Advertisement

பகுதி – 4
அந்த இடமே ஸ்தம்பிக்க ஸ்திரமாக வண்டியிலிருந்து இறங்கிநின்றாள், பனிமலர்!
“நான் யோசிக்கணும்… இங்க நான் மட்டும் தான் முடிவெடுக்கணும்… ஏன்னா பார்த்திபனோட மனைவி நான்…” என அழுத்தமாக உச்சரித்தாள்.
பணிமலரை பார்த்ததும், பார்த்திபனின் பிருவங்கள் யோசனையாக உயர, பூதமோ, “அட! நம்ம ஹீரோயின் பொண்ணு” என வாய்க்குள் முனங்கிகொண்டான்.
“ரெண்டும் ரெண்டும் நாலு
நாளும் ரெண்டும் எட்டு
லாரில ஹீரோயின் எப்படி? டவுட்டு” எனத் தீவிரமாக மண்டையைத் தட்டி பூதம் சிந்திக்க, “அண்ணே அண்ணே பொண்ணுனே…” எனக் கூறியபடி, நண்டு பூதத்தைச் சுரண்ட,
“நான் மட்டும் என்ன புண்ணுனா சொன்னே…இருடா” எனக் கூறி, பார்த்திபன் முகம் பார்க்க, அங்குப் பார்த்திபனின் பிருவங்களும் பலத்த சிந்தனையில் முடிச்சிட்டன.
முழுமையான மணப்பெண் கோலத்திலிருந்தாள். கழுத்தில் மாங்கல்யம். திருமணப் பட்டு…நகை அலங்காரம்…அழகு என்று சொல்வதைவிட இலட்சணமாக இருந்தாள்… நிமிர்வாகவுமிருந்தாள்…
பனிமலரின் இந்த அதிரடியான அறிமுகத்தில், கூட்டத்தில் பெரிய சலசலப்பு உண்டானது. வேலுசாமி மற்றும் அமசவேணி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சூரியவர்மன், புரியாமல் விழிக்க, சூரியவர்மனை நெருங்கி வந்து நின்றுகொண்டாள் அவளின் மனைவி, நித்திய கலா. இதுவரை ஒதுங்கி யாருக்கு என்னவோ என்ற எண்ணத்தில் நின்றிருந்த தாரா தேவி, பார்த்திபனின் அக்காவும் கூட்டத்தின் மத்திக்கு வந்தாள்.
“என்னடா பார்த்திபா இது? என்ன அசிங்கமிது ?” என ஓங்கி கத்த,
அவனுடைய அக்காவின் இந்தத் திடீர் கேள்வியால், குழப்பத்திலும் கேள்வியிலும் இருந்த பார்த்திபன் முகம் அவமானத்தால் கன்றியது. அவனுடைய மனதில் பழைய எண்ணங்கள் நிமிடத்தில் தலை தூக்கின.
குடும்பச் சூழல் சரியில்லை என்பதை உணர்ந்துகொண்ட தாரா தேவி, படிக்கச் சென்ற இடத்தில பணக்காரன் என்று ஒருவனைக் காதலிக்கிறேனென்று வந்து நின்றாள். சின்னப்பெண் அறிவுரை சொல்லலாம் எனத் தாமினி எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதே அதிரடியாகக் கல்யாணத்தையே முடித்துவந்தாள்…
அக்கம் பக்கம் அரச புரசலாகப் பேசத்தொடங்க, பார்த்திபன் நிலைமையைக் கையிலெடுத்தான்…
“நாங்கதான் அக்காக்குக் கல்யாணம் பண்ணிவைச்சோம்…யாருக்கும் சொல்லல… அக்கா வீட்டுக்காரு மாமாக்கு எளிமையா நடக்கணும்னு விருப்பம்…” என ஏதேதோ பதிலளித்தான்.
