Advertisement

பகுதி – 18
மேகம் திரண்டு இருட்டிக்கொண்டு வந்தது… சட்டென்று வெளிச்சம் மந்தமாகி மண்வாசத்துடன் மழை காற்று உடலை ஊடுருவி செல்ல, அணிந்திருந்த துப்பட்டாவை தலையைச் சுற்றி போட்டபடி, பிரதானசாலையிலிருந்து சற்றே ஒதுக்குப்புறமாய் ஓடிய கிளை வழி சாலைக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தாள், மலர்!
திரண்டு இருட்டிக்கொண்டு வந்த மேகத்தை போலவே, அவள் வாழ்வில் இருண்ட பக்கங்கள் திரண்டு அவளின் விழி முன் நிழலாட தொடங்கின. ஆம்! அவள் வாழ்வை சூனியமாக்கிய அந்த நாளும், சூனியமாக்கியவனும் கண் முன் தோன்ற, அவளுடைய எண்ணங்கள் சில மாதங்கள் முன்பு நிகழ்ந்த சம்பவத்தை நோக்கி பயணித்தன.
”என்ன அண்ணா? தகறாரா ?” என மலர் தன்னுடைய வண்டி ஓட்டுனரிடம் விசாரிக்க, “ஆமா அம்மா, ஏதோ ரவுடி பையன் போல. நாம சுத்தி போவோம்” எனக் கூறி, மார்க்கெட் வழி சென்ற வண்டியை திருப்பி வளைக்க, மலர் அந்தக் கூட்டத்தைப் பார்க்க, பார்த்திபன் யாரையோ போட்டு அடித்து நொறுக்கி கொண்டிருந்தான்.
“இவனா?” என்ற எண்ணத்துடன் முகத்தைத் திரும்பியபடி, “உங்களுக்கு அவனைத் தெரியுமா அண்ணா?” என மலர் வினவ,
“அரச புரசலா கேள்விப்பட்டிருக்கேன். அவன் நல்லபாம்பு மாதிரியாம். கரம் வச்சுட்டால், கொத்தாம விடமாட்டானாம். ஒருத்தனை ஆகட்டி, அவனை அழிச்சிட்டுதான் அடுத்த வேலையே பார்ப்பானாம்” என அவர் தன் போக்கில் கூற, மக்கள் விலக்க விலக்க அடித்துக்கொண்டிருந்த பார்த்திபனின் மீது வெறுப்பான பார்வையைப் பதித்தபடியே அவனின் உருவம் கண்ணிலிருந்து மறையும்வரை பார்வையை விலக்காமலிருந்தாள். அந்த நொடி, பார்த்திபனின் அந்தக் கோப நிறைந்த நெடிய உருவத்தின் சாயல் மிக அழுத்தமாக மலரின் மனதினில் பதிந்து போனது.
ஆனால், அதன் பிறகு அவனை நினைக்க எந்தவொரு காரணமும் மலரிடமில்லை. அவள் அப்போது அறிந்திருக்கவில்லை. எதிர்காலத்தில் அவனை அன்றி வேறு எவரையும் சிந்திக்காமல், அவனை மட்டுமே சிந்திக்கப்போகின்றோமென்றும், அவனைத் தானே தேடி சென்று சந்திக்கப்போகிறோமென்றும் அவள் அந்த நொடி உணரவில்லை.
விதியை நிர்ணயிக்கக் கூடியவர்களும் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியவர்களும் இந்தப் பிரபஞ்சத்தில் எவரும் இல்லை. யூகிக்கலாமே ஒழிய, கணிக்க இயலாது!
அதற்கு மலரும் விதிவிலக்கல்ல!
எந்தவொரு கவலையுமில்லாமல் இன்னும் கூறவேண்டுமென்றால் கவலையென்றால் என்னவென்றே தெரியாமல் அன்றைய தினம்வரை சுற்றி திரிந்திருந்தாள், பனிமலர்!
