Advertisement

பகுதி – 29

பார்த்திபன் அருகே நின்றிருக்க, பூதத்தின் வீட்டு பரணிலிருந்து எதையோ எடுக்க எட்டி எட்டி முயற்சி செய்த்துக்கொண்டிருந்தாள் மலர்!

ஆம்! அவ்விருவரும், அதாவது இருவர் மட்டும் பூதத்தின் வீட்டிற்கு வந்திருந்தனர். பூதத்தின் தாய் தான், குறுஞ்சிக்கு கொடுக்கவேண்டிய சீலையைப் பரணில் வைத்திருப்பதாகவும், அவசரத்தில் மறந்துவிட்டதாகவும் கூறி எடுத்து வரும்படியாகப் பார்த்திபன் பனிமலரிடம் கூறியிருந்தார்.

பார்த்திபன், பனிமலரிடம் தன்னுடைய எண்ணத்தைத் தெளிவு படுத்தவிருந்த சமயத்தில், அவர்களுக்கு நடுவே பூதத்தின் தாய் வந்திருந்தார்…

‘ “ஐயா பார்த்திபா, மலரு இங்கன தான் இருக்கீங்களா ? நான் ஒரு கூறுகெட்டவ, குறுஞ்சிக்கு சபைல கொடுக்குற நிச்சய சீலையை அங்கனவே வச்சுட்டு வந்துட்டேன்.

செத்த ரெண்டு பேரும் போய் எடுத்துட்டு வாரீங்களா ?” எனக் கேட்க, கணமும் தாமதிக்காமல் மலர், “எங்க அம்மா வச்சிருக்கீங்க ?” எனக் கேட்க,

“ஆளும்பேருமா இருக்காங்க ..சீலைல ஏதும் கொட்டிர கூடாது, கரப்பட்டிரா கூடாதுனு பரண்ல வச்சிருக்கேன் ஆத்தா…பாத்து எடுத்தாரியா…” எனக் கேட்க, சரியென்று இருவரும் கூறி வந்திருந்தனர்.

பரண் மீது நாளை திருமணத்திற்குக் கொண்டு போகவெனச் சில சீர்தட்டுகள் இருந்தன… பழம் மிட்டாய் மஞ்சள் இனிப்புகளென்று… அதிலொரு தட்டில் சீலையும் வைக்கப்பட்டிருந்தது…

சற்று உயரம் என்பதாலும், பார்த்திபனின் இடையைத் தாங்க கூடிய நாற்காலி எதுவும் பூதத்தின் வீட்டில் இல்லையென்பதால், பூதத்தின் தாய் ஏற்றிவைக்க உபயோகப்படுத்த இருந்த ஒற்றை நாற்காலியில் மலரை ஏற்றிவிட்டான்.

அது ஒரு கால் சற்று பலவீனமாகவே இருந்தது… மலர் அந்த நாற்காலியில் ஏறி எட்டி எட்டி அந்தத் தட்டை எடுக்கமுயன்ற போது, சட்டென்று நாற்காலி ஒருபுறமாகச் சாய்ந்திட, மலர் கீழேவிழ, பார்த்திபன் வேகத்தில் அந்தரத்திலிருந்தவளை தாங்கி பிடித்தான்…

அவளுடைய இடையைப் பார்த்திபனின் கரம் வெகு அழுத்தமாகப் பற்றியிருந்தது. இருவருக்கும் இடையே இடைவெளி ஏதுமில்லை… பார்த்திபனின் மூச்சுக்காற்று பனிமலரின் உடலில் உஷ்ணமாக இறங்கியது.

இதுவரை பார்வையில் மட்டும் அனுபவித்த போதையை, பார்த்திபன் நிஜத்தில் அனுபவிக்கத் தொடங்கினான்.

இனம்புறியாத மாற்றங்களை இருவருமே முதல் முறை அனுபவித்தனர். மலர் கண்களை இறுக மூடிக்கொண்டாள்…பார்த்திபன் அவளை அவனுள் இறுக்க பொத்திக்கொண்டான்…

இவள் என்னுடையவள் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழ வேரூன்றியது…இவன் மட்டுமே எனக்குச் சகலமும் என அவள் நெஞ்சில் உணர்வு பிறந்தது…

மெல்ல மெல்ல அவளை நேராக நிற்க வைத்த போதிலும், பார்த்திபனின் கரம் மலரின் இடையைவிட்டு அகல மறுக்க, மலரின் மனமும் பார்த்திபனின் பிடிக்குள்ளிருந்து வெளிவர பிரியமில்லாமல் ஒட்டிக்கொண்டது.

