Advertisement

பகுதி – 24
அங்குச் சூரியவர்மனுக்கு எதையும் விளக்கவேண்டிய அவசியமில்லாமல் போனது. தனக்கு ஆபத்தென்று வந்தவுடன் எங்கிருந்து வந்தான் எப்படி வந்தான் என்ற வேகத்தில் பார்த்திபன் வந்தான். இங்குப் பார்த்திபனின் செயலும், அதே போலப் பார்த்திபனை கைது செய்யும் சூழல் வந்ததும் ஆவேசமாக வந்து பேசிய பனிமலரின் செயலும் சூரியவர்மனுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தின.
ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்வதுதான் வாழ்க்கை என்ற நிதர்சனத்தைச் சூரியவர்மன் புரிந்துகொண்டான். அவன் தனக்கு மட்டும் சேமித்துச் சுகவாழ்வு வாழலாம் என எண்ணம் கொண்டு பணத்தைப் பார்த்திபனிடமிருந்து ஒளித்தான். ஆனால், பார்த்திபனோ பணத்தை விடப் பந்தமே சிறந்ததென்று கொள்கைகொண்டிருந்தான்…
இன்று பார்த்திபன் ஒரு நாள் சூரியவர்மனை போல் நடந்திருந்தால், நிச்சயமாகச் சூரியவர்மனுடைய பணிக்கும் ஆபத்து, அவனுடைய மரியாதைக்கும் ஆபத்து வந்திருக்கும்.
ஆக, வாழ்க்கையில் பாசத்தைவிடச் சிறந்தது ஏதுமில்லை என்ற உண்மையைக் குற்றஉணர்வுடன் தனது மனசாட்சியிடம் ஒப்புக்கொண்டான். சூரியவர்மனின் தாழ்ந்த தலை இப்பொது வரை நிமிரவே இல்லை. முன்பு, அவமானத்தால்…இப்போது குற்றஉணர்வால்…
“அண்ணே! விடு…போ இன்னும் ஏன் இங்க நிக்கிற ?” எனப் பார்த்திபன் சாதாரணமாக விரட்ட,
சட்டென்று தம்பியை அண்ணன் தாவி அணைத்துக்கொண்டான். சூரியவர்மன் இதுபோல் இதற்குமுன்னால் இப்படியொரு செய்கையைச் செய்ததில்லை…. அவனுடைய இந்த அன்பில், எந்தவொரு உள்நோக்கமும் இல்லை. பணம் காசு சொத்து என்ற எதனுடைய மதிப்பும் அறியாத சிறுவயதில் அவன் கொண்டிருந்த அதே நேசம் மீண்டும் சூரியவர்மன் இதயத்தில் துளிரிட தொடங்கியிருந்தது.
சூரியவர்மன் எதையும் பேசவேண்டிய அவசியம் அங்கு இருக்கவில்லை… அவனுடைய ஆத்மார்த்தமான அணைப்பே, பார்த்திபனுக்கு அண்ணனின் மனதை புரியவைத்தது.
பார்த்திபன் சந்தோஷத்தில் சிரிக்க,
“நம்மைப் போன்ற நெஞ்சம்கொண்ட அண்ணன் தம்பி யாருமில்லை” என்ற சினிமா பாடலை பாடியபடி பூதம் அவர்களைச் சுற்றி நடக்க,
“டேய்…போதும் போதும்…ஓவரா இலந்தடிக்காத…பிச்சிடுவேன்” எனச் சூரியவர்மனுக்கே உரிய மிடுக்குடன் சிரிப்பை மறைத்துக்கொண்டு பூதத்தை மிரட்டிவிட்டு,
“நான் உள்ள போறேன்…கூட்டமிருக்க நேரமிது! சாயங்காலம் வீட்டுக்கு வந்து பேசுறேன்” எனக் கூறி ஒரு தலை அசைப்புடன் சென்றவன், சற்றே நின்று திரும்பி பனிமலரை பார்த்தபடியே, “மலர தனியா அனுப்பாதடா… வீட்ல கொண்டு போய் விட்டு போ.” எனக் கூறி செல்ல, பனிமலருக்கு அத்தனை ஆனந்தம்.
