Advertisement

மறுநாள் காலையில்தான் சொசைட்டியிலிருந்து பணம் வருவதாக இருந்தது… சற்றே பெரிய தொகை என்பதால், அன்று வரும்படியாகக் கூறினார்கள்.
பார்த்திபனை வேறுபுரம் திசைதிருப்பிவிட்டு, பாட்டி, பனிமலர் பூதம் என மூவரும் சொசைட்டி நோக்கி புறப்பட்டிருந்தனர். அங்குச் செல்கின்ற வழியில் தான், சூரிய வர்மன் பணிபுரியும் வங்கியும் இருப்பதால், சூரிய வர்மன் அறியாமல் செல்லவேண்டுமென்று பிரயத்தனம் செய்து சென்ற மூவரும், அந்தோ இந்தோவென மூணுமணிநேர போராட்டத்திற்குப் பிறகு பணத்தைப் பெற்றுக்கொண்டனர்.
பணத்தை வாங்கியதும், பனிமலரின் கண்களில் அத்தனை மகிழ்ச்சி…. அதே மகிழ்ச்சியுடன், பூதம் மற்றும் பூவம்மாள் பாட்டியிடம் அதை அப்படியே ஒப்படைத்தவள், “பாட்டி நான் வீட்டுக்கு கிளம்புறேன். நான் வந்துருக்குறது அவருக்குத் தெரிஞ்சால் சந்தேகம் வரும்… நீங்க அவரை வர சொல்லி கையோட கொடுத்திருங்க” எனக் கூற,
“சரி மா… அவனும் பதினஞ்சு நிமிசத்துல வந்துருவான்… நீ சூதானமா போ” எனக் கூற, வேக வேகமாக அந்த இடத்தைவிட்டு வெளியேறி நடந்து வந்து கொண்டிருக்க, அங்கே அவளே எதிர்பாராத சூழல் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது…
சூரியவர்மன் வேலை பார்க்கும் அலுவகத்தின் வாயிலில் ஒருவன் சூரியவர்மனின் சட்டையைப் பிடித்து இழுத்துக்கொண்டிருக்க அங்கு வெகு ஜனங்கள் கூடியிருக்க, சூரிய வர்மன் வெளிறிய முகத்துடன் எத்தையோ கூற முயன்றுகொண்டிருந்தான்.
ஆனால், அந்தக் கூட்டத்திலும் கூச்சலிலும் அவனுடைய குரல் எங்கும் கேட்கவில்லை…
அந்தச் சூழலின் காரணம் இது தான்….
வங்கியில் பணத்தைப் போட வந்த ஒருவரின் பணத்தை வாங்கிக்கொண்டு, சூரியவர்மன் இல்லை என்று சொல்கிறான் என்பதே குற்றச்சாட்டு. வார்த்தையில் தொடங்கிய அந்த வாங்கி வாடிக்கையாளர், கைகலப்பில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார்…
இப்போது அந்த வாடிக்கையாளரின் குரல் ஓங்கி ஒலித்தது.
“யோவ் என்னய்யா பாங்க் நடத்துறீங்க? பத்தாயிரம் ரூபா சுளையா கொடுத்தேன். வாங்கி அவன் சோப்புல போட்டுக்கிட்டு எனக்குச் சோப்பு போட பாக்குறான்… இன்னைக்கு அவனைச் சும்மாவிடமாட்டேன்” எனச் சத்தத்தின் உச்சத்தில் கத்திக்கொண்டிருந்தனர்.
வாங்கி ஊழியர்கள் சிலர், “போலீசுக்குச் சொல்லிடலாம். அடிதடி ஆகிடும் போல” எனக் கூற, “பாங்க் பேரு கெட்டு போய்டும். இவரை வேலையைவிட்டு தான் மானேஜர் அனுப்புவார் நினைக்கிறேன்” எனக் கூறிக்கொண்டிருக்க,
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர், காவல் நிலையத்திற்குத் தகவலையும் சொல்லிவிட்டிருக்க, மலர் சுதாரித்தாள்.
அவளிடம் கைபேசி இல்லாததனால், மீண்டுமாகச் சொசைட்டி நோக்கி ஓட்டினாள்.
இவள் ஓடிவருவதை அப்போது தான் சொசைட்டிக்கு மாற்று வழியில் வந்து சேர்ந்திருந்த பார்த்திபன் பார்த்துவிட்டு, என்ன ஏதேன்று விசாரிக்க, பார்த்திபன் கணமும் தாமதிக்காமல் ஓடினான்.
அவனுடைய அந்தப் பதற்றத்தில், பனிமலர் ஏன் வங்கிக்கு போனாள் ? எவ்வாறு தன்னைத் தேடி சொசைட்டிக்கு வந்தாள் ? என்ற சிந்தனையும் அவனுள் எழவில்லை. அவன் கண் முன் பிரதானமாக நின்றது என்னவோ, சூரியவர்மனின் நிலையே!
