Advertisement

உணவை முடித்துக்கொண்டு தனது அறைக்குள் வந்தவளை, அவளுடைய அறையிலிருந்து வரவேற்றான் பிரியன். பிரியனை எதிர்பாராமல் பார்த்தத்தினால் சட்டென்று திகைத்தாலும், நொடியில் முகத்தைச் சமன் செய்துகொண்டு,

“நீங்க ? என்னோட ரூம்ல ? என்ன தேடி வந்தீங்களா ? ” எனச் சாதாரணமாகக் கேட்டபடி, மலர் உள்ளே வர, அவளுடைய படுக்கையில் அமர்ந்திருந்தவன் எழுந்து எதார்த்தமாக நடப்பதை போல அந்த அறையில் அப்புறமும் இப்புறமுமாக நடந்தான்.

“ஆமா…உன்னை தேடித்தான்…. இன்னைக்குமட்டுமில்லை. ரொம்ப நாளாவே உன்னைத்தான் தேடுது. என்னோட மனசும்….” என நிதானமாகக் கூறி ஒரு சிறிய இடைவேளைவிட,

அவனின் இந்தப் பேச்சில் சற்றே மலர் திகைத்தாலும், மறுகணமே அவளையும் மீறி அவளுடைய இதயத்தில் இலேசான படபடப்பு ஏற்பட்டது. முதன் முதலாக ஓர் ஆண் மகன் இப்படிச் சொல்லியதை அவள் கிரகிக்கச் சில நொடிகள் ஏற்பட்டது.

அவளுடைய மனமோ, ‘இவரு என்ன நேசிக்கிறாரா ? கல்யாணம் பேசவும் உரிமையா சொல்ல வந்திருக்காரோ ? எனக்கு இப்ப வர இவரைப் போலத் தோனலனா கூட, இவரை வேண்டாம்னு சொல்ல என்கிட்ட காரணம் எதுவும் இல்ல… ‘ எனப் பிரியனுடன் அமைய போகும் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளும் விதத்துடன், அவனையே பார்த்து நின்றுருந்தாள்.

ஒரு நொடியில் ஏதேதோ எண்ணங்களோடு பறந்துகொண்டிருந்த அவளுடைய சிறகை முறித்து எறிந்ததைப் போன்று, அடுத்த வார்த்தையைப் பிரியன் உச்சரித்தான்…

“என்னோட உடம்பும்….ஆமா…என்னோட மனசு மட்டுமில்ல, என்னோட உடம்பும் உன்னைத் தேடுது” எனப் பேசிக்கொண்டிருந்தவன் சென்று கதவை தாழிட, அவனுடைய பேச்சிலும் செயலிலும் பெரும் அதிர்ச்சிகொண்டாள், மலர்!

அவனுடைய இந்தப் பேச்சை எந்தவகையில் எடுத்துக்கொள்வது….? என்ற கேள்வியுடன், ஒருவேளை திருமணம் நிச்சயக்கப்பட்டவர்கள் இப்படித் தான் பேசுவார்களோ என்ற சிந்தனையில் தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்ள முயன்ற மலரின் மனதை, பிரியனின் அடுத்த வார்த்தைகள் வேரோடு சாய்த்தன.

“ஆமா மலர்! எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். உன்னை எதுக்காகவும் யாருக்காகவும் இழக்க விரும்பல. ஏன் உனக்கே பிடிக்காட்டி கூட உன்னை நான் விடுறதுக்கு ரெடியா இல்ல.

டெய்லி டெய்லி கற்பனையிலையே உன்கூட வாழ்ந்திட்டு இருக்கேன். சட்டுனு எப்படி உன்னை இன்னொருத்தவனுக்குக் கொடுக்க முடியும்?” எனக் கேட்க,

மலர் என்ன சொல்கிறான் என்ற ரீதியில் திகைப்பு விலகாமல், அதோடு குழப்பமும் சேர்ந்துகொள்ள நின்றிருந்தாள். 

