Advertisement

பகுதி – 35(1)

னைவரும் யார் யாரென்று கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவர்களின் கேள்விக்குப் பதிலளிக்காமல் மாலை அணிந்து மணவறையில் அமர்ந்தவள், மணவறையை விட்டு எழுந்து நின்ற பிரியனை பார்த்து சவால் விடும் பார்வை பார்த்தாள்…

அவளுடைய அந்தப் பார்வையின் உஷ்ணத்தைத் தாள முடியாது அவ்விடத்திலே தாழ்ந்துகொண்டிருந்தான். ஆராவாரமாய் ஆர்ப்பரிக்கும் அடர்காட்டு தீயாய் கொடும் தணலை பனிமலரின் தீ விழி பிரியனை எரிந்துகொண்டிருந்தது.

அந்தப் பார்வை….

முடிந்தால் தாலியை கட்டு…

முடிந்தால் உனது நாடகத்தை அருகேற்று…

முடிந்தால் என் முன் தலை நிமிர்ந்து நில்லடா எனச் சொல்லாமல் சொல்லியது…

பார்வையா அது ? எச்சரிக்கை! பிரியனுக்கான இறுதி எச்சரிக்கை !! எரித்து சாம்பலாக்கும் எரிமலை!!!

இவள் மேடையில் அமர்ந்ததும் அவன் எழுந்ததும் ஒரு நொடி செயல் தான் என்ற போதிலும், அப்படி அவன் எழுந்தது மீண்டும் மூன்றாவது முறையாக அந்தக் கூட்டத்தை நிலைகுலைய செய்தது.

மாப்பிள்ளை எதற்கு எழுந்து நின்றுவிட்டான் என்ற கேள்வி சிவகாமியின் மனதிலும், மற்ற அனைவருடைய உள்ளத்திலும் எழுந்துவிடவே, ஒரு நொடி அவர்கள் அடுத்து என்னவோ என்ற கலக்கத்தில் தடுமாற, அங்கே ஒருவனின் குரல் ஓங்கி ஒலித்தது…

“மாப்பிள்ளை சார்… தங்கச்சிய கொடுமை படுத்தினவன கொல்லலுற ஆத்திரத்தோட எந்திரிச்சுடீங்களா ?

என்னா மனுஷன் சார் நீ…. உன்னைக் கொண்டாடணும்” எனக் கூறியவன் பூதமே!

பூதம் யாரென்ற கேள்வியோடு அவனின் புறமாகத் திரும்ப, அவனே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

“நான் பூதம்ங்க. எங்க ஊர்ல தான் தங்கச்சி இருந்துச்சு…. சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பவும் மனசு கேட்காமல் தங்கச்சி பின்னாடியே வந்தேனுங்க. இங்க வந்த பிறகு தான் தெரியுது, மலரு பட்ட கஷ்டம்.

அவனைக் கண்டதுண்டமா வெட்டணும்னு எனக்கே ஆத்திரம் வருது. அப்புறம் கட்டிக்கப் போற சாருக்கு வராதா என்ன ?” எனப் பொதுவாகப் பேசுவதைப் போல ஆரம்பித்து, இறுதி வரிகளைச் சற்றே அழுத்தி சொல்ல,

பிரியனின் இயலாமை பூதத்தின் மீது கோபமாகத் திரும்பியது.

“டேய் வாய மூடுறா… யாரு வீட்ல வந்து யாரு பேசுறது ? பிச்சைக்கார பயலே” எனக் கத்த,

“ஆமா சார்…இது மலர் வீடு. ஆனால் பாருங்க கண்ட நாயெல்லாம் கத்தி பேசிருக்கு…நான் அந்த வீடியோ பார்ட்டியை சொன்னேன்” எனக் கூற , பிரியன் பல்லை கடித்தான்.

“அட உங்க பல்லு தான். பதறாம கடிச்சுக்கலாம். மொதெல்ல தாலி கட்டுங்க, அப்புறம் தங்கச்சிய கொடுமை படுத்துனவன காலி பண்ணி சமாதி கட்டுங்க” எனப் பிரியனிடம் கூறியவன், ஊராரிடம், “மொதல்ல தாலி கட்டிறலாம். இங்க இருக்கப் பெரிய மனுஷங்களாம் சேர்ந்து அதுக்கப்புறம் தங்கச்சிக்கு நரகத்தைக் காட்டுனவனை நசுக்கிடுங்க. அதுல அவனுக்கு முதலடி என்னோடது தான்…

தங்கச்சிட்ட அவன் யாருங்கிற விவரத்தை கல்யாணத்த முடிச்சிட்டு கேட்டுப்போம். இப்போ முகூர்த்த நேரம் முடிய போகுது” என எடுத்துக்கொடுக்க, 