அவர்களின் குடும்ப பாரம்பரியமும், பார்த்திபனின் தடுமாற்றமில்லாத நேர்கொண்ட பேச்சும் அக்கம் பக்கத்தினரை அவர்களின் பேச்சின் மீது நம்பிக்கை கொள்ள வைத்தது…
சொத்துக்கள் அனைத்தும் முடங்கியிருந்த போதிலும் யாரிடமும் கடன் என்று நின்றதில்லை…பொய் பகட்டை காட்டியதில்லை…கணவர் தர்மேந்திரனின் வழியில் தாமினி தேவி நடந்தார்…
பார்த்திபன் வண்டி ஓட்டுனர் என்றாலும், இயல்பிலையே அவனுடைய உயர்வான குணாதிசயங்கள் சில இருந்தன. நேர்மை…நேரடியான பேச்சு…யாருக்கும் அஞ்சாத துணிவு…இவை அனைத்தும் பார்த்திபனின் பேச்சை மீறி தாராவின் விஷயத்தில் வேறு சலசலக்கவோ புறம்பேசாவோ ஊர்ஜனங்களால் முடியவில்லை.
திருமணம் முடிந்ததென்று நினைத்திருந்தால், மீண்டும் ஒரு பேரடியை இறக்கினாள் தாரா தேவி!
அது மனம் முடித்தவனின் அந்தஸ்து நிலை…எதை உண்மை என்று அவசர அவசரமாகத் திருமணம் செய்தாளோ அது பொய்யென்று ஆனாது…
கல்யாணத்திற்குப் பிறகே தெரியும், கட்டிக்கொண்டவன் பணக்காரனில்லை, பஞ்சத்தில் சிக்கியிருப்பவனென்று… அன்று தாரா ஆடிய ஆட்டமும், ஊர் கூடி நின்று பார்த்த பார்வையும் இன்றும் பார்த்திபனின் கண்ணிலிருந்து மறையவில்லை.
பார்த்திபனுக்கு அந்தஸ்து ஒரு பொருட்டல்ல. மதிப்புப் பணத்தில் இல்லை மனிதத்திலும் மனிதனிலும் உள்ளதென்ற தீர்க்கமான சிந்தனையுள்ளவன். ஆனால், தாரா பேராசை கொண்டாலென்றாள், அவளைக் கட்டிக்கொண்டவனோ பொய்யுரைப்பவனாக இருந்திருக்கிறான்…
இதில் யார் சரி யார் தவறு என்று பார்த்திபன் விவாதிக்கத் தயாரக இல்ல. இருபுறமும் தவறு இருக்கிறது… தாமினி தேவி, மகளைத் தண்டித்தாலோ வீட்டை விட்டு ஒதுக்கி கண்டித்தாலோ குடும்பத்தின் கௌரவம் போய்விடும் என்று அஞ்ச, சூரியவர்மனோ மிகச் சாதாரணமாக ஒதுங்கிக்கொண்டான்.
“நீ தேர்வு செய்த உன் வாழ்க்கை…நீ தான் பொறுப்பு” இது தான் தாராவின் விஷயத்தில் சூரியவர்மனின் நிலைப்பாடாக இருந்தது.
அப்போது எதைப் பற்றியும் சிந்திக்காமல், சொந்தமாக இலாரி வாங்க முன் பணம் சிறிதளவு சேமித்து வைத்திருந்ததைப் பார்த்திபன் கையிலெடுத்தான். ஒரு லாரி லோனில் வாங்கவேண்டுமென்பது அவனின் பல வருட கனவு…மொத்தமாக அவனால் வாங்கவே இயலாது …
பத்தாவது முடித்ததிலிருந்து கிடைத்த வேளைக்குச் சென்று சில வருடங்கள் கழித்து வண்டி ஓட்ட கற்றுக்கொண்டு, நம்பிக்கையின் பெயரில் ஒருவரிடம் லாரி ஓட்டுனர் பணிக்குச் சேர்ந்தான். அக்கா, அண்ணன் என இருவரும் சொற்ப கட்டணம் செலுத்தவேண்டிய அரசு கலை கல்லூரியில் படிக்க, குடும்பத்தின் சாப்பாட்டிற்குப் பதினைந்து வயதிலிருந்து ஓட தொடங்கினான்…
“அக்கா… கத்தாதே…என்ன இருந்தாலும் கட்டிகிட்ட… இப்ப என்ன வசதி தானே இல்ல? சம்பாதிச்சா வந்திடப்போகுது…
நம்ம கூட ஜமீன் பரம்பரைன்னு சொல்றாங்க. ஆனா அந்த வசதிய நான் பார்த்ததுமில்லை, உணர்ந்ததுமில்லை. நம்மகிட்ட என்ன காசா இருக்கு ?