மேற்கொண்டு அவனே தொடர்ந்து, “அதான் என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம்னு மண்டைய உடைச்சு யோசிச்சேன். என்ன பண்ண ? உன்ன என்னால மிஸ் பண்ணவே முடியாதே?” என அவனே தொடர்ந்து பேசிக்கொண்டே போக,

“பிரியன்! மொதல்ல கதவை திறங்க” என மலர் சுதாரித்துக் கூறினாள்.

“பொறுமை! பொறுமை! ஏன் அவசரம் ? என்னோட காதல் எந்த அளவுக்கு ஆழம்னு தெருஞ்சுக்காமல் போறேன்னு சொன்னால் என்ன அர்த்தம் ?” எனப் பிரியன் ஒரு மாதிரி குரலில் கூற,

ஏதோ சரியில்லை என்று மலரின் மனம் அடித்துக் கூறியது. அதோடு, சொந்த வீட்டிற்குள் தானே இருக்கின்றோம்…? இங்குத் தன்னை மீறி என்ன நடந்துவிடப் போகிறதென்ற அசட்டு துணிச்சலும் அவளிடம் இருக்கவே செய்தது.

“நீங்க பேசுற முறை சரியில்லை. கல்யாணம் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கச் சமயத்தில, நீங்க இப்படிப் பேசுறது…” என மலர் தொடங்க, அவளை முடிக்கவிடாமல்,

“ஓஹ் உனக்கு அடுத்தவனைக் கட்டிக்க அம்புட்டு அவசரமா… இங்க இரா பகலா நான் உக்காந்து சேவகம் பார்க்க, நீ அசல்ல பாருன்னு அசால்ட்டா சொல்லுவியோ?

நீ நீயே நினைச்சாலும் என்னைத் தவிர வேறு எவனையும் கட்டிக்க முடியாது.

ஏன்னா, பொண்ணுங்களுக்கு மானம் தான் முக்கியமாமே…? நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொல்லாட்டி, உன் மானம் கப்பல்ல போய்டும்” எனப் பொடி வைத்து பேச,

“என்ன உளறுறீங்க ?” எனச் சற்றே குரல் உயர்த்தி விசாரித்தாள் மலர்!

“உளறல் இல்லை! உண்மை… முழுக்க முழுக்க உண்மை” என அடித்துக்கூற,

“பிரியன் உங்ககிட்ட ஏதோவொன்னு சரியில்லை. உங்ககிட்ட பேச எனக்குப் பிடிக்கவும் இல்லை. மொதல்ல வெளில போங்க… எதுனாலும் நான் அத்தைகிட்ட பேசிக்கிறேன்” என அவனை வெளியே அனுப்ப முயன்றபடி, தானும் வெளியேற முயல, சட்டென்று அவளுடைய கரத்தை அழுந்த பற்றினான்.

இதை எதிர்பார்த்திடாத மலர், “கையை எடுங்க” என இழுத்து பிடித்த பொறுமையுடன் கூற,

“சரி சரி… எடுக்குறேன். ஆனால் நீ போகாத எங்கையும். உனக்கு ஒன்னு காட்டுறேன். அதைப் பார்த்திட்டு நீ எங்க வேணும்னாலும் போ” எனக் கூற, கேள்வியாக அவனை ஏறிட்டாள்.

“இதோ…இதை பாரு…” எனக் கூறியபடி அவனுடைய கைபேசியை எடுத்து அதில் வீடியோ ஒன்றை ஓட விட, முதலில் அசட்டையாக அதன் மீது பார்வையைப் பதித்தவள், சட்டென்று பெரும் அதிர்ச்சி கொண்டாள்.

அவளுடைய கண்கள் ஒரே இடத்தில ஸ்தம்பித்தன. கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கத் தொடங்கியது….அடுத்த வார்த்தை பேச அவளுக்கு வார்த்தை எழவே இல்லை.

“டேய்… ” என அழுகையும் ஆத்திரமும் நிரம்பிய குரலில் கைபேசியை அவனிடமிருந்து பறிக்க முயல, வெகு இலாவகமாக அதை உயர்த்திப் பிடித்துச் சட்டென்று அவனுடைய சட்டையின் உள் பையில் வைத்துக்கொண்டான்.

