Advertisement

பகுதி – 33

அது காலை ஏழு முப்பது… முகத்தில் எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டவிரும்பவில்லை. மிகவும் இறுக்கமாக இருந்தாள், மலர்!. அவளுடைய சொந்த ஊரில் வந்து இறங்க, ஆங்காகே இருந்த ஒருசிலர் இவளை திரும்பி பார்த்து, “இரத்தினவேல் ஐயா பொண்ணு தானே ?” , “ஆமா, பிரியன் ஐயா சொன்னது போல வந்திடுச்சே” எனச் சப்தமாக முணுமுணுக்க, எதையும் காதினுள் வாங்கிக் கொள்ளாமல் பேருந்து நிறுத்தத்திலிருந்து இறங்கி நடக்க, குறுக்காக ஒரு வண்டி வந்து நின்றது.

“அம்மா, ஐயா உங்கள கூப்பிட்டு வர சொன்னாங்க” என வண்டி ஓட்டுநர் பணிவாகச் சொல்ல, எந்தப் பதிலும் சொல்லாமல் ஏறிக்கொண்டாள். பத்து நிமிட தூரம் தான் என்ற போதிலும், அந்தப் பத்து நிமிடத்தில் அவளுடைய சிந்தனை பத்துக் காத தூரம் பயணிக்கும் அளவு சிந்தித்துக்கொண்டிருந்தது…

அவளைப் பேருந்து நிறுத்தத்தில் பார்த்தவர்களின் கண்களில் ஓர் ஏளனம் இருந்ததை அவள் கண்டுகொண்டாள். அவர்களின் வார்த்தைகள் சொல்லாததை அவர்களுடைய முகங்களின் பாவனைகள் பிரதிபலித்தன.

‘ஓடி போனவள்’…

அவர்களின் முகப் பாஷைகள், மலருக்கு அவமானத்திற்குப் பதிலாக ஆத்திரத்தையே மேலோங்க செய்தது. அது ரௌத்ரமாக மாறியது! அவனுக்கான முடிவைக்கட்டவேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தாள். ஆனால் எப்படி இதை செய்யப்போகிறாய் என அவளுடைய மனதின் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை. ஆனால் ஏதோவொரு வகையில்…

அங்கு அவளுடைய வீட்டிலிருக்கும் சூழலை பொறுத்தே அவள் திட்டங்களை வகுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அவள் வந்திருந்தாள்.

பெரும் நிர்பந்தத்தில் தான் வந்திருந்தாள், பார்த்திபனுக்காக! பார்த்திபன் நேசித்த பனிமலர் எந்தவொரு சூழலிலும் அவனுடைய ஊரில் தரம் தாழ்ந்திட கூடாதென்ற வேதனையில் தான் இந்த முடிவை துணிந்தே எடுத்திருந்தாள். ஏதாவது செய்தாகவேண்டும்…

போராடவேண்டும்… பிரியனுக்கான பதிலடியை கொடுத்தே ஆகவேண்டும்… ஆனால் எப்படி ? அதைக் காலமும் சூழலும் நிர்ணயிக்கட்டும் என்ற தீர்க்கமான முடிவோடு தான் வந்திருந்தாள்.

ஆனால், அவளுக்கு ஒருபடி மேலாகப் பிரியன் சிந்தித்திருந்தான். சிந்தித்தது மட்டுமல்ல செயலிலும் முடித்திருந்தான்.

ஆம்! பனிமலருக்கான நிரந்தர வேலியையும் விலங்கையும் அவள் வீட்டிலே உருவாக்கியிருந்தான். அந்த வேலியை வேள்வியில் வலுப்படுத்த முனைந்திருந்தான். விலங்கை மஞ்சள் கயிற்றால் உருவேற்றியிருந்தான்.

அது தான் திருமணம்!!!

அக்னியின் சாட்சியாய் மாங்கல்யம் பூட்டி, பனிமலரை தன்னுடைய நிரந்தர அடிமையாய் மாற்றும் வைபோகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். ஏதாவது ஒரு வகையில் எதிர்த்து நிற்கவேண்டும் என்ற எண்ணத்திலிருந்தவளை, எதுவுமே செய்திடாதபடி சிறையில் தள்ளியிருந்தான். ஆம்! அது மணசிறை….திருமணசிறை…

ஊரார் உறவுகள் எனச் சாரி சாரியாய் அவளுடைய வீட்டில் உரிமையுடன் குழும, இவள் மட்டும் அந்நியமாய் அதிர்ச்சியாய் வாயிலில் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தையும், தென்னகீற்றால் வேயப்பட்டிருந்த பந்தலையும் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தாள்.