அது அவளுக்காகச் சூரியவர்மன் கொண்ட அக்கறையினால் வந்ததில்லை. சூரியவர்மன் மெய்யான அன்பை புரிந்துகொண்டதனால் வந்த ஆனந்தம்…
சூரியவர்மனின் மாற்றம் பார்த்திபன் முகத்தில் அத்தனை பிரகாசத்தை ஏற்படுத்தியிருந்தது. பார்த்திபனின் முகத்தைப் பார்க்க பார்க்க, பனிமலருக்கு ஆனந்தத்தில் கண்ணீரே துளிர்த்தது.
ஆனந்தத்தில் துளிர்க்கும் கண்ணீர் விலைமதிப்பற்றது… எந்தவொரு விலைக்கொடுத்தும் ஆனந்தத்தை விலைக்கு வாங்க முடியாது.
சூரியவர்மனின் இந்த மாற்றத்திற்குப் பார்த்திபனின் அன்புதான் காரணமென்றாலும், இந்தத் தகவலை மலர் உரிய நேரத்தில் பார்த்திபனிடத்தில் சேர்த்திடாமல் இருந்திருந்தால் ? பார்த்திபனுக்குத் தகவலே கிட்டாமல் போயிருந்தால் ? பார்த்திபனின் அன்பை சூரியவர்மன் உணரும் சூழல் உருவாகியிருக்கச் சாத்தியமேயில்லை!
இதை மலர் உணர்ந்தாளோ என்னவோ, பார்த்திபன் மற்றும் பூதம் உணர்ந்திருந்தனர். பூவம்மாள் பாட்டி அங்குவரவில்லை. பெரிய தொகையைக் கையில் எடுத்துக்கொண்டு, கூட்டமும் கலவரமும் நிகழும் இடத்திற்குச் செல்லவேண்டாமென்று, அவர் சொசைட்டி அலுவகத்திலே அதன் அதிகாரி பக்கத்திலே பாதுகாப்பாக உக்கார்ந்துகொண்டார்.
அதற்குப் பூவம்மாள் பாட்டியின் சமயோசித சிந்தனையே காரணம்… பூதம் கூடச் சற்று தாமதித்தே வந்தான். பனிமலர் பேசும் தருவாயில் தான் அந்த இடத்திற்கே வந்து சேர்ந்திருந்தான்…
“என்ன நண்பா? உங்க அண்ணன் பாசத்தைப் புழியிறாரு ?” எனப் பார்த்திபனின் காதில் கிசுகிசுக்க,
“அவரென்ன முறுக்கு வியாபாரமா பண்ணுறாரு..புழிய ? போவியா அங்குட்டு” எனப் பூதத்தின் பாணியில், பார்த்திபன் முதல் முறையாகத் திருப்பிக்கொடுக்க, பூதம் வாயடைத்துப் போனான். மலர் மலர்ந்து சிரித்தாள்…
சிரிக்கும் மலரை நன்றியுடன் பார்த்த பார்த்திபன், அவளருகே சென்று, “அதே வார்த்தைதான், மறுபடியும் சொல்றேன்…நன்றி” எனக் கூற, பார்த்திபனின் இந்த வார்த்தைகளை உள்வாங்கிக்கொள்ளவே மலருக்கு சில கணங்கள் பிடித்தன.
‘என்ன வார்த்தை?’ என்ற சிந்தனை தான் அவளுடைய மனதினில் ஓடியது. பிறகே அது ‘நன்றி’ என்ற வார்த்தை எனப் பிடிபட மெல்ல யோசித்தாள்…
ஆம்! அன்று வேலுசாமியின் விஷயத்தில் நன்றி என்று சொன்னவன், மீண்டும் ஒருமுறை அவன் மிகுந்த சந்தோசத்துடன் நன்றி சொல்லும் தருணத்தை உருவாக்கியிருந்தாள், மலர்!
