Advertisement

பகுதி – 30

இமைகள் கொஞ்சமும் அசையவில்லை…பார்த்தது பார்த்தபடி இமைக்க மறந்த நொடிகளாகப் பனிமலரின் நொடிகள் நகர்ந்துகொண்டிருந்தன. சீரான மூச்சுச் சப்தம், அருகினிலே தாரா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாளென்று உணர்த்தியது…

காலம் சில நாட்கள் பின்னோக்கி நகரத் தொடங்கியது….

‘அன்றைய தினமும் மலருக்கு வெறுமையாகவும் ஒருவித பிடித்தமில்லாமலுமே தொடங்கியது… ஆம்! அவள் அன்னையும் தந்தையும் சில மாதங்களுக்கு முன் தான் இறந்திருந்தனர். முன்புக்கு இப்போது எத்தனையோ தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டிருந்தாலும், மலரின் மனம் முழுமையாக நடந்த துயரிலிருந்து வெளிவரவில்லை.

முன்பிருந்த கலகலப்பு இப்பொது அவளிடம் சுத்தமாகத் துடைத்தெறியப்பட்டிருந்தது. பனிமலரின் பெற்றோர் மரணத்தின் போது தான் சிவகாமி சத்தியமூர்த்தித் தம்பதியினர் பனிமலரின் வீட்டோடு வந்து தங்க தொடங்கினர்.

அதுவரை சிவகாமி என்பவர், பனிமலரின் அத்தை…அவ்வளவே! பெரிதாக ஒட்டுதலோ நெருக்கமோ இருந்ததில்லை… பனிமலரின் தந்தையின் சித்தப்பா மகள் தான் சிவகாமி!

சிவகாமி மீது பனிமலரின் தந்தை மிகுந்த பிரியம் வைத்திருந்தார்தான். ஆனால், அது நாளைடைவில் குறைந்து போனது. அதற்குக் காரணமும் இருந்தது…சிவகாமி, அவருடைய கணவன் வீட்டாரிடமிருந்து, சத்தியமூர்த்தியை மிகச் சாமர்த்தியமாகப் பிரித்திருந்தார். சிவகாமியின் செயல்களினால் சத்தியமூர்த்திக் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதைச் சிவகாமி இலட்சியம் செய்யவில்லை…

புகுந்தவீட்டிலிருந்து தனித்து வருவதே குறியாய் இருந்து அவர் சில செயல்கள் செய்ய, சித்தப்பா மகளானாலும், சிவகாமியின் செயல்கள் பனிமலரின் தந்தைக்குப் பிடித்தமில்லாமல் போனது. கண்டித்துப் பார்த்தார், சிவகாமி கேட்கவில்லை… சத்தியமூர்த்தி என்ற மனிதன் சிவகாமியின் சொல்லுக்கு ஆடும் பொம்மையாக இருந்தார்…

அதனால் பனிமலரின் தந்தை அவர்களிடமிருந்து மெல்ல ஒதுங்கியும் கொண்டார்…ஒதுக்கியும் வைத்தார்…. அதாவது உறவை துண்டிக்கவில்லை. நல்லது கெட்டதிற்குக் கலந்து கொள்ளும் அளவிற்குத் தள்ளி நிறுத்தியிருந்தார்.

பிரியன் என்பவன், சிவகாமி சத்தியமூர்த்தியின் மகன் தான்…ஆனால் பெற்றெடுத்தவன் அல்ல; தத்தெடுக்கப்பட்டவன்! ஏதோவொரு வகையில் தூரத்து உறவில் பத்து வயது சிறுவனாக இருந்தவனைத் தத்தெடுத்துக்கொண்டனர்.

ஏனோ சிவகாமி சத்தியமூர்த்திக்கு பிள்ளை பாக்கியம் இல்லவே இல்லாமல் போனது… திருமணம் ஆகி பதினைந்து வருடங்களுக்கு மேல் தான் வேறு வழியின்றிப் பிரியனை தத்தெடுத்தனர். அதன் பின் தான் சிவகாமியின் குணமும் சற்று மாறியது…

சத்தியமூர்த்திக்கு உறவின் முக்கியத்துவம் புரியத்தொடங்கியது. ஆனால் புரியத்தொடங்கிய வேளையில், சிதைக்கப்பட்ட அவருடைய குடும்பம் இல்லாமல் போயிருந்தது! பிரியனை மிகுந்த பிரியத்துடனே வளர்க்க தொடங்கினர். அவர்களிடம் மாற்றம் தெரிந்த போதிலும், ஏனோ பனிமலரின் தந்தைக்குச் சிவகாமியின் குடும்பத்தின் மீது பெரிதாக எந்தவொரு நம்பிக்கையும் பிறந்திடவில்லை. அதனால் எப்போதாவது வருவதை மட்டும் அனுமதித்திருந்தார்….

