Advertisement

பகுதி – 20
பூதத்தின் அம்மா, தங்களுடைய பணியார கடையைப் பார்த்துக்கொள்ளும்படி பூதத்திடம் அறிவுறுத்திவிட்டு, பக்கத்தில் ஒரு வேலையாகச் சென்றிருக்க, ஆழ்ந்த சிந்தனையில் பூதம் அமர்ந்திருந்தான்.
‘இவுங்க இரெண்டுபேரையும் கோர்த்துவிடணும்னு முடிவு செஞ்சாச்சு. ஆனால் எப்படினு தெரியலையே… முன்னேபின்ன லவ்ஸ் பண்ணிருந்தால் தெரிஞ்சிருக்கும்… எவண்ட போய் ஐடியா கேக்குறது ?’ எனத் தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தான்.
அப்போது பூதத்தின் எதிரே வந்தமர்ந்த நண்டோ, “என்ன அண்ணே ? சிந்தனை சிலோன் வர போகும்போல…ரொம்ப நீளமா யோசிக்கிறீங்க” எனக் கேட்க,
“ஆமாம் டா நண்டு. ஆனால் என்ன பிரயோஜனம் ? ஒன்னு சிக்கமாட்டிங்கிதே…” எனப் பூதம் சலிப்புடன் கூற,
“நான் ஒரு வழி சொல்லுறேன் கேட்குறீங்களா?”
“டேய் நீயா? உன்ன நம்பலாமா ? சரி சொல்லு நாயே ?”
“படம்லா பார்த்திருக்கீங்களா? அதுல யாராச்சும் எதையாச்சும் யோசிக்கனும்னா, ஒரு குளத்துக்குப் போய் உக்காந்து ஒவ்வொரு கல்லா எடுத்து லொட்டு லொட்டுனு போடுவாங்க. அதேயே பார்த்திட்டு இருப்பாங்க…அப்படியே யோசனை வந்திரும்” என நண்டு தீவிரமாகக் கூற,
பூதமும் யோசனையானான்…
“நிசமாதான் சொல்லுறியாடா?” எனப் பூதம் உறுபடுத்திக்கொள்ளும் நோக்கோடு கேட்க,
“நிஜம் தான்…” என நண்டு அடித்துக்கூறினான்.
“எல்லாம் சரிடா…ஆனால் நம்மவூரு குளத்துலதான் தண்ணி இல்லையே… தண்ணி வந்ததா சரித்திரமும் இல்ல. அட அதை வச்சு தான் நம்மவூரு அரசியல்வாதிங்க தண்ணி வரும் தண்ணி வரும்னு சொல்லி தேர்தல் வாக்குறுதி கொடுக்குறாங்க.
மாறி மாறி தேர்தல் தான் வருது…தண்ணிமட்டும் வந்தபாடில்லை. இதுல நான் எங்க போய்க் கல்ல போடுறது ?” எனப் பூதமும் தீவிரமாக விவாதத்தில் இறங்கினான்.
“அப்படிக்கேளுங்க…ஐடியா சொல்லத்தானே இந்த ஐடியா நண்டு இருக்கான்.
நான் உங்களுக்கு எதுத்தமாதிரி தட்டு எடுத்துட்டு உக்காந்துகிறேன். தட்ட நீங்க குளமா நினைச்சுக்கோங்க. கல்லுக்குப் பதிலா பணியாரத்தை நீங்க எடுத்துக்கோங்க.
ஒவ்வொரு பணியாரமா இந்தத் தட்டுக்குள்ள லொட்டு லொட்டுனு போடுவீங்களா….” என நண்டு கூறிக்கொண்டிருக்கும் பொழுதே, இடை புகுந்த பூதம்,
“நீ மொக்கு மொக்குனு ஓசில பணியாரம் மொக்க என்கிட்டே ஐடியா சொல்றேன்னா வர? படாவ…எடு அந்தக் கம்ப…
ஓசி பணியாரத்துக்கு நாய்க்குப் பேச்சை பாரு…” எனக் கொலைவெறியுடன் பூதம் கம்பை எடுக்க, நண்டு ஓட, அவர்களின் சண்டைக்கு ஒரு முடிவை கொண்டுவரவென அங்கு வந்து சேர்ந்தான் பார்த்திபன்.
