Advertisement

பகுதி – 5
வேலுசாமியின் ஆட்கள் சுற்றி வளைத்து பனிமலரின் தாலியை பற்றவிருந்த நொடி, 
“நீங்க அத்து எரிங்கடா…எவன் வரான்னு பாப்போம்” என வேலுச்சாமி குரல் கொடுக்க, அந்த அடிஆட்களுக்கும் பனிமலருக்கும் இடையே வந்து நின்றான், பூதம்!
ஆம் பஞ்ச பூதம் தான் வந்தான்….
“நடுவுல இந்த பூதம் வந்தா?” என வினவியபடி பஞ்ச பூதம் நிற்க, 
“டேய்…வேணா ஒதுங்கிடு. நான் கட்டிக்கப்போறவரோட கூட்டாளினு பாக்குறே. இல்ல என் வாயில ஏதாவது வந்திரும்” என வேலுச்சாமியின் மகளென நிரூபித்தபடி அம்சவேணி வர, 
“வாயில வந்திரும்னா? வாந்தியா ?” என பூதம் சிரிக்காமல் வினவினான். 
“அப்பா…” என அம்சவேணி குரல் உயர்த்த, 
“டேய்! இவன் குறுக்கால வரான்… குறுக்க உடைச்சுவிடுங்கடா!
பூதம்னா விளக்குல மட்டும் தான்பா இருக்கணும். வில்லங்கத்துக்கெல்லாம் வரக்கூடாது…இவனை தூக்கிட்டு போய் அடைச்சு வைங்கடா…” என ஆட்களை ஏவ, சிலர் பஞ்ச பூதத்தை தூக்க முற்பட, 
“நண்பா… நடு பகல்ல என்னடா கனவா? என்ன காணாம பண்ணிடுவானுங்க போல.” என புலம்ப, 
அப்போதும் பார்த்திபன் பெரும் குழப்பத்தில் அசையாமல் நின்றிருந்தான். அவன் மனம் குழப்பத்திலும் துயரத்திலும் ஒருசேர தவித்துக்கொண்டிருந்தது…
யாருக்காக இரவு பகலாக ஓடி ஓடி உழைக்கின்றானோ அவர்களில் ஒருவர் கூட தன்னிடம் நம்பிக்கை கொள்ளவில்லையே ? ஊரே கூறியிருந்தாலும் தன் குடும்பம் தன் பக்கமல்லவா நின்றிருக்க வேண்டும் ? இத்தனைக்கும் தான் எதுவுமே கூறாமலிருக்கும் பொழுதே யார் யவரென்று தெரியாத ஒருத்தியின் பேச்சில் நம்பிக்கை கொள்பவர்கள், ஏன் என் மீது அந்த நம்பிக்கையை வைக்கவில்லை…
இப்படி பற்பல எண்ணங்களில் அவனுடைய ஆழ் மனம் குழம்பி கிடக்க, சுற்றம் அவன் கருத்தில் பதியவே இல்லை.
பதிந்தாலும், அந்தப் பெண்ணுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணமும் தோன்றவில்லை. யாரிவள் ? என்ன பிதற்றல் இது ?
என்ற எண்ணம் மட்டுமே பார்த்திபன் மனதினில் பனிமலர் குறித்து…
தூக்க வந்த ஆட்களை அவசரமாகத் தடுத்த பஞ்ச பூதம், “மிஸ்டர். அடியாள்… கொஞ்சம் பொறுங்க. என் நண்பன் தூங்குறான் போல. முழுச்சதும் உங்க கூட வரேன்…டேய் நண்டு நீயாச்சும் சொல்லேண்டா” என கண்களை உருட்டியபடி கெஞ்சிக்கொண்டிருக்க,
“என்னது நானா? நான் திங்கள்கிழமை மௌன விரதமுங்க… நீங்க பார்த்து தூக்கிட்டு போங்க” என்ன நண்டு போட்டுக்கொடுக்க,
“போட்டா கொடுக்குற? இருடி உன்ன வச்சுகிறேன்” என்ன அவர்கள் இரண்டு பேரும் அடித்துக்கொண்டனர்.
அம்சவேணிக்கு நேரம் போகப் போக, கோபம் ஏறிக்கொண்டே போனது. அருகிலிருந்த சில வாலிபர்கள், “அதான? பார்த்தி அண்ணே அம்சாவை கட்டிக்க எப்படி ஒத்துகிச்சுனு யோசிச்சேன்.