யார் எவரென்று தெரியாத போதும், பூதத்தின் பேச்சு ஏதோவொரு வகையில் சரியென்று அவர்களக்குத்தோன்றியது. அதோடு பிரியன் முன்பே குறிப்பிட்டிருந்தானே  ? மலருக்கு என்ன நிகழ்ந்திருந்த போதிலும் எதை இழந்திருந்த போதிலும் நீ என்னவள் அவன் கூறியிருந்ததனால், மலருடைய திருமணத்தை முடித்துவிட்டு தங்கள் வீட்டு பெண்ணிடம் வாலாட்டியவனின் வாழ்க்கையை முடிக்கலாம் என ஒரேமாதிரியான எண்ணத்தை அங்கிருந்த அனைவர்களும் கொண்டனர்.

 “பிரியன் உக்காரு ஐயா…அந்த நாய நாம்ம உருத்தெரியாம சிதைச்சிடலாம். என்ன வந்தாலும் நான் பாத்துக்கிறேன் ? நீ தாலி கட்டுயா. நேரம் போயிட்டே இருக்கு” என அந்த மாமன் முறையில் உள்ளவர் சொல்ல,

சுற்றியிருந்தவர்கள் ஒவ்வொருவராக,

“இல்ல அவனுக்கு இது பத்தாது…பொம்பள பிள்ளையைப் படம் பிடிச்சு மிரட்டிருக்கானா, கண்ண ரெண்டையும் நோண்டி பிச்சை எடுக்க வைக்கணும்” என ஒருவர் கூற,

“நானாச்சு…. அவனைத் தட்டி தூக்கிடறேன். நம்ம ட்ராவல்ஸ் ஒருமணிநேரத்துக்கு ஒன்னு போகுது. அவனைத் தெருநாயப் போல அடிச்சி வீசிடறேன்” என ஒருவர் ஆதங்க பட,

“இல்ல…அவனை இந்த ஊருக்குள்ள கட்டி வச்சு அடிக்கணும். ஒவ்வொருத்தரும் செருப்பால அடிக்கணும். கேட்டால் பிள்ளை திருட வந்தானு சொல்லி அவனை அடிச்சே கொண்ணுடனும். பின்னாடி வரதை அப்புறம் பாத்துக்கலாம்” எனப் பேச பேச பிரியனின் முகத்தினில் வேர்வை துளிகள் அரும்பின.

“ஐயோ ஊர் பெரியவங்களா…. அவனை அடிக்க எதுக்கு நீங்களாம் ? நானே லாரி ஒட்டுறவன் தான். ஒரு நாள் அடிச்சு தூக்கிட்டு ஆக்சிடண்ட்னு சொல்லிடறேன்.

பொம்பளை பிள்ளைக்கிட்ட ஆம்பள தனத்தைக் காட்டுறவன் வாழணும்னு எந்த அவசியமும் இல்ல” எனத் தீவிரமாக பேசிய பூதம்,

அவனே தொடர்ந்து, “மொதெல்ல கண்ணாலத்தை முடிப்போம். சார் உக்காரு” எனப் பிரியனை பார்த்து சொல்ல,

பிரியன் திரும்பி மலரை பார்க்க, சிவந்த அவளுடைய விழிகள் அவன் அமர்ந்தால் அந்த நிமிடமே, அவனுடைய பெயரை அவள் சொல்ல தயங்கப்போவதில்லை என எச்சரிக்கை செய்தது

பூதம் மீண்டும் மீண்டும் , “உக்காரு சாரு” எனச் சொல்லிக்கொண்டே இருக்க,

“என்னால உக்கார முடியாதுடா” எனப் பிரியன் கத்த,

“ஏன் உக்காருற இடத்துல புண்ணா ?” என அவனுடைய பாணியில் பூதம் இலந்தடித்தான்.

பூதத்தின் வாயை அடைக்க, பிரியனுடைய கையாளின் பெயரை சொல்லி, 

“டேய் ராசு…” என உறும, 

“ஓ அவனுக்கும் புண்ணா ?” என அசட்டையாக இலந்தடித்தான் பூதம்.

“ஏய் ஆளாளுக்குப் பேச்சை வளர்க்காதீங்கப்பா… பிரியன் உன் கையாள மொதல்ல தாலி கட்டுப்பா” என உறவினரில் மூத்தவர் சொல்ல,

சிவகாமி மகனுடைய கையை அழுத்தி அமரவைத்தார்.

