Advertisement

பகுதி – 32

சூரியவர்மனின் செயலில் பதறி அவன் அருகே விரைந்து சென்று, “என்ன ஆச்சு ? ஏன் இப்படிப் பண்றீங்க?” எனக் கேட்க, சட்டென்று முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டவன், மலரிடம் உண்மையைக் கூறாமல் மறைக்க முற்பட்டான்.

ஆனால் மலர் அதை அப்படியே விட்டு போக முனையவில்லை. சூரியவர்மனிடமிருந்து விஷயத்தை வாங்கினாள்.

அவன் சற்று முன் தொலைபேசியில் உரையாடியது, அவர்களுடைய வழக்கிற்காக வாதாடும் வக்கீலின் ஜூனியர். தான் வீடு வாங்கவேண்டுமென்ற எண்ணத்தில் நீதிமன்றத்திற்கும் வழக்கிற்கும் எந்தவொரு செலவும் செய்யாமல், செய்ததாக இதுவரை குடும்பத்தில் கணக்குக் காண்பித்துச் சேமித்து வைத்திருந்தான்.

இத்தனை நாளாக, அந்த வழக்கை பார்த்து வந்தவர் இவர்களின் ஜமின் குடும்பத்திற்கும் பார்த்திபனுடைய தந்தைக்கும் தெரிந்த நண்பர். ஆகையால் சூரியவர்மன் எந்தவொரு செலவையும் ஏற்காத போதிலும், அவர்களின் குடும்பத்தின் மீது கொண்ட அபிப்ராயத்தினால் பார்த்து வந்தார்.

ஆனால் அவர் சமீபத்தில் தவறிவிட, அவருடைய வழக்கறிஞரான மகன் தந்தையின் அனைத்து வழக்குகளையும் எடுத்து பார்க்க தொடக்க, வருடக்கணக்கில் மனுதாரரான பார்த்திபன் குடும்பம் எந்தவொரு செலவையும் ஏற்கவில்லை என்பதைக் கண்டுகொண்டவன், கோபம் கொண்டான்.

இப்பொது வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாகக் கூறிவிடவே, அதன் பின் தான் சூரியவர்மனுக்குத் தன்னுடைய தவறின் உயரம் புரிந்தது. இதை எப்படி வீட்டில் உள்ளவர்களிடம் சொல்வதென்றே பதட்டத்தில் திகைத்து நிற்க, அப்போது தான் மலர் அதை அறிந்திருந்தாள்.

“சரி…இப்போ என்ன சொல்லுறாங்க ? ” எனச் சூரியவர்மனிடம் கேட்க,

“அந்த வக்கீலோட ஜூனியர் பேசுனாருமா… வருஷக்கணக்கா ஏமாத்திட்டதா சொல்லுறாங்க. நான் கண்டிப்பா தந்திடுவேன் சொன்னேன். ஆனால் நம்பிக்கை இல்லனு சொல்லிட்டாங்க… அவரோட அப்பாவை போல அவரையும் நான் ஏமாற்ற முயற்சி பண்ணவேணாம்னு சொல்லிட்டாரு போல” எனக் குற்ற உணர்ச்சியுடன் கூற,

“நீங்க போன் பண்ணுங்க…அந்த வக்கீல்கிட்ட நான் பேசுறேன்” எனச் சொல்ல, ‘இவள் என்ன செய்வாள்?’ என்ற சிந்தனையோடு கைபேசியை அவளிடம் நீட்ட,

மலர் மிகத் தெளிவாகப் பேச்சை தொடங்கினாள்.

“சார்…நான் மலர்” எனத் தொடங்கி, அவளுடைய ஊர் மற்றும் தந்தையின் பெயர் தொழிலின் விவரங்களைக் கூறி, இந்த வழக்கை கவனிக்கும் வழக்கறிங்கரிடம் பேசவேண்டும் எனக் கூறவே, சீனியர் வக்கீலிடம் கைபேசி கொடுக்கப்பட்டது.

“சார்… இது தான் என்னோட பின்புலம். உங்களுக்கு நான் கரெண்டீ. மிஸ்டர் சூரியவர்மன் இவ்ளோனால கொடுக்காமல் இருந்தது தவறு தான்.

