Advertisement

பகுதி – 31

ட்டென்று மிளிர்ந்த வெளிச்சத்தில் கண்களைத் தன்னிச்சை செயலாக மூடியவளை, தொட்டு எழுப்பினாள், தாரா!

“என்னாச்சு மலர் ? அழறியா ? விசும்பல் சத்தம் கேட்டு தான் முழிச்சேன். என்னனு சொல்லு?” என உலுக்க,

“ஒண்ணுமில்ல அண்ணி! ஒண்ணுமில்லை!!” என எழுந்து அமர்ந்து சமாளிக்க முயன்றவளை,

தாரா யோசனையுடன், “உனக்கும் பார்த்திக்கும் எதுவும் சண்டையா ?” எனக் கேட்க,

“அவர்கிட்ட நான் சண்டை போடுறதும் என்கூடவே நான் மல்லுகட்டுறதும் ஒண்ணுதான். அவர்கூடப் போய் எப்படி நான் ?” எனக் கேட்க,

“அப்போ என்ன? உங்க கல்யாணம் நினச்சு இல்ல உங்க அப்பா அம்மா நினைச்சியா ?” என ஒவ்வொன்றாகக் கேட்க,

“அப்பா அம்மா” எனக் கண்ணில் நீர் வழிந்தபடியே கூற,

“அயோ அழாதமா… இதுநாள்வரை நான் உனக்குன்னு யோசிச்சதே இல்லை. இனி அப்படி இருக்கமாட்டேன் மலர். நான் இருக்கேன்!

நாங்க எல்லாரும் இருக்கோம்… நீ அழாத பார்த்திய நான் கூட்டிட்டு வரேன்.” என எழ முயல, சட்டென்று மலர் தாராவின் கைகளைப் பற்றித் தடுத்தாள்!

“வேண்டாம் அண்ணி. அவரு தூங்கட்டும்…ஓய்வே இல்லாம ரொம்ப அலைச்சல். அவரை எழுப்பாதீங்க…அதான் நீங்க பக்கத்துல இருக்கீங்களே…போதும்.

நான் அழமாட்டேன் தூங்குறேன்” எனக் கூறி அழுகையையும் மீறி புன்னகைக்க, அந்த நொடி மலரின் கண்களில் விவரிக்கவே முடியாத வலியொன்று சுடர்விட்டது.

கண்ணீர் வழிய வழிய புன்னகைக்க முயன்ற மலரின் வலியை தாரா நன்கு உணர்ந்துகொண்டாள். அப்படி உணர்ந்துகொண்டதால், ‘இனி மலரை நம்ம நல்லா பார்த்துக்கணும். அம்மாகிட்ட பேசணும்’ என மனதினுள் குறித்துக்கொண்டாள். 

மலர் தூங்குகின்றாளா எனப் பக்கத்திலிருந்து உறுதி செய்த பின்பே, தாரா மீண்டும் கண்ணயர, மலர் மீண்டும் விழித்துக்கொண்டாள். விழித்துக்கொண்டாளா ? இமைகளைத் திறந்துகொண்டாளா ? உறங்கினால் தானே விழிப்பதற்கு!

தாராவின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமலே கண்களை இறுக மூடிக்கொண்டாள். இமைகளை மூடிகொண்டவளால், அவளுடைய துயரத்தையோ துன்பத்தையோ முடக்கவும் முடியவில்லை; முடிவுக்குக் கொண்டுவரவும் முடியவில்லை…

பிரியனின் குரூரத்தின் வடு வெகு நாட்கள் மலரின் மனதினில் ஆறாத இரணத்தைக் கொடுத்திருந்தது. அந்த இரணத்திற்கு இதம் சேர்த்தவன் தான் பார்த்திபன்! முதலில் பார்த்திபனின் மீது வன்மம் பழிவாங்கும் எண்ணம் ஆவேசம் இவை தான் இருந்தது. நாளாக நாளாகப் பார்த்திபன் குற்றமற்றவன் என்பதும், அதன் பின் அவனுடைய கண்ணியமும் பண்பும் அவளை அறியாமலே அவனுக்காக அவளை வீழ செய்தது…

தன்னுடைய வீட்டில் இருந்த போதும் பாதுகாப்பாக மலர் உணராமல் போனதற்குப் பிரியன் என்ற ஆண் காரணம். அதே போல எங்கோ எவரும் சொந்த பந்தம் இல்லாத இடத்திலும் பாதுகாப்போடும் மரியாதையோடும் மலரை உணரவைத்தவன் அதே ஆண்களின் இனத்தைச் சேர்ந்த பார்த்திபன்.