இனி தான் ஒட்டுமொத்த வாழ்நாளில் அழாத அழுகையை ஒரே நாளில் அழுக போகின்றோம் எனவும், இனி வாழ்வு முழுக்க அந்த அழுகை மட்டுமே தன்னுடன் நிரந்தமாகத் தஞ்சம் புகவிருக்கிறதென்றும் அறிந்திருந்தால், அவள் இத்தனை நாள் வாழ்நாளில் வலுக்கட்டாயமாகவேனும் அழுத்திருப்பாளோ என்னவோ ?
ஆம்! அன்று ஒரு கோர விபத்து. விபத்தென்னும் இராட்சஸன், மலரின் தாய் தந்தையைத் துடிதுடிக்க அவர்களின் உடலைவிட்டு உயிரை பிரித்துச் சிரித்தான்!!
அவளும், அன்றைய தினத்திலே அவர்களுடனே மரணித்திருக்க வேண்டும். ஆனால், அவளுடைய துரதிர்ஷ்டம் அவள் பிழைத்து விட்டாள். ஆம்! துரதிஷ்டம் தான், அவள் உயிர் பிழைத்தது பனிமலரின் கோணத்திலும் எண்ணத்திலும் துரசதிர்ஷ்டமே!
நெடுசாலையில் அதிவேகத்தில் வண்டிகள் இருபுறம் பறந்துகொண்டிருக்க, மலரோ அவளுடைய தந்தையின் கைகளைச் சுரண்டியபடி, “அப்பா, வழியில கோவில் போயிட்டு போகணும் சொன்னேனே… ப்ளீஸ் பா…” எனக் கெஞ்ச,
“உன்னை யாரு பாப்பா போக வேணாம்னு சொன்னது? கண்டிப்பா போகலாம். இப்போ நம்ம தாலி எடுத்து கொடுக்கிறதுக்காக மண்டபத்தில எல்லாரும் காத்துக்கிடப்பாங்க. நம்மள மதிக்கிற மனுஷங்கள காக்க வைக்கக் கூடாது. கல்யாணத்தை முடிச்சிட்டு நீ நான் அம்மா மூணு பேரும் போகலாம்” எனக் கூற,
“நோ… எனக்கு இப்பவே போகணும். எனக்காக நிப்பாட்டுவீங்களா ? மாட்டிங்களா ?” எனப் பிடிவாதம் பிடித்தாள்.
“இப்படிக் கேட்டால் அப்பா என்ன சொல்றது? சம்மதம் தவிர… போ, சீக்கிரம் போய்ட்டு வா…உங்க அம்மா இங்கவே இருக்கட்டும். அவளும் போனால், நடை சாத்துற வரைக்கும் இங்கன தான் இருப்பாள். பொறவு போற காரியத்துக்குத் தாமதம் ஆகிடும்?” என்ன பனிமலரின் தந்தை கூற,
“நீங்களும் வாங்களேன்…ஏன் என்னை மட்டும் தனியா போகச் சொல்றீங்க” என மலர் சினுங்க,
“இந்தா இருக்கக் கோவில் தானே பாப்பா? என்னவோ உன்ன தனியாவே விட்டுப் போறது போலச் சொல்லுற. நீ வரதக்குள்ள நானும் உங்க அம்மாவும் ஒளிஞ்சு விளையாடவா போறோம் ? நான் கூடப் பரவா இல்ல. உங்க அம்மா கிழவி ஆகிட்டாள். அவளால விளையாடெல்லாம் முடியாது” என்ன மலரின் தாயை சீண்ட, அவரோ கணவன் மகள் என இருவருக்கும் கண்டன பார்வையைப் புன்னகையுடன் கொடுத்து, மகளை வழி அனுப்ப, அடுத்தச் சில நிமிடங்களில் அவர்கள் இல்லாமலே போயினர்.
கோவிலை விட்டு வெளியே வந்தவள், வண்டிக்குள் அமர்ந்திருக்கும் தாய் தந்தையின் சிரித்த முகத்தைப் பார்த்தபடி, வண்டியை நோக்கி நடக்க, சட்டென்று அவள் கால்கள் அந்த இடத்திலே அதிர்ச்சியில் வேரூண்டியது. அவர்களின் வண்டிக்குப் பின்னால் அதி வேகத்தில் வந்துகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில் இரத்தினவேலின் காரின் மீது பெரும் சப்தத்துடன் மோத, லாரியின் எடைக்கும், அது வந்த வேகத்திற்கும் அவர்களின் கார் அடித்துத் தூக்கி வீசி எறியப்பட்டது.
