Advertisement

பகுதி – 3 
பார்த்திபனின் ஊருக்குள் அவனின் வண்டி நுழைந்தது.. ஊருக்குள் நுழைந்து சென்றுதான் சரக்கை குடோனில் இறக்கவேண்டும். குடோனை நோக்கி, வண்டிய செலுத்த, வழியில் பூவும் பட்டுமாக பெண்கள் கூட்டமாக நடந்து செல்ல, நாதஸ்வரம் மேலமென ஒரு கூட்டம் முன்னேறி சென்றது. 
“டேய் பூதம் என்னடா? நம்மவூருல விஷேசம் போல..பிரம்மாண்டமா ஊர்வலம் போகுது” என பார்த்திபன் கூட்டத்தை பார்த்தபடி வினவ, 
“அட இவனுங்க என்ன அம்பானியா? அரைடவுசர் பயலுங்க. 
நீ வேற பிரம்மாண்டம் பணியாரம்னு சொல்லிக்கிட்டு…” என கூறிய பூதம், கூட்டத்தை பார்த்தபடியே, “ஆனாலும் நம்மவூரு பொம்பளைங்க அம்புட்டு ஏதோ அதுங்களுக்கே கல்யாணமாட்டா பூ வைக்கிறதென புடவை கட்டறதென்ன..ஷப்பா இந்த கெழவிங்க தொல்லை தாங்க முடில பார்த்திபா” என முடியை பிய்த்து கொண்டு பூதம் கூற, பார்த்திபன் வாய் விட்டு சிரித்தான். 
ஊர்வலம் செல்வதால், வண்டி சற்று மெல்லமாகவே செல்ல, வேகமாக வண்டியின் முன் வந்து விழுந்தான் நண்டு என்ற நடராஜன்.
“அண்ணே அண்ணே வண்டிய நிறுத்துங்க” என கத்த, பார்த்திபன் சட்டென்று வண்டியின் பிரேக்கை அழுத்தினான்.
“அடேய் போண்டா தலையா…ஏண்டா இப்படி வந்து விழுகுறியே, வண்டிக்கு ஏதாச்சு ஆச்சுன்னா யாருடா பொறுப்பு?
அந்தச் சொட்டாமண்டைய ஓனர்க்கு எவன் பதில் சொல்றது” என ஏசிக்கொண்டே பூதம் லாரியிலிருந்து குதித்தான்.
“அண்ணே! நான் எதுக்கு வந்தேன்னு தெரிஞ்சா..தூக்கி வச்சு கொஞ்சுவீங்க” என நண்டு கூற,
பூதம் நடராஜனை கீழிருந்து மேலாக ஏற இறங்க பார்த்தபடி, “உன்ன ? கொஞ்சுறே ? அதுவும் தூக்கி… கொஞ்சுவே.. இருக்கட்டும் இருக்கட்டும்” எனக் கூற,
“சும்மா கிண்டல் அடிக்காதீங்க அண்ணே. பொறவு நட்டம் உங்களுக்குத் தான்.” எனத் தீவிரமாகக் கூறியபடி முறுக்கிக்கொள்ள,
“சரி சொல்றா நண்டு…கோச்சுக்காத”
“பத்து ஆடு உரிச்சு கறி கஞ்சி காச்சுராங்க.. பெரிய வாழை இலை கூட எடுத்து ஒளிச்சு வச்சிட்டு வந்துருக்கே… அதா கையோட கூப்பிட்டு போலாம்னு வந்தேன்” எனக் கூற,
நடராஜனின் தலையில் ஓங்கி கொட்டிய பூதம், “ஏண்டா நீ என்ன என்னானு நினச்ச ?
சரி அதவிடு, சோறு போடுறவன் இலை போடமாட்டானா ? அத எதுக்கு டா ஒளிச்சு வச்சிட்டு வந்த ?” என அடிக்க,
இவர்களின் கலாட்டாவில் தாமதம் ஆவதை உணர்ந்த பார்த்திபன், “வண்டில ஏறுறீங்களா ? விட்டுட்டு கிளப்பவா?” என அதட்ட, அடித்துப் பிடித்து இருவரும் வண்டியில் ஏறி அமர்ந்தனர்.
“நண்டு என்னடா விஷேசம்…யாரு வீட்ல?” எனப் பார்த்திபன் இப்போது வினவ,
“அத சொல்லத்தான் வந்தேன். உங்க அம்மா உங்கள கையோட கூட்டியார சொன்னாங்க” என நண்டு கூறினான்.
