Advertisement

பகுதி – 2
“யோவ்! இன்னைக்கு என்னோட வண்டிக்கு தான் சரக்கு” என அடாவடியாக ஒருவன் வந்து ஒரு வயதான ஓட்டுனரிடம் மிரட்டிக்கொண்டிருந்தான். அவன் சரக்கை இறக்கிவிட்டு வந்ததே இன்று தான். இன்றைய நாளில் மொத்தம் இரண்டு வண்டிகளுக்கு மட்டுமே லோட் ஏற்ற முடியும். ஒன்று அந்த முதியவரின் வண்டி, மற்றொன்று பார்த்திபனின் வண்டி.
மொத்தமாக பொட்டல் காட்டில் இருபத்தி ஐந்து வண்டிகள் சரக்குக்காகக் காத்திருந்தன. அதில் அந்த முதியவரின் வண்டி வரிசைப்படி பதினோராம் எண். பார்த்திபனின் வண்டி பன்னிரெண்டாவது.
தற்போது, அந்த முதியவர் வரிசையை விட்டுக் கொடுத்தால், அவர் மீண்டும் பின்னாடி தள்ளப்படுவர். அஃதாவது இருபத்தி ஆறாவது எண்ணுக்கு தள்ளப்படுவர். வரிசைப்படி வருவதற்கு இன்னும் பத்து நாட்கள் பிடிக்கும்.
“ஏப்பா… உனக்கே இதெல்லாம் நியாயமா படுதா? பத்துநாளா பனிலையும் வெயிலையும் காஞ்சு சரக்கு எடுக்கப்போற நேரத்துல இப்படி அடாவடி பண்றியே ? இதெல்லாம் நல்லா இல்ல” என ஆற்றாமையோடு குரல் கமற கூறினார்.
கேட்டவனின் குரல் தோரணை என அனைத்துமே பார்த்திபனின் கோவத்தை மெல்ல மெல்ல எகிற வைத்துக்கொண்டே இருந்தது. அடுத்த வாய் காபியை முழுங்க மறுத்தன அவன் தொண்டை..
மூட்டை தூக்கி தூக்கி இரும்பென இருகியிருந்த தசைகளை மீறி நரம்புகள் புடைக்கத் தொடங்கின. மிகச் சாதாரணமாக, இருந்த இடத்திலிருந்து எழுந்தான்.
“விட்டுடு! காத்திருக்கவங்க கேனையுமில்லை. அதற்றவன் வீரனுமில்ல. ஒதுங்கிடு” எனக் கூறிக்கொண்டே கழுத்திலிருந்த துண்டை எடுத்துத் தலையில் முண்டாசை போலக் கட்டிக்கொண்டே முன்னேறினான் ,பார்த்திபன்.
“பாரடா… வீரத்தை பத்தி பேசுற வீரரு வராரு. பயமாயிருக்கே” என நக்கலாகக் கையைக் கட்டி குனிய, குனிந்தவன் நிமிர்வதற்குள் ஓங்கி ஓர் அடி அடித்திருந்தான் பார்த்திபன்.
என்ன நடந்ததென்று தெரிவதற்குள் அவன் மண்ணில் விழுந்திருந்தான். ஒரு நிமிடம், அவனுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. அடியின் வீரியம் அவனை அசரடித்திருந்தது..
“மனுஷனுக்கு வாய் அளவா இருக்கனும். இல்லாட்டி வாயே இல்லாம போய்டும்” என எச்சரித்தவன் , அந்த முதியவரை நோக்கி, “என்னையா ? நீங்க ஏன் இவன போலச் சில்லரைகிட்டலாம் கெஞ்சுரீங்க..உழைக்கிறவங்க கெஞ்ச கூடாது. ஞாபகம் வச்சுக்கோங்க. போய் லோட் ஏத்துங்க..” என அவரிடம் கூற, அதற்குள் கீழ் விழுந்தவன் எழுந்து கைபேசியில் யாரையோ அழைக்க, அடுத்தப் பத்துநிமிடத்தில் ரோந்திலிருந்த எஸ்.ஐ சுசீந்திரன் வந்து சேர்ந்தான். அடிவாங்கியவனுக்கு ஆதரவாக!