அம்சா கா கதை பொம்பளைங்களுக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம். பக்கத்துக்கு டவுன் பார்க்-ல பார்த்த இளவட்டங்களுக்குத் தெரியாம போகுமா என்ன ?” என்ன கிசுகிசுக்க, அம்சா அந்தப் பசங்களை எரித்துவிடுவதைப் போல் பார்த்தாள்.
இன்னொருத்தனோ அம்சாவை பார்த்தபடி, “அப்புறம் நம்ம பார்த்தி அண்ணே புஷ்பா புருஷன் போல அம்சா புருஷனா ஆகிடுப்பாரு…” என்ன நக்கலடிக்க,
விறுவிறுவென்று முன்னேறியவள், அவளுடைய தந்தையின் ஆட்களைத் தள்ளி விட்டவள், இருந்த ஒட்டுமொத்த கோபத்தையும் காண்பித்தாள். யாரும் எதிர்பார்க்காவண்ணம் பனிமலரை ஓங்கி அறைந்திருந்தாள்…
அவள் ஓங்கி அடித்த அடியை அந்தச் சூழலில் யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. பனிமலர் உட்பட! பனிமலரின் உதடு கிழிந்து இலேசாக இரத்தம் துளிர்க்க, அந்த இரத்தத்தைக் கூடப் பொருட்டப்படுத்தாமல், பதிலுக்கும் பேசாமல் அப்படியே நின்றிருந்தாள். பனிமலரின் கண்கள் கோபத்தால் சிவந்தன…அவளுடைய சிவந்த விழிகள் பார்த்திபனை நோக்கி கனல் வீசின. உதடை அழுந்த கடித்துக் கோபத்தைக் கட்டுப்படுத்தினாள். ஆனால், அம்சாவிடம் பனிமலர் எதையும் கேட்கவுமில்லை சொல்லவுமில்லை.
நின்ற இடத்திலே ஸ்திரமாக நின்றிருந்தாள்!
அம்சவேணி அடிதத்திற்கு இயல்பாக அம்சவேணியின் மீது கோபம் வந்திருக்கலாம் வெறுப்பு வந்திருக்கலாம், கோழையாக இருந்திருந்தால் பயம் ஏன் அழுகை கூட வந்திருக்கலாம். ஆனால் இதில் எந்த ஓர் உணர்வையும் அம்சவேணியிடம் பனிமலர் பிரதிபலிக்கவில்லை.
அப்படியொரு அழுத்தம் பனிமலரிடம்… நின்ற இடத்தினிலிருந்து அசையவுமில்லை, அஞ்சவுமில்லை!
அவளின் இந்த ஸ்திரம் அம்சவேணிக்கு மேலும் கோபத்தை ஏற்ற, பனிமலரின் முடியை கொத்தாகப் பற்றினாள்.
இதை வேடிக்கைபார்த்த அனைவரும், “என்ன பொண்ணு டி இவ ? எதுக்கும் அசையமாட்டிங்கிறா ?” என முணுமுணுக்க,
“தாலிய கழட்டு டி…” என முடியை பற்ற, அதற்கும் பனிமலரிடம் அசைவில்லை.
முடியை பிடித்து இழுத்தபடியே, பனிமலரின் கழுத்திலிருந்த தாலியை கையில் பிடித்து இழுக்க, அப்போது தான் முதன் முதலாகப் பனிமலர் அம்சவேணிடம் வாய் திறந்தாள்.
“தாலி-ல இருந்து கைய எடு…” என்ற வார்த்தையை அழுத்தமாக உச்சரித்தாள் பனிமலர்.
“கைய எடுன்னு சொன்னேன்…” என மீண்டும் ஒருமுறை அழுத்தமாகச் சொல்ல, பனிமலரின் வார்த்தையிலும் அதை அவள் உச்சரித்த த்வனியிலும், அம்சவேணிக்கு ஆவேசம் கிளம்பியது. பற்றியிருந்த பனிமலரின் முடியை விட்டவள், முழுப் பலம் கொண்டு மலரின் கழுத்திலிருந்த தாலியை அத்து எரிய முயல, யாரும் எதிர்பார்க்காமல் பளார் என்ற பெரும் சப்தம் அங்கு எழுந்தது.