“லோட் இறக்கிட்டு வீட்டுக்கு தானே போறேன்…” எனப் பார்த்திபன் கூற,
“நீங்க எப்ப லோட் இறக்குறது? நான் எப்ப பந்திக்குப் போறது ?” என நண்டு வினவ,
“அடேய் இலை ஒளிச்சு வச்சவனே…அவன் வரதுக்கும் நீ கொட்டிக்கிறதுக்கும் என்ன சம்மந்தம்?” எனப் பூதம் வினவ,
“முகூர்த்த நேரத்துல தாலி கட்டுனா தான பந்தியில இலை போடுவாங்க…” என நண்டு கூற,
பார்த்திபனுக்கு எதுவா புரிவது போல் இருந்தது. லாரியின் வேகத்தை அதிகரிக்க, பார்த்திபனின் கைபேசி அலற தொடங்கியது.
கைபேசியில் வந்த தகவல், பார்த்திபனை தடுமாறச் செய்ய, அவனது வீடு இருக்கும் தெருவை நோக்கி வண்டியை விட்டான்.
“யாரு தாலி கட்டப்போறா?” எனப் பூதம் நடராஜனிடம் வினவ,
“நம்ம பார்த்திபா தான்…” என நண்டு சிரித்துக்கொண்டே கூற,
“யாருக்கு?” எனப் பற்களைக் கடித்தபடி பூதம் கேட்க,
“அம்சவேணி அண்ணிக்கு” என வெள்ளந்தியாகக் கூற,
“ஏண்டா பண்ணி? அந்த அம்சவேணி உனக்கு அண்ணியா ?” என வினவியபடி குனியவைத்து நடராஜனின் தலையில் கொட்டு கொட்டென்று கொட்டியபடி,
“ஏண்டா வந்தவுடனே கல்யாணம்னு சொல்லாம கறிக்கஞ்சினு சொல்லி நேரத்தை வீணடிக்கிற?” என வினவ,
“உங்களுக்குக் கறிக்கஞ்சிதானே புடிக்கும்… அதா சொன்னேன்…இப்படிலாம் என்ன அடிசீங்க…இனி சோறு போடுற இடத்தைக் காமிச்சு கொடுக்கமாட்டே…ஆமா…பார்த்துக்கோங்க” என நண்டு மிரட்ட,
பூதம் தலையைப் பிய்த்துக் கொண்டு நண்டை முறைக்க, “இரண்டு பேரும் வாய மூடுறீங்களா..” என அதட்டியபடி வேகமெடுத்தான் பார்த்திபன்.
***
“வாங்க மாப்பிள்ளை…வாங்க வாங்க…” என ஆர்ப்பாட்டமாய் வரவேற்தார் வேலுசாமி. குழப்பத்துடனும் கேள்வியுடனும் வண்டியிலிருந்து இறங்கிய பார்த்திபனை தான், வேலுச்சாமி அத்தனை ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்..
வண்டியிலிருந்து இறங்கிய பூதமும், நிலைமையை ஓரளவு யூகித்துக் கொண்டான்.
பார்த்திபனின் கண்கள் அவனுடைய வீட்டை கூர்மையாக அலசின. அந்த வீட்டின் முன்னிருந்த பகுதியில் சாமியான போடப்பட்டிருந்தது. அதுவொரு இரண்டு படுக்கை அறை கொண்ட சிறிய வீடு. ஆனால் சுற்றிலும் நிறையக் காலி இடம். அதில் ஆங்காகே சில பூச்செடிகளும் சில வீட்டு காய்கறிகளும் நடுவு செய்யப்பட்டிருந்தன.
ஆனால், பெரிதாகப் பராமரிப்பு இல்லை.. வீட்டின் முன் இரண்டு பெரிய பலகை கல் சற்று இடைவெளி விட்டு பதித்திருந்தனர். இந்த வீடு, பார்த்திபனின் தாய் வழி சொந்தத்தில் ஒருவர் வாடகைக்கு விட்டிருக்கிறார்… பார்த்திபனுடைய குடும்பத்தின் மீதிருக்கும் மரியாதை காரணமாகச் சொற்பமான வாடகையில் அந்த உறவினர் இந்த வீட்டை விட்டிருந்தார்…
நுழைவு வாயிலில் வாழை மரமும், மேல தாளமும், காலியிடத்தில் விரிக்கப்பட்டிருந்த கல்யாண ஜமுக்காலமும் அவர்கள் வீட்டினர் அனைவரும் இந்தத் திருமணத்திற்கு உடன் பட்டுவிட்டதை உறுதிப்படுத்த, வேலுசாமிக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த சூரியவர்மனின் மீது பார்த்திபனின் பார்வை பதிந்தது..