“டேய்! எவண்டா இங்க ரவுடி தனம் பண்ணது ? யாருடா” என அதட்டல் தொனியில் பைக்-ஐ விட்டு இறங்கியபடி கத்த, அடிவாங்கியவன் வேகமாக முன்னேறி, “சார், இவன் தான்..” எனப் பார்த்திபனை சுட்டி காண்பித்தான்.
அந்த லாரி ஓட்டுனருக்கும் சுசீந்தரனுக்கும் சம்மந்தம் இருவரும் அடவாடிகாரர்கள் என்பது மட்டுமே.
பார்த்திபனை நோக்கி நேராகச் சென்ற சுசீந்திரன், பார்த்திபனின் பனியனை கொத்தாகப் பிடித்து இழுத்தபடியே, “வாய் பேசுனா வாய் இருக்காதா ? இப்போ என்னோட லத்தி பேசும். உன்னோட கை என்ன பண்ணுதுனு நானு பாக்குறே” என நக்கலாக இழுக்க, பார்த்திபன் நின்ற இடத்தினிலிருந்து அசைய மறுத்தான்.
மூடை தூக்கி தூக்கி இரும்பென உருமாறியிருந்த பார்த்திபனை கொஞ்சமும் அந்தச் சுசீந்தரனால் அசைக்க முடியாமல் போக, கடைக்காரரிலிருந்து வாடிக்கையாளர்வரை இதைக் காண, அந்த ஓட்டுநருக்காக வந்த சுசீந்திரனின் தன்மானம் சீண்டப்பட்டது.
இப்போது பார்த்திபனை அடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டான்.
பிடித்திருந்த பனியனை விட்டுவிட்டு, பைக்கில் தன்னோடு வந்த ஏட்டை நோக்கி, “யோவ் ஏட்டு அந்த இலத்திய கொண்டா” எனக் குரல் கொடுக்க, அவர் ஓடோடி வந்து பணிவுடன் கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்டவன், பார்த்திபனை நோக்கி இலத்தியை உயர்த்த, கை முஷ்டிகள் இறுக, “வேண்டாம் சார்! தப்பா இருக்கு..” என அடிக்குரலில் உறுமினான் பார்த்திபன்.
“ஓ நீ சொன்னா நான் கேட்கணுமா? யாருடா நீ ? யாரு…வண்டி ஒட்டி பொழைக்கிற அன்னாடக்காட்சி..எண்ட முறைக்கிற” எனக் கூறி, ஓங்கிய இலத்தியால் பார்த்திபனை அடிக்க, அவன் தன்னுடைய கரம் கொண்டு அடியை வாங்கினான்.
இலத்தியால் அடிக்கப்பட்ட இடம் சட்டென்று சிவந்து கண்ண தொடங்க, அவசர அவசரமாகப் பூதம் ஓடிவந்தான்.