ஆக, ஓடினான். அடுத்த இரெண்டே நிமிடத்தில் சம்பவம் நிகழ்கின்ற இடத்தை அடைந்தவன், ஒரு நொடிகூடத் தாமதிக்கவில்லை. கூட்டத்தை விலக்கிவிட்டு விறுவிறுவென்று நடந்தவன், சூரியவர்மனின் சட்டையைப் பிடித்திருந்தவனின் தலை முடியை கொத்தாகப் பற்றினான்.
அந்த வாங்கி வாடிக்கையாளன் சுதாரிக்கும் முன்னரே பட் பட்டென்று அடிவாங்குபவன் அலறும் வரை அடித்துக்கொண்டே இருந்தான் பார்த்திபன். அவனுடைய இந்த ஆவேசமான செயலில், அதைப் பார்த்துக்கொண்டிருந்த பனிமலர் இருதயம் திக் திக்கென்று துடிக்கத் தொடங்கியது…
“இவருக்கு இவ்ளோ கோபம் வருமா? நான் என்னென்னெவோ செஞ்ச போதெல்லாம் இவர் இப்படியொரு கோபத்தைக் காண்மிச்சதே இல்லையே ?” என எண்ணமிட்டு வாயடைத்து போனாள்.
“எப்பா? பார்த்தி விடுப்பா” எனப் பார்த்திபனை கூட்டத்திலிருந்தவர்கள் சொல்லி சொல்லி விலக்க முறைப்படப் போது, கிடைத்த ஒரு நொடி இடைவேளையில் அந்த வங்கி வாடிக்கையாளன்,
“என்னங்க அநியாயமா இருக்கு? இந்தப் பாங்குக்குப் பணம் போட வந்தால், ஒருத்தன் காச சுருட்டிக்கிட்டு நாமம் போடறான். ஒருத்தன் கேள்விகேட்டால் அடிக்கிறான்…
நான் உழைச்சு சம்பாதிச்ச காசுங்க . அண்ணன் காரன் நான் பணமே கொண்டு வரல, கொடுக்கலைனு சொல்றான். தம்பிகிறான் கொலையே பனிடுவான் போல. இந்தப் பாங்குக்கு வந்து பணத்துக்குப் பணமும் என்னோட மானமும் போச்சு..
இவனுங்க அடிச்சு என் உசுரையும் போக்கிடுவானுங்க போல.” என அவன் புலம்பத் தொடங்க,
கூட்டத்தில் ஒருவன், “நிஜமாவே பணம் கொடுத்தியப்பா ?” எனக் கேட்க,
“அட நான் ஏன் போய்ச் சொல்லணும்? இந்தா முக்குல இருக்குற ஏடிஎம்ல இருந்து தான் எடுத்தேன்…செத்த நேரம் முன்னாடி தான் எடுத்து வேற ஒருத்தருக்குப் பணம் போட போனேன். சுளையா பத்தாயிரம்” என அவன் உறுதியாகக் கூற, ஊர் மக்களின் பார்வை சூரியவர்மனை சந்தேகமாகப் பார்க்க, பனிமலரின் கண்களோ அந்த ஏடிஎம்மை பார்த்தன.
அப்படி அவள் பார்த்ததுக்குக் காரணமும் இருந்தன. ஏனென்றால் காலையில் இதே வழியில் செல்கையில், அந்த ஏடிஎம் பழுது என எழுதி போட்டிருந்ததைக் கவனித்திருந்தாள். என்ன, அது ஆங்கிலத்தில் எழுதியிருந்தது…தமிழில் அல்லாமல்!
ஆதலால் ஒரு சிலர் சென்று முயன்றுவிட்டு வெளியேறினர். இந்த வாடிக்கையாளன் அதிலிருந்து பணம் எடுத்ததாகக் கூறவும், ஒருவேளை அதைப் பழுது பார்த்துவிட்டார்களோ என எண்ணியே பார்க்க, இல்லை! அந்த ஏடிஎம் பழுது பார்க்கவிடவில்லை. தொங்கவிட்டுருந்த அந்தப் பலகை இன்னமும் அதே இடத்தில் இருந்தது….
ஆக, இந்த வாடிக்கையாளன் சொல்வது பொய்யென்று நிமிடத்தில் கண்டுகொண்டவள், அதை அனைவர் முன்னிலையிலும் பகிரங்க படுத்த, பார்த்திபன் கேள்வியாகப் பனிமலரை கண்டான்…
அவனுடைய பார்வை, “நிஜமா ?” எனக் கேட்க, ஆம் என இமைகள் அசைத்து பனிமலர் பதிலளித்தாள்.
“பணம் வராத மெஷின்ல இருந்து எடுத்த பணத்தை நீ எங்க அண்ணன்கிட்ட கொடுத்தியா? சொல்லுடா சொல்லு” எனக் கேள்வியைக் கேட்டுக்கொண்டே, பதிலே அவனைச் செல்லவிடாமல் அடி அடியென அடித்துத் துவைக்க,
பொய்யாகப் பழியைப் போட்டவன் கன்னம் பழுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
“யோவ் விடுறா…சொல்லிடறேன். என்ன சாவடிச்சிடாதா” என வலியின் உச்சத்தில் கத்தினான் அவன்.