வண்டியிலிருந்து இறங்கி வாயிலில் கால் வைக்க, எங்கிருந்தோ சிவகாமி ஓடி வந்து தனது மருமகளைத் தாவி அணைத்துக்கொண்டார்.

“எங்க கண்ணு போன ? எதுனாலும் அத்தைகிட்ட சொல்லிருக்கலாம்ல? சொல்லாமல் போய் ஒண்ணுக்கிடக்க ஒன்னு ஆகிபோச்சுனா நான் என்ன செய்வேன் ?” எனக் கட்டிக்கொண்டு கேட்க,

“அம்மா…” என உரிமையுடன் அதட்டல் போட்டான் பிரியன். 

“ஒரு வார்த்தை….ஒரு வார்த்தை கூட நீங்கமட்டுமில்ல, இங்க இருக்க யாரும் மலர்கிட்ட கேட்க கூடாது. மலர் ஏன் போனாள் ? எப்படி வந்தாள் ? இது போல எந்தக் கேள்விக்கும் பதில் எனக்குத் தேவையில்லை.

என்னோட மலர் நல்லா இருக்காள். அது, அது ஒன்னு மட்டுமே போதும். இனியொருமுறை எதுக்காகவும் யாருக்காகவும் நான் மலரை இழக்க தயாரா இல்ல.

இந்த இடைப்பட்ட நாளுல, மலருக்கு என்ன நடந்திருந்தாலும், மலர் எதை இழந்திருந்தாலும் அவளை நான் சந்தோசமா இனி பார்த்துப்பேன். அப்படியே ஏத்துப்பேன்… ” குரல் கறகறக்க கூறியவன், மலரின் வலது கரத்தை அனைவரின் முன்பும் பற்றி, அவளை நேருக்குநேராகப் பார்த்தான்.

“உன்னைக் கேள்விகேட்கும் அதிகாரம் இங்க யாருக்குமே கிடையாது மலர். நீ வா” என அப்படியே அழைத்துச் செல்ல, அவனுடைய பிடியிலிருந்து தன்னுடைய கரத்தை பிறர் அறியாமல் உருவிக்கொள்ள மலர் போராடினாள்.

சுற்றியிருந்தவர்கள் தங்களுக்குள் முணுமுணுப்பதாய் கிசுகிசுக்க அவர்களின் சொல்லாடல்கள் சில பிசிறின்றி மலரின் செவி சேர்ந்தது.

”காசு பணம் இருக்குதுனா, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகலாம் பல நாள் கழிச்சும் வரலாம் போல”

“அட…அதுக்கெல்லாம் கொடுப்பன வேண்டும். கட்டிக்கப் போறவன், எதை இழந்தாலும் ஏத்துக்கிறேன்னு தாங்குறானே ?”

“இப்படி ஒரு பைத்தியக்காரன் இருப்பானா ? இந்தப் பிரியன் அவ்ளோ நல்லவன். நல்லவனா இருக்குறதும் முட்டாள்தனம் தான் போல”

“அடியே வாய் கழுவுங்க. இந்தப் பிரியன் தம்பிய போல ஒரு நல்லவனை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை… சொக்க தங்கம்”

“ஆமா… அம்மாகிட்டையே கட்டிக்கப் போறவளை விட்டுக்கொடுக்க மாட்டீங்கிறானே ?”

“ஓடுகாலிக்கு இப்படியொரு மாப்பிள்ளை”

“இரத்தினவேல் ஐயா எத்தா பெரிய மனுஷர். அவர் பொண்ணுக்கு ஏன் இப்படிப் புத்தி போச்சு”

இவை தான் அந்த ஒட்டுமொத்த கூட்டத்தின் எண்ணமும் பேச்சுமாக இருந்தது.