பார்த்திபன் பனிமலர் இருவரையும் இணைக்கத்தொடங்கியது ஒரு மெல்லிய உணர்வு. அந்த உணர்வின் பெயர் காதலென்று உணர்ந்தவன் பார்த்திபன் மட்டுமே….
உணர்வால் அருகிலிருந்த இருவரும், தற்சமயம் நிஜத்திலும் அருகிலே இருந்தனர். ஆம்! வெகு நெருக்கமாய் அக்கம் பக்கமாய் அமர்ந்திருந்தனர், பார்த்திபன் புதிதாக வாங்கியிருந்த லாரியில்!
லாரியை விற்றவர் பக்கத்து ஊர். பார்த்திபன் பணத்தைக் கொடுத்து எடுத்து வர செல்லும்போது, பூதம் தான் இந்த எண்ணத்தை விதைத்தான்.
“நண்பா… லாரி கைமாறுறப்ப பேப்பர்லாம் படிக்கணும்ல. நம்ம மலர் பிள்ளையைக் கூப்பிட்டு போவோம்” எனச் சொல்ல, பூவம்மாளும் இணைந்துகொண்டார்.
அதன்படியே மூவராகச் சென்றவர்கள், வண்டியை எடுத்துக்கொண்டு திரும்ப, வெயில் இறங்க தொடங்கியிருந்தது. பார்த்திபன் வண்டி ஓட்ட, அவனுக்கு அருகே பனிமலர், சற்றே இடம் விட்டுப் பூதம் என அமர்ந்திருக்க, அந்த நெடுஞ்சாலையில் வண்டி வேகமெடுத்தது. பார்த்திபனின் இருதயத் துடிப்பும் தான்!
வேகம் ! அத்தனை வேகம்! மலரின் அருகாமை, பார்த்திபனின் இருதயத்தை டாப் கியரில் வேகமெடுக்கவைத்தது…வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கிய அதே நேரத்தில், எங்கோ அருகே மழை பெய்துகொண்டிருப்பதை அவர்களை ஊடுருவி சென்ற ஈரக்காற்று நிரூபித்தது.
“எங்கோ மழையடிக்கிது போல… ஹ்ம்ம்ம்….. மண்வாசனை” என ஆழ்ந்த மூச்செடுத்து உள்வாங்கி மலர் கூற,
பார்த்திபனோ, மனதோடு, ‘மழைதான்…என்னோட மனசில’ எனப் பேசிக்கொண்டான்.
ஆனால் இவர்கள் பயணிக்கும் சாலையில் கனத்த மேகமுமில்லை, தூறலுமில்லை…. ஆனால் மழைக்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தது. அதுவொரு இதமான சீதோஷண நிலை. அதை மலர் இரசித்துக்கொண்டே வர, பார்த்திபன் அவளை ரசித்துகொண்டே வந்தான்.
பூதமோ, “மேகத்தை ஒடச்சிக்கிட்டு மழை கூட வந்திடும் போல. சிலர் மனச உடைச்சு பேசவே மாட்டாங்க மலரு” எனப் பார்த்திபனை குறித்து மலரிடம் பேசுவதைப் போலப் பேச,
“என்ன அண்ணா சொல்றீங்க? எதை உடைக்கணும் ?” எனக் கேட்க,
“என் மண்டையைதான்” எனப் பூதம் அவனுடைய பாணியில் பதில்கொடுக்க,
பூதம் அவ்வாறு சொன்னவுடன், “ஏங்க ஏங்க….சீக்கிரம் ஒரு கட்டைய தாங்க” எனப் பார்த்திபனின் கையைத் தட்டி மலர் உற்சாகமாகக் கேட்டாள், பூதத்தின் தலையை உடைக்க!