“ஆமா! பொய்தான் சொன்னேன். ஆனால் , நானா பண்ணல. வேலுசாமி ஐயாதான் பண்ண சொன்னாரு…உங்க அண்ணே அவரை ஏமாத்திட்டானாம். அதுக்குத் தான் இது….
என்ன அடிச்சதுக்கு உன்ன சும்மாவிடமாட்டான் பாரு டா” எனக் கோபத்திலும் அடி வாங்கிய இயலாமையிலும் கன்னத்தைத் தாங்கியபடி பேச,
சரியாக அங்குக் காவல் வண்டி வந்தது….
வேகமாக அடிவாங்கியவன் காவலரை நோக்கி சென்றவன், “காப்பாத்துங்க காப்பாத்துங்க” என அலறினான்.
அவன் பார்த்திபன் மீது புகார் வாசிக்க, பார்த்திபன் கைதாவது உறுதி என்ற கட்டத்தில், அங்குப் பனிமலர் தலையிட்டாள்.
“நீங்க இவரை அந்த ஆள அடிச்சதுக்காகக் கண்டிப்பா அர்ரெஸ்ட் பண்ணிக்கோங்க. ஆனால், அதே சமயத்தில, அந்த ஆளையும் கைது பண்ணுங்க…ஏனா பணமே கொண்டு வராம போர்ஜெரி பண்ணி, ஒரு பேங்க் ஸ்டாப்- அ அசிங்கப்படுத்திச் சட்டைல கைவெச்சு கைகலப்பாகிடுக்கு….
அதுக்கு இந்த ஆளையும் கைது பண்ணுங்க. பொய், பணம் மோசடி, கைகலப்பு, மாநஷ்டம்னு எல்லாச் செக்க்ஷன்லேயும் போடுங்க. எங்க மாமாவை (சூரிய வர்மன்) நான் புகார் கொடுக்கச் சொல்லுறேன்” எனத் துணிச்சலுடன் பேச,
“நீ யாரு மா இவனுக்கு?” எனப் பார்த்திபனை சுட்டி காண்பித்துக் கேட்க, அவளுள் ஒரு நொடி தயக்கம்…. ஒரு நொடி பதற்றம்… ஒரு நொடி படபடப்பு….
அன்று ஊரை கூட்டி என் கணவர் எனச் சப்தமாகச் சொன்னவள், இன்று அதே வார்த்தைகளைச் சிறு தடுமாற்றத்துடனும் தயக்கத்துடனும் கூறினாள்…
“அவரு…அவரு என்னோட….என்னோட புருஷன்” என்ற வார்த்தைகளை அவளுடைய உதடுகள் பெரும் பிரயத்தனம் செய்து நடுக்கத்துடன் கூற, அவள் அப்படிக் கூறிய அந்த நொடியில் பார்த்திபன் சட்டென்று அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
அவ்வாறு பார்த்தவன் தான், அடுத்து அவனுடைய விழிகள் அவனைக் கணவனென்று உச்சரித்த உதடுகளை விட்டு அகலவே இல்லை…..
சில நொடிகளில் தன்னை மீட்டுக்கொண்டவன், பனிமலருடன் இணைந்து நிலைமையைக் கையிலெடுத்தான்… புகார் கொடுக்கவிருந்தவனே அஞ்சி புகார் அளிக்காமல் அவசரமாக அந்த இடத்தைக் காலி பண்ண, நிலைமை பார்த்திபனுக்கு சாதகமானது….சூரியவர்மனிடம் மற்ற வங்கி பணியாளர்கள் தேவைப்பட்ட நேரத்தில் உதவாமல் போனதை எண்ணி மன்னிப்பை வேண்ட, மக்களோ தங்களுக்குள், “ஜமீன் குடும்பம் அடுத்தவன் உழைப்பை திருடாதுப்பா…அவன் சொல்லுறான்னு நாமளும் சட்டேன்னு சதேகப்பட்டுட்டோம்” என தங்களுக்குள் முணுமுணுத்தபடி களைந்து செல்ல, ஊர்காரர்களின் பேச்சில், சூரியவர்மன் பெரிதாக அடிவாங்கினான். 
அவனுடைய மனமே அவனை கேள்வி கேட்க தொடங்கியது….
‘இத்தனை நாள் சொந்த தம்பியவே முன்னேறவிடாம சுயநலமா இருந்துருக்கியே? இதுதான் உன்னோட குடும்பத்துக்கு அழகா ?’ என்ற கேள்வியை அவன் மனசாட்சி எழுப்ப, பார்த்திபன காணமுடியாமல் தலை கவிழ்ந்தான் சூர்ய வர்மன்….

Advertisement