ஒரு நொடி, ஒரே நொடியில் மலரின் ஒட்டுமொத்த உலகமும் இருண்டது… அந்த நொடி என்ன செய்யவேண்டுமென்று கூடத் தோன்றாமல் அதிர்ச்சியில் உறைந்தவள், அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஓடுவதைப் பார்த்தே, சுயத்திற்கு வந்தாள்.
“அப்பா…அம்மா” அடுத்த வார்த்தை அவளுடைய நாவு உச்சரிக்கவில்லை. மீண்டும் அவளுடைய வாழ்நாளில், அவர்களின் முன்னிலையில், அவர்களின் செவிகுளிர அந்த வார்த்தையை அவள் உச்சரிக்க முடியாமலே போனது.
மலரின் உலகம் அந்த இடத்திலே மறித்துப் போக, உடன் அவள் சகலமும் சிதைந்து போனது.
யார் யாரோ வந்தனர்..யார் யாரோ சென்றனர்.. சாவி கொடுத்து இயக்கப்படும் பதுமையாய் காரியங்களைச் செய்தாள். அவர்களின் தகனம் மின்சாரச் சுடுகாடு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தனிமையிலிருந்தவளை, இரத்தினவேலின் தந்தை வழி உறவான சிவகாமியும் அவருடைய குடும்பமும் அரவணைத்துக் கொண்டது.
மெல்ல மெல்ல நாட்கள் நகர, பெரிதாக வாழ்க்கையின் மீது பிடித்தமில்லாமல் இருந்தவளை, மலரின் சந்தோசம் தான் இரத்தினவேலின் நிம்மதி என எடுத்து கூறி, சிவகாமி மெல்ல அவளைத் தேற்றிக் கொண்டு வந்தார். திருமணத்திற்குச் சில வாரங்களுக்கு முன்பு தான், காவல் நிலையத்திலிருந்து, இரத்தினவேலின் விபத்தைக் குறித்து ஒரு தகவலுக்காக அவளை வரவழைத்திருந்தனர். உடன் பிரியனும் சென்றான்…
அங்கு அவள் அறிந்துகொண்டது, மலரை அடியோடு புரட்டி போட்டது…
அந்த விபத்திற்குக் காரணமான லாரி அங்குச் சீஸ் பண்ணப்பட்டிருந்தது; விபத்தை ஏற்படுத்திய வண்டி ஓட்டுனருடன்! இத்தனை நாள் போக்கு காட்டி கொண்டிருந்த வண்டி ஓட்டுனரை அன்று தான் பிடித்ததாகத் தகவல் சொல்லப்பட்டது…
வண்டி ஓட்டுனராக, அங்கிருந்த கான்ஸ்டபிள் காண்பித்த ஓட்டுனர், பார்த்திபன்!
பார்த்திபனை அடித்துக்கொல்லும் ஆவேசம் அந்தக் கணம் மலருக்குள் முதல் முறையாக எரிமலையாய் வெடித்தது. பார்த்திபனை நோக்கி ஆவேசத்துடன் செல்ல போனவளை பிரியனின் வலிய கரங்கள் தடுத்தன…
பிரியனின் பிடி இறுக, மலரால் அசையமுடியவில்லை…
“என்ன பண்ணுற மலர் ? அவனுங்க கொலை காரனுங்க… எல்லாம் சட்டப்படி நடக்கும். யாரும் தப்பிக்க முடியாது… நீ போலீஸ் ஸ்டேஷன் வந்ததே இரத்தினவேல் மாமா ஆன்மா தாங்காது. நீ கண்டவன்கிட்ட போய் என்ன பேச போற ? என்கூடக் கிளம்பு. சொல்றேன்ல” என அதட்டல் போட்டே அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
ஆனால், அதன் பிறகு அவள் வாழ்க்கையில் அரங்கேறியவைகள், அவள் அதுவரை அனுபவித்துக்கொண்டிருந்த இரணத்தைவிடப் பன்மடங்கு பெரிதாகி போனது…
***
வானிலை மாற்றத்தால் நடையோரமிருந்த கடைகளில் இருந்த பொருட்களை அவசர அவசரமாக நனையாத தார்பாய்க் கொண்டு மூட, நடப்பதிற்கே பிறந்ததைப் போலச் சென்று கொண்டிருந்தவளின் கால்கள் சட்டென்று தளையிட்டதைப் போல ஸ்தம்பித்து நின்றன.