“என்ன சார்…பேசிட்டு இருக்கும்போதே அடிக்கிறீங்க..நாங்க எங்க சங்கத்துல சொல்லுவோம். எதுக்காக சார் அடிக்கிறீங்க…” எனச் சற்றே முன்வந்து வினவ,
அதற்குள் கடை காரரும், “சார்..இந்த பசங்க நல்ல மாதிரி.. அடிக்காதீங்க சார்” எனப் பரிந்துகொண்டு வர,
“ஏண்டா போறவறவன்லாம் பேச துணுஞ்சுடீங்களா… நான் யாரு-னு இப்ப புரியும்..” எனக் கூறி, இலத்தியை கொண்டு கடையிலிருந்த ‘டி’ பாய்லரை தட்டி விட, மொத்தமும் மண்ணில் கொட்டி ஆறாய் ஓட,
மீண்டும் பார்த்திபன் மற்றும் பஞ்ச பூதத்தை நோக்கி வந்தவன், “நடடா” எனக் கூறி மறுபடியும் இலத்தியை உயர்த்த, 
“போலீஸ்கார் போலீஸ்கார்…மாறுதிகார் இருக்கா?” எனக் கால நேரம் தெரியாமல் பூதம் இடைப்புக,
“எதுக்குடா?” எனப் பல்லை கடித்தபடி சுசீந்தரன் வினவ,
“நாங்க வரதுக்குத் தான் சார்…” எனப் பூதம், கைகளை விரித்து, இராகமாக இழுக்க, கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருவன் பூதத்தின் பேச்சில் சட்டென்று சிரித்துவிட, சுசீந்திரன் கடுப்பின் உச்சத்திற்குச் சென்றான்.
“எவண்டா சிரிச்சது? யாரடா… எவனாச்சும் பல்ல காட்டுனீங்கா..” என வெறிபிடித்தவனாய் சுசீந்தரன் உறும, 
“ஆமா! பல்ல காட்டாதீங்க. மீறி காட்டினா, சாறு பல்ல விளக்கிவிட்டிருவாரு” என பூதம் துடுக்காக பேச, பூதத்தை அடிக்க இலத்தியை ஓங்கினான் சுசீந்தரன்.
அப்போது மிக சரியாக, காதை பிளந்துகொண்டு சைரன் சப்தம் ஒலிக்க தொடங்கியது.
அந்தச் சத்தத்தில் ஒரு நொடி நிதானித்த சுசீந்திரன் சாலையைக் காண, அங்கு வந்து ஒரு போலீஸ் ஜீப் நின்றது. அதிலிருந்து இறங்கி வந்தார், இன்ஸ்பெக்டர். விநாயகம்..
முறுக்கு மீசை, கருப்புக் கண்ணாடியெனக் கம்பீரமாய் இறங்கியவர், சுற்றத்தை பார்வையால் ஆராய்ந்தபடி சுசீந்தரனை நோக்கி முன்னேற,
பூதமோ, சுசீந்தரனை பார்த்தபடி மனதினுள், “இலத்தியா பேசும்னு சொல்லுற.. உனக்கு இப்ப இலாட கட்டவைக்கிறேன்” என மனதிற்குள் கருவிக்கொண்டவன்,
சட்டென்று கண்களில் கண்ணீரை வரவைத்தான்..
விநாயகம் மிடுக்காக, “என்னையா இங்க கூட்டம் ?” என வினவ,
பூதம் தேம்பி தேம்பி சத்தமாக அழத்தொடங்கினான்.
“யோவ், இங்க வா…யாரு நீ ? எதுக்கு அழுகுற ?” என அதட்டல் தொனியில் விசாரிக்க,
“இந்தப் போலீஸ் அண்ணே என்ன கதற கதற…” என இடைவெளி விட,
விநாயகம் ஒரு மார்க்கமாகச் சுசீந்தரனை பார்த்தபடி, “கதற கதற ?…” என வினவ,
“கதற கதற கதி கலங்க அடிக்கிறாருங்க. ஏன்… எதுக்குனே தெரில பெரிய போலீஸ்” எனக் கண்ணைக் கசக்க,
அக்கம் பக்கம் விசாரணையாக விநாயகம் பார்க்க, கடைக்காரன் ‘ஆமாம்’ எனத் தலை அசைத்தார்.
“ஆமா சார்! பாய்லர் கூடத் தள்ளி பொலப்புல மண்ணை அள்ளி போடறாருங்க” எனப் புகார் அளிக்க, சுசீந்திரன் தடுமாற தொடங்கினான். விநாயகம் ரொம்பவும் கறார் பேர்வழி. நீதி நேர்மையே கொள்கையென்றும் அதைத்தவிர வேறு எதற்கும் வளைந்துகொடுக்காத காக்கிசட்டைகாரர்!
