Advertisement

மலர் பார்த்திபனை பார்த்து, ‘இது தான் உன் ஜமீன் குடும்பமா ?’ எனப் பார்வையால் எள்ளி நகையாட,
“ஆமாம்! இஷ்டமில்லை! அவளோட நகையை நீங்க எடுக்க இஷ்டமில்லைதான். போதுமா ? ஏ..உன்னோட நகையை எடுத்து எங்கவேணும்னாலும் வச்சுக்கோ. இல்லை தூக்கி கூட ஏறி. ஆனால், அதுனால எங்க குடும்பத்துக்குள்ள பிரச்சனை வரக்கூடாது” எனப் பொதுவாக ஆரம்பித்து, மலரிடம் எச்சரிக்கையாய் உறுமியவன், விறுவிறுவென்று வெளியேறியிருந்தான்.
தாமினி எதுவும் பேசும் நிலையில் இல்லை! தாரா தேவி எப்போது போல் யாருக்கு வந்த விருந்தோ என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்!!
சூரியவர்மன், மலரின் நகைகளை எடுத்து வீசியடிக்க, அது அந்த வீட்டின் முன் கூடத்தில் சிதறியது.
கலாவோ, “என்ன இந்த மனுஷன் சட்டுனு ரோசப்பட்டுட்டாரு… ரோசம்ல பார்த்தால் வேலைக்கு ஆகுமா ?” என்ற சிந்தனையுடன் நகைகளை ஏக்கமாகப் பார்க்க, மலர் திருப்தியுடன் அதைத் தனது பெட்டிக்குள் எடுத்து அடுக்கி வைக்கத் தொடங்கினாள்.
அவளுடைய மனமோ, “இன்னும் ஒன்னோட வேலை மட்டும் தான் மிச்சமிருக்கு..அதையும் முடிக்கிறேன். உன்ன ஒண்ணுமில்லாதவனா ரோட்ல அலையவிடறேன்” என மனதிற்குள் வஞ்சினம் கூறிக்கொண்டாள்.
அந்தச் சண்டைக்குப் பின் யாரும் யாருடனும் பெரிதாக எந்தப் பேச்சும் வைத்துக்கொள்ளவில்லை. இது பூவம்மாள் பாட்டியையும் எட்டியிருந்தது…அவருக்குப் பார்த்திபனின் பதிலில் பூரணத் திருப்தி. அதற்காக அண்ணன் தம்பி சண்டையிட வேண்டுமென்று அவர் நினைக்கவில்லை. கலாவை அழைத்து, ‘கொஞ்சம் பார்த்துக்க… இப்போ பேசல அப்படிகிறதுக்காக இது முடிஞ்சு போற உறவில்லை. கைல தனக்குனு காசுகூட வச்சுக்காதவன் பார்த்திபன். எங்க சுத்தியும் அண்ணன் அண்ணின்னு உங்ககிட்ட தான் வருவான்… அடுப்புப் பிரியாமல் பார்த்துக்க’ எனக் கூற, கலா யோசித்தாள்!
நகை கைவிட்டு போய்விட்டது…அதே நேரத்தில் மாதத்திற்கு இரண்டு முறை குடும்பச் செலவிற்குப் பணம் வரும் வருமானத்தை அவள் இழக்க விரும்பவில்லை. அந்த வருமானம் மட்டும் தானே பிரதானம்…
அதனால், மலருடன் உறவாடுவதென்ற எண்ணத்தில் இருந்தவளை, பூவம்மாள் பாட்டியின் பேச்சு அவளுடைய எண்ணத்தை வலு பெற செய்தது.