இப்ப என்ன பண்ணனும் சொல்லு… நம்மகிட்ட காசு இல்லாட்டியும் மரியாதை இருக்கு, அது குறைய நான் விடமாட்டேன். என்ன செய்யணும் ?” என வினவ,
“மச்சான்…” என முன்வந்து நின்றான் தாராவின் கணவன், மணிகண்டன்!
“வெளிநாட்டுல வேலைக்கு ஆள் எடுக்குறாங்க. டெபாசிட் கட்டுனா, போய் சீக்கிரம் சம்பாதிச்சு தாரா ஆசைப்படுற வாழ்க்கையை அமைச்சுக் கொடுப்பேன்” எனக் கூற,
“தப்ப எடுத்துக்காதீங்க மாமா…இப்போ உங்க வார்த்தையை நம்பலாமா அப்படினு கேட்க தோணுது…
ஆனா நான் கேட்க விருப்பபடல. எவ்ளோ டெபாசிட்” என வினவ,
பார்த்திபனின் அந்த வார்த்தை மணிகண்டனை தைத்தாலும், வெளிகாட்டிக்கொள்ளாமல் காரியத்தில் கண்ணாய், “ஒரு இலட்சம்…” எனக் கூறினான் மணிகண்டன்.
பார்த்திபனிடம் தொண்ணுற்றி இரண்டாயிரமிருந்தது… ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை. அப்போது தான் லோட் இறக்கி கண்கள் சொருக வந்திருந்தான். நிமிடமும் தாமதிக்காமல்,
“லோட்க்கு போயிட்டு வரேன், ரெண்டு வாரம் பொறுத்துக்கோங்க…நீங்க கேட்ட பணத்தோட வரேன். அக்கா அதுவரை சத்தம் போடாத.
வீட்டு விஷயம் வீட்டோட மட்டும் தான் இருக்கணும்” எனச் சிறிது கண்டிப்புடனே சொல்லியவன், கண்களில் மண்பானை தண்ணீரை எடுத்து மாறி மாறி அடித்துக்கொண்டு, உறக்கத்தை விரட்ட முயன்றபடி உடனே புறப்பட்டான்.
சூரியவர்மன் ஒருவிதமென்றால், தாரா ஒரு இரகம்…
அப்படிப்பட்ட தாரா தேவி, எந்தவொரு சூழலிலும் குடும்பத்தை பற்றி சிந்திக்காதவள், இன்று பார்த்திபனை நோக்கி “என்ன அசிங்கமிது ?” என கேட்டிருக்கவே, பார்த்திபனின் முகம் இறுகிவிட்டிருந்தது……
சூரியவர்மனோ, “இந்தக் கல்யாணத்தை நாங்க ஒத்துக்கமாட்டோம்…நீயா எவளையாச்சும் கட்டிக்கிட்டு வந்து நிப்ப, அதுக்கு நாங்க மண்டைய ஆட்டணுமா… முடியாது” எனத் திட்டவட்டமாக அறிவிக்க,
பார்த்திபன் கண்களில் சூரியவர்மன் முன்பொருமுறை கூறிய வார்த்தைகள் மீண்டும் எழுந்தன…
“மூத்த பிள்ளைன்னா… எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டணுமா? நான் தான் வேளைக்குப் போகணுமா? எனக்கு முன்னாடி மூத்தவ, தாரா இருக்காள? அவ காலேஜ் போறா தானே ? நான் காலேஜ் போகணும் அம்மா… நான் நல்லா படிக்கிறேன். படிச்சாதான் என்னோட அந்தஸ்து உயரும். நீங்க தப்ப நினைக்கமாடீங்கனு நம்புறே…” என அழுத்தம் திருத்தமாகக் கூற,
இதற்குமேல் உரையாடல் தொடர்ந்தால், எங்குச் சூரியவர்மன் தாமினியை எதிர்த்து பேசிவிடுவானோ என்று அஞ்சியவன் பதினைந்து வயதில் அந்தப் பெரும் முடிவை எடுத்திருந்தான் பார்த்திபன்.
“அம்மா! நான் வேளைக்குப் போறேன்… எனக்குப் படிப்பு மண்டைல ஏறல. படிக்கவும் பிடிக்கல” என முன்வந்து நிற்க,
“படிப்புமேல ஆசைப்படற உங்க அண்ணனை பெத்த நான் தான், படிப்பை உதறி தள்ளுற உன்னையும் பெத்துருக்கேன்…” இது தான் அன்று தாமினி தேவியின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளாக இருந்தது.
