Advertisement

அதற்கான காரணத்தை மலர் அப்போது ஆராயவில்லை. ஆராயவேண்டுமென்று கூட அவள் உணரவில்லை. ஏதோவொன்று உடனடியாகப் பார்த்திபனுக்கு ஏதேனும் செய்யவேண்டுமென்று தோன்றியது. பூதம் சாப்பாடு விஷயத்தைத் தொடங்கவும், சட்டென்று பார்த்திபனுக்கு என்ன உணவு பிடிக்குமென்று கேட்டிருந்தாள்.
“அவனுக்குச் சாப்பிட்றதுல எல்லாம் பிடிக்கும். எதையும் ஒதுக்கமாட்டான்…குறிப்பா பால் சேர்த்த பலகாரம்னா ரொம்பப் பிடிக்கும். இந்தப் பால்கோவா , பால் கொழுக்கட்டை இப்படி. ஆமாம் அது எதுக்கு நீ கேட்குற ? செஞ்சு கொடுக்கப் போறியா ?”
“ஹ்ம்ம் இல்ல. வாங்கிக் கொடுக்கப் போறேன்” என்ன நக்கலாக மலர் கூற,
“அதானே பார்த்தேன். செஞ்சு கிஞ்சு கொடுக்குறேன்னு அவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிறாத. ஆயிரமிருந்தாலும் உன்னோட மாமன் இல்லையா ?” என்ன கிண்டலாகக் கூற,
“நக்கலு? நான் செஞ்சதுக்கப்பறம் சாப்பிட வந்தீங்க… சட்னிதான்” என்ன பொய்யாக மிரட்டினாள்.
“உன்னோட மாமனுக்கு மட்டும் பால்கோவா? எனக்கு மட்டும் சட்டினியா ? அநியாயம்” என அப்பாவியாகப் பூதம் கூற,
“ஐயோ ஐயோ! உங்களுக்கு இந்த வாய் மட்டுமில்ல, நாய் தூக்கிட்டு போய்டும்” என தலையில் அடித்துக்கொண்டு, மீண்டும் வீட்டை திறந்து உள்ளே சென்றாள்.
நடந்த அத்தனை கலாட்டாவிலும், பூதம் மிகச் சாமர்த்தியமாக வார்த்தைகளை அவளிடம் பிரயோகித்திருந்தான். பார்த்திபனை ‘மாமா’ என அவன் குறிப்பிட்டதை மலர் வித்தியாசமாகவோ மறுப்பாகவோ எடுத்துக்கொள்ளவுமில்லை, அதை எதிர்க்கவுமில்லை. ஏன் அந்த வார்த்தையைப் பூதம் சொன்னதாகக் கூட அவள் காண்பித்துக்கொள்ளவில்லை.
இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் ? பனிமலரின் மனம், பார்த்திபனை அவ்வாறு அழைப்பதை ஏற்க பழகியிருந்தது என்பதே!
இது தான் பூதத்தின் சிந்தனை.
ஆம்! அதுவே உண்மையும் கூட. முதன்முதலாகப் பூவம்மாள் பாட்டி அழைக்கும்படியாக வற்புறுத்தியபோது முரண்டிய அவள் மனம், இப்போது அவளே அறியாமல் அதை ஏற்கப் பழகியிருந்தது.
அதாவது, இப்பொழுதும், அவள் பார்த்திபனை அப்படி அழைப்பதில்லை. எப்போதாவது பூதமும் பாட்டியும் சேர்ந்து வற்புறுத்தும் சமயங்களில் ஓரிரெண்டு முறை மிகவும் முயன்று அந்த வார்த்தையை உச்சரித்திருக்கிறாள்.
ஆனால் பாட்டி, பூதம் என இருவரும் எப்போதுமே பனிமலரிடம் பார்த்திபனை அவளுடைய மாமா எனக் குறிப்பிட்டே பேசத் தொடங்கியிருந்தனர். அப்படிப் பேசியிருந்தபடியால் தன்னையுமறியாமல் இப்போதெல்லாம் அந்த வார்த்தைக்குப் பழகியிருந்தாள்.
‘மாமா’ என்ற வார்த்தையை வெறும் வார்த்தையாக அவள் மனம் ஏற்றுக்கொண்டதோ? அல்லது பார்த்திபனையே அந்த உறவுக்குள் அவளின் மனம் ஏற்றுக்கொண்டதோ ? அதை இன்னமும் அவள் ஆராயவுமில்லை, தனக்குள் தோன்றிய சிறு வேறுபாட்டை உணரவுமில்லை. 
