு முன்னாடி நான் சொல்றதையும் கேட்டுக்கோங்க…எனக்கான வழியைக் காண்பிக்கக் கூடியவரும் என்னோட வலிய போக்க கூடியவரும் இங்க நிக்கிற இவர் தான். இவரால மட்டும் தான் முடியும்” எனப் பார்த்திபனை சுட்டி காண்பித்தவள்,
மேலும் அவளே தொடர்ந்து, “சபையிலே எல்லாத்தையும் உடைச்சு பேச நான் விரும்பல. இந்த நிமிசத்துல அவரு எங்க இருக்காரோ அங்க இருக்கத்தான் நான் விருப்பப்படுறேன். வேற எந்த வழியை நீங்க சொன்னாலும், இதே இடத்துல என்னோட உசுர விடவும் நான் யோசிக்க மாட்டேன்…இப்ப உங்க முடிவை சொல்லுங்க…” என அதிரடியாகக் கூற, பனிமலரின் இந்தத் துணிகரப் பேச்சை கண்டு, கூடியிருந்த ஒட்டுமொத்த ஊரும் வாய் மேல் கைவைத்தது….
“இந்தப் பொண்ணு துணிச்சல்காரிதான்…” என்ற வியப்பான வார்த்தைகளைச் சிலர் நேர்மறையாகவும் சிலர் எதிர்மறையாகவும் கூறினார்கள்.
மக்கள் பலவிதமிருக்கும் இந்தப் பூமியில் கருத்துக்கள் மட்டும் ஒருமித்ததாய் இருக்குமா என்ன ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம்…
ஆனால், மற்றவர்களின் வார்த்தைகளும் பார்வைகளும் தன்னை சிறிதும் பாதிக்காமல் துணிச்சலுடன் நின்றிருந்தாள், பனிமலர்!
“ஏப்பா பார்த்திபா… என்னப்பா இந்தப் பொண்ணு இப்படிச் சொல்லுது? இப்ப என்ன பண்ண போற ?” எனப் பஞ்ச பூதம், பார்த்திபனின் காதில் கிசுகிசுக்க,
பார்த்திபன் ஏதும் சொல்லாமல் மௌனம் சாதித்தான்.
“எது எப்படினாலும், இப்ப நீ அந்தப் பொண்ண தெரியாதுன்னு சொல்லிடாத நண்பா… இங்க இருக்கவனுங்க அந்தப் பொண்ண கொண்ணே போட்ருவானுங்க.
அந்தப் பொண்ணு ஏன் இப்படிப் பண்ணுதுனு தெரியாது…நல்லதோ கெட்டதோ இந்தப் பொண்ணுனால தான் அந்த அம்சா கிட்ட இருந்து நீ தப்பிச்சிருக்க. இந்த மலர் பொண்ணு வரலைனா, கண்டிப்பா உங்க அம்மா பேச்சை நீ மீறியிருக்க மாட்ட. இந்நேரம் உன்னோட வாழ்க்கையே முடிஞ்சிபோயிருக்கும்…” எனக் கூற, இதற்கும் பார்த்திபன் எந்தவொரு பதிலையும் கூறவில்லை.
மௌனமாகவும் அழுத்தமாகவும் நின்றான்…
இவர்களின் பேச்சு இவ்வாறாக ஓடிக்கொண்டிருக்க, அதற்குள் பஞ்சாயத்துக்காரர்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்…
“தாலிகட்டி வந்த பொண்ண, விறட்டிவிடுறது நம்ம ஊரு வழக்கமில்லை. அதே போல வேலுசாமியோட பொண்ணு நிலைமைக்கும் வேலுசாமியே தான் காரணம்.
ஊரறிய அந்தப் பொண்ணு பார்த்திபனை விட்டு அனுப்பினா உசுர விட்டுடுவேன்னு சொன்ன பிறகு, எந்தவொரு பேச்சுக்கும் இங்கன இடமே இல்ல.