அந்தச் சப்தத்தைத் தொடர்ந்து கன்னத்தைத் தாங்கியபடி கீழே விழுந்து கிடந்தாள் அம்சவேணி. அந்தச் சப்தத்தில் பார்த்திபனின் கவனம் கூட முதல் முறையாகப் பனிமலர் மீது பதிந்தது…
ஒட்டுமொத்த ஊர் ஜனங்களும் வாய் பிளந்தனர். அம்சவேணி பனிமலரை அடித்திருக்கிறாளென்றால், இது அம்சவேணியின் ஊர். பக்கபலமாய் அவளுடைய பணம் கொண்ட தந்தை, பலம் கொண்ட தந்தையின் அடியாட்கள். திருமணம் நின்று போன பெண் என்ற அனுதாபத்தில் சில ஊர்க்காரர்கள், பனிமலரை நிராகரித்த பார்த்திபனின் குடும்பம் என ஒட்டுமொத்த ஜனங்களின் ஆதரவில் கை வைத்தாள்…
ஆனால், பனிமலருக்கோ….அப்படிஎந்தவொரு ஆதரவும் அங்கு இல்லாத நிலை. இது பனிமலரின் ஊர் கிடையாது…அவளை அடித்த போதுகூட ஏன் என்று ஒருவர் முன் வந்து கேட்கவில்லை…
அந்த ஒட்டுமொத்த ஜனங்களுக்கு மத்தியில் தனி ஒருத்தியாய் உறுதியாய் நின்றிருந்தாள்… தனி ஒருத்தியாய் எதிர்த்து எதிரில் நின்றிருந்தாள்…
“ஆத்தாடி…கட்டின புருஷன் கூட, அவுங்க வூட்டுக்காகக் கட்டுப்பட்டு நிக்கிறப்ப, இந்தப் புள்ளைக்கு எம்புட்டு துணிச்சலு?” என வியப்பாக அந்த ஊர் மக்கள் தங்களுக்குள் முணுமுணுக்க,
“பின்ன சும்மாவா? கட்டுன தாலி மேல கை வச்சா கோபம் வரத்தானே செய்யும்…” என மற்றொருவர் கூற,
“ஆமா ஆமா… அந்தப் புள்ளைய அம்சா அடிச்சபோது கூடச் சும்மாதான் நின்னுச்சு. தாலி மேல கை வைக்கவும் தான் கோப பட்டிருச்சு…” என வேறொருவர் எடுத்துக்கொடுக்க,
“பார்த்திபன் மேல அம்புட்டு உசுரு வச்சிருக்கா போல…” என நல்லவிதமாகவே பேசிக்கொண்டனர்.
“ஏய்… எம்பொண்ணு மேலையா கைய வச்ச…இவளை கண்ட துண்டமா வெட்டி காணா பொணமாக்குங்கடா” என எகிறிக்கொண்டு வர,
இத்தனை நேரம் மெளனமாக நின்ற ஊர் பெரியவர்கள் முன் வந்தார்கள்.
“ஏப்பா பொறு…அப்படியெல்லாம் பண்ண முடியாது. எதுனாலும் பஞ்சாயத்துல பேசி முடிவெடுப்போம். என்னப்பா சூரியவர்மா உங்க குடும்பத்துக்குச் சம்மதமா ?” என வினவ,
“என்னவோ பண்ணுங்க…இதுல நாங்க சொல்ல ஒண்ணுமில்லை” எனக் கூறி ஒதுங்கி கொண்டான்.
“அதெப்படி டா ஒதுங்குவ? உன் தம்பிய எம் பொண்ணுக்கு கட்டிவைக்கிறேன்னு சொன்னவனே நீ தானே ? தம்பிக்கு தெரியாமா ஏற்பாடு பண்ணுவோம். வந்ததும் நான் சொன்னால் உங்க பொண்ண கட்டுவானு சொன்ன. உன் பேச்சை நம்பி, டப்புனு கட்டுவானு பார்த்தல் ? உன் தம்பி பண்ணின காரியத்தை பார்த்தியா ?” என மடக்க, பார்த்திபனின் கண்கள் ஆற்றாமையுடன் தன் அண்ணனை நோக்கின.
“ஏங்க மிஸ்டர் வேலுச்சாமி… கட்றதுக்கு உங்க பொண்ணென்ன கரட்டு பில்லா? டப்புனு கட்றதுக்கு…” எனக் கேட்க,
“டேய், அவனை இன்னுமாடா வச்சிருக்கீங்க…” எனக் கத்த,
ஊர் பெரியவர்கள் அனைவரையும் அடக்கி, அப்போதே பஞ்சாயத்திற்கு ஆயத்தம் செய்தனர்.
