Advertisement

பிரியன் எதையோ சொல்ல வாயெடுக்க, அவனை ஊக்குவிக்கும் பாவனையில்,

“ஹ்ம்ம் சொல்லு…. உன் மனசுல என்ன இருக்குனு தெருஞ்சுகிறேன். நீ சொல்லப்போற பதிலை வச்சு என்னை இந்த நிலைமைக்கு ஆளானவன் மேல நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்குறேன்…

ஏன்னா, நான் அந்த ராஸ்கல் மேல நடவடிக்கை எடுக்கணும்னா இந்தக் கல்யாணமும் அதுல முக்கியமான பங்கு வகிக்கிது.

ஒருவேளை நீ தாலி கட்ட ரெடினா, நாளைக்கு நடக்கபோறதை எதிர்கொள்ளவும் ரெடின்னு நான் புருஞ்சுப்பேன்…சொல்லு…இப்ப உன் மனசுல என்ன இருக்கு ?” எனக் கேட்க ,

பிரியன் ஒன்றை நன்றாகப் புரிந்துகொண்டான்.

‘தான் தாலியை வாங்கின மறுநொடி, இவள் தன்னைப் பற்றிய அனைத்தையும் இந்தக் கூட்டத்தில் பகிரங்க படுத்திவிடுவாள் என்பதை ஐயமற புரிந்துகொண்டான்…’

அதையே அவனுடைய மனமும் எண்ணியது!

“சொல்லு….” என மீண்டும் மலர் சத்தமாகக் கேட்க,

“முடியாது…என்னால தாலி கட்ட முடியாது” என்ற வார்த்தையை இருந்த மொத்த கோபத்தின் வடிகாலாய், தோல்வியின் வெளிப்பாடாய், இயலாமையின் உச்சத்தில் அந்த வீடே அதிர கத்தினான், பிரியன்!

அவனுடைய அந்த ஒற்றை வாக்கியம், அந்த இடத்தையே ஒரு நிமிடம் ஆட வைத்தது. அனைவருள்ளும் பெரும் நிசப்த்தம்….

அங்குக் கூடியிருந்த அத்தனை நபர்களாளும் இதுவரை மலர் அனுபவித்த வலியை வலியாகவே உணர்ந்திருந்தனர். காசு பணம் சொத்துச் சொந்தம் என அனைத்தும் இருந்த போதிலும், பெற்றவர்கள் அருகே இல்லை என்ற காரணத்தினால் ஒருவன், ஒரு பெண்ணிடம் இத்தனை அத்துமீறி சித்திரவதை செய்திருக்கிறான் என்றால், அவளுக்கு எத்தனை பெரிய துணையாக இருக்க வேண்டும்.

அதிலும் பிரியன் அப்படியொரு துணையாக இருப்பானென்றே அவளுடைய கதையைக் கேட்ட நொடியில் அனைவரும் எண்ணியிருந்தனர். ஏனென்றால் பிரியனின் நடிப்பு அப்படி அவர்களை எண்ணம் கொள்ள வைத்திருந்தது..

ஆனால் தற்போது, பிரியனின் முக இறுக்கம், மாற்றம் , தாலி கட்ட மறுப்பது எல்லாம் அவன் இதுவரை மலர் மீது அவன் அன்பு வைத்திருப்பதாகச் சொன்னது அத்தனையும் நடிப்பென்று அவர்களுக்கு உரக்க அறிவித்தது….

அவனுடைய பேச்சு, பாவனை, பாசம் , பெருந்தன்மை இது அனைத்தும் போலி என அங்கிருந்த அனைவர்க்கும் தெள்ள தெளிவாகத் தெரிந்துவிட, இப்பொது பிரியன் என்றவன் அவர்களுடைய மன நிலையில், ‘சீ’ என்ற இரகத்திற்குள் தள்ளப்பட்டான்.