அவனிடமிருக்கும் அந்தக் கைபேசியை எப்படியாவது எடுத்துவிட வேண்டுமென்று அவள் முயல, அவனோடு அவள் சண்டையிட தொடங்க, அவள் போராட, அவளுடைய அத்தனை போராட்டங்களையும் பிரியன் தனக்குச் சாதகமாக்கி கொண்டான். அவள் கைபேசியை எடுக்க முனைந்த போதெல்லாம், அவளைத் தடுப்பதைப் போன்று அத்துமீறி அவளுடைய தேகத்தில் கை வைத்தான்…

சில நிமிடங்கள் அந்தக் கை பேசியை எடுத்தே தீரவேண்டுமென்ற பிடிவாதத்துடன் இருந்தவள், பிரியனின் தொடுகையைத் தடுக்கவுமுடியாமல், கைப்பேசியையும் எடுக்க முடியாமல் கதறி அழுதபடி தரையில் அமர்ந்தாள்.

அவள் பார்த்த அந்தக் காட்சி ஒளி அவளுடைய உள்ளத்தை எரித்ததென்றால், அவன் கை பட்ட அவள் தேகங்களின் அந்தரங்க இடங்கள் நெருப்புப் பட்டத்தைப் போன்று தகிக்கத் தொடங்கியது…

மடிந்து அழுதுகொண்டிருந்தவளின் அருகே அமர்ந்து, தனது கையை மலரின் கழுத்தை நோக்கி நீட்டினான்.

அவளுடைய தோள்களில் அழுத்தமாகத் தனது கரத்தை வைத்தவன், “இப்போ நீ அமைதியா இருக்க… இல்லேனா…உன்னோட இந்த நியூட் வீடியோ-வ உலகமே பாக்குறது போலப் பண்ணிடுவேன்…” எனக் கூறிக்கொண்டே, அவளுடைய தோள்பட்டையில் இருந்த சுடிதார் காலரை வக்கிரத்துடன் தடவி தடவி ஒருபுறமாக நகர்த்திக்கொண்டிருந்தான்.

“ப்ளீஸ்…என்னை விட்டுரு. உன்ன சொந்தம்னு நம்பி, வீட்டுக்குள்ள விட்டதுக்கு நீ இப்படிச் செய்யலாமா ? இத்தனைக்கும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற என்னை நீ ஏன் இப்படி வீடியோ எடுத்து வச்சிருக்க ? நீ நல்லவன்னு நம்பி தானே கல்யாணத்திற்குச் சம்மதம் சொன்னேன்?” என அழுகையுடன் கேட்க,

பிரியன் சுதாரித்தான். சட்டென்று அவளின் மீதிருந்து தன்னுடைய கரத்தை விளக்கினான்.

“நீ என்ன சொல்லுற ? நீ என்னைக் கல்யாணம் செஞ்சுக்கச் சம்மதம் சொல்லிருந்தியா ?” என நம்பாமல் கேட்க, அழுகையோடு தலையில் அடித்தபடி ஆம் என்பதாகச் சமிஞை செய்திருந்தாள்.

உடனே சட் சட்டென்று தனது தலையில் தானே அடித்துக்கொண்டு பிரியன், “தப்புப் பண்ணிட்டடா பிரியன்…தப்பு பண்ணிட்ட” எனத் தனக்குத் தானே கூறிக்கொண்டு, அவள் முன் மண்டியிட்டு அமர, மலர் பயத்தில் பின்வாங்கினாள், உடல் நடுநடுங்க!

“செல்லக்குட்டி பயப்படாதா…மாமாக்கு உன்மேல ரொம்ப ஆசை. உன்ன யாருக்கும் என்னால விட்டுக்கொடுக்கவே முடியாதுடா…உனக்கு புரியுதுல.

அதுனாலதான், நீ வேற யாரையோ கட்டிக்கப்போறன்னு தப்பா புரிஞ்சுகிட்டு இப்படி ஒரு வீடியோ எடுத்துட்டேன்” என விவரித்தான்.

ஆம்! காலையில், மலர் மில் சென்றிருக்கிறாள் என்பதைச் சிவகாமி மூலம் அறிந்துகொண்டவன், நேராக மலரின் அறையில் உள்ள குளியலறையில் ஒரு போர்ட்டபிள் காமெராவை மறைவாகப் பொறுத்தினான்.