“என்னப்பா? எல்லாரும் அப்படியே நின்னா எப்படி ? யாராச்சும் எதாவது சொல்லுங்க” எனப் பஞ்சாயத்தில் ஒரு பெரியவர் தொடங்க,
“ஏங்க அப்படிக்கா நிக்காம இப்படிக்கா வந்து நின்னா ஒத்துப்பீங்களா?” எனப் பஞ்ச பூதம் கலாட்டாவுடன் பேச்சை ஆரம்பித்தான்.
“ஏண்டா…வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்திரு…இல்ல அபராதம் போற்றுவோம்” என ஒருசிலர் எச்சரிக்க,
“ஆட்டைய போடறதுக்கு அபராதம்னு பேரு வேற” என இப்போது எச்சரிக்கையுடன் மனதிற்குள் புலம்பிக்கொண்டான்.
“ஏப்பா பூதம்? இந்தப் பொண்ண இதுக்கு முன்னாடி பாத்துருக்கியா ?” என முதல் கட்ட விசாரணையைப் பூதத்திடமிருந்து தொடங்கினர்.
“என்னடா இது? வேடிக்கை பாக்குறவன்ட விசாரணையைப் பண்றீங்க” என மனதிற்குள் புலம்பியவனை மீண்டும் அவர்களில் கேள்வி உலுக்க,
“ஆஹ்…தெரியுங்க தெரியும்” எனப் பட்டென்று பதில் கூறினான். அது மோட்டலில் அவளைப் பார்த்ததைக் கொண்டு கூறினான்.
“அட! இவன்கிட்ட கேட்டு என்ன ஆவப்போகுது ? தாலிய கட்டுன நம்ம பார்த்திபனும், பார்த்திபனை கட்டிக்கிட்டு வந்த அந்தப் பொண்ணும் இருக்காங்க…
அவுங்களே விருப்பப்பட்டுக் கட்டிகிட்ட பிறகு பஞ்சாயத்துல சொல்ல என்ன இருக்கு ?” என ஒரு பெரியவர் கூற,
“இதோ பாருங்க…நீங்க பேசிட்டு இருக்குறது என்ன பத்தி… உண்மை என்னனு இங்க நான் தான் சொல்லணும்” என உறுதியான குரலில் தொடங்கினான், பார்த்திபன்!
ஆம்! இத்தனை நேரம் மெளனமாக நின்றிருந்தவன், தனது குடும்பத்தாரின் நடவடிக்கையால் உடைந்து ஸ்தம்பித்திருந்தவன், தனக்காகத் தானே வாதாடி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தான்…
“நீ என்ன சொல்லணுமோ சொல்லு பார்த்திபா…” என அனுமதி அளிக்க,
“நல்லா கேட்டுங்கோங்க…இந்த பொண்ணு யாருனு…” எனத் தொடங்கி, எனக்கு இந்தப் பொண்ணு யாருனே தெரியாதென்ற உண்மையைக் கத்தி சொல்லிவிடும் நோக்கில் இருந்தான்.
ஆனால், பார்த்திபனை முழுவதுமாகப் பேசவிடாமல், “இந்தப் பொண்ணு என்னோட பொண்டாட்டி…எப்படிடா கை வைப்பீங்கனு கேட்க போறியா ?” என ஆங்காரமாய் இடை புகுந்தார் வேலுசாமி.
“இதோ பாருங்க பஞ்சாயத்துக்காரங்களா… நான் யாரு என்னோட பலமென்னனு உங்க எல்லோருக்கு தெரியும். எம் பொண்ண கட்டிக்காம ஏமாத்திட்டான் இந்தப் பார்த்திபன். கேட்டால் ஜமீன் வம்சம்னு சொல்றானுங்க…இது தான் ஜமீன் இலட்சணமா ?
நம்ப வச்சுச்சு ஏமாத்துனதுக்கு நான் என்ன வேணும்னாலும் பண்ற கோபத்துல இருக்கே. மருவாதையா எம்பொண்ணுக்கு வழிய சொல்ல சொல்லுங்க” எனக் கத்த,
வேலுசாமியின் பேச்சில், பார்த்திபனுக்கு மற்றவை அனைத்தும் பின்னே சென்றது.
“என்னோட பரம்பரையை இழுக்க உங்களுக்கு எந்தத் தகுதியுமில்லை. வார்த்தையை யோசிச்சு பேசுங்க. ஏண்டா பேசுனோம்னு ரொம்ப வருத்தப்படுவீங்க…
இந்தக் கேள்வியை என்கிட்ட நீங்க கேட்குறதுக்கு முன்னாடி உங்ககிட்ட நீங்களே கேட்டுக்கோங்க.