இங்கு ஆண்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல; ஆண் சமூகமும் ஆதிக்கம் நிறைந்தது அல்ல; அதே போல ஆண் என்ற இனத்தில் பிறந்த அனைவரும் ஆண்மகன் என்ற தகுதிக்கு உரியவன் அல்ல!

ஒருவனின் தனிப்பட்ட சுயஒழுக்கம், கண்ணியம், நேர்மை மட்டுமே ஓர் ஆணுடைய தகுதியை நிர்ணயிக்கின்றது!

பார்த்திபன் ஒரு தகுதியான ஆண்மகன்!!

அவன் பனிமலரின் மனதில் மரியாதையைப் பெற்றான், பிறகு மணாளனாகும் தகுதியையும் பெற்றான்!! பார்த்திபன் அருகில் இருந்த பொழுதினில் மலர் பாதுகாப்பாக மட்டும் உணராமல் தன்னுடைய பழைய கருப்பு பக்கங்களின் நினைவுகளையும் மறந்திருந்தாள்.

முழுவதுமாக அனைத்தையும் மறந்து அவனுடன் ஒரு பெருவாழ்வு நிறைவாழ்வு வாழ ஏக்கம் கொண்டாள். அவ்வப்போது, தன்னைக் கீழாக நினைத்தாலும், தன்னைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றாலும், அவளுடைய மனது பார்த்திபனை கண்டதும் சூரியனை கண்ட சூரியகாந்தி மலராய் அவன் புறமே சாய்வதை அவளால் தடுக்க முடியாமல் போனது.

அவனிடம் காதலையும், தனக்கு நேர்ந்த கொடுமையையும் சொல்லிவிட அவள் மனதில் உறுதி இருந்தது. ஆனால் எதை முதலில் சொல்வது எப்படிச் சொல்வதென்றே தயக்கமும் இருந்தது…

காதலை உணர்ந்த நொடியில் தானா காதலில் விழுந்ததென்ற பிரம்மிப்பு, அதன் பின் பயம், அதன் பின் தடுமாற்றம், அதன் பின் தயக்கம், அதன் பின் தாழ்மை உணர்வு, அதன் பின் அவனிடம் மறைக்கின்றோம் என்ற குற்ற உணர்வு….இவை அனைத்தையும் மீறி அவளின் நெஞ்சம் மட்டும் பார்த்திபன் என்ற அவளுடையவன் அவளின் யாதுமானவன் பின் சென்று கொண்டே இருந்தது!

அவளால் பிரியனுடைய செயலை ஒதுக்கமுடியவில்லை. ஆனால் அதிலிருந்து மெல்ல வெளிவந்திருந்தாள்! வாழ வேண்டுமென்ற ஆசையும் வந்திருந்தது!

சாகத் துணியவைத்தான் பிரியன்!! வாழ ஏங்கவைத்தான் பார்த்திபன்!!

அவளுடைய மனதினில் ஒரு மூலையில் அந்தக் கசப்பு இருந்த போதிலும், பார்த்திபனின் மீதுள்ள காதலும் வாழ்க்கையின் மீதுள்ள பிடிப்பும் வளர்ந்து கொண்டே இருந்தது. 

மெல்ல மெல்ல அவளுடைய நடுக்கம், தனிமை, வலி நிராயுத உணர்வு என அனைத்தும், அனைத்துமே பார்த்திபன் அருகினில் தவிடுபுடியாகிட, காதல் அவளை ஆக்கிரமிக்க ஆனந்தமாய் ஒவ்வொரு நொடிகளையும் வாழ்ந்துகொண்டிருந்தாள்.

அது நிறைவேறுமா ? எப்படி நிறைவேறும் ? என்ற எந்தக் கேள்விக்கும் விடையில்லை. பார்த்திபன் தன்னுடைய கதையைக் கேட்ட பின் எப்படி எடுத்துக்கொள்வான் என்ற கோணத்தில் அவள் சிந்திக்கவே அஞ்சி, அதை ஒதுக்கி, வாழுகின்ற அந்தக் கணத்தை மட்டும் கனமின்றி இரசித்து வாழ்ந்தாள்! அவனோடு இருக்கும் ஒவ்வொரு நொடியிலும் சிரித்தாள்! அவன் தன்னிடம் காதல் சொல்வானா என்றே எந்நேரமும் சிந்தித்தாள்!