ஆனால் உங்களை ஏமாற்றணும்னு நினைச்சிருக்க மாட்டாங்க. சொத்து கைக்கு வந்ததும் கொடுத்திருப்பாங்க. இப்ப அவுங்க கைல இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் இனிமேல் நீங்க அவுங்களை எதிர்பார்க்க வேண்டாம். நாளைக்கு நீங்க கேஸ்-அ நல்லபடியா முடிச்சி கொடுத்திடுங்க. உங்களுக்கான பீஸ் என்னனு மொத்தத்தையும் நாளைக்கு மறுநாள் நீங்க என்னோட வீட்ல வந்து வாங்கிக்கோங்க.

இதை எனக்காகப் பண்ணுங்க சார்” என முடிக்க, அவளுடைய பேச்சில் சூரியவர்மன் ஆடி போனான்.

“ஏன்மா ? அவ்ளோ பெரிய சொத்துக்கு வாரிசாமா ? அத்தனையும் விட்டுட்டா நீ இங்க வந்து இருக்க ?

பணத்தை விடப் பாசம் பெருசுனு பார்த்திபனை நம்பி வந்திருக்க. ஆனால் நான் அப்படி நினைக்காம போய்ட்டேனே மா? இனிமேல் உனக்கும் ஒரு கஷ்டமும் வராது. நானும் சுயநலமா எதுவும் யோசிக்கமாட்டேன்.

நீ பணம் தரவேண்டாம் மலர். நான் இடம் வாங்க பேங்க்ல சேர்த்து வச்சிருக்கேன். நான் செஞ்சதுக்கு நானே பிராயச்சித்தம் செஞ்சிடறேன்.

அந்த வக்கீலையும் என்னோட குடும்பத்தையும் ஏமாத்தணும்னு நினைச்சது நான் தானே ? நான் தான் அதுக்கான தண்டனையை ஏத்துக்கணும்.

நாளைக்குக் கேஸ் ஜெயிச்சாலும் தோத்துடுச்சுனாலும் இதுவரை உள்ள பீஸ்-அ நானே கொடுத்திடறேன் மா” எனத் தன் தவறை உணர்ந்தவனாகச் சூரியவர்மன் கூற, மலர் “இனி எந்தப் பணத்தேவை இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க…” என உத்திரவாதம் கொடுக்க, எதிரிலிருந்த சூரியவர்மனுக்கு மலரின் உள் அர்த்தம் பொதிந்த வார்த்தைக்கான விளக்கம் தெரியவில்லை.

“சரி மா…” என அங்கிருந்து கிளம்ப முயல,

“பெரிய மாமா, இங்க நடந்தது நான் சொன்னது எதுவும் வீட்ல யாருக்கும் தெரியவேண்டும்” என அவசரமாகச் செல்கின்றவனைத் தடுக்க,

“ஏன்மா ?” எனச் சூரியவர்மன் கேள்வியாக ஏறிட,

“ப்ளீஸ்” என முடித்துக்கொண்டு குடிலுக்குள் சென்றாள்.

சூரியவர்மனுக்கு ஏதும் புரியாவிட்டாலும், அவனுடைய சிந்தனை மொத்தமும் வழக்கிலே குவிந்து கிடந்ததால், பெரிதாக அதை அலட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து செல்ல, மாடிப்படிகளில் பார்த்திபனை எதிர்கொண்டான் சூரியவர்மன்.

தம்பியை பார்த்ததும் குற்ற உணர்வில், தலை குனிந்தபடி இலேசான பதற்றத்துடன், ”எப்ப வந்த பார்த்தி ?” எனக் கேட்க,

“இப்போதான் அண்ணா? ஏன் ? மேல மலர் இருக்காளானு பார்க்க வந்தேன் ” எனச் சாதாரணக் குரலில் கூற, சற்றே இலகுவானான் சூரியவர்மன்.

“சரிடா…மலர் மேல தான் போச்சு. போ” எனச் சொல்லி சென்றான்.

ஆனால், சூரியவர்மன் நிம்மதிகொண்டதன் காரணம் நிஜமல்ல. அண்ணன் குற்ற உணர்வுடன் இருக்கவேண்டாமென்ற பார்த்திபனின் முடிவது.