ஆனால் ஒன்று மட்டும் அவளுக்குப் புரிந்தது…இப்போதெல்லாம் அவளை அடிக்கடி அச்சம் கொள்ளவைக்கும் நினைவுகள் வருவதில்லை. அவள் கண் முன் நீளும் அந்த இராட்சச கரங்கள் அவளை நெருங்க முயலவில்லை. பார்த்திபனின் ஓலை வீட்டிற்குள் இருப்பதென்னவோ அவளுக்கு இரும்பு கோட்டைக்குள் பத்திரமாக இருப்பதைப் போன்றதொரு உணர்வை கொடுத்திருந்தது…
அந்த உணர்வை பார்த்திபன் எந்தவொரு ப்ரயத்தனமும் செய்து கொடுக்கவில்லை. அன்பொழுகும் வார்த்தைகளால் கொடுக்கவில்லை… அதீத பாசத்தினால் கொடுக்கவில்லை…அவனுடைய கண்ணியமான பார்வையாலும், கண்ணை மட்டும் பார்த்து பேசும் பேச்சாலும் கொடுத்திருந்தான்.
பார்த்திபன் என்றால் மிக அளவான பேச்சுக்கள் தான் எப்போதும்! அந்தக் குடிலில் கூட அவன் அவ்வப்போது ஏதோ நண்பனை போல வந்து செல்வான். அதிக நேரம் அங்குத் தங்குவதில்லை!
இரவில் அவன் குடிசைக்கு வெளியே மொட்டை மாடியில் ஒரு பெண்ணின் காவலனாக உறக்கம் கொள்ளுவான். பெண்களை மதிப்பதும் அவர்களைக் காப்பதும் பிறப்பில் வருவது…
பெண்களை மரியாதையுடன் நடத்தவும் காக்கவும் அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த உறவுமுறையென்று பொய் அடையாளமேதும் தேவையில்லை. அனைவரையும் தன்னைப் போல் மதிக்கும் நேசிக்கும் உணர்விருந்தால் மட்டும் போதுமானது!
பார்த்திபன் முன்பிருந்தே இப்படித்தான் அவளிடம் இருந்தானென்றாலும், அவனை அழிக்கும் ஆயுதமேது என்று தேடலில் இருந்ததால், அவனுடைய கண்ணியத்தைக் கவனிக்கத் தவறியிருந்தாள்.
ஆனால் இப்போதோ, அவனைக் கவனிப்பதை தவிர வேறு வேலையே இல்ல அவளிடம். அது, ‘தான்’ அவனுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய சறுக்கல்களை மீண்டும் ஏற்றமாக மாற்றவேண்டுமென்ற உறுதியும் பிடிவாதமும் அவளுள் வேரூண்டிட, பார்த்திபனை கவனிக்கத் தொடங்கினாள். பார்த்திபனோடு, அவனுடைய ஒட்டுமொத்த உறவுகளையும் அவனின் உலகத்தையும் புரிந்துகொள்ளத் தொடங்கினாள்.
அவனுக்கான நன்மையைத் தேடி தேடி, அவள் தொலைந்துகொண்டிருந்தாள். ஆனால், அதை மலர் உணரவில்லை! உணரும் நொடி வந்தால், அவள் மனம் ஆனந்த கூத்தாடுமா ? அதிர்ந்து அதள பாதாளத்திற்கு செல்லுமா ? இதுவும் காலத்தின் கையினில் தான்…
“என்ன ஆத்தா, ரொட்டியை வெட்டி வெட்டி அடுக்கிட்டு இருக்க? இதையா இம்புட்டு நேரமா சமைச்ச ? பாலும் பண்ணும் ஆஸ்பத்திரில கொடுக்குறது. அதையா உன்னோட மாமானுக்குக் கொடுக்கப் போற ?” என வாயில் கைவைத்து பூவம்மாள் பாட்டி அங்கலாய்க்க, சின்னச் சிரிப்புடன், “அவரை வர சொல்றீங்களா பாட்டி ?” எனக் கேட்டாள்.
ஆம்! அது பூவ்வம்மாள் பாட்டியின் வீடுதான். பார்த்திபனை குடும்பத்துடன் இணைக்க நினைப்பவள், அடுப்பை பிரிக்க நினைப்பாளா ? அது பார்த்திபனுக்குச் சமைப்பதற்காகவே இருப்பினும்!