மலர் வெளியே போயிட்டு வந்து குளிக்கும் வழமை கொண்டவள் என்பதை இத்தனை நாளில் நன்கு அறிந்திருந்தான். அதைப் பயன்படுத்தியே, இந்தத் திட்டத்தை வகுத்திருந்தான். அவனுக்கு மலரையும் மலரின் சொத்துக்களையும் விடுவதில் மனமில்லை. அவளை அடைய எந்த எல்லையையும் தொடுவதென்ற முடிவுக்கு வந்தே இந்தப் பாதகச் செயலில் இறங்கினான்.

மலர் அவன் எதிர்பார்த்தபடியே குளிக்கச் சென்றுவிட, அவள் குளித்துவிட்டு சாப்பிட மேஜை அறைக்கு வந்த பொழுது, மீண்டும் யாரும் அறியாமல் அவள் அறைக்குச் சென்று அந்தக் கமெராவில் பதிவான காட்சிகளைக் கொண்டடிக்கிய மெமரி கார்டை தனது மொபைலுக்கு மாற்றிக்கொண்டான்.

கொஞ்சமும் தாமதிக்காமல் அதைத் தனது மின்னஞ்சலிலும் சேமித்து வைத்தான். அவனுடைய வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் தான், மலர் மீண்டும் அறைக்கு வந்திருந்தாள்…அதன் பின் தான் நடந்தவைகள் எல்லாம்….

“என்னை நம்பு மலர்… என்னோட காதல் மோகம் எல்லாமே உன்னோட மட்டும் தான். இப்ப நீ பார்த்தியே இந்த வீடியோ இது நான் உன்மேல கொண்ட காதலோட உச்சக்கட்டம்.

நீ எனக்கு இல்லனா நான் என்ன வேணும்னாலும் செய்வேங்கிறதுக்கான அடையாளம். அதை நீ புரிஞ்சுக்க” என அருகில் அமர்ந்து குழந்தைக்குச் சொல்வதைப் போலவும், தான் மட்டுமே இந்த உலகத்திலிருக்கும் கடைசி நல்லவன் என்ற ரீதியிலும் பிரியன் பேசிக்கொண்டிருந்தான்.

“உனக்குப் புரியுதா கண்ணம்மா ? நீ அப்படினா எனக்கு உயிருடா…அதான். உன்ன இந்த மாதிரி கோலத்தில நான் பார்த்திட்டால் நீ என்னைத் தவிர வேற யாரையும் கட்டிக்க மாட்டத்தானே ? அதுக்காகத் தான் இப்படிச் செஞ்சேன். ” எனத் தன்னிலை விளக்கம் வேறு கூறினான்.

“ப்ளீஸ் அதை டெலீட் செஞ்சிடுங்க” எனக் கையெடுத்து கும்பிட்டு மலர் அழ தொடங்கினாள். அவளுடைய உடம்பு முழுவதும் மொத்தமாகக் கூசி போனது. அவன் முன் அமர்ந்திருப்பதே அருவருப்பாக இருந்தது…ஏதோ இப்பொது அவன் முன் நிர்வாணமாக இருப்பதைப் போன்று இரண்டு கைகளைக் கொண்டு அவளுடைய ஐந்தரை அடி உயரத்தையும் சுருட்டி மறைக்கப் போராடி கொண்டே கெஞ்சினாள்.

“நீ கேட்டால் எதைவேனும்னாலும் செஞ்சிடுவேன் செல்ல குட்டி. இதோ இதோ டெலீட் பண்ணிடறேன்” எனத் தனது சட்டைக்குள்ளிருந்து கைபேசியை எடுத்தவன், சட்டென்று சுதாரித்தவனாக, “நான் இதை ஏன் பண்ணனும் ? நான் தான் உன்னோட புருஷனாக போறேனே ?” என யோசிக்க, 

அவன் யோசித்துக்கொண்டிருந்த அந்த நொடிகளை பயன்படுத்தி, அவன் கைகளிலிருந்து சட்டென்று கைபேசியை அவள் பறித்துவிட, பிரியன் ஓங்கி அவளை ஒரு அறை அறைந்தான். அடியின் வீரியத்தில் கையிலிருந்த கைபேசி தவறிவிட, அதை வேகமாக கைப்பற்றியவன், “சாரி கண்ணம்மா…என்னை ஏன் மறுபடியும் மறுபடியும் கெட்டவனாக்குற ?”  “என்னைக் கொஞ்சம் புருஞ்சுக்கோ… நமக்குள்ள என்ன ஒளிவு மறைவு? இருக்கட்டும்…” என எதுவும் நிகழாததைப் போன்று அமைதியான குரலில் கூற, மலர் தான் நொந்து போனாள்.