பெரிய குடும்பத்துக்காரங்க பார்த்திபனோட இந்தப் பொண்ணையும் ஏத்துக்குறது மட்டும் தான் சரியா இருக்கும். ஒருவேளை, அவுங்க, இவுங்க ரெண்டு பேரையும் சேத்துக்க விருப்ப படலனா, இவுங்க தனிக்குடுத்தனம் இருந்துகட்டும்…இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டும், பெரிய குடும்ப அவுங்களுக்குள்ள முடிவெடுத்துக்கட்டும்…” எனத் தீர்ப்பு வழங்க, பார்த்திபன் பதிலெதுவும் சொல்லாமல் ஆராய்ச்சியாகப் பனிமலரை காண, பனிமலரோ அலட்சியமாகப் பார்த்திபனை பார்த்தாள்.
மறுபுறம், வேலுசாமியின் கட்டாயத்தின் பெயரில் வந்திருந்த சூரியவர்மனும் நித்ய கலாவும் சற்று ஒதுங்கி தலையிடாமல் பட்டும் படாமல் நின்றிருந்தனர்.
“அப்பாடா… தனிக் குடுத்தனம் போய்த் தொலையட்டும். ஒரு டிக்கட் தொலைச்சுச்சு…இதே போல அக்கானு தெண்டமா உக்காந்திருக்கிறதை தொரத்திவிட்டுடா எனக்கு ரூட் கிளியர் ஆகிடும்…” என மனைவிடம் கிசுகிசுக்க, நித்ய கலாவோ பதில் பேசாமல் அமைதியாகப் பனிமலரை பார்த்திருந்தாள்.
“ஏண்டி…புறப்படு” எனச் சூரியவர்மன் அவளை இடிக்க, “கொஞ்சமாச்சும் புத்தி இருக்கா? ” எனப் பட்டென்று கேட்க,
“புத்தி இருந்தால் உன்ன ஏண்டி கட்ட போறேன்” எனச் சலிப்புடன் சொல்லிக்கொண்டான் சூரியவர்மன்.
“இந்த வாய் சவடாலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. உங்க தம்பி தனியா போய்ட்டா, யாரு வீட்டுச் செலவு பண்றது? உங்க அக்கா ஒரு நயா பைசாகூட எடுக்காத பிசாசு.
அப்புறம் மொத்த செலவும் நம்ம தலைமேல விழும். உங்க தம்பி காசுல குடும்பத்தை ஓட்டுனாதான், உங்க சம்பாத்தியத்தை, தனியா சேத்து வைக்கமுடியும். அப்புறம், நமக்குன்னு நம்ம சொந்தமா இடம் வாங்கிப் போகணும்… இப்ப அவனைத் தொரத்திட்டா, நம்ம திட்டம் என்ன ஆகுறது ?” என வினவ,
“அட ஆமாம் டி…நான் மறந்தே போய்ட்டேன்.”
“என்ன நோமாம் டி…இப்ப பேசுங்க… அது மட்டுமில்ல, அந்தப் பொண்ணு கழுத்து காதுனு எல்லாம் தங்கம். எப்படியும் நூறு சவரன் இருக்கும்.
இவளை எப்படி நாம வெளிய அனுப்புறது ? இப்ப சவரன் விலை தெரியும்ல… நாப்பதாயிரம்.
என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ தெரியாது..ரெண்டு பேரையும் வீட்டுக்கு வர வைங்க, அதே சமயம் ரொம்பத் தாங்கி கூப்பிடாதீங்க. வீட்ல இரண்டு ரூம் தான் இருக்கு. ஒன்னு உங்க அக்கா தங்கிருக்கு. இன்னொன்னு நம்ம தங்கிருக்கோம்
நம்ம கட்டாயப்படுத்திக் கூப்பிட்டால், அப்புறம் தங்குறதுக்கு நம்ம ரூம் கொடுக்க வேண்டி வந்திடலாம். அதுனால கூப்பிடறது போலவும் இருக்கணும் , கூப்பிடாதத போலவும் இருக்கணும். பார்த்துக்கோங்க” எனக் கூறி செல்ல,
சூரியவர்மன் என்ன செய்வதென்று தனக்குள் கணக்கு போட தொடங்கினான்.