பொதுவாகப் பெற்றவர்கள் பிள்ளைகளிடம் வேறுபாடு பார்பதில்லைதான். ஆனால் தாமணியிடம் நூலிழையில் ஒரு வேறுபாடு இருந்தது…அதுவே நாளாக நாளாக, படிப்பை வேண்டாமென உதறி, வண்டி ஓட்டுநரான பார்த்திபன், தாமினியின் மனதினில் இரண்டாம் பட்சமானான். அதற்காக பாசமில்லை என்ற பொருளுமில்லை! ஆனால், அதேவேளையில் மூத்த மகன், தொலைநோக்கு பார்வையுடன் தீர்க்கமாக சிந்திக்க கூடியவனென்ற நம்பிக்கை தாமினி தேவிக்கு!!
அரசு கலை கல்லூரில் படித்து, அதே ஊரில் ஒரு தனியார் வங்கியில் கிளார்க்காகப் பணியில் அமர்ந்த மூத்தமகன், தாமினியின் மனதை குளிர்வித்தவனான்…
சூரியவர்மனுக்குக் கோவில் திருவிழாவில் பட்டம் கட்டுவதைக் காணும்பொழுது, தாமினியின் மனம் தர்மேந்திரனின் கௌரவத்தைக் காப்பாற்றும் என் மகன், சூரியவர்மன் எனப் பெருமிதம் கொள்ளும்.
இப்படிப்பட்ட அக்காவையும் அண்ணனையும் நினைத்து பார்த்த பார்த்திபனுக்கு அந்த நொடி கசந்து தான் போனது. இருந்தாலும், தன் அன்னை தன்னிடம் விசாரிப்பாரென்ற நம்பிக்கையில்,
“அம்மா…” என அழைக்க,
கையை உயர்த்திப் போதும் என்பதாகச் சமிஞை செய்தவர், “அம்மா யோசிக்கவேணாம், பொண்டாட்டி தான் யோசிக்கணும்னு நீ இழுத்திட்டு வந்தவச் சொல்லிட்டாள். அப்புறம் இன்னமும் நீ பேச என்ன இருக்கு ?” எனப் பார்த்திபனை அடியோடு சாய்த்தார் தாமினி தேவி.
பெற்ற பிள்ளையின் மீது யார் நம்பிக்கை கொள்கிறாரோ இல்லையோ பெற்றுடுத்த தாய் நம்பிக்கை கொள்ளவேண்டும். அந்த நம்பிக்கை, தவறே செய்த பிள்ளையாக இருந்தால் கூட, மறுமுறை அத்தவறை அப்பிள்ளை செய்யத் துணியாது…
கண்டித்தோ தண்டித்தோ பிள்ளைகளைத் திருத்துவதைவிட, நம்பிக்கை பிள்ளைகளை நல்வழி படுத்தும் பேராயுதமுமாகும்…அருமருந்தாகவும் மாறும்!
இங்கு தாமணி தேவி தவறிவிட்டாரோ ?
பார்த்திபனின் மனமோ, “ஏன் யாருக்குமே என்கிட்ட எதுவுமே கேட்க தோணல… என் மேல அவ்வளவு தான் நம்பிக்கையா…” என்ற எண்ணம் தோன்ற, மனம் இரணமாக இருந்த போதும் இதழ் விரக்தியாக ஒரு புன்னகையை உதிர்த்தது.
“எல்லாத்துக்கும் காரணம் இவதான்…இவ யாரு மொதல்ல” என எண்ணமிட்டபடியே, பார்த்திபன் பனிமலர் புறமாக ஆத்திரத்துடன் திரும்ப,
அதற்குள்ளாக வேலுசாமி பார்த்திபனின் அதே வார்த்தைகளை மிரட்டலாக உச்சரித்தார்.
