Advertisement

“அப்போ கல்யாண பொண்ணு கோப படலாமா ? இந்தா குறிஞ்சி இவனை இரெண்டு அப்பு அப்பு…” எனக் குறுஞ்சியையும் சேர்த்துக்கொள்ள, நண்டு சுதாரித்து, “குறிஞ்சி அக்கா…நீங்க நல்லா அழகா இருக்கீங்க. மாப்பிள்ளை தான் கொஞ்சம் சுமார் ரகம்” என இராகம் பாட,

“ஆமா, நான் சுமார் ! நீ சூப்பர்விளக்குமாறு…. எட்டி மிதுச்சே பத்து ஊருக்குக் குட்டிக்கரணம் போடுவ. ஒழுங்கு மரியாதையா ஓடிரு” என நண்டுடன் பதிலுக்குப் பதில் வாயடைக்க, பூதத்தின் தாயார் அருகே வந்து,

“அடேய்..மாப்பிள்ளையா இலட்சணமா இரேண்டா” எனக் கண்டிக்க,

“அது யாரு இலட்சுமன் ? அவனும் மாப்பிள்ளையா ?” என எதிர்கேள்வி கேட்க, அவரோ தலையில் அடித்துக்கொண்டுச் செல்ல, பூதத்தின் திருமணம் அவனுடைய குணத்தைப் போன்றே கலகலப்பாக நிறைவு பெற்றது.

அங்கே அந்த இடத்தில் அத்தனை சந்தோசம்…ஆர்ப்பாட்டம்…நிரம்பி வழிந்தது. ஒருவழியாகக் கூட்டம் குறையத் தொடங்கிய நேரம், பிரியனின் வண்டி ஊருக்குள் நுழைந்தது.

பிரியனின் கையாள் ஒருவன் இறங்கி கடைவீதியில் விசாரிக்க, “பார்த்திபனா ?…நம்ம பூதத்துக்குக் கல்யாணம். மேற்காலச் சோத்துக்கை பக்கமா போங்க. கல்யாண வீட்ல இருப்பான்” என வழி கூற, கல்யாண வீட்டை நோக்கி பிரியன் வண்டியில் புறப்பட்டான்.

பிரியனின் வண்டி குறுஞ்சியின் வீட்டை நோக்கி முன்னேற, மணமக்களும் சற்று ஆசுவாசமாக அமர்ந்தனர். குறுஞ்சிக்கு முகமெல்லாம் வெயிலின் தாக்கத்தால் வேர்த்து கொட்ட, குறுஞ்சியைச் சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ளப் பனிமலர் அவளே, உள்ளே அழைத்துச் செல்ல, பூதமும் பார்த்திபனின் கையைப் பிடித்துத் தரதரவென அழைத்துச் சென்றான்.

குறுஞ்சியின் வீட்டின் கொல்லையில் இருந்த கிணற்றடிக்கு இழுத்து சென்றவன்,

“நண்பா முடில டா… ரொம்பக் காக்க வைக்காத” என மொட்டையாகக் கூறினான்.

“என்ன டா சொல்லுற ? யாரை காக்க வைக்கிறேன் ?” எனப் பார்த்திபன் முதலில் புரியாமல் வினவ,

“காதலை சீக்கிரம் சொல்லிடுடா…காக்க வைக்காத” என இப்பொது விளக்கமாகக் கூற,

“ஓ…மலரையா ?” எனச் சின்னச் சிரிப்பு பரவ வினவ,

“மலரையா ? மலரியாவையா-னு இப்ப கேளு…நான் என்னைச் சொன்னேன். என்னால உங்க காதல் கண்ணாமூச்சி தாங்க முடிலடா. என்னோட கண்ணாலத்துக்கு வந்துட்டு எல்லோரோட கண்ணும் உங்க மேலையே இருக்கு. ஒழுங்கா காதலை சொல்லிடு” என அழுதுகொண்டே கூற, பார்த்திபன் பெருங்குரலெடுத்துச் சிரித்தான்.