அவளுக்கு அப்போது என்ன செய்யவேண்டுமென்று கூடத் தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டதைப் போன்றதொரு உணர்வு.

என்ன செய்கிறோம் என்று அறியாமலே, அவனிடமே, “நான் வெளில போகணும். நான் அத்த கிட்ட பேசணும்” என அழுதபடியே சொல்ல,

“ஏ நில்லு…எங்க நீ பாட்டுக்கப் போற?

ஒருவேளை கல்யாணம் வேணாம்னு சொல்லுற ஐடியா இருக்கா ? இல்லை அத்தைகிட்ட ஏதாவது சொல்லணும்னு தோணுதா ?

இது இரெண்டுல எது நடந்தாலும், நடக்கப் போற எதுக்கும் நான் பொறுப்புக் கிடையாது” என எச்சரிக்கும் த்வனியில் கூறியவன்,

“புரியலைல…உன்னை கட்டிக்க உன்ன இப்படியொரு கோலத்துல பாக்குற அளவுக்கு வேல செஞ்ச எனக்கு, உன்ன கட்டிக்க முடியாதுனு தெரிஞ்சால் நான் பார்த்த இந்த உன்னோட கோலத்தை இந்த உலகத்துக்கே காமிச்சிடுவேன்” என வக்கிரமான குரலில் கூற,

“பிரியன்!” எனக் காதை பொத்தியபடி அதிர்ந்து அரண்டு அழ தொடங்கினாள். சட் சட்டென்று அவளை அவளே தலையில் அடித்துக்கொண்டு, கதறி துடிக்கத் துடங்கினாள்.

“கண்ணம்மா அழாதடா….நீ அழுதால் எனக்குக் கஷ்டமா இருக்கு… லவ் யூ. இதோ பாரு என்னோட கண்ணைப் பாரு…என்னோட லவ் உனக்குப் புரியும். லவ் யூ டா” என இப்போது இறைஞ்சும் குரலில் கூறினான்.

மலருக்கு அருவருப்பு, அவமானம், ஆத்திரம், இயலாமை, கோபம், குழப்பம் என அனைத்தையும் ஒரே நொடியில் ஒருவர் அனுபவிக்க முடியுமா ? அந்நொடி மலர் அது அத்தனையும் அனுபவித்தாள்!

எதுவும் பேசும் திராணி மலரிடம் இல்லவே இல்லை… அழுது அழுது ஓய்ந்த இமைகளைச் சுமக்கமுடியாமல் உயர்த்திப் பிரியனை பார்த்தாள்!

“இப்படிப் பார்க்காத கண்ணம்மா…நீ இப்படி ஓய்ஞ்சு போய்ப் பாக்குறத பார்த்தால் எனக்குச் செத்திடனும் போலத் தோணுது.

உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்ன ராணி போல வச்சுப்பேண்டா. என்னை நம்பு. நீ கிடைக்கமாட்டானு தான் இப்படிப் பண்ணிட்டேன்.

நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அடுத்த நொடி இது எல்லாத்தையும் நான் மொத்தமா அழிச்சிடறேன். இப்ப வா..எழுந்திரு” என அவள் கை பிடித்து எழுப்ப முயல தீயை தொட்டதைப் போன்று சட்டென்று பதறி விலகினாள்.

“சரி சரி நான் தொடல. நீ படு…பெட் ல படு” எனச் சமாதானமாகத் தொடங்கி அழுத்தமாகச் சொல்ல, பட்டென்று பயத்தில் குறுகி அமர்ந்தாள்.

Advertisement