கலா தனக்குள் கணக்கு போட்டுகொண்டாள். மலர் மூலமாகத் தொடர்பில் இருந்தால், முன்பை போலவே வீட்டு செலவிற்குப் பார்த்திபனிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம். அதனால், கலா அடுப்பை பிரிக்கவிடவில்லை…
இந்தப் பிரச்சனை நிகழ்ந்து மூன்று நாட்கள் ஓடியிருந்தது… தாமினியால் முன்பை போல மலரிடம் வெறுப்பைக் காட்டமுடியவில்லை. அதேவேளையில் அவருக்கு அவள் மீது விருப்பும் இல்லை…
கலா உணவை கொடுத்தால், அமைதியாக இருப்பார்… மலர் வந்தாலும் கண்டுகொள்வதில்லை சென்றாலும் கண்டுகொள்வதில்லை… யாருடனும் அதிகம் பேசவும் அவர் அதன் பின் முயலவில்லை. தன்னை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக்கொண்டார். ஆனால் , அவரின் இந்த மாற்றத்தை கண்டுகொள்ளத் தான் அங்கு யாரும் இல்லாது போனது.
பார்த்திபன் இருந்திருந்தால், நிச்சயம் கண்டுகொண்டிருப்பான்… ஆனால் தன் தாயே தன்னை ராசியில்லாதவன் என்ற எண்ணம் கொண்டிருக்கையில், அவரின் முன் சென்று நிற்க, தன்னுடைய முகத்தைக் காட்ட அவன் விரும்பவில்லை.
பார்த்திபன், அதன் பின் மலரிடமும் எதுவும் பேச முயலவில்லை. அவளின் எள்ளலுக்குப் பாத்திரமாகவே சூரியவர்மனின் நடவடிக்கை அன்று இருக்கவே, மலரின் வார்த்தைகளை எதிர்கொள்ளும் ஜீவன் கூட அவனிடமிருக்கவில்லை.
முதலில் அவனுடைய அன்னை! உலகமே தன் பிள்ளையைக் குற்றம் சொன்னாலும் தாய் நெஞ்சம் நம்பாது…ஆனால், தாமினிக்கு பார்த்திபன் மீது நம்பிக்கையில்லை. அந்த நொடியில் பார்த்திபன் பாதி உடைந்தான்…இப்போது அவனுடைய அண்ணனுடனான வாக்குவாதத்தில் மீதியும் உடைந்தான்…
அவனுடைய எண்ணம், “எல்லாமே பொய்யா? என்னை நம்ப, எனக்காகப் பேச யாருமே இல்லையா ?” என்ற கேள்வி அவனுடைய மனதினில் பூதாகரமாக எழுந்து நின்றது.
இப்போது மலர் ஏன் இங்கு வந்திருக்கிறாளென்ற எண்ணமெல்லாம் பின்னுக்குச் சென்றது. இனி அவனே சென்று உண்மையைக் கத்தி கத்தி கூறினாலும் அவன் வார்த்தையை எவரும் கேட்க போவதுமில்லை ஏற்கப்போவதுமில்லை…
எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சது தான் என்னோட தப்பா என்ற கேள்வியும் அவ்வப்போது அவனுக்குள் எழுந்தது…
அமைதியாகப் பூதத்தின் வீட்டுப் படிகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். வாசலில் சின்னத் தென்னந்தட்டிக்கு அடியே, ஒரு விறகடிப்பில் பூதத்தின் அம்மா பணியாரம் சுட்டுக்கொண்டிருந்தார். சில சிறுவர்கள் கையில் பாத்திரத்துடன் பணியாரம் வெந்து முடிவதற்காகக் காத்திருக்க, பூதம் அடுப்புக்கு விறகை வெட்டிக்கொண்டிருந்தான்…
இவையெதுவும் பார்த்திபனின் கருத்தில் பதியவில்லை.
சரக்கு எடுக்கக் கிளம்ப முயன்றால், ஏனோ இந்த முறை லாரியின் உரிமையாளரை பார்க்கவே அவனால் முடியவில்லை.