அதற்குக் காரணம் எதிரில் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்ததே. அந்த இருவரும், பிரியனின் ஆட்கள். அவர்களைக் கண்டதும் அதிர்ந்தாலும் சட்டென்று சுதாரித்துக்கொண்டவள், அருகேயிருந்த லாரிக்குப் பின்னால் மறைந்துகொண்டு அவர்களைக் கண்காணித்தாள்.
வந்தவர்கள், அவர்கள் தேடி வந்த மலர் மறுபுறம் நிற்கிறாளென்று அறியாமல் அதே லாரியின் இந்தப்புறமாக நின்றபடி,
“என்னடா? நம்ம அண்ணி எங்கதான் போனாங்க ? அண்ணே நம்மள விவரம் தெரியாமல் வராதீங்கன்னு சொல்றாங்க. இந்த ஊர் மெயின் கடைல போய் விசாரிச்சால் ஏதாவது தகவல் கிடைக்கும்னு வந்தோம். பார்த்தால் மழை வந்திடுச்சு” என ஒருவன் புலம்ப,
மற்றொருவனோ, “விசாரிப்போம் வா” என அழைத்துச் செல்ல, திக் திக்கென்ற மனநிலையில் மலர் நின்றிருந்தாள். இவள்தான் இந்த ஊரே காண பார்த்திபனின் மனைவி என்று வந்து நின்றாளே!
”அண்ணியோட படத்தைக் காட்டுடா” என ஒருவன் செல்ல, மற்றொருவன் கைபேசியை எடுத்துக்கொண்டு சாலையோர கடைக்குச் செல்ல, மலரின் இருதயம் பயத்திலும் பதட்டத்திலும் வெளியே வந்து விழுவதைப் போல நடுங்கியது. இத்தனை நேரம் அவளிடமிருந்து ஆவேசமும் துணிச்சலும் காணாமல் போக, மலரின் உடல் வெடவெடக்கக் குறுகி நின்றிருந்தாள்.
சட்டென்று பெருத்த ஓசையுடன் எழுந்த இடியும் அதைத் தொடர்ந்து வீசிய பெரும்காற்றும் அந்தக் கடையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பொருளை காற்றில் கீழ் விழ செய்ய, அவசரமாக அதை எடுக்க ஓடிய கடைக்காரர் , பிரியனின் ஆட்கள் மீது மோதிவிட, அவனின் கையிலிருந்த கைபேசி தவறி அருகிலிருந்த திறந்தவெளி கழிவு வடிகாலில் விழுந்துவிட, “ச்சா…” எனப் பிரியனின் ஆள், கடுப்பானான்.
தட்டிவிட்ட அந்தச் சாலையோர வியாபாரியை கோபத்தில் அடித்துவிட, அந்த வியாபாரியின் அலறலில் அங்குச் சட்டென்று ஊர் காரர்கள் அனைவரும் கூடிவிட்டனர்.
இத்தனை நபர்கள் கூடிவிடுவார்கள் என்று எதிர்பார்த்திடாத அந்த ஆட்களோ அச்சம் கொள்ள, அவர்கள் என்ன ஏதென்று உணரும் முன்னர், மற்ற அனைத்து வியாபாரிகளும் சேர்ந்து வந்திருந்தவர்களை நைய புடைத்து துரத்த, மலரை தேடிவந்த இருவரும் அடித்துப் பிடித்துச் சிதறி ஓடினர்.
அவர்கள் பைக்கை கிளப்பிக்கொண்டு விரய, “மறுபடியும் இந்தப் பக்கம் பார்த்தோம்… வெட்டி மண்ணுக்கு உரமாக்கிருவோம்” என மிரட்ட, திரும்பி பார்க்காமல் ஓடிவிட,
மலர் சற்றே ஆசுவாசமாக மூச்சுவிட்டாள்!
