Advertisement

பகுதி – 21
பார்த்திபன் கண்களில் கூர்மையுடன், எதிரிலிப்பவர் கூறவிருக்கும் வார்த்தைக்காகக் கண்களை இடுக்கி பார்க்க, பார்த்திபனுக்கு ஓரடி பின்னால் பூதம் நின்றிருந்தான்.
அவர்கள் நின்றிருந்த இடம், வேலுசாமியின் மில். அங்கே பார்த்திபனின் முதலாளி ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, பார்த்திபன் அவரே தொடங்கட்டும் என்று நின்றிருந்தான்.
அங்கு வேலுசாமி இல்லை. வேலுசாமி வருகைக்காகத் தான் பார்த்திபனின் முதலாளியும் விஷயத்தைச் சொல்லாமல், பார்த்திபனை காக்கவைத்திருந்தார்.
“வரச்சொல்லிட்டு கம்முனு இருந்தால் எப்படி முதலாளி?” எனப் பூதம் தான் ஆரம்பித்தான்.
“கொஞ்சம் காத்திருக்க மாட்டிங்களோ? துறை என்ன கலக்டரோ ? ஆபிஸ்க்கு லேட் ஆச்சுன்னு குதிக்கிறீங்களோ ?” என நக்கலாக வினவ,
பூதமோ, “ஐயா, ஜெமினி படத்துல விக்ரம் கூட நடிச்சுருக்கீங்களா ?” என அப்பாவியாக முகத்தை வைத்து கேட்க,
“இல்ல…எதுக்கு டா கேட்குற?”
“இல்ல! இத்தனை ‘ஓ’ போடுறீங்களே … அதான் ஒரு பொது அறிவுக்குக் கேட்டேன்.” என அவருடைய பாணியிலையே இலந்தாகப் பதில் கொடுத்தான்.
பூதம் துடுக்காகப் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, பெரும் பீடிகையுடன் வந்து அமர்ந்தார் வேலுசாமி. அவருடைய தோரணையைப் பார்த்த பூதம், பார்த்திபனை நெருங்கி, “இவன் வேலுசாமி தான ? எதுக்கு இப்ப வேலுநாயக்கர் கமல்ஹாசன் போலப் பில்டப்பை கொடுக்குறான்?” எனக் கிசுகிசுக்க,
வேலுசாமி தொண்டையைத் தோரணையாகச் செறும, “என்ன நீர்யானை மோஷன் போனமாதிரி ஒரு சத்தம்…? ஓஹ் இவனா ?” என அதற்கும் கிண்டலடித்தான் பூதம்.
பூதத்தின் பேச்சுக்கள் எதுவும் செவியில் விழாததால், செறுமியபடி, டிரான்ஸ்போர்ட் ஓனரை பார்த்து, “என்ன இன்னுமா சொல்லல ? நல்ல நேரத்திலையே சொல்லிடவேண்டியதான ?” எனப் பூடகமாகக் கூறினார், வேலுசாமி!
“இதோ இப்போ சொல்லிடறேன் ஐயா… இந்தா பார்த்திபா ஒன்னோட வேலை சம்மந்தமா முக்கியமா உன்கிட்ட பேசணும். அதுக்குதான் இங்க உன்ன வர சொன்னேன்…” எனத் தொடங்கினார்.
அப்போது சட்டென்று இடைமறித்த பார்த்திபன், “ஒரு நிமிஷம். நான் வேற ஏதோனு கொஞ்சம் அமைதியா இருந்தேன். வேலை சம்மந்தமான, நான் முதல்ல சொல்லிடறேன் ஐயா.
ஏன்னா என்னோட வேலை சம்மந்தமா பேசத்தான் நானே நாலு ஐஞ்சு நாளா அலைஞ்சிட்டு இருக்கேன்” எனக் கூறவே, வேலுசாமி உற்சாகமானார்.
வேலையைக் கெஞ்சி கேட்கப்போகிறான், இல்லையென்று சொன்னவுடன் பார்த்திபன் தலை தாழ போகிறதென்ற இறும்மாப்புடன், “என்னனு சொல்லட்டுமேயா… கேட்டுட்டுப் பொறவு நீ சொல்லு” என லாரி முதலாளியிடம் வேலுசாமி கூற, அதையே அப்படியே செய்தார்.
