Advertisement

குறுகி அமர்ந்தவளுக்கு, ஆதரவாகப் போர்வையை இழுத்து அவள் மீது போர்த்திவிட்டவன், “நீ தூங்கு கண்ணம்மா… நான் அம்மாகிட்ட அடுத்த முஹுர்த்தத்தையே கல்யாணத்துக்குப் பார்க்க சொல்லுறேன். இனிமேல் நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்” எனக் கூறி சற்றே நகர்ந்தவன்,

சட்டென்று நின்று,மிக அழுத்தமாக அடுத்து ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தான்.

“இங்க நடந்தத வெளில சொன்னாலோ, இந்தக் கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கலானாலோ இந்த வீடியோவா உலகமே பார்க்கும்ங்கிறதை மறந்துராத.

என்னைக் கட்டிக்கிறதை தவிர உனக்கு வேற வழியில்லை. கட்டிக்கிட்டா இனிமேல் உன்வாழ்க்கையில கஷ்டமே இல்லை. புருஞ்சு நடந்துக்கோ” என வெகு தீவிரமான குரலில் பிரியன் எச்சரிக்க, அப்போது அவன் முகத்தைப் பார்த்த பனிமலர் திகைப்பின் உச்சத்திற்கே சென்றாள்!

அவன் வெளியேறும் வரை காத்திருந்தவள், அவன் தலை மறைந்தவுடன் சிவகாமி இருக்கும் அறைக்குச் செல்ல, அங்குத் தற்செயலாகவோ விதியின்செயலாகவோ சிவகாமியின் பேச்சை பனிமலர் கேட்க நேரிட்டது.

சத்தியமூர்த்திச் சிவகாமிடம், “எல்லாம் சரி சிவகாமி… ஆனால் இரத்தினவேல் எங்க நம்மகூடச் சம்மந்தம் பண்ணனும்னு ஆசைப்பட்டார் ? இதை நீ சொல்லிருக்க வேணாம்.” என வினவ,

“ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்னு பழமொழியே இருக்கே. இதென்ன ஒரு பொய் தானே ? இந்தக் கல்யாணம் நடக்க என்ன வேணும்னாலும் செஞ்சு சரிக்கட்டுவேன்.

எனக்கு மலர் தான் வரணும்” என அவர்போக்கில் சொல்லிக்கொண்டு போக,

சத்யமூர்த்தியோ “அடியே! அது ஆயிரம் பொய் இல்ல ஆயிரம் பேர்கிட்ட போய்க் கல்யாணத்த சொல்லி அழைச்சுக் கல்யாணம் பண்ணனும்” எனப் பழமொழிக்கான அர்த்தத்தை விளக்க,

“ரொம்ப முக்கியம்! இதைப் போய் மலர்கிட்ட உளறிவைக்காதீங்க. இந்தக் கல்யாணத்துல எந்தச் சிக்கல் வருவதையும் நான் அனுமதிக்க முடியாது” எனக் கண்டிப்பான குரலில் கூற, மலருக்கு அந்நொடியும் அவர்களின் வார்த்தையும் கசந்து போனது.

மலர் ஒரே நொடியில் மீண்டும் அனாதையாகி போனதை போன்ற உணர்வை பெற்றாள். மனது மிகுந்த குழப்பத்திலிருக்கும் நொடியில் பார்ப்பவை எல்லாம் தவறாகவே தோன்றும்…

ஒருபுறம் தொழில் துறையில் பணத்தை ஏமாற்ற முனையும் கும்பல், வீட்டிலோ நம்பி உள்ளே விட்டவன் செய்த மகாபாதகச் செயல் ,அத்தையென்று ஓடிய இடத்தில் அவரிடமும் உண்மையில்லை என்ற கசப்பான உண்மை.

இது அனைத்துமே அவள் ஒரே நாளில் அறிந்துகொண்டது மேலும் அவளைக் கலங்கடித்தது…

பிரியன் கைகளிலிருக்கும் வீடியோ-வை எப்படி அழிப்பதென்றும் தெரியவில்லை, அவனிடமிருந்து எப்படித் தப்பிப்பதென்று அவளுக்குப் புரியவில்லை. இதே சூழல் வேறு பெண்ணிற்கு வந்திருந்தால், அந்த இடத்தினில் மலர் சற்றே துணிந்து சிந்தித்திருப்பாளோ என்னவோ ?

ஆனால், அவளின் விஷயத்தில் அவளால் யோசிக்க முடியவில்லை!

சிவகாமி அறைக்குச் சென்று விரக்தியோடு வெளியேறி வந்தவளை சட்டென்று எதிர்கொண்டான் பிரியன்.