பார்த்திபனின் சோர்ந்த முகத்தை பார்த்த பூதம் அப்படியே நின்றவன், “என்னாச்சு நண்பா ? ஏன் டல்லடிக்கிற ?” என கேட்க, 
“இன்னைக்கும் முதலாளிய பார்க்க முடிலடா…கார் இருக்குது…ஆனால் அவரு இல்லனு சொல்லுறாங்க. போன் போட்டேன், நாளைக்கு ரைஸ் மில்லுக்கு வர சொல்லிருக்காரு….அங்க பாக்குறாராம்” என சிந்தனைகளோடு கூறினான். 
“எப்பா அது வேலுசாமி மில்லு தானே? அங்க எதுக்கு ? ஆனால் அங்கையும் லோட் இறக்குறது நம்ம டிரான்ஸ்போர்ட் தானே ? அதுனாலவா ?” என பூதம் அவனே கேள்விகளையும் பதில்களையும் யூகங்களாக கொடுத்துக்கொண்டான்.
இவர்கள் இதை இங்குப் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில், மலருக்கு அப்போதுதான் வேலுசாமியும் பார்த்திபனின் முதலாளியும் திட்டமிட்டது நினைவில் வந்தது…
குற்ற உணர்விலும் அடுத்து எங்குச் செல்வதென்ற குழப்பத்திலும் திகைத்து நின்றவளுக்கு அந்த நொடி, வேலுசாமியின் திட்டம் மனதில் தோன்றவில்லை. பூதமும் பார்த்திபனும் சென்ற சில பல நிமிடங்களுக்குப் பிறகே, மலர் மெல்ல மெல்ல நடந்ததை அசைபோட்டுக்கொண்டிருந்தாள்.
அவ்வாறு அசைபோட்டதன் விளைவாய், அவள் கேட்க நேரிட்டதைப் பார்த்திபனிடம் தெரியப்படுத்தவேண்டுமென்று அவன் வருகிறானா என வீதியை பார்த்தபடி மாடியிலையே நின்றிருந்தாள்…
“என்ன? முட்டு வீதில நின்னு முறைச்சு முறைச்சு பாக்குறவ ?” எனக் கேட்டபடி பின்னோடு வந்து நின்றார் பூவம்மாள் பாட்டி.
எதிர்பாராவிதமாகப் பின்னே கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பியவள்,”ஊப்” எனப் பெருமூச்சு விட்டாள்.
“என்ன ஆத்தா? இதுக்கே பயப்படற. அப்படி என்னதான் பார்த்திட்டு இருக்க” என விசாரிக்க,
“இல்ல! அவரு வராரன்னு தான்…” என இழுக்க,
“அப்படிப் போடு. என்னடா இதுக்கு ஒன்னுக்கொன்னு கண்டுக்காம இருக்குதே…இதுங்க நிசத்துக்கே இஷ்டப்பட்டுதான் கட்டிக்கிச்சுங்களானு யோசுச்சேன்.
இப்ப உன்னோட கண்ணு தேடறதே தெரியுது…உனக்கும் எம்புட்டுப் பிரியம் இருக்குதுனு…” எனப் பரிவுடன் கூற, பனிமலரோ பதிலாய் புன்னகையை மட்டும் சிந்தினாள்.
அவள் மனமோ, ‘இவுங்ககிட்டெல்லாம் எப்படி நான் உண்மைய சொல்லப்போறேன்? பொய் சொல்லுறப இருந்த தைரியம் உண்மைய சொல்லுறப்ப ஏன் வரமாட்டீங்குது ?’ என எண்ணமிட்டது.
“கொஞ்சம் பொறு, அவனைக் கூட்டியார சொல்லறேன்” எனக் கூறியவர், நிமிடத்தில் ஒரு சிறுவனை அழைத்து, “அடே! பார்த்திபனை கூட்டிவா. அவன் பொண்டாட்டி தேடுறா…” என உரக்க கூற,
ஒரு நொடி, பாட்டியின் கணீர் குரலில் அந்தத் தெருவே திரும்பி பார்த்தது. 