“சொல்லு பார்த்திபா…என்ன?” எனக் கேட்க,
“நான் இனி உங்க லாரி ஓட்டவேணாம்னு முடிவு பண்ணிருக்கேன்.”
பார்த்திபனின் இந்தவொரு முடிவு வேலுசாமியின் திட்டத்தைத் தவுடுபொடியாக்கியது. இதை அவர் சற்றும் எதிர்பார்க்காததால், “ஏய் ? என்னடா பேசுற ? மண்டை குழம்பிடுச்சா ?” என ஆவேசமாகக் கேட்க,
பூதம் இடைபுகுந்து, “ஐயா இந்த எமோஷனலாம் வண்டி ஓனர் காட்டுனா பரவாயில்லை. நீங்க எதுக்குத் தம்கட்டி பேசுறீங்க… மூச்சை விடுங்க மூச்சை விடுங்க” என அவரருகே வந்து கூற,
வேலுசாமி பூதத்தை முறைத்து பார்க்க, “மூச்சை விடுங்கனு சொன்னால், இவரு எதுக்கு மூச்சா வராதவரை போல மூஞ்ச வச்சிருக்காரு…ஐயா எதுக்கும் நீங்க இரெண்டு நாட்டு வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டா நல்லதுங்க” என இலவச அறிவுரை கூற, வேலுசாமி பூதத்தை அடிக்கக் கையை ஓங்கினார்.
சட்டென்று இடைபுகுந்த பார்த்திபன், அவருடைய கையைத் தன் கையால் தடுத்தபடி, “பணமிருக்குறவங்க ஓங்குன கை மட்டும் தான் அடிக்கணும்னு இல்ல… உழைச்சு இரும்பான கையும் அடிக்கும். அதுனால இந்த வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்” எனப் பார்த்திபன் வேலுசாமியை அடிக்குரலில் மிரட்டினான்.
பதிலுக்கு அவருடைய பதிலை கூட எதிர்பார்க்காமல், சட்டென்று அவனுடைய முதலாளியின் புறமாகத் திரும்பியவன், “புறப்படுறேன். வேற ஆள பார்த்துக்கோங்க” என அலட்டாமல் கூற,
“வேலைக்கு வராதவன், என்னத்துக்கு நாலுநாளா நாயா அலைஞ்சனு கொஞ்சம் சொல்லிட்டு போயேன்…” எனப் பார்த்திபனின் முதலாளி கேட்க,
“இதைச் சொல்றதுக்குத் தான்…கடைசிநிமிசத்துல சொல்லி, அடுத்தவங்க பொலப்புல மண்ணைப் போடக்கூடாதுல. அது நம்ம பழக்கமும் இல்ல” எனப் பார்த்திபன் அவரைக் கூர்மையாகப் பார்த்தபடி கூற, அவருக்கு முகமே விழுந்துவிட்டது.
“பேச்சு ரொம்பத் தினுசா இருக்கு…உடம்பப் பார்த்துக்கோ பார்த்திபா” என அழுத்தமாக உச்சரித்தார் வேலுசாமி.
“எது கண்ணாடியிலையா?” எனப் பூதம் அப்பாவியாகக் கேட்க,
வேலுசாமி கடுப்புடன், “என்ன டா சொல்லுற ?” எனக் கேட்க,
பூதமோ முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு மீண்டுமாக, “இல்ல, உடம்பப் பார்த்துக்கோனு சொன்னீங்களே ? அதான் கண்ணாடியிலையானு கேட்டேன்” என மீண்டும் கூற, பார்த்திபன் வாய்விட்டுச் சிரித்தான்.