அதாவது பிரியன் என்பவன் சராசரி ஆண்களைப் போல உள்ளவனாக இருந்து, பிறகு இந்தச் செய்திகள் தெரியவந்தபின் அவன் மறுத்திருந்தால், அவனை யாரும் அருவுறுத்திருக்க மாட்டார்கள்.

ஆனால், மலரை பற்றிய யூகங்களுக்கும் வதந்திகளுக்கும் அடிபோட்டதே பிரியன் தான். அதாவது பிரியனுடைய வார்த்தைகள் தான்…

அதே வார்த்தைகள் தான் அவனைப் பற்றிய உயரிய பிம்பத்தையும் அவர்களுக்குக் கொடுத்திருந்தது. இப்பொது அவனுடைய உயர்ந்த பிம்பம் உடைந்து நொறுங்கியதும், மலரின் மீது அவன் வலுக்கட்டாயமாகத் திணித்த அக்கரையான வார்த்தைகளும் பொய்யென்று அவர்களுக்கு நிரூபணமானது…

இம்முறை சிவகாமி மகனிடம், “டேய்…நம்ம மலருடா..அப்படி சொல்லாத” என எடுத்து கூற முயல,

அங்கு மலரின் தாய் வழி மாமன் முறையில் நின்றவரின் கணீர் குரல் ஓங்கி ஒலித்தது.

“இந்தம்மா சிவகாமி…வேணாம். இப்படிப்பட்ட சின்னப் புத்தி உள்ளவன் எங்க வீட்டு பிள்ளைக்கு வேணாம்” என உறுதியாகச் சொல்லிவிட, அவரைத் தொடர்ந்து கூடியிருந்த அனைத்து உறவுகளும்,

“இவன் வேணாம் ஆத்தா….”

“நீ கண்ணைக் கசக்கி உனக்கு நடந்த கொடுமையைச் சொல்லுறப்ப என்னோட ஈரக்கொலையே அந்துபோச்சு. ஆனால் இந்த மலைமுழுங்கி பைய குத்துக் கல்லாட்டம் உக்காந்துருந்தான். அப்பவே எனக்குச் சந்தேகம்”

“அதுமட்டுமா… ஓடிப்போயிருச்சாம், மனம் திரிந்து வருதாம், இந்தப் பொய்கார பையன் ஏதுக்கபோறானாம்…இவனோட நடிப்புல நானே அசந்துட்டேன்”

“அப்படினால், மலர் பத்தி பேசியதெல்லாம் இந்தப் பிரியனோட சூதுவாதான பேச்சுதான். நாமளும் புத்திகெட்டு போய், நம்ம இரத்தினவேலு மகளைச் சந்தேகப்பட்டுட்டோமே ?”

“மானத்துக்காக உசுரையே கொடுக்கத் துணிச்சிருக்கு. இப்ப அப்பன் ஆத்தா இடத்துல நம்மள வச்சு வழி கேட்குது. என்ன ஆனாலும் நம்ம மலருக்கு உறுதுணையா இருக்கணும்”

“நம்ம பிள்ளை வாழக்கையைக் கெடுத்தவன வெட்டி வீசிட்டு, வேற நல்லா அனுசரணையான மாப்பிள்ளையா கட்டி வைக்கணும்”

“அப்போ பிரியன் ?”

“இந்தப் பஞ்சோந்தி பயல மொதெல்ல தொரத்துங்க. மலரை கட்டிக்க முடியாதாம்ல…. மலரு இவன் உனக்கு வேணாம் ஆத்தா….”

இது தான் மொத்த கூட்டத்தின் பேச்சும் சாராம்சம்…

சில மணித்துளிகள் முன் யாரை யோக்கியன் என அந்தக் கூட்டம் நினைத்துக்கொண்டிருந்ததோ, யாரை திருமணம் செய்வதால் மலர் பெரும் பாக்கியம் பெற போகிறாளென்று நினைத்துக்கொண்டிருந்ததோ, அவனே இன்று அந்த மக்கள் முன் பொய்த்துப் போனான்….

