Advertisement

எந்தக் கேள்வியும் இல்லாமல் நீங்க எங்கையும் சரக்கு எடுக்கப் போகாமல் இங்கையே இருக்கணும். பக்கத்துல இருக்கணும்னு அவசியமில்லை. என் குரல் உங்களுக்குக் கேக்குற தூரத்துல, என் கண்ணுல நீங்க படர தொலைவில இருக்கணும்.

பண்ணுவீங்களா ?” என ஆவலாக அத்தனை எதிர்பார்ப்புகளைச் சுமந்தபடி கேட்க, பார்த்திபனுக்கு நன்கு புரிந்து போனது.

‘நாளை இவள் இங்கிருக்கப் போவதில்லை’ என்ற உண்மையை அவன் மனம் அடித்துச் சொன்னது.

அவன் மனதினில் ஆயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டே இருந்த போதிலும், அவனுடை உதடுகள், “பண்றேன் மலர்” என உச்சரித்திருந்தது.

அவன் அப்படியொரு வாக்குறுதியை குடுத்த பிறகு தான், பனிமலர் மனம் கொஞ்சமேனும் ஆசுவாசம் கொண்டது.

ஒருபுறம் சற்றே ஆசுவாசம் கொண்ட போதிலும், ‘இந்த அசிங்கத்தை உங்ககிட்ட எப்படிச் சொல்லுவேன் ? வேணாம்…இது என்னோடவே போகட்டும்’ என அரட்டிக்கொண்டது.

அன்றைய முழுத் தினமும் பார்த்திபனை தன்னுடைய விழிகளுக்குள் திகட்ட திகட்ட நிரப்பிக்கொண்டாள், பனிமலர்! அவன் செல்லும் திசையெல்லாம் அவள் பார்வை போனது… அவன் பேசும் வார்த்தையெல்லாம் மனதினுள் சேகரிக்கத் தொடங்கினாள். மலரின் மனநிலை, இன்றோடு உலகம் அழிகிறது… முடிந்தமட்டும் வாழவேண்டுமென்ற பெரும் எண்ணம் மட்டுமே!

அதேநேரத்தில் பார்த்திபனுக்குப் பனிமலரின் மனம் நன்கு புரிந்தது. ஆனால், அவள் ஏன் தன்னிடம் சொல்லாமல் இங்கிருந்து செல்ல துணிந்தாள் என்று மட்டும் புரியவில்லை. அதே சமயம், மலர் வாய்தவறி உச்சரித்த அந்த வாரத்தை, ‘தோத்துப்போனாலும் உயிர்தான் போகும்…மனம் போகாதே!’ பார்த்திபனின் காதினுள் ரீங்காரமிட்டது.

அவன் மனது, அந்தச் சிறுமிக்கு அன்று பாலியல் தொல்லை நிகழ்ந்த போது பித்துப் பிடித்தவளை போன்று மலர் அமர்ந்திருந்ததும், அவனுக்கான தண்டனை கிடைத்தபின் அவளின் முகத்தில் தோன்றிய நிம்மதியும் ஏனோ வந்து வந்து போனது.

பார்த்திபனின் மனம் ஏதேதோ கற்பனை செய்யப் பதறித் துடித்தது!

என்ன நடந்திருக்கும் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வி ஒரு நொடியே அவனுள் எழுந்தது. மறுநொடியே, என்ன நடந்திருந்தாலும் சரி, அதிலிருந்து மலரை எப்படி வெளிலகொண்டுவரது ? என்ற கேள்வியே அவனுள் பிரதானமாக எழுந்து நிற்க ஆரம்பித்தது.

மாலை நெருங்கியது!

பார்த்திபன், பூதத்தைத் தேடி சென்றான். அதே நேரத்தில், தாமினி தேவியும் கோவிலிலிருந்து வீடு வந்திருந்தார். மலருக்கு இப்பொது விட்டால் வேறு எப்போதும் அவரிடம் பேச வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை என்று தோன்றியது.

கோவிலிலிருந்து வந்த தாமினியை சுற்றி சூரியவர்மன் தாரா நித்ய கலா பூவம்மாள் பாட்டி என அனைவரும் இருக்க, அவர்கள் விலகி போகும் தருணத்திற்காகக் காத்திருந்தாள்.

