Advertisement

பகுதி – 23
பழைய லாரி ஒன்றை இரண்டாவதாக வாங்குவதென்ற முடிவில் அதற்கான அனைத்து ஏற்பாடையும் தொடங்கியிருந்தான். ஆம்! பார்த்திபனை பூதம் தனது வழிக்குக் கொண்டு வந்திருந்தான்…
“நண்பா இந்தப் பூதம் உசுரோட இருக்குறதும் பூச்சி மருந்து குடிச்சுச் சாகுறதும் உன் கைல தான் இருக்கு…” எனப் பார்த்திபனை மிரட்ட,
“என் கைலையா?” எனக் கேள்வியாகப் பார்த்திபன் நக்கலுடன் தன்னுடைய வெறும் கையை விரித்துக் காண்பிக்க,
“சரி உன் கைல இல்ல…என் கைலதான் பூச்சி மருந்து இருக்கு…. ” என அசட்டு சிரிப்புடன் பார்த்திபனை மிரட்டிக்கொண்டிருந்தான்.
“என்னடா விளையாட்டு இது?” எனப் பூதத்தின் பேச்சை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு பார்த்திபன் கேட்க,
“டேய்… நான் நிசமாதான் சொல்லுறேன். இதோ பாரு…ஒரிஜினல் விஷம். எஸ்பிரெஸ் தேதி கூடப் பார்த்து வாங்குனேன் நண்பா” என எஸ்பியரி தேதியை சுட்டி காண்பித்துக் கூற,
பார்த்திபன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“ஏண்டா சிரிக்கிற? என் சாவு உனக்குச் சந்தோசமா ?” எனப் பூதம் ரோஷமாக முறுக்கி கொள்ள,
“ஏண்டா குடிக்கப் போறது விஷம்? அதுக்கு எதுக்குத் தேதிலாம் பார்த்து வாங்குற ?” எனச் சிரிப்புடன் கேட்க,
“ஆமாம், தேதி முடிஞ்சு போச்சுன்னா விஷம் வேலை செய்யாதுல” எனப் பூதம் அப்பாவியாகக் கூற, பார்த்திபன் மற்ற அனைத்து கவலையும் மறந்து விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்.
‘நண்பன் விழுந்துட்டான்…காமெடியா பேசி கவுத்துருடா பூதம்’ எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டே, சிரிப்பிலிருந்து சீரிய பேச்சிற்குத் தாவினான் பூதம்.
“நண்பா…தங்கச்சி சொன்னதை யோசிச்சு பாரு… நான் லோன் கிடைக்கிற வழிய தேடுறேன். ஆத்தாகிட்ட பணியார கடை மெய்ன்ல போட கொஞ்சம் காசு இருக்கு…
அது கொசுறு போலத்தான்… இருந்தாலும் நானும் என்னால முடிஞ்சத பண்றேன். பூவம்மா பாட்டி ஜாமீன் கையெழுத்து போடும் .
நீ செகண்ட்ஸ்ல ஒரு வண்டியை புடி” என நிதானமாகப் பேச தொடங்கினான்.
பூதம் பேச பேச, பார்த்திபனுக்கு ஒரு பிடிமானம் வந்தது….
இங்கு நாயகன் பார்த்திபனா பூதமா என்பதில்லை…இங்கு நாயகன் அவர்களின் நட்பு… சில நேரங்களில் மனிதர்களை விட, மனிதர்கள் கொண்டுள்ள உறவுகளே பெரும் பங்களிப்பை கொடுக்கும்.
இப்படித்தான் பூதம் பார்த்திபனின் மனதை கரைத்திருந்தான்…அப்படி சொல்வதைவிட நாங்கள் இருக்கின்றோம் என்ற உணர்வை கொடுத்திருந்தான். இந்தத் திட்டத்தின் முதுகெழும்பு பனிமலர் தான் என்றாலும், முதுகுக்குப் பின் இருப்பது முன்னால் நிர்ப்பவனுக்கு எப்படித் தெரியாதோ அப்படியே பார்த்திபனுக்குப் பனிமலரின் எண்ணம் புரியவில்லை.
அவளுடைய நகைகள் தான் வண்டி வாங்க மூலதனம் என்று எங்கும் பார்த்திபனுக்குத் தெரியவராதவாறு பனிமலர் நேர்த்தியுடன் நடந்துகொண்டாள்.
அதோ இதோவென்று நாளை பணம் கை மாறி, வண்டி பார்த்திபனின் பெயருக்கு பதிவாக இருக்கின்றது…
அந்த நேரத்தில்தான் பூதத்தின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் உருவானது….
“என்ன பார்த்திபா? இரவைக்கு இங்க சாபிடறியா ? இல்ல அங்கையா ?” எனப் பூதத்தின் அன்னை பார்த்திபனிடம் அக்கறையுடன் விசாரித்துக்கொண்டிருக்க,
“சோறு எங்க இருக்கோ அங்க சாப்பிடவேண்டிதான்” எனப் பார்த்திபனுக்குப் பதிலாகப் பூதம் பேசிக்கொண்டிருந்தான்.