ஆம்! பார்த்திபன், படிகளில் ஏறும் பொழுதே, அவளிடம் பேசவேண்டும் என்பதற்க பின்னே வந்தான். சூரியவர்மனின் செய்கையைப் பார்த்து மலர் அவனிடம் சென்று வினவவும் சூரியவர்மன் சொல்லத்தொடங்கவும், பார்த்திபன் படிகளில் ஏறவும் சரியாக இருந்தது.

சூரியவர்மனின் பதிலில் பார்த்திபன் அதிர்ந்தான் என்றால், அடுத்து மலர் செய்த காரியத்தில் பார்த்திபனின் இருதயம் ஆட்டம் கண்டது.

ஆம்! மலர் செய்த செயல் பார்த்திபனின் கண்களுக்குத் தெரியவில்லை. அதன் பின் மலர் எடுத்திருக்கும் பெரும் முடிவு தான் அவனது புத்தியை கலங்க செய்தது…இருதயத்தை நடுங்க செய்தது.

நேற்றிலிருந்தே அவளுடைய நடவடிக்கைகளில் இருந்த மாற்றமும் இன்று அவளுடைய செயலும் பார்த்திபனுக்கு அவளுடைய போக்கை உணர்த்தவே உள்ளுக்குள் உடைந்து போனான்.

இத்தனை நாட்கள் தன்னை யாரென்று அடையாள படுத்திக்கொள்ளாதவள் இன்று அவளுடைய பின்புலத்தை அடையாளமாகக் குறிப்பிடுகிறாள் என்றால், அவள் அதையே தன்னுடைய நிரந்தர அடையாளமாக மாற்றப்போகிறாளென்று புரிந்துகொண்டான். அவனுடைய எண்ணத்திற்கு மேலும் வலு சேர்ப்பதை போன்று, மலர் வழக்கறிஞரிடம் பேசும் போதினில், சூரியவர்மனை உறவென்று குறிப்பிடவில்லை. மாறாகப் பெயர் சொல்லியே குறிப்பிட்டாள். அதோடு தன்னை இரத்தினவேலின் மகள் என்று மட்டுமே குறிப்பிட்டாள்.

அதுமட்டுமில்லாமல், நாளை மறுதினம் மலர் அவளுடைய வீட்டிலிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தாள். இதைப் பதற்றத்தில் சூரியவர்மன் வேண்டுமென்றால் தவறவிட்டிருக்கலாம். ஆனால் பார்த்திபன் எவ்வாறு தவறவிடுவான் ?

அப்படியென்றால், இதன் பொருளென்ன ? அவள் நாளை இங்கு இருக்கமாட்டாள் என்பது தானே ?

இவை அனைத்தையும் யூகங்களாக இல்லாமல் உறுதியாகவே புரிந்துகொண்டான் பார்த்திபன். 

அதேவேளையில், நாளை வழக்கின் இறுதி தீர்ப்பென்றும் அவன் அறிவான். தனது அண்ணன் செய்த வேளையிலும் சற்றே தலை இறுக்கமாகவே உணர்ந்தான்.

தனது குடும்பமும் தனது தந்தையும் யாரையும் எதற்காகவும் ஏமாற்றியதில்லை. ஆனால் சூரியவர்மனின் செயல் பார்த்திபனை அசைத்துப் பார்த்தது. ஒரே நேரத்தில் இரண்டு விதமான அடியை நெஞ்சில் வாங்கியதை போன்றதொரு உணர்வு பார்த்திபனுக்கு. 

பார்த்திபனிடம் பணம் சொத்து என்று ஏதும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மரியாதை கௌரவம் நிரம்ப இருந்தது…பிறரை ஏய்த்தோ தாழ்த்தியோ வாழ்வதைக் கொடும்பாவம் என்ற எண்ணம் கொண்டவன். நாளைய பொழுது அவனுக்கு இருவேறு சோதனைகளைக் கொண்டுள்ளதென்று மட்டும் நன்கு புரிந்துகொண்டான். 

அந்த நிமிடம், பார்த்திபனுக்கு மலரிடம் கேட்க வினாக்கள் கொட்டிக்கிடந்தன. ஆனால் அவனுடைய காதலை சொல்லத்தான் வார்த்தைகள் பற்றாக்குறையாகி போனது.

“மலர்…” எனக் குடிலுக்குள் நுழைந்தவன் அவளை ஆழம் பார்த்தபடி வினவ, பார்த்திபனின் கண்களை நேருக்கு நேராகப் பார்க்கமுடியாமல் வேறு புறமாகத் திரும்பி நின்றபடி,

“என்ன சொல்லுங்க ?” என இலேசாகக் குரல் இடற கேட்டாள்.