“என்ன எங்க அம்மாவை பார்க்க போனியா ? இப்படி இப்படி நடந்துச்சுனு சொன்னால் என்ன சொல்லுவாங்க ?

ஆனது ஆச்சுமா, ஆயிரமிருந்தாலும் கட்டிக்கப் போறவன் தானே..கல்யாணம் முடுஞ்சா சரியா போகிடும்னுதான் சொல்லுவாங்க…” எனத் திமிருடன் சொன்னவன்,

மீண்டும் அவனே தொடர்ந்து, அதைத் தாண்டி, “வேற யார்கிட்டயும் சொல்ல போறியா ? போ…ஆனால் நீ சொல்லலாம்னு யோசிக்கிறதுக்குள்ள ஊர்ல இருக்க அத்தனை பேருக்கும் உன்னோட வீடியோ போய்டும்.

நான் சும்மா விளையாட்டுக்கு சொல்லல….

ஏதோ கௌரவம் குடும்பம் மரியாதைன்னு உங்க குடும்பத்துக்கு ஒரு பேரு இருக்குல்ல? அது மொத்தமா காலி ஆகிடும்” என அடிக்குரலில் சீறினான்.

அவன் பேச பேச உள்ளுக்குள் நடுநடுங்கி போனாள் மலர்!

“ஏண்டா ஏண்டா இப்படிப் பண்ற ? உன்ன நம்பி உள்ள விட்டதுக்கு, என்னோட வாழ்க்கையை நாசம் பண்ண பாக்குறியே ? பிளீஸ் அதை அழிச்சிடு…என்னை விட்டுரு” எனக் கெஞ்ச,

“யாரு நானா ? நானா நாசம் பண்றேன் ? நீ தான் நான் சொல்லுறதை கேட்காமல் உன்னோட வாழ்க்கையை நாசம் பண்ணிக்கப் பாக்குற. அது தான் உண்மை. நான் சொல்றபடி கேட்டால் எல்லாம் சுபமா முடியும்…

“நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டடா” என ஆற்றாமல் அழுதபடியே சபிக்க,

“நான் கண்டிப்பா நல்லா இருப்பேன் கண்ணம்மா. என்னைக்கு உங்க அப்பா அம்மா உன்னைவிட்டு போனாங்களோ, அன்னைக்கே எனக்கு நல்ல காலம் ஆரம்பிச்சிடுச்சு.

அவுங்க மட்டும் இருந்திருந்தால் நான் உன்னைப் பார்த்திருக்கவே முடியாது. உன்ன மாதிரி ஒரு பொண்ணும், அதும் இவ்ளோ சொத்தோட ஒருத்தி எனக்குக் கிடைச்சிருக்கமாட்டாள்.

எல்லாத்துக்கும் அந்தக் கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும். கடவுளுக்கா ? அவருக்கு ஏன் ? அந்த ஆக்சிடண்ட்டா பண்ணின ட்ரைவர்க்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும்.” எனக் கூறியவன், மேற்கொண்டு அவனே தொடர்ந்து,

“பாரேன், ஒத்த ஆளு. உன்ன ஒண்ணுமில்லாம ஆக்கிட்டான். என்ன எல்லாத்துக்கும் சொந்தக்காரனாக்கிட்டான்…

நான் ஏதோ நாசம் பண்ணிட்டேன்னு சொன்னியே ? உண்மைலயே நாசம் பண்ணினது நான் இல்லமா, அந்த ட்ரைவர் தான்.

இப்ப உனக்கு இருக்க ஒரே ஒரு பாதுகாப்பு நான் தான். அதுனால என்கிட்ட இருந்து தப்பிக்கிறத யோசிக்கிறதை விட்டுட்டு, என்கூட எப்படி அனுசரிச்சு போறதுன்னு பாரு” எனத் தீவிரமாகவே எச்சரித்துவிட்டுச் சென்றான்.

அடுத்த நாளே அவர்களின் திருமணத்திற்கான தேதி நிச்சயிக்கப்பட்டது. ஒரே வாரத்தில் முடிக்கும்படியாகப் பிரியன் காய் நகர்த்தியிருந்தான். மலர் எதையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

என்னவென்று யாரிடம் போய்ச் சொல்வது ? அப்படிச் சொல்வதானால் ஆவதென்ன ? பிரியன் எதையும் செய்யக்கூடியவனாகவே இருந்தான்! அதோடு, இப்படிப்பட்ட வக்கிர எண்ணம் கொண்ட ஒருவனை மணப்பதா ? மரிப்பதே மேல் என்ற சிந்தனை கொண்டாள்!