பிறகு தனக்குள் முடிவெடித்துக்கொண்டவனாக, அவர்களை நோக்கி சென்றவன் பஞ்சாயத்துக்காரர்களைப் பார்த்தபடி,
“பார்த்திபன் இப்படியொரு முடிவை எடுப்பானோ, எங்க பேச்சை மீறுவானோ நானும் அம்மாவும் நினைக்கவே இல்ல. ஆனால் நடந்திரிச்சு…
நிச்சயமா என்னால உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஆனால், அம்மாவோட கோபம் குறைஞ்சால் சரியாகலாம்…
எதுனாலும் அவனை வந்து பேச சொல்லுங்க…” எனப் பொதுப்படையாகக் கூறிவிட்டு, பூதத்தை நோக்கி சென்றான்.
“இதோ பாரு…எனக்கு அவன் இப்படியொரு காரியத்தைப் பண்ணதுல துளியும் விருப்பமில்லை. அதுக்காக அவன் வெளியேறனும்னு நினைக்கவுமில்லை… பார்த்திபனை வீட்டுக்கு வந்து பேச சொல்லு, ஆனால் நான் சொன்னேன்னு அம்மாகிட்ட சொல்லவேணாம்” எனப் பூதத்திடம் பேசுவதைப் போல மறைமுகமாகப் பார்த்திபனிடம் கூறியவன்,
“என்ன பூதம் புருஞ்சுதா?” என வினவ,
“ஓ… நல்லா புருஞ்சுதே…ஈயம் பூசுனதை போலவும் இருக்கணும் பூசாததைப் போலவும் இருக்கணும்…அப்படித்தானே?” என துடுக்காக வினவ,
“என்ன நக்கலா?” என உறும,
“இல்லைங்கண்ணே…நாக்கலு” என அதையும் கிண்டலுடன் பேசியவன், சட்டென்று வாயை இறுக மூடிக்கொண்டான்.
சூரியவர்மன் இருவரையும் முறைத்தபடியே, அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல, பனிமலரோ எந்தவொரு தயக்கமோ தடுமாற்றமோ கொள்ளவில்லை.
விறுவிறுவென்று வந்தவள், “பூதம் அண்ணா! போலாமா ?” என உரிமையாக வினவ, அவளின் இந்த அதிரடியில், “ஏன் மா நான் ஒன்னு உன்கிட்ட கேட்கலாமா ?” எனப் பூதம் வினவினான்.
“கேளுங்க…”
“நீ ஹீரோயினா? இல்லை வில்லியா ?” எனப் பூதம் வினவ,
“வில்லனுக்கு வில்லி தானே ஜோடியா இருக்க முடியும்” எனக் கூறி, அலட்சியமாகக் கடந்து சென்றாள்.
“இப்போ தன்னை வில்லினு சொல்லுதா? இல்ல பார்த்திபனை வில்லன்னு சொல்லுதா ? என்ன தான் நடக்குது ?” என வாய் விட்டு புலம்ப,
“அண்ணே… வில்லனுக்கே சூப்பர் வில்லிய செட் பண்ணிருக்கீங்க. அப்போ நான் ஹீரோ…எனக்கு ஒரு ஹீரோயின செட் பண்ணுவீங்களா?” என நண்டு பூதத்தின் கைய சுரண்டியபடி கேட்க,
“என்ன கேட்ட?” எனக் கொலைவெறியுடன் பூதம் கேட்க,
“ஹீரோயின்….” என நண்டு வெக்கபட்டுக்கொண்டே கூற,
“உனக்கு ஹீரோயின் கேட்குதா ஹீரோயின்…மவனே உனக்குக் கெரோசின் தாண்டா…எடுங்கடா அந்த மண்ணென்னை டப்பாவை” எனக் கத்தியபடி பூதம் விரட்ட, தப்பிக்க, நண்டு சந்து பொந்தென்று தப்பி ஓடினான்.
பார்த்திபனின் விழிகளோ செல்கின்ற பனிமலரை ஆராய்ச்சியுடன் தொடர்ந்தன…

Advertisement