மலருக்கு வந்த வாழ்வை பார் என்று பிரியனை குறித்த பெருமிதத்துடன் கூறிய அதே வாய், பிரியனின் சிறுமையை எண்ணி அவனை ஏசியது….

யார் யாரெல்லாம் அவனைத் திருமணம் செய்துகொள் எனச் சொன்னார்களோ அவர்களே இவனைத் திருமணம் செய்துகொள்ளாதே வேணாம் எனத் தடையாய் வந்து நின்றார்கள்.

அவர்களுடைய எண்ணம் , இப்படிப்பட்டவனை மலர் திருமணம் செய்தால், நாளை அவளுடைய வாழ்வு நிம்மதியாக இருக்காதென்றும், அவளுடைய வாழ்வில் சந்தேகம் துன்பம் கண்ணீர் நரகம் மட்டுமே இருக்குமென்றும் கணித்துவிட்டிருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு இன்னமும் பிரியன் தான் இந்தப் பாதகச் செயலை செய்தானென்று தெரியாது….இருந்தும் பிரியனை வேண்டவே வேண்டாமென்ற முடிவிற்கு வந்திருந்தனர்!

இப்படியானதொரு சூழலில் தான் அங்கு ஆவேசமாய் உள் நுழைந்திருந்தான், பார்த்திபன்!

நுழைந்தவன், நுழைந்த மாத்திரத்தில் மேடையில் தாவி ஏறியிருந்தான்….

சட் சட் சட்டென்று விடாமல் கன்னம் பழுக்கப் பழுக்கப் பிரியனின் உதடு கிழிந்து இரத்தம் சொட்ட சொட்ட அடி பின்னியிருந்தான். முதலில் யார் இவன் என்ற கோணத்திலிருந்து அந்த மக்கள், பிறகு சுதாரித்தவராகப் பார்த்திபனை விளக்க எப்படியும் அதற்குள்ளாகப் பிரியனின் கன்னம் வீக்கம் கண்டிருந்தது.

அனைவரும் மறிக்க மறிக்கத் திமிறி திமிறி பிரியனின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தான், பார்த்திபன்!

“ஏ யாருப்பா…எதுக்கு இங்க வந்து அடிக்கிற ?” என ஒருவர் சத்தம் போட,

அவரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் பார்த்திபன் ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையை மலரின் மீது பதித்தான். அந்தப் பார்வை, ”உன்ன தனியா என்னால விடமுடியாது” என்ற அறிவிப்பை அவளுக்குக் கொடுத்தது.

இன்னமும் பார்த்திபனுக்குக் கோபம் அடங்கவில்லை…. ஓட்டமும் நடையுமாக வந்திருக்கிறானென்று அவனுடைய மார்பு விம்மி புடைத்ததிலிருந்தே தெரிந்தது.

ஆம்! அப்படிதான் அவன் வந்திருந்தான்….

பார்த்திபன் ஊரின் எல்லையிலிருந்தான்…. மலர் பேசும் தருணத்தில், பூதம் கைபேசியைப் பார்த்திபனுக்கு அழைத்து அதையே அப்படியே ஓட விட, அங்கு நடக்கும் அத்தனையும் செவி வழி செய்தியாகக் கேட்டுக்கொண்டே இருந்தான்…

மலர் தனது பிரச்னையைக் கையாளும் விதத்தைக் குறித்த நிறைவில் நின்றவன், அவள் உடைந்து அழுத போதினில் அங்கிருந்து ஓட தொடங்கியிருந்தான்…பூதத்தின் மீது பிரியன் கைவைத்திருந்த கணத்தில், பார்த்திபனின் கோபம் உச்சத்தைத் தொட்டிருந்தது.

வந்ததும் யாரையும் பார்க்கவில்லை எவரையும் விசாரிக்கவில்லை….

அடி அடி அடி மட்டும் தான்…

பிரியன் பார்த்திபனை கண்ட நொடி புரிந்துகொண்டான். இந்த அடி எதற்கென்று…ஆனால், அதை எப்படி வெளியே சொல்வான்… ஏன் அடித்தாய் என்று கூடக் கேட்க முடியாத நிலை.