“ஏண்டா இருக்கப் வேலையைவிட்டு போறியே? சோத்துக்கு என்னடா பண்ணுவ ?” என அவனின் முதலாளி வினவ,
பூதமோ, “குழம்புக்கு என்ன பண்ணுவமோ அதே தான்… இதுகூடவா தெரியாம இருக்கீங்க முதலாளி… நீங்க ஒரே தமாசு” எனக் கூறிவிட்டு சிரிக்க,
அந்தச் சூழலில், வேலுசாமிக்கும் லாரி ஓனருக்கும் தான் அவமானமாகி போனது. பார்த்திபன் செய்வதறியாது திகைத்து நிற்கவேண்டும், அவனைத் தடுமாறவைக்கவும் தலைகுனியவைக்கவும் வேண்டுமென்று நினைத்தவர்கள், அந்த நொடி இவனை எப்படி அடிப்பதென்று தடுமாறி நின்றனர்.
அதிலும் பார்த்திபன் கொஞ்சமும் அசராமல் அதிலும் அதிகமாகப் பேசாமல் திருப்பிக்கொடுத்த விதம், அவர்களை மேற்கொண்டு சிந்திக்கவிடாமல் செய்ததென்றால், பூதத்தின் எள்ளல் பேச்சு அவர்களைக் கூனி குறுக செய்தது.
“முதலாளி… மண்ணை லாரில லோட் ஏத்துறதோட நிறுத்திக்கங்க. அடுத்தவங்க வாழ்க்கைல வேணாம்… ” எனக் கூறிவிட்டு பார்த்திபன் செல்ல, பின்னோடு பூதமும், “வரேன் எக்ஸ் முதலாளி” எனச் சலாம் வைத்துவிட்டுச் சென்றான் .
வேலுசாமியின் முகத்தில் மீண்டும் தோல்வியின் இரேகைகளும், ஓனரின் முகத்தில் குற்ற உணர்ச்சியும் வெளிப்பட, ஒருவாறு இருவரும் வெளிக்காட்டி கொள்ளாமல் நின்றிருந்தனர்.
“என்னங்கய்யா இப்படி ஆகிடுச்சு?” என ஓனர் வினவ,
“யோவ் நீ கிளம்பு” என வேலுசாமி கோபத்துடன் விரட்டினார்.
“ஐயா, லாரியை எடுத்துகிறேன்னு சொன்னீங்களே?” எனக் கேட்க,
“ஏண்டா, அவனை வேலையைவிட்டு துரத்தி அவமானப்படுத்தணும்னு நான் நினைச்சால், உன் வேலை வேணாம்னு உன்னை அசிங்கப்படுத்திட்டு என்னையும் தோக்கடிச்சிட்டு போய்ட்டான். இனிமேல் உன்னோட லாரியை வாங்குனா என்ன ? வாங்காட்டி என்ன ? மொதல்ல இடத்தைக் காலி பண்ணு” என இரவல் கேட்கவந்தவரை போன்று வேலுசாமி விரட்டினார்.
“ஐயா, என்ன இப்படி மாத்தி பேசுறீங்க? எனக்கு இதுனால நிறைய நட்டமாகும்” என எடுத்துரைக்க முயல,
“அது உன்னோட பிரச்சனை” எனக் கூறி, லாரி ஓனரை உதாசீனப்படுத்திவிட்டு அங்கிருந்து விறுவிறுவென்று நடக்க, தன்னுடைய தவறை தாமதமாக உணர்ந்தபடி பார்த்திபனின் முதலாளி தலை தொங்க வெளியேறினார்.
நாட்கள் வாரங்களாக ஓடியிருந்தன. காலத்தை கையால் தடுக்கும் கரத்துடன் இப்புவியில் எவரும் இதுவரை ஜனிக்கவில்லையே… ஆகையால், எவருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நாட்கள் நகர்ந்திருந்தன. 
நாட்கள் நகர்ந்திருந்த போதும், பனிமலரால் அவள் ஏற்படுத்திய சிக்கல்கள் எதையும் சரிசெய்திருக்கமுடியவில்லை. அதே வேளையில், பனிமலர் மற்றும் பார்த்திபனுக்கு இடையே, மெல்ல இதழ்விரித்து நட்பென்னும் உறவு முகிழ்ந்திருந்தது. 