பாட்டியின் சொல்லை கேட்டுக்கொண்ட அந்தச் சிறுவனோ, “பார்த்தி அண்ணே பார்த்தி அண்ணே” எனப் பூதத்தின் தெருவினில் நுழையும் போதே ஏலமிட்டுக் கொண்டே செல்ல,
பூதமோ, “என்னடா ? பார்த்தி அண்ணே என்ன பப்புசா ? கூவி கூவி விக்கிற ?” என இலந்தடிக்க,
“நான் விக்கல. அங்க அந்த அக்காதான் பார்த்தி அண்ணே வேணும்னு கேக்குறாங்க” எனக் கூற,
“அதுயாருடா?”
“அந்த அக்கா அண்ணே. பார்த்தி அண்ணே சம்சாரம்…ஒடனே பார்த்தி அண்ணனை பார்க்கணுமாம். இப்பவே” எனக் கூறிவிட்டு ஓட, அங்குக் கூடியிருந்த ஒருசிலர், தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
“புதுக் கண்ணாலாம்ல, புதுப்பொண்டாண்டி, சின்னசிறுசுல” என்பன போன்ற வார்த்தைகள் விழ, பூதமோ, “என்னோட ஒர்கவுட் இல்லாமையே ஒர்கவுட் ஆகிடுச்சா?” எனச் சப்த்தமாக முணுமுணுக்க,
“டேய்! வா மொதல்ல, அவ என்ன நினைச்சிட்டு இருக்கா ?” எனப் பார்த்திபன் கடுப்புடன் அங்கிருந்து சென்றான்.
“என்னதான்டா நினைச்சிட்டு இருக்கா இவ? போனா போகுதுனு தங்கவிட்டால், பொண்டாட்டின்னுலாம் பேச்சு வருது…” எனப் பூதம் காதை கடிக்க,
“தாலி கட்டிக்கிட்டா பொண்டாட்டின்னு சொல்லாமல் பன் ரொட்டி னா சொல்லுவாங்க…?
ஹ்ம்ம் என்னத்த பண்ண ? நிஷத்துல பொண்டாடினா அந்தப் பிள்ளை காதை கடிச்சிருப்பான். இல்லாதனால, நம்ம காதை கடிக்கிறான் போல” எனத் தனக்குத் தானே பேசுவதைப் போலப் பேசிக்கொண்டே உடன் நடக்க, பார்த்திபனின் அழுத்தமான பார்வைகள் பூதத்தின் மீது பதிய, பூதம் தலையை திருப்பிக்கொண்டு பார்த்திபனின் கோவத்திலிருந்து தப்பிக்க வேகத்தை கூட்டினான்.
“நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்க?? பொண்டாட்டியா நீ எனக்கு ?” என்ற வார்த்தைகளோடு தான் பார்த்திபன் மாடிக்கே வந்து சேர்ந்தான்.
இத்தனை எரிச்சலுக்குக் காரணம் அந்த வார்த்தை மட்டுமல்ல; அவன் முதலாளியை பார்க்க முடியாததுமே! அவனுடைய இந்த மனநிலையில் அங்கே நின்ற பாட்டியை முதலில் கவனத்தில் கொள்ளாமல் கூறியிருந்தான்.
“என்ன ராசா சொல்லுற? இவ உனக்குப் பொண்டாட்டி இல்லையா ?” எனப் பூவம்மாள் பார்வையைக் கூர்மையாக்கி வினவ,
“பாட்டி, பொண்டாட்டிக்கு புருஷனும் புருஷனுக்குப் பொண்டாட்டியும் இருக்குறது சகஜம் தானே?
நீ எனக்குப் பொண்டாட்டியானு புருஷன் கேட்டுட்டால், புருஷனுக்குப் பொண்டாட்டி இல்லனு ஆகிடுமா ? இல்ல பொண்டாட்டிக்கு புருஷன் தான் இல்லனு ஆகிடுமா ?
நீயே சொல்லு” எனப் பூதம் பூந்து வாய்ஜாலம் காண்பித்துப் பாட்டியை திசை திருப்ப,
“நான் சொல்றது இருக்கட்டும். மொதல்ல நீ என்ன சொல்லுற ? கண்டமேனிக்கு உளறாம போ அங்குட்டு” எனப் பாட்டி சத்தம் போட,
“சைடுக்கா போகணுமா? போய்டுறேன். ஆனால் பாட்டி என்ன சொல்லிட்டு நீ நடுவுல உக்காராத. கரடின்னு சொல்லிடுவாங்க…” என வாய்க்கு வாய் பேசி, பாட்டியின் கையால் இரெண்டு அடியை வாங்கிக்கொண்டான்.