ஏனென்று கேட்டு, அந்தப் பார்த்திபனுக்காகப் பனிமலர் பதில் சொல்லிவிட்டால், பிரியனின் உண்மை சுயரூபம் உண்மை வெளிவந்துவிட்டால், அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வை அவனால் கற்பனை கூடப் பண்ணி பார்க்க முடியவில்லை.

சற்று முன் பார்த்திபன் அடித்ததை விட, அவனுடைய உதடு கிழிந்து இரத்தம் வெளியேறுவதனால் ஏற்பட்ட வலியை விட, உச்சகட்ட வலியை அவனுடைய பயம் அவனுக்குக் கொடுத்தது….அந்த வலியை கொடுத்த பயத்தின் பெயர் மரணம் பயம்!

வார்த்தைகளை ஆயுதமாக்கி பிரியன் பனிமலரின் மனதை சிதைத்ததைப் போல, வார்த்தைகளின்றிப் பனிமலர் பிரியனின் மதியை கூறுபோட்டாள். எப்படி அவளுடைய காணொளி எங்கேனும் பரவிவிடுமோ என மானத்திற்குச் செத்து செத்து பிழைத்தாளோ, அதே போல அந்த நொடி எங்கே தனது பெயர் வந்துவிடுமோ வந்தால் தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்று ஒவ்வொரு நொடியும் செத்து செத்துப் பிழைத்திருக்கொண்டிருந்தான், பிரியன்!

“ஏன்பா ? உன்ன தானே கேட்குறாங்க ? எதுக்கு அவனை அடிச்ச ?” என மீண்டுமாகப் பார்த்திபனிடம் கேட்க,

“அவன் நிக்கிறது எனக்குப் பிடிக்கல! அதான் அடிச்சேன்” என மிக மிக அலட்சியமாகப் பதிலளித்தான், பார்த்திபன்.

அவனுடைய உடல் மொழியில் அலட்சியம் கலந்த கம்பீரம், பதிலில் அலட்சியம், பார்வையில் தீவிரமென நின்றிருந்தவனை அங்கிருந்தவர்கள் யோசனையுடன் பார்த்திருந்தனர்.

“என்ன நிக்கிறது பிடிக்கலையா ? என்ன உளறுற ?” என ஒருவர் கேட்க,

“ஆமாங்க….கட்டிக்கன்னும் ஆசைப்பட்ட பொண்ண ஒருத்தன் சித்திரவதை பண்ணிருக்கான்…

அவனைத் தட்டி தூக்கணும்னு ஆத்திரம் வரல , சும்மா நிக்கிறான்.

தாலி கட்டு கட்டுன்னு காட்டு கத்தா எல்லாரும் கத்துறீங்க… கட்டிக்கணும்னு தோணாமல் சும்மா நிக்கிறான்…

இப்படிச் சும்மாவே நிக்கிறவனை எப்படிங்க பிடிக்கும்…” என அலட்சியாமாகவே பதில் கூற,

பார்த்திபனின் பதில் ஏற்புடையதாக இருந்த போதிலும், ஒரு சிலர், “அதுக்காக நீ அடிப்பியா ?” எனக் கேட்க,

“என்னோட பூதத்தை அடிச்ச போது, யாரும் ஏன்னு கேட்கலியே இப்ப மட்டும் ஏன் கேட்குறீங்க ?

கை இருக்கவனெல்லாம் ஓங்குனால், ஓங்குற கைய உடைக்கவும் ஒடுக்கவும் இன்னொருத்தன் வருவான். அதை இவன் தெருஞ்சுக்க வேணாம் ?” எனப் பிரியனை சூட்டி காண்ப்பித்து வினவ,

“எல்லாம் சரி…யாரு பா நீ ?” என ஒருவர் கேட்க, மலர் வாய் திறந்தாள்.

“இந்த நிமிஷம் நான் உயிரோட இருக்கக் காரணம்.