“காதலை சொல்லிட்டால் மட்டும் மத்தவங்க கண்ணு எங்கமேல படாதா ?” எனக் கேட்க,

“மொதல்ல உங்க கண்ணு இரண்டும் கத்திரிகோலு போலக் கவ்வுரத்தை விட்டாலே, மத்தவங்க பாக்குறதை விட்டுருவாங்க. காதல் சொல்றதுக்கு முன்னாடிதான் இந்தச் சைட்டிங் எல்லாம். “

“ஏண்டா ? காதலை சொன்ன பிறகு என்ன?”

“அப்போ சைட்டிங் இல்ல. பைட்டிங் மட்டும் தான்” எனக் கூறி நகைத்தான் , பூதம்!

சிரித்துக்கொண்டிருந்த பூதம் சட்டென்று சிரிப்பை நிறுத்திவிட்டு, சீறிய குரலில், “நண்பா…இதுவரை நான் சிரிப்பா பேசியிருந்தாலும் நீ சிறப்பா இருக்கணும்ங்கிறது தான் என் எண்ணம்.

சீக்கிரம் பனிமலர்கிட்ட காதலை சொல்லு. அதுக்கு அதுவே கட்டிகிட்ட தாலிய கழட்டிட்டு உன் கையாள கட்டு.

ஊருக்காக இருக்கப் புருஷங்கிற உறவை, உண்மையிலயே எடுத்துக்கோ நண்பா. பனிமலரும் உன்ன தான் நேசிக்கிது…அதுல உனக்குச் சந்தேகமே வேணாம்” எனத் தீவிரமாகக் கூற, பார்த்திபன் அமைதியாகக் கேட்டுக்கொண்டான்.

“நானும் சொல்லலாம்னு தாண்டா இருக்கேன். ஆனால் மலரு என்னைவிட எல்லாத்துலயும் உசத்தி…அதான் அப்ப அப்ப தயக்கம் வருது.”

“எப்போ ? எனக்குப் பிள்ளை பிறந்த பிறகா ? ஒழுங்கா போய்ச் சொல்லு. மலர் உனக்குத் தாண்டா பிறந்திருக்கு..இல்லாட்டி எதுக்குக் கல்யாணத்தன்னைக்கு ஓடிவரனும் ? உன்ன பார்க்கணும் ? உன் கல்யாணத்தை நிப்பாட்டி உன்னோட பொண்டாட்டின்னு உன் வாழ்க்கைல வரணும் ?

எல்லாமே ஆண்டவன் முடிச்சு. தயக்கத்தைத் தூக்கி போட்டு போய், காதல சொல்லி நிசத்துல கண்ணாலம் பண்ணி வாழ்க்கையைத் தொடங்கு நண்பா…போ போ” என விரட்ட,

பார்த்திபன் சிரிப்புடனே, “ஹ்ம்ம் சரிடா…இன்னைக்கு வீட்டுக்குப் போனதும் பேசிடறேன்” என உறுதியுடன் கூறினான்.

அன்றைய தினம் சிரிப்புடனும் சிறப்புடனும் முடிவடைந்தது…குறுஞ்சியைப் பூதத்தின் வீட்டிற்கு அழைத்து வந்து சடங்கு சம்பிரதாயங்கள் செய்து, குறுஞ்சியைப் பூதத்தின் அறைக்குள் விட இரவு பத்து ஆகியிருந்தது…

மிகுந்த ஆவலுடன் பூதம் அந்த அறைக்குள் நுழைந்தான். பூதத்தின் வீடுதான்…அது வெறும் ஒற்றை அறை கொண்ட வீடுதான். அந்த அறையையே அன்றைய சடங்குகென தயார் செய்து வைத்திருந்தனர். பணியார வியாபாரம் செய்ய வேயப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையில் பூதத்தின் தாய்த் தங்கிக்கொள்ள, முன்பே குறிஞ்சி அறையினுள் விடப்பட்டிருந்தாள்.