“அடேய்! சும்மா கிடடா… நீ ஒண்டிக்கட்டை. அவன் சம்சாரம் காத்திருக்கும்ல. அதுக்காகக் கேட்டேன் டா” எனப் பூதத்தின் வாயை அடைத்து, தான் பூதத்தின் தாய் என அவர் நிரூபித்துக்கொண்டிருந்தார்.
“நான் அங்க போய்ச் சாப்பிட்டுகிறேன் மா… ” எனப் பார்த்திபன் மெல்லிய புன்னகையுடன் கூறிய பொழுதினில், அவன் மனமோ, ‘ஆமா, சம்சாரம் தானே காத்திருக்கும் ? இந்த மலரும் எனக்காகக் காத்திருக்காளே? அவளோட மனசுல நான் இருக்கேனா ? இது சரியா வருமா’ எனப் பலவாறு எண்ணத்தை ஓட்டிக்கொண்டிருந்தது.
இவர்களுடைய பேச்சில், இப்போது நான்காவதாக வந்து இணைந்தார் இராசய்யா, குறிஞ்சியின் தந்தை!
“வாங்க அண்ணே…என்ன இம்புட்டுத் தூரம்? பணியாரம் வாங்க எப்பவும் குறிஞ்சி தானே வரும் ? காப்பித் தண்ணி வாங்கியார சொல்லுறே. உக்காருங்க” என உபசரித்தார்.
“இல்லமா அதெல்லாம் வேணாம்…சும்மா உங்கள பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தேன்” என இராசய்யா பேச்சை தொடங்கியதே சொல்லியது, அவர் சொல்ல ஏதோ ஒன்று நிச்சயமாக இருக்கின்றது…
“என்ன அண்ணே, இதுக்குப் போய் எதுக்கு இம்புட்டு தயங்குறீங்க… இது உங்க வீடாட்டம். நான் உள்ள போய்த் தண்ணியாவது கொண்டு வரேன்” என எடுத்து வந்து கொடுக்க மெல்ல, இரசய்யான் பேச்சை தொடங்கினார்.
“அது ஒண்ணுமில்ல. நம்ம குறுஞ்சிக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு யோசனை. அதான் உங்ககிட்ட சொல்லி நாலு இடத்துல சொல்லி வைக்கலாம்னு, அப்படியே உங்களையும் பார்த்தமாதி ஆவும்ல…” எனத் தொடங்கினார்.
“அதுக்கென்ன அண்ணே? ஜோரா பாத்துரலாம்” எனப் பூதத்தின் அம்மா சந்தோஷமாகவே கூறினார்.
“சரி, மாப்பிள்ளை எப்படிவேனும் என்ன ஏதுன்னு சொல்லுங்க… நாளைக்கு நம்ம தரகரு தங்கராசண்ணே வரும். கையோட வீட்டுக்கு கூட்டி வந்துறேன்” என அவர் கூற,
“எனக்கு எந்த நினைப்பும் இல்லமா…கஞ்சியூத்த தெம்பும், கட்டுனவள கண்கலங்காம பாத்துக்குற பண்பும் இருந்தா அதே போதும். நம்ம குறுஞ்சிதான் அட்டவனையே போட்டு வச்சிருக்கிது” என இரசய்யான் சிரிப்புடன் கூற,
“அட்டவணையா? அப்படி என்ன அண்ணே ? எங்க கொஞ்ச சொல்லுங்க” எனப் பார்த்திபன் இடை புகுந்தான்.
“ஆமா பார்த்திபா, கட்டிக்கிறவன் எப்பவும் சிரிச்ச முகமா இருக்கணுமாம். வினய சூது இல்லாம எப்பவும் சந்தோசமா இருக்கவனா இருக்கணுமாம்.
பூமியே புரண்டாலும் எல்லாச் சூழலையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிறவனாவும், பொண்டாட்டி மேல அசலான பாசம் வச்சுருக்கவனாவும் இருக்கணுமாம்….
ஆக மொத்தத்துல மீசை வச்ச வளந்த குழந்தை போல வெள்ளந்தி மனுஷனா பார்க்க சொல்லுது” என நீட்டி முடிக்க,
“அப்ப! ஆம்பள ஜெனிலியானு சொல்லுங்க அண்ணே…” எனப் பட்டென்று நேரம் காலம் தெரியாமல் இடைபுகுந்தான் பூதம்.