“எல்லாத்துக்கும் காரணம் இவதான்…இவ யாரு மொதல்ல” என உறுமியவர்,
“டேய்! பிடிங்கடா அந்தக் கழுதைய. லாரில ஓடிவந்தவளுக்கு ஜமீன் குடும்பம் கேட்குதோ…” எனத் தன் ஆட்களை ஏவ,
அவர்கள் பணிமலரை நெருங்கினர்… 
பார்த்திபனை ஒருவித சிந்தனை ஆட்கொண்டிருக்க, வேலுசாமி பனிமலரை நெருங்கினார்கள். செல்கின்றவளை நோக்கி அம்சவேணி ஆங்காரமாய் கத்தினாள்…
“அவ கழுத்துல இருக்க தாலிய அத்து எறிஞ்சிட்டு விரட்டுங்க. போறவர நாயெல்லாம் பொண்டாட்டி ஆகிடமுடியுமா?
அத்து குப்பையிலே வீசுங்க” என கத்த, அக்கம் பக்கத்தினர், 
“ஏத்தா அம்சா… தாலிய அறுத்தெறிய கூடாதுடி. பொல்லா பாவமது” என ஒரு பெண் மணி சொல்ல, 
“பொட்ட பிள்ளை மெல்ல ஆம்பளைய கைவைக்க அப்பனும் மகளும் ஏவுறீங்களே…இது அடுக்காது ஆத்தா…” என சிலர் எச்சரிக்க, 
“என்னவாயிருந்தாலும் தாலி கட்டி ஜமீன் குடும்ப மறுமவளா ஆகிட்டா… இப்படி நடக்க கூடாது” என சிலர் கூற, அந்த வார்த்தை வேலுசாமி மற்றும் அம்சாவின் மனதில் பெரும் ஆத்திரத்தை கிளப்பிவிட்டது.
“என்ன ஜமீன் மறுமவளா? யாரு ஓடிவந்தவளுக்கு ஜமீன் மறுமவனு பேரு வேற ?” என வேலுசாமி கூற,
“அப்பா! அந்தத் தாலி அவ கழுத்துல இருக்கக் கூடாது. கழட்ட முரண்டுனா, கழுத்த கூட வெட்டுங்க” எனச் சீறினாள். அவளுக்கு மணமேடை வரை வந்து திருமணம் நின்றது பெரும் அவமானமாக இருந்தது…
அவள் அழகிற்கு அடிபணியாத ஆண்கள் இல்லை எனத் தீர்க்கமாக நம்பிக்கை கொண்டிருந்தவளுக்கு முதலில் பார்த்திபன் ஒரு பொருட்டாகவே படவில்லை. வேலுசாமி தான் பரம்பரையின் கௌரவத்தை எடுத்துரைத்து, குடும்பப் பாரம்பரியத்தை ஒருபோதும் பணத்தால் சம்பாதிக்க முடியாதென்ற நிதர்சனத்தைப் புரியவைத்தார்…
பார்த்திபன் வண்டி ஓட்டுவதால், பணத்தைக் காண்பித்து உன்னுடைய அடிமையாக வைத்துக்கொள், ஊரின் பஞ்சாயத்திலிருந்து கோவில்வரை ஜமீன் பரம்பரையின் கௌரவத்தை நமதாக்கி கொள்வோம் என்று பலவாறாகப் பெண்ணுக்கு புத்திமதி கூறிவைத்திருந்தார்.
நான்கு காதல்கள் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில் இந்தத் திருமணத்தை விடுவது நல்லதல்ல என்ற முடிவுக்கு வந்திருந்த அம்சவேணி மனம் உவந்தே திருமணத்திற்கு உடன்பட்டிருந்தாள்…
இப்போது ஊரார் முன்னிலையில் திருமணம் நின்றால், ஊரில் இருக்கின்ற மரியாதையும் போய்விடுமென்ற எண்ணம் தந்தை மகள் இருவருக்கும் வந்தது. வந்தவள் தனியாக நிற்கின்றாள், பார்த்திபனின் திருமணத்தை அவனுடைய குடும்பமும் ஆதரிக்கவில்லை. இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் அமையாதென்று சடுதியில் கணக்கிட்ட வேலுசாமி, பனிமலரை விரட்ட முடிவெடுத்தார்…
அவருடைய மகளோ, அதற்கு ஒரு படி மேல்சென்று, பனிமலரை அவமானப்படுத்தித் துரத்த முடிவெடுத்தாள்…
வேலுசாமியின் ஆட்கள், பனிமலரை நோக்கி நெருங்கினர்…

Advertisement