ஐயர் தாலியை எடுத்துப் பிரியனிடம் கொடுக்க, நாலாபுறமும் ‘கட்டு கட்டு’ என்ற குரல் ஒலிக்க, பிரியனின் பார்வை மலரின் மீது அச்சத்துடன் பதிந்தது.

பிரியனின் கண்களில் தெரிந்த அந்த அச்சம், எப்போதும் மலர் பிரியனை காணும் பொழுந்தினில் இதுவரை கொண்டிருந்த அதே அச்சம்.

பிரியனின் கண்களில் தெரிந்த அந்தப் பயத்தை மலர் உணர்ந்துகொண்ட அந்நொடி, அவளுடைய இதழ்கள் இகழ்ச்சியுடன் வளைந்தன. அவளுடைய கடை இதழில் பிறரால் அறிந்துகொள்ள முடியாத குறுஞ்சிரிப்பும் விரிந்து, பிரியனின் ஆத்திரத்திற்குக் கனலூட்டியது….

மெல்ல இதழ் பிரித்து, “உன் கை தாலிய வாங்குனா, நீ அதோட காலி” என அவனை எச்சரிக்க, தாலியை வாங்க நீட்டிய கையைச் சட்டென்று பின்னுக்கு இழுத்தவன், மேடையிலிருந்து இரண்டாம் முறையாக எழுந்தான்.

“முடியாது….முடியாது….முடியாது….என்னால கைல தாலிய வாங்க முடியாது” எனக் கத்த,

“ஏன் சார் கைல குஷ்டம் பிடிச்சிருச்சா ? கைல வாங்க முடியாது கால்ல வாங்க முடியாதுனு…

நீ என்னா விளையாடுறியா ? ஊருக்குள்ள உன்ன நல்லவரு பெரிய மனுசருனு சொல்லுறாங்க.

நீ என்னா சார் ?

தங்கச்சிக்கு அநியாயம் பண்ணவனை என்னானு கேட்கணும் தோணாமல் நிக்கிற. இப்ப தாலி கட்ட சொன்னால் , முடியாது முடியாதுனு மூணுவாட்டி சொல்லுற. ?” எனப் பூதம் வெகு சாமர்த்தியமாகப் பிரியனை தோலுரிக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

“அதானே ? என்னதான் நீ நினைச்சிட்டு இருக்கப் பிரியன். உன் அப்பா நான் சொல்லுறேன். நீ தானே இந்தப் பிள்ளை மேல உசுரா இருந்த. தாலி கட்டு…” என அவனுடைய தந்தை உரக்க கூற,

பிரியன் அசையாமல் அப்படியே நின்றான். ஏனென்றால் அவன் அறிவான், மலருக்குத் தன்னைத் திருமணம் செய்ய விருப்பம்மில்லையென்று அவன் அறிவான்…

இருந்தும் அவள் மாலையோடு மணமேடையில் அமர்ந்திருக்கும் காரணம், தான் தாலி கட்ட முயன்றால் அவளுடைய நிலைக்குக் காரணம் ‘நான்’ தான் என அடுத்த நொடி அறிவித்துவிடுவாள் என்பதை அவன் தெள்ளன அறிந்திருந்தான்.

“எப்பா பிரியன் கட்டுப்பா….” எனக் கூட்டம் சலசலக்க தொடங்க, பிரியன் அடுத்து என்ன என்று தெரியாமல் திகைத்து நின்றான்.

அதாவது, பிரியன் நாலாபுறமும் பனிமலருக்கான வேலி அமைத்து அவளை அசையவிடாமல் மிரட்டி நிறுத்தியிருந்த நிலையில் பனிமலர் எவ்வாறு திகைத்து நின்றாளோ, அவ்வாறே அப்படியே அந்த நொடி பிரியனும் திகைத்து நின்றிருந்தான்…

“சார் ? நீங்க ஓடிப்போன பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிறதா கல்யான வீடெல்லாம் பேசுனாங்களே ?

அதெலாம் பொய்யா கோபால் ? பொய்யா ?” எனத் திரைப்பட பாணியில் எடுத்துக்கொடுக்க,

“வாயா மூடுடா….” எனப் பிரியன் வெறி பிடித்தவனைப் போலக் கத்த,

அவனுக்கு மீறி பூதமோ, “மூடுடா மூடுடா மூடுடா” எனக் கத்தினான். பூதத்தின் இந்தச் செயல் அனைவரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வைக்க, சட்டென்று பூதமோ, “எதிரொலி கொடுத்தேன் சார்….நீங்க கத்தினது சும்மா சிங்கம் கணக்கா இருந்ததா…அதான் படத்துலைபோலச் சவுண்ட் எபெக்ட் போட்டேன்…. ” எனக் கூறி மேலும் பிரியனை கடுப்படிக்க,

பூதத்தின் செயல்களை மற்றவர்கள் புரிந்துகொள்ளாமல் போகலாம். ஆனால் பிரியன் ? அவன் நன்றாகப் புரிந்துகொண்டான். அப்படிப் புரிந்து கொண்டாலும், அவனால் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருந்தான்.

