Advertisement

“என்னடா? மிரட்டுறியா ? இத நெட்ல விட்டுடுவியா? பண்ணிக்கோ…உன்னால என்ன முடியுமோ செஞ்சுக்கோ போ” என விரக்தியில் மலர் கத்த,

பெருங்குரலெடுத்துச் சிரித்தான் பிரியன்.

“என்ன நீ இன்னும் பழைய பிரியனா பாக்குறியே? நீ மட்டும் புதுசா மாறலாம் நான் மாறக்கூடாதா ?

என்ன புரியலையா ?” என இடைவெளிவிட்டவன், அடுத்து இடைவிடாமல் பேச தொடங்கினான்.

“இப்போ நெட்ல ஏத்த வேணாம். நேரா பஞ்சாயத்தைக் கூட்டுவேன். நீ என்ன ஏமாத்திட்டு ஓடிவந்துட்டன்னு சொல்லுவேன். உங்க இரெண்டு பேருக்கும் கல்யாணமே ஆகலானு சொல்லுவேன்…

நீ என்கூடக் கல்யாணத்துக்கு முன்னவே கண்டபடி இருந்தவள்னு சொல்லுவேன்.

நம்பிக்கைவரலியா ? இந்தா விடியோனு காட்டுவேன். நம்ம ஒண்ணா குளிக்கும் போது எடுத்த வீடியோ இதுனு சொல்லுவேன்.

அதோட பார்த்திபன் கூடவும் கல்யாணம் பண்ணாமல் ஒரு அசிங்கமான வாழ்க்கையை வாழுறானு சொல்லுவேன்.

இப்படிப் பட்டவளையா மருமகள்னு வீட்டுக்குள்ள வச்சிருக்கீங்கனு கேட்பேன்…

அதே பஞ்சாயத்துல உன்ன கல்லால அடிச்சு விரட்ட விரட்ட சந்தோசமா பார்த்து இரசிச்சுட்டு அப்பவும் நான் தான் உன்னைக் காப்பாத்தவருவேன்.

ஏன்னு சொல்லு ?” என ஒரு வக்கிரமான சிரிப்புடன் வினவினான்.

அவனுக்குப் பதில் சொல்ல விருப்பமில்லாதவளாக, அவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள,

“ஏன் உனக்குத் தெரியலைல? ஏனா நீ நல்லவ மலரு!!

இன்னும் யாரையும் நீ கல்யாணம் பண்ணல. இன்னும் சொல்ல போனால், உனக்கும் பார்த்திபனுக்கு இடைல போற காதலை கூட இன்னும் நீ சொல்லலைனு புரிஞ்சுக்கிட்டேன்.

இனியும் நீ சொல்ல கூடாது. புரியுதா ?” என மிரட்டல் த்வனியில் வினவ,

சற்றே உயர்ந்த அவனுடைய குரலில் திடுக்கிட்டு விழித்தாள், மலர்!

“வந்திடு மலர்! மாமான்கிட்ட வந்திரு…உன்னை வாடாமல் என்னால மட்டும் தான் பார்த்துக்க முடியும். அதையும் மீறி இங்கிருந்து வேறு எங்கையாவது ஓடவோ ஒளிஞ்சுக்கவோ இல்லை செத்து போகவோ முயற்சி பண்ணாத.

ஏன்னா, நீ செத்தே போனாலும் கூட உன்னோட யோகிதை என்னனு நீ காதலிக்கிற அந்த லாரி டிரைவர்கிட்ட சொல்லிடுவேன். செத்த பிறகும் கூட உன்னோட மானத்தை வாங்காம விடமாட்டேன்.

நமக்கு ரொம்பப் பிடிச்சவங்ககிட்ட அசிங்கப்படறதை யாருமே விரும்பமாட்டாங்க. நீயும் முயற்சி பண்ணாத.

இல்லை பரவா இல்ல, நீ பண்ணிக்கோ அப்படினு நீ நினைச்சால், உன்ன கொலை பண்ணினதே இந்தப் பார்த்திபனும் அவன் குடும்பமும் தான்னு நான் அவனை உள்ள தள்ளிடுவேன்.

உன்னைக் காணோம்னு ஊரும் உறவும் தேடுது. அப்போ இந்தப் பழியை அவன்மேல் போட்டால் அவனையே பலியாக்கிடுவாங்க. முன்னையாச்சும் உனக்குச் சாக ஒரு வாய்ப்பு இருந்தது….

இனிமேலே உனக்குச் சாகுறதுக்குக் கூட வழியில்லை. என்கூட வாழறதை தவிர! புரியுதா ? புறப்படு!” என அதிகாரமாக மிரட்ட, அவனுடைய பேச்சை கேட்டு அழுது அழுது ஓய்ந்தவள் ஒரு முடிவெடுத்தவளாக நிமிர்ந்து நின்றாள்.

“இப்போ உன்கூட வரமுடியாது! இரண்டு நாள் டைம் குடு நான் வந்திடுறேன்.” என உறுதியாகச் சொல்ல,

“உன்னை எப்படி நம்புறது?”