சூரியவர்மன், அங்கிருக்கும் ஒரு தனியார் வங்கியில் கிளார்க் போஸ்டில் பணிபுரிகிறான். இளங்கலை பட்டதாரி.. அரசு வங்கிக்குத் தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறான்.
பார்த்திபனுக்கும் சூரியவர்மனுக்கும் வித்தியாசம் ஏராளம்..பார்த்திபன் நம் என்றால் சூரியவர்மன் என் என்பான்.. பார்த்திபன் நாம் என்றால் சூரியவர்மன் நான் என்பான்..
ஆனால் அதேவேளையில், சூரியவர்மன் தனது குடும்பத்தை விட்டுத் தனிக்குடுத்தனம் செல்லவும் விரும்பவுமில்லை. அதற்கான காரணமும் சூரியவர்மனிடமிருந்தது..காரணங்கள் இல்லாமல் சூர்யா எதையும் செய்வதில்லை..
இதைப் புரிந்துகொள்ளும் அறிவு பார்த்திபனிடம் இருந்தாலும் ஒப்புக்கொள்ளும் நிலையில் அவன் மனமில்லை. பூதம் சில முறை எடுத்துரைக்க முயன்ற போதும் கூட, “விடுடா.. இப்படி அண்ணன் வீட்ல இருக்கனாலதான், நான் லோட் ஏத்த வாரக்கணக்கா போக முடியுது” எனச் சாதாரணமாகக் கூறி, கடந்து செல்வான்.
ஆனால் பூதத்தின் எண்ணம்…”நீ இப்படி இருக்கக் காரணமே உன்னோட அண்ணன் தாண்டா..” என்பதாகும்.
“என்ன அண்ணா இது?” எனப் பார்த்திபன், வேலுசாமியை மதிக்காமல் சூரியவர்மனிடம் வினவ,
“நீ பிடிகொடுக்கமாட்ட. அதா இந்த அவசர ஏற்பாடு… எப்படியும் உனக்கு கல்யாணம் பண்ணனும். அதை இப்ப பண்ணிக்கோ” எனக் கூசாமல் கூறினான் சூரியவர்மன்.
வேலுசாமியின் பணம், சூரியவர்மனின் பேராசைக்குத் தூபமிட்டிருந்தது..
“அவசர ஏற்பாடா? ஆனா ஏற்பாட பார்த்தா அவசரமா செஞ்சது போலத் தெரியலையே..” எனப் பார்த்திபன் மிகச் சரியாகக் கணித்துவிட,
“ஆறப்போட்டு செஞ்சிருந்தா என்ன? அவசரமா செஞ்சிருந்தா என்ன ? நீ வேட்டி சட்டையை மாட்டிட்டு மேடைக்கு வா..” என அவசரப்படுத்த, அவர்களின் வீட்டின் முன்னிருந்த காலி இடத்தினில் மன மேடை அமைக்கப்பட்டு ஓமகுண்டலத்தில் வேள்வி வளர்க்கப்பட்டுக்கொண்டிருந்தது.
“என்ன சூர்யா அண்ணா நீ? நம்ம பார்த்திபனுக்கு அந்தப் பொண்ணு சரிப்பட்டு வருமா ? எல்லா தெருஞ்சு ஏன்னா இப்படிப் பண்ற ? பெரிய படிப்பெல்லாம் படிச்சு பாங்க்கு வேளைக்குப் போற..” எனப் பூதம் யாரை கண்டும் அச்சம் கொண்டு பின்வாங்காமல் நேரடியாக வினவ,
“டேய்…லாரி கிளீனர்-ன லாரியை கழுவறதோட நிறுத்து…என்னோட புத்திய கழுவ நினைக்காத” எனச் சூரியவர்மன் கண்டிப்புடன் தோரணையாகக் கூற,
“இருந்தாதானே கழுவ…” என முணுமுணுத்தான் பூதம்.
“என்ன பெரிய மாப்பிள்ளை…? மாப்பிளையோடு பேச்சு ஒரு தினுசா இருக்கு… கூடப் பழகுற பழக்க சுத்தப்படல. நீங்க மாப்பிளையைக் கூப்பிட்டு போய் ரெடி பண்ணுங்க. தடுக்கக் குறுக்க யாரு வரான்னு நானு பாக்குறே..” எனப் பூதத்தைப் பார்த்தபடி மிரட்டலாக வேலுச்சாமி கூற,
வேலுச்சாமியின் ஆட்கள் பார்த்திபனை அழைத்துப் போக நெருங்க,
“குறுக்க இந்தப் பூதம் வந்தா?” எனப் பார்த்திபனை மறைத்தபடி நின்றான் பூதம்.