அங்க நித்ய கலா, தாமினி, தாரா இவர்களைத் தாண்டி அங்குச் சென்று சமையல் செய்ய அவள் மனம் ஒப்பவில்லை. அதோடு, இது போன்று எதையோ செய்யப் போய், அது மேலும் பிளவை அதிகப்படுத்திட கூடாதென்ற எண்ணம் தான்.
ஆனால் ஒன்று, இம்முறை பார்த்திபன் வேலை போனதென்று தெரிந்தவுடன், சூரியவர்மனே முன் வந்திருந்தான்.
“கலா, அவனுக்கு வேலை போய்டுச்சு… நாம எதிர்காலத்துக்குச் சேர்த்துவைக்கணும் தான். அதுக்காக, அவனை அப்படி விடமுடியாது. அதோட, அவன் அப்படியே முடங்கிப் போறவன் இல்ல.
முந்தியடிச்சு முளைச்சிடுவான். என்ன எப்படியிருந்தாலும், அவனை இப்ப ஒதுக்கீட்டால், என்னைச் சுயநலம் பிடிச்சவன்னு ஊரே பேசும். பொறவு இத்தனை வருசமா நான் சம்பாதிச்ச பேரு, கோவில் முதல் மரியாதை எல்லாம் அடிவாங்கும். மூத்தவனா அரவணைச்சு போறேங்கிற பேரும் எனக்கு முக்கியம். 
காசு போகுது, சோறு போகுதுனு உன்னோட வேலைய காமிச்சு என்னோட பேர கெடுத்துறாத. புரியுதுல ?” எனக் கண்டிப்பான குரலிலே கூறிச் சென்றிருந்தான்.
கலாவும், ‘இந்த நேரத்துல உதவி பண்ணி, இதையே சாக்காவச்சு நாளைக்கு லாக்கை போடலாம். ஹ்ம்ம் அது தான் சரி’ என எண்ணமிட்டாள்!
இந்த இக்கட்டான சூழலில் சூரியவர்மன் கௌரவத்திற்காகவோ தம்பி என்ற அடிப்படை அன்பிற்காகவோ ஏதோவொன்றினால், பார்த்திபனை விட்டுக்கொடுக்கப் பிரியப்படவில்லை.
இந்தனை வாரங்களில் பார்த்திபன் அலையாத இடமில்லை, ஏறாத அலுவலகங்கள் இல்லை. அவனின் ஊரிலும், அதைச் சுற்றியும் எங்கும் அவனுக்கு வேலைக்கென்று எந்த வழியும் திறக்கப்படவில்லை.
அவன் செல்லும் வழிகள் அடைக்க அடைக்க அதை உடைக்கும் ஆத்திரம் கொண்டு தேடிக்கொண்டிருந்தான். வண்டி ஓட்டுவதைத் தவிர வேறு வேலையும் அவன் அரியமாட்டான். இப்போது கூடப் பள்ளி வாகன பேருந்து ஓட்டுனர் பணிக்காக அலைந்து ஓய்ந்து வந்துகொண்டிருந்தான்.
மதியம் ரோட்டோர தள்ளுவண்டி கடையில் சாப்பிட்ட தயிர்சாதம் எங்கோ காணாமல் போயிருந்தது. வேலைகிடைக்கவில்லை என்ற எண்ணம் ஒருபுறமும், பசி ஒருபுறமும் என அவன் மூளையை உண்ண தொடங்க, அவன் எண்ணங்கள் எங்கெங்கோ சென்றன.
“நான் போனால் வீட்ல சாப்பாடு போடுவாங்க. சாப்பிடவும் சொல்லுவாங்க… ஆனால் நான் சாப்பிட்டேனா அப்படினு இதுவரை யாராச்சும் கேட்ருக்காங்களா? இப்பலாம் யாரோட யோசனைல கூட நான் இல்ல போல” எனச் சிந்திக்கத் தொடங்கினான்.
ஆம்! தாமினி கூட அவனின் சிறுவயதில் தான் பசிக்கிறதா ? சாப்பிடுகிறாயா ? எனக் கேட்டிருக்கிறார். அவன் இந்தத் தொழிலுக்கு வந்த பிறகு, அதிலும் நான்கைந்து நாட்கள் ஏன் ஒரு வாரம் என இவன் சரக்கு எடுக்கச் செல்லும் போது, இந்தப் பழக்கம் மெல்ல குறைந்திருந்தது. அதிலும் சில வருடங்களாகத் தானே அனைவருக்கும் கைபேசி எட்டுமக்கனியானது!