“என்னோட அப்பா அம்மா மேல சத்தியம்”

“எதுக்கு இரண்டு நாள் டைம்? வரணும்னு முடிவு செஞ்சுட்டால் இப்பவே வரதுக்கென்ன ?”

“இங்க நான் ஒரு குடும்பத்துல இருக்கேன்… இங்க நான் தொடங்குனதை நான் முடிக்கணும்… இன்னைக்கும் நாளைக்கும் என்னை விட்டுடு. நாளை மறுநாள் நான் அங்க இருப்பேன்…” எனத் தீர்க்கமாகப் பதிலளித்தாள்.

“உன்னை நம்பத் தோணலையே எனக்கு?” எனச் சந்தேகத்துடன் பிரியன் கேட்க,

“நீ நம்பலாம்…ஏன்னா, இனி நான் ஓடி போக இடமில்லை. செத்து போகவும் வழியில்லை….இதுல எதுநடந்தாலும் என்னோட பார்த்திபனுக்குத் தான் கஷ்டம்.”

“என்ன உன்னோட பார்த்திபனா?” என ஆவேசமாகப் பிரியன் கேட்க,

“நீ கோப படறதுனால நான் பொய் சொல்ல முடியாது. இப்ப நான் வரேன்னு சொல்றதுக்கு அவர் தான் காரணம். அவர்முன்னாடி நான் தலைகுனிய விரும்பல. எனக்காக அவர் தலைகுனியரதையும் நான் விரும்பல…

நான் ஒரு சரியான காரணத்தோடு இங்க இருந்து புறப்பட்டுறேன். எனக்குக் கொஞ்சம் டைம் கொடு” என நிமிர்வுடனே வினவினாள்.

பிரியனின் புருவங்கள் யோசனையுடன் முடிச்சிட்டன!

“நான் உன்னைக் காதலிக்கல பிரியன். ஆனால் , நீ தான் என்னைக் காதலிக்கிறேன்னு சொல்லுவியே ? அது உண்மைனா இந்த இரெண்டு நாள் எனக்குக் கொடு. நீ எப்படி வந்தியோ அப்படியே போய்டு…

நான் எப்படி வந்தேனோ அப்படியே வந்திடுறேன்” என இறுதியாகக் கேட்க,

“சரி நம்புறேன்! நான் நாளை மறுநாள் உனக்காகக் காத்திருப்பேன். ஒருவேளை மறுபடியும் என்னை ஏமாற்ற நினைச்சால், போன முறை போலத் தேடி அலைய மாட்டேன்…

உன்னோட பார்த்திபனையும் அவன் குடும்பத்தையும் நாறடிச்சிருவேன். அவுங்களோட சேர்த்து செத்து போன உன்னோட அப்பா அம்மாவையும் மறுபடியும் சாகடிப்பேன்” எனச் சபதம் போலவே உறுமினான், பிரியன்!

“நீ போ! நான் வருவேன்…” என ஆழ்ந்த குரலில் உச்சரித்திருந்தாள்!

அவளுடைய அந்தத் தீவிரத்தில் அங்கிருந்து அவன் நகர்த்திருந்தான். வேறு வழியும் அவனிடமில்லை! ஏனென்றால் அவனின் பக்கம் உண்மையில்லை…

எதையும் முகத்திற்கு நேராகச் செய்யும் தைரியமோ த்ராணியோ இல்லவே இல்லை. நல்லவன் முகமூடியில் தன்னை ஒளித்துக்கொள்ள நினைக்கும் சாமர்த்தியக்காரன், தந்திரங்கள் நிறைந்த நயவஞ்சகன். அவனால் பகிரங்கமாய் அவளைக் கட்டாயப்படுத்த இயலாது… அவளை அச்சுறுத்தியே தனது காரியங்களைச் சாதிக்கத்துடிக்கும் இரகம்!

பனிமலரின் பயம் தான் பிரியனின் வெற்றி!

அதோடு அவன் சொல்வதைப் போன்று, பஞ்சாயத்தை அழைத்துப் பகிரங்கப்படுத்தினால் மலரின் பெயர் கெட்டுவிடுவதற்கு எத்தனை வாய்ப்புகள் உண்டோ அதே போன்று அவனுடைய நிலைமையும் மோசமாகும் வாய்ப்புகளும் உண்டு!

அதனால், எப்போதும் போல் பின்னிருந்தே வேலை பார்க்க முடிவு செய்திருந்தான். அதனாலயே மலரின் சொல்லுக்குச் சம்மதித்திருந்தான்…’

ன்று காலை நிகழ்ந்த யாவும் ஏதோ தற்போது நிகழ்வதைப் போன்று பனிமலரின் கண்களில் நிழலாடியது. அவளுடைய அழுகைக்குக் காரணம் பிரியனிடம் செல்வதல்ல; பார்த்திபனை பிரிவது!

எல்லாருக்கும் ஏதோவொரு சூழலில் நிச்சயமாகத் தோன்றும் எண்ணத்தைப் போல, மலருக்கும் தோன்றியது. ‘ஏன் எனக்கு மட்டும் இப்படி?’. இந்தக் கேள்வியைத் தன்னுடைய வாழ்நாளில் கடாக்கத்தவர்கள் சொற்பமே! ஏதோவொரு வகையில் அனைவரும் கடந்தே வந்திருப்பர்.