எனக்குத் தெரியாம கல்யாணத்த முடிவு செஞ்ச நீங்க ஏமாத்து காரரா ? இல்லை நானா ?” என வினவ,
“டேய்! உன்னோட அண்ணன் தானே டா சம்மதம் சொன்னான் ?” என எகிற,
“உங்க பொண்ண எனக்குக் கட்டிவைக்க என்கிட்ட கேட்கணுமா? இல்ல மூணாவது மனுஷங்ககிட்ட கேட்கணுமா ?” எனப் பட்டும்படாமல் வினவ,
சபையில் ஒருவர், “என்னப்பா மூணாவது மனுஷன்னு சொல்லுற ?” என வினவ,
“இதுக்கான விளக்கத்தை நான் என்னோட குடும்பத்துல கொடுத்துகிறேன். இங்க இந்தப் பஞ்சாயத்தைப் பத்தி மட்டும் பேசுவோம்” என அதிரடியாக முடித்துவிட்டான்.
“இப்ப என்னதான்டா சொல்லவர?” எனப் பார்த்திபனை நோக்கி வினவ,
பூதம் கூட்டத்திற்குள் மறைந்துகொண்டு, “நீங்க செல்லா காசுன்னு சொல்றானுங்கோ” எனக் கத்த, கூட்டத்தில் ஆங்காகே சின்னச் சின்னச் சிரிப்பொலி கிளம்பியது.
“எவண்டா அது?” என வேலுசாமி உறும, மீண்டும் பூதம்,
“ஆ…போண்டா” எனக் கத்த மீண்டும் இளவட்டங்களின் சிரிப்பொலி கிளம்பியது.
“எல்லாரும் அமைதியா இருங்க” எனப் பஞ்சாயத்துக்காரர்கள் சத்தம் போட, மீண்டும் அவ்விடம் நிசப்த்தமானது!
“ஏன்மா? உன்னோட பேரு என்ன ? எந்தவூரு நீ ? உன்னோட உறவுகாரங்க யாரு ? இப்படித் திடுதிப்புனு வந்து மொத்த ஊருக்கு மத்தில ஒத்தையில நிக்கிறியே ?
ஒண்ணுக்கிடக்க ஒன்னு ஆச்சுன்னா, என்ன பண்றது ? எந்தத் தைரியத்துல எந்த நம்பிக்கையில வந்த ?” என விசாரிக்க,
“இவரு இருக்க நம்பிக்கைல…இவரு இருக்காரு அப்படிங்கிற ஒரே நம்பிக்கைல மட்டும்தான் இங்க வந்தேன்” என ஸ்திரமாகக் கூறினாள்.
நம்பிக்கை! பனிமலரால் உச்சரிக்கப்பட்ட அந்த நம்பிக்கை என்ற வார்த்தை பார்த்திபனை ஏதோவொரு விதத்தில் அசைத்தது. அவனுடைய பார்வை ஆராய்ச்சியாக முதல் முறை பனிமலரின் மீது பதிந்தது…
அந்தப் பார்வையில் முழுக்க முழுக்க ஆராய்ச்சி மட்டுமே. பால் வெள்ளை என்று சொல்லும் அளவிற்கு வெந்நிறமில்லைவள்! மாநிறத்திற்குச் சற்றே கூடுதல். ஆனால், அவளின் உடை, நகை என அனைத்திலும் செல்வத்தின் பிம்பம்!!
“என்னோட அம்மா வைக்காத நம்பிக்கையை நீ யாரு என் மேல வைக்க? எதுக்காக இந்தப் பொய் ? நான் உன்ன பார்த்ததுகூட இல்லையே ?” என அனைத்தையும் வெளியே வினவாமல் மனதிற்குள் எழுப்பிக்கொண்டான்.