சோர்ந்த முகத்துடனே வளையவந்தான்…
“சோளியங்குடும்பி சும்மா ஆடாதே…இன்னைக்கு என்ன ஆட்டம் ஜாஸ்தியா இருக்கு ?” எனப் பூதத்தின் அம்மா, பூதத்தைப் பார்த்து கேட்க,
பூதம் சமாளிப்பாக, “என்ன டம்மி ச்சி..மம்மி… நான் எங்க குடுமி வச்சிருக்கேன். குறும்பு போங்க” என அனைத்து பற்களையும் காண்பித்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
அவனின் இந்தச் சமாளிப்பிற்கும் சிரிப்புக்குக் காரணம், பூதத்திற்கு ஓர் இரண்டாயிரம் கைசெலவிற்காகத் தேவைப்பட்டது. அதையே தன் தாயிடம் கேட்டுக்கொண்டிருந்தான். அவரோ, பணியாரத்திற்கு மாவு ஆட்ட, நேற்று அவனைப் பலமுறை விரட்டியும், பூதம் அசையாமல் ஊரை சுற்றி வந்துகொண்டிருந்ததால், அவன் கேட்கும் பணத்தைக் குடுக்க முடியாதென்று முரண்டு பிடித்துக்கொண்டிருந்தார்.
அன்னைக்கு விறகுகளை வெட்டிக்கொடுப்பதைப் போலப் பாவலா காண்பித்துப் பணத்தைக் கைப்பற்றவே பூதம் போராடி கொண்டிருந்தான்.
“என்ன அண்ணே விறகு வெட்டுறீங்களா?” எனக் கேட்டபடி அருகே இருந்த கல்லில் வந்து அமர்ந்த நண்டு, பணியார சட்டிக்குள் கைவிட, அதன் மூடியை அகற்றினான்.
“இல்லை விரலை வெட்டுறேன். உங்கிட்ட கூடப் பத்து விரல் பக்காவா இருக்கு போல” என இலந்தடிக்க, சட்டென்று பணியாரம் எடுக்க நீண்ட கையை உள்ளிழுத்துக்கொள்ள, பூதத்தின் அம்மா, “நண்டு..நீ எடுத்து சாப்பிடு ஐயா..அவன் கிடக்கான்” என நண்டுக்கு பரிந்து வந்தார்.
ஆசையாகப் பணியாரத்தைக் கொதிக்கக் கொதிக்கக் கைகளில் எடுத்து வாயில் போட்டவன், “அம்மா சுட்ட பணியாரத்தைச் சாப்பிடறது வரம்” எனச் சிலாகித்துக் கூற,
“நான் மட்டும் என்ன சாபம்னா சொன்னேன்? ஓசி பணியாரம் வரம் தாண்டா…” எனப் பூதம் கிண்டலடித்தான்.
“விளையாடாதீங்க அண்ணே… நானும் பாக்குறேன். உழைச்சு நீங்க காசு கொடுக்கிறதை விட்டு அம்மாகிட்ட கேட்குறீங்க ?” என நண்டு போட்டுக்கொடுக்க,
“நாய் எங்கையோ உக்காந்து ஒட்டுக்கேட்டு வந்திருக்கு” எனப் பூதம் முணுமுணுத்தான்.
“அவனவன் காசுவேணும்னு கண்டவன் காலை பிடிக்கிறான்… நீங்க என்னடானா அம்மா சொல்ற வேலைய பார்க்கமாட்டுறீங்க?” என மேலும் நண்டு ஏற்றிவிட,
“காலப் பிடிச்சு வாழறவன் இல்லடா இந்தப் பூதம்” எனக் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே,
“ஆத்தா… இரண்டு கோழி கால் கேட்ருந்தியாமே. அண்ணே கொடுத்துவிட்டுச்சு” எனக் கறிக்கடைக்கார பையன் வந்து நீட்ட,
சட்டென்று நீட்டப்பட்டிருந்த கோழி காலுக்கு அருகே அமர்ந்திருந்தான் பூதம்.