பஞ்ச பூதம் இருக்குமிடத்தில் பேச்சுக்கேது பஞ்சம்? பாட்டியுடன் அவன் ரகளையில் இறங்கிவிட, பார்த்திபன் தான் சற்றே அருகே வந்து, “எதுக்குத் தான் கூப்பிட்ட என்ன ஆச்சு ? ஏதோ போன போகுதுனு இருக்கேன். எம் பொறுமைய தினசரி சோதிக்க வேணாம். வீட்டுக்கு வரவே பக்கு பக்கு இருக்கு…கொஞ்ச முன்னாடிதான மன்னிப்பெல்லாம் கேட்ட ? இப்ப என்ன ? உன்னோட அடுத்த திட்டத்தை ஆரம்பிச்சுட்டியா ?” என இழுத்து பிடித்த பொறுமையுடன் தான் பார்த்திபன் வினவினான்.
பார்த்திபனின் கருத்தில் பனிமலர் எங்குமில்லை… அவனின் வாழ்க்கையில் அவள் ஒரு சாலை விபத்து. சேதாரம் அவனுக்கு மட்டுமே! அதனால் அதை அவன் பெரிது படுத்தவில்லை.
அவளால் ஏற்பட்ட பிளவுகளும் விரிசல்களும் கூடத் தன்னுடைய குடும்ப அன்பில் அஸ்திவாரம் சரியில்லாததால் ஏற்பட்டதே ஆகும் என்ற புரிதலுக்கு வந்திருந்தான். இங்கு அடுத்தவனைக் குற்றம் சொல்வதைவிட உடைந்து நொறுங்கிய தனது உறவுகளையே அவன் புரிந்துகொண்டான்.
ஆனால் மலர் இங்கையே தங்கிவிட முடியுமா ? என்பதற்கும் அவனிடம் விடையில்லை. பனிமலர் பார்த்திபன் இந்த இருவரின் பாதை என்ன ? இந்த நாடகத்தின் அவசியமென்ன ? இதன் முடிவு தான் என்ன ? எதுவும் அவன் யோசிக்கவில்லை. யோசிக்கும் நிலையிலும் இல்லை.
அவனுக்குத் தற்சமயம் அவனுடைய வேலை மட்டுமே பிரதானம்….
மலர் என்ற பெண்ணிற்குப் போக்கிடம் இல்லை. தெரிந்தோ தெரியாமலோ அவளுடைய பெயர் அவனுடைய பெயரோடு இணைந்துவிட்டது… அவள் விரும்பும் போதினில் விலகி செல்லட்டும்… அவளை அவசரமாய் விலக்கி அனுப்பவோ தன்னை அன்போடு அனுசரிக்கவோ எந்தவொரு நிர்பந்தமோ நிஜமான உறவுகளோ இல்லை. அதனால் நதியின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படும் இலையைப் போல வாழ்க்கையை அதன் போக்கில் ஓடவிட்டான்.
எத்தனையோ நபர்கள் அவனுடைய லாரியில் பணமில்லாமல் லிப்ட் கேட்டு சென்றதை போன்றதொரு எண்ணம் மட்டுமே பார்த்திபன் மனதில். இப்போது அவனுடைய கோபத்திற்குக் காரணம் கூட, அவனுடைய பனி நிமித்தம் ஏற்பட்ட அழுத்தமே!
“நான் ஒன்னு அடுத்த திட்டம் போடல. இனிமேல் அதுக்கு எனக்கு அவசியமும் இல்லை. இதுவரைக்கும் நான் செஞ்சதுக்குப் பரிகாரம் செய்யலாம்னு தான் உங்களைத் தேடுனேன்” என மலர் உள்ளே போன குரலில் கூறினாள்.
“என்ன சொல்லுற ?” எனப் பார்த்திபன் வினவ, பாட்டி இடை புகுந்தார்….
“என்ன இரெண்டு பெரும் இப்படி இரகசியம் பேசிக்கிறீங்க… பூதம் சொன்னது போல இங்க நான் கரடி தான் போலவே” என அங்கலாய்க்க,
“இல்ல பாட்டி, இவுங்ககிட்ட…” எனப் பனிமலர் எதையோ விளக்க முயல, பாட்டி தடுத்தார்.