தழுவ தழுவ சேலையும், சரிய சரிய மல்லி பூவும் சூடி, வெக்கத்துடன் கவிழ்த்திருப்பாள் என்ற ஆசையுடன் மெல்ல பூதம் காலை தரையில் தேய்த்து தேய்த்து வெக்கப்பட்டான். பிறகு மெல்ல, தலையை நிமிர்த்திக் குறுஞ்சியைக் காண, அப்படியே அதிர்ந்தான்…

எது நிகழக்கூடாது என்று எண்ணியிருந்தானோ, அது அங்கு அரங்கேறியிருந்தது…

ஆம்! குறிஞ்சி, இளஞ்சிவப்பு இரவு உடையில் அமர்ந்திருந்தாள்…

“அதே பிங்க் நைட்டி…” என வாய்விட்டு அதிர்ச்சி விலகாமல் பூதம் உச்சரிக்க,

குறிஞ்சி, நிதானமாக, “என்ன ? நேத்து இன்னைக்குனு ஒரே வாய்யா இருக்கு உங்களுக்கு ?” என இலேசான முறைப்புடன் ஏறிட்டாள்.

“ஒரு வாய் தானமா இருக்கும் ? நீ என்ன ஒரே வாய்னு சொல்லுற ?” என லந்தடிக்க, மிக எதார்த்தமாக எழுந்து வந்த குறிஞ்சி, பூதத்தின் அருகே வந்து, அவன் காதை திருகி, “நான் பூசணிக்கவா ? நான் அண்டாவா ?” என முறைத்தபடி கேட்க,

பூதத்தின் கண் முன் அவன் கனவு பலிப்பதை போன்ற பிரம்மை ஏற்பட்டது. அடுத்துத் தோளில் குத்துவாளோ என்று சிந்தித்தபடியே,

“பஜ்ஜி என்ன ஏமாத்திட்ட ? அன்னைக்கு உன்கிட்ட பிங்க் நைட்டி இல்லனு சொன்னியே…” எனக் கேட்க,

“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே” எனக் கூறிக்கொண்டே பூதத்தின் தோளில் ஓங்கி ஒரு குத்துவிட்டாள்.

“ஐயோ அப்படியே நடக்குதே…” என முணுமுணுத்தவன்,

“ஐயோ குறிஞ்சி நான் உன்னைச் சொல்லலமா…எங்க பாயா சத்தியமா சொல்லலமா” எனக் கூற,

“அது ஆயா சத்தியம்” எனப் பற்களைக் கடித்தபடி கூற,

“இதெல்லாம் தெளிவா பேசு. இந்தக் கலர் நைட்டி இல்லனு தானே சொன்ன ? இப்போ எப்படி?” என மீண்டும் அதே கேள்வியைக் கேட்க,

“என் பிரண்ட் கல்யாணத்துக்குக் கிப்ட் கொடுத்தாள்” எனக் கூற,

“அந்தப் பிரண்டை நாய் பிராண்ட…ஏன் வாழ்க்கைல ஏன்மா விளையாண்ட? கொடுக்க வேற கிப்ட்டே கிடைக்கலையா ?” எனப் பெயர் தெரியாத அந்தத் தோழிக்குச் சாபம் கொடுத்து, முணுமுணுத்துக் கொண்டிருக்க, குறிஞ்சி மேற்கொண்டு அடிக்கத் துரத்த, பூதம் ஓட,

அவர்களின் இந்த அடிதடி, ஒருவழியாக அமர்த்தலாக அசத்தலாக அழகிய சங்கமத்தில் முடிந்தது.