“நான் உன்கிட்ட பேசணும்…” எனச் சொல்லிவிட்டு அவளுடைய பதிலிற்காக அவளை ஏறிட, அவசரமாகத் தடுத்தவள், “இல்ல…எனக்குக் கொஞ்சம் வேலை…” எனத் தொடங்க,

“மலர்…மொதெல்ல என்ன தொறத்திரத விட்டு என் கண்ணைப் பார்த்து பேசு. கொஞ்சமாச்சும் என் மேல உனக்கு நம்பிக்கையோ காத…” எனத் தொடங்கியவன், அதாவது காதலோ எனச் சொல்லவந்தவன், அந்த வார்த்தையை அப்படியே நிறுத்திவிட்டு,

“நம்பிக்கையோ மரியாதையோ இருந்தால் என் கண்ணைப் பாரு…பார்த்து நான் சொல்றதை கொஞ்சம் நிதானமா கேளு” என ஸ்திரமாகச் சொல்லிவிட, அவனுடைய அந்தக் குரலில் அவளால் மறுத்து பேச முடியவில்லை. அதிலும் அவன் காதல் என சொல்லவந்து அதை மரியாதை என்று மாற்றம் செய்ததிலிருந்தே, பார்த்திபன் காதலை பற்றி எதையும் பேசவரவில்லை என உணர்ந்துகொண்டாள்.

தன்னுடைய காதலுக்கும், பார்த்திபன் குறித்த தன்னுடைய கனவுக்கும் எந்தவொரு எதிர்காலமும் இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தாள் மலர். அதிலும் பார்த்திபனுக்குத் தான் தகுதியானவள் இல்லையென்ற எண்ணமும் அவளுள் அவ்வப்போது எட்டிப்பார்த்தது…

பிரியனின் வருகை அதற்கு மேலும் வலுசேர்க்கவே, தான் வந்தது போலவே பார்த்திபனின் வாழ்விலிருந்து விலகிவிடவேண்டுமென்ற முடிவுக்கு வந்திருந்தாள். அதனால் பார்த்திபனுக்கு எந்தவொரு நம்பிக்கையும் அவள் கொடுக்க விரும்பவில்லை. இத்தனை நாளில் தனது காதலை சொல்லாததை எண்ணி சற்றே நிம்மதியும் அடைந்தாள்.

ஆனால் அவள் அறியவில்லை; அவள் வாய் மொழிகள் சொல்லாததை விழிகள் சொல்லிவிட்டதை!

இப்பொது அவளுடைய காதலை அவள் உறுதி செய்தாகவேண்டுமென்ற எண்ணமும் பார்த்திபனிடம் இல்லை. ஏனென்றால் அவன் அறிந்திருந்தான்.

இப்பொது அவன் தெரிந்துகொள்ள நினைப்பது மலரின் மாற்றத்திற்கான காரணம். ஏதோ அவளிடம் சரியில்லை என்பதை உணர்ந்தவன், அதை அவள் தன்னிடம் சொல்லப்போவதில்லையென்றும் உணர்ந்துகொண்டான். அது தானே காதல் ? விளக்கங்கள் ஏதுமின்றி விளக்கவேண்டிய அவசியமின்றிக் கொள்ளும் புரிதல் தானே காதல்.

பார்த்திபன் நிதானமாக மலரின் மனதை கையாள நினைத்தான். முதலில் நேற்றிலிருந்து நிகழ்ந்த அனைத்தையும் கவனித்தான்…பிறகு சிந்தித்தான்… இப்பொது அவளிடம் பேச வந்துள்ளான்.

பனிமலர் இப்பொது பார்த்திபனின் கண்களை மட்டும் பார்த்திருந்தாள். பார்த்திபனும் அவளுடைய கண்களையே பார்த்திருந்தான்.

பார்த்திபனின் கண்களில், ‘காதலித்தும் காதல் சொல்ல தடையென்ன ? சொல்லிவிடு! ஒருமுறையாவது என்னிடம் சொல்லிவிடு’ என்ற ஏக்கம்.