அண்ணனின் இந்த மாற்றம் சிவகாமி உணர்ந்த போது, அவருக்குக் கோபத்திற்குப் பதிலாக வருத்தமே மேலோங்கியது. அதனால், அண்ணன் வீட்டிற்குப் போவதை குறைத்துக்கொண்டார்… விஷேச வீடுகளில் பார்ப்பதோடு சரி என்ற ரீதியில் இருந்தது….

இதனால் முழு ஆண்மகனாக வளர்ந்து நின்ற பிரியனும், திருமணத்திற்குத் தயாராக நின்ற பனிமலரும் பார்த்துக்கொண்டிருக்கவில்லை. அண்ணன் இறந்த செய்தியை, கேட்டதும் சிவகாமி துடித்ததும் சிந்திய கண்ணீரும் மெய்யே!

அண்ணன் மகள் தனியாகச் சிரமப்படவேண்டாமென்று எண்ணம் கொண்டு, பனிமலரின் வீட்டுக்கே, வந்து அவளுக்கு ஆதரவாகச் சிவகாமி முடிவெடுத்தார். பனிமலருக்கு அவர் அத்தை என்ற முறையும், வீட்டிற்கு வரும் போதும் விசேஷங்களில் பார்க்கும் போதும் நல்ல முறையில் மட்டுமே அவளுக்குச் சிவகாமி என்பவர் பழக்கமாகியிருந்தார்…

தாய் வழி தந்தை வழி பெற்றோர்கள் இல்லாத காரணத்தினால், தனித்துவிடப்பட்ட பனிமலருக்கு சிவகாமி மெய்யான உறவாகவே இருந்தார். அவளைத் தேற்றுவதில் பெரும் பங்கு சிவகாமியின் உடையாதாகவே இருந்ததை மறுப்பதற்கில்லை…

தனது அண்ணன் மகளைத் தனித்துவிட மனமில்லாமல், பிரியனுக்கு மணமுடித்துத் தன்னோடே இறுத்திக்கொள்ள முடிவெடுத்தார். தன்னுடைய அண்ணனின் அதாவது பனிமலரின் தந்தையின் ஆசையும் இது தான் என்ற பொய்யை நெஞ்சறிந்து பனிமலரிடம் கூறினார்.

அவருக்கு அது பெரிதாக வருத்தம் தரவில்லை. அண்ணன் மகளின் நன்மைக்கென்று தனக்குத் தானே சமாதானம் கூறிக்கொண்டார்…பனிமலரை தனித்தும் விட முடியாது…இந்த நிலையில் அவளை உடனடியாகத் திருமணத்திற்குச் சம்மதம் சொல்ல வைக்க இதைத் தெரிந்தே செய்திருந்தார்…

ஆனால் இந்தத் திருமண ஏற்பாட்டின் பிரதானம், பனிமலரின் நல்வாழ்வே!

தனக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருக்கின்றவர்கள் என்ற அடிப்படையிலும், தன்னுடைய தந்தையின் ஆசை இதுவாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்திலும் பனிமலரும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்திருந்தாள்… மனம் உவந்தே!

              

எப்படியும் தன் வாழ்நாளில் திருமணம் என்ற ஒன்று வரத்தான் போகின்றது. அது ஏன் தனக்குப் பக்கமலாய் நின்ற சிவகாமியின் குடும்பத்தில் இருக்கக் கூடாதென்ற கோணத்தில் சம்மதித்திருந்தாள்…

மற்றபடி இந்தத் திருமணத்தில் பெரிதான எதிர்பார்ப்போ விருப்பமோ அதே வேளையில் வெறுப்போ ஏதும் அவளிடமில்லை. அதேநேரத்தில், பிரியனின் மனநிலை வேறாக இருந்தது…

அவன் நினைவு தெரிந்து எடுத்து வளர்க்கப்பட்டவனாதலால், பாசத்திற்கும் ஏங்கினான், பணம் நிறைந்த சுகவாழ்வுக்கும் ஏங்கினான். சிவகாமி சத்தியமூர்த்தியின் மீது பாசம் கொண்டிருந்தான் என்பது மெய் தான். ஆனால், அந்த மெய் அவர்களுக்கு இன்னொரு குழந்தை இல்லை என்ற காரணத்தினால் பொய்யாகி போகச் சந்தர்ப்பம் அமையவில்லை.