  

பூதம் குறுஞ்சிக்கு இப்படியாகப் பொழுது கழிய, அதே நேரத்தில் மனதில் காதலுடனும் காதல் கொடுத்த உறுதியுடனும் பார்த்திபன் பனிமலரை காண அவர்களுடைய குடிலுக்குச் சென்றான்…

என்றுமில்லாமல் , இன்று அந்தக் குடிலை காணும் போது அவன் மனதில், ‘மலர் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இந்தப் பொய்க் குடிசை நிஜமான நம்ம வீடா மாறப் போகுது…நம்ம வாழ்க்கையை நம்ம இங்க தான் ஆரம்பிக்கப் போறோம்…’ என எண்ணமிட்டபடியே, இரெண்டு இரெண்டு படிகளாக ஆவலுடன் ஏற,

மலரோ, கல்யாணத்திற்கென்று அணிந்திருந்த உடையை மாற்றிவிட்டு, சாதாரண உடையில் குடிலுக்கு வெளியே வந்து கதவை சாற்றிக்கொண்டிருந்தாள்.

பனிமலர் எங்கையோ செல்வதை உணர்ந்தவன், “மலர் ? என்ன எங்க கிளம்பிட்ட ?” என எதார்த்தமாகப் பேச்சை தொடர,

“ஏன் ? உங்ககிட்ட சொல்லிட்டு தான் போகணுமா என்ன ?” எனப் பட்டென்று பதில் கொடுத்தாள் மலர்.

“என்னாச்சு ? எங்க போறேன்னு தானே கேட்டேன்.” எனப் பார்த்திபன் தன்மையாகவே கேட்க,

“கீழ, தாரா அக்கா கூடத் தூங்க போறேன். எனக்கு ரொம்ப அசதியா இருக்கு… போறேன்” எனப் பேச்சை கத்தரித்தாள். பார்வையையும் வேறு புறமாகத் திருப்பினாள்.

‘இவளுக்கு என்னாச்சு ? எப்பவும் நான் எப்ப வருவேன்னு ஏக்கத்தோட பாக்குற பனிமலரோட கண்ணு எங்க ? இவள் ஏன் என்னைப் பார்க்கவே மாட்டிங்கிறா ?’ என எண்ணமிட்டபடியே,

“சரி போகலாம்! இப்ப என்ன அவசரம்…கொஞ்சம் நேரம் பேசிட்டு போகலாமே ?” என மீண்டும் தொடங்கினான்.

“நமக்குள்ள பேச என்ன இருக்கு ?” என இம்முறை சற்றே வேகமாகவே கேட்டாள்.

இந்த முறை பார்த்திபன் பொறுமை காட்கவில்லை…

“நமக்குள்ள இப்ப பேச எதுவுமில்லைனு சொல்லவரியா ? இல்ல பேசுறதுக்கே அவசியமில்லன்னு சொல்லவரியா ?” எனப் பார்த்திபன் ஆராய்ச்சியுடன் அழுத்தமாகக் கேட்க,

“நீங்க படிக்காதவருனு சொன்னால் யாருமே நம்பமாட்டாங்க. ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் வச்சுப் பேசுறீங்க…இவ்ளோலாம் எனக்குப் பதில் சொல்ல தெரியாதுங்க…

நான் போறேன்” என அவனைக் கடந்து செல்ல முயல, சட்டென்று அவளுடைய வலது கரத்தை பற்றினான், பார்த்திபன்.

பார்த்திபனுக்குப் பனிமலரின் முகம் தெரியவில்லை…அவனுக்கு முதுகுகாட்டி நின்றிருந்தாள்…பார்த்திபன் அழுத்தமாகப் பற்றியிருக்க, பனிமலர் கண்கள் கலங்க தொடங்கின . அதை அவன் காணாமல் மறைத்தவள், அவனுடைய முகத்தைப் பார்க்காமலே, “எனக்கு உங்ககிட்ட பேச எதுவுமில்லைனு சொன்னது போலவே, நீங்க இப்படி என்கிட்ட பழகவும் எதுவுமில்லை பார்த்திபன்” எனத் தெளிவாக உச்சரித்தாள்.

Advertisement