இவர்களின் பேச்சு எப்படி இருந்ததென்றால், பூட்டிய கதவிற்குள் என்ன இருக்குறதென்ற யூகத்தின் அடிப்படையில் கண் காது மூக்கு வைத்துக் கை கால்கள் முளைத்து நடக்கவே தொடங்கியிருந்தது.

தீர்க்கப்படாத சந்தேகங்கள் கொலையைவிட ஆபத்தானவை! ஒவ்வொருவரின் யூகத்திற்கும் கற்பனைக்கும் உணவாய் மலரின் பெயர் அடிபட தொடங்கியது. அது தானே பிரியனின் திட்டமும்!

அவளை சிந்திக்கவிடாமல் முடக்குவதற்கே, அவள் வருகின்ற நாளையே திருமண நாளாக ஏற்பாடு செய்திருந்தான். அந்த ஊரே இரத்தினவேலின் உறவுகளாக இருக்க, முதல் நாள் மாலை சொல்லியனுப்பி காலை வரவழைத்திருந்தான். 

அனைவரின் முன்பும் மலர் தாழ, இவன் அவளுக்கு வாழ்க்கை தரவேண்டும். மலரின் மரியாதை அடியோடு நிலைகுலைந்த நிலையில், அவளுக்கு வாழ்வளித்த வள்ளலாக பிரியன் பெயர் பெற வேண்டும்…

அதுவே அவனுடைய திட்டம். அது அவன் சிந்தித்ததை விட மிக சிறப்பாக வேலை செய்தது. இந்த வார்த்தைகளும் இந்த பார்வைகளும், மலர் மீது வீழ்ந்த சந்தேக கேள்விகளும் மேலும் மலரை பலவீனமாக்கும் பேராயுதமாக இருந்தது…

“மலர்… நீ போ மா…. போய் ரெடி ஆகு. பத்திரையிலிருந்து பதினொன்னு முப்பது வரை நல்ல சுப யோக முஹூர்த்தம்னு நம்ம குடும்ப ஜோசியர் சொன்னாரு.

போனது போகட்டும்…

இனிமேலாவது நாம இரெண்டு பேரும் நல்ல வாழ்க்கையை ஆரம்பிப்போம்” எனக் கூறி அனுப்ப, அவளிடம் மற்றவர்கள் யாரும் நெருங்காத வண்ணம், அவனே உடன் சென்று அவளுடைய அறையில் விட்டான்.

“குளிச்சுச் சீக்கிரம் ரெடி ஆகிடு… பொண்ணைச் சடங்குக்குத் தயார் பண்ண ஆளுங்க வராங்க. சொந்தகாரங்க வேணாம்னு, பார்லர்ல இருந்து வர சொல்லிருக்கேன்.” எனச் சொல்லி வெளியேற போனவன் சற்றே பின்னால் வந்து,

“பயப்படாத செல்லம். இன்னைக்குப் பாத்ரூம்ல எதுவும் வைக்கல. இனிமேல் தினம் தினம் பார்க்க போறேனே ?” என வக்கிரமாகச் சொல்லி செல்ல, அந்த நிமிடமே அவனைக் கொன்று புதைக்கும் ஆத்திரம் அவளுள் எழுந்தது.

அவளுடைய மனசாட்சியே, “அப்பா அம்மா சாவுக்குக் காரணம்னு பார்த்திபனை கொல்ல துணிஞ்சியே ? அந்தத் தைரியம் ஏன் இந்தப் பொறுக்கி விஷயத்துல உனக்கு வரமாட்டீங்கிது ?” என அவள் முன்னால் தோன்றி கேள்வி எழுப்ப, மனசாட்சியோடு வாதாட தொடங்கினாள், பனிமலர்!

“இவனை அப்படிச் செய்யமுடியாது… இவன் கிட்ட என்னோட அந்த வீடியோ…அதோட அவனுக்கு ஆள் பலமும் இருக்கு” எனப் பனிமலர் கூற,

அவளின் மனசாட்சியே ஏளனமாக உதட்டை வளைத்து சுளித்தபடி, “சாக்கு….” என எள்ளி நகையாடியது.