“அதென்ன? எப்பவும் அவுங்க இவுங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்க. ஒழுங்கா மாமான்னு சொல்லு. கட்டிக்கிட்டவனை மாமான்னு தானே கூப்பிடனும். அதானே வழக்கம்…என்னடா பூதம் ?” எனப் பாட்டி அதட்ட,
“நான் எப்படி அப்படிக் கூப்பிட முடியும்?” எனச் சட்டென்று பனிமலர் பதிலளிக்க,
“ஏன் கூப்பிட முடியாது?” என்ற கேள்வியை மீண்டும் பூவம்மாள் எழுப்பினார்.
மலரின் அருகே பாய்ந்து சென்ற பூதமோ, “இந்தம்மா மலரு ! எல்லாத்தையும் சரி பண்ணுறேன்னு சொன்னதானே ? இப்போதைக்குப் பாட்டி சொல்லுறதை கேளு… மத்ததைப் பொறவு சொல்லுறேன்” எனப் பூதம் கூற,
“இருந்தாலும் மாமான்னு எப்படிச் சொல்ல முடியும்?” என மலர் தயங்க,
“வாமா போமா பூமா மாதிரி இந்த மாமாவையும் சொல்லேன் மா… யோசிக்கிறேன்னு உசுர வாங்காதீங்க…முடியல” எனப் பூதம் சலித்துக்கொண்டான்.
அப்போதும் மலர் எதுவும் சொல்லாமல் இருக்க, பாட்டியோ, “எதுவோ சரியில்லை…” எனக் கூற, பார்த்திபனோ, “பாட்டி நீங்க சும்மா இருங்க!” எனக் கண்டிப்பான குரலில் கூறினான்.
பூதம் கிடைத்த வாய்ப்பை நழுவ விட தயாராக இல்லை. தற்செயலாக அமைந்தாலும் அதைத் தனது ஆசைக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்க நினைத்தான்.
“இந்தா மலரு. உங்க அம்மாவோட தம்பிய எப்படிக் கூப்பிடுவ ?” என மெல்ல அவளிடம் வினவ,
“எங்க அம்மாக்கு தான் தம்பி இல்லையே?” எனப் பதிலளித்தாள்.
“ரொம்ப முக்கியம். இப்ப தம்பி இல்லனு தத்தா எடுக்க முடியும்? அட இருந்திருந்தால் எப்படிக் கூப்பிட்டிருப்ப ?” எனக் கேட்க,
“மாமா…” என மலர் சொல்ல, “ஆ…பாட்டி மலர் நண்பனை மாமான்னு சொல்லிடுச்சு….” எனக் கூச்சலிட்டான்.
பூதம் எப்படிக் கூச்சலிட்டானோ, அப்படியே பனிமலரின் மனமும் பார்த்திபனின் மனமும் அந்த வார்த்தையை ஒவ்வாமல் கூச்சலிட்டுக்கொண்டிருந்தது.
பனிமலருக்கு, ‘இதுவரை இப்படி யாரையும் அழைத்ததில்லையே… இனி இப்படித் தான் இவனை அழைக்கவேண்டுமா ? முடியாதே!’ என முரண்டு பிடிக்க,
பார்த்திபனின் மனமோ, ‘இருக்கப் பிரச்சன்னை பத்தாதுன்னு இந்தப் பிரச்சனைவேறையா ? என்ன சுத்தி நடக்குறதுலாம் நினைச்சு பார்த்தால், சிரிக்கிறதா அழுக்குறதானு கூடத் தெரில. மாமா இந்த வார்த்தையைக் கேட்டாலே கெட்ட கோவம் வருது…..’என எரிச்சல் கொண்டது.
இருவருடைய மனமும் ஒரே கோணத்தில் ஒரே வார்த்தையை நோக்கி பயணப்பட, பூவ்வம்மாள் அவர்களை நடப்பிற்கு இழுத்தார். 
“சரி ஆத்தா…நாங்க புறப்படுறோம். நீ புருஷனை கவனி” என கூறிவிட்டு, பூதத்தை கையோடு அழைத்துக்கொண்டு கிளம்ப முயல, 
“பாட்டி பாட்டி பூதம் அண்ணா இருக்கட்டும். நீங்களும் தான்… ரொம்ப முக்கியமான விஷயம்.” என அவசரமாக தனது சிந்தனையிலிருந்து வெளிவந்தவள், செல்கின்றவர்களை தடுத்தாள்!