சட்டென்று அவருக்கு ஒரு சலியூட்டை வைத்த சுசீந்திரன், “இல்ல சார்.. இவனுங்க பொய் சொல்லுறானுங்க.. காவாலி தனம் பன்னிட்டு இருந்தவங்கள கடமை தவறாம கண்டிக்கத் தான் சார் வந்தேன். இவனுங்க போட்ட தகராறுல தான் பாய்லர் கவுந்துடுச்சு” என விறைப்பாகப் பதில் கொடுக்க,
பூதத்தை நோக்கி, “உன் பேரென்னாயா ?” என விநாயகம் வினவ,
“பூதம் சார்…” எனப் பணிவுடன் கூறினான்.
“என்னையா? போலீஸ் மேலையே பொய் கம்பளைண்ட்டா?” என வினவ,
“சார், பூதம் ஒருநாளு பொய் பேசாது சொல்லிருக்காங்க சார்” எனச் சத்தியம் செய்து பாவனையாகக் கூறினான்.
“யாருயா சொன்ன?” என விநாயகம் விசாரிக்க,
“நான்தான் சார்… நான் பொய் சொல்லமாட்டேனு நானே சொல்லிகிட்டாதான் உண்டு. வேற யாரு சொல்ல போறா ?”என அப்பாவியாக வினவ,
விநாயகம் வாய் விட்டு சிரித்தார்..
“யோவ் சுசீந்தரா, வெள்ளந்தி ஜனங்ககிட்ட என்ன ஜம்பத்தைக் காட்டிகிட்டு…போய்க் குற்றவாளிய புடி. எவனையும் குற்றவாளியா மாத்தி பிடிக்காத. இனி இந்தக் கடைப்பக்கம் நீங்க ரோந்து வரவேண்டாம்.” எனச் சிந்திக்கிடந்த ‘ டி ‘ யை பார்த்தபடி, கண்டிப்புடன் கூற,
“சார் அந்தப் பாய்லரை நான் தட்டிவிடல.” என உள்ளே போன குரலில் சுசீந்திரன் கூற,
“ஆமா சார்…பாய்லரை சார் தட்டிவிடல. சாரோட இலத்திதான் தட்டிவிட்டுச்சு..” எனக் கூற, விநாயகம் சுசீந்தரனை பார்த்த பார்வையில், சுசீந்திரன் பற்களைக் கடித்தபடி அங்கிருந்து வெளியேறினான்.
“வம்பு வழக்குல மாட்டாம புலப்ப பார்த்துக் கிளம்புங்க…கூட்டம் போடாதீங்க…ஹ்ம்ம் கிளம்புங்க கிளம்புங்க..” எனக் அதட்டிய விநாயகம், செல்லும்போது, பார்த்திபனின் வலது கரத்தில் இலத்தி பட்டுக் கண்ணியிருந்த காயத்தைக் கவனிக்கவும் தவறவில்லை.
அதைப் பார்த்தபடியே சென்று தனது வண்டியில் ஏறி செல்ல, அந்த இடமே மழை அடிச்சு ஓய்ந்ததைப் போல இருந்தது.
அதன் பிறகு நேரம் தாமதிக்காமல், லோட் ஏற்றும் இடம் சென்று ஏற்றிவிட்டு வண்டியை தங்களின் சொந்த ஊர் நோக்கி வேகமெடுத்தனர்.
“ஏண்டா? எப்பவும் உனக்குக் கை நீளம். எப்படி அந்தக் காக்கி சட்ட கிட்ட அடிவாங்கிட்டு நின்ன ?” எனக் கேள்வியாக வினவ,
“அதா நீயே சொல்லிட்டியே…காக்கி சட்ட தான் காரணம். காக்கி சட்டைக்குனு ஒரு மதிப்பு மறுவாத இருக்குப் பூதம்.