அனைவருடைய பேச்சும் நாளை நீதிமன்றத்தில் வரவிருக்கும் தீர்ப்பை குறித்தே சுற்றிவந்தது. அனைவருடைய மனதிலும் பெரும் எதிர்பார்ப்பும் இருந்தது…

தாமினி தேவி மட்டும் ஒருவிதமான ஆழ்ந்த யோசனையில் இருந்தார். இறுதியாகப் பூவம்மாள் பாட்டி தான், ”அவ களைப்பா வந்திடுப்பா…கொஞ்சம் கண்ணசரட்டும். எல்லாம் போய் அவுங்க அவுங்க வேலையைப் பாருங்க” எனக் கிளப்பிவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல, சில நிமிடங்களில் தாமினியின் அறை கதவை திறந்துகொண்டு பனிமலர் மெல்ல வேறு எவரும் அறியாமல் நுழைந்தாள்!

எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பதென்ற பதற்றத்தோடு மலர் உள் நுழைய, அவளை எதிர்பார்த்து காத்திருந்ததைப் போன்று ஓய்வெடுக்காமல் தனது விரிப்பில் அமர்ந்திருந்தார், தாமினி தேவி!

“உள்ள வா…உக்காரு” எனத் தாமினி சொல்ல, தன்னிடம் முகம்கொடுத்து பேசிய தாமினியை பெரும் ஆச்சர்யத்துடன் பார்த்தபடி விரிக்கப்பட்டிருந்த பாயில் அமர்ந்தாள்.

மேற்கொண்டு, பனிமலர் பேசட்டும் என அவள் முகம் பார்த்து தாமினி அமர்ந்திருக்க, “அம்மா…நான் அப்படிக் கூப்பிடலாம்ல ? என்கிட்டக்கூட இப்போ நல்லா பேசிட்டிங்க. ஆனால் ஏன் உங்க பையன் கிட்ட இன்னமும் முகம் குடுத்து பேசல ? உண்மையிலயே தப்பு செஞ்சது நான் தான்” எனத் தொடங்கி, அவள் பார்த்திபனை தவறாக நினைத்தது, அவனுடைய வண்டியில் அவனுக்கே தெரியாமல் ஏறியது, தற்கொலை செய்துகொள்ளும் நோக்கோடு விஷத்தையும் அவளுடைய அம்மாவின் தாலியையும்(பெற்றவர்களின் நினைவாக) கையோடு கொண்டு வந்திருந்தது, அப்போது பார்த்திபனை பார்த்து ஆவேசம் கொண்டது, அவனைப் பழிவாங்கவே தான் பார்த்திபனின் மனைவி என்று தன்னை அடையாளப்படுத்திகொண்டதென்று அனைத்தையும் ஒரே மூச்சாகக் கூறிமுடித்து நிமிர்ந்தாள், பனிமலர்!

தான் இத்தனை உண்மைகளை ஒரே நேரத்தில் தெரியப்படுத்தியதில் தாமினி ஆத்திரம் கொண்டிருப்பார், தன்னை அடித்து விரட்ட கூட வாய்ப்புண்டு என்ற எண்ணத்தோடு மலர் ஏறிட, தாமினியோ நிர்மலமான முகத்துடன் இன்னமும் அமர்ந்திருந்தது, மலருக்கு பெரும் வியப்பையே தந்தது!

அதே நிர்மலமான முகத்துடன் மலரை தாமினி தேவி ஏறிட்டு ஒரு சில நொடிகள் மலரை ஆராய்வதைப் போன்று பார்வையிட, மலர் பெரும் பதற்றமமாக அந்த நொடிகளை உணர்ந்தாள்.

ஆம்! பதற்றம் கொண்டவள் மலர் தான். இதே மலர் இந்த வீட்டிற்கு வந்த முதல் நாள் தாமினியின் முன் எவ்வித பதற்றமும் எதிர்பார்ப்பும் இல்லாமல் நின்றிருந்தாள். ஏனென்றால் அன்று தாமினி என்பவர் தனது பெற்றோரின் மரணத்திற்குக் காரணமானவனின் தாய். ஆனால் இன்றோ தனது உலகமானவனின் உறவு.

ஓர் இடத்தில் நாம் உறவை நாடினால் தான் அங்கே அந்த உறவு நிலைக்கவேண்டுமென்ற பதற்றமும் படபபடப்பும் எதிர்பாப்பும் இருக்கும். நாம் முக்கியமில்லை என்று ஒருவரை நினைத்துவிட்டால் அவர்களின் எந்தவொரு உணர்வும் அவர்களின் எண்ணமும் நம்மைப் பாதிக்காது…

அன்று மலருக்கு இதே தாமினியின் கோபம் பாதிக்கவில்லை . இன்றோ, தாமினியின் பதிலுக்குக் கிட்டத்தட்ட மன்னிப்பை வேண்டி தவம் கிடந்தாள் எனக் கூறலாம்…

அவளை வெகுநேரம் காக்கவைக்காமல் தாமினி தேவி வாய்த் திறந்தார். ஆனால் அப்படி அவர் வாய் திறந்த போது மலருக்கு அது பேரிடியாக இருந்தது…

“எல்லாம் சரி…எல்லாத்தையும் சொன்ன நீ, உன்னைத் தேடி வந்தவனைப் பத்தி மட்டும் சொல்லாமல் விட்டுட்டியேமா ? சொல்லமாலே இங்கிருந்து புறப்படலாம்னு நினைச்சிட்டியோ ?” எனக் கேட்க, மலர் ஆடிப்போனாள்.