ஆம்! வெறுப்பிலிருந்து நட்பு…அவளுடைய மனதினில். தன்னுடைய அறியாமையால் ஒருவனின் அழகிய வாழ்வை சிதைத்துவிட்டோமோ என்ற குற்றஉணர்விலிருந்தவளை, அன்று வேலுசாமியின் மில்லுக்கு சென்று வந்த பார்த்திபனின் வார்த்தைகள் மெல்ல அவளுடைய குற்ற உணர்விலிருந்து மீட்டது. 
“நன்றி… நீ கெட்டது பண்ண போய், எனக்கொரு நல்லது பண்ணிருக்க… யாரு நாம தோக்கணும் நினைக்கிறாங்களோ அவுங்க முன்னாடி எனக்குத் தோக்குறது சுத்தமா பிடிக்காது. நீ சொன்னதும் ஒரு நிமிஷம் அடுத்து என்னனு எனக்குத் தோணல. ஏன் இப்ப கெத்தா பேசிட்டுவந்துட்டேன். ஆனால், இப்ப கூட அடுத்து என்னனு எனக்குத் தெரியல.
ஆனாலும் நான் அவுங்க முன்னாடி தோத்து போகல. அதுக்கு உனக்குத் தான் நான் நன்றி சொல்லணும்” எனக் கூறிச் சென்றிருந்தான்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
ஆம்! அவர்கள் சொல்வதற்குமுன்னால் அந்த வேலையை வேண்டாமென்று சொல்லும்படி கூறியவள் பனிமலரே!
அன்றைய தினத்தில், பனிமலர் இதைக் கூறியபொழுது, பூதமும் பாட்டியும் பார்த்திபனிடம் கூறியது, ”எப்படிச் சட்டுனு வேலையிலயிருந்து நிப்பாட்ட முடியும் ? ட்ரைவர் சங்கத்திற்குப் போலாம்” இப்படித்தான் கூறினார்கள்.
ஆனால் பனிமலர்தான், “இல்ல வேணாம். அவுங்க என்ன சொல்றது ? அதுக்குமுன்னாடி நீங்க சொல்லுங்க. இந்த வேலை வேணாம்னு” என உறுதியாகக் கூறினாள்.
அவளிடம் எதையோ கூற முனைந்த பாட்டியை தடுத்தவள், “பாட்டி, அவுங்களுக்கு வேணும்ங்கிறது இவரு தோக்குறதை பார்க்கணும். வேலை வேணும்னு இவரு கெஞ்சுனாலும் மிஞ்சுனாலும் சரி, அவுங்க ஜெய்ச்சிடுவாங்க.
இவரு இனிமேல் எதுலயும் தோற்க கூடாது…நான் சொல்றதை கேட்பீங்களா ?” என அனைவரிடமும் பேசிவிட்டு, இறுதியாகப் பார்த்திபனிடம் கேட்டாள். எந்த துணிவில் அந்த வார்த்தையை கேட்டாளென்று அவளே அறியாள்! ஆனால் எதிர்பார்ப்புடன் கேட்டிருந்தாள்!!
பார்த்திபனின் முகம் தீவிர சிந்தனையைக் காண்பித்தது. ஆனால், பதிலெதுவும் சொல்லவில்லை! அமைதியாக அங்கிருந்து சென்றிருந்தான்.
மறுநாள் அவன் சென்று, அந்த வேலையைத் தூக்கி எரிய, பார்த்திபன் கர்வத்துடன் நடந்துவந்தான். அந்த நொடி, பார்த்திபனின் மனதினில் பனிமலர் நன்மதிப்பை முதன்முறையாகப் பெற்றிருந்தாள்…
‘நான் தோத்திடக்கூடாதுனு நான் நினைச்சது உண்டு. ஆனால், நமக்காக இன்னொருத்தரும் நினைக்கிறது புதுசா இருக்கு’ என்று அவன் மனம் முதன் முறையாக சிந்திக்க தொடங்கியது…
இவ்வாறு ஒருவர் மீது மற்றொருவருக்கு நன் மதிப்பும் மிக மெல்லிய நட்பும் தளிரிட தொடங்கிய நேரமது… பனிமலருக்கு சட்டென்று ஒரு சிந்தனை தோன்றியது. அதை உடனே செயல்படுத்தவும் துணிந்தாள். அது, பார்த்திபனின் மணவாழ்க்கை குறித்த முடிவு.