நீண்ட நாளுக்குப் பிறகு நிம்மதியையும் சந்தோஷத்தையும் ஒருங்கே கொண்ட மலரோ, பூதத்தோடு சிரித்துப் பேசிக்கொண்டே, பார்த்திபனின் கையைத் தட்டி தட்டி, “கொடுங்க! அண்ண மண்டைய உடைச்சிடுவோம்” என ஆர்ப்பரிக்க,
பார்த்திபனின் மனதில் காதல் துளிரிட தொடங்கியபின், அவளுடைய முதல் ஸ்பரிசம், அவளுடைய எதார்த்தமான தொடுகை, பார்த்திபனை கிறங்கடித்தது. அவளுடைய கரத்தையும் அவளையும் மாறி மாறி அவன் பார்க்க, அவன் பதிலளிக்காமல் அவன் பார்வை கொடுத்த பதிலில் என்ன கண்டுக்கொண்டாளோ, மலர் சட்டென்று உதடுகளைத் தவறு செய்தவளாய்க் கடித்துக்கொண்டே கைகளைச் சட்டென்று பின்னிழுக்க, சரியாக மிகச் சாரியாக அவர்களுடைய வண்டியில் அந்தப் பாடல் ஒலித்தது.
“ஏனடி இப்படி என்ன ஆக்குற….காதலை சட்டுனு கண்ணுல காட்டுற” என்ற சினிமா பாடல் பின்னணியில் பார்த்திபனுக்கென்றே ஆண்குரலில் ஒலிக்க, பார்த்திபன் மனம் பிரேக்கே இல்லாத வண்டியாகப் பறந்தது.
ஆனால், அந்தப் பயணத்தில், அவனுக்குத் துளியும் அச்சமில்லை. பதற்றமில்லை… அவனுடைய வாழ்க்கைக்கான கதவுகள் திறந்ததாகவும் புதிதாக இறெக்கைகள் முளைக்கப்பட்ட பறவை குஞ்சாகவுமே பார்த்திபன் மனம் பறந்தது….
அந்தப் பாடலின் ஒவ்வொரு வரிக்கும் ஆழ்ந்த அர்த்தம் உள்ளதாகப் பார்த்திபனின் காதல் நெஞ்சம் சொன்னது. முன்பே பலமுறை அப்பாடலை கேட்டிருந்தாலும், இன்று தான் வார்த்தைகளின் ஜாலம் புரிவதாகவும் வாழ்க்கையின் கோலம் உணர்வதாகவும் பிரம்மை கொண்டான். காதல் பிரம்மன் ஆனான்!
அவனுடைய இந்தப் பார்வை மாற்றத்தை மலரும் அந்நொடி முதல் முறையாக உணரத்தொடங்கினாள். ஏனோ மெல்லிய படபடப்பு…விவரிக்க முடியாத தவிப்பு…பார்த்திபனின் பார்வை அவளை ஆட்கொள்ள, ‘என்ன இது ? நமக்குத் தோணுறது நிஜமா ?’ எனத் தனக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டாள்.
இத்தனை நேரம் பேசிக்கொண்டே வந்த மலர், சட்டென்று மௌனமாகிவிடப் பூதமோ இருவரையும் ஓரக்கண்ணால் பார்த்தது பார்த்தபடி, “என்ஜின் ஸ்டார்ட் ஆகிடும்போல… மக்கு எஞ்சினா இருக்கே..மக்கர் பண்ணுமோனு நினைச்சேன்” என வாய்விட்டு சொல்ல,
சட்டென்று மலர், “அண்ணே வண்டி கண்டிஷன்ல தானே இருக்கு ? ஏன் அப்படிச் சொல்றீங்க ?” என லாரியை குறித்து விசாரிக்க,
“கிழிஞ்சது….இது ஸ்டார்ட் ஆகப் பலவருசம் ஆகும். பலாப்பழத்தை கூட உரிச்சிடலாம். ஆனா நீங்க உருப்பட மாடீங்க” எனப் புலம்பலாகக் கூறினான்.
“அடேய்…உளறாம வாடா…. வழியில ஜாமாகிருக்கு” எனப் பார்த்திபன் வாகன நெரிசலை சுட்டி காண்பித்து, வேகத்தைக் குறைக்க,
“ஆமா ஜாமாகிருக்கு, பிரெட்டை எடுத்து தொட்டு தின்னு” எனக் கடுப்புடன் கூறித் திரும்பிக்கொண்டான். பூதம் மனத்திற்குள்ளோ, “இதுங்களுக்குக் காதல் வரதுக்குள்ள நான் காலாவதி ஆகிடுவேன் போலவே….” எனப் புலம்பிக்கொண்டான்.