“இல்ல இவனை என்னால அப்போவும் இப்பவும் கொல்ல முடியல. இந்த வீடு என்னோடதா இருந்தாலும், இப்ப இங்க இருக்கிற வேலை ஆட்கள்ல இருந்து காவல் ஆட்கள் வரைக்கும் அவனோட ஆட்கள். அவன் நான் தொடமுடியாத அளவு பலமா இருக்கான்” என விளக்க முயல,

அவளின் மனசாட்சியே, “நீ பலவீனமா இருக்கனு சொல்லு… அவனைப் பலசாலின்னு சொல்லாத” என எச்சரித்தது.

“இப்ப நான் என்ன தான் பண்றது ?” எனப் பனிமலர் கத்த,

அவளுடைய மனசாட்சியே, “கொண்ணுடு…அவனை மொத்தமா கொண்ணுடு. அப்பத்தான் நீ நிம்மதியா வாழ முடியும். கொண்ணுடு” என மீண்டும் மீண்டும் அதையே கூறி அரற்ற, ஒரு நொடி நிலை பிறழ்ந்தாள், பனிமலர்!

அவள் அடுத்த முடிவை எடுப்பதற்குள், பிரியன் கூறிய அழகு நிலைய பெண்கள் வந்துவிட, அவளுடைய மனப்போராட்டத்திலிருந்து வெளிவர பெரிதும் போராடினாள்.

“மேடம்…மேடம்…” என ஐந்தாவது முறையாக அழகு நிலைய பெண்கள் இருவர் அழைத்த பிறகே, பனிமலர் சுயத்திற்குத் திரும்பினாள்.

“பிரியன் சார் அனுப்பினார்…குளிச்சிட்டு வந்திடறீங்களா.மொட்டை மாடில ஒரு தனி ரூம் இருக்குதுங்கலாமே ? அங்க வச்சு மேக் அப் பண்ண சொன்னாரு. இங்க கூட்டமா ஆளும் பேருமா இருக்காங்கனு” என அந்தப் பெண்கள் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே,

மலரின் அத்தை, சித்தி, மாமன்கள், எனச் சில உறவுகள் அங்கு வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மலரின் தாய் வழி சொந்தமாக இருந்தது.

“என்ன மலருமா ? நீ இப்படிச் செய்யலாமா ? எங்க அக்கா வளர்த்த பொண்ணா இப்படினு ரொம்பச் சங்கடமா போச்சுமா. எங்க போன ? என்னதான் அச்சு ?” என ஒரே சாராம்சம் பொருத்திய கேள்விகளை வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு வாக்கியத்தில் வெவ்வேறு வார்த்தைகளால் கேட்க தொடங்கினர்.

அவர்களின் கேள்விகள் ஆயிரம் இருந்த போதும், அவர்கள் யாரும் அவளிடம் வம்பு வளர்க்க எந்தவொரு கேள்வியையும் கேட்கவில்லை. உண்மையான கரிசனையோடு கேட்டனர். ஆனால், பிரியனின் வார்த்தைகள் யாவும் உண்மை என்ற கோணத்தில், இவள் தான் குற்றவாளி என்ற முடிவோடு, அதேவேளையில் அவளுக்காக மெய்யான வருத்தம் கொண்டவர்களாக அவர்களின் கேள்விகள் இருந்தன.

“என்னதான்மா ஆச்சு ? மாப்பிள்ளைக்கும் தங்கச்சிக்கு இப்படியொரு கெட்ட பேரை கொடுத்துட்டியே மா ?”

“நல்லகாலம், அந்தப் பிரியன் ரூபத்துல உனக்கு விடிவுகாலம் வந்திருக்கு. அவனைக் கட்டிக்கமா. எதுனாலும் அப்புறம் பேசிக்கலாம்”

“இந்த முறையும் எதையும் நீயா செஞ்சிடாத தாய். பிரியனை கட்டிக்கிட்டுப் பொழைக்கப் பாரு” என இவ்வாறாக அனைவருடைய பேச்சுக்களின் திசையும் இருந்தது.

மலருக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது…இவர்கள் என் மீது அக்கறை கொண்டிருந்தாலும் பிரியனின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களென்று!

பேசிய அத்தனை உறவுகளும் ஒன்றுவிட்ட பங்காளி முறைகளே… பனிமலரின் தாய் தந்தை இருவருமே அவரவர் வீட்டில் ஒற்றைப் பிள்ளையாய் பிறந்தவர்கள். அந்தக் காரணத்தினால் தான், சிவகாமி குடும்பம் வந்த பொழுது உரிமையாய் தாய் வழி சொந்தமெதுவும் நிற்கவில்லை.