ஆத்திரத்துல அந்த உடுப்ப அவமதிச்சிட கூடாது. அதா அமைதியா அடிய வாங்கிக்கிட்டே” எனப் பதில் கொடுக்க, பூதம் தலை அசைத்துக்கொண்டான்.
“ஏண்டா பூத, மாஞ்சு மாஞ்சு லோட் ஏத்துணியே. செத்த கண்ண அசரு” எனப் பார்த்திபன் கூற,
“வேணாம் நண்பா… தூங்குன கனவுல நைட்டி போட்ட நைய்யமா வருவா” எனப் பதில்கொடுத்தான்.
“அதென்னடா நைய்யமா?” எனப் பார்த்திபன் வினவ,
“நைய பொடைக்கிறாள. அதான் நையம்மா… கண்ண மூடுனாலே அவன்தாண்டா வாரா…
மூஞ்சி தெரியல. ஆனா கை நல்லா கரலா கட்ட போலக் கும்முனு இருக்கு நண்பா. கராத்தே கிராத்த தெருஞ்சுவளா இருப்பாளா இருக்கும்” எனத் தன் போக்கில் புலம்ப, லோட் -யை ஏற்றிக்கொண்டு வண்டி ஹை வேய்-யில் வேகமெடுத்தது.
“நண்பா, வண்டிய ஓட்டலா பார்த்து ஓரம் கட்டுடா…” என நெளிந்தபடியே பூதம் கூற,
“ஏண்டா? என்னாச்சு ?” எனப் பார்த்திபன் வினவினான்.
“இதெல்லாம் ஒரு கேள்வியாடா? ஒரு ஆம்பள அவசரம் ஆம்பளைக்குத் தெரியாதா ?” என வினவ,
பார்த்திபன், “டேய் அது பொம்பள மனசு தானே பொம்பளைக்குத் தெரியணும்” என எதிர் கேள்வி கேட்க,
“ரொம்ப முக்கியம்! இப்போ ஓரங்கட்டுரையா ? இங்னவே ஓப்பன் பண்ணவா ?” என வினவ,
“அடச்சீ” எனச் சலித்தபடியே, வண்டியை ஓரங்கட்ட, பூதம் தாவி குதித்து இறங்கினான்.
பாய்ந்து சென்ற பூதம் அவன் வேலையை முடித்துக்கொண்டு, “அண்ணாச்சி, முட்டையை வைக்க சொன்னா அவரு முட்டைக்கண்ண வச்சுட்டாரு போல ” எனப் புலம்பியபடி வர, எதிரே ஒரு வாடகை கார் வந்தது.
அந்தக் காரும் அவர்கள் நின்ற வண்டிக்கு பின்னே தான் வந்து நின்றது. ஏனெனில் அருகினில் ஒரு மொட்டைல்(Motel) அங்கு இருந்ததே காரணம். காரில் வந்தவர்கள் பெரும்பாலானோர் அந்த நெடுசாலை உணவகத்தில் ஏதொன்றை கொறிக்க வண்டியை ஓரங்கட்டினர்.
அந்தக் காரிலிருந்த ஒரு பெண், அழகாகச் சிரித்தபடி இறங்க, அவளைப் பஞ்சம் பூதம் கவனித்தான். இளம்பெண் தான்..பட்டுசேலை உடுத்தியிருந்தால்…திருமணத்திற்குச் சென்று வந்தாளோ திருமணமே அவளுக்குத் தானோ…
ஆனால் புன்னகையுடன் காரியிலிருந்து இறங்க, அவளைப் பார்த்த பஞ்சபூதம்,
“ஹீரோயின் வந்தாச்சு…” என வாய் விட்டுக் கூறினான்.