இத்தனை நேரமிருந்த பயம், பதற்றம், நடுக்கம் என அனைத்தும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கினாலும், மலரின் இருதயத் துடிப்பு இன்னமும் இயல்புக்குத் திரும்பாமல் அவசரகதியில் அடித்துக்கொண்டிருந்தது…
ஒளிந்து நின்றிருந்த லாரிக்கு பின்னே மெல்ல மெல்ல நடந்தவள், லாரிக்குப் பின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற காரிலிருந்து ஒலித்த பெயரில் மேற்கொண்டு நடக்காமல் நிதானித்தாள்.
மலர், அங்குத் தாமதிக்கக் காரணமான பெயர், பார்த்திபன்!
“பார்த்திபன்… அவனை ஒண்ணுமில்லாம நிக்க வைக்கணும்” எனக் காருக்குள் ஒலித்தது வேலுசாமியின் குரலே. தன்னுடைய மகளை மணமேடையில் அவமதித்தவனின் வாழ்க்கை சூனியமாகவேண்டுமென்று, முதலில் பார்த்திபனின் தொழில் கைவைக்க, பார்த்திபன் ஓட்டுகின்ற லாரியின் உரிமையாளரை சந்திக்க வந்திருந்தார்.
நின்றிருந்த கருப்புக் கார் வேலுச்சாமிக்கு சொந்தமானது. வேலுசாமியின் அருகே அமர்ந்திருந்தது தான் பார்த்திபன் ஒட்டுகின்ற லாரியின் உரிமையாளர். மலருக்கு லாரி ஓனரை தெரியாது. ஆனால், வேலுசாமியை நன்கு அறிவாளே!
காருக்குப் பின்புறம் சாதாரணமாக நிற்பதை போன்ற பாவலாவில் முகத்தைத் துப்பட்டாவால் மறைத்தபடி நின்று கவனிக்கத் தொடங்கினாள்.
“உங்க பேச்சுக்கு மறு பேச்சு உண்டா? என்ன செய்யணும் ?” என வேலுசாமியின் அருகே அமர்ந்திருந்தவர் கேட்க,
ஆக்ரோஷமாக வேலுசாமி கூறினார்.
“அவனுக்கு இனிமேலே உன்னோட டிரான்ஸ்போர்ட்ல எந்த லாரியும் கொடுக்கக் கூடாது. அதுமட்டுமில்ல, வேற எவனும் அவனுக்கு லாரி கொடுக்கக் கூடாது” என எச்சரிக்கும் குரலில் கூற,
“எல்லாம் சரிதானுங்க ஐயா…
ஆனால், பார்த்திபன் இப்ப ஓட்டுற லாரி ஆக்சிடென்ட் பண்ணின வண்டி. வாங்கி இரண்டு மாசம் தான் ஆகுது. இரெண்டு உசுரு ஸ்பாட் அவுட். அதை ஓட்டறதுக்கு எவனும் வரல. ரொம்ப மலிவா இருக்குனு ஆக்சிடன்ட் பண்ணின வண்டினு தெருஞ்சும் வாங்கிப் போட்டுட்டேன். அது காவு வாங்குன வண்டினு எவனும் தொடல.
இந்தப் பார்தி மட்டும்தான் தைரியமா வந்தான்…அவனையும் அனுப்பிட்டால், எனக்கு அந்த வண்டி நட்டமா போகும் ஐயா. அதான்…” என இழுக்க,
“யோவ் அந்த வண்டி விலையைச் சொல்லு. மொத்த பணத்தையும் தரேன். வாங்கிக்கோ…எண்ட கை மாத்தி விட்டுரு. ஆமா , கேஸ் எதுவும் இப்ப இருக்கா வண்டி பேர்ல ?” என விசாரிக்க,
“இல்லங்க ஐயா. சம்பவம் நடந்து ஐஞ்சாறு மாசம் ஓடிருக்கும். கேஸெல்லாம் முடுஞ்சு, அடிச்சு தூக்குனவனே வெளிலவந்துட்டான்.