மலரும் அதே நிலையில்…சிலர் கடந்து வெல்வர். சிலர் மடிந்து வீழ்வர்… மலர் வீழ்வாளோ வெல்வாளோ அவள் அறியாள். ஆனால் அங்கிருந்து செல்வதென்ற முடிவை எடுத்துவிட்டாள்.

தான் நேசிக்கும் பார்த்திபன் தன்னை இந்தக் கோலத்தில் பார்த்திட கூடாதென்ற பதைபதைப்பு. தன்னால் பார்த்திபனுக்கு மேலுமொரு இன்னலோ அவமானமா வந்திடக்கூடாதென்ற படபடப்பு…

இனி அவளுக்குப் பார்த்திபனோடு வாழவேண்டும் எனக் கண்ட கனவு வேறு கனவு மட்டுமே என்பது ஐயமற புரிந்தது. அந்தப் புரிதல் அவளுள் கடும் வலியையே தந்தது…

இரவு முழுவதும் உறக்கம் தொலைத்தாள். அங்கு உறக்கத்தைத் தொலைத்தது அவள் மட்டுமல்ல; பார்த்திபனும் தான்!

மலரின் நடவடிக்கைக்குக் காரணம் என்ன ? என்ற கேள்வியே பூதாகரமாக எழுந்து நின்றது! நேற்று பிரியன் வந்ததோ மிரட்டியதோ எதுவும் பார்த்திபனுக்குத் தெரியாது. பார்த்திபனுக்கு மட்டுமல்ல; யாருக்கும் தெரியாது!

பார்த்திபன் குடும்பத்தினர் அனைவரும் பூதத்தின் திருமணத்தில் இருந்ததால் இங்கு மலர் பார்த்திபனுடைய குடிலில் நிகழ்ந்தது வேறு யாருக்கும் தெரியாமல் போனது. விடியியலில் ஒரு முடிவோடு எழுந்தாள். அந்த விடியல் தனக்கானதோ இல்லையோ ஆனால் பார்த்திபனுக்கானதாக இருக்கவேண்டுமென்ற பிடிவாதத்தோடு எழுந்தாள்.

அவள் அன்று முதல் வேலையாகப் பார்க்க நினைத்தது, பார்த்திபனுக்கும் அவனுடைய அம்மா தாமினி தேவிக்கும் இருக்கும் உறவை சரி செய்வதே! தாமினியை தனியாகச் சந்திக்கும் வாய்பிற்காக அவள் காத்திருக்க, அவரோ அன்று ஊருக்கு வெளியே இருக்கும் குலதெய்வ கோவிலுக்குச் சென்றிருந்தார்.

”என்ன அண்ணி? அத்தை ஏன் இவ்ளோ சீக்கிரம் கோவிலுக்குப் போயிருக்காங்க ? எப்போ வருவாங்க ?” எனத் தாராவிடம் வினவ,

“நாளைக்குக் கேஸ் வருது மலர். ரொம்ப வருசமா இழுத்தடிக்கிற கேஸ்… நாளைக்கு எங்க பரம்பரை வீடு யாருக்குனு தீர்ப்பு. அதுனாலத்தான், அம்மா குல தெய்வ கோவிலுக்குப் போயிருக்காங்க.

அந்தக் கோவிலை எங்க முன்னோர்கள் தான் எடுத்தாங்கலாம். சின்னக் கோவில் தான்…ஒதுக்குப்புறமா இருக்கறதுனால அந்த அளவு ஆள் வரத்து இருக்கிறதில்லை” எனத் தாரா தன் போக்கில் கூற,

“எப்போ வருவாங்க அண்ணி?” எனக் கேள்வியாக ஏறிட்டாள் மலர்.

“பொழுது சாஞ்சிடும் மலரு…எதுக்கு இவ்ளோ விசாரிக்கிற?” என வினவ,

“ஒண்ணுமில்ல…” எனக் கூறி அங்கிருந்து நகர்ந்து இருக்க, மலர் உச்சரித்த ஒண்ணுமில்லை என்ற வார்த்தையில், அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்த பார்த்திபன் ஓராயிரம் வலிகளை உணர்ந்தான்.

பார்த்திபன் நின்றதை அவள் கவனிக்கவில்லை. தன்னுடைய குடிலுக்குச் செல்லலாம் என அவள் மாடி ஏற, அங்குச் சூரிய வர்மனின் பேச்சுக்குரல் அடிப்பட்டது.

“சார் ப்ளீஸ்… தப்புதான். இந்த முறை ஆஜர் ஆகுங்க… இனிமேல் இப்படி நடக்காது. நான் உத்திரவாதம் தரேன்” எனக் கெஞ்சும் குரலில் குரலை தனித்துப் பேசிக்கொண்டிருக்க, எதிர்முனையில் அழைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது.

சூரியவர்மனின் கெஞ்சல் காற்றோடு கரைய, அவன் தலையில் அடித்துக்கொண்டான்.

Advertisement