அதிலும் பூதத்தின் வீட்டினுள் பார்த்திபனுடன் அவள் நின்ற கோலமும், பார்த்திபனின் கண்கள் பேசிய பாஷையும் அவளை வேறு உலகத்திற்கு இழுத்துச் சென்றது. மற்ற அனைத்தையும் மறந்து, ஒரு புது வாழ்வு வாழ பேராவல் கொண்டாள்!

அதே குதூகலத்துடன் பூதத்தின் திருமணத்தில் கலந்துகொண்டவளை கலங்கடிக்கவென வந்து சேர்ந்தான், பிரியன்.

ஆம்! பிரியன் தான்!!

‘பார்த்திபனை தேடி வந்தவன், திருமண வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான். பூதத்துடன் பார்த்திபன் கொள்ளைக்குச் செல்லும் பொழுது பார்த்திபனை தூரத்திலிருந்தே கவனித்தவன், பார்த்திபன் பின்னோடு செல்ல, அங்குப் பூதமும் பார்த்திபனும் பேசிய அனைத்தையும் பிரியன் மறைந்திருந்து கேட்டிருந்தான்…

ஆம்! பனிமலர் தற்போது பார்த்திபனின் மனைவி என்றும், ஆனால் அது உண்மையல்ல என்றும்…

பனிமலர் அவளுக்கு அவளே தாலியை கட்டிக்கொண்டதிலிருந்து, இந்நாள் வரையிலும் இருவரும் தங்களுக்குள் துளிர்த்திருக்கும் அன்பை வெளிப்படுத்தவில்லை என்றும், ஊர் முன்னிலையில் பார்த்திபனின் மனைவியாகப் பனிமலர் இருக்கிறாளென்றும் ஓரளவு அனுமானித்துக்கொண்டான்…

இன்னமும் எவ்வாறு அதைத் தெளிவு படுத்துவது என்று அவன் யோசனையுடன் நின்ற வேளையில், அவனுடைய கண்களில் பனிமலர் விழுந்தாள்.

பனிமலரை பிரியன் கண்ட நொடி, அவள் தன்னை ஏமாற்றிச் சென்றது நினைவினில் வர, கண்கள் சிவக்க அவளையே பார்த்தபடி நின்றான். யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போன்ற உணர்வில் தற்செயலாகப் பனிமலர் பார்க்க, வேட்டைக்கெனக் காத்திருக்கும் ஓநாயாகப் பிரியனின் கண்களில் அத்தனை ஆவேசமும் க்ரோதமும் இரையை வீழ்த்தவேண்டுமென்ற வெறியும் தென்படவே, மலர் திடுக்கிட்டாள்.

என்ன செய்வது ஏது செய்வதென்று அவளுக்கு ஏதும் புரியவில்லை… பயத்தின் உச்சத்தில் அங்கிருந்து தலை தெறிக்க ஓடினாள். எங்காவது சென்று தன்னை ஒலித்துக்கொள்ளவேண்டுமென்ற பதட்டத்தில் ஓடினாள். இத்தனை நாள் அவளுள் துளிர்த்திருந்த தைரியம், வாழும் ஆசை , பார்த்திபன் மீதிருந்த காதல் என அனைத்தையும் மறந்து பழைய வாழ்க்கை தன்னைத் துரத்துகிறதென்ற உண்மை அறிந்து ஓடினாள்.

இப்பொது கூடுதலான ஓர் அச்சமாக, பிரியன் தன்னைப் பற்றி இங்குச் சொல்லிவிடுவானோ ? என்ற பயமும் அவளுடைய இருதயத்தைக் கவ்விக்கொண்டது!

அவனிடமிருந்து தப்பிப்பதாக ஓடியவள் கடைசியாக அவனிடம் மாட்டிக்கொண்டாள். ஆம்! அவனைப் பார்த்த நடுக்கத்தில், பதற்றத்தில் தன்னுடைய குடிலுக்கு ஓடி வர, அவளைப் பின்தொடர்ந்து அவனும் அங்கு வந்து சேர்ந்திருந்தான்…

வீடு வந்து சேர்ந்தாச்சு என்ற நிம்மதியுடன் அவள் நிமிர, அங்கு அவளின் எமனான பிரியன் நின்றிருந்தான். அந்த நொடியில் மலர் கொண்ட அச்சத்திற்கும் பதட்டத்திற்கும் அளவே இல்லை. இரத்தம் உறையும் பயம் அவளிடம் தென்பட்டது…

“என்ன? உன்னோட வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டு வரத்தான் இப்படி ஓடி வந்தியா ? என்கிட்ட சொல்லிருந்தால் நானே வந்திருப்பேனே ?” என எள்ளலுடன் விசாரித்தான் பிரியன்.