அதைத் தள்ளி போடவும் அவள் விரும்பவில்லை. காரணம், பார்த்திபனின் அன்னையை என்ன சொல்லி சமாதானம் செய்வதென்று அவளுக்குப் பிடிபடவில்லை. ஏனென்றால், அன்று அவள் கூறிய வார்த்தை, அதுவரை தாமினி தேவி கொண்டிருந்த எண்ணத்தை வெளியேறவே வடிகாலாய் இருந்தது.
உண்மையில், அவள் கூறிய அந்த ஒருவார்த்தையில் அவர்கள் பந்தம் உடையவில்லை. தாய் மகனுக்கு இடையிலான மெய்யான விரிசலின் காரணம் இரண்டு. ஒன்று, தாமினியின் மாமியாருடைய வார்த்தைகள், இரண்டாவது, பார்த்திபன் இந்தக் குடும்பத்தைத் தலை நிமிர செய்யும் காரியம் எதுவும் செய்யவில்லை என்ற அவருடைய எண்ணம்.
தற்சமயம், உண்மையைக் கூறுகிறேன் என்று முடிவெடுத்து நின்றால், அது பார்த்திபனின் நிலையை இன்னமும் மோசமாக்கிவிடக் கூடும். ஆகையால், இதைப் பொறுமையுடனே கையாள வேண்டுமென்று முடிவெடுத்து கொண்டாள்.
அதிலும் தற்சமயம் பார்த்திபன் தொழில் முறையில் எந்தவொரு நிலையிலும் இல்லாத காரணத்தினால், இப்போது தாமினியை அணுகுவது இன்னமும் சூழலை சிக்கலாக்கிவிடும் என உணர்ந்து, அமைதி காத்தாள்!
அதேவேளையில் சூரியவர்மனையும், நித்ய கலாவையும் அணுக முயற்சித்துப் பலன் பூஜ்யமாகவே இருந்தது. நகையைத் தருவதாகக் கூறி பின்பு பின்வாங்கியவள் அவளல்லவா ?? இப்போதும் அந்நகைகளை அவர்களிடம் கொடுத்துவிட்டால், முறிந்த உறவு ஒட்டிக்கொள்ளக் கூடும். அவர்களின் தேவை பணமல்லவா?
ஆனால் அதைப் பனிமலர் செய்யத் தயாராக இல்லை. அவள் உடைத்த அண்ணன் தம்பி உறவு எப்பேற்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால், மீண்டும் இணைக்க நினைக்கும் உறவு, பார்த்திபனுக்கு உண்மையான உறவாக, பணத்தைவிடப் பாசத்தை மதிக்கும் உறவாக இணைய வேணுடுமென்ற உறுதி அவளுள் இருக்கவே, அந்த வழியிலும் அவளால் நெருங்க முடியவில்லை.
ஆக, அவளுக்குப் பார்த்திபன் இழந்தவைகளில் எதையுமே திரும்பி கொடுக்க இயலாமல் இருந்தது. அப்போது தான் சட்டென்று அவளுடைய மனதில் தோன்றிய முகம், அம்சவேணி!
“ஆமா! உன்னைப் பார்த்திபன்கிட்ட இருந்து காப்பாத்துவதா நினைச்சிட்டு உன்னோட கல்யாணத்தை நிப்பாட்டிட்டேன். அதை நானே சரி பண்றேன்…” எனச் சிந்தையிலிருந்த அமசவேணியின் உருவத்திடம் தனக்குத் தானே சொல்லிக்கொண்டு, அவளைக் காண முடிவு செய்திருந்தாள்.
இதோ அவளுடைய எண்ணத்தைச் செயலாக்க இப்பொது கிளம்பியும்விட்டிருந்தாள், பனிமலர்!