“என்னடா உளறுற?” எனப் பார்த்திபன் வினவ,
“நண்பா நீ பார்த்ததில்ல? ஆளே இல்லாம தன்னந்தனியா சிரிச்சுகிட்டே வண்டியில இருந்து இறங்கிவரவங்க தான் ஹீரோயின்… ” என விளக்கம் கொடுக்க,
பார்த்திபன் பூதத்தைப் பார்த்து, “நீ திருந்தவே மாட்டியா ?” என வினவினான்.
“திருந்தவேண்டியது நானில்லை நண்பா…நம்ம சினிமாக்காரங்க…வண்டில இருந்து ஸ்லோவா சிரிச்சுட்டே இறங்குறவங்க தா ஹீரோயின்னு பிக்ஸ் பண்ணிருக்காங்க” எனக் கூற, அதற்குள் அந்த ‘ஹீரோயின் பெண்’ மாயமாக மறைந்திருந்தாள்.
“நீ நம்பளீல? வேணும்னா பாரு” எனப் பூதம் காண்பித்த திசையில் பார்த்திபன் காண, இப்போது அங்கு ஒரு நடுத்தர வயது கணவன் மனைவி சென்றுகொண்டிருந்தனர்.
வயதிற்கு மீறிய மேக்கப் போட்டிருந்தார் அந்தப் பெண்மணி. பார்ப்பவர்களை சற்றே கவரும்படியான உடையும் கூட! அவரைப் பார்த்தவுடன், “ஆன்டி ஒரு ஆங்கிள்-ல செமையா இருக்காங்கல?…” என வாயை பிளந்தபடி பூதம் கூற,
பார்த்திபன் கண்டிப்புடன் பூதத்தைப் பார்க்க, சட்டென்று சுதாரித்துக்கொண்டவன், “இல்ல நண்பா…ஆண்டியும் அங்கிளும் ஜோடியா செமையா இருக்காங்கனு சொன்னேன்..” எனச் சமாளித்தவன் மொத்த பல்லையும் காண்பித்துச் சிரித்துவைத்தான்.
பூதத்தின் மண்டையில் ஒரு தட்டு தட்டிய பார்த்திபன், “வண்டில ஏறு…புறப்படு..” என அதட்டி வண்டியை கிளப்ப, கப் சிப்பென்று பூதம் அமர்ந்திருந்தான்.
“என்னடா கோபமா?” எனப் பார்த்திபன் நண்பனை சீண்ட,
“கோபமெல்லாம் ஒண்ணுமில்ல நண்பா… ஊரு நெருங்குதுல. அதுனால, வருத்தம் தான்.” எனச் சற்றே தீவிரமான குரலில் கூறினான் பூதம்.
இதுவரை இருந்த விளையாட்டுத்தனம் சற்றே காணாமல் போயிருந்தது.
“எதுக்கு வருத்தம்?” எனப் பார்த்திபன் வினவ,
“எப்படிடா … எதையுமே கண்டுக்க மாட்டுற. உன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியும்ல…பொறவு எப்படிடா இப்படி இருக்க?” என வினவ,
“அப்படி எதுவும் நடக்காது நண்பா…” என நண்பனுக்குத் தேறுதல் கூறினான் பார்த்திபன்.
“எப்படி அம்புட்டு உறுதியா சொல்ற?” எனப் பூதம் வினவ,
“நம்பிக்கை தான்…” எனப் பட்டும்படாமல் பதிலளித்தான். அது தான் பார்த்திபன், பெரிதாக எதற்கும் அலட்டிக்கொள்ளமாட்டான். இப்போது அவர்கள் இருவரும் பேசிக்கொள்வது கூட, பார்த்திபனின் வாழ்க்கை சம்மந்தப்பட்டதே..
ஆம்! பார்த்திபனின் இன்றைய நிலை லாரி ஓட்டுநராக இருந்தாலும், அவனின் குடும்பம் பாரம்பரியமானது. வாழ்ந்துகெட்ட குடும்பம்..