ஆனால் அதற்காக அவர்கள் மலரை ஒதுக்கிவைக்கவோ கெட்டழித்துப் போகச் செய்யவோ விரும்பவில்லை. நல்லவர்கள் தான்…ஆனால் சற்றே தள்ளி நிற்கும் நல்லவர்கள்!

நிதர்சனம் என்னவென்றால் தள்ளி நிற்கும் நல்லவர்களால் பயனேது ?

“சொல்லுமா ?”, “சொல்லு”, “சொல்லு” எனச் சுற்றி நின்று கேள்வி எழுப்ப, மலருக்கு தலை சுற்றிப் போனது.

இவர்களிடம் என்னவென்று எதிலிருந்து எங்கிருந்து தொடங்குவதென்ற பெரும் குழப்பத்தில் மலர் இருக்க, மீண்டும் அங்கு வந்து சேர்ந்தான் பிரியன்.

“அட சின்ன மாமா, அத்தை, பெரியப்பா எல்லாரும் என்னோட பொண்டாட்டிக்கிட்ட என்ன சொல்ல சொல்லுறீங்க ?

எதுனாலும் கேளுங்க. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம். . .

வேணும்னா உங்க எல்லாரு வீட்லயும் கல்யாணம் முடுஞ்ச கையோட ஆளுக்கு நாலு நாள் தங்க அனுப்புறேன். சரிதானா ?” எனச் சிரிப்புடன் வினவி, அவர்களுடைய கேள்வியின் திசையை வெகு சாமர்த்தியமாக மாற்றினான் பிரியன்.

“எங்க வீட்டுக்கு அனுப்பிட்டு ? நீங்க என்ன தனியா இருக்கப் போறீங்களா மருமகனே ?” என அவனுடைய அத்தை முறையும் பனிமலரின் சித்தி முறையிலும் இருக்கும் பெண்மணி கேட்க,

“அனுப்புறேன்னு தானே சொன்னேன் ? தனியான்னு சொல்லலியே ? மலர் எங்கையோ அங்க தான் இந்தப் பிரியனும் ? ஏன் எங்க இரெண்டு பேரையும் விருந்துக்குக் கூப்பிடமாடீங்களா என்ன ?” எனச் சரிக்குச் சரியாகப் பேச,

அவனுடைய இந்தக் கலகலப்பான பேச்சில் சுற்றி இருந்தவர்கள் சொக்கி தான் போனார்கள்.

அவர்களை மெல்ல பேசி திசை திருப்பி வழியனுப்பியவன், அழகு நிலைய பெண்களோடு மாடிக்கு மலரை அனுப்பிவைத்தான்.

“போ கண்ணம்மா… சீக்கிரம் என் கையாள தாலிகட்டிக்க வா. அப்புறம் நீ கட்டிகிட்டயே, அந்த டம்மி தாலிய தூக்கி குப்பைல போட்டிரு” என அவள் காதோரம் கிசுகிசுத்து சொல்ல, அவள் அணிந்திருந்த சுடிதார் காலருக்குள் மறைந்திருந்த தாலியை தடவி பார்த்து வேதனை கொண்டாள்.

பனிமலரின் மனதினில் எத்தனை வேதனை, இருந்ததோ அதே அளவிற்குச் சற்றும் குறையாத தன்மையுடன் கோபமும் இருந்தது. தீ பிழம்புகளை உள்ளடக்கிய எரிமலை வெடித்துச் சிதறாதவரையிலும் எத்தனை அமைதிகாக்குமோ அத்தனை அமைதியை காத்துக்கொண்டிருந்தது மலரின் மனம்.

மலைக்குள் முடங்கிக்கிடக்கும் தீ பிழம்பாக, பெரும் சூறாவளியை கிளப்ப வல்ல மாபெரும் சமுத்திரமாக, அழுந்த அழுந்த திமிர திமிர பிரியனின் கொடுமைகளும் அதனால் ஏற்பட்ட வலிகளும் பனிமலரின் இருதயத்தைக் கனக்க செய்து கொண்டே வந்தன.