ஒரு பெண்ணின் மென்மையென்ன, ஓர் ஆணுடைய வலிமையென்ன என்று இருவரும் முதன் முதலாக உணர்ந்த கனமது!

பார்த்திபனை மலரின் மென்மைகள் கிரங்கடித்தன…மேற்கொண்டு முன்னேறு என அவன் கரம் துடித்த போதும், காதல் சொல்லென்று மனம் அடித்துக்கொண்டது…

காதலின்றி என் கைவளைவில் ஒருத்தி நிற்கமுடியுமா ? காதலின்றி எந்தப் பெண்ணும் இப்படி அனுமதிப்பாளா ? இதைப் பார்த்திபனின் அறிவு கேள்வி எழுப்பியது…

பார்த்திபனின் கரம் அவளுடைய இடையவிட்டு அகல அஞ்சின. ஆம்! அகன்றுவிட்டால், எங்கு அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி அவள் தேகத்தில் ஊர்வலம் சென்றுவிடுமோ என அஞ்சி, இடையிலையே அழுந்த பதிந்து கிடந்தது.

அப்படிப் பார்த்திபனின் கட்டுக்குள் மலர் இருந்த கணங்கள் நிமிடங்களில் இல்லை; நொடிகளில் தான்! ஆனால் அந்தச் சில நொடிகள், இதுவரை கண்டிராத ஆனந்தத்தையும் இதுவரை கொண்டிராத அவஸ்த்தையும் ஒருங்கே கொடுத்தது!!

பனிமழையும், தணல் நெருப்பும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி நெருங்கும் கனமாக இருந்தது…

மூடியிருந்த பனிமலரின் விழிகள் அங்குமிங்கும் அலைமோதின, இன்னமும் அவள் கண்திறந்து காணவில்லை…ஏனோ பார்த்திபன் அந்நொடி, மலரின் விழியைக் காண ஏங்கினான்….

ஒரே ஒருமுறை காதலுடன், நாணத்துடன், உரிமையுடன் பார்த்துவிடு! பார்த்துவிடு!! எனப் பார்த்திபனின் நெஞ்சம் பித்துக்கொண்டு அரற்ற தொடங்க,

அவசரமாக அவனுடைய மனதினில் தோன்றிய வார்த்தைகள்,

‘பனிமலரே பாராயோ பூவிழியாலே!’

வெகு அருகே மலரின் முகம்… பார்த்திபனின் மூச்சுக்காற்று அவள் கண்களில் பட்டு உஷ்ணத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது… 

பார்த்திபன் சொல்லாத வார்த்தைகளை, அவனுடைய மூச்சுக்காற்று முரசறிவித்து சொல்லியதோ ? மெல்ல இமை பிரித்தாள்… மெல்ல இதழும் பிரித்தாள்… 

பிரிந்த அவளுடைய இதழ்களை மீண்டும் மூடிவிட, பார்த்திபனின் இதழ்கள் துடிதுடித்தன.  அவனுடைய காதலை அர்த்தமுள்ள வார்த்தைகளாலும் சொல்லலாம் ஆழ்ந்த முத்தத்தாலும் சொல்லலாம்…

பிரிந்த அவளுடைய இதழ்களை, தன் இதழ்கொண்டு மூட பார்த்திபன் அவசரம்கொண்டான்…மென்மையாக, இதழ்வழியாக, மூச்சுக்காற்றுவழியாகத் தனது காதலை அவளுள் கடத்த உத்வேகம் கொண்டான்… பார்த்திபனின் காதலென்னும் காட்டாறு, பனிமலரின் இதழென்னும் சமுத்திரத்தில் சங்கமமாகத் துடிதுடித்த அந்த நொடிகள், சட்டென்று தட தடவென எழுந்த அவசர காலடி ஓசைகளிலும், ‘பார்த்தி அண்ணா , பார்த்தி அண்ணா’ என்ற அழைப்பிலும் கலைந்தது…

அவசரகதியில் வந்த அழைப்பில், சட்டென்று நிதானத்திற்கு வந்த இருவரும் ஓரடி, ஒரே அடி மட்டும் விலகி நின்றனர். அந்த ஓரடி இடைவெளியை கூட, அவர்களின் பார்வைகள் குறைக்க அதிவேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்க, கூச்சலிட்டுக்கொண்டே வந்த சிறுவன், பூதத்தின் தாயார் சீலையைக் கேட்டதாகக் கூற, அதற்கு மேல் தாமதிக்காமல் புடவையை எடுத்துக்கொண்டு கையோடு கிளம்பினர்.