திகைப்பு கொஞ்சமும் விலகாமல் ஏறிட,

“கேட்டேன்… நேத்து எல்லாரும் பூதம் வீட்டு கலையானதுல இருந்தபோது, நான் முன்னவே வந்துட்டேன். மாடில சத்தம் கேட்டு வந்து கேட்டேன்…

முழுசா கேட்கல… என்ன பிரச்னை அப்படினும் எனக்குத் தெரியாது. ஆனால், ஏதோ பிரச்சன்னைனு மட்டும் தெரியும். அவன் உன்னை மிரட்டுறானு புரியுது. ஆனால் நீ ஏன் அதுக்குப் பயப்படறனு எனக்குத் தெரியல. ” எனச் சொல்லிவிட்டு மலரின் முகம் காண,

பதில் சொல்லமுடியாமல் அப்படியே ஸ்தம்பிக்க, அவளுடைய கண்களிலிருந்து மட்டும் நீர் நிற்காமல் வழிந்தது.

அழுகையினூடே கண்ணீரை பிடிவாதமாகத் துடைத்தெறிந்தபடி, “நான் எந்தத் தப்பும் பண்ணல. ஆனால் அவன் மிரட்டலுக்குப் பயப்படற சூழ்நிலைல நான் இருக்கேன். எனக்குக் கல்யாணம், காதல், வாழ்க்கைனு எதுக்கும் எந்தத் தகுதியும் இல்ல.

என்ன இதுக்குமேல எதையும் கேட்காதீங்க. ஒருவேளை நான் சொல்லி, நீங்க நம்பாமல் போனால், என்ன நம்புங்க நம்புங்கனு என்னால கெஞ்ச முடியாது.

அது அப்படிக் கெஞ்சி நம்பிக்கையைச் சம்பாரிக்கிறது நரகத்துக்குச் சமம். எனக்கு என்ன நடந்ததுனும் தெரியவேணாம். என்னை நிரூபிக்கவும் வேணாம்…” என ஒரு முடிவோடு சொன்னாள்.

“நேத்துவரை உன்மேல எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை. பார்த்திபன் விருப்பப்படி கட்டிட்டு வந்த பொன்னுன்னுதான் இருந்தேன். நல்லா இருந்தால் சரி…அதுக்குமேல யோசிக்க ஒன்னும்மில்லை எனக்கு.

ஆனால் நேத்து நீ அழுததும் ஏன் பயப்படணும் ? ஏன் ஓடணும் ? அப்படிங்கிற கேள்வி எனக்குள்ள வந்துச்சு.

அரைகுறையா விழுந்த உங்களோட பேச்சிலிருந்து நீ பார்த்திபனை கல்யாணம் பண்ணலன்னும் புரிஞ்சது. இப்ப நீயும் பார்த்திபனும் விரும்புறீங்கனும் புருஞ்சுது.

நீ உண்மைலயே நல்ல பொண்ணா இருந்தால் என் மகன் தப்பு பண்ணலன்னு சொல்லிட்டு இங்கிருந்து போவ இல்ல ஒருவேளை நீ என் மகனுக்கு ஏத்த பொண்ணு இல்லனா, பார்த்திபனை ஏமாத்தி ஏதாவது செய்வனு நினச்சேன்.

ஆனால் நீ உண்மைலயே ரொம்ப நல்ல பொண்ணு தான்” என ஆத்மார்த்தமாகக் கூற,

ஒரு விரக்தியான சிரிப்பை பனிமலர் உதிர்த்தாள்!

“இப்போ ஏன் போகணும்னு நினைக்கிற ?” எனக் கேட்க,

“எதையும் சொல்ற நிலமைல நான் இல்ல. சொல்லி அதைச் சரியா நீங்க புருஞ்சுக்கலைனா அது இன்னமும் என்னைக் கொண்ணுடும். அதுனால தான் நான் அவர்கிட்ட கூட எதையும் சொல்லல.