கண்ணும் கருத்துமாகப் படித்தான்…இருக்கும் பணத்தைப் பெருக்கினான்…நிறைவான வாழ்க்கையே வாழ்ந்தான். பனிமலரை காணும் வரை!

அவன் என்று இந்த வீட்டிற்கு வந்தானோ, அன்றே பனிமலரை அவனுக்குப் பிடிக்கத் தொடங்கிவிட்டது. அவளை நெருங்கவே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்யத் தொடங்கினான். அவளைப் பார்க்க தொடங்கியவன், ஒருகட்டத்தில் அவளை மட்டுமே பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான்…

பனிமலர் பேரழிகியா என்று கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் பிரியனின் கண்களுக்கு அவள் மட்டுமே அழகியாகத் தென்பட்டாள். அவளோடு கனவிலே வாழ தொடங்கினான்… அவனுடைய பார்வைகளில் இருந்த ரசனைகள் சிறிது சிறிதாக வேட்கையாக மாறிக்கொண்டு வந்தது…

அவளை முழுமையாக ஆளவேண்டுமென்ற எண்ணம் இப்போதெல்லாம் அவனுடைய நரம்புகளில் கூடப் பிணைந்துவிட்டிருந்தது. இப்படியான சந்தர்ப்பத்தில் தான், பனிமலரின் சொத்துக்கள் பற்றிய விவரம் அவனுக்குத் தெரியவந்தது…

பனிமலரின் தந்தை அதாவது இரத்தினவேலின் சொத்துக்கள் அனைத்திற்கும் வாரிசாகப் பனிமலரை மட்டுமே அவர் நியமித்திருந்தார். எக்காரணம் கொண்டும் பனிமலரை தவிர வேறு யாரும் எந்தவொரு அதிகாரத்தையும் எடுத்துக்கொள்ள முடியாது. பனிமலரே கையொப்பமிட்டால் கூட, அந்தச் சொத்துக்களை எங்கும் யாருக்கும் விற்க முடியாது…அவளுக்குத் திருமணம் குடும்பம் குழந்தை என்று வந்தால் மட்டுமே, அவளுடைய குடும்பம் இதை அனுபவிக்க முடியும். இந்தச் சிக்கலை, பிரியன் அறிந்துகொண்டான்….

இதை இரத்தினவேல் செய்வதற்குக் காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. அவள் ஒரே பெண் வாரிசு என்பதால், எப்போதும் தன் மகள் யாரிடமும் பணிந்து நிற்கவேண்டாம் என்பதற்காகவும், அதீத பணமே அவளுடைய உயிருக்கு பாதகமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் சிந்தித்து எழுதியிருந்தார்… பணம் பத்தும் செய்யும் பகையும் செய்யும் என்று அனுபவபூர்வமாக உணர்ந்தவராயிற்றே!

இதை அறிந்துகொண்ட பிரியனுக்கு இப்போது வேட்கை வெறியாகவே மாறிப்போனது. அவளையும் அடையவேண்டும்…அவளுடன் சேர்த்து அவள் சொத்தும் அவனுக்குப் பிரதானம். சொத்து முழுவதும் தன்னுடன் இருக்க, பனிமலர் அவனுடன் இருக்கவேண்டும்…

அதோடு, அவள் முழுவதுமாக அவனுக்கானவளாக இருக்கவேண்டும். தனக்காகப் பேசி, தனக்காகச் சிரித்து, தனக்காகச் சாப்பிட்டு தனக்காக வாழ்ந்து இப்படியானதொரு வாழ்க்கையைப் பனிமலர் தனக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் அவனுள் இருந்துகொண்டே இருந்தது…

மகனின் பேச்சு பார்வையிலிருந்து, பனிமலரை மகனுக்குப் பிடித்திருக்கிறதென்று புரிந்துகொண்ட சிவகாமி, மகன் அறியாமலே பனிமலரிடம் சம்மதம் பெற்று பிரியனுக்கு ஆனந்த அதிர்ச்சி தர முடிவு செய்திருந்தார்.