அதேவேளையில், பனிமலரின் கண்களில், ‘காதல் சொல்ல தவறினதும் சரியான முடிவாகப் போனது. இப்பொதுமட்டுமல்ல, எப்போதுமே என்னிடம் காதல் சொல்லிவிடாதே ? அதை மறுப்பதற்கு த்ராணியில்லை. ஏற்பதற்குத் தகுதியில்லை என்னிடம்’ எனக் கெஞ்சிக்கொண்டிருந்தது.

அவன் கண்கள் ‘சொல்லிவிடு’ என்ற பிடிவாதத்தில் இருக்க,

இவள் விழிகளோ, ‘விட்டுவிடு’ என்ற முடிவில் இருந்தது….

சில நிமிடங்கள் நீடித்த இந்த மௌன விழி போராட்டத்தைப் பார்த்திபனின் வார்த்தைகள் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தன.

“மலர்…நான் உன்கிட்ட எதுவும் கேட்க போறதில்லை. கேட்டாலும் நீ பதில் சொல்லப்போறதில்லை. சொன்னாலும் அது உண்மையா இருக்கப்போறதில்ல.

இதை நான் உன்மேல நம்பிக்கை இல்லாமல் சொல்லல. உன்னை முழுசா புரிஞ்சிக்கிட்டதுனால சொல்றேன்” எனக் கூற மீண்டும் பார்வையைத் தழைத்துக்கொண்டாள்.

“நீ இப்போ பார்வையைத் திருப்புறது என்னைப் பிடிக்காமலோ கோபத்திலோ இல்ல வேற காரணத்தாலோ இல்லை. பயம்…உன்னோட கண்ணுல பயம் இருக்கு…

அதை என்னனு நான் கேட்டு நீ சொல்லமாட்ட.

ஆனால் ஒன்னு சொல்லுறேன். ஒருமுறை பயந்து ஓட ஆரம்பிச்சால் ஓடிட்டேதான் இருக்கணும். ஓடாத…எதிர்த்து நிமிர்ந்து நில்லு.

எது உன்னைப் பயமுறுத்துதோ இல்ல யாரு உனக்குப் பயத்தைக் கொடுக்குறாங்களோ அவுங்களுக்கு அதே பயத்தை ஒருதடவை காமிச்சிடு. அதுக்கப்பறம் நீ ஓடவேண்டியது இருக்காது” எனப் பார்த்திபன் பொதுவாகக் கூற, பனிமலரின் கண்கள் சட்டென்று ப்ரகாஷமாகின.

அவளுடைய அந்தப் பார்வையிலிருந்து, பார்த்திபன் ஒன்றை நன்கு உணர்ந்துகொண்டான்.

அவன் மனமோ, ‘மலர் எதுக்காகப் பயப்படணும் ? ஏன் இங்கிருந்து போகணும்னு நினைக்கிறாள் ? எங்க இருந்து ஓடி வந்தாளோ அங்கையே மறுபடியும் போகணும்னு ஏன் நினைக்கிறாள் ?’ எனக் கேள்வியுடன், பனிமலரை ஆராய,

மலரோ, “எல்லாத்துலயும் எப்படி எதுத்து நிற்கமுடியும்…? உயிரை காப்பாத்திக்க வேணுமானால் எதிர்த்து நிற்கலாம். தோத்துப்போனாலும் உயிர்தான் போகும்… மானம் போகாதே.

இது சாத்தியமில்லை” எனத் தன்னை மீறி உச்சரித்திருந்தவள், சட்டென்று அமைதியானாள்.

“நீ என்ன சொன்ன ?” எனப் பார்த்திபன் அவளையே கூர்மையாகப் பார்த்தபடி வினவ, ஒருமுடிவோடு நிமிர்ந்தாள்.

”எனக்காக ஒன்னு பண்ணுறீங்களா ?” எனக் கேட்க,

“எதுனாலும்! என்ன சொல்லு ?” எனப் பார்த்திபன் வினவினான்.

“நீங்க என்கிட்டே இன்னைக்கு மட்டும் இதுக்குமேல எந்த ஒரு கேள்வியும் கேட்கக்கூடாது. ஏன் இப்படிப் பண்ற ? என்ன பண்ண போற ? எங்க போற ? இப்படி எந்தக் கேள்வியும். அவ்வளவு ஏன் நீ சாப்டியாங்கிற கேள்வி கூடக் கேட்க கூடாது.

Advertisement