“குறுக்கப் பூதம் வந்தா போட்டுத்தள்ளிடுவோம்” என அதிலொருவன் மீசையை முறுக்கியபடி கூற,
“இதோபாரு…எனக்குப் பிரச்னை வந்தா ஒதுங்கி போவேன்…அதுவே என் நண்பனுக்கு ஒரு பிரச்சனை வந்தா…” என முடிக்காமல் அனைவரையும் பார்க்க,
வேலுச்சாமியின் ஆள் ஒருவன் அரிவாளை எடுத்தபடி, “நண்பனுக்குப் பிரச்சனை வந்தா ?” என மிரட்டல் குரலில் கேட்க,
“ஓடி போவேங்க அண்ணாச்சி…இதுக்கெல்லாமா அரிவால எடுப்பாங்க? உள்ள வைங்க உள்ள வைங்க” எனக் கூறியபடி முறுக்கிய அந்த ஆளின் மீசையைக் கீழ் இழுத்துச் சமாதானம் செய்தவன்,
“பார்த்து அண்ணாச்சி, அறுவா அண்டெர்கிரௌண்ட்ல பட்டு பதம்பாத்திர போது” என அவனின் பாணியில் நக்கலாக கூற, 
“என்னடா சொன்னா ? யாரடா பதம் பாத்திரும்னு சொல்லுற?” என மீண்டும் அந்த ஆள் குரல் உயர்த்த, 
“பாத்திரம்…கல்யாணத்துக்கு பாத்திரம் கொடுக்கலையானு சொன்னே அண்ணாச்சி…” என சமாளிக்க, 
“பத்திரமா இருந்துக்கோ…” என அந்த ஆள் மிரட்டிவிட்டு பார்த்திபனிடம் சென்று, 
“தம்பி புறப்படுங்க. ஐயா வீட்ல பொண்ணெடுக்க நீங்க புண்ணியம் பன்னிருக்கணும். மரியாதையா வந்தா நல்லது. கூட வாங்க” என அழைப்பா அதட்டலா என தெரியாத வகையில் பார்த்திபனை அழைக்க, 
அந்த த்வனியை பொறுக்காத பார்த்திபனோ, அந்த ஆள் கையினில் அரிவாள் இருந்ததையோ அவனின் பின்னால் பத்து பேர் நின்றதையோ சற்றும் இலட்சியம் செய்யாமல், ஓங்கி அறைந்திருந்தான்..
“இந்த மரியாதை போதுமா? பேசலாம்..ஆனா, யார்ட்ட பேசுறேன்னு தெருஞ்சுகிட்டு பேசணும்.
எதிர்ல நிக்கிறவ அடங்கிப் போவானா, அடிச்சிட்டு போவானானு தெருஞ்சுகிட்டு பேசணும். புருஞ்சுதா ?” எனக் கம்பீரமாக மிரட்ட, அவனுக்கு விழுந்த அடியில் அங்குச் சர்வமும் ஒடுங்கியது.
ஆம்! மேளம் தாளம் மட்டுமில்லாமல், சலசலத்துக்கொண்டிருந்த ஊர்ஜனங்களும், வாய் ஜம்பம் விட்ட வேலுச்சாமியின் ஆட்களுமென அனைவரும் கப் சிப்பென அடங்கிட, பூதம் பெருமூச்சு விட்டான்…
“அது. பார்த்திபனா கொக்கா ?” எனக் காலரை பின்னாடி இழுத்துவிட்டு கூற,
“எஸ்சுஸ்மீ … இப்போ பந்தி நடக்குமா நடக்காதா?” என நண்டு பஞ்ச பூதத்தின் கையைச் சுரண்ட,
“அடேய்… இங்க எவ்ளோ பெரிய டமால் டுமீல் நடந்துகிட்டு இருக்கு…உனக்கு பந்தி கேட்குதா பந்தி… ” என அருகேயிருந்த வாழைமரத்தை பிடுங்கி எடுக்கப் பூதம் முயன்றபடி,
“அவசரத்துக்கு இந்த மரம் கூடக் கோ-ஆப்பிரேட் பண்ணமாட்டீங்குதே. கையோட வரமாட்டீங்கித்தே…இதென்ன வாழைமரமா ஆலமரமா ? எதடா நட்டு வச்சுருக்கீங்க” எனப் புலம்பிக்கொண்டிருக்க,
“பார்த்திபா, முதல்ல உள்ள போ…இந்த கல்யாணம் நடக்கணும்” என உறுதியான குரலில் சூரியவர்மன் கூற,
“இதுல எனக்கு விருப்பமில்லைனா?” எனப் பார்த்திபன் திடமாகச் சூரியவர்மனை நோக்கி கேள்வி எழுப்ப, சூரியவர்மன் ஒரு நொடி தடுமாறினான்.