அவர்கள் அந்த நிமிடங்களில் காதலை சொல்லியிருக்கலாம்… சொல்லவில்லையே என்ற மனநிலை இருவருக்கும் இருந்தது… அதிலும் பனிமலர் பார்த்திபனின் வார்த்தைக்காக ஏங்கவே தொடங்கிவிட்டாள். ஆனால், மறுநாள் இதே பனிமலர் காதல் சொல்லவில்லை என்பதே நல்லது என்று எண்ணம் கொள்ளும் அளவிற்குச் சம்பவங்கள் அரங்கேறவிருந்தது…

மறுநாள் தனக்கு வைத்திருக்கும் சோதனையை அறியாமல், நாணமும் காதலும் போட்டியிட, கன்னம் சிவக்க பார்த்திபனின் அருகாமையில் இதழ்களுக்குள் தனது மெல்லிய சிரிப்பை அடக்கியபடி விழா நோக்கி நடைபோட்டாள்.

பார்த்திபனின் மனமோ, ‘ச்ச…என்ன பண்ண போயிட்ட ? இன்னும் மலர்கிட்ட நீ எதுவுமே சொல்லவே இல்ல… தப்புப் பண்ணிட்டடா பார்த்தி… அவள் என்ன நினைப்பாளோ ?’ எனத் தனக்குத் தானே கொட்டு வைத்துக்கொள்ள,

மலரின் மனமோ, ‘நான் எப்படி அவர்கூட இப்படி நின்னேன்? அவரோட கைக்குள்ள நிக்குறப்ப என்னால எப்படி அந்த நிமிசத்தை இரசிக்க முடிஞ்சது ?

அந்த அளவுக்கு அவரை நெருக்கமா என்னோட மனசு உணர ஆரம்பிச்சிடுச்சா ? அவரு என்ன பத்தி என்ன நினைச்சிருப்பாரோ ? எதோ சொல்ல வந்தாரே ? ‘ இப்படியாகத் தனக்குள் எண்ணி சிரித்துக்கொண்டது.

திருமண விழா களைகட்டியது. ஆடம்பரமாக அங்கு எதுவுமில்லை…ஆனால் ஆனந்தத்திற்கு பஞ்சமில்லை…பார்த்திபனின் இரசனை பார்வையும் மலரின் நாண புன்னகையும் அங்கு நிறைந்திருந்தது. இவர்களுக்கு இடையே, பூதத்தின் சமாளிப்பு பார்வைகளும், குறிஞ்சியின் வெட்டவா குத்தவா என்ற மனநிலையும் ஒருபுறம் களைகட்டியது. 

அன்றைய இரவும், மறுநாள் காலையும் அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் மிக அழகாக நகர்ந்தது. காலை ஒன்பது மணிக்கு முஹூர்த்தம் என்று நிச்சயக்கப்பட்டிருந்ததால், தாலி பூட்டும் வைபோகத்திற்கு மிக உற்சாகமாக அனைவரும் தங்களை தயார் படுத்திக்கொண்டிருந்த அதே கணத்தில், பிரியனின் ஆள் அவசரமாக பிரியனிடம் ஓடி வந்தான்.

“அண்ணே! அவன் பேரு பார்த்திபன். அநேகமா அப்போ வண்டில பார்த்தவனாதான் இருக்கணும். ஏனா அன்னைக்குத் தான் வண்டி கை மாறியிருக்கு…” என அந்தக் கையாள் தகவல் கொடுக்க,

“அட்ரஸ் ?” என ஒற்றைக் கேள்வியோடு எதிரிலிருப்பவனை ஆராய்ந்தான் பிரியன்.

“இருக்கு அண்ணே…இங்க இருந்து இரண்டு அவரு (ஹௌர்). ஓங்கி அழுத்தினா நம்ம வண்டி அதுக்கு முன்னவே போய்டும்” எனக் கூற, பிரியன் தாமதிக்கவில்லை. உடனே புறப்பட்டான்!