அன்னைக்கு நான் தற்கொலை பண்ணிக்காமல் போனதுக்கும், வாழ்க்கைல பிடிப்பே இல்லாமல் இருந்த எனக்கே வாழணும்ங்கிற ஆசை வர காரணமும் இவர் தான், பார்த்திபன் இவரோட பேரு” எனக் கூற, அனைவருடைய பார்வையும் இப்பொது பனிமலரின் மீது திரும்பியது.

மற்றவர்களைக் கேள்வியே கேட்கவிடாமல், மலரே மேற்கொண்டு தொடர்ந்து,

“ஆமா! இவர் தான்…நான் இப்ப இங்க தைரியமா உங்ககிட்ட பேசுறதுக்குக் காரணம்.

எப்பவுமே பாதிக்கப்பட்டவங்க அவமான படவோ பயப்படவோ கூடாதுனும், தப்பு செஞ்சவங்க தான் அவமானப்படணும் பயப்படணும்னு எனக்குக் கத்து கொடுத்தவரு…

என்ன பிரெச்சனைனாலும் நாம யாரை நம்மோட உலகமா நினைக்கிறோமோ, யாரோட பார்வையில நம்ம கீழ போயிடக்கூடாதுனு பதறி பயப்படறமோ, அவுங்ககிட்ட நம்ம பிரச்னை முழுசா சொல்லணும், அவுங்க மேல நம்பிக்கை வைக்கணும்னு எனக்குச் சொல்லி புரியவச்சவரு….

இதை எதையுமே அவர் வார்த்தையா சொல்லல. வெவ்வேறு சூழல்ல அவரோட செயல் மூலமா இதை எனக்கு உணர்த்தினார்….

இந்த நிமிஷம் நான் நிமிர்வா பேச காரணம், இந்தப் பார்த்திபன் தான்” என விளக்கமளிக்க,

மற்றவர்கள் தங்களுக்குள் முணுமுணுக்கத் தொடங்கினர்.

கூட்டத்தில் ஒருவர், “இந்த மாதிரி புள்ளய மலர் கட்டிக்கிட்டால், நாளைக்கு என்ன பிரச்னை வந்தாலும், கூட இருந்து சமாளிப்பான் பா” என எடுத்துக்கொடுக்க, சுருட்டி வைத்திருந்த வாய் மீண்டும் அகல விரித்துக் கொண்டு வந்தான் பூதம்.

“எப்பா இன்னமுமா இந்த மாதிரி புள்ளையனு சொல்லுவீங்க…இந்த பிள்ளையவே கட்டி வைங்கப்பா…. ” என எடுத்து கொடுக்க, மீண்டும் சலசலப்பு உண்டானது.

சிலர் சரியென்றும், சிலர் யோசனையாகவும், சிலர் இதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமா என்றும் பலதரப்பட்ட பேச்சுக்கள் போக, வயதில் முதிந்தவர், மலரிடம் அபிப்ராயம் கேட்க,

அவளோ சம்மந்தமற்ற பதிலை அங்கே முன்வைத்தாள்…

அவளுடைய பதில், ‘இப்பொது எதற்கு?’ என்ற சிந்தனையை அவர்களுக்குள் எழுப்பியது.

ஆம்! அவள் சொன்ன வார்த்தைகள் அத்தகைய தன்மையை உடையது தான்….

“நான்…பிரியன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” எனக் கூற, அனைவருடைய புருவமும் யோசனையாக உயர்ந்தது. சிவகாமியின் முகத்தினில் இலேசான சந்தோசம்.

மலர் மகனிடம் பேசி திருமணத்திற்குச் சம்மதம் பெற போகிறாளோ ? என் அண்ணன் மகள் என் வீட்டு மருமகள் ஆவாளோ ? ஏன் இந்தப் பிரியனின் புத்தி இப்படிப் போனது ?

இப்படியான சிந்தனைகள் ஓட,

மலரும் பிரியனும் வேறு அறைக்குச் சென்றனர்…

Advertisement