அந்த நொடி பார்த்திபனுக்கு பனிமலர் மீது மேல் விருப்பு இல்லை, வெறுப்புமில்லை, கோபமில்லை, ஆர்வமுமில்லை… ஒருவித தேடல் மட்டுமே. அவள் யாரென்ற தேடல்… அவள் நடத்தும் நாடகத்தின் காரணத்திற்கானத் தேடல்…
ஒரு நொடி, ஒட்டுமொத்த கூட்டத்தையும் ஆழமாகக் கவனித்தான். பனிமலரை அவமானப்படுத்த துடிக்கும் வஞ்சகமான கண்களுடன் அம்சவேணி நின்றிருந்தாள். பனிமலரை அடித்துக் கொல்லும் ஆத்திரத்துடன் வேலுசாமி நின்றிருந்தார்…அவளை அசிங்கப்படுத்தும் நோக்குடன் வேலுமணியின் ஆதரவாளர்கள் நின்றிருந்தார்கள்…
பார்த்திபன் அவசரப்படாமல், நிலைமையைச் சரியாகக் கணிக்க நிதானமாகச் சூழலை அலசமுற்பட்ட போது,
“இந்தாம்மா? பார்த்திபனை நம்பி வந்ததெல்லாம் இருக்கட்டும்.
உன்னோட பேரு ஊரு சொல்லு…உன்ன பார்த்திபனோட சேர்த்து வச்சு நாளைக்கு வம்பு வழக்கு வந்திட்டா ? அதோட, வேலுசாமி இங்க பெரிய தலைக்கட்டு. உங்க உறவுகாரவங்ககிட்ட சொல்லுவோம். அவுங்களும் தகராறுனு வரகூடத்துல” என மீண்டும் வலியுறுத்தி வினவ,
“என்னோட பேர் பனிமலர்…உறவுன்னு சொல்ல யாருமில்லை. எண்ணப்பத்தி பொதுவுல சொல்ல நான் விருப்பப்படல…
என்ன அடிச்சே கொண்ணாலும் ஏன்னு கேட்க எனக்கு நாதியுமில்லை” எனக் குரலில் எந்தவொரு உணர்வையும் பிரதிபலிக்காமல் வெறுமையான குரலில் கூற, சட்டென்று கூட்டத்திலிருந்து முன் வந்தான் பூதம்.
அதற்குள்ளாக, “அப்ப, அனாதை கழுதையா ? அப்பன் ஆத்தா இல்லாத போதே இம்புட்டு ஊக்கமா ? ஒதுங்க இடமில்லன்னு ஒட்டிக்கிட்டு வந்துட்டியோ…
அந்தத் தாலிய கழட்டி எறிஞ்சிட்டு புறப்படு. காசு பணம் வேணும்னா வாங்கிக்கோ. வாங்கிகிட்டு நடையை கட்டுற வழிய பாரு!
பஞ்சாயத்து பெரிய மனுஷங்களா…எம்பொண்ணுக்கு வழிய சொல்லுங்க. அந்தப் பொண்ணுக்கு ஆறுதல் சொல்றேன்னு கிளம்பிடாதீங்க” என விஷ வார்த்தைகளைப் பேச, முன் வந்த பூதம் சுதாரிதான்.
ஒரு நொடி, அம்சவேணியையும் பனிமலரையும் பார்த்தான்…
விறுவிறுவென்று பார்த்திபனிடம் சென்றவன், “நண்பா… எனக்கு என்ன எப்படிச் சொல்லனு தெரியல. ஆனா அந்தப் பொண்ண யாருனு தெரியாதுங்கிற உண்மைய மட்டும் சொல்லிடாத…” எனப் பார்த்திபனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற,
அதேவேளையில் மிகச்சரியாக, “ஏப்பா…பார்த்திபா ? மௌனமா இருந்தால் எப்படி ? தாலி கட்டி கூட்டியாந்த, பொண்ண அத்துவிடச் சொல்லி வேலுசாமி நிக்கிறான். அடுத்தத் தாலிய கட்டிக்க வேலுசாமி பொண்ணு நிக்கிது…
உன்ன நம்பி வந்த பொண்ணு, உன்னோட மூஞ்சிய பார்த்தே நிக்கிது… உங்க வீட்டுக்காரங்க, எதுவும் சொல்லாம போய்ட்டாங்க.
நீயும் மௌனமா இருந்தால் எப்படி ? தாலி கட்டுனல ? வாயத் துறந்து பேசு?” என வினவ,
சில மணிநேரத்தில் அவனுடைய வாழ்க்கையே அடியோடு மாறிவிட்டத்தையும் மாற்றம் செய்தவளையும் ஒருமுறை நினைவுகூர்ந்தான்… அவன் மனதில் ஒருவித வெறுமையும் இயலாமையும் குடிகொள்ள…அவனுடைய முடிவை கூற கண்களை ஒருமுறை இறுக மூடி திறந்தான்…

Advertisement