“ஏன்பா கட்ட மாட்டிங்கிற ? அப்போ நீ மலர் வந்ததும் பேசுனதெல்லாம் பொய்யா ? ” என மலரின் சித்தி முறை வினவ,

பிரியன் பதில் சொல்லமுடியாமல் தடுமாறினான். தொண்டை குழிவரை வார்த்தைகள் இருந்த போதிலும், அனைவரையும் பார்த்து, “வாய்யா மூடுங்கடா….” எனக் கத்தவேண்டுமென்ற தீவிரம் இருந்த போதிலும், இத்தனை நாள் பசுத்தோல் போர்த்திய புலியாய் தான் நடித்த அனைத்தும் வீணாகிவிடுமே என அஞ்சி மௌனம் காத்தான்.

மனதில் உள்ளதை கத்தி கத்தி சொல்ல நினைத்தும் சொல்ல முடியாத சூழலில் நின்றால் எப்படி மூச்சு திணருமோ, பிரியனுக்கு அப்படியே மூச்சு திணறியது.

அந்த அவனின் நிலை, சற்று முன் உறவினர்கள் மத்தியில் மலரை கீழிறக்கி பேசி, அவளுக்கு வாழ்வு தரும் வள்ளலென்ற பட்டத்தை அவன் வாங்கிக்கொண்ட போது, இதே போலத் தான் மலருக்கும் ஓங்கி கத்த வேண்டும் போல இருந்தது.

எப்படி மலர் வார்த்தைகளைத் தொண்டைக்குள் அடைக்கிவைத்துக்கொண்டு, இவனுடைய மிரட்டலுக்குப் பணிந்து வாய்த் திறக்கமுடியாமல் அஞ்சி அஞ்சி நின்றாளோ மூச்சு முட்டி தவித்தாளோ அப்படியே இந்த நொடி பிரியன் மலரின் வார்த்தைகளுக்குப் பயந்து பேரச்சம் கொண்டு நின்றிருந்தான். வாய் விட்டு எதையும் கத்த முடியாமல் மூச்சு முட்டி விழி பிதுங்கி நின்றிருந்தான்…

பிரியனின் முகம் வெளிற தொடங்க, அவனருகே வந்த பூதம், “என்னா சார் ? முக்குற ? காத்தாப்புல வயக்காட்டுப் பக்கம் போகலையா ?” எனப் பிறர் அறியாமல் இலந்தடிக்க,

பூதத்தை ஓங்கி அறைந்திருந்தான் பிரியன்….

பூதம் கீழ் சென்று விழ, மனமேடையிலிருந்து எழுந்திருந்தாள், மலர் !

“அண்ணே!… ” எனப் பூதத்தின் அருகே சென்றவள், அவனை மெல்ல தூக்கிவிட்டபடி,

“என்னாச்சு பிரியன் ? நீ தான் நான் எதை இழந்திருந்தாலும் வாழ்க்கை தரேன்னு சொன்ன ? நானா ஓடி போய்ட்டேனு ஊரெல்லாம் பேசுன போது யாரும் எதவும் பேசாதீங்கன்னு உங்க அம்மாவையே அதட்டின ?

அதெல்லாம் நடந்திருந்தால் கூட, என் மேல தப்பு…நான் தான் தப்பு செஞ்சேன்னு சொல்லலாம்.

ஆனால் இப்போ என்னோட வாழ்க்கைல நடந்ததுக்கு நான் ஒரு சதவீதம் கூடப் பொறுப்பில்லை. என்மேல எந்தத் தப்பும் இல்லை…அப்படியிருக்குறப்ப முன்ன நீ எனக்கு வாழ்க்கை தர வள்ளல் போலப் பேசிட்டு இப்போ பின் வாங்கலாமா ?

எந்தப் பிரியன் நிஜம்… மணமேடைக்கு வரதுக்கு முன்னாடி வர பிரியனா ? இல்லை தாலி காட்டாமல் பயந்து ஒளியிற இந்தப் பிரியனா ?

சொல்லு” என நேருக்கு கேராக மலர் கேட்க, சுற்றியிருந்தவர்கள் தங்களுக்குள் முணுமுணுக்கத் தொடங்கியிருந்தனர்.

Advertisement