அதற்கு முன்னர், பார்த்திபனை தொடர்பு கொள்ள எந்தவொரு வசதியும் இருந்ததில்லை. இப்போது கைபேசி வந்தபிறகு, அவனை விசாரிக்கவேண்டுமென்ற எண்ணம் அங்கு யாருக்கும் இருக்கவில்லை. காரணம், இத்தனை ஆண்டுகளாகக் கேட்காமல், திடிரென்று கேட்கும் வழக்கம் அங்கு ஏற்படவில்லை.
இதை இத்தனை நாட்களாகப் பார்த்திபன் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இன்று அவன் விரக்தியின் உச்சத்திலிருந்தான். ஆகையால் அவன் மனம் தேவையுள்ளது தேவையற்றது என அனைத்தையும் எண்ண தொடங்கியது.
பாசத்திற்காக அவனுடைய குடும்பத்தின் அரவணைப்பிற்காக அவன் ஏங்க தொடங்கினான். ஆயிரம் துன்பம் வந்தாலும், தான் உயிராய் உறவாய் நினைப்பவர், “நானிருக்கிறேன்!” என்று கூறுவது யானை பலம் தருமல்லவா ?
ஆனால், பார்த்திபனுக்கு அந்த நம்பிக்கையை அவனுடைய வீட்டில் யாரும் கொடுக்காதது, அவனைச் சோர்வடையச் செய்ததென்பதே நிதர்சனமான உண்மை.
விரக்தியும் பசியும் ஒருசேர, ‘சரி, ஒரு டீ குடிப்போம்’ என நினைத்துக்கொண்டான். அப்போது மிகச் சரியாக, அவனுடைய கை பேசி ஒலிக்கவே, அதில் பூவம்மாள் பாட்டியின் எண் மிளிர்ந்தது.
“சொல்லு பாட்டி… என்ன? நீ அவசியமில்லாம கூப்பிடமாட்டியே ? யாருக்கு என்ன ?” என அந்தச் சூழலிலும், தன் குடும்பத்தை நினைத்துப் பதட்டமானான்.
“அடேய்! மொத பதறாத. யாருக்கு என்னனு கேட்டல ? உன்னோட பொண்டாட்டிக்கு தான் கிறுக்கு பிடிச்சு போச்சு.
அவளோட மாமன் கிறுக்கு.” எனக் கள்ள சிரிப்புடன் கூற,
“என்ன பாட்டி சொல்லுற? புரியிறது போலச் சொல்லேன்” எனப் பார்த்திபன் சிடுசிடுத்தான்.
“அடேய் பார்த்தி! அவ உனக்காக என்னத்தையோ சமைச்சு வச்சிட்டு, உனக்குப் போன போட சொல்லி உசுர எடுக்குறா. கொஞ்சூண்டு ருசி பார்க்க கேட்டேன். எனக்குக் கூடக் கொடுக்கல…சீக்கிரம் வாடா…அப்பத்தான் நானும் சாப்பிட முடியும்.” எனப் பாட்டி சொல்ல,
“என்ன நெய் மனம் ஊர கூட்டுது பாட்டி” என வீட்டிற்குள் நுழைந்தான் பூதம்.
“ஏண்டா, பார்த்திபனுக்குப் போன போட்டால், நீ என்ன நான் தகவலே சொல்லாம வந்து நிக்கிற?” எனக் கைபேசியை அணைத்துவிட்டு, வாசலில் நுழைந்து கொண்டிருந்த பூதத்திடம் விசாரிக்கத் தொடங்கினார்.
பூதம் வந்ததும் பாட்டியின் வீடு கலை கட்ட, மறுபுறமோ, பார்த்திபன் முகம் முதல் முறையாக மிளிர்ந்தது… அவனைத் தேடி அவனுக்காக ஒருவர் உணவை சமைத்துக் காத்துக்கொண்டிருப்பது அவனுக்கு முதல் முறையாக உற்சாகத்தைக் கொடுத்தது…
அவள் ஏன் சமைத்தாள் ? நான் ஏன் உடனே போகவேண்டும் என்று எந்த எண்ணமும் அவனுள் எழவில்லை. புறப்பட்டான்…மிகுந்த எதிர்பார்ப்புடனும், சந்தோஷத்துடனும், பனிமலரை தேடி பார்த்திபன் புறப்பட்டான்…

Advertisement