அவருக்குப் பொய்யான நம்பிக்கையும் இதுவரை நான் கொடுக்கல. என் மனசறிஞ்சு நான் இதுவரை எந்த தப்பும் செஞ்சதில்லை. அப்படியொரு தப்பு செய்றேனா, அவர்கிட்ட சொல்லாமல் நான் இங்கிருந்து போக போறது தான்…” எனக் குரலில் எந்தவொரு உணர்வையும் பிரதிபலிக்காமல் கூறினாள்.

“நீ போக நான் அனுமதிக்காட்டி ? நீ இங்கிருந்து போய்ட்டால் எல்லாம் சரி ஆகிடும்னு நினைக்கிறியா ?” என வினவ,

“ஆமா, அவரோட வாழ்க்கைல எதுவும் சரி ஆகாது. ஆனால் நான் சரி பண்ணிடுவேன். எப்படினு எனக்குச் சொல்ல தெரியல. இப்போதைக்கு அதைப் பண்றதுக்கு என்கிட்ட அவகாசமும் இல்லை.

நாளைக்கு நான் அங்க இருந்தே ஆகணும். மொதல்ல, நான் அங்க தீர்க்கவேண்டிய கனக்கொண்ணு இருக்கு. அதை முடிச்சிட்டு, இவரோட வாழ்க்கையைக் கெடுத்ததுக்கான மொத்த பொறுப்பையும் நானே எடுத்துகிறேன். நீங்க என்ன பண்ண சொன்னாலும் பண்றேன்.

இதுக்குமேல எதையும் என்கிட்டே கேட்காதீங்க ப்ளீஸ்” எனக் கையெடுத்தே கும்பிட்டுவிட்டாள்.

“சரி! இதுக்கு அப்பறம் நான் உன்னைத் தடுக்கப்போறதில்லை. என் மகன் வாழ்க்கைக்கு நீ தான் பொறுப்பு…நீ அவனோட வாழ்க்கைல ஏற்படுத்தின சிக்கலை நீ தான் சரி பண்ணனும்.

இப்போ அவன்கிட்ட நீ சொல்லிட்டே போகலாம். இல்லையா ?” எனக் கேட்க,

“நான் சொன்னால், அவரு என்ன விடுவாருனு நினைக்கிறீங்களா ? நான் பொய் சொல்றேன்னு தெருஞ்சும், நான் அத்தனை வேலையும் அவருக்கு எதிரா செஞ்சேன்னு தெருஞ்சும் அவர் என்னை விடல.

இப்ப விடுவாரா ? நிச்சயமா இல்ல. அதுனால நான் அவருக்குத் தெரியாமல் தான் போகணும்” எனக் கூறியவள், கண்களால் அவரிடம் விடைபெற முயல,

“நீ அவனோட பொண்டாட்டின்னு வந்த போது எனக்கு உன்ன பிடிக்கல. ஆனால் இப்ப உன்ன பிடிச்சிருக்கு…நீ கிளம்பு. உனக்காகப் பார்த்திபன் மட்டுமில்லை. நானும் இருக்கேன்!

ஏன்னா, இத்தனை வருசமா என்னோட மகனோட துரதிர்ஷ்டம்னு நினச்சு அவன்கிட்ட வேறுபாடு காட்டினத்தை நான் மாத்திக்க, நீயும் ஒரு காரணம்.

நான் செஞ்சிட்டு இருக்குறது தப்புனு நான் உணர அந்த ஆண்டவன் தான் உன்ன அனுப்பிருக்கான். அப்படிதான் நம்புறேன். போயிட்டு வா” எனச் சொல்ல, அங்கிருந்து செல்லவே மனமில்லாமல் செல்ல துணிந்தாள்.

மணி அதிகாலை நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது…

மெல்ல அடிமேல் அடிவைத்து குடிலுக்குள்ளிருந்து வெளிவந்தாள். மொட்டை மாடியில் நிர்மலமான முகத்துடன் படுத்துறங்கும் பார்த்திபனை எட்ட நின்று ஒரு முறை பார்த்து கண்களால் நிரப்பிக்கொண்டாள்.

ஓசை எழுப்பாமல், குடிலிருந்தும் பார்த்திபனைவிட்டும் புறப்பட்டாள். அவர்களின் ஊரில் முதல் பேருந்து காலை நான்கு முப்பத்திற்கு. அதைப் பிடிக்கும் நோக்கோடு, எவரிடமும் செல்லாமல் வெளியேற, அவள் வெளியேறிய மறுநொடி பார்த்திபன் விழித்துக்கொண்டான்.

யாருமற்றவளாய் அவள் வீதியில் செல்வதை இருளில் நின்று வேதனையுடன் பார்த்திருந்தான் பனிமலரின் பார்த்திபன்!

Advertisement