பார்த்திபனுக்கு எப்போதும் குடும்பம் தான் பிரதானம். அவர்கள் ஒரு முடிவெடுத்தால் ஏன் எதற்கென்று எப்போதும் கேட்கமாட்டான்…
ஆனால் இன்று நேரடியாக தன்னுடைய மறுப்பை கூற, அங்கு மீண்டும் நிசப்தம்..அந்த நிசப்தத்தை உடைத்தபடி ஒரு பெண் குரல் அப்போது ஒலித்தது..
“உன்னோட விருப்பம்னு எப்போ இருந்துப்பா யோசிக்க ஆரம்பிச்ச…” என அதிரடியாக வந்துநின்றார் தாமினி தேவி. பார்த்திபனின் தாய்…
பெரும்பாலும் கருத்து சொல்லமாட்டார். ஆனால் தாமினி அப்படிச் சொல்லும்பட்சத்தில் அவர் சொல் தான் அம்பலம் ஏறும். அவர்கள் வீடென்னும் அம்பலத்தில்!
அவருடைய கருத்தோ எப்போதும் மூத்த பிள்ளையின் கருத்தின் தழுவலாகவோ முடிவின் சாயலாகவோ தான் இருக்கும். மூன்று பிள்ளைகளைத் தனியாக நின்று வளர்ந்தவராதலால், அவரிடம் துணிச்சலும் சற்று அதிகம் தான்.
பிள்ளைகள் தோல் தாண்டி வளர்ந்த பின் பெரிதாக எந்த முடிவிலும் அவர் தலையிடுவதில்லை. எப்போதாவது தான் அவர் குரல் ஒலிக்கும். அந்த நொடி, அவரின் வார்த்தையைப் பிள்ளைகள் மீறமாட்டார்கள்…மற்றவர்கள் எப்படியோ, ஆனால் பார்த்திபன் மீறமாட்டான்.
அது அவர்களுக்குப் பயந்து அல்ல. கட்டுப்பட்டு!
குடும்பமென்ற கட்டமைப்பை மதிப்பவன். காலம்சென்ற பார்த்திபனின் தந்தை தர்மேந்திரனின் குணத்தை அச்சுப் பிறழாமல் பிரதிபலிப்பவன். தர்மேந்திரனின் மறு உருவமாய்ப் பிரதிபலிப்பாய் பார்த்திபன் வளர்ந்து வந்தான்…
ஆனால் இந்த முறை, சூரியவர்மனின் பேச்சிற்கு அவன் மனம் உடன்பட மறுத்தது.
நேரடியாகப் பேசிட, நிமிர்ந்த பார்வையுடன் நிதானமான நடையுடன் அதிகாரமாய்க் கேட்டபடி வந்தார் தாமினி தேவி!
“சொல்லுப்பா…உன்னோட விருப்பம்னு எப்போயிருந்து யோசிக்க ஆரம்பிச்ச?”
உன்னோட கல்யாணத்துல நீ மட்டும் யோசிக்கணுமா ? இல்ல உன்னோட அம்மா, நானும் யோசிக்கணுமா..இப்போ பதில் சொல்லு” என வந்து நிற்க, பார்த்திபன் மௌனமானான்…
அவரின் இந்தக் கேள்வியில் வேலுச்சாமியும், மணப்பெண் அலங்காரத்தில் அப்போது தான் வந்து நின்ற அம்சவேணியும் மிதப்பாகப் பார்க்க, பார்த்திபன் தாமணியின் வார்த்தையை மீறமுடியாமல், அவரின் வார்த்தைக்குப் பதில் சொல்ல முடியாமல், தடுமாறினான்..
“நான் அதிகம் பேசுறதில்ல. நீ மட்டும் யோசிச்சா போதுமா? இல்ல உன்னோட அம்மா நானும் யோசிக்கணுமா ?” எனக் குரலை உயர்த்தாமல் அழுத்தமாகத் தாமினி வினவ,
“நான் யோசிக்கணும்…பார்த்திபனோட பொண்டாட்டி நான் யோசிக்கணும்…” என அதிரடியாய் லாரியிலிருந்து இறங்கினாள், பனிமலர்!

Advertisement