அவசர அவசரமாக வீட்டை பூட்டியவளை, “பூட்டு போட்டு பூட்டுறதுக்கு அதுக்குள்ள என்னமா வச்சிருக்க ? நாலு தட்டிய உருவுனா உள்ள போய்டலாம்…. அப்படி எங்க அவசரமா கிளம்புற ?” என வந்து நின்றான் பூதம்.
“நான் பண்ணின தப்ப சரி பண்றதுக்கு அண்ணா?”
“என்ன நீ சட்டு சட்டுனு நாண ஒளி பெற்ற சாமியார் போலப் பேசுற?” எனப் பூதம் கூற,
“அயோ அண்ணே! அது நாண இல்ல ஞான” எனத் திருத்தம் செய்ய,
“என்ன திருத்துறது இருக்கட்டும். வேற எதையோ திருத்த போறேன்னு சொன்னியே ? அது என்ன ?” எனக் காரியத்தில் கண்ணாய் நின்றான்.
“அம்சவேணி அண்ணா! நல்லா நடக்கப் போன கல்யாணத்தை நிப்பாட்டி பெரிய குழப்பம் பண்ணிட்டேன். அதைத் தான் திருத்த போறேன்! ” எனப் பனிமலர் சொல்ல,
“என்ன பண்ண போற?” எனப் பூதம் திகிலுடன் கேட்க,
“அம்சவேணிகிட்ட பேசி, பார்த்திபனோட சேர்த்துவைக்கப் போறேன்” எனக் கூற,
“அடப்பாவி அவகூடச் சேர்த்துவைக்கிறதுக்குப் பதிலா, திங்கிற சோத்துல விஷத்தை வச்சிடு. நல்லவேளை நீ கிளம்பி பார்த்தி வாழ்க்கைல குழம்பு வைக்கிறதுக்கு முன்னாடி வந்தேன்…
இந்தப் பஞ்ச பூதம் மட்டும் வராட்டி என்ன ஆகியிருக்கும் ?” எனப் பூதம் பதட்டமாகப் பேச,
“என்ன சொல்றீங்க? நான் நல்லது தானே பண்ண போனேன்” எனக் கூற,
“நல்லதுன்னு நாங்க சொல்லணும். நீயா சொல்லிக்கிட்டா ? இந்தக் கல்யாணத்தை எப்படி நிப்பாட்டலாம்னு நாங்களே அடிச்சு பிடிச்சு ஓடிவந்தோம். நல்லவேளை அது நின்னு போச்சுன்னு நிம்மதியா இருக்கோம்.
முடிஞ்சதுக்குப் பிள்ளையார் சுழி போடுற ? ப்ளடி ராஸ்கல்” எனப் பூதம் அவனின் பாணியில் சொல்ல,
“அப்போ பார்த்திபனுக்கு அம்சாவை பிடிக்காதா?”
“அம்சாவும் பிடிக்காது சமோசாவும் பிடிக்காது…” எனப் பூதம் ரைமிங்காகக் கூற,
“அப்போ வேற என்ன பிடிக்கும்? சாப்பிட்றதுல ?” எனக் கேட்டாள். அப்படி ஏன் பனிமலர் கேட்டாள் என்று அவளுக்கு அந்த நொடி தெரியவில்லை. ஏனோ, பார்த்திபனுக்குப் பிடித்தது எதையேனும் செய்யவேண்டுமென்ற உந்துதல் மட்டும் இருந்து கொண்டே இருந்தது.
                                                                                                                                                                                   
அதோடு அங்கு இன்னுமொரு கவனிக்கப்படவேண்டிய மெல்லிய உணர்வும் அவளிடம் மாறுபட்டிருந்தது. அம்சவேணியைச் சந்திக்கவேண்டுமென்று அவள் புறப்படும் வேளையில் இன்னதென்று விவரிக்க முடியாத அழுத்தம் அவள் மனதில் இருந்தது என்பதும், பூதத்தின் வார்த்தைகளுக்குப் பிறகு, அழுத்தம் குறைந்து மிக இலேசான உணர்வும் அவளுள் ஏற்பட்டது.

Advertisement