ஒருவேளை அவளைக் கொள்வேனென்று மிரட்டியிருந்தால் துணிந்திருப்பாள். ஆனால், அவனுடைய கையிலிருப்பது வெறும் உயிரல்ல, உயிரினும் மேலான மானம்.

அனைத்து பெண்களும் விதிவிலக்கின்றி அஞ்சும் ஒரு விஷயமிருக்குமென்றால், அது அவர்களின் இது போன்ற அந்தரங்க காணொளி மற்றும் புகைப்படங்களுக்கே!

மலரும் அந்தச் சமயத்தில், அந்த நொடியில் விதிவிலக்காக இல்லை. முதலில் அதிர்ந்தாள், பிறகு அருவுருத்தாள், இறுதியாகத் துடிதுடித்தாள். திருமணத்திற்கு இருந்த அந்த இடைப்பட்ட நாட்களில் இரண்டு முறை, அவனுடைய கைபேசியை எடுக்க முயன்றாள்! ஆனால் இரண்டு முறையும் அவனிடம் மாட்டிக்கொள்ள, பிரியன் மிருகமானான்.

அவள் கண்முன்னே, அந்தக் காணொளியை ஒளிக்கவிட்டு, அந்தக் காணொளியில் பதிவான அவளுடைய நிர்வாண கோலத்தைக் கேட்க கூசும் வார்த்தைகளால் வர்ணிக்கத் தொடங்கினான்.

அந்த நொடிகளில் மலர் உயிருடன் இருக்கும் பிணமாகவே மாறிப்போனாள். அந்த நொடியில் தனக்குச் சாவை தவிர வேறு கதியில்லை என்ற பெரும் முடிவை உறுதியுடன் எடுத்தாள். 

“என்ன கண்ணம்மா ? தற்கொலை பண்ணிக்கனும்னு தோணுதா ? இல்லை என்னைக் கொலை பண்ணனும்னு தோணுதா ?

இரண்டும் சாத்தியமில்லை. என்னைக் கொலைப்பண்ண நீ என்ன நெருங்க முடியாது. என்பக்கத்துல நீ வரணும்னால் கூட அதை நான் தான் முடிவு செய்யணும்.

ஒருவேளை நீ தற்கொலை செஞ்சிடலாம்னு முடிவு செஞ்சால், உன்னோட கடைசி மூச்சு இருந்தால் கூட உன்ன இந்த உலகத்தோடு மறுமூளைக்குப் போய்க் கூட உன்ன காப்பாத்திடுவேன். ஆனால் அதுக்குப் பிறகு நான் இப்படிப் பேசிட்டு இருக்கமாட்டேன்…

என்னோட பொண்டாட்டிய வாழ ரெடியா இரு” எனச் சிரிப்புடன் சொல்லி சென்றான்.

இது போன்ற சூழலை எதிர்கொள்ளும் பெண்கள், தங்களது பிரச்சனைகளைப் பெற்றோர்களிடம் துணிந்து சொல்ல அஞ்சி நடுங்கும் வேளையில், மலருக்கு யாரிடம் இதைச் சொல்லி தீர்வு தேடுவதென்றே தெரியவில்லை.

இவளின் நிர்கதியான சூழலை தொழிலில் பயன்படுத்திக்கப் பணப் பிசாசுகள் முயல்கின்றனர். அதே போன்று சதை உண்ணும் பிணந்தின்னி கழுகொன்று உறவுக்காரன் என்ற பெயரில் அருகில் உள்ளான். இதை வெளியே சொல்ல முடியாது…

சிவகாமி சத்தியமூர்த்தியின் மீது மலருக்கு நம்பிக்கை வரவில்லை…ஏனைய உறவுகளின் மீது இவர்களின் செயலை பார்த்து அவளுக்கே அச்சமே மேலிட்டது. யாரை நம்புவது ? யாரிடம் சொல்வது ? எங்குச் செல்வது ? என்று அவள் பலவாறு சிந்திக்க, அந்தச் சிந்தனைக்கும் தளையிட்டான் பிரியன்.

“எங்கயாச்சும் தப்பிச்சு ஓடிறணும்னு நினைச்சாலே, இந்த விடீயோவை ஏர்-ல ஏத்திருவேன். காத்து போற பக்கமெல்லாம் உன் கவர்ச்சி காணொளியும் போகும்…” என நிதானமாக எச்சரித்திருந்தான்.