வண்டி ஓட்டுனர் என்றாலும், பார்த்திபன் , அவன் ஊரில் இறங்கி நடந்தால், அவன் குடும்பத்தை அறிந்தவர் மரியாதையுடன் அவனைக் கடந்து செல்வர். பணத்திற்குப் பஞ்சமானாலும் அவர்கள் குடும்பத்திற்குக் கிடைக்கும் மரியாதைக்கு எந்தவித பஞ்சமுமில்லை. இன்னமும் அவர்கள் ஊர் கோவிலில் முதல் மரியாதை, அவர்கள் குடும்பத்திற்கே சேரும்.
அது புதுப் பணக்காரர்கள் மத்தியில் பெரும் வயிற்று எரிச்சலை கிளப்பியிருந்தது. அந்த வரிசையில் பார்த்திபன் குடும்பத்தின் பெருமைமீது கண்ணாய் இருப்பவர், வேலுசாமி!
வெவ்வேறு வழியில் அந்த மரியாதையைத் தனக்குரியதாக மாற்ற துடித்தவர், அது முடியாமல் போகவே இறுதியாகத் தன்னுடைய மகளின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடிவெடுத்தார்..
அம்சவேணி.. முகத்தில் மட்டும் அழகை கொண்டவள்..அந்த அழகை கொண்டு சில காளைகளை வெவ்வேறு காலகட்டத்தில் காதல் என்ற பெயரில் கட்டிவைத்திருந்தவள்..
காதலும் அந்தக் காதலை கை கழுவுவதும் அவளுக்குக் கை வந்த கலை..
“எப்பிடிடா? அந்த அம்சாவை உனக்கு கட்டிவைக்க அந்த ஆளு துடியா துடிக்கிறாரு..
உங்க அண்ணனையும் வளச்சுட்டதா அரசபுரசலா பசங்க பேசிக்கிறாங்க.. மத்த ஆளுங்ககிட்ட தான் உனக்கு கை பேசும். உன்னோட குடும்பம்னு வந்துட்டா, உனக்கு வாய் கூட பேசாது..
இதுவரைக்கு உழைச்சு உழைச்சு கொட்டுறியே.. அதோட கணக்கு கூடத் தெரியாது… நீ கடைசியா எப்ப உன்னோட வீட்ல இரா தங்குனனு நினைவு இருக்கா ? இந்த வண்டில தான் ஓடுற, இதே வண்டில தான் தங்குற…உனக்காகவும் கொஞ்சம் யோசிடா..” என ஆழ்ந்த குரலில் கூறினான்.
பஞ்ச பூதம் மிக அரிதாகவே இப்படியானதொரு குரலில் பேசுபவன்..
இப்போது பேசுகிறானென்றால், அதற்குப் பார்த்திபனின் மீது கொண்டிருந்த நட்பே காரணம்.
“விடுடா…பாத்துக்கலாம்…” எனச் சாதாரணமாகவே பார்த்திபன் பதிலளித்தான். இது தான் பார்த்திபன், பெரிதாக மனதில் போட்டு அலட்டிக்கொள்ளமாட்டான்..அவனுக்குப் பிடித்துவிட்டால் பிடித்தவரின் குறைகள் எதையும் கணக்கில் கொள்ள மாட்டான்..
தப்பென்று பட்டால் பட்டென்று கைவைக்கவும் தயங்கமாட்டேன்.. பூதத்திற்கு இருந்த பதைபதைப்பு கூடப் பார்த்திபனிடம் இல்லை. ‘பார்த்துக்கொள்ளலாம்’ என்ற எண்ணம் மட்டுமே…
ஆனால், பார்த்திபனை சிந்திக்கவும் விடாத சூழலை, அவர்கள் ஊர் சேரும் நொடியில் உருவாக்க வேலுசாமி காத்திருந்தார்..

Advertisement