“இதோ பாரு ….போய்டு! நான் இங்க தனியா இல்ல” என உள்ளே போன குரலை வெளிக்கொண்டுவர முயன்றபடி மலர் உச்சரிக்க,

“ஓஹ் தனியா இல்லனா? கூட யாரு இருக்குறது ?” எனக் கூர்மையாக வினவ,

“என்னோட புருஷன். எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு…நீ ஒழுங்கா போய்டு” எனத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேச,

பிரியனோ மிக அலட்சியமாக, “ஓ…அப்படியா ? சரி அவனை வர சொல்லு. அவன்கிட்ட நான் ஒன்னு காட்டணும்….

புதுசு இல்ல. பழசு தான்…உன்னோட உடம்பப் பலமுறை பார்த்து என்ன இரசிக்க வச்ச அதே வீடியோ…அது ரொம்பப் பழசாகிடுச்சு…புதுசா அவன்கிட்ட இருந்தால் ஒரு காபி வாங்கிக்கிறேன்.

போ போ சீக்கிரம் கூப்பிட்டு வா…அந்த பார்த்திபனை” எனப் பெயரோடு கூற, பார்த்திபன் என்ற பெயரில் திடுக்கிட்டாள்.

அவளுடைய திகைப்பு விலகுவதற்கு முன்னே, அவளை ஓங்கி அறைய மலர் சுருண்டு விழுந்தாள்.

“எவ்ளோ திமிறுடி உனக்கு? கல்யாணத்தன்னைக்கு என்ன அசிங்கப்படுத்திட்டா ஓடிவர…உன்ன இந்த ஊருல அசிங்கப்படுத்தி நாறடிச்சிருக்கணும்.

தாலியும் கழுத்துமா உன்ன பார்த்தப்பவே உன்னோட விடீயோவை திரைக்கட்டி ஓடவிட்டிருக்கணும். நீயும் உன்ன கட்டிக்கிட்டவனும் அவமானத்துல முட்டிகிட்டு சாவணும் இல்ல, அவனே உன்ன அடிச்சு கொல்லணும்னு ஆத்திரம் வந்துச்சு டி…

ஆனால் , உன்ன பாக்கறதுக்கு முன்னாடியே உன்ன பத்தின விஷயத்தை அந்தப் பார்த்திபனும் அவன்கூட இருந்த வேஸ்டு பிஸும் பேசிக்கிட்டதை நான் கேட்டுட்டேனே…” எனக் கூறி கை கொட்டி சிரிக்க, மலரின் இருதயம் அதி வேகத்தில் அடித்துக்கொள்ளத் தொடங்கியது.

“நீ? என்ன கேட்ட ? உனக்கு என்ன தெரியும் ” என நடுங்கிய குரலுடன் மலர் விசாரிக்க,

அவனோ பிறர் துன்பத்தில் சிரிக்கும் அரக்கனாக, “நீ அவன் பொண்டாட்டி இல்லனு தெரியும். அவன் உன் புருஷன் இல்லனும் தெரியும்…அதேசமயத்தில அவன் தான் எனக்கு வில்லனும் தெரியும்.

ஆனால் உனக்கு இங்க ஒன்னு தெரியாது” என இடைவெளிவிட,

என்ன என்பதாக மலர் ஏறிட்டாள்!

“அது நான் உனக்கு மட்டும் வில்லனில்லை, இனிமேல் அவனுக்கு உங்க காதலுக்கும் வில்லனும்! ஆமாம்…

நீயே கழுத்துல மாட்டிருக்கியே மஞ்சள் கயிறு, அதைக் கழட்டி எறிஞ்சிட்டு நான் கட்டப்போற தாலி கயிறை கட்டிக்க என்கூடவா… வரலைனா என்ன ஆகும்னு உனக்கே தெரியும் ?” எனப் பிரியன் மிரட்ட,

Advertisement