இப்போதெல்லாம் அடிக்கடி அந்தக் காணொளியை அவளுக்கு முன்பே ஓடவிட்டு, அவளுடைய அங்கங்களை வர்ணிக்கத் தொடங்கியிருந்தான். அப்படிச் செய்கின்ற வேளையில், அவனுடைய கைகள் அவளின் அந்தரங்க இடங்களைத் தொடுவதைப் போன்று நெருங்கி கொண்டுவருவான். மறுநிமிடமே, “கல்யாணத்துக்கு அப்புறம்….இப்ப தொட்டுட்டால் என்னால என்னைக் கண்ட்ரோல் பண்ணமுடியாதே. அவ்ளோ ஆசை செல்லக்குட்டி மாமனுக்கு உன்மேல” என்று பேசவும் செய்வான். சிவகாமியும் சத்யமூர்த்தியும் வெளியே திருமண வேலைகளுக்காகச் செல்லும் வேளையில் தான், பிரியன் மலரை நெருங்கி இந்தக் காரியங்களில் ஈடுபடுவான்.

உறவுகள் மத்தியிலும் பிரியனுக்கு நல்ல பெயரே! இவன் தான் இப்படிச் செய்தான் என்று சொன்னால் முதலில் நம்புவார்களா ? நம்பினாலும், “ஏன்மா இதைப் போய்ப் பெருசு படுத்தாதம. ஆயிரமிருந்தாலும் கட்டிக்கப்போறவன் தானே ? வெளில தெரிஞ்சால் எவனாச்சும் கட்ட வருவானா ?” என்பன போன்ற பேச்சுக்கள் தான் வருமென்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

அவள் அவ்வாறு முடிவெடுக்கக் காரணமும் இருந்தது…திருமணத்திற்கென்று வந்த உறவுகளில் ஒரு சிலர், ‘கட்டியவன் என்ன செய்தாலும் பொறுத்து போகணும்’ என்ற மனநிலையில் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, அவர்களிடம் சொல்வதானால் ஆகப்போவதென என்ற எண்ணம் தான்.

அதையும் மீறி அவர்களிடம் கூறினாலும், இரண்டு நபர்கள் ஐயோ பாவம் என்பார்கள், இரண்டு நபர்கள் இவளறியாமல் இது நடக்குமா என்ன ? என்ற பேச்சையும் விடுவதற்குச் சாத்தியமுண்டு.

இன்னும் இரண்டு நபர்கள் இவளுக்கு வேண்டும் என்ற ரீதியிலும் பேசலாம்.

ஆக, ஒருவரை ஒருவரின் மதிப்பு செயல் இவற்றை நிர்ணனைப்பவர்கள் ஊரில் உள்ள அந்த நான்கு நபர்கள் தான். அந்த நான்கு நபர்களைக் கடந்துவிட்டால் நாம் எதையும் எதிர்நோக்கலாம் எதிர்த்து நிற்கலாம். ஆனால் அந்த நால்வரை கடந்து செல்வது தான் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் பெரும் சவால்….

அனைத்து வழிகளும் மலரின் முன் அடைக்கப்பட்டுவிட்டது! மெய்யாக அடைக்கப்பட்டதா ? அல்லது, மலரின் மனம் சிந்திக்க மறுத்து அடங்கிபோனாதா ? அதை அவளே அறியாள்! அந்த நொடியில் அவளால் சிந்திக்கவோ செயல்படுத்தவோ முடியவில்லை!!

அவளின் இந்தப் பிரச்னையை முடிக்கமுடியாதலால் தன்னையே முடித்துக்கொள்ள முடிவெடுத்தாள். வேறு வழியும் அவள் கண்முன் இருப்பதாகத் தெரியவில்லை…

அவனைத் திருமணம் செய்வதை அவளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவளை இப்படியொரு கோலத்தில் அவன் எடுத்துவைத்திருக்கும் காணொளியை அழிக்கவும் வழி தெரியவில்லை…மரணம் தான் ஒரே வழி என்று அவள் முடிவெடுத்தபோது, திருமணத்திற்கென்று ஆட்கள் வர தொடங்கிவிட, அவள் தனியாகவே இல்லை.

தனியாகவோ தனித்துசெல்லவோ எந்தவொரு சந்தர்ப்பமும் அமையவில்லை. திருமணத்தன்று தான், பூச்சிக்கொல்லி மருந்து வந்து தோட்டத்தில் இறக்கி வைப்பதாகப் பேச்சு அடிப்பட்டது. அதிகாலையில் சென்றவள், அதில் இரு சிறு குப்பியை யாரும் அறியாமல் எடுத்துக்கொண்டாள்.