என்ன என்பது போன்று அனைவருடைய பார்வையும் கேள்வியாக இருக்க,
“எனக்காக நீங்க ஒன்னு பண்ணனும்… முடியாதுனு சொல்லாம நிச்சயமா நீங்க அதைச் செய்யணும்” எனப் பார்த்திபனை நோக்கி ஸ்திரமாகக் கூறினாள், மலர்!
இந்த த்வனி, அவளுக்கு அவனின் மீது உள்ள உரிமையால் வந்ததில்லை. அவன் தன்னால் மேலும் தலை குனிய கூடாதென்ற உறுதியால் வந்தது….
மலரின் இந்த த்வனி பார்த்திபனை சிந்திக்கவைத்தது…
‘என்ன இவ? உரிமை எடுக்குறாளோ ? இதுபோல என்கிட்ட எப்படிப் பேசமுடியும் ? மொதல்ல, பொண்டாட்டி போலக் கூப்பிட்டு வர சொன்னாள், இப்போ அதிகாரம் பன்றாளோ ? இது சரி இல்ல’ என அவன் மனம் சிந்தனையை ஓடவிட,
“சொல்லுங்க…நீங்க செய்வீங்கதானே?” என ஒலித்த மலரின் குரல், பார்த்திபனை எரிச்சலூட்டியது. இத்தென்னை காலம் அவள் என்னென்ன செய்தாலும் ஊராரிடம் சொன்னாலும் தனிப்பட்டமுறையில் அவள் பழியைத் தான் காண்பித்தாளே ஒழிய உரிமையை அல்ல.
ஆனால், இப்போது நடப்பது எல்லாமே பார்த்திபனுக்குப் புதிதாகவும் இருந்தது, பிடிக்காமலும் இருந்தது….
‘இவள் யார்?’ என்ற கேள்வி தான் அவனுடைய மூலையில் முந்திக்கொண்டு முளைத்தது.
“அட நீ என்ன ஆத்தா? பொண்டாட்டி சொல்லி புருஷன் கேட்காம இருப்பானா ? நீ விஷயத்தைச் சொல்லு” எனப் பாட்டி இடை புக,
“ஆமாம் மலரு… போடு உன் ஆர்டர். இப்பெல்லாம் பொண்டாட்டி மட்டுமே போடணும் ஆர்டர். புருஷன்லாம் ஹோட்டல்ல சாப்பாட்டைத் தவிர வேற எதையும் ஆர்டர் பண்ண கூடாது…. ” என இருவரையும் கணவன் மனைவி என உறவு வைத்து பேச, மலர் இதைக் கருத்தில் கொள்ளவில்லை. அவளுடைய எண்ணமெல்லாம், வேலுசாமியின் திட்டத்தில் இருந்தது…
ஆனால், பார்த்திபன் இதைக் கவனிக்கத் தவறவில்லை. 
கவனித்தவன், பூதத்தை முறைக்க, பூதமோ, “என்ன ஏண்டா குறுகுறுன்னு பாக்குற ?” என அப்பாவியாக முகத்தை வைத்து அந்த நேரத்திலும் இலந்தடிக்க, அங்கிருந்த எவருக்குமே நிலைமையின் தீவிரம் தெரியவில்லை.
பார்த்திபனுக்கோ பூதத்திற்கோ அவர்களின் வாழ்க்கையின் பிரதானமே அவர்களின் வேலை தான். அதுவே இனி இல்லையென்றால், அது அவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சாய்த்துவிடும். அதைப் புரியவைக்கவே மலர் முயன்றுகொண்டிருக்க, பேச்சுக்கள் நாலாபக்கமும் திசைதிருப்பப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது…
ஒருவேளை அது தெரியவந்தால்? பார்த்திபன் பூதத்தின் மனநிலை எப்படியிருக்கும் ? அதையும்விட, பார்த்திபனின் தோல்வியைக் காண துடிக்கும் வேலுசாமியின் முன் பார்த்திபனின் செயல் என்னவாக இருக்கும் ?
வீழ்வானா ? மீள்வானா ?

Advertisement