“அடேய்!” எனப் பார்த்திபன் பல்லை கடிக்க,
“அட ஆமா நண்பா, அரைலூசாட்டம் எல்லாத்துக்கும் சிரிக்கிறவன ஆம்பள ஜெனிலியானு தானே சொல்லுவோம்” என இலந்தடிக்க,
பூதத்தின் அம்மா, பூதத்தை முறைத்து, “பூத, மொத எந்திரி…அண்ணனுக்குப் போய்ப் பலகாரம் வாங்கிட்டு வா. எந்திரிச்சு போடா” எனக் கண்டிப்பான பார்வையைக் காண்பிக்க,
“நான் ஒரு ஆம்பளன்னு பயமில்லாம இந்த ஆத்தா என்ன அரைடிரௌசர் போட்ட பையன போல மிரட்டுது…நான் யாரு என்னோட ரேஞ் என்ன?” என வாய்க்குள் முனங்கியபடியே எழுந்து பார்த்திபனை கண்ணால் அழைக்க,
“தம்பி இன்னும் நீ டீ வாங்க போகலையா?” எனப் பார்த்திபனும் நக்கலாகக் கூற, கடுப்புடன் பூதம் வெளியேறினான்.
“என்னமா நீங்க? பூதத்தைப் போய் டீ வாங்க அனுப்புறீங்க ? அதுவும் எனக்கு??” என ஒருமாதிரி இராசய்யான் சங்கடமாகக் கூற,
அவருடைய சங்கடத்தின் காரணம் புரியாமல் பூதத்தின் அம்மா யோசிக்கப் பார்த்திபனோ, “ஏன் அண்ணே ? பூதம் என்ன உங்களுக்கு மாப்பிள்ளையாவா வர போறான் ? இம்புட்டு சங்கடப்படுறீங்க” எனப் போட்டு வாங்கினான்.
பார்த்திபனின் இந்தப் பேச்சை கேட்ட, பூதத்தின் அம்மாவின் கண்கள்கூட ஒரு முறை பளிச்சிட, இராசய்யனின் முகமோ இப்போது தெளிந்தது.
“அது… ஒரு எண்ணமிருக்கு…ஆனால், தங்கச்சிக்கு அபிப்பிராயம் எப்படித் தோதுப்படும்னு தெரியல. ” எனத் தயங்கி தயங்கி பூதத்தின் அன்னை முகம் காண, அவரோ தேங்காயை உடைத்ததைப் போல, “அண்ணே…உம்மவ குறிஞ்சிய எம்ம மருமகளா தாரியா?” எனக் கேட்டுவிட, இராசயன் முகம் பிரகாசமானது…
“நீங்க கண்டிப்பா வீட்டுக்கு வாங்க…எனக்கு சந்தோசமா இருக்குது… கண்ணாலத்தைப் பூதம் ஒரு வேலைல உக்காந்த பொறவு வச்சுக்கலாம்” என இராசய்யான் முழு நிறைவுடன் சொல்ல,
பார்த்திபனோ, “அப்படினா…நீங்க நாளைக்கே கல்யாணம் வைக்கலாம். ஏன்னா, நாளைக்கு ஒரு லாரி வாங்குறோம். அதுல பூதத்துக்கும் பங்கு இருக்குது…” என உத்தரவாதம் கொடுக்க, பார்த்திபனின் வார்த்தையில் பூதத்தின் அம்மா மற்றும் இராசயன் நிறைவுடன் பார்த்தனர்.
பூதத்தின் அம்மா, “பார்த்திபா, அவன் கொடுத்தது கொசுறு ஐயா..நீ வேலைக்குச் சேர்த்துக்கிடுவனு நினைச்சால், நீ என்னபா பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறவ ?” எனக் கேட்க,
“எனக்குப் பூதம் நண்பன் மா…அவன் மட்டும் இல்லாட்டி என் வாழ்க்கைல நான் என்னைக்கோ தோத்துப் போயிருப்பேன். எப்பவும் அவன் என் கூடத்தான் இருப்பான்… நீங்க ஆகவேண்டிய சோழிய பாருங்க. நான் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்” எனப் பார்த்திபன் அங்கிருந்து புறப்பட,
இராசய்யானும் பூதத்தின் தாயும் அடுத்த ஒரு வாரத்தில் பூவைக்கும் நிகழ்வு என்றும் அடுத்த ஒரு மாதத்தில் திருமணம் என்றும், அவர்களுக்குள் முடிவு செய்துகொண்டனர்.
இராசய்யன்னுக்குப் பூதத்தின் பழக்க வழக்கமும் குணாதிசயமும் தெரியும். ஆகையால், மகளைப் பூதத்திற்கு மணமுடித்தால், பூதத்திடம் பணத்திற்குப் பஞ்சம் வரலாம் ஆனால் குணத்திற்கு வராது என்றே எண்ணி வந்திருந்தார்…
இப்போது பூதத்தின் எதிர்காலத்திற்குப் பார்த்திபன் உறுதி கொடுத்துவிட, பெண்ணைப் பெற்ற தகப்பனாய் அவருக்குப் பெரும் நிம்மதி வந்திருந்தது…
அதே நிம்மதியோடு புறப்பட்டார்…..

Advertisement