அதை அவளுடைய வீட்டிலே குடித்திருக்கலாம். ஆனால், அவள் வீடெங்கும் நிறைந்திருக்கும் ஆட்கள் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பிழைக்கவைத்துவிட்டால் ? பிரியனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமென்று அவள் நன்கு உணர்ந்திருந்தாள்!

அதனால், எங்காவது சென்று உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்தாள். அந்தச் சிந்தனை வரவும், எங்காவது என்ற எண்ணம், அவளுடைய பெற்றோர் மரணித்த இடத்திற்கே சென்று தன்னுடைய உயிரை முடித்துக்கொள்ள முடிவெடுத்தாள்.

அவளுடைய மனநிலையோ விருப்பமின்மையோ கண்ணீரோ எதையும் வெளிக்காட்டாமல் இருந்ததனால் அவள் வீட்டிற்குள் உலாவுவதைப் பிரியன் தடுக்கவில்லை. இன்னும் ஒருமணிநேரத்திற்குள் திருமணம் என்ற நிலை இருந்த வேளையில், மலர் வெளியேறியிருந்தாள்!

சாகத் துணிந்தவளின் கண்களுக்கு, விபத்து நிகழ்ந்த இடத்தை அடைந்ததும் அவளுடைய அம்மா அப்பா அவளை இருகரம் நோக்கி அழைப்பதை போன்றதொரு பிரம்மை ஏற்பட்டது. விரும்பியே மரணத்தை ஏற்கவிருந்த கடைசி நொடியில் தான் அவள் பார்த்திபனை காண நேரிட்டது.

பார்த்திபனை கண்ட மறுநொடியே ஏனோ பிரியனின் வார்த்தைகள் அவள் செவிகளில் ரீங்காரமிட தொடங்கியது.

“உன்னோட இந்த நிலைமைக்குக் காரணம் உன்ன உங்க அப்பா அம்மா விட்டுப் போனதுனாலதான். அவுங்க போனதுக்குக் காரணம் அந்த ஆக்சிடண்ட்ட செஞ்ச ட்ரைவர் தான்.

நான் காரணமில்லை” என்ற வார்த்தைகள் ரீங்காரமிட, பனிமலருள் பார்த்திபனை கொள்ளும் ஆவேசம் பிறந்தது.

அதிலும் அவன் தண்டனை எதுவுமின்றிச் சில மாதங்களில் வெளிவந்துவிட்டான் என்ற எண்ணமும், அதோட தான் இனி வாழவே முடியாதென்ற முடிவும் பார்த்திபனை அந்த இடத்திலே கொள்ளும் ரௌத்திரம் கொண்டாள்.

இது பார்த்திபன் மீது மட்டும் அவள் கொண்ட கோபமில்லை…. அவள் அனுபவித்த அனுபவிக்கின்ற மொத்த வலியின் அடிப்படை பார்த்திபன் என்பதனால் வந்த கோபம்.

உண்மையில் இதே கோபம், அவளுக்குப் பிரியனின் மீது தான் வந்திருக்கவேண்டும். ஆனால், அங்குப் பிரியனுக்கு எதிராக எந்தவொரு செயலையும் செய்திட முடியாதே….

அந்த வீடு இப்போது, பிரியனின் கட்டுப்பாட்டில் வந்திருந்தது! அவன் அந்த வீட்டிற்குள் நுழையவே காரணம், மலரின் பெற்றோர்கள் இல்லாமல் போனது தான் என்பதே அவளுக்கு அக்கணம் தோன்றியது.

“எங்க அப்பா அம்மாவை கொண்டவனைக் கொள்ளாம நான் செத்து என்ன பண்ண போறேன் ? சட்டத்தில இருந்து இவன் தப்பிச்சிருக்கலாம். ஆனால் என்கிட்டே இருந்து நீ தப்பிக்கக் கூடாது…

நீ உயிரோட வாழவே தகுதி இல்லாதவன்டா” எனச் சடுதியில் முடிவெடுத்தவள், பார்த்திபனின் உயிரை எடுத்துவிட்டு தன் உயிரை கொடுக்க முடிவு செய்தாள்!’

நிகழ்ந்த அனைத்துமே, இதோ நேற்று நடந்தது போல… அவள் கண்முன்னே நிழலாடியது…..

கண்களிலிருந்து கண்ணீர் பெறுக, சட்டென்று அவள் படுத்திருந்த அறையின் விளக்கை யாரோ ஒளிரவிட்டனர். பளிச்சென்று மிளிர்ந்த குழல் விளக்கில், கண்கள் கூச இமைகளை மூடிக்கொண்டாள் , மலர்!

Advertisement