மலரும், பார்த்திபனின் பார்வையின் பொருளை மீண்டும் அசைபோட தொடங்கிய நிமிடத்தில் மீண்டும் அதைப் பின்னுக்குத் தள்ளும் சம்பவமொன்று அங்கு அரங்கேறியது.
அது பிரியன்!
ஆம்! சட்டென்று ஏற்பட்ட வாகன நெரிசலால் சாலையில் வாகனங்களின் வேகம் மந்தமெடுக்க, ஒரு சில வண்டி ஓட்டுனர்கள் இறங்கி இருப்புறமும் கையசைத்து வாகனங்களை ஒழுங்குபடுத்திப் பாதைகளை நெரிசலின்றிச் சரி செய்ய முயன்றுகொண்டிருக்க, ஒருபுறம் வாகனங்கள் சென்றுகொண்டும் , எதிர்திசையிலிருந்து மற்றொருபுறம் வாகனங்கள் வந்துகொண்டும் இருந்தன.
ஊர்ந்து ஊர்ந்து சென்ற பார்த்திபனின் வண்டிக்கு எதிர்திசையில் சற்றுத் தொலைவில், பிரியனின் வண்டி. அதாவது, பனிமலரின் தந்தை உபயோகித்துத் தற்சமயம் பிரியனின் கைவசமிருக்கும் அவர்களின் வண்டி மலரின் கண்களில் தப்பாமல் விழுந்துவிட, அந்த நொடி, அந்த வண்டியை பார்த்த அந்த நொடி முதலில் மலரின் நினைவடுக்குகளில் வந்ததென்னவோ, அவளுடைய தந்தையின் நினைவே….
அவரே, அவள் முன் அந்த வண்டியில் வந்து நிற்பதை போன்றதொரு பிரம்மை அவளிடம். மலரின் கண்கள் கலங்கின….அவளுடைய அப்பா இன்னமும் இருப்பதைப் போன்ற பிரம்மை ஒரு சில நொடிகள் மலரின் மனதை ஆட்கொள்ள, கண்கள் கலங்கி இமைவிலக்காமல் அந்த வண்டியையே பார்த்துக்கொண்டவளின் கண்களில் விழுந்ததோ, பிரியன் அவ்வண்டியில் அமர்ந்திருக்கும் காட்சி…
பிரியன், மலரை பார்க்கவில்லை. மலரை தான் அவன் தேடி அலைகிறானென்றாலும், பிற வாகனங்களில் தேடும் எண்ணம் கொண்டிருந்தானே ஒழிய, லாரியில் அதிலும் வண்டி ஓட்டுனரின் அருகே அவன் யூகித்திருக்கவும் சாத்தியம்மில்லை.
ஆகையால், பிரியனின் கண்கள் எதிர்திசையில் வாகன நெரிசலில் நின்றிருந்த அந்த லாரியின் மீது பதியவில்லை. ஒரு நொடி, ஒரு நொடி தான் பிரியனின் முகத்தை மலர் பார்தாளாகினும், பெரும் பதற்றம் அவளைத் தொற்றிக்கொண்டது.
மலரின் கரங்கள் நடுங்க தொடங்கின. சற்று முன் வீசிய மழைக்காற்று கூட அவளுடைய உடலை குளிர்விக்க முடியாமல் தோல்வியைத் தழுவிட, உடல் வேர்வையைச் சிந்த தொடங்கியது. பயமா பதற்றமா கோபமா என்னவென்று தெரியாத ஒரு நிலையில் இருப்புக்கொள்ளாமல் மலர் தடுமாற, அவள் முகமெங்கும் முத்து முத்தாக வேர்வை அரும்பத் தொடங்க, அவளுடைய இந்த மாற்றத்தை முதலில் கவனித்தவன் பார்த்திபனே!