பார்த்திபனிடம் ஏதோ ஒரு தகவல் இருக்கிறதென்ற யூகத்தில் தான் பிரியன் புறப்பட்டிருந்தான், ஆனால் பிரியனின் புதையலே பார்த்திபனிடம் இருக்கிறதென்று அவன் அக்கணம் வரை அறிந்திருக்கவில்லை.

மறுபுறமோ, பனிமலர் யாரிடமிருந்து ஒளிந்து மறைந்து ஓடி வந்தாளோ, அவனே தான் இருக்கும் இடத்திற்கு இன்னும் சிலமணி நேரங்களில் வரவிருப்பதை அறியாமல், குறுஞ்சியை மணப்பெண் கோலத்தில் தயார் செய்து கொண்டிருந்தாள்.

நேற்று பூதத்தின் வீட்டில் இருவரும் தனித்து இருந்ததைப் போன்று அடுத்து எந்தவொரு சந்தர்ப்பமும் அவர்களுக்குக் கிடைக்கவே இல்லை. பார்த்திபன் முழுக்கப் பூதத்துடனும் திருமண வேளையிலும் ஆழ்ந்துவிட, பார்த்திபனின் குடும்பமும் கூடத் திருமணத்தினில் இருந்ததால், பூவம்மாளுடனும் தாரா மற்றும் நித்யா கலாவுடனும் பனிமலர் தாங்கிக்கொள்ளவேண்டியதாகப் போயிற்று.

எப்போதடா தனியாகச் சந்திப்பாய் ? என்ற பெரும் கேள்வியுடனும் ஆசையுடனும் பேசப்போகும் தருணத்தைக் குறித்த எதிர்பார்ப்புடனும் சுற்றிக்கொண்டிருந்தாள்.

திருமணம் நேரம் நெருங்கியது… பூதத்தின் தங்கை ஸ்தானத்தில் மலர் நாத்தனார் முடிச்சு போட நின்றிருந்தாள். பஞ்ச பூதம் அனைவரும் சூழ குறுஞ்சியின் கழுத்தில் மங்கள நாண் பூட்ட, பார்த்திபன் கண்கள் முழுக்கப் பனிமலரின் மீதே நிலைத்திருந்தது…

அவனுடைய பார்வை கேள்வியாகப் பணிமலரை காண, அவளோ சம்மதமாக விழியால் பதில் கூற, இருவருக்கும் அங்கே வார்த்தைகள் தேவைப்படவில்லை!

இருவருடைய பார்வையும் முட்டி முட்டி மோதின. அந்த மோதலில், அவர்களுடைய தயக்கம் தகர்ந்துகொண்டே வந்தது…இருவருக்குள்ளும், தயக்கங்கள் தகர, காதல், பார்வை வழி கடக்க தொடங்க… இவர்களின் இந்த பார்வை பரிமாற்றம் அங்கிருந்த அனைவருடைய கண்ணையும் கவர்ந்தது…

அதிலும் சிலர், “இங்க பொண்ணு மாப்பிள்ளை யாருனே தெரியல” என சத்தமாக இலந்தடிக்க, 

பூதமோ, “கண்ணு தெரியாத கப்ஸா பசங்களா…எனக்கு தாண்டா கண்ணாலம்” என புலம்பிக்கொண்டிருந்தான். 

புலம்பிக்கொண்டிருந்தவன் அருகே வந்த நண்டோ, கையிலிருக்கும் காகித குவளையில் இருந்த தேநீரை உறுஞ்சியபடியே, “அண்ணே…சோடி பொருத்தம் செம தூள்.” எனக் கூற,

“நண்டு வாயா…இப்பதான் நீ உருப்படியா சொல்லிருக்க. நானும் குறிஞ்சியும் தானே ?” என ஆவலாகக் கேட்க,

“இல்ல அண்ணே! பார்த்தி அண்ணனும் பனிமலர் அக்காவும்”

“என்னடா சொன்ன உங்க அக்காமக்கா…காப்பியா குடிக்கிற காப்பி… இருடி உன் வாய உடைச்சு உப்புக்கண்டம் போடுறேன்” எனப் பூதம் கொந்தளிக்கவே தொடங்கிவிட்டான்.

“அண்ணே…கல்யாண மாப்பிள்ளை கோப படக்கூடாது…” என நண்டு சமாதானம் செய்ய,

Advertisement