செல்வாக்கான இடம் லாரி வச்சுருந்தவர். ” என டிரான்ஸ்போர்ட் ஓனர் கூற, இந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த மலர், தன் செவிகள் கேட்டது மெய்யா ? இவர்கள் என்ன கூறுகின்றார்கள் ? என தடுமாற தொடங்கினாள்.
அவளின் தடுமாற்றங்கள் ஒருபுறமிருக்க, மேலும் வேலுச்சாமியே பேச்சை தொடர்ந்தார். 
“அந்தப் பார்த்திபன் ஒத்த ரூபாக்கு நாயா பேயா அலையனும். பொழைக்க வழியில்லாம அவனை நம்பிவந்தவள், அந்தப் பார்த்திபனோட மூஞ்சில காரித்துப்பிட்டு ஓடணும். நடக்கவைக்கிறேன்…” என ஆவேசமாகத் தனக்குத் தானே சபதம் போன்று உறும, வேலுசாமியின் இந்தக் கோபத்தில், அந்த டிரான்ஸ்போர்ட் ஓனரே சற்று ஆட்டம் கண்டார்.
“அவன்கிட்ட எப்ப சொல்ல போற ?” என வேலுச்சாமி உறுமலாக வினவ,
“நாலஞ்சு நாளா அலையவிட்டாச்சு…இனி நாளைக்குக் கூப்பிட்டு சொல்லிட வேண்டியது தான்” என ஓனர் பதிலளிக்க,
“என்னோட இடத்துக்கு அவனை வர சொல்லு. அவனுக்கு வேலை காலினு தெரியிறப்ப, அவன் மூஞ்சி போற போக்க நான் அவசியம் பார்க்கணும். அவன் தோக்குறதோட வலியை நான் கண்டிப்பா இரசிக்கணும்” என வன்மமாகக் கூற,
“அப்படியே பண்ணிடலாம்ங்க” எனப் பணிவுடன் மற்றவர் கூற, அவர்கள் பேச்சு முடிந்தது என்பது போல வண்டியிலிருந்து பார்த்திபனின் முதலாளி இறங்க முயன்ற வேளையில், மலர் சட்டேன்று விலகி நடந்து வீட்டை நோக்கி சென்றாள்.
அந்த இடத்தைவிட்டு அவள் விலகி சென்றிருக்கலாம். ஆனால், அங்கு அவள் அறிந்துகொண்டிருந்த செய்திகளை விட்டு அவளால் விலகி செல்ல முடியாமல் தடுமாறத் தொடங்கினாள்.
மேகங்கள் ஒற்றோடொன்று முட்டி மோதி, நீர் துவாளைகளை வீரியத்துடன் மண்ணில் பாய்ச்ச, மலரின் மேனியில் அவைகள் துளையிட்டு செல்வதைப் போன்று வலியை கொடுத்தன. அந்த வலி மழை தந்த வலி அல்ல; அவள் மனம் தந்த வலி!
“அப்படினா ? எங்க அப்பா அம்மா சாவுக்குப் பார்த்திபன் காரணம் இல்லையா ? இதுல எது உண்மை ? என்னைச் சுத்தி என்ன நடக்குது ?” என ஆயிரம் கேள்விகளைச் சுமந்தபடி சொட்ட சொட்ட நனைத்துக்கொண்டே வீதியில் சென்றவளின் நிலைமை ஆதரவற்ற குழந்தையாய் இருந்தது.
அவள் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வடிந்தது. அந்தக் கண்ணீர் துளிகள் மழைத்துளிகளோடு போட்டியிட்டு மண்ணில் சிதறியது. ஆனால், அந்தக் கணம் அவள் எதற்காக அழுகிறாளென்று மலராலே உணர முடியவில்லை.
‘பார்த்திபன் இதுக்குக் காரணம் இல்லனா? நான் சிதச்ச அவனோட வாழ்க்கை ?’ என்ற கேள்வி அவளுடைய மனசாட்சி எழுப்ப, திகைத்தும் போனாள் குழம்பியும் போனாள்….

Advertisement