”மலர்? என்னாச்சு ?” எனக் கேட்க, அப்போது தான் மலரின் முகத்தைப் பூதமும் கவனித்தான்.
இருவருடைய கேள்விக்கும் மலரிடம் இறுக்கமான மௌனம் மட்டுமே பதிலாய் கிடைக்க, மலர் சீட்டில் சாய்ந்து முகத்தை ஒருபுறமாகத் திருப்பி வெளி உலகத்திற்குக் காட்டாமல் எதிலிருந்தோ தப்பித்துச் செல்பவளை போல, எதிலிருந்தோ மறைந்து கொள்பவளை போல ஒழிந்து கொண்டாள். அவளுடைய செய்கை மற்ற இருவருக்கும் மிகவும் விசித்திரமாக இருக்கவே, பார்த்திபனும் பூதமும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டனர்.
மலரின் இந்த வெளிறிய முகம் பார்த்திபனுக்கு முதலில் குழப்பத்தைக் கொடுத்தாலும் சில நொடிகளில் வலியை கொடுத்தது. அதை அவனே சில நொடிகள் சென்றே உணர்ந்தான்.
அவனுடைய மனமோ, ‘நான் இருக்கும் போது, என்னோட மலர் பயப்படறதா ? கூடாது’ என ஸ்திரமான முடிவை கொண்டது.
என்ன செய்தாயினும் அக்கணம் அவளுடைய அந்தப் பயத்தை அடியோடு நீக்கவேண்டுமென்று முடிவு செய்தான்.
மிகவும் உறுதியான குரலில், “மலர் ? என்னாச்சுன்னு சொல்லு…எதுனாலும் நான் இருக்கேன். சொல்லு ஏன் பயப்படற ?” என மலரின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தபடி கேட்க, மலரோ பதிலளிக்காமல் இமை தாழ்த்த, அவளுடைய கண்களிலிருந்து ஒரு துளி நீர் அவளுடைய நடுங்கும் கரத்தில் வீழ்ந்து சிதறியது.
அந்த வீழ்ந்த கண்ணீர், அவளுடைய நடுங்கும் கரங்களைப் பார்த்திபனின் கண்களுக்குக் காண்பித்துக்கொடுக்க, நொடியும் தாமதிக்காமல் சட்டென்று பார்த்திபனின் வலிமையான கரம், அவளுடைய கரத்தை அழுத்தமாகப் பற்றியது….
முதல் ஸ்பரிசம்…பார்த்திபன், மலரின் கரத்தை தொடும் முதல் நிகழ்வு. அந்தத் தொடுதலில் காதலோ ஏக்கமோ பாசமோ ஏதுமில்லை. அந்தத் தொடுதல் மலருக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்றை தான்!
உரிமை! நானிருக்கிறேன்!! என்ற உரிமை மட்டுமே….
அந்த உரிமை எதனால் வந்ததென்று சிந்திக்கும் நிலையில் மலருமில்லை, பார்த்திபனுமில்லை! ஆனால், அவனுடைய கரங்களுக்குள் அடங்கியிருந்த மலரின் கரத்தில் மெல்ல மெல்ல நடுக்கம் குறைய, பார்த்திபன் ஒரு கரத்தால், ஸ்டியரிங்கையும் மறுகையால் மலரின் கரத்தையும் பற்றியிருக்க, வண்டி மெல்ல மெல்ல ஊர்ந்து முன்னேற, எதிர் திசையில் பிரியனின் வண்டியும் இவர்களை நோக்கி முன்னேற தொடங்கியது.
இரண்டு வண்டிகளுக்கு இருக்கும் இடைவேளை குறையக் குறைய மலரின் இருதயம் அதிவேகத்தில் அடித்துக்கொள்ளத் தொடங்க, கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று பார்த்திபனின் தோள்களில் சாய்ந்தபடி அவளுடைய முகத்தை முழுமையாக மறைத்துக்கொண்டாள்….
சட்டென்று அவள் ஒழிய, பிரியனின் கண்களும் மிகச் சரியாகப் பார்த்திபனின் வண்டியை கவனித்துவிட்டிருந்தது….

Advertisement