“பிரியன் எங்கப்பா…நான் குத்துக்கல்லாட்டம் நிக்குறேன். நீ என்ன தேடுற ?” எனச் சிவகாமி நமட்டு சிரிப்புடன் கேட்க,

“இல்ல…மலர் சாப்பிட்டாளா ? காணோமே ?” எனப் பதிலளிக்க,

“அட அவளை விடுப்பா…நம்மதான் அவளைச் சொந்தமா நினைக்கிறோம். ஆனால் அவள் நம்மள தள்ளி நிறுத்தி தான் பாக்குறாள்” எனச் சிரிப்பை அடக்கியபடி மகனிடம் விளையாட தொடங்கினார்.

சத்யமூர்த்திகூடக் கண்ணால் ஏன் ? என்று கேட்க, சிவகாமியோ புன்னகையுடன் பிரியன் அறியாமல் கண்சிமிட்டினார்.

“என்னமா சொல்றீங்க ? தெளிவா பேசுங்க ?” எனப் பிரியன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டுத் தீவிரமாகக் கேட்க, சிவகாமி மேலும் மனதில் குதூகலத்துடன் விளையாட்டைத் தொடங்கினார்.

“ஆமாம் பா…மலரை உனக்குக் கட்டிவைக்கலாம்னு ஒரு எண்ணம். நான் அவளோட அபிப்ராயத்தைக் கேட்டேன்…உங்க அப்பாரு, சொந்தமானாலும் சரி அசல்னாலும் சரி சொல்லுன்னு கேட்டருப்பா…” எனப் புதிரிட்டார்.

“சொந்தம் வேண்டாம் மாமா அப்படினு எடுத்தெடுப்புல சொல்லிடுச்சு…சரி அந்தப் பிள்ளை கொடுத்து வச்சது அவ்ளோதான். எங்க போனாலும் போற இடத்துல சந்தோசமா இருக்கட்டுமே…என்ன நான் சொல்லுறது ?” எனச் சிவகாமி மகனின் முகத்தை ஆராய,

பிரியனோ எந்தவித பதிலும் பேசாமல் மௌனமானான்….

சொல்லிடு என்பதாகச் சத்தியமூர்த்திச் சமிஞை செய்ய, சிவகாமியோ பொறுங்க எனச் சமிஞை செய்தார்.

பிரியன் எதுவும் பேசவில்லை. எதுவும் தன்னைப் பாதிக்காதவனைப் போலச் சாப்பிட்டு எழுந்து சென்றுவிட்டான். அவன் சென்ற பிறகு, மனைவியிடம், “ஏன் இப்படிப் பண்ற ? அவன் எதாவது தப்பா புரிஞ்சுக்கப் போறான். ஒருவேளை அவன் மனசுல மலர் இல்லையோ ?” எனச் சந்தேகமாகக் கேட்க,

“நிச்சயமா மலர் இருக்காள். நம்மகிட்ட சொல்லாமல் அழுத்தமா இருக்கான். விடுங்க, அவனே வந்து சொல்லுவான். அப்போ நான் சொல்லுவேன், மடையா…உனக்கு பிடிச்சவளாத்தான் நான் உனக்குப் பேசிமுடிச்சிருக்கேன்னு…அப்போ அவன் முகத்துல வர சந்தோசத்தைப் பார்க்கணும்ங்க…

இப்பவே சொன்னால், அது அவ்ளோ சிறப்பா இருக்காது…எதுக்கும் கொஞ்சம் காக்க வச்சு கிடைக்கணும். அப்போதான் பொருளோ உறவோ அதோட அருமை புரியும்.

எனக்கு உறவோடு அருமை தாமதமா புரிஞ்சது போல” என உற்சாகமாக ஆரம்பித்தவர், இலேசாக உள்ளே போன குரலில் கூறினார்.