“என்ன அண்ணே? யாரு காலுளையும் விழமாடீங்கனு சொன்னீங்க ? சட்டுனு கோழி காலுல விழுந்துடீங்க ?” என நண்டு நேரம் பார்த்து வார,
“அடேய்! அது வேஸ்ட் மனுஷன் காலுடா…இது கிரேட் கோழியோட காலுடா” எனச் சமாளித்த பூதம்,
“பச்சையா இருக்கும்போதே நாக்கு பரபரன்னு பறக்குதே….அம்மோவ் சீக்கிரம் மசாலா போட்டு பொரிச்சு எடு மோவ்” எனத் துரிதப்படுத்த,
“அடேய்! திங்கிறதுக்குப் பறக்காத. செத்த கோழி பறந்திராது. பொறுமையாயிரு” என அதட்டினார்….
பூதத்தின் இந்த அளப்பறையைப் பார்த்து சட்டென்று வாய்விட்டு சிரித்திருந்தாள் குறிஞ்சி. அவளின் சிரிப்பொலியில் பூதம் திரும்பி பார்க்க, சிரிப்பை வாய்க்குள் அடக்கியபடி, பணியார கிண்ணியோடு வந்து, சேர்ந்து நின்றுகொண்டாள்.
“அம்மா மூணு ஈடு பணியாரம்” எனக் கோப்பையை நீட்ட, “கொண்டா தாய்” எனப் பூதத்தின் அம்மாவும் வாங்கிப் பணியாரத்தை அடுக்கத் தொடங்கினார்.
“பஜ்ஜிக்குப் பணியாரம் எதுக்கோ?” என யாருக்கோ என்பது போலப் பேச,
“ஆ…பண்ணிவியாபாரம் பண்ண” எனப் பூதத்திற்கு மட்டும் கேட்கும்படியாகக் குறிஞ்சி முணுமுணுக்க, பூதம் ஆச்சர்யமாகக் குறிஞ்சியை பார்த்தான்.
“நம்மள போலவே கவுன்டர் கொடுக்குறா?” என்று எண்ண, குறுஞ்சியையும் பணியாரத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டே, “பரவாயில்ல, பணியாரம் போலக் கும்முனு தான் பொன்னிறமா இருக்கா…ஆனால் இனிப்பு பணியாரமா? காரப்பணியாரமா ?” எனத் தீவிரமாகச் சிந்திக்க,
“ஹ்ம்ம் கராத்தே பணியாரம்” என அவனின் சிந்தனைக்குப் பார்வையால் பதில் கொடுத்தாள், குறிஞ்சி!
பணியாரத்தை வாங்கிக்கொண்டு சென்றவள், நாலு எட்டு நடந்துவிட்டு சட்டென்று நின்று திரும்பி பூதத்தைப் பார்க்க, பூதமோ கண்களை விரித்து, “சைட் அடிக்கிறாளா ? என்னையாவா ?” என நம்பாமல் வாய்விட்டு உளறினான்.
குறிஞ்சி சிறு சிரிப்போடு முன்னேறி செல்ல, “நண்பா…நண்பா… இங்க வா” எனப் பார்த்திபனை உலுக்கியவன், “பணியாரம் வாங்க வந்து பத்திக்கிட்ட லவ்ஸ் நண்பா” என உலுக்கிக்கொண்டிருக்க, அதே நேரத்தில் பார்த்திபனின் தொழில் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக ஒழிக்கச் சென்று கொண்டிருந்தாள் மலர் !
அவளுடைய முடிவு, பார்த்திபனுக்கு வேலை தரும் முதலாளியை சந்தித்து, அவன் வேலையை ஒழிப்பதே!!
அவள் தீட்டும் சதி ஆட்டத்தில் விதியும் தனது பங்கிற்கு ஒரு காய் நகர்த்த காத்திருந்தது… விதியாட்டத்தில் அவளுடைய சதி வெல்லுமா ? வீழுமா ?

Advertisement