எந்த நொடியில் அது வெடிக்கிறதோ அந்த நொடி பிரியனின் ஆட்டத்திற்கு அஸ்தமனம்.

ஆனால், அவள் முன் பிரியானால் அமைக்கப்பட்ட வேலிகள் இருந்தன. அந்த வேலிகளை உடைக்கமுடியாதபடி பெரும் பூதங்களும் இருந்தன. ஆம்! பூதங்கள் தான்…

அவை, அவளுடைய ஒழுக்கத்தைக் கேள்வி கேட்கவைக்கும் பூதம்.

அவை, மலரின் முன் உறவினர்கள்/ஊரார்கள் என்ற பெயரில் நின்ற பூதம்.

அவை, சமுதாயம் என்ற பெயரால் கட்டமைக்கப்பட்ட பூதம்…

இந்தப் பூதங்களைச் சமாளித்து, வேலியெனும் திருமண மேடையை உடைத்து அவள் எப்படி வெளிவருவாள்?

“என்ன செய்யப் போறேன் ?” என்ற கேள்வியை அவளுடைய மனது எழுப்ப,

“ஏதாவது செய்தே ஆகவேண்டும்” என்ற பிடிவாதத்துடன் அவளின் அறிவு அவளுடைய மனதிற்குக் கட்டளையிட்டது!

நேரம் ஒன்பது நாற்பத்தி ஐந்தை நெருங்கிக்கொண்டிருந்தது…

“சார்…அலங்காரம் முடிஞ்சது. இன்னும் கொஞ்சம் மல்லி பூ மட்டும் வரணும். அதை மட்டும் ஜடையில சுத்திவிட்டுட்டால் நிறைவா இருக்கும்” என அழகு நிலைய பெண்கள் சொல்ல,

“சரி, நான் அதைப் பார்த்துகிறேன். கீழ அம்மாகிட்ட கொடுத்துவிடச் சொல்லுங்க. நானே என்னோட மலருக்கு மலர் வைக்கிறேன்” எனச் சொல்லி அந்த இரெண்டு பெண்களையும் அங்கிருந்து அனுப்பினான், பிரியன்.

முன்பே உறவுகளின் கூட்டத்தை அவளிடம் நெருங்க பிரியன் அனுமதிக்கவில்லை . இப்பொது இருந்த இரண்டு பெண்களையும் அனுப்பிவிட்டு, அவளோட தனித்து நின்றான்.

அவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்தபடி, “செம்ம அழகு டி நீ… வாய்ப்பே இல்ல. அதுவும் இந்தச் சீலைல…அம்மாடியோ அள்ளுற. ஆனால் சேலை இல்லாட்டிகூட நீ அள்ளத்தான் செய்ற. என்னா உடம்பு டா சாமி…” எனக் கீழ்த்தரமாக அவன் அவளை வர்ணிக்க முயல, “வாய மூடு” என அடிக்குரலில் சீறினாள் மலர்!

“இன்னும் கொஞ்ச நேரத்துல தாலி கட்டிருவேன்.

அப்புறம் இப்படியெல்லாம் உன்னால கத்த முடியாது… கத்தினாலும் எவனும் கேட்கமாட்டான். ஏன்னா நீ சொல்றதை கேட்க எவனும் இருக்கப் போறதில்லை.

இனி நீயும் நானும்….அடிச்சாலும் பிடிச்சாலும் நான் தான் கண்ணம்மா உனக்கு.

நம்ம இரெண்டு பேருக்கும் நடுவுல எவனாலும் வரமுடியாது! அப்படி எவனாச்சும் வந்தால்….” என அடிக்குரலில் பிரியன் உறுமிக்கொண்டிருக்க,

“வந்துட்டேன்…” என எந்தவித அனுமதியும் கேட்காமல் உள் நுழைந்திருந்தான்.

புதிதாக வந்தவனை முழு எரிச்சலுடன் பார்த்த பிரியன் “யாருடா நீ ?” என வினவ,

“பூதம்…பஞ்ச பூதம்….” என வாயை குவித்துச் சொல்லியபடி பிரியனுக்கும் பனிமலருக்கும் இடையே வந்து பந்தாவாக நின்றான், பஞ்ச பூதம்!

Advertisement