சத்யமூர்த்தியும், “சரி விடு…இப்ப வருத்தப்பட்டு ஆகுறது என்ன ? உன்னிஷ்டம் போலப் பண்ணு” எனச் சமாதானம் கூறி செல்ல, அவர்கள் அறியாமல் பிரியன் மலரை அடைய வேறு திட்டம் போட தொடங்கியிருந்தான்.

வேகமாக சென்றவன், தன் அறையில் சென்று முடங்கினான். நீண்ட நேரமாகியும் அவன் வெளிவரவே இல்லை. பிறகு வெளிவந்தவனிடம், பேச முயன்ற சிவகாமியை கடந்து, “அவசர வேலை…வந்து பார்த்துக்கலாம்” என சொல்லி சென்றான். 

இரெண்டே மணிநேரத்தில் வந்தவன், நேராக சிவகாமியிடம் சென்று, “மலர் எங்க மா ?” என கேட்க,

“மில்லு வர போயிருக்காள். எதோ கையெழுத்து வேணும்னு மேனேஜர் போன் போட்டிருந்தாரு” எனக் கூற,

“சரி” எனக் கூறியவன், விருட்டென்று அங்கிருந்து வேறு பேசாமல் சென்றுவிட்டான்.

சிவகாமி குறிப்பிட்டதைப் போலவே சில மணிநேரதத்தில் மலர் வீட்டிற்கு வந்தாள். வந்தவளின் முகத்தினில் குழப்பமும் அயர்ச்சியும் மேலோங்கி இருந்தது…

“என்னாச்சு டா?” எனச் சிவகாமி பரிவுடன் கேட்க, “எனக்குப் புரியல அத்த. எதையுமே நான் பார்த்துக்கிட்டது இல்ல. அப்பாவோட கணக்கு தொழில்னு ஒண்ணுமே புரியல. ஏதோ கணக்குல குளறுபடி இருக்குறது போலத் தெரியுது…

ஆனால் எல்லாத்துக்கும் காரணம் சரியா சொல்லுறாங்க.

அப்பாக்கு திடிர்னு இப்படி ஆகிட்டதனால இதையே காரணமாவச்சு நம்ம கூடத் தொழில் பண்றவங்க ஏமாத்துறாங்களோனு தோணுது…” எனக் குழம்பிய நிலையிலையே கூறினாள்.

“விடுடா…ரொம்பவும் குழப்பிக்காத…கல்யாணத்துக்குப் பிறகு எல்லாத்துலயும் பிரியன் உன்கூட நிப்பான். உனக்குக் கஷ்டமா இருந்தால், இனி போறப்ப அவனையும் கூட்டிட்டு போ. இதுக்கு எதுக்கு இவ்ளோ குளம்புற ?

மொதல்ல சாப்பிட வா” என அழைக்க,

“ஹ்ம்ம் பார்க்கலாம். நான் கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வந்து சாப்பிட்டுகிறேன். நீங்க போங்க அத்த…” எனக் கூறிவிட்டு தனது அரை நோக்கி சென்றாள்.

சின்னதாக ஒரு குளியலை போட்டவள், அடுத்த முறை இது போன்ற தொழில் சந்திப்புகளின் போது பிரியனை அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தாள். அதன் பின்பே சற்று ஆசுவாசமாகப் பனிமலரால் உணர முடிந்தது…

‘சரி சாப்பிட்டு வந்து இது பத்தி அவர்கிட்ட பேசலாம்’ என எண்ணமிட்டபடியே உணவு உண்ண சென்றாள். எத்தனை சொல்லியும் சிவகாமி பனிமலரை தானே பரிமாறிக்கொண்டு சாப்பிட அனுமதிக்கவே இல்லை. ஏதேதோ பேசி பேசி அவளைச் சற்றே கூடுதலாகச் சிவகாமி சாப்பிடவைத்தார்.

பனிமலரின் மனதிலோ, ‘தொழில்ல மட்டும் தான் ஏமாத்துறவங்க இருக்காங்க…அவுங்கள தான் சரியா கண்டுபிடிக்க முயற்சி பண்ணனும்.

சொந்தங்கள் எனக்குச் சரியா தான் அமைஞ்சிருக்கு’ என நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

ஆனால், அப்போது தெரியவில்லை…இன்னும் சற்று நேரத்தில் இந்த அமைதிக்கு நிரந்தர அஸ்தமனமென்று!

Advertisement